Skip to content
Post Views: 4,991
அத்தியாயம் – 8
விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆசுவாசத்தில் அயர்ந்து உறங்கியவனை தொடர்ந்து ஒலித்த அலைபேசி உசுப்பி விட்டது.
“அதை எடுத்து கட் பண்ணேன்டா.” முனங்கிக்கொண்டே புரண்டு குப்புறப்படுத்தான் அகிலன்.
அப்போதுதான் குளித்து வந்திருந்த சந்துரு விடாது அடிக்கும் அலைபேசியை எடுத்துப்பார்த்து, “உன் மேடம்தான் கூப்பிடுறாங்க.” என்று குரல் உயர்த்தினான்.
Advertisement
“ம்ச், லீவ் நாள்ல கூட தூங்க விடமாட்டாங்களா?” சலித்துக்கொண்டே கையூன்றி எழுந்தவன் போனை பிடிங்கி சைலென்ட்டில் போட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர,
“ஏதாவது முக்கியமா சொல்ல கூப்பிடுறாங்களா இருக்கும். எடுத்துப் பேசு.” என்றான் சந்துரு அவன் தோளை லேசாக தட்டி எழுப்பிவிட்டபடி.
“ச்சு. அவங்களே விட்டாலும் நீ விடமாட்ட போல.” எரிச்சலினூடே முகத்தை தேய்த்துக்கொண்டே எழுந்தவன் வெறுமென அலைபேசி திரையைப் பார்த்தபடி அமர்ந்தான். மீண்டுமொருமுறை அடித்து ஓய்ந்தது அலைபேசி.
Advertisement
“எடுத்து பேசுடா அப்புறம் இதுக்கும் ஏதாவது பனிஷ்மென்டுன்னுற போறாங்க.”
Advertisement
அலட்சியமாய் உதட்டை இழுத்து வளைத்த அகிலன் அடுத்து வந்த அழைப்பை ஏற்றிட,
“எத்தனை முறை கால் பண்றது? எடுக்க இவ்வளவு நேரமா?”
“தூங்கிட்டேன்.” அவனது ஒற்றை வார்த்தை பதிலும் அதில் தொனித்த அசிரத்தையும் அவளை எரிச்சலுற செய்ய,
Advertisement
“சீக்கிரம் கிளம்பி வா. இன்னைக்கு வேலை இருக்கு.” என்றாள் அதிரா.
“நான் இன்னைக்கு வீக் ஆஃப்.” என்றான் அதே அலட்சியத்துடன்.
“இன்னைக்கு ஆஃப் எடுக்க மாட்டேன்னு சொன்ன?”
“நீங்களும்தான் இன்னைக்கு ஆஃப்னு சொன்னீங்க, இப்போ கூப்புடுறீங்க?”
“ம்ச், உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. கிளம்பி வா.”
“சாரி. நான் இன்னைக்கு லீவு. எங்கேயும் வர மாட்டேன். நீங்க வேற யாரையாவது பாத்துக்கோங்க.” என்றதும் பட்டென அழைப்பை துண்டித்தாள் அதிரா.
கண்களை இறுக மூடி பின்னந்தலையை கோதியவன், ‘மனுசனை நிம்மதியா இருக்க விடுறதே இல்லை. ச்சை… எந்த நேரத்துல இவங்க கண்ணுல பட்டேனோ…’ என்று சலித்துக்கொண்டே எழுந்து கிளம்பினான்.
“வர மாட்டேன்னு போன்ல சொன்ன மாதிரி இருந்துச்சு?” வேகமாக குளித்து கிளம்பி வந்தவனை பார்த்து சந்துரு புருவம் உயர்த்திட,
“இப்போ முறுக்குனதுக்கு வேணி விசேசம் அப்போ பழிவாங்கிட்டா வீட்டை சமாளிக்க முடியாது. அதுக்கு இதுவே பரவாயில்லை. என்னை டிராப் பண்ணு.”
“புடிக்காத மேடமுக்கு எல்லாம் டிரைவர் வேலை பாக்குற. உன் கூடவே இருக்கேன் என்னை ஒரு நாள் வேலைக்கு டிராப் பண்ணிட்டு பிக் பண்ணா என்னவாம்?”
