ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 36
அத்தியாயம் – 36
மிருதுளா சொன்னது போலவே, அடுத்த நாள் நிதின் உதவியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து,
ரன்வீரும் தானும் நீண்ட நாட்களாக விரும்பிய விஷயத்தையும், எங்களுக்குள் ஏற்பட்ட ஒரு சிறிய மனவருத்தத்தால் கோபமாக இருந்தேன் என்பதையும், மாமா குடும்பத்தின் மீது உள்ள அன்பினாலும் ரன்வீரின் மீதுள்ள கோபத்தினாலும் அவசரபட்டு மாமன் மகனை திருமணம் செய்ய முன்வந்து விட்டேன், இப்போது தான் நான் செய்த தவறும் புரிந்திருக்கிறது, இதில் முழுக்க முழுக்க என் தவறு மட்டுமே இருக்கிறது, அதனால் திருமண நாள் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் வைத்துக்கொண்டு தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்.. என்று மிக உறுதியாகக் கூறினாள்…
அவளே இவ்வளவு தெளிவாகவும் துணிச்சலாகவும் பேசும் போது, அவதூறு பரப்பியவர்களின் வாய்கள் தானாகவே அடைபட்டன, ரன்வீரின் இமேஜ் சமூக வலைதளங்களில் மீண்டும் சீராகத் தொடங்கியது…
Advertisement
இந்தச் செய்தி ரன்வீருக்குத் தெரிய வந்தபோது, அவனால் முழுமையாக சந்தோஷப்படவும் முடியவில்லை, அதே சமயம் வருத்தப்படவும் முடியவில்லை, அவள் அவளையே தவறாக காட்டியதை எண்ணி மிகுந்த வருத்தமாகவும் மனதிற்க்குள் ஒருவித வெறுமை மட்டுமே குடிகொண்டிருந்தது. ஆனாலும், தன்னை ஒரு கொலைகாரன் என்று வெறுக்கும் அந்தப் பெண்ணே, உலகம் முன்னால் தனக்காக வாதாடி தன் கௌரவத்தைக் மீட்டுக் கொடுத்தது அவனது மனதின் ஏதோ ஒரு மூலையில் மெல்லிய நெகிழ்ச்சியைத் தந்தது என்பதும் உண்மையே…
அதே நேரம் வீட்டிற்கு வாருங்கள் என்று தொடர்ந்து அவளிடமிருந்து வந்த குறுஞ்செய்திகள் அவனது பிடிவாதத்தையும் தளர்த்தி இருக்க, தன் கௌரவத்திற்காகப் அவளை அவளே தவறாக காட்டி பேசியவள், ஒருநாள் தான் நிரபராதி என்பதையும் புரிந்து கொள்வாள் என்ற ஒரு சிறு நம்பிக்கையுடன் அவன் வீடு திரும்பினான்…
மீண்டும் அந்தக் குடும்பம் ஒன்று கூடியது, ரன்வீர் பிஸ்னஸ் விஷயமாக வெளியூர் சென்றிருந்ததாக ஏற்கனவே மிருதுளா சொல்லி வைத்திருந்ததால், பெரியவர்கள்அவனைப் பெரிதாகத் துளைத்தெடுக்கவில்லை, சம்யுக்தாவும் வினோத்தும் மீண்டும் தங்கள் அண்ணனுடன் அரட்டை அடிக்கத் தொடங்க, அந்த வீட்டில் இழந்த மகிழ்ச்சி மெல்லத் திரும்பியது…
Advertisement
அடுத்த இரண்டு நாட்கள் மிகவும் சுமுகமாகவே நகர்ந்தன, மிருதுளா தான் கொடுத்த வாக்கின்படியே, ரன்வீரிடம் எந்த வம்பும் வளர்க்காமல் அமைதியாக இருந்தாள். ஆனால், அவளது இந்த மௌனமும் ரன்வீருக்கு ஒருவித வருத்தத்தையே கொடுத்தது…
Advertisement
