காதலும் கடத்தப்படும் – 3

காதலும் கடத்தப்படும் – 3
வீட்டிற்குள் நுழைந்த அர்ஜுன், அஞ்சலி திகைத்து நிற்பதைக் கண்டு கேள்வியானான்.
“என்ன ஆச்சு?”
Advertisement
அவனைக் கண்டவள்,
“வீட்டுக்கு வா, வீட்டுக்கு வான்னு வருந்தி வருந்தி அழைச்சியே, இதுக்குத்தானா?” என்றாள் எரிச்சலோடு. பார்க்குமிடம் எங்கும் பேப்பரும், துணிமணியும், டப்பாக்களும், பிளாஸ்டிக் பைகளும் நிரம்பி வழிந்தன. தரையில் கால் வைப்பதற்கு சிறிதும் இடமில்லை. சுவரெல்லாம் ஏதேதோ நடிகர் நடிகையர் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, சிலது கிழிந்தும் கிழியாமலும் இருந்தன. சுவரின் வர்ணத்தோடு, பூச்சும் பல இடங்களில் தொலைந்திருந்தன. இதைக் கண்டவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.
“நான் கிளம்பறேன்” என்றாள்.
Advertisement
“ரொம்ப நல்லது, உன் வீடு எங்கன்னு சொல்லு விட்டுட்டு வந்துடறேன்” என்று குறுக்கிட்டான், அர்ஜுன்.
Advertisement
“நானே பார்த்துக்கறேன்”
“அப்ப உள்ள போ. நீ யாரு என்னன்னு கண்டுபிடிச்சு நானே உன்னை கொண்டுபோய் விட்டுடறேன்” என்று அவன் கூறிக்கொண்டிருக்க, அவளது பாதத்தின் மீது சிறு பூச்சி ஒன்று ஊர்ந்து செல்ல, அதைக்கண்டு பயத்தில் அலறினாள்.
“இப்ப எதுக்கு நீ இந்த கத்து கத்தின?”
Advertisement
“பூ… பூச்சி…” என்று பயம் குறையாமல் கூறினாள்.
“பார்றா, உன்னை பூலான் தேவின்னு நினைச்சா, நீ பூச்சி புழுவுக்கெல்லம் பயப்படுற?” என்று மதன் கிண்டலடிக்க, உடன் அர்ஜுனும் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினான்.
“ஆறு புல்லெட், துப்பாக்கில லோட் பண்ணிட்டு தான் வந்திருக்கேன்”
அவள் கூறியதைக் கேட்டு இருவரும் அமைதியாக,
“என்னோட உடம்புக்கெல்லாம் ஒன்னே ஒன்னு போதும், ஆறெல்லாம் வேஸ்ட் பண்ண வேண்டாம்” என்ற மதன், அவளைக் கண்டு வணங்கினான்.
“பசங்க தனியா இருக்கற வீடு, அப்படித்தான் இருக்கும். உனக்கு சுத்தம் செய்து தரோம். கவலைப்படாத” என்ற அர்ஜுன், மெல்ல அவ்விடத்தை சுத்தம் செய்யத் தொடங்கினான்.
“யாரு யாரை கடத்திட்டு வந்தான்னு தெரியல… ச்ச” என்று புலம்பியபடி மதனும் பெருக்கத் தொடங்க, “மதனா நீ டாய்லட் கழுவு” என்றான் அர்ஜுன்.
“நானா?”
“போடா”
மதன் அழாத குறையாக அஞ்சலியின் எதிரே வந்து நிற்க,
“என்ன?” என்றாள்.
“கொஞ்சம் தள்ளு” என்றவன், அவள் சற்று தள்ளி நிற்க, தரையில் கிடந்த துவாலையை எடுத்து உதறினான். அவள் இவ்வளவு நேரமாக அதன் மேல் நின்றிருந்ததை எண்ணி முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள, “ஏன் பிறந்தாய் மதனா ஏன் பிறந்தாயோ” என்று சோக கீதம் வாசித்தபடி துவாலையை முகத்தில் சுற்றியபடி சென்றான்.
அர்ஜுன் ஓரளவு சுத்தம் செய்திருக்க, மதனும் தனது பணியை முடித்து வந்து நின்றான்.
“என்னடா மதனா, ஃப்ரெஷ்ஷா இருக்க?”
