Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 10

     காதலைச் சொல்லாமல் சுற்றி வந்த நாட்கள் வெகு சுவாரசியமாக இருந்தது சாருகேசிக்கு. அனைவரிடமும் வந்து பார் என்கிற ரகமான அமிர்தா, தன்னைக் கண்டாலே தடுமாறுவதும், தான் அவளோடு பேசாததில் யோசனையில் ஆழ்வதும், ஒற்றைப் புள்ளியை வெறித்துப் பார்த்து தன் சுயத்தை இழப்பதும் அவனுக்கு அதிகம் பிடித்தது.

     ஒரு ஆண் தன்னை பெருமையாக உணரும் தருணங்கள் என்று சிலது உண்டு. அதில் முக்கியமானது தன்னைக் கொண்டு ஒரு பெண்ணின் மனதில் விழும் சலனம். அப்படி தன்னால் அமிர்தாவின் மனதில் விழுந்த சலனத்தையும், அது போட்டு அவளை ஆட்டிப்படைப்பதையும் தள்ளி நின்று வெகுவாக ரசித்தான். அவளின் தவிப்பு அதிகரிக்க அதிகரிக்க தன் மீதான அவளின் காதலும் அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டவன், அமிர்தாவின் ஆழ் மனதில் துளி இடம் மிச்சம் இல்லாமல் தான் நிறைவதற்காக கடவுள் தரும் சூழ்நிலைக்கு காத்திருக்காமல், தானே சூழ்நிலைகளை உருவாக்க ஆரம்பித்தான்.

     கல்லூரியில், இருவரும் பயிலும் வகுப்பு இருக்கும் கட்டிடங்களுக்கு நடுவில் அதிக இடைவெளி இருந்தாலும், கேன்டீன், நூலகம், மெஸ் ஹால், ஜெராக்ஸ் பகுதி என அனைவருக்கும் பொதுவான இடங்களில் அவள் இருக்கும் நேரங்களில் மிகச்சரியாக தானும் இருப்பது போல் காட்சிப்படுத்தினான் கேசி. இவை அனைத்தும் எதேச்சையாக நடக்கிறது என்று சொன்னால் குழந்தை கூட நம்பாது. அப்படி இருக்க அமிர்தாவா நம்பிவிடப் போகிறாள். அவன் தனக்காக தான் வருகிறான் என்பது புரிய அவளுக்கும் அதெல்லாம் பிடித்து தான் இருந்தது. ஆனால் அவன் ஏன் தானாக முன்வரவில்லை என்கிற நினைப்பில் சுற்றிவந்தாள். எப்போது பார் அவனைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்ததில் அவளுடைய குறும்புத்தனம் வெகுவாகக் குறைந்திருந்தது.



Advertisement

     அவனுக்கும், தனக்கும் நிஜமாகவே ஏதாவது இருக்கிறதா இல்லை தான் தான் அப்படி நினைத்து தவித்துக்கொண்டிருக்கிறோமா என்கிற குழப்பத்தோடு இருந்தவளைக் கவனித்து நீலாம்பரி காரணம் கேட்க சற்றே தயங்கியவள், பின் எப்படியாவது தன் குழப்பம் தீர்ந்தால் போதும் என்கிற நினைப்பில் அக்காவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டிருந்தாள்.

     காதலிக்கும் அளவிற்கு தன் தங்கை பெரிய மனிதியாகிவிட்டாளா என்கிற சந்தேகம் தான் நீலாம்பரியை முதலில் தாக்கியது. அம்மா கல்யாணி கட்டாயம் தங்கையின் காதலை மறுக்கப்போவது இல்லை என்று புரிந்தாலும், தங்கைக்கு இது காதலிக்கும் வயது இல்லை. கனவுகளை நோக்கி ஓடும் வயது என்று நினைத்தவள் தான் இதில் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தாள்.

     எப்படி யோசித்தாலும், தங்கை சொல்லும் அந்த இளைஞனிடம் பேசாமல், அவனின் குணத்தை அறிந்துகொள்ளாமல் ஒரு முடிவுக்கு வர வேண்டாம் என்றே அவள் மனம் சொல்ல, தங்கையிடம் வந்தவள் கேசியோடு பேசி அவனை அவர்கள் கல்லூரிக்கு அருகே இருக்கும் சிவன் கோவிலுக்கு வரச்சொன்னாள்.

