Skip to content
Post Views: 2,339

உனதன்பில் சரணாகிறேன்
பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பிச்சென்ற பின்னரும் கூட மித்யுகா இரவு அமர்ந்திருந்த இருக்கையிலே கால்களைக் கட்டிக்கொண்டு தலையை பின் சாய்த்தவளாக கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
Advertisement
பள்ளி செல்லும் முன்பு, பிள்ளைகள் சென்று வருவதாக சொல்லியதற்கும் அவளிடம் பிரதிபலிப்பு இல்லை.
அவளுக்கு ம்ருதவ் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கடுத்து என்னவென்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவளை நிறுத்தி வைத்திருக்கிறார் செண்பகம்.
ம்ருதவ் பற்றி தெரிந்துக்கொள்ள அவளுக்கிருக்கும் ஒரே வழி ரதி, கமலேஷ் தான். ரதியின் கோபத்தை சமாளிக்க முடியாதென்று எண்ணியே கமலேஷிற்கு அழைத்தாள்.
Advertisement
ஆனால் ஏதோ படபடப்பில் பேசாமல் வைத்துவிட்டவளுக்கு, இரவு முழுவதும் ம்ருதவ்வின் நினைவலைகள் தான்.
Advertisement
தீர்க்கமான முடிவெடுத்தவளாக அமர்ந்திருந்த மித்யுகா, செண்பகத்தின் குரலில் தான் கலைந்தாள்.
“வேலைக்கு போகலையா மித்யு?” என்று அறைக்குள் வந்த செண்பகம், “பசங்களும் ஸ்கூல் போயாச்சு. இன்னும் ஏன் இப்படி உட்கார்ந்திருக்க” என அருகில் வந்தார்.
மூடியிருந்த விழிகளை மித்யு திறந்திட… விழிகளின் ஓரம் வழிந்த நீரினைக் கண்டு பதறியவராக செண்பகம்,
Advertisement
“அம்மாடி” என்று அவளின் கண்ணீர் துடைக்க, அவரின் வயிற்றில் முகம் புதைத்தவள் பெருங்குரலெடுத்து கதறி அழுதாள்.
முடியாத நேரத்திலும் இப்படியொரு கதறலை மித்யுகா வெளிப்படுத்தியதில்லை. ஆனால் இந்த இரு தினங்களில் அவளையும் அறியாது கண்ணீரில் மூழ்கிப்போகும் மகளின் மனம் புரியாது குழம்பினார்.
“நெஞ்செல்லாம் பதறுது மித்யு. என்னன்னு சொல்லேன்” என வயிற்றில் புதைந்த மகளின் தலையை அழுத்திக் கொடுத்தவருக்கும் அவளின் அழுகை கண்ணீரை வர வைத்தது.
“அவங்க வேணும்மா. இத்தனை வருஷமா எனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்னு யோசிச்சது இல்லை. ஆனால் இப்போ உன்னால, நீ கல்யாணப் பேச்சை எடுத்ததால வேணும் நினைக்கும் போது, அவங்க இடத்துல யாரையும் வச்சுப் பார்க்க முடியலம்மா. நெஞ்செல்லாம் அடைக்குதும்மா. அவங்க வேணும்மா. வேணாம் சொல்லிட்டு வந்தேன். இப்போ வேணும் ஏங்குறேன். எனக்கு கிடைப்பாங்களாம்மா. அவங்க என்னைத் தாண்டிப் போயிருந்தா? போயிருப்பாங்களாம்மா?” என்று அரட்டலோடு உள்ளத்து ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தாள்.
செண்பகத்திற்கு என்ன சொல்லி மகளைத் தேற்றுவதென்று தெரியவில்லை.
