Skip to content
Post Views: 1,101
அத்தியாயம் 27
“அக்கா” நம்ப முடியாத தொணியில் அழைத்தாள் அமிர்தா.
“நல்லா யோசிச்சு பார்த்துட்டேன் அமிர்தா. குழந்தைங்களுக்கு இது தான் சரியா இருக்கும்.” என்றாள் நீலா.
“இந்த வீணாப் போனா சமூகவலைதள போராளிகளால் உனக்கு கிடைச்ச நெகட்டிவ் பாப்புலாரிட்டி கருப்பு திரை மாதிரி உன் குழந்தைங்க மேலும் படர்ந்திடும் னு நினைக்கிறியா?
Advertisement
தினம்தினம் வளர்ந்து வரும் அவங்களோட மனநிலைக்காக தான் இப்படி யோசிக்கிறன்னா உன்னோட இந்தக் கவலை அவசியமே இல்லாதது அக்கா. ஊர் வாயை இப்பன்னு இல்ல எப்பவுமே அடைக்க முடியாது.
எங்களுக்கு தத்துகொடுத்துட்டா மட்டும் குழந்தைங்களோட பிறப்பை தப்பா பேச மாட்டாங்களா? சொல்லப்போனா இப்ப தான் இன்னும் உறுதியா பேசுவாங்க. குழந்தைங்களோட அப்பா கட்டாயம் மோகனன் இல்ல. அதனால் தான் புருஷன் பொண்டாட்டி பிரிஞ்சதோட நிறுத்தாம, குழந்தைங்களையும் சேர்த்து ஒதுக்கிட்டாங்க. வேற வழி இல்லாம சித்தியும், சித்தப்பாவும் வளர்க்கிறாங்கன்னு பேசுவாங்க.
பேசுறவங்க பேசிக்கிட்டே தான் இருப்பாங்க. அதை நினைச்சு பயப்படுறதை விட்டு, நம்ம குழந்தைங்களுக்கு அதை எப்படி கடந்து போறதுன்னு சொல்லிக்கொடுக்கலாம்.” நம்பிக்கையோடு பேசினாள் அமிர்தா.
Advertisement
“எனக்கு மத்தவங்க பேசுறதைப் பத்தி எல்லாம் கவலை இல்லை அமிர்தா. என்னோட ஒரே நோக்கம் என் குழந்தைங்களுக்கு அவங்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா உரிமையும், அங்கீகாரமும் சரியா கிடைக்கணும்.” அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் நீலாம்பரி.
Advertisement
“அதுக்கு குழந்தைங்க எங்களோட இருக்கிறது தானே சரியா வரும்.” கீரவாணி கேட்க, “உங்ககிட்ட குழந்தைங்களை கொடுக்கிறது, இத்தனை நாளா யாரோட தயவும் இல்லாம அவங்களை உயிரில் பொத்தி வைச்சு வளர்த்த என்னோட தங்கச்சிக்கு பண்ற அநியாயம் ஆகிடுமே.” என்ற நீலாவின் வார்த்தைகளை யாராலும் எதிர்க்க முடியவில்லை.
“என்னோட வயித்தில் அவங்களை சுமத்து பெத்தெடுத்தேன். அவ்வளவு தான் எனக்கும் அவங்களுக்கும் இருக்கும் தொடர்பு. ஒரு பொண்ணுக்கு குழந்தைகள் மேல் உண்டாகும் பாசம் உடல் தொடர்பானதுன்னு பலர் சொல்லலாம். ஆனா அது உணர்வு சம்பந்தப்பட்டது.
உருவான நாள் தொட்டு, உட்கார்ந்தா, நடந்தா, ஓடினா, சாப்பிட்டா, வேலை செஞ்சா அவ்வளவு ஏன் உறக்கத்தில் கூட பொண்ணுக்கு குழந்தையோட நினைப்பு தான் இருக்கும். அந்த உணர்வுகள் தான் தாய், சேய் பாசத்துக்கு அடித்தளம்.
