Skip to content
Post Views: 6,099
உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம் 6
மீனா இதுவரை பெரிதாக பிரச்சனை என்று எதையும் பார்த்தது இல்லை. அவள் வீட்டில் தாய் தந்தை புலம்பும்போது கேட்டிருக்கிறாள் தான் ஆனால், எதுவும் இவள் தலையில் விழுந்தது கிடையாது. காலையில் நன்றாக வேலைக்குப் போன கணவன் மாலையில் இப்படி ஒரு பிரச்சனையோடு வர அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. முக்கியமாக அவளுக்கு முடிவெடுக்கவும் தெரியவில்லை.
முகம் வாடிப்போய் நிற்கும் கணவனை பாவமாக பார்த்து நின்றாள் மனைவி. ஜெகனின் நண்பனின் பேரில் கேஸ் போட்டாலும், தற்போதைக்கு கடனை அடைக்க வேண்டிய நிலைமைக்கு ஜெகன் தள்ளப்பட்டான். ஜெகன் தனியாக அல்லாமல் வேற ஒருவரும் சேர்ந்து கையெழுத்து போட்டதால் இருவரும் சேர்ந்துதான் பணம் கட்ட வேண்டியதாகியது. ஜெகன் கட்ட வேண்டிய தொகை பாதிப்பணம் என்பது மட்டுமே அவனுக்கு ஒரு ஆறுதல்.
Advertisement
விஷயம் கேள்விப்பட்டதும் மீனா வீட்டிலிருந்து தாம் தூம் என்று குதித்தார்கள். பேங்கில் வேலை பார்ப்பவன் இப்படி ஏமாந்தவனாக இருப்பான். நொந்து போனார் பரமேஸ்வரி. மீனா எப்பவும் போல கணவன் முகம் மட்டுமே பார்த்து நின்றாள். ஜெகனுக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் தலைவலியோடு, மனைவியின் வீட்டுக்கு பதில் சொல்வதும் சேர்ந்து கொள்ள, அவ்வளவு எரிச்சலில் இருந்தான். மாமியாரின் பேச்சு வரம்பு மீறவும்,
“மீனா, நீ என் பொண்டாட்டி. என்னை என்னவும் கேளு. மத்த யாருக்கும் நான் பதில் சொல்ல முடியாது. என் பிரச்சனையை நான் பாத்துக்குறேன். உங்க வீட்ல வந்து நான் பணம் கேட்டேனாடி.. இங்க வந்துட்டு உனக்கு ஏத்தி விடுற வேலை எல்லாம் வேணாம்” முகத்திலடித்தது போல் ஜெகன் பேசிவிட,
தாங்கவில்லை மகன்களுக்கு… ஜெகன் மறைமுகமாக சொன்னது மீனாவின் தாயை தானே..
Advertisement
“அம்மா, உன் வயசுக்கு இதெல்லாம் உனக்கு தேவையா? நேத்து பொறந்த சின்ன பையன் என் வீட்டு விஷயத்துல தலையிடாதன்னு பேசுறான். நாலு மக்களை கல்யாணம் பண்ணி கொடுத்து பேரன், பேத்தி எடுத்த வயசுல மருமகன் கிட்ட பேச்சு கேட்கணுமா?.. போதும், புத்தி இருந்தா உன் மகன் பொழைக்கட்டும், கஷ்டம்னு வந்த கூட பொறந்த நாங்க இருக்கோம். அதை விட்டு உன் மரியாதையை கெடுத்து நீங்க இருக்க வேணாம்” என்று ஓரளவு மீனாவுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்த பரமவும் கிளம்பி விட, மீனா முழித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
Advertisement
அவளால் கணவனுக்கு எந்த விதத்தில் உதவ முடியும். மறுநாள் பால் வாங்க கூட அவனின் முகத்தைத்தான் பார்க்க வேண்டும். அதனால் ஜெகனின் பின்னே அவன் சொல்படி நின்று கொண்டாள். குடியிருக்கும் வீட்டை ஒத்திவைத்து தான் பணத்தை பிரட்டினான் ஜெகன். கணவன், மனைவி இருவருக்கும் அதுதான் பிறந்த ஊர். இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த சொந்த வீட்டை விட்டு வெளியேறுவதே ஒரு பெரிய அவமானம். மீனா உணரவில்லை. ஆனால், ஜெகன் உணர்ந்து இருந்தான். அந்த ஊரிலே வேறு வீடு வாடகை செல்ல மனமில்லாமல், ஊரைவிட்டு சென்றுவிட்டார்கள்.