Advertisement

     “அக்கா” அமிர்தா தயக்கமாய் அழைக்க, “வேணுமா வேண்டாமான்னு எதுக்கு கிடந்து தவிக்கிற. அந்தப் பையன்கிட்ட பேசினா ஒரு தெளிவு கிடைச்சிடப்போகுது.” என்க, அதில் இருந்த உண்மை புரிந்ததில் தலையாட்டினாள் அமிர்தா.

Advertisement

     அக்காவிடம் துணிவாகச் சொல்லிவிட்டாள் தான் என்றாலும், கேசியிடம் இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே அவளின் இயல்பான தைரியம்  தொலைந்து போய், தடுமாற்றமும், கொஞ்சமே கொஞ்சம் வெட்கமும், அவனை அருகாமையில் பார்க்கப் போகும் ஆசையும், சிறிதளவு தயக்கமும் கிடந்து அழுத்தியது அவளை.

     எப்படியோ தைரியத்தை இழுத்துப்பிடித்து அவனைத் தேடி அவன் ப்ளாக் வரை வந்துவிட்டாள். ஆனால் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன பிள்ளை தன் அன்னையைத் தேடி பரிதவிப்பது போல், இத்தனை கூட்டத்தில் அவனை எங்கே எப்படி கண்டுபிடிப்பது என்று பரிதவித்து நின்றவளைக் கவனித்து கேசியிடம் விபரத்தை சொன்னான் ஒரு மாணவன். அவர்கள் காதலை அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டிருக்காவிட்டாலும், கேம்ப்பஸ் முழுக்க அது பிரபலமாகி இருந்தது.

     விஷயம் கேள்விப்பட்ட அடுத்த நொடி அமிர்தாவைத் தேடி ஓடி வந்திருந்தான் கேசி. வேக மூச்சுகளுடன் தனக்கு முன்னே நின்று கொண்டிருப்பவனை தயங்கி தயங்கி நிமிர்ந்து பார்த்தாள் அமிர்தா.

Advertisement

     “ஒரு வழியா என்னைத் தேடி வந்துட்ட போல.” குஷியாகக் கேட்டான் சாருகேசி. அவன் இதழ்களோடு சேர்த்து கண்களும், கன்னங்களும் சிரித்தது. அத்தனை தேஜஸாக இருந்தான்.

     அமிர்தா அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அதில் சின்னதாய் வெட்கம் வர தலையைக் கோதிக்கொடுத்தவன், “நீயா என்கிட்ட வரணும் னு நான் எதிர்பார்க்கிறேன். ஆண் அகம்பாவத்தைக் காட்டுறேன்னு பசங்க எல்லாம் என் மேல் கோபத்தில் இருக்காங்க. ஆனா நான் கேட்டு நீ முடியாதுன்னு சொல்லிடுவியோங்கிற பயத்தில் தான் நான் காலத்தைக் கடத்திட்டே வந்தேன். இப்ப நீயா என்னைத் தேடி வந்துட்டதில் எனக்குத் தேவையான நம்பிக்கையும், தைரியமும் வந்திடுச்சு. நான் கேட்டா முடியாதுன்னு சொல்ல மாட்ட தானே.” உணர்வுகள் தழும்பும் ஆழ்ந்த குரலில் கேட்டான் கேசி.

     “இன்னைக்கு சாயங்காலம் நம்ம காலேஜ் பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு வாங்க. நீங்க கேட்காத கேள்விக்கான பதில் அங்க உங்களுக்குக் கிடைக்கும்.” திக்கி திணறி சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்துவிட்டாள் அமிர்தா. அவள் சென்ற திசையைப் பார்த்தவண்ணம், இதழோரம் துளிர்த்த புன்னகையில் தன் வெட்கத்தை மறைத்தான் கேசி.

     அவள் அவனைத் தேடி வந்தது மதிய நேரத்தில், அதற்கு அடுத்த வகுப்புகள் யாவும் நகர்வேனா என்று பிடிவாதம் பிடிப்பது போல் தோன்றியது கேசிக்கு. இது சரிவராது என்று நினைத்தவன் வகுப்பாசிரியர் எதிர்பாரா நேரம் வெளியேறி யாரின் கண்ணிலும் படாமல் அமிர்தா சொன்ன கோவிலுக்கு வந்திருந்தான். அவள் வரச்சொன்ன நேரம் மாலை ஐந்து. இப்போதோ மூன்று மணி தான் ஆகி இருந்தது.