“டிராப் பண்ணுனா பண்ணப்போறேன் அதுக்கு ஏன் இவ்வளவு நீளமா பேசுற?” என்று வார்த்தையாடியபடி சந்துருவை ஸ்டேஷனில் இறக்கிவிட்டு அதிரா வீடு நோக்கி விரைந்தான்.
அந்தோ பரிதாபம் அவள் வீட்டு மதிலுக்குள் இருசக்கர வாகனத்தில் இவன் நுழையவும் கார் வெளியே வரவும் சரியாய் இருந்தது. யார் ஓட்டுநர் இருக்கையில் இருக்கிறார் என்று அகிலன் உற்றுப் பார்க்க, கார் ஹார்ன் பலமாய் ஒலித்தது. இவனது இருசக்கர வாகனம் வழி மறித்துக்கொண்டு நின்றதே. வண்டியை ஓரமாய் நகர்த்தும் நேரம் ஓட்டுநர் இருக்கையில் இருப்பது அதிரா என்று தெரிய வண்டியை விரைந்து ஓரமாய் நிறுத்திவிட்டு காரை நெருங்குகையில் கார் சரேலென கேட்டை விட்டு வெளியே சென்றது.
“மேடம்… மேடம்…” என்று கத்திக்கொண்டே இவன் பின்னே ஓட, கேட்டை தாண்டி ஒரு சில அடிகளுக்கு மேல் ஓட முடியவில்லை. மூச்சு வாங்கியது.
இடுப்பில் கைவைத்து நெஞ்சை நிமிர்த்தி வேக வேகமாக மூச்சுக்களை உள்ளிழுத்து வெளியே விட்டான். தடதடக்கும் நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டவன்.
‘என்னை டார்ச்சர் பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சு.’ என்று முணுமுணுத்தவன் மூச்சு சீரானதும் வண்டியை எடுத்துக்கொண்டு அதிரா அலுவலகத்திற்கு கிளம்பினான்.
இரு சக்கர வாகனம் என்பதால் அவளுக்கு முன்னதாகவே சென்று காத்திருந்தவன் அவள் கார் நுழையவும் பரபரப்பாய் நெருங்கினான்.
“வேணும்னு என்னை தூண்டிவிட்டு வேடிக்கை பாக்க நினைக்குறீங்களா?” என்ற கேள்வியோடு அவளை முன்னேறவிடாமல் கார் அருகிலேயே பிடித்துக்கொண்டான்.
“ஏற்கனவே வார்னிங் கொடுத்திருக்கேன், ஹையர் அபீஷியல்கிட்ட எப்படி நடக்கணுமோ அப்படி நடக்கணும்னு. போன் பண்ணி கூப்பிட்டா உன் இஷ்டத்துக்கு ஆடுற. ப்ராப்பர் இன்டிமேஷன் இல்லாம லீவ் போடுறதே தப்பு இதுல வர முடியாதுனு வீம்பா பேசறதெல்லாம் என்ன மேனர்ஸ்?” காய்ந்த எண்ணெயில் விட்ட கடுகாய் பொரிந்தவள், “இன்னைக்கு நீ வேலையே பார்த்தாலும் லீவ்னு தான் ரெஜிஸ்டர் ஆகும். ஓகேன்னா இந்தா பிடி.” என்று சாவியை நீட்டினாள்.
சாவியையும் அவள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தவன் கைகளை பின்னே கட்டிக்கொண்டு, “நான் இன்னைக்கு லீவ்லையே இருந்துக்கிறேன்.” என்றுவிட்டான்.
“வெட்டி வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” சிடுசிடுத்தவள் உள்ளே சென்றுவிட, வண்டியை எடுத்துக்கொண்டு தங்கியிருக்கும் அறைக்கே திரும்பிவிட்டான் அகிலன்.
தன் உடைமைகளை மேசைக்கு அடியில் வைத்தவள் உடனே உதவியாளரை அழைத்து பரிதி வந்துவிட்டானா என்று விசாரித்தாள். பரிதி இன்னும் வரவில்லை என்ற தகவல் வர, மான்சி தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் மேசையில் கடைபரப்பி மீண்டுமொரு முறை நோட்டமிட்டாள்.
