Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 9

     அம்மா கல்யாணி, நடமாட்டம் இல்லாமல் படுக்கையில் இருந்தாலும் வீட்டின் ஒற்றை ஆணாக இருந்த அப்பா, அன்பான அக்கா நீலாம்பரி என அழகான குடும்பம் அமிர்தாவுக்கு.

     தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது அவள் மிகவும் சிறியவள் என்பதால் அந்த நேர குடும்ப கஷ்டங்கள் எதுவும் தெரியாது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தந்தை படுக்கையில் தான் என்பதால் அது பெரிதாக அவளைப் பாதிக்கவில்லை. பாதிக்க அவளின் அம்மாவும், அக்காவும் விடவில்லை என்றும் சொல்லலாம்.

     எந்த விதக் கவலையும் இல்லாமல் வண்ணத்துப்பூச்சி போல் சந்தோஷமாக சுற்றி வருபவள், கவலைகள் அறியாதவள் என்பதால் அமிர்தாவுக்குள் இயல்பாகவே குறும்புத்தனம் அதிகம் உண்டு. நீலாம்பரி அப்படியே எதிர்மறை. அமிர்தாவை விட நான்கு வயது மூத்தவள். தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தாய் பட்ட கஷ்டங்களை அருகே இருந்து பார்த்தவள் என்பதால் அதிக சமத்து. எந்த விதத்திலும் தாயைத் தொந்தரவு செய்யக்கூடாது என்கிற ஒன்றை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்தவள் என்பதால் தேவைக்கு கூட பேசாத மடந்தை. அவளுக்கும் சேர்த்து அமிர்தா தான் அந்த வீட்டில் பேசுவாள்.



Advertisement

     பெயருக்கு ஒரு டிகிரி முடித்துவிட்டு அம்மாவுக்கு துணையாக சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் பியூட்டிஷியன் கோர்ஸ் முடித்து ஓரளவு நல்ல சம்பளத்துடன் வேலையில் அமர்ந்தாள் நீலாம்பரி. அவள் சுபாவத்திற்கு அந்த வேலை நன்றாகவே ஒத்துப்போனது.

     அந்த நேரத்தில் அமிர்தா பள்ளிப் படிப்பை முடித்து அப்போது தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்த தேன்சிட்டு. அவள் சேர்ந்த அதே கல்லூரியில் முதுகலை முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தான் சாருகேசி.

     இளங்கலை முதல் வருட மாணவியாக இருந்துகொண்டு ஆசிரியர்களுக்குப் பயப்படாமல், வருகைப்பதிவேட்டைப் பற்றி கவலைப்படாமல் வகுப்பை கட் அடித்துவிட்டு தனியாளாக கல்லூரியை வட்டமடிப்பது, சீனியர், ஜுனியர் வித்தியாசம் இல்லாமல் அனைவரிடமும் நட்பு பாராட்டுவது, படிப்பைத் தவிர மற்ற திறமைகளில் அதிக கவனம் செலுத்துவது என அவளுடைய வீர தீர சாகசங்கள்  ஆசிரியர்களைத் தவிர மெதுமெதுவாக மாணவர்கள் அனைவரிடமும் பரவ, கேசிக்கும் அப்படித்தான் அவளைப் பற்றி தெரியவந்தது. யாரோ ஒரு குறும்புக்காரப் பெண் என்று அந்த தகவலை அப்படியே கடந்திருந்தான். ஆனால் விதி அவர்களை ஒன்றிணைக்க காலம் பார்த்தது போலும்.

Advertisement

     சகோதரனின் மருத்துவப் பரிசோதனைக்காக அடுத்த நாள் விடுமுறை வேண்டி பிரின்சிபலை சந்திக்க வந்த இடத்தில், அவர் அமிர்தாவை பயங்கரமாக திட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு அப்படியே நின்றுவிட்டான் கேசி. இவனைக் கவனித்துவிட்ட பிரின்சிபல் எந்த விதத் தயக்கமும் காட்டாமல் அவனை அறைக்குள் அழைத்து நிற்க வைத்துவிட்டு, அவன் கண் முன்னாலே அமிர்தாவை திட்டத்துவங்க அசூசையாகிப் போனது கேசிக்கு.

Advertisement

     பெண்கள் இம்மாதிரியான விஷயங்களில் மிகவும் மென்மையானவர்கள் என்று கேள்விப்பட்டிருந்ததில் அவன் பாவமாக அவள் முகத்தைப் பார்க்க, அவளோ பிரின்சிபல் பார்க்கும் போது நல்ல பிள்ளை போல் தலையைக் குனிந்து கொள்வதும் அவர் அந்தப்பக்கம் திரும்பியதும் குத்துச்சண்டை வீராங்கனையைப் போல் நின்று அவரைக் குத்துவது போலவும் செய்துகொண்டிருக்க பார்த்தவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை.