Advertisement
எனக்கு அப்படி எதுவும் லவன், லதாங்கி விஷயத்தில் கொடுத்து வைக்கல. ஆனா அமிர்தாவுக்கு கொடுத்து வைச்சிருக்கு. அவங்களைத் தொட்டு உணர்ந்திருக்கா, அவங்களோட தேவை அறிந்து செயல்பட்டு இருக்கா, தான் பசியும் பட்டினியுமா இருந்து அவங்களை நல்லா பார்த்துக்கிட்டு இருந்திருக்கா.
குழந்தைங்களும், அமிர்தாவும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா இருக்காங்க. அப்படியானவங்களை உடம்பில் ஓடும் ஒரே ரத்தத்தை காரணம் காட்டி பிரிக்கிறது எனக்கு சரியா படல.” என்றாள் நீலா.
“ஆனா அக்கா.” என்று ஏதோ சொல்ல வந்த அமிர்தாவின் கரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட கேசி, அவள் காதிற்குள் ஏதோ சொல்ல தன்னால் அமைதியானாள் அமிர்தா.
“மோகனன் பசங்களா வளர்ந்தா என்ன? சாருகேசி பசங்களா வளர்ந்தா என்ன? அவங்க அந்த வீட்டு வாரிசு. அவங்களுக்கு அந்த வீட்டிலும் அந்த வீட்டு நபர்களிடமும் எல்லா உரிமையும் இருக்கு. அது அவங்களோட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கிடைக்கணும். கிடைக்கும் னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்ற நீலா மோகனனைப் பார்த்து,
“இவங்களுக்கு கல்யாணம் ஆகி சில மாசம் தான் ஆகுது. அதனால் சட்டப்படி தத்துக்கொடுக்க குறைஞ்சபட்சம் இரண்டு வருஷமாவது காத்திருக்கணும். அதனால் சம்பிரதாயப்படி தாரை வார்த்து கொடுக்கலாம்.” என்றாள்.
“எல்லாம் நல்லதுக்கு தான். பிறந்ததில் இருந்து என் முடிவுகள் எல்லாத்தையும் யார் யாரோ முடிவு பண்ணாங்க. என்னை மாதிரி ஒருத்தனோட வளர்ந்தா அவங்க வாழ்க்கையும் யாரோ ஒருவரால் தீர்மானிக்கப்பட வாய்ப்பிருக்கு. சுயமா நிக்கிறதுக்கும், தனிச்சு முடிவெடுக்கிறதுக்கும் அவங்களுக்கு கத்து கொடுக்கம் யாரோடவும் அவங்க சந்தோஷமா வாழட்டும்.” என மோகனன் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையிலும் உச்சகட்ட வருத்தம் கொட்டிக்கிடந்தது.
வீட்டிற்கு வந்த போது, “நிஜமாவே அக்காவுக்கும் சாரங்கன் சாருக்கும் கல்யாணம் பண்ணும் நோக்கத்தில் தான் குழந்தைகளை தத்து வாங்க சம்மதிச்சீங்களா? இல்ல இரண்டு வருஷத்தில் குழந்தைங்க மனசில் இடம்பிடிச்சுட்டு, விவாகரத்து நாளில் அவங்களை வைச்சு தட்டிக்கழிக்க முடிவு பண்ணி இருக்கீங்களா?” கோபமாகக் கேட்டாள் அமிர்தா.
“உனக்கு தான் என்னைப் பத்தி நல்லாத் தெரியுமே. நான் எதுக்காக சம்மதிச்சேன்னு நீயே கண்டுபிடி.” என்றுவிட்டு வேலைக்கு கிளம்பிவிட்டான் கேசி. எப்படி யோசித்தும் தன்னை கார்னர் செய்ய குழந்தைகளைப் பயன்படுத்தும் அளவு கேசி போவான் என்கிற முடிவுக்கு வரமுடியவில்லை அமிர்தாவினால். இந்த அளவுக்கு அவன் மேல் இன்னமும் நம்பிக்கை இருக்கிறதா என தன்னைத் தானே திட்டிக்கொள்ளவும் தவறவில்லை அவள்.
