Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இ.பி.கோ. 55

இ.பி.கோ. 55 – எபிலாக்

அத்தியாயம் – 24 (எபிலாக்)

சுற்றம் முழுதும் இருள் சூழ்ந்திருக்க, வண்டி வேகமாக செல்லவும் அந்த ரேபிடோ ஓட்டுனரை மெதுவாக போகச்சொல்லி கேட்டுக்கொண்டான் அகிலன்.

“பொறுமையா போனும்னு சொல்லித்தானே புக் பண்ணேன். இப்படி போற?”

“ரோடு குண்டும் குழியுமா இருந்தா நான் என்ன சார் பண்றது?” அப்பாவியாக கேட்டான் அந்த ஓட்டுநர்.



Advertisement

“சரி, சரி பொறுமையா போ.” என்ற அகிலன் கையில் இருக்கும் பையை பாத்திரமாக பிடித்துக்கொண்டான். 

ஒருவழியாக வண்டியை உருட்டி வீடு வந்து சேர்ந்ததும் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். முடிவு செய்திருந்த நேரத்திற்கு சரியாக வந்திருக்கிறோம் என்று ஆசுவாசத்துடன் ஓட்டுனருக்கு இருபது ரூபாய் அதிகமாகவே சேர்த்து கொடுத்துவிட்டு வாசல் வந்தவன் காலிங் பெல் அழுத்தாமல் அம்மாவுக்கு அழைப்பு விடுக்க, அவரும் ஐந்து நிமிடத்தில் ஓசையெழுப்பாமல் கதவை திறந்துவிட்டார்.

“என்ன பண்றாங்க?”

Advertisement

“இப்போதான் தூங்குனாங்கயா… இப்போவே எழுப்பி எல்லாம் செய்யணுமா?” என்று அவர் பாவமாய் பார்க்க,

Advertisement

“இப்போதான் செய்யணும். நான் போய் பாத்துட்டு வரேன். நீ இதை எடுத்துவை.” என்று பையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு மெதுவாக அவர்கள் அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றான் அகிலன். 

அம்மாவும் பிள்ளையும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். ஓசையின்றி கதவை தாழிட்டு வந்தவன் மனைவியை நெருங்கி அவள் முகம் மறைத்த முடியை ஊதிவிட விழித்துவிட்டாள் பெண்.

ஆச்சர்யத்தில் அதிர்ந்து விழித்தது என்னவோ நொடி நேரம்தான் உடனே அவன் கழுத்தில் கையிட்டு, “அகி.” என்று அவனை தன்னுள் இழுத்துக்கொண்டாள் அதிரா.

Advertisement

அவள் கழுத்து வளைவில் நன்றாக மூச்சிழுத்து அவள் மணத்தை சுவாசப்பையில் நிரப்பிக்கொண்டு முகம் புரட்டியவன் அழுத்தமான முத்தமொன்றை பதித்தான்.

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதி…” 

“அகி…” என்று அவன் பெயர் முனகி இறுக அணைத்துக்கொண்டவள் நெகிழ்ந்திருந்தாள்.

அணைப்பை விட மனமே இன்றி அவள் இருக்க, “இப்படியே இருந்தா என் பேக் போயிடும் அதி…” மெல்ல சிரித்துக்கொண்டே அணைப்பை தளர்த்தி அவளருகில் அமர்ந்தான் அகிலன்.

பட்டென எழுந்த அதிராவும் அவன் தோள் சாய்ந்துகொள்ள, “இப்போதான் தூங்குனீங்கன்னு அம்மா சொன்னாங்க. ரொம்ப படுத்திட்டானா?” என்றவன் எக்கி அதிரா அருகில் சமத்தாய் உறங்கிக்கொண்டிருந்த மகனைப் பார்த்தான். 

“மதியம் தூங்காம சார் சாயந்திரம் தான் தூங்குனாரு அதனால நைட் லேட்டாகிடுச்சு.” என்றவள் கரங்கள் தாய்மையோடு மகனின் சிகையை வருடிவிட்டது. 

“இப்படி இருந்தா உனக்கு கஷ்டம் அதி. பழக்கி விடு. அம்மாகிட்ட கேட்டுக்கோ…” 

“இன்னும் பத்து நாள் தான்ல?” எனும்போதே அவள் குரல் கமறியது. 