“நான் தான் லவ் பண்ணேன். லவ் பண்ண வச்சேன். ஆனா அதிகம் லவ் பண்ணது அவங்கதான். அவ்ளோ சீக்கிரம் என்னை மறந்திருக்கமாட்டாங்கதானம்மா. இப்பவும் எனக்காக வெயிட் பண்ணலாம்ல?” எனக் கேட்டவள், “மறக்கலன்னாலும் வெறுத்திருப்பாங்க. உயிரோட கொன்னுட்டு வந்துட்டேன். அவங்க என்னை மன்னிக்கவேமாட்டாங்க” என்றாள்.
“ரெண்டு குழந்தைக்கு அம்மாம்மா நானு. எனக்கு இப்போ ஏன் இந்த எண்ணம்?” என்றவள், “அவங்க எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சா போதும்மா. திரும்ப என்னால ஒரு வலி அவங்களுக்கு வேணாம். நான் கொடுத்ததே அவங்களுக்கு பெரிய வலிதான்” என அழுதாள்.
“அழாத மித்யு! என்ன சொல்லி உன்னை ஆறுதல் படுத்தனும் கூட எனக்குத் தெரியல” என்ற செண்பகம், மித்யுகாவின் கண்ணீரைத் துடைத்து மடி தாங்கினார்.
“இன்னைக்கு அவங்க சித்தப்பா இறந்தநாள்” என்றவள், “அவங்க நல்லாயிருப்பாங்கதானம்மா… அது தெரிஞ்சா போதும். எனக்குள்ள இருக்க குற்றவுணர்வு கொஞ்சமாவது குறையும்” என்றதோடு, செண்பகத்தின் முன்னிலையில் கமலேஷின் எண்ணிற்கு அழைத்திருந்தாள்.
அப்போதுதான் ம்ருதவ் ஏற்றிருந்தான்.
யாருக்காக அழுது கரைந்தாளோ அவனின் குரலை எதிர்கொள்ள முடியாது வேகமாகத் துண்டித்திருந்தாள்.
ஒற்றை ஓசைக்கே இவ்வளவு தயக்கங்கள் என்றால், இனியொரு முறை அவனின் முகம் பார்த்து, அதிலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் உன்மீது தான் எனக்கு காதலென அவளால் சொல்லிட முடியுமா?
“என் லவ் எனக்கு கிடைக்கவே கிடைக்காதாம்மா” என்றவள், “அவங்களைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதும்மா. நீ வர சொன்னவங்களை வரவேணாம் சொல்லிடு” என்றாள்.
“அதெப்படி மித்யு?” என்ற செண்பகம், “இந்த சம்மந்தம் வேணாம் நினைச்சா, நீ விரும்பின பையனையே விசாரிச்சு பேசுவோம்” என்றார்.
“ம்ஹூம்… அவங்க எனக்காக வெயிட் பண்ணிட்டே இருந்தாலும் வேணாம்மா. அவங்க காதலிச்ச அதே யுகா நான் இல்லையே!” என்றவள், “எனக்கு கல்யாணமே வேணாம்மா” என்றிருந்தாள்.
இப்படியே விட்டால் அவளும் குழம்பி, தன்னையும் குழப்பி ஒரு முடிவெடுக்க விடமாட்டாளென நினைத்த செண்பகம்,
“நீ சொன்ன அத்தனை கண்டிஷனுக்கும் ஓகே சொல்லியாச்சு. இன்னும் என்ன உனக்கு?” என்றதோடு, “அவங்க வர்றாங்க. நீ ஓகே சொல்ற. அவ்ளோதான்” என்று எழுந்து சென்றுவிட்டார்.
“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளும்மா!”
“நான் சொல்றதை நீ கேளு.” குரல் மட்டும் கொடுத்தார்.
“நீங்க சொன்னதெல்லாம் கேட்டதாலதான் எனக்கு இந்த நிலைமை.”
“இந்த ஒருவாட்டியும் கேளு. எனக்கென்னவோ இந்தமுறை நீ சந்தோஷமா இருப்பன்னு தோணுது” என்றார்.