     ஒருகட்டத்தில் தன் வாய் வலிக்கத் துவங்கவும் அமிர்தாவை வெளியே அனுப்பி வைத்தார் பிரின்சிபல். கேசியும் தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியே வர, கேன்டீனில் சூடாக டீ குடித்துக்கொண்டிருந்தாள் அமிர்தா. என்னவோ பார்த்ததும் அவளிடம் பேச வேண்டும் போலத் தோன்ற, அருகே சென்றவன், “நீ எப்பவும் இப்படித்தான் வாலுத்தனம் பண்ணிக்கிட்டு இருப்பியா?” என்க, சுற்றி முற்றி பார்த்தவள் அவன் அருகே வந்து, “யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க. எல்லாரும் என்னை ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சக்கிட்டு இருக்காங்க.” என்க, சத்தமாய் சிரித்துவிட்டான் கேசி.

     அவன் இப்படி சிரிப்பான் என எதிர்பாராத அமிர்தாவுக்கு முதல் முறையாக சற்றே சங்கடம் உருவானது. சுற்றி இருந்த அனைவரும் தங்களை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே செல்வதை உணர்ந்து அவள் விலகிச் செல்லப்பார்க்க, “பாப்பா காசு இன்னும் கொடுக்கலையே.” கேன்டீன் உரிமையாளர் அவசரப்பட்டார்.

Advertisement

     “சொதப்புற அமிர்தா.” என தன்னைத் தானே திட்டிக்கொண்டு அமிர்தா திரும்ப, “நான் கொடுக்கிறேன் நீ போ.” என்றான் கேசி.

     “எனக்கு எதுக்கு நீங்க பணம் கொடுக்கணும். என்ன இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றீங்களா? ரொம்பக் கஷ்டம் பாஸ். ஏற்கனவே ஏழு பேர் லைனில் இருக்காங்க. நீங்கஎட்டாவது ஆள்.” அவள் மிகவும் சீரியஸாக சொல்ல, மீண்டும் ஒருமுறை கலகலத்து சிரித்தவன்,

     “நான் ரொம்பக் கவலையில் இருந்தேன். அது எல்லாத்தையும் நிமிஷத்தில் போக்கிட்ட. அதுக்கான சின்ன ட்ரீட். மத்தபடி உனக்காக வரிசையில் எட்டாவது ஆளா நிற்கும் எண்ணம் எனக்கு இல்ல.” சிரிப்போடு சொன்னான்.

     அவன் அருகே நெருங்கி, “ஒரு ரகசியம் சொல்லவா? எனக்கு அல்ரெடி ஆள் இருக்கு. அது புரியாம அந்த ஏழு பேரும் நான் யாருக்கு ஓகே சொல்லுவேன்னு என் மூஞ்சை மூஞ்சை பார்த்துக்கிட்டு இருக்காங்க.” சிரிப்போடு சொல்லிவிட்டு நகர்ந்தாள் அமிர்தா. அடிப்பாவி என சிரித்தபடி கடந்தான் கேசி. அவள் சொன்ன அந்த ஏழு நபர்களில் தன் நண்பனும் ஒருவன் என்பதில் சிரிப்பு இன்னமும் தான் அதிகமானது கேசிக்கு.

     அந்த நாளில் அமிர்தா பரிசளித்த மகிழ்ச்சி அன்றைய இரவு வரை நீடித்து இருந்தது கேசியிடம். சாப்பிடும் போது தம்பி எதையோ நினைத்து அடிக்கடி சிரிப்பதை வித்தியாசமாகப் பார்த்த மோகனன் தம்பியை பார்க்க, “காலேஜ் ல ஒரு பொண்ணு, செம சேட்டைண்ணா.” என்றவன் அவள் செய்ததை எல்லாம் சொல்ல, மோகனன் உதட்டிலும் புன்முருவல்.

     அடுத்தடுத்த நாட்களில் எதேச்சையாக சந்திக்கும் போது சின்ன சிரிப்புகள், கல்லூரி வாசலில் வைத்துப் பார்த்தால் சென்று வருவதாக சின்ன தலையாட்டல் என வளர்ந்தது இருவரின் பழக்கம்.