அவளிடம் எதாவது பேசலாமா என்று அவன் பலமுறை நினைக்கும் போதெல்லாம், எங்கே மீண்டும் அவள் ‘நீ ஒரு கொலைகாரன்’ என்று கூறித் தன் மனதைக் காயப்படுத்தி விடுவாளோ என்ற அச்சத்தில் அவளிடம் பேசவே தயங்கி நின்றான், ஒரு பக்கம் அவளது மௌனம் அவனுக்கு நிம்மதியைத் தந்தாலும், இன்னொரு பக்கம் அது ஒரு பாரமாகவே இருந்தது…
இந்நிலையில் அன்று மிருதுளாவிற்குச் சுந்தரத்திடமிருந்து போன் வந்தது, சுந்தரத்திற்கும் அவள் கொடுத்த அந்த பிரஸ் மீட்டிங் செய்தியும் தெரிய வந்திருக்க, அதைக் கேட்டு மிகுந்த கோபம் அவருக்கு, இத்தனை நாட்கள் மகனும் தந்தையும் தாத்தாவின் பணத்தை எந்தக் கவலையும் இல்லாமல் செலவழித்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது கையில் இருந்த பணமும் கரைந்து கொண்டே வரவும், மிருதுளாவின் பெயரில் இருக்கும் சொத்துக்களை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்ற திட்டத்தில் இன்று அவளுக்குப் போன் செய்திருந்தார்…
இத்தனை நாட்கள் மிருதுளாவும் அவர்களுக்குப் போன் செய்யவில்லை, இப்போது திடீரென்று மாமாவிடமிருந்து அழைப்பு வரவும், ஒருவித யோசனையுடன் போனை எடுத்தாள்…
Advertisement
முதலில் அவளது நலத்தை விசாரித்த சுந்தரம், பிறகு… “என்னமா இப்படி பண்ணிட்ட? உண்மையை சொல்லாம உன்னைத் தப்பா காட்டி இருக்க… அந்த ரன்வீர் உன்னை மிரட்டினானா?” என்று மிகுந்த பாசம் உள்ளது போல் வினவினார்.
”யாரும் என்னை மிரட்டல மாமா… என்னோட புகுந்த வீட்ல உள்ளவங்களுக்காக தான் இதெல்லாம் பண்ணேன்,” என்றாள் மிருதுளா அமைதியாக.
”அப்படின்னா அந்த குடும்பத்தை ஏத்துக்கிட்டு அவனோட வாழவே ஆரம்பிச்சிட்டியா? உன் தாத்தாவைக் கொன்னவனோட எப்படி உன்னால வாழ முடியுது?” என்று அவளது காயத்தைத் தூண்டிவிட்டு ஏற்றிவிட்டார் சுந்தரம்.
”நான் யார் கூடவும் வாழ ஆரம்பிக்கல மாமா… ஆனா இந்த குடும்பத்துல உள்ளவங்க ரொம்ப நல்லவங்க, அவங்களுக்காக தான் நான் இங்கே இருக்கேன், இதையெல்லாம் செய்தேன்” என்று அவள் சொல்ல, ரன்வீரை அவள் இன்னும் மனதார ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே அவருக்கு மிகுந்த நிம்மதியை கொடுத்தது, அவளை தன் பக்கம் இழுத்து கொள்ள இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தவர்,..”சரிமா… நீ ஏன் வீட்டுக்கே வரல? உன் அத்தை உன்னைப் பத்தி தான் நினைச்சுப் புலம்பிக்கிட்டே இருக்கா, எங்களால தான் அந்த வீட்டுக்கு வர முடியாது, நீயாச்சும் எங்களை வந்து பார்த்துட்டுப் போலாம்ல?” என்று அவர் பாசவலை வீச, “சரிங்க மாமா… நான் ஈவினிங் வரேன்,” என்றாள் மிருதுளா…
அதன் பிறகு தனது மகனுடன் சேர்ந்து அடுத்த திட்டத்தினைப் போட ஆரம்பித்துவிட்டார் சுந்தரம்.