     கோவிலைச் சுற்றி வந்தவன் மூலவர் சிவபெருமானை கண்கள் குளிர தரிசித்தான். எப்பொழுதும் இப்படியான பொழுதுகளில் அண்ணன் மோகனனுக்காக மட்டுமே வேண்டிக்கொள்ளும் அவன் மனது இன்று தனக்காகவும், தன்வருங்கால வாழ்க்கைக்காகவும் கொஞ்சம் வேண்டிக்கொண்டது. அந்த பரசவத்தில் வெளியே வந்து மணியைப் பார்க்க மூன்று இருபது தான் ஆகி இருந்தது.

     இது என்னடா கேசிக்கு வந்த சோதனை என்று நினைத்தவன், கோவில் கட்டிடக்கலையை ஆராய்ச்சி செய்து பார்த்தான். நந்தவனம் சென்று அங்கிருக்கும் மலர்களைக் கணக்கெடுத்தான். இத்தனை செய்த பின்னாலும் நேரம் நத்தையின் வேகத்தில் நகர, சலிப்புற்று அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்தான். அங்கேயும் ஐந்து நிமிடத்திற்கு மேல் அமர்ந்திருக்க முடியவில்லை. மீண்டும் ஒருமுறை இறைவனை தரிசித்து வந்தான். சிறிது நேரம் கடந்திருந்தது.

     நடக்கப் பழகும் குழந்தையைப்போல் ஒரு இடத்தில் அமராமல் அங்கும் இங்கும் அலைந்தவண்ணம், ஒரு நிமிடத்தில் பலமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவனை சற்று தொலைவில் இருந்து வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் நீலாம்பரி. அவளும் அப்போது தான் இறைவனை தரிசித்துவிட்டு வந்து அமர்ந்திருந்தாள்.

     அம்மாவின் மடியில் இருக்கும் குழந்தைகள் நேரப்போக்கிற்காக எல்லாப் பக்கமும் பார்ப்பது போல் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருந்த கேசியின் கண்கள் நீலாம்பரியைக் கண்டது.

     மரியாதையான தோற்றத்தில் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடும் தோரணையில் இருந்தவளைப் பார்த்ததும் அவன் மனம் காரணமே இன்றி அவளைத் தன் அண்ணனோடு சேர்த்து நிறுத்தி வைத்துப் பார்த்தது. அறிவு அது  தவறு என்று சொன்னாலும் மனம் கேட்கவில்லை.

     அண்ணனுக்கு பொருத்தமான அண்ணி என்று தன்னையும் அறியாமல் வாய்விட்டுச் சொல்லி இருந்தான். அந்த நினைப்பு வந்த அடுத்த கணம் எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் அவள் அருகே சென்றவன், “நான் இங்க உங்க பக்கத்தில் உட்காரலாமா?” என்க, இயல்பாகவே அமைதியான குணம் கொண்ட நீலாம்பரி சற்றே பயந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

     அவள் பதில் சொல்லும் முன்பாகவே அவள் அருகே அமர்ந்துகொண்டவன், “ஹலோ, என் பேரு சாருகேசி. உங்கபேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்க, “இவன் யாரோ பெண்கள் பிரியன் போல என நினைத்து அந்த இடத்தை விட்டு அகலப் பார்த்தாள் நீலா.

     அவள் செய்கை புரிந்தவனாக, “உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்று கேட்டு மேலும் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கினான் கேசி.

     நீலா பதில் சொல்லும் முன்னர், “என் அண்ணனுக்கு இரண்டு வருஷமா பொண்ணு தேடிக்கிட்டு இருக்கேன். உங்களைப் பார்த்ததும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நீங்க ப்ரீயா இருந்தா என் அண்ணனோட பயோடேட்டா தரேன். பார்க்கிறீங்களா?” அவள் மறுத்துவிடக்கூடாதே என்கிற பதட்டத்தில் வேகமாகப் பேசியவனைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது நீலாவுக்கு.