மகப்பேறு விடுப்பில் ஒரு வருடமாக இருப்பவள் இன்னும் பத்து நாளில் திரும்ப வேலையில் சேர வேண்டும். முன்பு யாராவது வேலைக்கு விடுப்பு எடு என்றால் கூட அத்தனை யோசிப்பவள் தாய்மைக்கு பின் மகனை விட்டு வேலைக்கு செல்லவே மனம் இல்லை. ஆனால் சென்றுதானே ஆகவேண்டும். அவளுக்காக, குடும்பத்திற்காக இல்லையென்றாலும் சட்டம் ஒழுங்கை காத்து அவலங்களை தடுக்கவும் பல பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாய் பெண் காவலராய் அவள் பங்கு அவசியம் என்று புரிந்திருந்தது. 

“நான் டிரான்ஸ்பர் கேட்டிருக்கேன் அதி. கண்டிப்பா கிடைச்சிடனும், எனக்காக இல்லைனாலும் உனக்காகவாவது என்னை மாத்திடுவாங்க.” என்று லேசாக சிரித்தான் அகிலன். 

என்னதான் எஸ்.ஐ ஆக இருந்தாலும் அதிராவின் பதவிக்கு இருக்கும் மதிப்பும் முக்கியத்துவமும் அவனுக்கு சாதகமா சில நேரங்களில் அமைகிறது. மகப்பேறை காரணம் காட்டி இன்னும் மூன்று வருடங்களுக்கு அவளின் பணி மாற்றத்தை ஒத்திவைத்திருக்க, மகன் பிறந்த சில தினங்களிலேயே அகிலனுக்கு வேறு மாவட்டத்தில் மாற்றல் வந்துவிட்டது.

பிறந்த குழந்தையையும் மனைவியையும் விட்டு செல்ல மனமே இன்றி தென்மாவட்டத்தில் வேலை செய்கிறான். அதிராவும் வேலையில் சேர இருப்பதால் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் மகனை பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் மகனின் வளர்ச்சியை அருகிலிருந்து கண்டு ரசித்து, அவனுடன் பெற்றோராய் வளரவே விழைந்தது இருவரின் மனமும். அதன்பொருட்டு மாறுதலுக்கு விண்ணப்பித்திருக்கிறான். அதிராவும் தன் பங்குக்கு அவனுக்கு இதே மாவட்டத்தில் மாறுதல் வேண்டி பேசியிருக்கிறாள்.

இருவரும் உறங்கும் பிள்ளைக்கு முத்தம் வைத்து நிமிர, அதிராவை எழுப்பியவன் கைபிடித்து அவளை அழைத்துச் செல்ல முயல, கையை உருவிக்கொண்டவள் மகனை நன்றாக படுக்க வைத்துவிட்டு வந்தாள். 

“எப்போதும் அவன் நினைப்பு தான்ல…” 

“அது உனக்கு புரியாது.” என்றவளை கைபிடித்து வெளியே அழைத்து வர, சோபா எதிரே இருந்த சிறிய டேபிளில் அகிலன் வாங்கி வந்திருந்த கேக்கை பிரித்து வைத்திருந்தார் பார்வதி.

அவளை அமர வைத்து அருகே அமர்ந்துகொண்டவன் கத்தியை கொடுக்க, அவனை நன்றாக உரசி அமர்ந்தவள் லேசாக அவன் தோளில் சாய்ந்தபடியே கேக்கை வெட்டி முதலில் அவனுக்கு ஒரு துண்டு ஊட்ட, அவன் பதிலுக்கு ஊட்ட சங்கடமாய் அமர்ந்திருந்தார் பார்வதி. அகிலன் அவரை கண்காட்டவும் தான் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவள் எழுந்து அவருக்கும் ஊட்டிவிட்டாள்.

“குட்டியை உன் ரூம்ல படுக்க வைக்குறன் மா. பாத்துக்கோ. பக்கத்துல போய்ட்டு வந்துறோம்.” என்று எழுந்தவன் கைபிடித்து நிறுத்தினாள் அதிரா.

“அவனை விட்டுட்டு எங்க?”

“அவன் முழிச்சிக்குறதுக்குள்ள வந்துடலாம் அதி.” என்றவன் தாமதிக்காது மகனை தூக்கி அம்மாவிடம் கொடுத்துவிட்டு வண்டி சாவி எடுத்தான்.

“டிரெஸ் மாத்துறேன்னு டைம் வேஸ்ட் பண்ணாத அதி…” கேக்கை பத்திரப்படுத்தியவளை யோசிக்க விடாமல் கைப்பிடித்து இழுத்துச் சென்றான் என்றுதான் சொல்ல வேண்டும். 

அதிரா குனிந்து தன் உடையை பார்த்தாள். வீட்டில் உடுத்தும் நைட் ஷர்ட் பேண்ட் தான் அணிந்திருந்தாள். இதோடவா என்று யோசனை இருந்தாலும் பதினைந்து நாள் கழித்து வந்திருப்பவனுடன் நேரம் செலவழிக்க எண்ணி பைக்கின் பின் அமர்ந்தாள்.