அன்றைய மாலையே தனது அத்தையிடம் வெளியே போயிட்டு வருவதாகக் கூறிவிட்டு, தனது மாமா வீட்டிற்குப் புறப்பட்டாள் மிருதுளா, சுந்தரமும் மிருதுளாவை மிகவும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார், விஷ்வாவிற்கு அவள் மீது கொள்ளை ஆசை அல்லவா! அவள் இன்னொருவனின் மனைவி என்று தெரிந்தும், அவனது அந்த எச்ச ஆசை குறையவே இல்லை, அவளைப் பார்க்கும் போதே அவனது கண்களில் வக்கிரம் மின்னியது, ஆனால் மிருதுளாவிடம் நல்லவன் போலவே பேசினான்…
சரஸ்வதி தான் மிருதுளாவின் வருகையைக் கண்டு பதற்றப்பட்டுப் போனார், சமீப நாட்களில் தான் வீரமாணிக்கத்தை கொன்றது தனது மகன் விஷ்வா தான் என்ற உண்மை அவருக்குத் தெரிய வந்திருந்தது, அந்த உண்மையைத் தாங்க முடியாத அவர் மிகவும் துடித்துப்போய் விட்டார், ஆத்திரத்திலும் வேதனையிலும் மகனை ஓங்கி அறைந்துவிட, அடுத்த கணம் சுந்தரம் தன் மனைவியை ஓங்கி அறைந்தார்…
”என் மகன் மேலேயே கை வைக்கிறியா?” என்று கேட்டவர் சரஸ்வதிக்கு இன்னும் இரண்டு அடிகளையும் கொடுத்தார், மகன் ஒரு கொலையைச் செய்திருக்கிறான் என்பது தெரிந்தும், சுந்தரம் அவனுக்கு ஆதரவாக இருப்பது சரஸ்வதிக்கு மிகுந்த கவலையையும் பயத்தையும் கொடுத்தது, ஆனாலும், கணவரை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை, அவருக்கு எதிராக ஏதாவது செய்ய முயற்சி செய்தால் கூட கொன்று விடுவாரே,..
இந்த இக்கட்டான நிலையில் மிருதுளா நல்லவேளையாக இந்தத் தீயவர்களிடம் மாட்டாமல் தப்பிவிட்டாள் என்று அவளுக்காக நிம்மதி கொண்டவர், இப்போது அவளே தானாக வந்து இவர்களிடம் நிற்பதைக் கண்டதும் அவர் உடல் நடுங்கத் தொடங்கியது, இவர்களால் அவளுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்றும் அஞ்சியவர், அவள் ஓடி வந்து ஆசையாகப் பேசிய போது கூட, அவரால் இயல்பாகவோ பாசமாகவோ பேச முடியவில்லை.
தன் கணவர் மற்றும் மகனை மீறி உண்மையைச் சொன்னால், அவர்கள் என்ன செய்வார்களோ என்ற பயமே அவரை முடக்கி விட, தவிப்புடன் அங்கே ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார்…
”என்ன அத்தை, ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு எதுவும் முடியலையா?” என்று மிருதுளா அருகில் வந்து கேட்க, சரஸ்வதி சுந்தரத்தைப் பயத்துடன் பார்த்தார்.
சுந்தரமோ சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா… உன் ஞாபகமாவே இருந்தாளா, அதான் இப்போ உன்னைப் பார்த்ததும் அவளுக்குப் பேச்சு வரல” என்று சமாளித்தவர், பின் கண்களாலேயே சரஸ்வதியை உள்ளே போக சொல்ல, அவரும் பயந்தபடியே, “நா… நான் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்” என்று சமையலறைக்குள் தஞ்சம் புகுந்தார்…
சரஸ்வதி உள்ளே சென்றதும், சுந்தரம் மீண்டும் தன் நயவஞ்சகமான பேச்சை ஆரம்பித்தார். “நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா உன்னை என் மருமகளாக்கிக்கணும்னு! கடைசி நேரத்துல அந்த ரன்வீர் வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டானே” என்று அவர் பழைய பாட்டைப் பாட, மிருதுளாவிற்கு அது சலிப்பையே தந்தது…
”முடிஞ்சு போனதைப் பத்திப் பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல மாமா,” என்றாள் மிருதுளா சுருக்கமாக.