அடுத்து வந்த நல்ல நாளில் புகழ்பெற்ற சோழிங்கநல்லூர் கிருஷ்ணன் கோவிலில் வைத்து தத்து கொடுக்கும் சம்பிரதாயங்கள் மிக எளிமையாக நடந்தேறியது. தாரை வார்ப்பதற்காக நீலா, மோகனன் இருவரும் குழந்தைகளை ஒன்றாக தூக்கும் போது, என்ன முயன்றும் முடியாமல் கதறி அழுதுவிட்டான் மோகனன்.
அடுத்த சில தினங்களில் ஒரு வருடத்தை தொடப் போகின்றன அவன் குழந்தைகள். அவர்களின் முகத்தை அருகே பார்ப்பதற்கும் அவர்களை அள்ளி அணைப்பதற்கும் அவனுக்கு இப்போது தான் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. முதன்முதலாக குழந்தைகளைப் பற்றி கேள்விப்பட்ட போது அவனுக்குள் இருந்த குற்றவுணர்ச்சி மற்றும் பயம் அவனை அவர்கள் அருகே செல்லவிடவில்லை.
ஒரு கட்டத்தில் நீலா குணமாகி வந்து அவளோடு சேர்த்து தான் தங்கள் குழந்தைகளை கொஞ்சி மகிழ வேண்டும் என்று அவன்மனம் நினைத்திருக்க அந்த தருணத்திற்காக காத்திருந்தான். ஆனால் அது வாய்த்த அடுத்த நிமிடமே இனி அவனுக்கும், அந்தப் பிள்ளைகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று சொல்ல வைத்துவிட்டாரே கடவுள்.
அநீதிக்கு எதிரான நல்லவர்களின் மௌனம் கயவர்களின் தீச்செயலை விடக் கொடூரமானது. அதற்கான தண்டனை தாங்க முடியாததாக இருக்கும் என்பது தான் எத்தனை உண்மை. கையை மீறி அனைத்தும் நடக்கிறது என்று வெறுமென சொல்லிக்கொண்டு, தன்னால் தடுக்க முடிந்த பலவற்றை தடுக்காமல் விட்டதன் பலன், ஆசை மனைவி, அருமை பிள்ளைகளைப் பறிகொடுத்து நிற்பது தான் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான் மோகனன்.
நடப்பு புரிந்தது, நீலா சாரங்கனுக்கு சொந்தமாகப் போகும் எதிர்காலமும் புரிந்தது. வலித்தது, மிக மிக வலித்தது. வழக்கம் போல் இயலாமையோடு கூடிய கனத்த மனதோடு வெறும் பார்வையாளனாக நின்றிருந்தான்.
ஆளுக்கொரு குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த தங்கையையும், அவள் கணவனையும் பார்த்து உள்ளுக்குள் உவகை கொண்டாள் நீலா. அவளுக்கு குழந்தைகளோடான எந்த நினைவும் இல்லை தான். ஆனால் கண்ணுக்குத் தெரியாத உணர்வு நூழிலையால் தன் பிள்ளைகளோடு பிணைக்கப்பட்டிருந்தவளுக்கு இனி அவர்கள் தனக்குச் சொந்தமில்லை என்பது சற்றே வருத்தமாகத் தான் இருந்தது.
மனதிற்குப் பிடித்தவர்களின் நலனுக்காக என்று அவர்களையே தொலைக்கும் இந்த சாபம் இந்த ஜென்மத்தோடு முடிந்துவிடட்டும். இனியொரு ஜென்மம் இருந்தால் அதில் முழுக்க முழுக்க சுயநலவாதியாக பிறக்க வேண்டும். தான், தன் நலம், தன்னைச் சுற்றியுள்ள நல்லவர்களின் நலம், அதன்பிறகு தான்மற்றவர்களின் நலம் என்று வாழ வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.