     “நான் நிஜமா தான் சொல்றேன். இங்க பாருங்க.” என்றபடி தன் கல்லூரி பையில் இருந்து அண்ணனின் தகவல்கள் அடங்கிய காகிதத்தை எடுத்து நீட்டினான் கேசி. அதைப் பார்த்து இன்னமும் தான் சிரித்தாள் நீலா.

     அப்போது தான் அமிர்தாவும் அந்தக் கோவிலுக்குள் வந்தாள். அவள் பார்வைக்கு கேசியும், நீலாவும் சிரித்து பேசிக்கொண்டிருப்பது போல் தெரிய, வேகமாக அவர்களை நெருங்கியவள், “நீங்க இரண்டு பேரும் ஏற்கனவே அறிமுகம் ஆகிட்டீங்களா?” சந்தோஷமாகக் கேட்டாள்.

     நீலா, கேசி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “இவர் தான் நீ சொன்ன பையனா?” என நீலாம்பரியும், “இவங்க உன்னோட சொந்தமா?” என கேசியும் ஒரே நேரத்தில் கேட்டு இருந்தனர்.

     “இவங்க என்னோட அக்கா நீலாம்பரி. உங்ககிட்ட பேச நினைச்சாங்க.” என்றுவிட்டு சற்றே தயங்கினாள் அமிர்தா. எனக்கு பதில் சொல்லவில்லை அதற்குள் வீட்டில் இருந்து ஆள் கூட்டி வந்தாயா என்று கேட்பானோ என பயந்தாள். அவனோ தன்னைப் போலவே அவளுக்கும் உடன்பிறந்தவள் மீது இத்தனை அன்பா என ஆச்சர்யம் தான் கொண்டான். அதோடு நீலாவிடம் தான் அதிகப்படியாக நடந்துகொண்டதை நினைத்து சங்கோஜத்தோடு அவளைப் பார்க்க, அவளோ அவன் தவிப்பைக் கண்டு சத்தமாகச் சிரித்தாள்.

     “ஸ்சாரி அண்ணி, நீங்க யாருன்னு தெரியாம அதிகப்பிரசங்கித்தனம் பண்ணிட்டேன்.” என்க, “அண்ணியா?” ஆச்சர்யமாய் கேட்டாள் நீலா. சற்று முன்னர் அண்ணனுக்காக தன்னைக் கேட்டவன் இப்போது அண்ணி என்று அழைத்ததால் அவள் அந்த வழியில் யோசிக்க, கேசியோ அவள் அமிர்தாவின் அக்கா என்கிற முறையில் அண்ணி என்று அழைத்திருந்தான்.

     “அக்கா” அமிர்தா தயக்கமாய் அழைக்க, “நீ போய் சாமி கும்பிட்டு வா. நான்தம்பி கூட பேசிக்கிட்டு இருக்கேன்.” என்க, தயக்கமாய் பார்த்தாள் அமிர்தா.

     “போயிட்டு வா, நான் பார்த்துக்கிறேன்.” என்று கண்களாலே ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தான் கேசி.

     நீலா, கேசியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள். முதல் பரிட்சையத்தில் அவன் மீது நல்ல அபிப்ராயம் வந்திருந்தது. ஆனாலும் அது ஒன்றை மட்டுமே நம்பி தங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது என்று அவனோடு தெளிவாகப் பேசினாள்.

     அவன் வயதில் ஆரம்பித்து, குடும்பம், அதில் யாரெல்லாம் இருக்கிறார்கள், சம்பாத்தியம், தற்போதைய வசிப்பிடம் என ஒவ்வொன்றாக விசாரிக்க, அனைத்திற்கும் சளைக்காமல் பதில் சொன்னான் கேசி. பொறுப்பானவன், உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் எல்லாவற்றிற்கும் மேல் தங்கை தான் வேண்டும் என்பதில் அவனுக்கு இருக்கும் உறுதி என அனைத்தும் தெரிந்து பாதி மனது நிறைந்திருந்தது நீலாவுக்கு.