“அட போம்மா” என்று சலித்தவள், “சந்தோஷத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரமாகியாச்சு. எல்லாம் அவங்களோடவே போயிடுச்சு” என்று அறையைவிட்டு வெளியில் வந்தாள்.
“எதுக்கு தேவையில்லாம மனசைப்போட்டு குழப்பிக்கிட்டு இருக்க மித்யு” என சமையலறையிலிருந்து வந்த செண்பகம், மித்யுகாவிடம் தேநீரை நீட்டினார்.
“இதை குடி. தெம்பு வரும்” என அவளருகில் அமர்ந்தார்.
“உனக்கு அந்த தம்பி வேணும்னு நினைக்கிற நேரம், இப்படியொரு நிலையில அவங்க வாழ்க்கைக்குள்ள போயி அவங்க வாழ்க்கையை வீணாக்குனுமா நினைக்கிற? ஒருவேளை அவங்க வேற வாழ்க்கைக்குள்ள போயிருந்தா என்னன்னும் யோசிக்கிற சரியா?” எனக் கேட்டார்.
“ம்ம்…”
“எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிடு மித்யு. புதுசா ஒரு வாழ்க்கை. உன் பசங்களுக்காகன்னு நினைச்சு ஏத்துக்க. கல்யாணம் பண்ணிக்க. அதுக்கு அப்புறம் அந்த வாழ்க்கையே உன் கை பிடிச்சு உன்னை வாழ கூட்டிட்டுப்போகும்” என்ற செண்பகம், “திரும்பத்திரும்ப உன்கிட்ட கெஞ்ச வைக்காத மித்யு. நான் உனக்கு கல்யாணம் பண்ணனும் முடிவு பண்ணிட்டேன். மாப்ள வீட்டிலிருந்தும் வர்றாங்க. உன் நினைப்புத் தெரியாமலும் இல்லை. என்கிட்ட பேசி ஒத்துவரலன்னு வரச்சொல்லி அந்தப் பையன்கிட்டவே பேசி வேணாம் சொல்ல வச்சிடலாம்னு நினைச்சிட்டு இருக்க எண்ணத்தை மாத்திக்க. சீக்கிரமே வர முதல் முகூர்த்தத்துல உனக்கு கல்யாணம். தயாராகிக்கோ. உன் மனசையும் தயார்ப்படுத்திக்க” என்றார்.
“கல்யாணமெல்லாம் வேணாம். அவங்க நினைப்புலே வாழ்ந்திடுறேன்.”
“அதெப்படி சரி வரும் மித்யு? நினைப்புல வாழ, அந்த தம்பி இப்போ எப்படி இருக்குன்னு ஏன் தெரிஞ்சிக்க நினைக்கிற. உன்னைப் பொறுத்தவரை அந்த தம்பிக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சு சந்தோஷமா வாழுது தான. அது அப்படியே இருக்கட்டும். அந்த தம்பி நல்லாயில்லன்னு தெரிஞ்சா, என்ன பண்ணுவ? ஏத்துக்கப் போறியா… சொல்லு” எனக் கேட்டார்.
“பிள்ளைகளுக்காக யோசிச்சதும் போதும்” என்றார்.
“அம்மா நான் சொல்றதை கேளும்மா. பிளீஸ்.”
“சரி கேட்கிறேன். நீ விரும்பின தம்பியையாவது கட்டிக்கிறேன் சொல்லு கேட்கிறேன்.”
“நான் தான் வேணாம்னு சொல்லிட்டு வந்தேன். அதெப்படிம்மா முடியும்?”
“அப்போ நான் சொல்றதை கேளு. அவ்ளோதான். சும்மா உன்கிட்ட விவாதம் பண்ண எனக்கு நேரமில்லை. வீட்டு வேலையெல்லாம் கிடக்கு” என்று சென்றுவிட்டார்.
மித்யுகாவின் மனம் மீண்டும் மீண்டும் ம்ருதவ்விடமே சென்று தஞ்சம் கொண்டது.
