Skip to content
Post Views: 3,520
அத்தியாயம் 3
வீராப்பாக வளையலை தூக்கிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டாள் தான். ஆனால் அன்றாட செலவுக்கு அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி, சுட்டெரிக்கும் வெயிலில் நட்டநடு வீதியில் அநாதையாக நின்றவளை அங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்கவிடவில்லை.
வீட்டு செலவு, இரண்டு குழந்தைகளுக்கு ஆகும் செலவு, நோயுற்று இருக்கும் நபருக்கான மருத்துவ செலவு, அவரைப் பார்த்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பெண்ணிற்கான செலவு என அனைத்தும் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் அவள் கழுத்தைக் கடிக்க தான் செய்யும். வாயிற்கும், வயிற்றுக்கும் பிழைக்கும் பிழைப்பு என்றாவது மாறுமா என்று யோசிக்கையில், இல்லை என்று சொல்வது போல் சிரிப்பாய் சிரிக்கும் அவள் கல்லூரி காலம்.
“எனக்கு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்ய என் சாருகேசி இருக்கானே. அவனுக்கு நல்ல பொண்டாட்டியா இருப்பதை விட வேலைக்குப் போய் சம்பாதிச்சு என்ன செய்யப் போறேன். பெயருக்கு டிகிரி வாங்கினால் போதும்.” என அந்த துள்ளும் வயதிற்குரிய கலர்கலர் கனவுகளால் எதிர்காலத்தை கோட்டை விட்டதை நினைத்து தன்னைத் தானே அடித்துக்கொள்ளத் தோன்றியது இப்போது இருக்கும் அமிர்தவர்ஷினிக்கு.
Advertisement
அவள் கண்டு வைத்திருந்த கனவுகளோடு சேர்த்து, அவள் குடும்பத்தின் வளமான வாழ்க்கையிலும் கருப்பு மையை பூசியவன் அவள் உயிராகக் காதலித்த சாருகேசியே அல்லவா. அவளின் சாருவா, அவனா பொய்த்துப்போனான். இந்தக் கேள்வி வரும் போது இப்போதும் கூட அவளால் முழுதாக நம்ப முடியவில்லை என்பது தான் பரிதாபத்திற்குரிய விஷயமே.
தன் நிலை மாற, அரசு நடத்தும் போட்டித் தேர்வு, வங்கித் தேர்வு என எதற்காவது படித்து அதில் வேலை வாங்கிவிடலாம் என அமிர்தா முயற்சிக்க நினைத்தால் கூட, அவளுக்காக காத்திருக்கும் வீட்டு வேலைகளும், கடமைகளும் பூதம் போல் அவளை முழுதாக தங்களுக்குள் இழுத்துக்கொள்ளும். அவற்றை பூர்த்தி செய்த பின்னாலாவது ஏதாவது செய்யலாம் என்று நினைத்தால், காலை முதல் அலைந்த அலைச்சலுக்கும் நாளை காலை அலையப்போகும் அலைச்சலுக்கும் சேர்த்து ஓய்வு கெடு என்று உள்ளம் கெஞ்சும். அப்படி சோர்வின் மிகுதி அடித்து சாய்க்கும் போது உறங்கினால் தான் உண்டு என்பதால் அனைத்தையும் மறந்து உறங்கிவிடுவாள் அமிர்தா.
குழந்தைகள் பால் குடி மறவாத பிள்ளைகளாக இருக்கும் வரை பெரிதாகப் பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் கண்ணில் பார்க்கும் அனைத்தையும் ஆசைப்படுவார்கள். அதில் ஒன்றைக் கூட தன்னால் அவர்களுக்காக வாங்கிக்கொடுக்க முடியாதே என்னும் சுயபச்சாபத்தில், பரிதாபத்தின் உச்சநிலையில் நின்றவளைப் பார்க்க நெஞ்சம் வலிக்க, நெருப்பில் உருகி வழியும் தங்கம் போல் தன்னால் அவளிடம் ஓடி வந்தான் சாருகேசி.