கடனை சமாளிக்க முடியாமல் ஊரை விட்டு சென்றதாக மக்கள் பேச, நொறுங்கிப் போனார் பரமேஸ்வரி,
“கைப் பிள்ளையை வைத்துக்கொண்டு, எம் பிள்ளை வெளியூர்ல எப்படி சமாளிக்கும். தாயில்லா பையன் என்னவோ பேசிட்டு போறான்னு நான் அவங்களை விட்டு தள்ளி நின்னு இருக்க கூடாது” மகன்களிடன் புலம்பி கொண்டிருந்தார்.
Advertisement
கடனை அடைத்தாலும், அவமானமாக இருக்க.. தொடர்ந்து அங்கு வேலை செய்ய முடியாமல் வேலையை விட்டு விட்டான் ஜெகன். வேறு வேலை தான் தேடி கொண்டு இருந்தான். நான்கு வீடுகள் கொண்ட மேல் மாடியில் தனியாக வீடு பார்த்து இருந்தான். முதலில் மீனாவுக்கு அந்த வீடு அவ்வளவு பிடித்தது. ஊரில் ஜெகனின் வீடு சொந்த வீடாக இருந்தாலும் அந்த காலத்து தோற்றத்தில் இருக்கும். இங்கு நல்லா டைல்ஸ் போட்ட வீடு. எல்லா வசதிகளும் பக்கத்திலே இருந்தது. உப்பு தண்ணி போர் இருக்க, குடி தண்ணி மட்டும் கீழே சென்று எடுக்க வேண்டும்.
ரெண்டு பேருக்கு அப்படி என்ன தண்ணி செலவாக போகுது. தினமும் நான்கு குடம். அது ஒன்னும் மீனாவுக்கு அவ்வளவு பெரிய கஷ்டமாக இல்லை. என்ன ஒன்று வீட்டு ஓனர் வாசல் தெளித்து கோலம் போட முறை வைத்து விட்டார். நான்கு வீடுகளில் ஒருவர் மாற்றி ஒருவர் அவர் முறையை செய்ய வேண்டும். அந்த நாள் மட்டும் மீனா அவசரமாக எழுந்து கொள்வாள்.
ஜெகனும் வெளியில அலைந்து வேலை தேடிக் கொண்டிருந்தான். ஆனால், ஒன்றும் சரிவர அமைய வில்லை. அவன் படித்து இருந்தான் தான். அதற்காக எளிதாக வேலை கிடைக்க வில்லை. நாட்கள் கடந்து கையிருப்பு கரைந்து கொண்டிருந்ததை தவிர வேலையும் கிடைக்கவில்லை. மனைவி மக்களை வேறு பார்க்க வேண்டும். வாடகை வீட்டின் சிரமங்களை அனுபவிக்க வேண்டும். ஒன்னாம் தேதியிலிருந்து ஐந்தாம் தேதிக்குள் அத்தனை செலவு நிக்கும். வீட்டு வாடகை, கரண்டு பில், பால், காய்கறி, மளிகை என்று அவ்வளவு செலவு. இதில் கைக்குழந்தை இருக்க, குழந்தையின் தேவைக்கான செலவு அதிகமாக இருந்தது.
முன்பு அவர்கள் இருந்தது கிராமம். சுற்றிலும் சொந்தங்களும் இருக்க நிறைய செலவுகள் மிச்சமாகிறது. பரமேஸ்வரி ஏதாவது ஒன்றை கொடுத்து எப்படியும் மகளை மிச்சமாக்கி விடுவார். இங்கு எல்லாம் வெளியில வாங்க வேண்டி இருந்தது. பிள்ளையை கை மாத்தி விட ஆள் இல்லாமல் எல்லாவற்றையும் மீனாவே பார்த்து கொள்ள வேண்டியதாகியது.