மனம் அவனை மட்டுமே வேண்டுமென்று நினைத்திட, வேண்டாமென்பதே அவளது பதிலாகவும் இருக்கிறது.
“இந்த காதல் இவ்ளோ படுத்தும் தெரியாமப் போச்சே” என்று தலையை இரு கைகளாலும் தாங்கியவளாக கண்கள் மூடினாள்.
காதலிக்க ஆரம்பித்தது மித்யுகாவாக இருக்கலாம்… அவர்களின் காதல் நொடிக்கு நொடி வளர்ந்தது என்னவோ ம்ருதவ்வால் தான்.
மித்யுகா அதிரடியாக காதலை காட்டிட, ம்ருதவ் நிதானமான தன்னுடைய செயல்களில் காட்டி அவளை பிரம்மிக்க வைத்தான்.
ரதி மற்றும் கமலேஷ் கூட,
“உனக்கு இந்த முகம் ரொம்ப நல்லாயிருக்குடா! ஆனா உனக்குள்ளவும் ஒரு காதல் மன்னன் இருக்காங்கிறதுதான்டா எங்களுக்கு ஆச்சரியமா இருக்கு” என்று ம்ருதவ்வை கலாய்க்கும் அளவுக்கு அவனது காதல் இருந்தது.
“காதல் இல்லன்னு சொல்லிட்டு இப்படி காதலிக்கிறியே மச்சான்” என்று அலைபேசியிலிருந்த மித்யுகாவின் புகைப்படத்தில் ஒவ்வொரு ஜிமிக்கியாக வைத்துப் பார்த்து தேர்வு செய்து கொண்டிருந்த ம்ருதவ்விடம் கேட்டிருந்தான் கமலேஷ்.
இறுதி வருடம் இரண்டாம் பருவம், கல்லூரி படிப்பு முடியவிருக்கிறது என்பதால் இறுதி வருட மாணவர்கள் சுற்றுலாவிற்காக கேரளா வந்திருக்க, அங்கு வந்தும் ம்ருதவ் செய்த காதல் அலைப்பறையில் கமலேஷ் கடியாகியிருந்தான்.
“அவனை மாதிரி உனக்கு லவ் பண்ணத் தெரியலன்னு எதுக்கு பொங்குற” என்று ரதி தான் கமலேஷினை வாய் மூடச் செய்திருந்தாள்.
“போலாம் வாங்க.” கிட்டத்தட்ட ஒரு ஜிமிக்கியை ஒரு மணிநேரம் கழித்து தேர்ந்தெடுத்திருந்தான்.
“முடிஞ்சுதாடா?” என்று தூக்கத்திலிருந்து விழிப்பவன் போல கமலேஷ் வேகமாக எழுந்திட,
“ஹ்ம்ம்” என்று தான் தேர்வு செய்த ஜிமிக்கியை அவர்களிடம் காட்டினான்.
“ஒத்த ஜிமிக்கிக்கா இவ்வளவு நேரம்” என்ற கமலேஷ், “இந்த நாலு மாசத்துல இது மாதிரி நாலாயிரம் தோடு வாங்கிக் கொடுத்துட்டடா. உனக்கு வாங்கிக்கொடுக்க வேறெதுவும் தோணாதாடா” என்றான்.
ம்ருதவ் சிரித்தானே தவிர பதில் வழங்கவில்லை.
“கொஞ்சம் கம்மியா லவ் பண்ணுடா. முடியல” என்ற கமலேஷ், “இவன் லவ் முன்னாடி நான் உன்னை கம்மியா லவ் பண்றேன்னு எதுவும் ஃபீல் ஆகுதா ரதிம்மா?” என ரதியிடம் கேட்டான். வாய்க்குள் புதைத்த சிரிப்போடு.