Advertisement
ஆறு அடி ஒரு அங்குலத்தில் தனக்கு விருப்பமான காக்கி உடையில், தான் கொண்டாடித் தீர்த்த கார்மேக குழல் காற்றில் பறக்க, தன்னை நோக்கி ஓடி வந்தவனை ரசிக்கத் துடித்த மனதின் மீது காரி உமிழ்ந்து கட்டுப்படுத்திக்கொண்டாள் அமிர்தா.
Advertisement
தன்னைக் கண்டதும் பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அவன் கண்களில் இருந்த அன்பைக் காணக் காண, இன்னும் கொஞ்சமாக மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் மிச்சம் இருக்கும் காதலின் வீரியத்தால் உடல் முழுவதும் துடித்தது அமிர்தாவுக்கு. வலது கையின் உள்ளங்கையால் துடிக்கும் இதழ்களை மறைத்துக்கொண்டாள். இதழ்களை மறைத்துவிடலாம். ஆனால் துடிக்கும் கண்களையும், ஆறுதல் அணைப்பிற்காக ஏங்கும் உடலையும் அவளால் மறைக்க முடியவில்லை.
அவளை இழுத்து தன்னோடு அணைத்து ஆறுதல் சொல்வதற்காக சாருகேசியின் கரம் நீண்டு பின் அடங்கியது. அவன் தன் அருகே வந்து நின்று, அவன் சுவாசம் தன்னைத் தீண்டவும் தான் அங்கிருந்து செல்ல வேண்டும் என்கிற உணர்வே வர அமைதியாக கிளம்ப முற்பட்டாள். அவளைப் போக விடாமல் தடுத்தவன், “ரொம்ப சோர்ந்து தெரியுறியே. ஏதாவது சாப்பிடுறியா?” அக்கறையாகக் கேட்டான்.
“பிச்சை எடுக்கலன்னு சொன்னதை நிறைவேத்த பிச்சை போட நினைக்கிறீங்களா சார்?” கண்கள் சிவக்க, குரல் கரகரக்க அவள் கேட்ட தொணி உயிரைப் பிடுங்கி தீயிட்டுக் கொழுத்துவதை உணர்ந்தவன், “இவ்வளவு கண்மூடித்தனமான வெறுப்பு தேவையில்லையே அமிர்தா.” உயிரை உருக்கும் குரலில் கேட்டான்.
Advertisement
“யாரோ பண்ண தப்புக்கு என் ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஆழிக்காத்தில் மாட்டின படகு மாதிரி அகோரமா கலைச்சுப் போட்டப்ப தெரியலையா? இப்படி செஞ்சா இவ தாங்குவாளா, முன்னாடி மாதிரி நம்மைக் காதலிப்பாளான்னு.
அப்ப என்னோட வலியை விட, உங்க மேல நான் வைச்சிருக்கும் காதலை விட உங்க சுயநலம் தானே பெருசா தெரிஞ்சது. அதனால் தானே காதலிச்சவளுக்கும் உண்மையா இல்லாம, உறவையும் மதிக்காம நீங்க பாட்டுக்கு நடந்துக்கிட்டீங்க. உங்களோட அந்த மோசமான செயல்களுக்கான வெளிப்பாடா என்பக்கம் இருந்து வெறுப்பு வரும் போது தாங்கிக்க முடியலன்னா ஆச்சர்யம் தான்.” துடிக்கும் இதழ்களோடு பதில் சொன்னாள்.
“எல்லா நேரமும் நியாயமா இருக்க முடியாது அமிர்தா. சில நேரத்தில் சுயநலமும், பாரபட்சமும் தவிர்க்க முடியாதது. அன்னைக்கு நான் நின்ன நிலையில் நீ இருந்திருந்தா.” என்றவன் வார்த்தைகளை முடிப்பதற்கு முன்னர், “கட்டாயம் நீங்க செஞ்ச கேவலமான காரியத்தை செஞ்சிருக்க மாட்டேன். ஒருவேளை வேற வழி இல்லாம செஞ்சிருந்தாக் கூட வெட்கம், மானம் எதுவும் இல்லாம என்னால் பாதிக்கப்பட்டவங்க முன்னாடி வந்து நின்னு இருக்க மாட்டேன்.