திரும்பவும் ஜெகன் தன் நட்பு வட்டத்திற்குள் விழுந்தான். அவனுக்கு சொந்தம் என்று யாரும் இல்லாமல் போக நண்பர்களோடு இருக்க வேண்டியதாகியது. முன்பிருந்தே ஜெகனுக்கு படிப்போடு போட்டோகிராபி எல்லாம் நன்றாக வரும். அதைக் கொண்டு தொழில் தொடங்க நினைத்தான்.
வேலையில்லாத கணவன் வீட்டுக்கு செலவை எவ்வாறு சமாளிக்கிறான் என்ற அடிப்படை யோசனை கூட இல்லாமல் எல்லாவற்றையும் ஜெகன் தலையிலே போட்டாள் மீனா. வாடகை வீட்டின் சிரமங்களை தாண்டி பிள்ளை கணவன் என்று மீனா எப்போதும் போல இருந்து கொண்டாள். இந்த நிலையிலும் தன்னை ஒரு கேள்வி கூட கேட்காத மனைவியை ஜெகனுக்கு அவ்வளவு பிடித்தது. மனைவியிடம் செலவுகளை குறைத்துக் கொள் என்று சொல்ல மனமில்லாமல் வெளியில் சின்ன சின்ன கடன்களை வாங்க தொடங்கினான்.
தனியாக ஸ்டூடியோ வைக்க எல்லாவற்றையும் தயார் செய்தான். பணம் மட்டும் தான் தட்டுபாடு.. அதற்கு அவன் நம்பியது மனைவியை தான். இதிலே தமிழ் அமுதாவின் முதல் பிறந்த நாள் வர, சாதாரணமாக கொண்டாட பெற்றோர்களுக்கு மனம் வரவில்லை. ஜெகன் வீட்டு மொட்டை மாடியிலேயே பெரிதாக ஏற்பாடு செய்து இருந்தான்.
மீனா வீட்டு ஆடகளோடு, ஜெகன் நண்பர்கள், சுற்றத்தையும் சேர்த்து அழைத்து இருந்தார்கள். மூவரும் ஒரே போல உடை அணிந்து அசைவ விருந்து வைத்து அசத்தி விட்டார்கள். மெருன் களரில் கல் வேலைப்பாடு கொண்ட டிசைன் வைத்த சேலை. பிள்ளை பெற்றுக் கொஞ்சம் பூசிய உடல்வாகுக்கு பாந்தமாக இருந்தது.
“சேலை நல்லா இருக்கு மீனா. நீ தான் அழகா இருக்க” என்றார் தாய்.
“ஆமாம்மா, ஆறாயிரம் ரூபாயாம். எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” என்றாள் பெருமையாக.
“என்னடி சொல்ற மருமகன் வேலை வெட்டிக்கே போகலையே. ஏது இவ்வளவு பணம்? நீ எதுவும் கேட்கலையா மீனா” என்றவருக்கு,
“நான் என்னம்மா கேட்க. அவருக்கே எல்லாம் தெரியும். அவர்தான் சம்பாதிக்கிறார். நான் எப்படி கேள்வி கேட்க முடியும்”
“நீதான பொண்டாட்டி, நீ தான் கேள்வி கேக்கணும். இப்படி இருக்காத மீனா. ஏற்கனவே ஒரு விஷயத்துல ஏமாந்து போயிருக்கீங்க”
“சும்மா அதவே சொல்லாதீங்கம்மா. என் புருஷன் என்ன பொறுப்பில்லாதவரா? ஏதோ எங்க கெட்ட நேரம். இப்போ அவர் சரியாத்தான் இருக்கார். நீங்க பேசுறது காதுல விழுந்தா.. வேதாளம் முருங்க மரம் ஏறிடும்” என்றதும் பரமுவும் வாய் மூடி கொண்டார். இப்போதுதான் மகள், பேத்தி என்று காண முடிகிறது. அதை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறந்தநாள் விழா நன்றாக முடிய பரமு மட்டும் மகள் வீட்டோடு இருந்தார். மகளின் வயிறு லேசாக தள்ளிக் கொண்டிருப்பது போல இருந்தது. அன்றே தோன்றியதுதான். ஆனாலும், சேலை கட்டி இருப்பதால் அப்படி இருக்கு என்று நினைத்திருக்..க மற்ற உடையிலும் மீனாவின் வயிறு லேசாக மேடேறி இருக்கவும் தாய்க்கு சந்தேகம்.