மான்சியின் உடற்கூறாய்வு அறிக்கையையும் மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் அருகருகில் வைத்து ஏதாவது ஒத்துப்போகிறதா என்று படித்துப்பார்த்தாள். எதுவும் ஒத்துப்போவது போல் தெரியவில்லை. எதற்கும் மருத்துவர் ஒருவரிடம் கொடுத்து கருத்து கேட்டுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவள் கோப்புகள் அனைத்தையும் அடுக்கி மேசையின் ஒரு ஓரமாய் வைத்துவிட்டு அமைச்சர் வீட்டில் நடக்கவிருக்கும் ஆலோசனைக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பான வரைவுகளில் கவனம் செலுத்தினாள்.
இன்னும் மூன்று நாட்களில் அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் நிகழவிருக்கும் சந்திப்புக்கு ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மூவர், அக்கட்சியின் தலைவர் மற்றும் கொள்கை பரப்பு செயளாலரோடு சேர்த்து தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஐவர் கலந்துகொள்வதாய் இருந்தது. அந்த அறிக்கையில் அவளை கவனிக்க வைத்தது கட்சி உறுப்பினர்கள் தவிர்த்து தொழிலதிபர்கள் சிலர் பெயர் இருந்தது. அதில் மான்சி அப்பா பெயரும் ஒன்று.
‘இவருக்கு இங்க என்ன வேலை?’ என்ற கேள்வி தொக்கி நிற்க, ரொம்ப நேரம் மெனக்கெட எல்லாம் இல்லை அவள். கட்சிக்கு நிதி என்ற பெயரில் கருப்பு பணத்தை வெளியே விட்டு தேர்தல் செலவுகளை ஈடுகட்டுவது இதுபோன்ற பெரும் முதலைகளின் பணம் தானே. அப்படி நிதியை வாரி வழங்கும் சிலருக்கு கட்சியில் செல்வாக்கும் முடிவுகளில் தலையிடும் உரிமையும் இருக்கும். மான்சி அப்பா அப்படியான ஒருவராக இருப்பார் என்று கண்டுகொண்டாள். ஒரு முறை பரிதியை விட்டு அதை உறுதி செய்துகொள்ளலாம் என்றும் நினைத்துக்கொண்டாள். கூட்டணி பேரம் நடக்கும் தினம் ஒன்றிற்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் குழும இருப்பதால் அவளது இருப்பும் அங்கு பாதுகாப்பு பணியில் அவசியம் என்று புரிந்தது. அதற்கேற்றாற் போல் அன்றைய தின அலுவல்களை வேறு தினத்திற்கு மாற்றி குறித்து வைத்தாள்.
தொடர்ந்து அன்று பாதுகாப்பு பணிக்கு தேவைப்படும் அதிகாரிகள் சிலரை தானே தேர்ந்தெடுத்து குறிப்பு போல் எழுதி அதை சுற்றறிக்கையாக அனுப்பும்படி உதவியாளரை அழைத்து சொல்லிவிட்டு, அடுத்த வேலையாக சுதந்திர தினத்தன்று நடக்கவிருக்கும் அணிவகுப்பு குறித்த அறிக்கையையும் ஒருமுறை பார்த்து உறுதி செய்துகொண்டாள். சுதந்திர தினத்தன்று அவளோடு சேர்ந்து மாவட்ட ஆட்சியரும் விழாவில் பங்குகொண்டு கொடி ஏற்றி சுதந்திர தின அணிவகுப்பை பார்க்க உள்ளார். சிறப்பாக பணியாற்றிய சிலருக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. அதற்குரிய ஏற்பாடும் எந்த நிலையில் இருக்கிறது என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரித்துக்கொண்டாள். இடையே அவள் வயிற்றையும் கவனிக்க தவறவில்லை.
மாலை போலத்தான் பரிதி அவளை சந்திக்க வந்தான்.
“இவ்ளோ நேரம் எங்க போயிருந்தீங்க பரிதி?” உரிமையாக அவனிடம் கேள்வி கேட்கவும் தயங்கவில்லை அவள்.
“இந்த கேஸ் சரியான தலைவலி மேம்.” என்றான் நெற்றி தேய்த்துக்கொண்டே.