எல்லாத்துக்கும் மேல, எல்லோருக்கும் நியாயம் செய்யக்கூடிய வேலையில் இருந்துக்கிட்டு, இப்படி ஒரு மோசமான பாரபட்சத்தை செஞ்ச பிறகும், கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாம கெத்தா அதே வேலையில் தொடர மாட்டேன்.” ஆக்ரோஷமாகச் சொன்னாள்.
கண்கள் மூடி தன்னை நிதானித்தான். என்னோட செல்லமான கேசி எனத் தன் கன்னம் பிடித்து கொஞ்சும் பதின்வயது அமிர்தா நினைவில் வந்து குதித்தாள். அதிர்ந்து பேசக்கூட வராத அவளைத்தான் காலம் இப்படி வாயில் கத்தியோடு சுத்த விட்டிருக்கிறது என்பது புரிய, “நான் தெரியாம செஞ்சுட்டேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். தப்புன்னு தெரிஞ்சு, அதனால் வரும் பின்விளைவுகளை புரிஞ்சு தான் செஞ்சேன். ஒரு குடும்பத்துக்காக ஒருத்தரை இழக்கலாம் னு முடிவுசெஞ்சு என் மனசாட்சியைக் கொன்னு தான் அந்தக் காரியத்தை செஞ்சேன். அதுக்கு அப்புறம் உன்னை நினைக்கிறதுக்கு கூட எனக்குத் தகுதி இல்லன்னு விலகிப் போக தான் நினைச்சிருந்தேன்.
ஆனா உன்கூட ஆயுள் முழுக்க வாழ்வதற்காக நான் கண்டு வைச்சிருந்த கனவும், இன்னும் அழியாம எனக்குள் இருக்கிற காதலும் என் முடிவை நிறைவேத்த விடல. அம்மா என்னை கல்யாணத்துக்கு வற்புறுத்தும் போது உன்னைத் தாண்டி வேற ஒரு பொண்ணை என்னால் நினைக்க கூட முடியல.
நீயும் நான் இல்லாம அப்படி நல்லா ஒன்னும் இல்லையே அமிர்தா. நீ ஏன் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாது.” மனதில் நினைத்ததை கேட்டேவிட்டான். அமிர்தா அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருக்க, தன் கோரிக்கைக்கு என்ன பதில் வருமோ என அவனின் இதயம் பந்தயக்குதிரையாய் துடித்தது.
“மறுவாய்ப்பா?” என்றபடி நக்கலாகச் சிரித்தவள், “எப்படி உங்களால நாக்கு கூசாம இப்படிக் கேட்க முடியுது. என்னைக் கூப்பிடுறீங்க சரி. குழந்தைங்களை என்ன செய்யுறதா உத்தேசம்.” என்க, தொண்டைக்குழி ஏறி இறங்க பயத்தோடு சேர்த்து எச்சிலையும் விழுங்கியவன், “நான் முன்னாடியே சொன்ன மாதிரி குழந்தை இல்லாத நல்லவங்களாப் பார்த்து தத்து கொடுத்திடலாம்.” என்றவனை அடிக்க கையோங்கிவிட்டாள் அமிர்தா. தன்னை கடவுளுக்கு இணையாக பூஜித்த பெண் இன்று தன்னை அடிக்க கையோங்கியதை அதிர்வோடு பார்த்துக்கொண்டிருந்தான் சாருகேசி.
“குழந்தைங்களை தத்து கொடுத்திடலாம் சரி. என்னோட பாதுகாப்பில் ஒரு ஜீவன் என்னோட வீட்டில் இருக்கே. அவங்களை என்ன பண்றது? கருணைக்கொலை பண்ணிடலாமா?” வெடுக்கென கேட்டாள்.
சட்டென்று எதிர்ப்பக்கம் திரும்பி நின்றுகொண்டான் சாருகேசி. இந்தக் கேள்விக்கு சாகும் வரை என்ன அடுத்த பிறவியில் கூட அவனால் பதில் சொல்ல முடியாது.