ஆனால் அவள் வேண்டிக்கொண்ட கடவுள் கிருஷ்ணனே தனக்காக அல்லாது, வாழும் காலம் வரை மற்றவர்களுக்காக வாழ்ந்து மறைந்தவர் தான் என்பதை மறந்துவிட்டிருந்தாள் பாவம்.
ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது என்னும் நாலடியார் கூற்று தான் நினைவு வந்தது அவளுக்கு. தன் பிறப்பு, இப்படி அடுத்தவர்களுக்காக யோசித்து அவர்களுக்காக வாழ்ந்து முடிப்பது தானோ என அவள்யோசிக்கையிலே அப்படி அல்ல என்று சொல்வது போல் வந்து நின்றான் சாரங்கன்.
“நீங்க எப்படி இங்க?” என்று நீலா கேட்க, “அம்மாவுக்கு கிருஷ்ணன் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி அவங்களோட மனநிம்மதிக்காக இங்க கூட்டிட்டு வருவேன். இன்னைக்கு பார்த்தா நீங்களும் இங்க இருக்கீங்க.” இயல்பான குரலில் சொன்னான். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சௌகர்யமான முறையில் பேசிக்கொண்டிருப்பதை வலியோடு பார்த்த மோகனன் மனதின் கோபத்தை தன் கால்களுக்கு கொடுத்து அங்கிருந்து நடந்தான்.
அவனைத் தடுக்க தன்னிச்சையாக நீண்ட கைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு சிரமப்பட்டு இயல்பாக இருக்கப் பழகிக்கொண்டாள் நீலா. “ரொம்பக் கஷ்டம் தான் இல்ல.” சாரங்கன் சொல்ல, “என்னது?” என்றாள் நீலா.
“நாம வாழப்போற வாழ்க்கை அத்தனை இலகுவா இருக்காதுன்னு சொன்னேன்.” என்றான். “நான் இன்னும் உங்களுக்கு சரின்னு சொல்லாத நினைவு.” அமர்த்தலாக அவள் சொல்ல, “நீங்க சொல்லிடுவீங்க. உங்களைச் சுத்தி இருக்கும் நபர்கள் உங்களைப் பத்தி யோசிக்காம அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்ப்பதற்காகவாச்சும் நீங்க எனக்கு சம்மதம் சொல்லத்தான் போறீங்க.” ஆரூடம் சொன்னவனை விளங்காத பார்வை பார்த்த நீலா,
“நான் ஒரு உடைந்த தூரிகை சாரங்கன். என்னை வைச்சு ஓவியம் வரைய நினைச்சா அதை விட முட்டாள்தனம் வேற எதுவும் இல்லை.” என்றாள். அவளைப் பார்த்து தாராளமாகப் புன்னகைத்தவன், “பெரியவங்க உடைச்சுப் போட்ட தூரிகை குழந்தைங்களுக்கு போதுமான அளவை விட தாராள நீளத்தோடவே இருக்கும். குழந்தைகள் வரையும் உயிரோவியத்தோட உயிர்ப்பு எத்தனை விலை கொடுத்து வாங்கும் ஓவியங்களிலும் கிடைக்காது. நானும் குழந்தை மாதிரித்தான்.” என்றவன் அவள் தன் கண்களைப் பார்க்கும் கணத்திற்காக காத்திருந்து, காத்திருந்த வேளை வந்ததும், “அடுத்தவங்களுக்காக வாழ்ந்தது போதும் நீலாம்பரி. என்னோட வாழும் ஒவ்வொரு நாளும் நீங்க உங்களுக்காக, எனக்காக, நமக்காக, நம்ம குழந்தைகளுக்காக வாழ்வீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷமா வாழ்வீங்க. அதுக்கு நான் கியாரண்டி.” மனதில் இருந்து சொல்ல, அந்த வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தில் அசையாது நின்றாள் நீலாம்பரி.