     இருந்தாலும், “உங்க வீட்டில் யாருக்காச்சும் இந்த விஷயம் தெரியுமா?” என்க, “உங்க தங்கச்சியாச்சும் இப்ப தான் உங்களைக் கூட்டிட்டு வந்திருக்கா. நான் எல்லாம் அவளைப் பிடிக்க ஆரம்பிச்ச புதுசுலே என் அண்ணனைக் கூட்டுட்டு வந்து காட்டிட்டேன்.” என்றவனுக்கு சட்டென்று அந்த எண்ணம் உதிக்க,

     தயங்கியபடி, “என்னைப் பத்தி நான் சொன்னதில் உங்களுக்கே ஒரு ஐடியா கிடைச்சிருக்கும். கால்வாசியாச்சும் உங்க தங்கச்சியை எனக்கே கொடுக்கலாம் னு முடிவுக்கு வந்து இருப்பீங்க. முழு மனசும் சமாதானம் ஆகும் வரைக்கும் காத்திருக்க கூட நான் தயார். ஆனா அதுக்கு பிறகாச்சும் நான் சொன்னதை யோசிச்சு பார்ப்பீங்களா?” என்றவனை புரியாமல் பார்த்தாள் நீலா.

     “அதுதான் என்னோட அண்ணனைப் பத்தி சொன்னேனே. பயோடேட்டா கூட கொடுத்தேனே.” என்க, சத்தமாய் சிரித்தாள் நீலா.

     “ஏன் அண்ணி சிரிக்கிறீங்க. நல்லா யோசிச்சு பாருங்க. நீங்க இரண்டு பேரும் சிஸ்டர்ஸ், நாங்க இரண்டு பேரும் பிரதர்ஸ். நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா ஜாலியா இருக்கும் தானே.” என்க, புன்னகையோடு தலையை இடவலமாக ஆட்டியவள், “அப்ப எனக்கு பேசி வைச்சிருக்கிற எங்க ஏரியா இன்ஸ்பெக்டருக்கு என்ன பதில் சொல்றது.” பட்டென்று கேட்டு வைக்க, சுருங்கிப்போனது கேசியின் முகம்.

     “அடடா எதுக்கு இந்த சோகம். நான் இல்லன்னா என்ன உங்க அண்ணனுக்கு நல்ல பொண்ணு கண்டிப்பா கிடைப்பாங்க.” ஆழ் மனதில் இருந்து சொன்னாள்.

     “எங்க?” என்றவனுக்கு அத்தனை சலிப்பாக இருந்தது. அந்த நேரம் அமிர்தாவும் வந்து சேர அந்த சந்திப்பு நல்லபடியாகவே நடந்து முடிந்தது.

     அன்றைய இரவில் மோகனனிடம் நடந்ததைச் சொன்னான் கேசி. “பரவாயில்லையே, தங்கச்சி ஒரு பையனை லவ் பண்றான்னு தெரிஞ்சதும் தாம் தூம் னு குதிக்காம சென்சிபிளா யோசிச்சு உன்னைக் கூப்பிட்டு பேசி இருக்காங்களே.” ஆச்சர்யப்பட்ட மோகனன், “இரண்டு பக்கம் இருந்தும் சாதகமான பதில் வந்திடுச்சுன்னு அங்க இங்க சுத்துறது இருக்கக் கூடாது. நீயும் படிக்கணும், அந்தப் பொண்ணையும் படிக்க விடணும். அதைத் தாண்டி உங்க காதலை எப்படி வளர்த்துப்பீங்களோ அது உங்க சமார்த்தியம்.” கண்டிப்பாகச் சொல்ல, நீலா சொன்ன அதே விஷயத்தை சொன்ன அண்ணனைப் பார்க்க பார்க்க அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்று தான் தோன்றியது கேசிக்கு. அவள் வேறு ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள் என்பது தெரிந்த நேரத்தில் இருந்து அமைதியாக இருக்கத் தான் முயற்சிக்கிறான். ஆனால் சொல்பேச்சு கேட்காத மனது அவனை உந்திக்கொண்டே தான் இருந்தது.

     அமிர்தா, கேசியின் காதல் நல்லபடியாக வளர்ந்தது. அவர்கள் தனியாக வெளியே செல்வதாக இருந்தால் ஒன்று நீலா இல்லை மோகனன் இருவரில் யாராவது ஒருவர் நிச்சயம் வருவார்கள். உடன்பிறந்தவர்கள் மீது நம்பிக்கை அளவில்லாமல் இருந்தாலும், இரண்டு குடும்பத்திற்கும் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதாக இருந்தது அந்த செயல்.