அதிரா பரபரப்பாய் பார்க்க, “இவ்ளோ நேரம் ஆர்.டி.வோல தான் இருந்தேன். நானே செக் பண்ணேன் மேம். மான்சி ஃபார்ம்லேந்து கிளம்புன ஆட்டோ மர்மமா இருக்கு. ஆட்டோ நம்பர் பிளேட் வச்சி செக் பண்ணா அப்படி ஒரு ஆட்டோ ரெஜிஸ்டர்லையே இல்லை.”
“அப்போ வேணும்னு யாரோ நம்பர் பிளேட் மாத்தியிருக்காங்க. அப்படின்னா இது திட்டமிட்ட கொலைன்னு ஊர்ஜிதமாகுது பரிதி.”
“எஸ் மேம். யாரோ பிளான் பண்ணி தடயம் இல்லாம முடிச்சிருக்காங்க.”
“ம்ம்… அடோப்சில இருக்குறவதை வச்சி பார்த்தா ஆட்டோலையோ இல்லை இடைப்பட்ட எங்கேயோ மான்சிக்கு தெரிஞ்சவங்க யாராவது ஆட்டோல ஏறி இருக்கணும். பிகாஸ் மான்சியை தாக்குனதுக்கான அடையாளமோ பலவந்தப்படுத்தினத்துக்கான ஆதாரமோ மான்சி உடம்புல இல்லை. ஆட்டோக்காரன் பண்ணி இருந்தா கூட மான்சி போராடியிருப்பாங்க. பட் அப்படி எதுவும் நடந்த மாதிரி தெரியல. மான்சியை யாரும் உடல்ரீதியா அட்டாக் பண்ணல. மேபீ, மான்சிக்கு மூச்சு திணறல் வர மாதிரி ஆட்டோல ஏறுன ஆளோ இல்லை அந்த ஆட்டோக்காரனே கூட வேற விதமா ஏதாவது பண்ணி இருக்கலாம்.”
“ஊசி ஏதும் போட்டிருப்பாங்களோ?” தாடையில் கைவைத்து பரிதி யோசனையாய் கேட்க, நெற்றி தேய்த்துக்கொண்டே இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள் அதிரா.
“அப்படி எதுவும் அடோப்சில மென்ஷன் பண்ணலையே.”
“பாடி பாதி எரிஞ்சிருச்சு. மிஸ் ஆக வாய்ப்பிருக்குள்ள?” சந்தேகத்துடனே அதிராவை பார்த்தான்.
அவளுக்கும் குழப்பமாய் இருந்தது. எப்படி நடந்திருக்கும்? அவள் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன? என்று யோசனை தறிகெட்டு ஓடியது.
“சுத்தி இருக்குற ரோட் கேமராவை செக் பண்ண சொல்லுங்க பரிதி. சிட்டியில அந்த ஆட்டோவோட இன் அண்ட் அவுட் எந்த கேமராவுல பதிவாகி இருக்குனு பாருங்க.”
“ஆட்டோவோட அடையாளங்களை வச்சி செக் பண்ண சொல்றேன் மேம். கேமரா பூட்டேஜ் பாத்தா தெரியும் எப்படியும் நம்ம ஆளுங்க ஆட்டோ பின்னாடி ஏதாவது எழுதி வச்சிருப்பானுங்க.” என்ற பரிதியை மெச்சுதலாய் பார்த்தாள் அதிரா.
“ஆனா நினைச்சதை விட டைம் அதிகம் எடுக்கும். கேஸ் சீக்கிரம் முடியும்னு எனக்குத் தோணல மேம்.” என்ற பரிதியின் எண்ணம் தான் அதிராவுக்கும். இந்த வழக்கு அத்தனை எளிதாய் இருக்கப்போவதில்லை என்று சேகரிக்கப்படும் ஒவ்வொரு ஆதாரங்களும் கூறுகிறதே.
“சரி, மான்சி கூட அன்னைக்கு காலையில தகராறு பண்ண அந்த ரெண்டு பேர் என்ன ஆனாங்க?”
லேசாக குரல் செறுமிய பரிதி, “பிராஸஸ் போய்ட்டு இருக்கு மேம். எல்லாரும் நாம கேட்குற வேகத்துக்கு கொடுக்க மாட்டேங்குறாங்க…” என்று இழுக்க, இதழ்களை இறுக மூடிய அதிரா,
“கேஸ் இப்போதைக்கு முடியப் போறதில்லை, அதானே?”