“குளிச்சுட்டு வரேன் அஜூ…”
“அப்படியாவது குளிச்சியே. நானும் குளிச்சுட்டு வந்துடறேன்” என்றுவிட்டு அவன் செல்ல, வரவேற்பறை ஓரளவிற்கு லட்சணமாக மாறியிருந்தது.
“இப்படியே சிலை மாதிரி தான் நிப்பியா, நீ இந்த கூட்டல் பெருக்கலெல்லாம் செய்ய மாட்டியா?” என்று கோபமாக அஞ்சலி முன்னே வந்து நின்றான், மதன்.
“உன் வீட்டை நான் எதுக்கு பெருக்கணும்?”
“கடத்திட்டு வந்திருக்காங்களேன்னு ஒரு பயமே இல்லை உனக்கு”
“ப்ச்… என் ரூம் எது?”
“உனக்கா!! உள்ள ஏ.சி. ரூம் ரெடியா இருக்கு. பஞ்சு மெத்தை போட்டு பட்டு துணி விரிக்க சொல்லியிருக்கேன்”
“என்ன நக்கலா? துப்பாக்கி எடுத்து ஒரே போடு போட்டுடுவேன்” என்றபடி அவள் பைக்குள் கையை விட, உடனே முகம் மாறி சிரித்தவன்,
“ஐயோ மேடம், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. உண்மையாவே உங்களுக்கு ஏ.சி. ரூம் போட்டு தரணும்னு தான் ஆசை. ஆனா என்ன பண்றது, நாங்க ஏழை கிட்னாப்பர்ஸ். இந்த தடவை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அடுத்த முறை உங்கள கடத்தும்போது நாங்க தொழில்ல பெருசா சாதிச்சு, காரு பங்களான்னு செட்டில் ஆயிருப்போம். அப்போ உங்களுக்கு ஏ.சி.ரூம் உண்டு” என்றான்.
“த்து… திருந்தற ஐடியாவே இல்லையா?”
“இல்ல மேடம். உங்கள கடத்தின பிறகு, இந்த உலகத்துல எவன வேணாலும் கடித்திட முடியும்னு நம்பிக்கை வந்துடுச்சு”
அவள் முறைக்க, அவன் பரிகாசம் செய்ய, ஒரு வழியாக குளித்து முடித்து வந்தான், அர்ஜுன்.
“மதனா, நீ ரூமை சுத்தம் பண்ணிடு. நான் அக்கா கடைல மூணு பேரும் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்றுவிட்டு அவன் செல்ல, “மீண்டும் நானா?” என்று உறைந்து நின்றான், மதன்.
அறை கதவைத் திறந்தவள், அவள் எதிர்பார்த்தது போல், அங்கேயும் குப்பையாக இருக்க, கையில் துடைப்பக் கட்டையோடு மதனின் எதிரே வந்து நின்றாள்.
‘புத்தி வந்துடுச்சு போல, சுத்தம் செய்யப்போறா’ என்று அவன் ஆசுவாசப் படுவதற்குள், அவனை நோக்கி அவள் துடப்பத்தை ஏறிய, அவன் சுதாரிக்கும் முன் அது கீழே விழுந்து, கயிறு அவிழ்ந்து விளக்குமாறு குச்சிகள் சிதறிப்போயின.
“தயவு செஞ்சு அந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுடு, என்னால முடியல” என்றவன், உண்மையிலேயே அழுதபடி குச்சிகளை ஒன்று சேர்த்து கட்டினான்.
அறைக்குள் நுழையும் அளவிற்கு அவ்விடம் ஓரளவு சுத்தமான பிறகு, உள்ளே சென்றாள், அஞ்சலி. ஒருவர் படுக்கக்கூடிய இரும்பு கட்டில் ஒன்றும், பழைய மர பீரோ ஒன்றும் இருந்தது. அதிலேயே அப்படுக்கையறை நிரம்பியிருந்தது. அவள் திரும்ப, அறைக் கதவின் பக்கவாட்டில் இருவரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன.
“யாரு இவங்க?” என்றாள், அஞ்சலி.
“அம்மாவும் அப்பாவும்” என்றவன், ஒரு அட்டைப்பெட்டிக்குள் மொத்தமாக குப்பைகளை வாரி எடுத்துச் சென்றான்.
அப்புகைப்படங்களை சற்று நேரம் பார்த்து நின்றவள், அதில் படிந்திருந்த தூசினை துடைக்க ஒரு துவாலையை எடுத்தாள். அப்படங்கள் எட்டாமல் போக, அருகே தரையில் இருந்த ட்ரங்க் பெட்டியை இழுத்து, அதன் மீது ஏறி நின்று, அப்படங்களை துடைத்தாள்.