அவர்கள் முதன்முதலில் அவர்களுக்கென வாங்கிய வாகனம். அகிலனின் பணம் கொஞ்சமும் அதிராவினது கொஞ்சமும் என இருவரும் வாங்கியது. இருவருமே தேவைப்படும் போது ஓட்டுவது உண்டு. வண்டி வீட்டு வாயிலை தாண்டியதும் அதிராவின் கையை இழுத்து தன் இடைசுற்றி போட்டுக்கொண்டான் அகிலன். எங்கு அழைத்துச் செல்கிறான் என்ற எந்த யோசனையும் எச்சரிக்கை உணர்வும் இன்றி சுகமாய் அவன் முதுகில் சாய்ந்து வேடிக்கை பார்த்தபடி வந்தாள் அதிரா.

அரைமணி நேரத்திலேயே எங்கு செல்கிறோம் என்று புரிந்துகொண்டவள் அவன் முதுகில் லேசாக முகத்தை தேய்க்க உல்லாசமாக விசில் அடித்தவன் வண்டியின் வேகத்தை கூட்டி அழைத்துச் சென்ற இடம் கடற்கரை. வீட்டிற்கு அருகில் இருக்கும் கடற்கரைக்கே வந்திருந்தனர்.

கடல் காற்று உடலை இளகச் செய்ய, அவனது கைப்பிடித்து நடந்தவளை சுண்டி இழுத்து தன்னோடு சேர்த்து சரித்துக்கொண்டு மணலில் விழுந்தான்.

“அகி..” பதட்டத்தில் அவன் சட்டை காலரை பிடித்துக்கொண்டவள் பின் வாகாக அவன் நெஞ்சில் தலைவைத்து படுத்துக்கொண்டாள்.

“உன்னையும் பையனையும் ரொம்ப மிஸ் பண்றேன் அதி.” அவனது அணைப்பு இறுகியது.

வானை வெறித்தபடி இருந்தவனை தன் புறம் திருப்பியவள் ஆறுதலாய், “சீக்கிரம் எங்ககிட்ட வந்துடலாம் அகி.” 

“பேசாம வேற வேலையில சேர்ந்திருக்கலாம். உனக்கு எங்க போடுறாங்களோ அங்க பொட்டி கட்டிட்டு வந்திருப்பேன்.”

“சார் தானே உருண்டு பிரண்டு படிச்சி பாஸ் பண்ணீங்க…”

“அது அப்போ உன்னை எப்படி நெருங்குறதுனு யோசிச்சேன். இந்த வேலையில் இருந்தா ஈஸினு தோணுச்சு, நீ வேற நல்ல முத்தம் வாங்கிக்கிட்டே சொல்லிக்கொடுத்த, ஒரு வேகத்துல படிச்சு பாசாகிட்டேன்.” என்றதும் சிரிப்புதான் வந்தது அதிராவுக்கு.

“அப்போ எதுக்கு சிக்ஸ் பேக் எல்லாம் வைக்க ட்ரை பண்ணியாம்?”

“அந்த உன் பிரென்ட் பாக்க அப்படி டிப்டாப்பா இருந்தான். அப்படியே உன்னை தூக்கிட்டு போயிட்டா நான் என்ன பண்றது. அதுக்குதான் குறைச்சேன்.”

“அடப்பாவி…” என்று நிமிர்ந்து பார்த்தாள், “இத்தனை நாள் இதை சொல்லவே இல்லை நீ.”

“நீயும் அவன் உனக்கு ரூட் விட்டான்னு சொன்னியா… நானா கண்டுபுடிச்சேன்.” என்று இவன் முகம் சுழிக்க, “அவனுக்கும் கல்யாணம் ஆகப் போகுது அகி. இப்போ இந்த பேச்சு தேவையா?”

“அதனால தான் ரூட் விட்டான்னு தெரிஞ்சும் அவனை இன்னும் வீட்டுக்குள்ள விட்டுட்டு இருக்கேன்.”

“ஆஹான்… நீ விடுறியா? என்னை பாக்க வர்றவனை வேண்டாம்னு சொல்லுவியா நீ?”

“நான் வேண்டாம்னு சொன்னா நீ அப்படியே கேட்டுடுவ பாரு…” என்றவன் நெஞ்சில் லேசாக அடித்தவள், “வீட்டுக்கு போலாமா அகி?”