     மற்ற ஆண்களைப் போல் பார்த்ததும் பெயர், சில நாட்களில் செல்போன் எண் என வேகம் பிடிக்காமல் மிக கண்ணியமாக நடந்துகொண்ட கேசியின் பாங்கு அமிர்தாவுக்கு கொஞ்சம் பிடித்தது.

     அன்று அமிர்தாவின் பிறந்தநாள். தோழிகளுக்கு ட்ரீட் வைக்கிறேன் என கெத்தாக அவர்களை ஹோட்டலிற்கு வரவழைத்திருந்தாள். கணிசமான பணத்தை நீலாவிடம் இருந்து வாங்கி வந்திருந்தாள் தான் என்றாலும் அவள் எதிர்பாரால் தோழிகள் மூவர் அவர்களின் தங்கைகளையும் அழைத்து வந்திருக்க, பார்க்கும் பொழுதே புரிந்தது கண்டிப்பாக பணப்பிரச்சனை வரும் என்று. அவள் நினைத்தது போலவே எழுநூறு ரூபாய் குறைவாய் இருக்க, சற்றே சங்கடப்பட்டாள் அமிர்தா.

     தோழிகளிடம் பணம் குறைவாக இருக்கிறது என்று சொன்னால் அவர்கள் கட்டாயம் உதவி செய்வார்கள் தான். ஆனால் அதற்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. என்ன செய்யலாம் என்கிற யோசனையில் இருந்தவளுக்கு ஏதோ ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த கேசி கண்ணில் பட, தெரிந்தவன் தானே அதுவும் கண்ணியவான் என்கிற நம்பிக்கையில் நேரே அவனிடம் வந்துவிட்டாள்.

     “ப்ளீஸ் ங்க, எடுத்தோம் கவிழ்த்தோம் னு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதெல்லாம் எப்பவோ நடந்தது. இப்ப எந்தப் பிரச்சனையும் இல்ல. கொஞ்சம் கூட பேசிப் பழகாமல் எடுத்ததும் வேண்டாம் னு சொன்னா எப்படி?” தனக்கு முன்னே நவநாகரிக முறையில் உடையில் பாந்தமாய் அமர்ந்திருந்த பெண்ணிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் கேசி. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கும் தொலைவு வந்துவிட்ட அமிர்தாவுக்கு இதற்கு மேல் அவர்களை எப்படி நெருங்குவது என்று சங்கடமாகிப் போக, திரும்பிச் செல்லப் பார்த்தாள். ஆனால் கேசிக்கு நேரே இருந்த பெண்ணின் அகங்காரப் பேச்சு அவளை கேசியை நோக்கி நகர வைத்திருந்தது.

     “இப்படியெல்லாம் கெஞ்சி இந்தக் கல்யாணம் நடக்கணுமா மிஸ்டர் சாருகேசி. என்கிட்ட என்ன குறைன்னு நான் உங்கவீட்டு மருமகளா வரணும் னு எதிர்பார்க்கிறீங்க. என்னால் முடியாது. உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி பொண்ணைப் பார்த்துக்கோங்க.” என்றுவிட்டு அவள் எழுந்து சென்றுவிட கேசியின் முகம் சுருங்கியது.

     அமிர்தாவுக்கு தான் வந்த காரியம் மறந்து போனது. தனக்கு நன்றாகத் தெரிந்த ஒருவன் வருத்தத்தில் இருக்கிறான் என்பதை மட்டுமே அந்தக்கணம் உணர்ந்தவள், “உங்க டேஸ்ட் ஏன் சீனியர் இப்படி மட்டமா இருக்கு. உங்க அழகு என்ன, ஸ்டைல் என்ன, சார்மிங் ஸ்மைல் என்ன, அந்த இறுக்கமான இஞ்சி மூஞ்சி எங்க. ஆமா அந்தப் பொண்ணுகிட்ட அப்படி என்ன இருக்குன்னு தகுதியைப் பத்தி பேசிட்டு போகுது. பார்வதி மாதிரி ஊசி முனையில் தவம் பண்ணாலும் அந்தப் பொண்ணுக்கு நீங்க கொஞ்சம் அதிகம் தான். அப்படி இருக்க  ரொம்பத் தான் பேசுது அந்தப் பொண்ணு. நீங்களும் கேட்டுட்டு இருக்கீங்க. ஆனாலும் பொண்ணுங்க விஷயத்தில் நீங்க கொஞ்சம் தத்தி தான்.” என்க, அவள் சொன்ன வார்த்தைகளிலும் சொன்ன விதத்திலும் அத்தனை நேரமாக அவனுள் இருந்த வருத்தம் காணாமல் போய் சின்ன சிரிப்பு வந்தது கேசியிடத்தில்.