“எனக்கு கொஞ்சம் சைக்காலஜியும் தெரியும் நீலா. அக்ஸ்டெப்டன்ஸ் ஒரு பெரிய கலை. ஒருவர் நமக்குக் கிடைக்கவே மாட்டார், நம்மளோட வாழ்க்கையும் அவரோட வாழ்க்கையும் இனி ஒன்னா பயணிக்கவே போறது இல்லங்கிறதை ஒருத்தர் முழுமனசோட ஏத்துக்கிறார் அப்படின்னா அப்பவே அவர் அந்த உறவில் இருந்து வெளியே வர ஆரம்பிச்சுட்டாருன்னு அர்த்தம்.
அந்த வகையில் நீங்களும், உங்களுக்கும் மோகனனுக்கும் இருந்த உறவில் இருந்து வெளியே வர ஆரம்பிச்சுட்டீங்க. என்னோட உறவில் இணைஞ்சுட்டா பழைய உறவின் தாக்கம் மொத்தமா மறைஞ்சு போய் புது நீலாம்பரியா வாழ்வீங்க.” என்றான்.
அவனையே சில நொடிகள் பார்த்திருந்தவள், “நீங்க என்ன தான் குட்டிக்கரணம் அடிச்சாலும் எனக்கு விவாகரத்து கிடைக்கும் முன்னாடி உங்களுக்கு ஓகே சொல்ல மாட்டேன்.” என்றுவிட்டு நகர, அவள் சொல்லின் உட்பொருளை போலீஸ்காரன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சந்தோஷ மிகுதியில் நின்ற இடத்திலேயே துள்ளி குதித்தான்.
அன்றைய இரவில் இரண்டு குழந்தைகளையும் மார்பில் போட்டுக்கொண்டு படுத்திருந்தான் சாருகேசி. நடந்த நிகழ்வுகளில் சரியோ தப்போ எல்லோருக்கும் ஒரு காரணம் சொன்ன கேசியால் காரணமே சொல்ல முடியாதவர்களும், அனைவரை விட அவனை அதிகமாக காயப்படுத்தியதும் அவன் மார்பில் படுத்திருக்கும் இந்தப் பிஞ்சுகள் தான்.
“அப்பாவை மன்னிச்சிடுங்க டா தங்கங்களா? மத்தவங்களுக்கு நான் செஞ்ச பாவத்தை குறைக்க தான் சந்தர்ப்பம் கிடைச்சது. ஆனா உங்களுக்கு செஞ்ச பாவத்தை மொத்தமா போக்க கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கார். அப்பா உங்களை நல்லா பார்த்துப்பேன். உங்களை எல்லோரையும் விட சந்தோஷமானவங்களா வளர்ப்பேன். என்னை நினைச்சு பெருமைப்படும் அளவுக்கு நான் நடந்து காட்டுவேன்.” என்க, “நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்குமாம்.” என்றுவிட்டு அவனில் இருந்த குழந்தைகளைப் பிரித்துக்கொண்டு தன் ஆஸ்தான இடத்தில் படுத்துக்கொண்டாள் அமிர்தா.
வெறும் பனியோடு முறுக்கேறிய கைகளும், திண்ணிய மார்புடன் தலைக்கு கைகளைக் கொடுத்தவண்ணம் படுத்திருந்த கேசியின் தோற்றம் சற்றும் பாதிக்கவில்லை அமிர்தாவை. அதைப் போலத்தான் உடலை ஒட்டிய நைட்டியில் இருந்த அமிர்தாவும் கேசியை பாதிக்கவில்லை.
காதலர்களாக அவர்கள் தோற்றுப்போனார்கள். கணவன் மனைவியாக ஜெயிப்பதற்கு முயற்சிக்க கூட மறுத்தார்கள். ஆனால் இரண்டு குழந்தைகளின் தாய், தந்தையாக அவர்களின் நலனுக்காக, எதிர்கால வாழ்க்கைக்காக நிச்சயம் ஒன்றாகச் செயல்படுவார்கள் என்பதும் குழந்தைகளை அவர்களுக்கு தத்து கொடுக்க நீலா யோசித்ததும் ஒரு காரணம்.