அவன் விரைத்த தேகத்தைப் பார்த்து கடுப்பான அமிர்தா, “உங்களுக்கே புரியுது, நீங்க செஞ்சு வைச்ச செயல்களோட விளைவுகள் மறையவே மறையாதுன்னு. அப்புறம் எதுக்காக இந்த நப்பாசை. ஆத்தில் ஒரு கால், சேத்தில் ஒரு கால் னு நிற்காம என்னை மாதிரி காதல் வேணாம் னு உறுதியா முடிவுக்கு வந்து வேற யாரையும் கல்யாணம் பண்ணி வாழப்பாருங்க.” கோபமாகச் சொன்னாள்.
“நீ என்னைக் கடந்துட்டன்னு சொன்னா உன்னோட நிழல் கூட நம்பாது அமிர்தா. நீ என்னைக் கடக்கவும் மாட்ட, உன்னோட காதல் உன்னை அதைச் செய்யவும் விடாது. நான் உன்மேல வைச்சிருக்கிற காதலை விட, நீ என்மேல வைச்சிருக்கும் காதல் அத்தனை உயர்வானது. எனக்காக இல்லாமப் போனாலும் உனக்காகவாச்சும் நாம ஒன்னு சேரணும்.” உள்ளம் உருகச் சொன்னான்.
இல்லை என தலையை இருபக்கமும் ஆட்டியவள், “நடந்த எல்லாத்தையும் மறந்து உங்களோட வந்து வாழ்வேன்னு உங்களுக்குள்ள கடுகளவு எண்ணம் இருந்தாலும் அதை அடியோட துடைச்சுப் போட்டுடுங்க. என் குழந்தைங்களுக்கு அங்கீகாரம் கொடுக்காத யாரும் எனக்குத் தேவையில்லை.” என்றுவிட்டு நடக்கத் துவங்கினாள். சாருகேசியும் அதன்பிறகு அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் அமைதியாக நின்றுவிட்டான்.
அமிர்தாவின் கரங்கள் அடிக்கடி உயர்வதையும் திரும்ப நிலம் நோக்குவதையும் வைத்தே கண்ணீரைத் துடைத்துக்கொண்டே நகர்ந்து செல்கிறாள் என்பதைப் புரிந்தவனுக்கு இதயம் வலித்தது. செல்லும் அவளின் நிழல் உருவத்தை தன் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் படலத்தையும் தாண்டி உள்ளே இழுத்து வைத்துக்கொண்டான்.
கைவிட்டுப் போன காதல் மற்றும் தான் கை கழுவிவிட்ட காதலி இருவரையும் நினைத்து தன் சுயசிந்தனையில் நின்றுகொண்டிருந்த கொழுந்தனின் தோளில் கை வைத்து கவனம் கலைத்தாள் கீரவாணி.
“அதிரடியா எதுவும் செய்யாம இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா கடைசி வரைக்கும் திராட்சைப் பழம் வேண்டிக் காத்திருந்த நரியோட நிலைமை மாதிரி நடுரோட்டில் தான் நிற்கணும். பேசாம ஒன்னு பண்ணுங்க. அவளை அப்படியே குண்டு கட்டா தூக்கிட்டு வந்திடுங்க. நம்ம வீட்டில் பிரச்சனை வராம நான் பார்த்துக்கிறேன்.” சிரித்தபடி சொன்னாள்.
“அப்படி பண்ண எனக்குத் தைரியம் இல்லாம இல்ல அண்ணி. அவளோட பொறுப்பையும், கடமையையும் நானும் மதிக்கிறேன். என்னால் செய்ய முடியாத எல்லாத்தையும் பலரோட ஏச்சு பேச்சுகளைத் தாங்கிக்கிட்டு செய்யுறா. இதுவரைக்கும் நடந்ததெல்லாம் போகட்டும். இனி அவ வாழ்க்கையில் என்னால் எது நடந்தாலும் அவளுக்கு முழு கௌரவத்தைக் கொடுக்கக் கூடியதா தான் இருக்கணும்.” முடிவோடு சொன்னான் சாருகேசி.