“இப்போதான வந்தோம். ஒரு அரைமணி நேரம் இப்படியே இரு. வெட்ட வெளில கடல் அலை கால் உரச படுத்து வானத்தை பாத்துகிட்டு இருக்கணும்னு எவ்வளவு நாள் நினைச்சிருக்கேன் தெரியுமா… இன்னைக்குத்தான் வாய்ப்பு கிடைச்சிருக்கு.”

“நாளைக்கு இருப்பியா அகி?”

“உன்கூட இருக்கணும்னு தான் இந்த மாசம் இத்தனை நாள் லீவ் எடுக்காம இருந்தேன். மூணு நாள் உங்களோடதான்.” என்றதும் அவனை இறுக கட்டிக்கொண்டவள் செவியருகே, “வீட்டுக்கு அகி.” என்க, அவள் குரல் பேதம் உணர்ந்தவன் எழுந்துவிட்டான்.

கைகொடுத்து அவளை எழுப்பி அழைத்துச் சென்றவன் வரும் போது இருந்த வேகத்திற்கு எதிர்பதமாய் மெதுவாக ஓட்டி வீடு வந்து சேர, கதவை பூட்டி வந்தவள் மாமியார் அறைக்கு சென்று மகன் உறங்குகிறானா என்று பார்த்துவிட்டுத்தான் அறைக்கு வந்தாள். 

வந்தவளை அப்படியே தூக்கிக்கொண்டவன் தம்கட்டி அவளை மெத்தையில் விட, சத்தமாக சிரித்தவள், “குடும்பத்தை பெருக்குறேன்னு மறுபடி அகலத்துல பெருகிட்டு இருக்க அகி.” 

“நானாவது அங்க கிடைச்சத சாப்டுட்டு இப்படி இருக்கேன். நீ இங்க நல்லா டயட்டு டயட்டுனு சாப்பிட்டே கொழுக் மொழுக்குன்னு இருக்க…” என்று உப்பியிருந்த அவளது கன்னத்தை கடிக்க, அவள் பதிலுக்கு கிள்ள, சிறிது நேரத்தில் சிரிப்பு சத்தங்கள் மெல்லிய முனகல்களாய் மாறியது. 

மறுநாள் காலை நேரமே எழுந்த அதிரா மகனை தூக்கி வந்து அகிலனிடம் விட, தந்தை மீது ஏறிக் குதிக்க முயன்ற மகன் அப்படியே விழ, அகிலன் தூக்கி நெஞ்சில் போட்டு தட்டிக்கொடுத்து கொஞ்சினான். அதிரா அவர்களை ரசித்த வண்ணம் இருக்க, வெளியே குரல்கள் கேட்டது.

வெளியே வந்து பார்த்தவள் விஷுவை கண்டு இன்பமாய் அதிர்ந்தாள். குழந்தை பிறந்த போது வந்ததோடு சரி அதன்பின் இன்றுதான் வருகிறான்.

“என்னை பாக்க வர இவ்வளவு நாளா உனக்கு?” என்று அதிரா உரிமையாக சண்டை போட, 

“நானா ஒன்னும் வரல. உன் புருஷன் கெஞ்சி கூப்பிட்டதால வந்தேன்.” என்று முகம் திருப்பினான் விஷு.

“அப்போ அவன்கிட்டே பேசிக்கோ, போ.” என்று அதிரா நகர, அவளை தடுத்து கிப்ட்டை நீட்டினான்.

அவள் வாங்கி அதை பிரிக்கும் முன் அவளருகே தந்தையின் தோளில் தவ்வியபடி வந்த அவள் மகன் அதை பிடுங்க அத்தனை முயற்சியும் எடுத்தான்.

“இருடா இது உன் அம்மாவுக்கு, உனக்கு வேற இருக்கு.” என்று விஷு கார் ஒன்றை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி பார்த்துவிட்டு தூக்கி போட்டுவிட்டான் சிறியவன்.

அதிரா மகனை முறைத்து திட்ட, பதிலுக்கு அகிலன் அவளை வைய, அதற்கு அதிரா முறைத்த முறைப்பில் சமாதான படலத்தில் இறங்கிவிட்டான் அகிலன். இதை பார்த்திருந்த விஷுவுக்கு அவர்களின் உறவில் இன்றளவும் வியப்பே. அப்போதிருந்த ஏற்றத்தாழ்வுகள் இப்போதும் இருக்கிறது. வேலையின் காரணமாக ஒரே இடத்தில் ஒன்றாக வாழ்க்கையை தொடர முடியும் என்ற நிரந்தரமும் இல்லை ஆனால் அவர்களின் அன்பும் புரிதலும் பெருகியது போலத்தான் தெரிந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!