“நம்ம லவ் வேற. அவன் லவ் வேற. கம்பேர் பண்ணி ஃபீல் பண்ண இதுல ஒன்னுமே இல்ல” என்ற ரதி, “நாலு மாசத்துக்கு முன்னாடி இருந்த சிவாவுக்கு, இந்த சிவா க்யூட்” என்றாள்.
“மொத்தமா மாத்திட்டா ரதி” என்று பின் கேசத்தை வருடிய ம்ருதவ், கீழ் அதரத்தை கடித்து விடுவிக்க, அவனின் மாற்றத்துக்கு காரணமானவளே அவனுக்கு அழைத்திருந்தாள்.
“ஹாய் ம்ருது…” மித்யுகாவின் உற்சாகக் குரலில் அத்தனை காதல் வெளிப்படும்.
நண்பர்களிடமிருந்து சில அடிகள் தள்ளிச்சென்ற ம்ருதவ்,
“மேடம் என்ன பண்றீங்க?” எனக் கேட்டான்.
“எப்போ வருவீங்க? மூணு நாளா ரொம்ப ட்ரையா போகுது காலேஜ்” என்றாள்.
“நைட் ட்ரெயின். மார்னிங் அங்க ரீச் ஆகிடுவோம்” என்ற ம்ருதவ், “ரொம்ப தேடுது யுகா” என்றான்.
“இப்போ நான் கால் பண்ணி தப்பு பண்ணிட்டனோ!”
“போடி” என்றவன், “மூணு நாளுக்கே உன்னை பார்க்காம… நீயில்லாம மூச்சடைக்கிற மாதிரி இருக்கு யுகா. இதுல இன்னும் மூணு மாசத்துல காலேஜ் முடிஞ்சிட்டா என்ன பண்றது தெரியல” என்றான்.
“அதெல்லாம் அந்தந்த நேரம் வந்தால் சமாளிக்க பழகிடுவோம்” என்று அவள் சாதரணமாக சொல்லிட, அவனுக்கு அது அத்தனை எளிதல்ல என்றே தோன்றியது.
உறவுகளற்ற ஒருவனுக்கு ஒருத்தி உலகமாகியிருக்க, அவளின்றி அவனது வாழ்வெப்படி இயங்கிடும்.
சுற்றுலா மூன்று நாள் என்றதற்கே,
“மூணு நாளெல்லாம் யுகாவை பார்க்காம முடியாது ரதி. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க” என்று வரமுடியாதென அத்தனை அடமாக இருந்தவனை, “இதை இப்போ மட்டும் தான் அனுபவிக்க முடியும். போயிட்டு வாங்க ம்ருதவ். நாமளும் பிரிவை சமாளிக்க கத்துக்கணுமே” என்று மித்யுகா எவ்வளவோ பேசியும் ஒத்துக்கொள்ளாதவனிடம், சில மணி நேரங்கள் பேசாமலிருந்து சரியென சொல்ல வைத்திருந்தாள்.
“எல்லாம் உனக்கு ஈசி தான்” என்ற
ம்ருதவ், “முகம் பார்க்கலான்னா, வீடியோ கால் அட்டென்ட் பண்ண மாட்டேங்கிற” என்றான்.
“எதுக்கு? பாதியிலே கிளம்பி வரவா?” என்றவள், “அங்க போயும் என்னோடதான் எப்பவும் பேசிட்டு இருக்கீங்க. இதுல நான்ஸ்டாப் சேட் வேற. அங்க நீங்க போனது ஃபிரெண்ட்ஸ் கூட என்ஞ்சாய் பண்ண” என்றாள்.
“அதெல்லாம் என்ஞ்சாய் பண்ணத்தான் செய்யுறேன். ஆனாலும் நீயில்லாம இன்கம்ப்ளீட் ஃபீல் யுகா” என்று காதலில் தகிப்பவனின் தவிப்புகளெல்லாம் அவளின் ஏக்கங்களைக் கூட்டியது.