“மீனா”
“என்னம்மா, சாப்பாடு எடுத்து வைக்கவா?”
“நீ நல்லா தான இருக்க. மாசம் ஒழுங்கா தலைக்கு குளிக்கிறயா?” என்றதும்,
“என் உடம்புக்கு என்ன.. நல்லா தான் இருக்கேன். பாப்பா பொறந்ததுல இருந்து நாள் கணக்கெல்லாம் எனக்கு சரியா இருக்காது”
“என்னடி அஜாக்கிரதையா இருக்க. எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. நாளைக்கு நாம ஹாஸ்பிடல் போயிட்டு வருவோம்”என்றார் முடிவாக.
அம்மா ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறார் என்று மீனாவுக்கு புரியவே இல்லை. ஆனால், அதற்கு அர்த்தம் மறுநாள் ஹாஸ்பிடலில் கிடைத்தது. மீனா நான்கு மாதம்… பரமு காய்ச்சி எடுத்து விட்டார். மீனாவும் இப்படி என்று நினைக்கவில்லை.
“எனக்கு தெரியவே இல்லம்மா” என்றாள் பரிதாபமாக.
“என்ன தெரியாது நீ இன்னும் குழந்தையா மீனா? மொத ஒரு பிள்ளை இருக்குல்ல ஜாக்கிரதையா இருக்க வேணாமா? இன்னமும் தமிழுக்கு தாய் பால் தானே” என்றதும் மீனாவுக்கு பேச்சே வர வில்லை.
ஆனால், ஜெகன் சந்தோசமாக இருந்தான். அவனும் இப்படி என்று நினைக்க வில்லை. அதற்காக வருத்தமும் இல்லை. அவனை பொறுத்தவரை சந்தோசமான செய்தி தான்.
“உங்களுக்கு வருத்தம் ஒன்னும் இல்லையாம் மாமா” என்றாள் மீனா.
“எதுக்கு வருத்தம் மீனா”
“அதை எப்படி சொல்ல இன்னும் சரியா வேலை அமையல. கையில ஒரு பிள்ளை இருக்கு அடுத்த பிள்ளை வயித்துல.. இனி வர செலவு எல்லாம் எப்படி சமாளிக்க மாமா. எங்க அம்மாவுக்கு கவலையே அது தான். இதுல தமிழ் வேற கை குழந்தையா இருக்கா”
“நான் இப்படியே இருக்க மாட்டேன் மீனா. சீக்கிரமா நம்ம வருமானத்துக்கு ஏதாவது ஒன்றை தேடிப்பேன். நான் தான் ஒத்த பையனா ஆள் இல்லாமல் போயிட்டேன். என் பிள்ளைக்கு துணைக்கு ஆள் வேணும். பின்னாடி நாம இல்லா போனாலும் அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாய் இருப்பாங்க”
“நேத்து பாத்தியா உன் கூட பிறந்த அண்ணன்கள், அவங்க மனைவி, அவங்க பிள்ளைகன்னு வீடு நிறைய ஆள் இருந்துச்சு. ஆனா என் பக்கம் யார் இருந்தா? யாருமே இல்லை. உதவி செய்யாட்டியும் ஒரு நல்ல நாளுக்கு ஒன்னு கூட உறவு வேணும். நாம சந்தோஷமா அடுத்த பிள்ளை பெத்துக்கலாம் மீனா. உன் மாமி அப்படி ஒன்னும் உங்களை விட்டு விட மாட்டேன்” என்று அவள் உதட்டை கிள்ளி கொஞ்ச,
மன நிறைவாக இருந்தது அவளுக்கு, “எங்க அம்மா தான் மாமா என்னத்தையாவது தேவையில்லாம பேசிகிட்டு இருக்கு”
“நீயும் பதிலுக்கு கோபப்பட்டு எதுவும் பேசாத மீனா. உங்க அம்மா என்னைதான் ஏதாவது சொல்லுவாங்க, நான் வேலை இல்லாம இருக்கேன்னு.. அவங்க ஏதாவது சொன்னாலும் நீ காதுல வாங்காத.. இனி உன் கூட அவங்க தான் இருக்கணும். தனியா உன்னால சமாளிக்க முடியாது” என்ற கணவனின் அறிவுரைக்கு சிரித்த முகமாக தலையாட்டினாள்.