”எனக்கு ஒரு விஷயம் மட்டும் தான்மா புரியல, நீ எப்படி அவன் கூட இருக்க? அவன் கட்டுன தாலியை அத்து அவன் முகத்துலயே வீசிட்டு வருவேன்னு தான் நான் நினைச்சேன்,” என்று அவளது மனதைத் தூண்டிவிடப் பார்க்க, மௌனமாக இருந்தவள், சில நொடிகள் கழித்து, “எனக்கு அதுக்கெல்லாம் தைரியம் இல்ல மாமா, அதுவும் இல்லாம அவன் குடும்பத்துல இருக்கிறவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க,” என்று கூறினாள்…
”எல்லாம் நடிப்பா இருக்கும்மா! அந்த ரன்வீர் சொல்லிக் கொடுத்து குடும்பமே சேர்ந்து உன்கிட்ட நடிக்கிறாங்க, அந்த வீட்டுக்குள்ள நீ இருக்கிறது பாதுகாப்பே இல்லை,” என்று சுந்தரம் ரன்வீரின் குடும்பத்தையும் சேர்த்து இழுக்க, ஏனோ அவளுக்கு இந்த இடத்தில் லேசாகக் கோபம் வந்தது…
தான் ரன்வீரை வெறுத்தாலும், காயத்ரியும் மற்றவர்களும் தன் மீது காட்டும் அன்பு உண்மையானது என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள், அதைச் சுந்தரம் நடிப்பு என்று சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லை, இருப்பினும் அவள் தன் கோபத்தை வெளிக்காட்டியும் கொள்ளவில்லை,..
அப்போது விஷ்வா மெல்ல அவள் அருகில் வந்து, “மிருதுளா, அப்பா சொல்றதும் சரிதான், உன் சொத்து மேல கண்ணு வச்சுத்தான் அவன் உன்னை லாக் பண்ணி இருக்கான்னு நினைக்கிறேன்,” என்று சொல்லி அவளது காயத்தில் உப்பைத் தடவிட, சோகமாகத் தலை குனிந்தவள்.. “எனக்கு எதுவும் புரியல, குழப்பத்தோட தான் என்னோட ஒவ்வொரு நாட்களும் கழியுது, உங்களையெல்லாம் பார்த்தா மனசு கொஞ்சம் லேசாகும்னு நினைச்சு தான் வந்தேன், அதனால நடந்ததை பத்தி பேசாம வேற ஏதாவது பேசலாமே மாமா,” என்று அவள் கெஞ்சும் குரலில் சொல்ல, சுந்தரத்திற்கோ ‘உன்கிட்ட எங்களுக்குப் பேச வேற என்ன இருக்கு?’ என்று வஞ்சகமாகத் தான் நினைக்கத் தோன்றியது…
இருப்பினும் வெளியே வருத்தமாக இருப்பது போல காட்டிக் கொண்டே, “உன்னோட பேச்சுலயே நீ எவ்வளவு உடைஞ்சு போயிருக்கன்னு தெரியுது மிருதுளா, நீ சரின்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்… நான் லாயர் கிட்ட பேசி, அந்த ரன்வீர் கிட்ட இருந்து உனக்கு விடுதலை வாங்கித் தரேன்,” என்று
அவர் பேசி முடித்த அடுத்த கணம், “அந்தக் கஷ்டமான வேலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம்!” என்ற கம்பீரமான குரல் ஒலிக்க, மூவரும் திடுக்கிட்டு வாசலை நோக்கிட, அங்கே ரன்வீர் தான் நின்று கொண்டிருந்தான். அவனது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தாலும் உதட்டில் ஒரு ஏளனச் சிரிப்பு இருந்தது…
அவனைக் கண்டதும் அதிர்ச்சியில் எழுந்து நின்ற மிருதுளா… “நீங்க… நீங்க எப்படி இங்கே?” என்று திணற, ரன்வீர் அவளை ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு, நேராக சுந்தரத்தை நோக்கி… ”என்ன சுந்தரம்? என் பொண்டாட்டிக்கு என்கிட்ட இருந்து விடுதலை வாங்கித் தரப்போறீங்களா? நீங்க என்ன பெரிய சமூக சேவகரா?” என்று நேரடியாக வினவ, சுந்தரம் ஒரு நிமிடம் பேச்சிழந்து நின்றார்…