முதல் பிரிவு. அவளுக்குமே அவனின்றி நாட்கள் நகர்வேனா என போக்குக்காட்டியது. அதனை அவனிடம் வெளிப்படையாகக் கூறினால், தனது ஏக்கம் அவனையும் வாட்டுமென்று தனக்குள் மறைத்துக்கொண்டாள்.
“நீ என்னை மிஸ் பண்ணலையா யுகா?”
“இல்லையே!” சொல்லும் போதே அவளின் அடங்கிய ஒலி, அவள் மறைக்கும் உணர்வை அவனுக்கு கடத்தியிருந்தது.
“நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என அவளைப்போல் மறைக்காது வெளிப்படையாக சொல்லியிருந்தான்.
உணர்வுகளை வெளிக்காட்டப் பழகியிராதவன், தனக்கே தனக்கென்று தனக்கு மட்டுமே ஓர் உயிரென மித்யுகாவை மனதில் பொத்தி வைத்திருப்பதால், அவளிடம் தனது நுண்ணுணர்வுகளையும் மறைக்காது வெளிப்படுத்த பழகியிருந்தான். காதலிக்கத் துவங்கிய நாட்களிலிருந்து அனைத்திலும் அவன் அவளிடம் திறந்த புத்தகம் தான்.
ம்ருதவின் அடங்கா நேசத்தை தனக்குள் வாரி சுருட்டிக்கொள்பவள், அவனுக்கும் சேர்த்து நேச உணர்வுகளை தன்னகத்தே பத்திரப்படுத்தி வைத்தாள்.
“நாளைக்கு காலேஜ் வேற லீவ். வார்டன் அவுட்டிங்க்கு அலோவ் பண்ணியிருக்காங்களா?” எனக் கேட்டான்.
“அதை நாளைக்கு பார்ப்போம். இப்போ அங்க கவனத்தை வைங்க. நான் வைக்கிறேன்” என்றவள், “மிஸ் யூ ம்ருது” என்றிருந்தாள்.
“கொன்னுடுவேன்… போடி” என்றிருந்தான்.
“லவ் யூ…”
“ஹேட் யூ… டூ த கோர்.” ம்ருதவ்வின் அதிகபட்ச காதலின் வெளிப்பாடு, காதலின் எல்லை தாண்டிய வார்த்தையாக ‘ஹேட் யூ’ என்றுதான் வெளிப்படும்.
ம்ருதவ் ஹேட் யூ சொல்லிவிட்டாள் மித்யுகா முழுதாக அவன் வசமாகிடுவாள் உள்ளத்தால்.
“டேய் எப்பா பேசுனது போதும்டா… எல்லாரும் மூவ் ஆகுறாங்க. வாடா” என்று கமலேஷ் கத்தி அழைப்பது பின்னணியில் அவளுக்கும் கேட்க,
“வெயிட் பண்றேன் ம்ருது” என கலங்கிவிட்ட குரலை அவன் முழுதாய் உள்வாங்கிடும் முன்பு இணைப்பைத் துண்டித்திருந்தாள்.
“படுத்துறா… ராட்சசி” என்று முணுமுணுத்த ம்ருதவ், அவளின் மனநிலையை மாற்றுவதற்காக, தன்னை தான் நிற்கும் இடத்திலிருந்து சுயமி எடுத்து அனுப்பியிருந்தான்.
“ஃபோட்டோ வேண்டாம்.” அடுத்த கணம் தகவல் வந்தது.
நீதான் வேண்டுமென்ற மறை பொருளை உணர்ந்தவனின் அகம் அவளுக்காக அக்கணம் அதிகமாக ஏங்கியது.
“நாளைக்கு நேர்ல போய் லவ் பண்ணிக்கடா” என்று ரதியே அவனது காதல் அட்டகாசம் தாங்காது கிண்டல் செய்திடவே தன்னை கொஞ்சம் இயல்பாக்கியிருந்தான் ம்ருதவ்.