பரமக்கு முக சுணக்கம் இருந்த போதும்.. தான் நடமாடும் போதே மகளின் பிள்ளைகளை வளர்த்து விட நினைத்தார். அதனால், மகள் வீட்டோடு இருந்து கொண்டார்.
ஜெகனுக்கு ஸ்டூடியோ ஆரம்பிக்க வெளியில் எவ்வளவு முயன்றும் பணம் கிடைக்கவில்லை. தனியாக அவனால் ஸ்டுடியோ தொடங்க முடியாது. பார்ட்னர்ஷிப் போட்டு தான் ஆரம்பிக்க வேண்டும். மிகவும் யோசித்து தான் மீனாவிடம் நகையை கேட்கும் முடிவுக்கு வந்தான் ஜெகன்.
மாமியாருக்கு தெரியாமல் எப்படி மனைவிடம் கேட்க முடியும். அதனால் பொதுவாக வைத்தே சொல்ல, பரமுக்கு ஏற்க முடிய வில்லை.
“இது ஆகாது. இருந்த ஒத்த வீடு ஒத்திக்கு போயிடுச்சு. இனி அது வருமா வராதா தெரியல. மீனாவங்க அப்பா மகளுக்குன்னு கஷ்டப்பட்டு சேர்த்த நகையே என்னால தூக்கிக் கொடுக்க முடியாது. எம் மக நக இல்லாமல் நின்னா மருமகள் கூட மதிக்க மாட்டாங்க. சொந்த தொழில்ன்ற பேச்சை விட்டுட்டு நல்ல வேலைக்கு போக சொல்லு மீனா”
ஜெகனுக்கு மாமியார் பேச்சு பிடிக்கவில்லை. வீட்டில் இருக்கும் பெரியவர் என்றுதான் அவரிடம் ஒரு வார்த்தை சொன்னது.. அதைத் தாண்டி அவரிடம் அனுமதி கேட்டு நிற்கவில்லை. ஜெகன், மீனா முகத்தை பார்க்க,
அவளுக்கு முடிவெடுக்க தெரிய வில்லை. தன் அம்மாவை தான் பார்த்தாள்.
“இங்க பாரு மீனா. நீ ஒரு பொம்பள புள்ள கைல வச்சிருக்க. இனி பொறக்க போறது என்ன பிள்ளைன்னு தெரியாது? எந்தப் பிள்ளையா இருந்தாலும் ஒன்றாக உன் கையில் இருக்கிறது தான் உனக்கு பாதுகாப்பு” நிதர்சனமாக சொல்ல, வெடுக்கென்று வெளியில் சென்றான் ஜெகன்.
ஒரு கஷ்டத்திற்கு தானே நகையை கேட்பது. எனக்கு போட்டு திருமணம் செய்து கொடுத்தது தானே. நகை தான் அவளுக்கு பாதுகாப்பு என்றால், அப்போ கணவன் என்று நான் எதற்கு…பயங்கர எரிச்சலில் இருந்தான் ஜெகேந்திரன்.
வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன் நெடு நேரமாகியும் வராமல் இருப்பது பயமாக இருந்தது.
“வயித்துப் பிள்ளைக்காரி சாப்பிடாம இருக்கக் கூடாது. உன் புருசன் எங்க போவான். யார் வீட்டுக்கு போய் நிற்க என்ன சொந்தம் இருக்கு? அதெல்லாம் வந்துடுவான். நீ சாப்பிட்டு” என்ற தாயை முறைத்தாள் மீனா.
பரமேஸ்வரி குழந்தையிலிருந்து ஜெகனை பார்ப்பதால் மருமகன் என்று மரியாதையோடு அழைக்க வரவில்லை. அத்தோடு மகளை அவனுக்கு திருமணம் செய்து வைக்கவும் விருப்பமில்லை. அது சில நேரம் வெளிப்படும்.