     “சிரிச்சுட்டீங்களா? இப்ப தான் மூஞ்சு கொஞ்சமாச்சும் நல்லா இருக்கு.” என்றவளை ஆழ்ந்து பார்த்தான். அது என்னவோ கடந்த சில மாதங்களாக அவன் எப்போது அதிகமான கவலையில் மனச்சோர்வில் இருந்தாலும் தானாக அவ்விடம் வந்து தன்கலகலப்பான பேச்சில் அவனை சீராக்கிச் செல்வதை சரியாகச் செய்த அமிர்தா மேல் அன்பு வந்தது கேசிக்கு.

     அவள் காதைப் பிடித்து திருகியவன், “சேட்டை, எப்ப பார்த்தாலும் சேட்டை. ஆமா நீ இங்க என்ன பண்ற? இங்கேயும் தனியா சாப்பிட வந்தியா?” என்க, அதன்பிறகே தான் வந்த காரியம் நினைவு வந்தது அமிர்தாவுக்கு.

     அவனே சோகத்தில் இருக்கிறான் அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என சில கணங்கள் தயங்கினாலும் அதைத் தாண்டி வேறு வழி இல்லை என்பதால் தயங்கி தயங்கி விஷயத்தைச் சொல்ல, சற்றும் யோசிக்காமல் தன்னிடம் இருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தான் கேசி.

     “ஐயோ இவ்ளோ வேண்டாம்.” அமிர்தா பதற, “உன்னோட ப்ரண்ட்ஸ் வேற எதுவும் கேட்க மாட்டாங்களா என்ன? தேவைப்படும் வைச்சுக்கோ.” என்றான்.

     “நான் இதைக் கண்டிப்பா திரும்பக் கொடுத்திடுவேன்.” தயக்கமாய் சொல்ல, “கண்டிப்பா திரும்பக் கொடுத்திடு மா. என் அண்ணனுக்கு பதில் சொல்ல முடியாது.” என்று சொல்லி அவளை இளக்கமாக்கினான் கேசி.

     “ஒரு பொண்ணு இப்படி சொன்னா, பரவாயில்லை வேண்டாம் னு சொல்லணும். அது தான் ஆண்களுக்கு அழகு. இப்ப புரியுதா உங்களுக்கு ஏன் எந்தப்பொண்ணும் அமைய மாட்டுதுன்னு.” அமிர்தா கேட்க, சத்தமாய் சிரித்துவிட்டான் கேசி.

     “இப்படி சிரிச்சுக்கிட்டே இருங்க சீனியர் அப்ப தான் பார்க்க அழகா இருக்கீங்க.” என்றுவிட்டு தன் தோழிகளிடம் சென்றாள் அமிர்தா.

     அதன் பிறகே, அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை என்பதை உணர்ந்த கேசி இருந்த மனநிலைக்கு எந்த யோசனையும் செய்யாமல் அவள் இருந்த இடத்திற்குச் சென்று அவள் கை குலுக்கி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டுச் சென்றான். அமிர்தாவும் சந்தோஷமாகத் தான் அவன் வாழ்த்தைப் பெற்றுக்கொண்டாள். ஆனால் அவளைச் சுற்றி அதே கல்லூரியில் படிக்கும் அவளின் தோழிகள் இருப்பதை மறந்து போய் இருந்தாள். விளைவு ஒரே வாரத்தில் அமிர்தா, சாருகேசி இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்காமலே காதலர்களாக அந்த கல்லூரி வளாகம் முழுக்க பரப்பப்பட்டனர்.

     அமிர்தா தன்னிடம் கேட்கும் அனைவரிடமும் நேரடியாக மறுத்தாலும் கேசி அமைதியாக இருந்தான். விஷயம் கேள்விப்பட்டதும், “நிஜமாவா டா கேசி. இது உண்மையா இருந்தா நீ தான்டா இந்த உலகத்தோட பெரிய அதிர்ஷ்டசாலி. அமிர்தா ரொம்ப நல்ல பொண்ணு. அவ வீட்டு கஷ்டத்தை அவ வீட்டு ஆளுங்க உணரக்கூடாதுன்னு எப்பவும் தானும் கலகலப்பா இருந்து தன்னைச் சுத்தி இருக்கிறவங்களையும் கலகலப்பா வைச்சுப்பா. அவளுக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேண்ணா செய்வா. நீயும் அப்படித்தானே. அந்த வகையில் இரண்டு பேரும் நல்ல ஜோடி.” என்று நண்பன் ஒருவன் சொல்லிச் சென்றிருக்க, அது கொஞ்சம் பிடித்திருந்தது கேசிக்கு.

     அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் வளரத்துவங்க, அமிர்தா போகும் வரும் இடங்களில் எல்லாம் அவளையே உற்று நோக்க ஆரம்பித்தான். அவள் தன்னைக் கடந்து போகும் போது தன் நண்பர்கள் தன் பெயரைச்சொல்லி அவளைக் கிண்டல் செய்வதை வெட்கப்புன்னகையுடன் ரசித்தான். அவனுக்கு அந்த இனிமையான உணர்வுகள் அதிகம் பிடித்தது.

     அமிர்தாவோ, இருவரையும் இணைத்துப் பேச்சு வார்த்தை வந்த சில நாட்களிலேயே தன் தோழி ஒருவள் மூலம் அவனுக்கான பணம் மொத்தத்தையும் கொடுத்து கணக்கை முடித்துவிட்டு அவன் பக்கம் திரும்பாமலே இருந்தாள்.

     ஆனால் எங்கு சென்றாலும் அவன் உற்று கவனிப்பதும், தான் கண்டுவிட்டால் மந்தகாசமாகப் புன்னகைப்பதும் அவளைப் பாதித்தது. அதை விட அவளைச் சுற்றி இருக்கும் அவளுடைய தோழிகள் பட்டாளமும் ஏற்றி விட அமிர்தாவின் பார்வையும் கேசி மீது பட ஆரம்பித்தது.

     குற்றால சீசன்போல் அவ்வப்போது தன் மேல் விழும் அவளின் பார்வைகளை அத்தனை ரசித்தான் கேசி. சிறிதாக விழுந்திருந்த சலனம் அதிகமாக ஆரம்பிக்க, அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் ஒருநாள் தன் அண்ணனை  கல்லூரிக்கு வரவழைத்திருந்தான்.

     “என்னடா?” என்ற தமையனிடம், “அந்த மஞ்சள் கலர் சுடிதாரில் சூரியகாந்தி மாதிரி சிரிச்ச முகத்தோட ஒரு பொண்ணு வரா பாரு. அவ எப்படிண்ணா இருக்கா?” சற்றே தயக்கத்துடன் கேட்ட தம்பியை உற்று நோக்கினான் மோகனன். அவனுக்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது. கண்கள் ஆர்வமாகவும், அன்பாகவும் அமிர்தா மேல் படிந்தது.

தமையன் அமிர்தாவை பார்த்துக்கொண்டே இருப்பதைக் கண்டு, “எப்படி இருக்கா அண்ணா?” மெல்லிய குரலில் கேட்டான்.

     “எப்படி இருக்கான்னா என்ன அர்த்தம். மறுபடியும் பொண்ணு பார்க்கன்னு எதுவும் கிளம்பிட்டியா?” வேண்டுமென்றே சீண்டலாய் அவன் கேட்ட நொடி பலமாக அதிர்ந்தான் கேசி.

     “அண்ணா அவ உனக்கு பொண்ணு மாதிரி.” வேகமாகச் சொன்னவன் அதன் பிறகே அண்ணனின் முகத்தில் இருக்கும் சிரிப்பைக் கண்டு நாக்கைக் கடித்தான்.

     “என் தம்பிக்கு வெட்கம் எல்லாம் வருமோ. அதுவும் அந்த சின்னப் பொண்ணைப்பார்த்து.” என்க, “போ அண்ணா.” என்று இன்னமும் தான் வெட்கப்பட்டான்.

     “அந்தப் பொண்ணுக்கு சம்மதமா?” என்க, “இன்னும் அவகிட்ட பேசவே இல்லை. எனக்கு என்னவோ அவகிட்ட இதைப் பேசுறதுக்கு முன்னாடி உன்கிட்ட அவளைக் காட்ட தோணுச்சு.” என்ற தம்பியைப் பார்த்து பெருமையாகச் சிரித்தான்.

     அந்த நேரத்தில் அண்ணனானவனுக்கு தம்பியின் அந்த செயல் பெருமையைத் தான் கொடுத்தது. அந்த நிமிங்களிலே, காதலி, மனைவி என்கிற உறவோடு ஒருவள் உன் வாழ்க்கையில் உன்னை மட்டுமே நம்பி வந்துவிட்டால், அவளுக்கு பிறகு தான் வேறு யாராக இருந்தாலும் என்று அறிவுரை சொல்லி இருந்தால், பின்னால் நடக்க இருக்கும் பல அநர்த்தங்களைத் தவிர்த்து இருக்கலாமோ என்னவோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!