காலை ஏழு மணிக்கு திருச்சி வர வேண்டிய தொடர்வண்டி, இடையில் நகரத்திற்கு முன்பாக இரண்டு இடங்களில் விழுந்த சிக்னலினால் உண்டான தாமதத்தால் ஒன்பதை நெருங்கி தான் வந்து சேர்ந்தது.
அன்று ஞாயிறு மற்றும் கல்லூரிக்கு வர வேண்டியதுமில்லை என்பதால் ரயில் நிலையத்திலிருந்தே மாணவர்கள் தத்தம் வீடுகளுக்கு சென்றிருந்தனர்.
“நீயெப்படிடா?” ம்ருதவ் கேட்க,
“ரதியை ரூம்ல விட்டுட்டு நான் போகணும். இன்னைக்கு முழுக்க ரெஸ்ட் தான்” என்றான் கமலேஷ்.
“நீயும் வாடா சேர்ந்து போகலாம். உன் வீடு தாண்டிதான நாங்க போகணும்” என்றாள் ரதி.
“இல்ல ரதி, காலேஜ் போயிட்டு யுகாவை பார்த்திட்டு வீட்டுக்குப் போகணும்” என்றான் ம்ருதவ்வை முறைத்த கமலேஷ்,
“உன் முகத்தைப் பார்த்தியா… இப்படியே போய் கேர்ள்ஸ் ஹாஸ்டல் முன்னாடி நிக்கப்போறியா?” எனக் கேட்டான்.
“ஆமா சிவா… வீட்டுக்குப் போயிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு, பிரஷ்ஷா போய் பாரு. இப்படியே தூங்கு மூஞ்சியோட போய் நின்னா வாட்ச்மேன் உன்னை காலேஜ் உள்ளவே விடமாட்டார்” என்று ரதி தான் வம்பாக அவனை பிடித்து ஆட்டோவிற்குள் தள்ள, வீடு வந்து சேர்ந்தார்கள்.
“தூங்குடா… ரெண்டு மணி நேரத்துல சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்” என்று கமலேஷ் சொல்லிட, பதில் சொல்லாது தலையை மட்டும் அசைத்தான் ம்ருதவ்.
“முகத்தை இப்படி வைக்காதடா. அதான் மதியம் பார்க்கப்போறியே! அப்புறம் என்ன? ரொம்பத்தாண்டா ஓவரா போற” என்றான் கமலேஷ்.
“அவனை ஏண்டா கடுப்படிக்கிற” என்று கமலேஷின் முதுகில் அடித்த ரதி, “குளிச்சிட்டாவது போய் பாரு சிவா. நைட்டெல்லாம் பசங்க பண்ண கலாட்டாவுல ட்ரெயின்ல சரியா தூங்காம முகமே என்னவோ மாதிரியிருக்கு” என்றாள்.
“ஹ்ம்ம்…”
“ஓகேடா… பை” என்று இருவரும் சென்றிட, சடுதியில் கதவினை திறந்து வீட்டிற்குள் நுழைந்த ம்ருதவ், பையினை நீள்விருக்கையில் கிடத்தியவனாக அத்தனை வேகமாக குளித்து கண்ணாடி முன்பு நின்றிருந்தான்.
கைகளால் முடியை கலைத்து கோதி சரி செய்தவன், எடுத்து வந்த பையிலிருந்து வண்டி சாவியை எடுத்தவனாக கதவருகே வர, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
தன்னைத் தேடி வீடு வரும் நண்பர்களும் சிறிது நேரத்திற்கு முன்புதான் இங்கிருந்து சென்றிருக்க, இப்போது யாரென்ற யோசனையோடு கதவை திறந்தவனின் விழிகளில் குளிர்வாய் குடிப்புகுந்திருந்தாள் ம்ருதவ்வின் மித்யுகா.
‘பித்துநிலை கடந்து,
இன்னும் இன்னுமாய்…
உன்னில் காதல் கொள்கிறேன்,
உனதன்பில் சரணாகிறேன்!’
error: Content is protected !!