”இது எங்க வீடு, இங்க வந்து சத்தம் போடாதே” என்று எகிறிய விஷவா, ரன்வீர் பார்த்த அந்த ஒற்றைப் பார்வையில் அப்படியே அடங்கிப்போனான், ரன்வீரின் விழிகளில் இருந்த அந்தத் தீவிரம், அடுத்த வார்த்தை பேசினால் என்ன நடக்கும் என்ற அச்சத்தை விஷ்வாவிற்குள் ஏற்படுத்தியது…
மிருதுளாவை நோக்கித் திரும்பிய ரன்வீரோ… “இங்க எதுக்கு வந்த?” என்று கோபத்தோடு வினவினான். அவனது குரலில் அதிகாரத்தை விட, அவளைப் பற்றிய அக்கறையும் ஒருவித பதற்றமுமே அதிகமாக இருந்தது…
”நான் என் மாமா வீட்டுக்கு வந்தேன், அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று அவளும் அதே கோபத்தோடு எகிறிட,.. ”இது உன் மாமா வீடு இல்ல, கொலைகாரன் வீடு! இங்கே வந்தா உனக்கு தான் ஆபத்து,” என்று ரன்வீர் விஷ்வாவை அழுத்தமாகப் பார்த்துச் சொல்ல, விஷ்வாவின் முகம் ஒரு கணம் வெளுத்துப் போனது…
அவனை ஏளனமாகப் பார்த்துச் சிரித்த மிருதுளாவோ.. “கொலைகாரன் வீடுன்னு யாரை சொல்றீங்க ரன்வீர்? என் தாத்தாவைக் கொன்னது நீங்கன்னு என் கண்ணால பார்த்தேன், இப்போ வந்து என் மாமாவையும் விஷ்வாவையும் கொலைகாரன்னு சொல்றது வேடிக்கையா இருக்கு, பழியைத் தூக்கி அடுத்தவங்க மேல போட்டா நீங்க நல்லவர் ஆயிடுவீங்களா?” என்று ஆவேசமாகக் கேட்டாள்…
மிருதுளா இப்படிப் பேசுவதைக் கண்ட சுந்தரம், நிலைமையைச் சாதகமாக்கிக் கொள்ள நினைத்து… “பார்த்தியாம்மா மிருதுளா… தப்பு செஞ்சவன் தண்டனையில இருந்து தப்பிக்க இப்போ எங்க மேலயே பழி போடுறான். ரன்வீர், மரியாதையா இங்கிருந்து கிளம்பு. இல்லைன்னா போலீஸைக் கூப்பிடுவேன்,” என்று மிரட்டிட, ரன்வீர் அசையவில்லை. “போலீஸைத் தானே, தாராளமா கூப்பிடுங்க!” என்று அவன் ஒற்றை வரியில் சவால் விட, பம்மிய சுந்தரம், பின் தன்னைச் சாமர்த்தியமாகச் சமன்படுத்திக் கொண்டு, “என்னமா இது… வீட்டுக்குள்ள வந்து இப்படி அராஜகம் பண்றான்!?” என்று மிருதுளாவிடம் ஏற்றி விட்டார்.
”உங்களுக்கு என்னதான் வேணும் ரன்வீர்? ஏன் இப்படிப் பண்றீங்க?” என்று அவள் கோபத்தின் உச்சத்துக்கே சென்று வினவிட,..
ரன்வீரோ அவளிடம் எந்தப் பதிலும் சொல்லவில்லை, அவளது கேள்விகளையும், எதிர்ப்புகளையும் துளியும் பொருட்படுத்தாமல், அடுத்த நொடி அவளது அனுமதி இல்லாமலேயே அவளைத் தன் கரங்களில் அள்ளித் தூக்கி கொள்ள, அதிர்ச்சியில் திமிறினாள் மிருதுளா, அவனது மார்பில் தன் கைகளால் அடித்துப் போராடினாள். ஆனால் அவன் ஒரு பாறை போல உறுதியாக இருந்தான்…
அவளைத் தூக்கிக் கொண்டு விறுவிறுவென வெளியே வந்தவன், தனது காரின் முன் இருக்கையில் அவளை அமர வைத்துப் சீட் பெல்ட் அணிவித்திட, அவனது அசுர பலத்திடம் போராட முடியாமல் ஒரு கட்டத்தில் அடங்கி போய், சீற்றத்துடன் அமர்ந்திருந்தவள், ரன்வீர் மறுபுறம் ஏறி அமர்ந்து காரை உயிர்ப்பித்த நொடியிலிருந்து தன் விழிகளால் அவனை அனல் தெறிக்கப் பார்த்தாள்…