     ஒருநாள் நீலாம்பரி, அமிர்தா, சாருகேசி மூவரும் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நீலாவுக்காகப் பார்த்திருந்த மாப்பிள்ளையான சாரங்கன் தன் சீருடையோடு அங்கே வந்து சேர்ந்தான்.

     அவன் பெண் பார்த்துச் சென்று ஒரு மாதம் கடந்திருந்தது. அரசாங்க உத்யோகத்தில் இருக்கும் அவனுக்கு அதிக வரதட்சணையோடு பெண் கொடுக்க பலர் தயாராக இருக்க, அவனுக்கோ நீலாவை அதிகம் பிடித்திருந்தது. தன்னைப் போன்ற பணிச்சுமை அதிகம் கொண்ட ஒருவனுக்கு அவனைப் புரிந்துகொண்டு அவனோடு இயைந்து போகும் குணமுடைய பெண் தான் வேண்டும் என்று உறுதியாக நின்றவன், தன் குடும்பத்தினரையும் சம்மதிக்க வைக்க தினம்தினம் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தான். அதனால் தான் பெண் பார்த்த படலத்தோடு நின்றது அவர்கள் திருமணப் பேச்சுவார்த்தை.

     “ஹாய் நீலா” என்க, “ஹாய்” என்றாள் அவளும்.

     “என்ன இங்க?” சாதாரண தொணியில் தான் கேட்டான் என்றாலும் அவன் கரடுமுரடான குரலுக்கு அவன் அதட்டுவது போல் தெரிந்தது கேசிக்கு.

     “இவங்க என்னோட அண்ணி சார். நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று பதில் கொடுத்தான் கேசி.

     “அண்ணியா?” அவன் சந்தேகமாய் பார்க்க, “என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவர்.” என்று பதில் கொடுத்தாள் நீலா.

     “அட சகலை.” பட்டென்று சாரங்கன் சொல்லவும், என்னவோ போல் ஆகிவிட்டது கேசிக்கு. தான் அத்தனை விரும்பிய பெண், தன் அண்ணனுக்காக மனதில் வரித்து வைத்திருந்த பெண்ணைத் திருடிக்கொண்டு செல்ல வந்தவன் இவன் தானா என்கிற கசப்பான நினைப்போடு தான் அவனைப் பார்த்தான்.

     சாரங்கன் மேற்க்கொண்டு ஏதோ சொல்ல வர, அவனுக்கு ஏதோ அழைப்பு வந்தது. அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் அனைவரிடமும்  சொல்லிக்கொண்டு புறப்பட்டுச் சென்றான்.

     அவன் சென்ற பிறகு, “இவரை உங்களுக்கு நிஜமாவே பிடிச்சிருக்கா அண்ணி?” என்றான் கேசி. அமிர்தா அவன் முழங்கையில் இடிக்க, “சும்மா இரு அமிர்தா. உனக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பத்தி எத்தனை விசாரிச்சாங்க. அப்ப அவங்களுக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பத்தி நீ விசாரிக்க வேண்டாமா?” என்று கிடுக்குப்பிடி போட்டான்.

     “அம்மா எல்லாம் விசாரிச்சுட்டாங்க. மாப்பிள்ளை ரொம்ப நல்ல டைப். ஆனா அவங்க குடும்பம் தான் கொஞ்சம் பணத்தாசை பிடிச்ச மாதிரி இருக்காங்க. சின்ன சின்ன தயக்கம் இருக்கிறதால் தான் பேச்சுவார்த்தை அப்படியே நிற்கிது. ஆனா அவருக்கு அக்காவை விட மனசில்லை. போராடிக்கிட்டு இருக்கார்.” என்றாள் அமிர்தா.

     “உங்களுக்கு அவரைப் பிடிச்சிருக்கா அண்ணி?” கேசி கேட்க, “நீங்க வேற, நான் ஒரு போலீஸ் னு யார் வந்து நின்னாலும் அக்கா உடனே தலையை ஆட்டிடுவாங்க.” கிண்டலாய் சொன்னாள் அமிர்தா.

     “ஏன் அப்படி?” என்றவனின் கேள்விக்கு நீலா சொன்ன பதில் தான், அதுநாள் வரை படித்து முடித்துவிட்டு வங்கித் தேர்வுக்கு படிக்க நினைத்திருந்த கேசியை காவல்துறையை நோக்கித் தள்ளியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!