அதேதான் என்பது போல் தலையசைத்தான் பரிதி.
“நீங்களே இப்படி சொன்னா அப்புறம் யார் எல்லாரையும் இழுத்து கட்டி வேலை வாங்கி இந்த வழக்கை க்ளோஸ் பண்றது?” என்று அதிரா விழி உருட்ட, திகைப்பாய் பார்த்தான் பரிதி.
“நல்லா போட்டு வாங்குறீங்க மேடம்.”
“சில கேஸ் இப்படித்தான் சூடா ஆரம்பிக்கும் அப்புறம் ஆடை விழுந்து தேங்கிடும். எனிவே, நம்மாள முடிஞ்சவரை சீக்கிரம் முடிக்க முயற்சி பண்ணுவோம். நீங்களும் ப்ராஸஸை ஸ்பீட் அப் பண்ணுங்க.” என்றதும் தலையாட்டிக்கொண்டு பரிதி எழுந்துகொள்ள,
“ஹான் பரிதி, அந்த குப்பை மேடை க்ளியர் பண்ண சொன்னேனே அதுக்கப்புறம் அப்டேட்ஸ் எதுவும் வரல?” என்று விசாரிக்க, கண்களை சுருக்கியவன்,
“வேலை நடக்குது மேடம். ஆனா மெதுவாதான் நடக்குது. எதாவது சொன்னா ரிவென்யு ஆளுங்க உள்ள பூந்து குழப்ப ரெடியா இருக்காங்க. அதெப்படி அவங்க கட்டுப்பாடுல வர இடத்தை போலீஸ் டிபார்ட்மென்ட் க்ளியர் பண்ண சொல்லி ஆர்டர் போடலாம்னு ஈகோ பாக்குறாங்க.”
“வேலை நடக்குதுதான்னு மட்டும் அப்பப்போ ஆள் வச்சி விசாரிச்சிடுங்க. இப்போ விட்டோம்னா எப்போவுமே அந்த இடத்தை க்ளியர் பண்ண முடியாது.” என்றதற்கு தலையசைத்து கிளம்பினான் பரிதி.
சற்று நேரம் மற்ற வேலைகளை கவனித்துவிட்டு கார் எடுத்துக்கொண்டு இரவு ரோந்துக்கு சென்றாள். இரவின் நிசப்தத்தையும் குளுமையையும் அனுபவித்தபடி காரை இயக்கியவளுக்கு மான்சி வழக்கு குடைச்சலாகவே இருந்தது. இதுவரை அவள் சந்தித்த வழக்குகளிலேயே இந்த ஒரு வழக்கு தான் எதிர்மறையான அனுபவங்களை பரிசளிப்பதாக தோன்றியது.
முதலில் அகிலன் இப்போது வழக்கு எந்த திசை நோக்கி செல்கிறது என்று கணிக்க முடியாதபடி அமைகிறதோ என்ற தடுமாற்றம். முன் முடித்த வழக்குகள் அனைத்திலும் அவள் யூகிக்கும் திசையில்தான் வழக்கு சென்று குற்றவாளியை அடையாளம் காட்டி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறது. ஆனால் மான்சி வழக்கில் எங்கு சென்றாலும் முட்டு சந்தாகவே தெரிந்தது. இப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மான்சியிடம் தகராறு செய்த அந்த இரு ஆண்கள்தான். ஒருவேளை அவர்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்ற பட்சத்தில் எந்த பக்கம் வழக்கை கொண்டு செல்வது என்று ஒருவாறு யோசித்து திட்டமிட்டுவிட்டு உறங்கிப் போனாள்.
மறுநாள் வழக்கம் போல் காலை வேலைக்கு வந்திருந்தான் அகிலன். தேவைக்கு அதிகமாக எதுவும் பேச்சு கொடுக்கவில்லை அதிரா. விட்டது தொல்லை என்று அவனும் அவன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்துகொண்டான். ஆனால் இருவரின் கொள்கை கோட்பாடுகள் வேறு வேறாய் இருக்கும் போது அப்படியே இருந்திட முடியுமா என்ன? அன்றிரவே அடுத்த பஞ்சாயத்து வந்தது.