உள்ளே நுழைந்த மதன், அவள் செய்வதைக் கண்டு அதிர்ந்துபோனவன், ஓடிச்சென்று அவளை இழுத்து, ட்ரங்க் பெட்டியிலிருந்து கீழே இறக்கினான்.
“எது மேல ஏறி நிக்கற தெரியுமா? சாமியா கும்புடற பெட்டி அது? அஜூ பார்த்திருந்தா அவ்வளவு தான்”
“ஃபோட்டோவ துடைச்சேன். எட்டலன்னு…”
“இதுக்குள்ள அம்மாவோட புடவை இருக்கு, அப்பாவோட ஸ்க்ரிப்ட்டுங்க இருக்கு” என்றபடி அப்பெட்டியினைத் திறந்தான், மதன். அதற்குள், அவ்விருவரின் நினைவாக வேறு ஏதேதோ இருக்க, சற்று மனம் வருந்தினாள், அஞ்சலி.
“சாரி, எனக்கு தெரியாது…”
“பரவால்ல” என்றவன், அவளிடமிருந்த துவாலையை வாங்கி, அப்பெட்டியினையும் தூசு தட்டிவிட்டு, ஓரமாக எடுத்து வைத்தான்.
“மதனா”
குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தான், அர்ஜுன்.
“சாப்பிடலாம், செம பசி” என்றபடி அர்ஜுன் அமர, அவனோடு மற்ற இருவரும் அமர்ந்து இட்டிலிகளை விழுங்கினர்.
மதன் வரவேற்பறையில் படுக்கையை விரிக்க, உள்ளே அறைக்குள், கட்டிலின் மேல் அமர்ந்தபடி ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாள், அஞ்சலி.
“உனக்கு தலையணை” என்றபடி அறைக்குள் நுழைந்த அர்ஜுன், ஜன்னலருகே தலை வைத்து படுத்துக்கொள்ள ஏதுவாக கட்டிலின் மேல் தலையணையை வைத்தான். அதை எடுத்து எதிர்புறம் வைத்தவள்,
“சாமி போட்டோக்கு நேராவா கால் நீட்டி தூங்குவாங்க?” என்றவள், அவனது பெற்றோரின் படத்தினை சுட்டிக்காட்ட, அவன் இதழோரம் சிரித்துக்கொண்டான்.
“ஜன்னலை வேணும்னா திறந்து வச்சுக்கோ. காத்து நல்லா வரும்” என்றுவிட்டு சென்றவன், மதனின் அருகே படுத்து உறங்கிப்போனான்.
நள்ளிரவு தாகம் கொண்டு நீர் பருகிட எழுந்த அர்ஜுன், அருகே ஒரு குவளையில் இருந்த நீரினை பருகினான். மீண்டும் படுத்தவனுக்கு ஏதோ உறக்கம் பிடிபடவில்லை. எழுந்து வரவேற்பறை ஜன்னலருகே சென்றவன், முழுமதியைக் கண்டான். மிளிரும் விழிகளும், கூரிய நாசியும், அமைதியான முகமும், படர்ந்த புஜங்களும் அந்த நிலவொளியில் ஜொலித்தன. கேசத்தை கோதியவன், திரும்பி தனது அறையைக் கண்டான். வெகு காலம் கழித்து, அது மீண்டும் வாழ்வு பெற்றிருந்தது. அவள் உறங்கிவிட்டாளா என்றொரு எண்ணம் தோன்ற, அவன் அறைக் கதவை திறந்து பார்த்தான். அவளும் ஜன்னலை திறந்து வைத்தபடி உறங்கிப்போயிருந்தாள். மீன் விழியும், பிறை நெற்றியும், செவ்விதழும், மதிமுகமும், நிலவொளியில் மிளிர்ந்தன. சிறு முறுவல் கொண்டவன், அறைக் கதவை சாத்திவிட்டு, வீட்டு வாயிலைத் திறந்து வெளியே சென்று திண்ணையில் அமர்ந்தான். நிலவு பொலியும் இரவின் குளுமை அவனுக்கு இதம் சேர்த்தது. நிலவினை ரசித்தபடி ஒரு பாடலை பாடத் தொடங்கினான்.
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக…
நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு…