ஆறு மாதங்கள் கழித்து அன்று நீலாம்பரி, மோகனன் விவாகரத்து வழக்கின் கடைசி நாள். சிறிதான நூல் இழையில் தொங்கிக்கொண்டிருந்த அவர்கள் உறவை மொத்தமாக அறுத்துவிட்டது நீதிமன்றம். நீலாம்பரி எந்த வித உணர்வுகளையும் காட்டாமல் நிற்க, ஒட்டுமொத்த வேதனையைத் தாங்கியபடி நின்றிருந்தான் மோகனன்.
நீதிமன்ற வளாகத்தை விட்டு நீலா மறையும் கடைசி நொடிவரை பார்த்துக்கொண்டிருந்த மோகனன், நேரே வாணியிடம் வந்தான்.
“மாமா” என்கிற அழைப்போடு வாணி அவனைப் பார்க்க, “எனக்காக ஒரு உதவி செய்வியா?” தன்மையோடு கேட்டான் மோகனன். “என்ன செய்யணும் சொல்லுங்க.” வேகமாகக் கேட்டாள் வாணி.
“என்னைக் கொஞ்ச நாள் தேடாத. நான் வீட்டுக்கு வர மாட்டேன். நாய் குதறிப்போட்ட மாதிரி கிடக்கிற என் மனசும் அதில் இருக்கும் காயங்களும் முழுசா குணமாகி நானா திரும்ப வீடு வந்து சேரும் நேரம் வரை என்னை என்போக்கில் விடுறியா ப்ளீஸ்.” என்றவனைப் பார்க்க கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது வாணிக்கு.
“போங்க, பேங்க்கில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்துட்டு போங்க. உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் ஏன் வெளிநாடு கூட போங்க. முழுசா திரும்பி வர எத்தனை நாள் வேண்ணா எடுத்துக்கோங்க. ஆனா நீங்க உயிரோட தான் இருக்கீங்கன்னு நிரூபிக்க மாசத்துக்கு ஒரு லெட்டர் போடுங்க அது போதும்.” என்று விடைகொடுக்க, அவள் கையில் இருந்த அவர்களின் பெண் குழந்தையைத் தூக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “இவளுக்கு இன்னும்பெயர் வைக்கல இல்ல.” என்றான்.
“நீங்க வைங்க. என்ன பேர் வேண்ணா வைங்க.” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன், “நீலா” என்க, மனதில் இருந்து புன்னகைத்து அதை ஏற்றுக்கொண்டாள் வாணி. அவளுக்கு டாட்டா காட்டிய மோகனன் அங்கிருந்து அப்படியே மனிதர்களோடு மனிதர்களாக கலந்து காணாமல் போனான்.
விஷயம் கேள்விப்பட்டு அனைவரும் அவளைப் போட்டு பாடாய் படுத்தினர். நீலாவுக்கும் காற்று வாக்கில் விஷயம் வந்தது. “ஏன் எல்லோரும் அவங்களைப் போட்டு திட்டுறீங்க. அவங்க ஒரு நல்ல முடிவு எடுத்திருக்காங்க. மோகனனை கைக்குள்ளே வைச்சிருந்தா அவருக்கு மனசு மாறவே செய்யாது.
நாலு இடம் போய், நாலு பேரைப் பார்த்தா புத்தி மனசு இரண்டும் தெளியும். உடம்புக்கும் மனசுக்கும் பலம் கிடைக்கும். மனநோயைப் பத்தி யோசிக்கிறீங்களா? ஒரு மனுஷன் கூட்டத்தோட இருக்கும் வரை தான் சின்னச்சின்ன பிரச்சனைக்கு கூட ஆதரவு தேடுவான். ஆனா அவன் தனியா வாழனும் னு பிடிவாதமா முடிவெடுத்துட்டா எவ்வளவு பெரிய பிரச்சனையா வந்தாலும் அவனை அவனே நல்லபடியா பார்த்துப்பான்.