“ஆபீஸ் பக்கத்துல தினம் டீ, பன், சாப்பாடு எல்லாம் சாப்புட்டு காசு கொடுக்கிறது இல்லையாமே நீ. கம்பளைண்ட் வருது எனக்கு.” என்று ஆரம்பித்தாள் அதிரா.
‘இதெல்லாம் ஒரு விசயமா’ என்று உச்சு கொட்டினான் அகிலன். ஆனால் வெளியில் விறைப்பாய் நின்று கொண்டான், “யார் சொன்னா?”
“கேள்வி கேட்டா திருப்பி கேள்வி கேக்குறது உன் வேலை இல்லை.” கேள்வி கேட்டால் பதில் சொல் என்ற அழுத்தம் அவள் பேச்சினில் இருந்தது.
“கணக்கு வச்சிக்க சொல்லியிருக்கேன். கொடுத்திடுவேன்.”
“எது, காந்தி கணக்கா?” என்று அவள் கேட்டிட, அதில் இருக்கும் உண்மையை மறுக்க முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டே, “காந்தி கணக்கோ அகிலன் கணக்கோ அது என்பாடு. நான் பாத்துக்குறேன்.”
“கம்ப்ளைண்ட் வராம இருந்தா இந்த கணக்கை எல்லாம் பாக்கணும்னு எனக்கு தலையெழுத்தா என்ன? ஒழுங்கா சாப்புடுறதுக்கு காசு கொடு. இப்படி ஓசியில ரொம்ப நாள் சவாரி செய்யலாம்னு நினைக்காத.” என்று கண்டித்தாள் அதிரா.
“முன்னாடி வேலை பாத்த இடத்துல எங்கேயும் இதுமாதிரி பிரச்சனை வந்தது இல்லை. நீங்கதான் இப்படி குடையுறீங்க.” அசராது பொய்யை தட்டிவிட்டான் அகிலன்.
“முன்னாடி யாரும் கேக்கலைங்குறத்துக்காக என்னால கேக்காம இருக்க முடியாது. எனக்கு கீழ இருக்குறவங்க மேல கம்ளைண்ட் வந்தா நான் கேக்கத்தான் செய்வேன். நீ பதில் சொல்லித்தான் ஆகணும்.”
“ம்ச், உங்ககிட்ட டிரைவரா வந்ததுலேந்து என் வருமானம் எல்லாம் போச்சு. சம்பளம் போட்டாதான் கொடுக்க முடியும்.”
“ஓ, சார் சம்பளம் தவிர்த்து கிம்பளம் எல்லாம் வாங்குற பெரிய இடமோ?” என்றவள் அவனை அற்பமாய் பார்த்து, “ஆமா உன்னோட கொள்கை தான் என்ன? கொஞ்சம் சொல்லேன் தெரிஞ்சிக்குறேன்.” என்று காதை தேய்த்துவிட்டு கைகளை பின்னே கட்டிக்கொண்டு நின்றாள்.
வேண்டுமென்றே தன்னை சீண்டிப்பார்த்து வார்த்தைகளை பிடுங்கி அறிவுரை என்ற பெயரில் காதில் இரத்தம் வர வைக்க முயற்சிக்கிறார் என்று முடிவு கட்டிக்கொண்டவன், “பர்சனல் விசயங்களை டியூட்டில இருக்குறப்போ பேச மாட்டேன் மேடம்.” என்று சுதாரிப்பாய் சொல்ல,
‘உன் வண்டவாளம் எனக்குத் தெரியும்.’ எனும் விதமாய் நக்கலாக சிரித்தாள்.
“கொள்கை சொல்ல வேண்டாம், என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு…” என்ற அதிராவிடம் தன் மொத்த கவனத்தையும் பதித்தான் அகிலன்.
“அப்பப்போ இந்த டாஸ்மாக் பக்கம் உன் வாசம் வீசுதே அங்க மட்டும் எப்படி மேன் உன் பாக்கெட் துறக்குது?” அன்று ஒருநாள் அவன் பணம் கொடுத்து மது வாங்குவதை கண்டுவிட்ட பின்னே இந்த கேள்வி.