“அப்ப நேரடியா அறுபதாம் கல்யாணம் தான்னு சொல்லுங்க.” என்று கேலியில் இறங்க, “முப்பது வயசில் நடந்தாலும், அறுபது வயசில் நடந்தாலும், எண்பது வயசில் நடந்தாலும் அவளோட தான் என்னோட கல்யாணம் அண்ணி.” தீவிரமாகச் சொன்னவனைப் பார்த்த கீரவாணியின் முகத்தில் அதுவரை இருந்த சிரிப்பு மொத்தமாக பறிபோனது.
தன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தாள் அமிர்தா. “அப்பன் யாருன்னே தெரியாத பிள்ளைகளுக்காக ஓடி ஓடி உழைக்கிற பைத்தியக்காரி இவளா தான் இருப்பா. இத்தனை நடந்த பின்னாலும் தைரியமா நடமாடுறா, இவளுக்கு நெஞ்சழுத்தம் அதிகம் தான்.” என ஆரம்பித்து பலர் பலதும் பேச, வழக்கம் போல் அது எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் நடந்தாள்.
கதவைத் திறந்து வீட்டிற்குள் வந்து சேர்ந்த அமிர்தவர்ஷினி, பணத்திற்காக தன்னை ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்த கேர்டேக்கரைப் பார்த்ததும், அவருக்குப் பதில் சொல்ல முடியாத இயலாமையில் கையில் இருந்த கைப்பையை தூக்கிப் போட்டுவிட்டு காதில் அணிந்திருந்த காதணியைக் கழட்டப் பார்க்க, “என்ன பாப்பா பணம் இருக்கிற பையை இப்படியா தூக்கிப் போடுவ.” கண்டித்தபடியே அவள் பையில் இருந்த பணத்தை எடுத்து அடுக்கியபடி அவளிடம் நீட்டினார் அந்தப் பெண்மணி.
அமிர்தாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்த கணம் இது சாருகேசியின் செயல். தன்னிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தன் கவனத்தை திசைதிருப்பிவிட்டு இதை வைத்திருக்கிறான் என்று புரிந்துகொண்டு, கேர்டேக்கரிடம் இருந்து அதை வாங்கிக்கொள்ளப் பார்க்க, அவர் ஆசையாக பணத்தை பார்ப்பதை பார்த்ததும் அமைதியாகிவிட்டாள்.
சற்று தொலைவில் அமைதியாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளையும், கேர்டேக்கரையும், சாருகேசியையும் நினைத்துப்பார்த்தவள் பெருமூச்சுவிட்டு, “உங்களுக்கு எவ்வளவு வேணுமோ அதை எடுத்துக்கிட்டு மீதத்தை பூஜை ரூமில் சாமி படத்துக்கு பின்னாடி வைச்சிடுங்க அக்கா.” என்க, சந்தோஷமாக தலையாட்டிச் சென்றார் அவர்.
உடலிலும், மனதிலும் இருக்கும் தெம்பு முழுவதும் வற்றிப்போனவளாக அப்படியே தொப்பென்று அமர்ந்தாள் அமிர்தா. இருபத்தியேழு வயதில் இத்தனை இடர்களை சந்திக்கவா தாயின் கர்ப்பத்தில் கலையாமல் பிறந்து தொலைத்தோம் என்று வருத்தமாக எண்ணியவள், எண்ணத்தின் பலனாய் தாயை நினைவு கூர்ந்ததும் ஒருவித வெறியே வந்தது அவளுள்.
“வாழத் தெரியாம, நாலு பேரோட வாய்க்கு பயந்து வாழ்க்கையை முடிச்சுக்கிட்ட உங்களை மாதிரி நான் என்னைக்கும் பண்ண மாட்டேன்.” என்று சுவற்றில் படமாகத் தொங்கிக்கொண்டிருந்த தாய், தந்தையின் புகைப்படத்தைப் பார்த்து வெறியோடு நினைத்துக்கொண்டாள்.
error: Content is protected !!