மோகனனும் அப்படியானவர் தான். தனிமையில் அவர் எவ்வளவு வேண்ணா கஷ்டப்படலாம். ஆனா திரும்பி வரும் போது நீங்க யாரும் எதிர்பாராத அளவு முன்னேற்றத்தோட திரும்ப வருவார். உங்க கண்ணு முன்னாடி சந்தோஷமா வாழ்வார். அதனால் அவர் போன் பண்ணும் போது, திரும்பி வான்னு கூப்பிடாம, உடம்பைப் பார்த்துக்கோ, பிரச்சனை வந்தா எங்களுக்கு கூப்பிடுன்னு அவர் மனசில் ஆழமா பதிய வைங்க. எல்லாம் சரியாப் போயிடும்.” கேசியிடம் சொல்லிவிட்டாள் நீலா.
விஷயம் கேசி மூலம் அவன் வீட்டிற்கும் தெரிய வந்தது. இத்தனை நாட்களில் நீலாவைப் போல் அவளைச் சுற்றி இருக்கும் யாரையும் புரிந்து வைத்துக்கொள்ள முடியாது என்பது புரிந்த காரணத்தால் மோகனன் வரவுக்காக காத்திருக்க துவங்கினர் அவர்கள்.
பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்னும் படி தாயோடு முறைப்படி பெண் கேட்டு வந்தான் சாரங்கன். வைபவம் நல்லபடியாக நடந்து முடிந்தது. விஷயம் கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தினர் வாழ்த்து சொல்வது போல் வந்து மறக்கப்பட்ட குப்பைகளை கிளறப் பார்க்க, அமிர்தா வெடிக்கும் முன்னர் தான் வெடித்திருந்தார் சாரங்கனின் அம்மா.
“என்னடி தகுதி, சுத்தம். கர்மாவோட சக்கரம் பத்தி கேள்விப்பட்டு இருக்கியா? ஒரு மனுஷனுக்கு ஏழு ஜென்மம். அந்த ஏழு ஜென்மத்திலும் அவன் முழுக்க முழுக்க சந்தோஷமாவோ, கஷ்டத்திலோ வாழ்ந்திட முடியாது. ஒரு பிறவியில் சந்தோஷமா வாழ்ந்திருந்தா அடுத்த ஜென்மத்தில் கஷ்டப்பட்டு தான் ஆகனும்.
இந்த ஜென்மத்தில் நீ சந்தோஷமா இருக்கன்னா போன ஜென்மத்தில் நீ எந்த இழிபிறவியா பிறந்தியோ, என்னென்ன கஷ்டத்தை அனுபவிச்சியோ, எப்படி கேவலமான சாவு செத்தியோ. அதுக்காக கடவுள் உன்னை ஒதுக்கி வைக்கலையே. கடவுளுக்கு இருக்கிற பரந்த மனசு அவர் படைச்ச நமக்கு இருக்க வேண்டாம்.
தப்பு பண்ணாத பொண்ணு நீலா அவ வாழ்றது எதுக்காக உங்களுக்கு குத்துது. இப்படி எப்ப யார் குடியைக் கெடுக்கலாம் னு சுத்துனீங்கன்னா கர்மாவோட காலச்சக்கரம் படி அடுத்த ஜென்மம் இன்னும் மோசமா இருக்கும் பரவாயில்லையா?” என்க, அடித்துப் பிடித்து ஒடி இருந்தனர் அனைவரும். நீலாவுக்கு சாரங்கனைப் பிடித்ததோ இல்லயோ அவன் அன்னையை அதிகம் பிடித்தது.
இருவருக்குமே இரண்டாம் திருமணம் என்பதால் மிக எளிமையான முறையில் கோவிலில் வைத்து ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டு வயது நிரம்பிய குழந்தைகளை வைத்துக்கொண்டு அரக்கப்பறக்க அலைந்து ஒரு குறையும் இன்றி அக்காவின் திருமணத்தை நடத்திக்காட்டினாள் அமிர்தா.
“வாழ்த்துக்கள் திருமதி நீலாம்பரி சாரங்கன்” என்கிற புதுப்பெயரோடு திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டி, தன்னோடு அவளை இணைத்துக்கொண்டான் சாரங்கன்.
error: Content is protected !!