“இப்போ என்ன நான் எக்ஸ்ட்ரா வாங்கக்கூடாது. உங்களை மாதிரி நீதி, நேர்மை, நியாயத்தை நிலைநாட்டனும் அதுதானே? நாட்டுறேன். உங்ககிட்ட இருக்குறவரைக்குமாவது நாட்டுறேன். ஆள விடுங்க…” கையெடுத்து கும்பிடாத குறையாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் அகிலன்.
‘என்ன இப்படி பயப்படுறான். நாம சொல்லி திருந்துற ஜீவனா இவன்? பொறுத்திருந்து பாப்போம்’ என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் அதிரா.
அடுத்தடுத்த நாட்களில் மான்சி வழக்கின் முன்னேற்றங்கள் அவள் மேசைக்கு வராது பரிதியுடனே நின்றுகொண்டது. காரணம் அமைச்சர் வீட்டில் நடக்கவிருக்கும் ஆலோசனை மற்றும் பாதுகாப்பு விசயத்தில் மும்முரமாகிவிட்டாள் அதிரா. உள்துறையிலிருந்து பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு அழுத்தம் அதிகம் வர, இரண்டடுக்கு பாதுகாப்பாய் கூட்டினாள். இறங்கி அவளும் களத்தில் நிற்கும் நிலையில் இருந்தது.
அன்று சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டிற்குள் கார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதிரா கையிலிருந்த வாக்கி டாக்கிக்கு ஓய்வே இல்லை என்பது போல் வரிசையாக கட்டளைகள் பிறப்பித்த வண்ணம் இருந்தாள். அமைச்சர் வீடு அமைந்திருக்கும் தெருக்கோடியின் இரு முனையிலும் தடுப்புகள் போடப்பட்டு காவலர்கள் சோதனை செய்த பிறகே வண்டிகள் தெருவுக்குள் அனுமதிக்கப்பட்டது.
முக்கிய புள்ளிகள் வசிக்கும் அத்தெருவுக்குள் கேமராக்களுடன் பலர் குவிந்து விட்டனர். அனைவரையும் உள்ளே விடாது தடுப்புக்கு வெளியே நிறுத்தி விட்டனர் காவல் துறையினர்.
‘என்றைக்கும் இல்லாது இன்று மட்டும் ஏன் இத்தனை பாதுகாப்பு? அமைச்சர் வீட்டில் அப்படி என்ன பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது?
குவிந்திருக்கும் காவலர்களைப் பார்த்தால் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இது மாற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இன்னும் சற்று நேரத்தில் கூட்டம் முடிந்துவிடும் என்று காத்திருக்கிறோம். உடனடி செய்திகளுக்கு இணைத்திடுங்கள் எங்களுடன்…’ என்று ஆங்காங்கே செய்தி சேனல்கள் தங்களின் செய்தி சேகரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்களை நிற்க வைத்து உடனடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.
அனைத்தும் சரியாக சென்றுக்கொண்டிருக்கையில் அமைச்சரின் பி.ஏ. அதிராவிடம் வந்து,
“நியூஸ் சேனல்ஸை உள்ள விடுங்க.” என்று கட்டளை போல் சொல்ல, அதிரா நேரத்தை பார்த்தாள்.
மாலை ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரங்கள் நடந்திருக்கிறது கூட்டம் என்று கணக்கிட்டவள், “முடியாது.” என்றாள்.
“அமைச்சரோட ஆடர் இது.”
“சார், முதல்ல இது நம்ம ப்ரோட்டோகால்லையே இல்லையே. மீடியாவை உள்ள விடக்கூடாதுனு தானே சொல்லி இருந்தீங்க?” எதிர்கேள்வி எழுப்பியிருந்தாள் அவள்.
“அதெல்லாம் அரசியல் சூட்சமம் மேம். இப்போ என்ன முடிவு எட்டி இருக்கோம்னு மீடியாவுக்கு சொல்ல விருப்பப்படுறாரு சார். இன்னும் பத்து நிமிசத்துல எல்லாரையும் வீட்டு கேட்டுக்கு வெளில அசம்பில் பண்ணிடுங்க.” எனும் போதே மைக்குகள் வைக்க ஏதுவாய் உள்ளிருந்து மேசை வந்தது.
“சார், இப்போ வந்து பிரஷர் பண்ணா எப்படி சார்? நாங்க மீடியா பீப்புல இன்னும் செக் பண்ணல.” மறுக்கவே செய்தாள் அதிரா. ஆனால் அதிகார வர்க்கம் முடிவெடுத்தபின் இவள் பேச்செல்லாம் எடுபடுமா என்ன? வேறு வழியின்றி அடையாள அட்டையை பரிசோதித்து உள்ளே அனுமதிக்கும்படி வாக்கி வழியே கட்டளை பிறப்பிக்க, அதன்படி பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
வீட்டு கேட்டருகே ஒரு மேசை போடப்பட்டிருக்க, அதில் மைக்குகள் அடுக்கி வைக்கப்பட்டன. பல கேமராக்கள் நொடிக்கு நொடி பிளாஸ் அடித்த வண்ணம் இருக்க, சட்டென சலசலப்பு கேட்டது.
கட்சியின் முக்கிய செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் சூழ ஆளுங்கட்சி அமைச்சர்கள் மூவரும், தேசிய கட்சி உறுப்பினர்களும் வந்தனர். அடித்துப்பிடித்து கேள்விகளை வீசினர் பத்திரிகையாளர்கள். சலசலப்பு ஆரவாரங்களுக்கு இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லிய கணம் எங்கிருந்தோ செருப்பு பறந்து வந்து கீழே விழுந்தது.
நொடியில் இடம் கலவரமாக பத்திரமாக அமைச்சர்களை உள்ளே அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டாள் அதிரா. தொடர்ந்து கற்கள் அவர்கள் நோக்கி வந்தது. காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு குவிந்து பத்திரிகையாளர்களை துரத்தியவண்ணம் கூட்டத்தை விரட்டியடிக்க, ஒரு சிலர் தெறித்து அங்குமிங்கும் ஓட, சிலர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, மோதல் வெடித்தது.
இதற்கிடையில் அமைச்சர்களை உள்ளே தள்ளி அந்த வீட்டின் பெரிய கதவை மூடச் சொல்லி அதிரா கத்த, அதுவரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அகிலன் ஓடிச் சென்று கேட்டை செக்கியூரிட்டி உதவியுடன் வேகமாக மூடி, நொடி நேரத்தில் வெளியிலிருந்து பறந்து வந்த சற்று பெரிய கூர்மையான ஜல்லிக்கல் ஒன்று அமைச்சரிடம் தீவிரமாக பேசிக்கொண்டிருந்த அதிராவின் தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் இடையே பட்டு கீழே விழுந்தது.
கல் அவள் மீது வந்து விழுந்த வேகத்தில் அலறலுடன் கழுத்தில் கை வைத்து வலியில் சுருண்டு கீழே அமர்ந்துவிட்டாள் அதிரா.
அவளின் அலறலைக் கண்டு அதிர்ந்த மற்ற அதிகாரிகள் அவளை நெருங்கவும் சமைந்து நின்றிருந்த அகிலன் படபடப்புடன் அவளை நோக்கி ஓடினான். அவன் செல்வதற்குள் அவளைச் சுற்றி அதிகாரிகள் குழுமிவிட, உயர் அதிகாரிகள் என்பதால் அகிலனால் அவர்களை விலக்கிக்கொண்டு போக முடியவில்லை. மனம் அடித்துக்கொண்டது. வேகமாக ஓடிச் சென்று காரை எடுத்துவந்து ஹார்ன் அடிக்க, அதிராவை காரின் பின் சீட்டில் ஏற்றிவிட்டு துணைக்கு ஏறிக்கொண்டார் ஒரு காவலர். அகிலன் பதட்டத்துடன் திரும்பப் பார்க்க,
நேர்கொண்ட பார்வை பார்க்கும் விழிகள் கலங்கி, அக்கண்ணீரை தாங்கிய வண்ணம் அவளது மாசு மருவற்ற முகம் செம்மை பூசியிருந்தது. கட்டளையிடும் அதரங்கள் வலியில் துவண்டுத் துடிக்க, இதுவரை அவளை அப்படிப் பார்த்திராத அவனுக்கும் பயம் பிடித்துக்கொண்டு இதயம் வேகமாக துடித்தது.
error: Content is protected !!