இரவு தாமதமாக வந்த ஜெகன், மனைவியை கண்டு கொள்ளாமல் மகளோடு சென்று படுத்து கொண்டான். மீனாவுக்கு முகம் கலங்கி போனது. இப்படி எல்லாம் தன்னை ஒதுக்கி வைப்பவன் அல்லவே கணவன்…
ஜெகனுக்கு மனதில் ஒரு கோபம். மகளின் கணவன் என்ற மரியாதை எல்லாம் பரமுவிடம் ஒரு நாளும் இல்லை. தான் யாருமில்லாதவன் என்பதால் ஒரு இளக்கார போல… அப்படி தான் அவன் நினைத்தான். மாமியார் தான் பேசுகிறார் என்றால்.. அவர் பேசுவது சரி என்பது போல நின்ற மனைவியை பார்க்க ஜெகனுக்கு பிடிக்கவில்லை.
மறுநாள் அவளாகவே வலிய வந்து கணவனிடம் பேச,
“மீனா, கொஞ்ச நாள் நீயும், பாப்பாவும் உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வாங்க. நான் வேலை விசயமாக வெளியூர் போறேன்” என்றதும், கண் கலங்க,
“என்ன மாமா, நான் எப்படி உன்னை விட்டுட்டு இருப்பேன். பாப்பா உன்னை தேடும்”
“சொந்த தொழில் வைக்க பணம் வேணும் மீனா. இப்ப என்கிட்ட அதுக்கான தகுதி இல்லை. நான் ஒரு நல்ல வேலை தேடிட்டு.. உன்னையும், பாப்பாவையும் கூப்பிடுகிறேன்”
மீனா தன் தாயின் முகத்தை தான் பார்த்தாள். அவரும்,
“ஊருக்கு போலாம் மீனா. அங்க உன் அண்ணன்கள் இருக்காங்க. உன்னை நல்லா பார்த்துபாங்க” என்றார்.
ஜெகன், மீனாவை முறைதான். நான் நல்லா பார்த்துக் கொள்ளவில்லை என்று உன் அம்மா சொல்கிறாரா.. மீனாவுக்கு அவ்வளவு விவரம் கிடையாது.
பரமேஸ்வரி மகளை அழைத்து கொண்டு ஊர் வந்து ஒரு வாரமாகி விட்டது. மீனாக்கு நினைப்பு எல்லாம் கணவனை சுற்றியே… மாசமா இருக்கும் பெண் என்று நல்ல கவனிப்பு. கோழி, மீன் என்று விதவிதமாக வைக்க, மீனாக்கு உள்ளே இறங்க மறுத்தது.
தானும் இல்லாமல் அங்கு கணவன் என்ன உண்டானோ? ஏற்கனவே தனக்கு யாருமில்லை என்று நினைப்பவன், தானும் விட்டு வந்திருக்கக் கூடாது என்று மறுகிப் போனாள். அவளாக தொடர்ந்து போன் செய்தாலும் பெரிதாக பேச்சு வளர்க்கவில்லை ஜெகன்.
நாள் செல்ல மீனவால் கணவனை விட்டு இருக்க முடியவில்லை. நாகை தானே போயிட்டு போகுது. தொழில் செய்யத்தானே கேட்கிறாங்க என்று நினைத்தவள்,
“அம்மா, அவருக்கு போட்டு கட்டிக் கொடுத்த நகை. அவர் என்னவும் செய்யட்டும். நீங்க எதுக்கு வீம்பா இருக்கீங்க”
“அறிவு கெட்டவளே, ரெண்டு நா உன் புருஷன் உனக்கு போன் பண்ணல, நகையை தூக்கிக் கொடுக்கிற அளவுக்கு பித்தா இருக்க” என்று தாய் சாட,
“நீங்க என்ன பிழைக்க விட மாட்டீங்க. நான் என் புருஷன் கிட்ட போறேன். என் நகையை கொடுங்க”
“உன் பேச்சு எல்லாம் கேட்க முடியாது உன் புருஷனுக்கு என்னைக்கு பொறுப்பு வருதோ அன்னைக்கு தான் நாங்க உங்க கைக்கு கிடைக்கும்” சட்டமாக சொல்ல,
கணவனின் பாராமுகம் மீனாவை அமைதியாக இருக்க விடவில்லை, சொந்தங்களை கூட்டி பஞ்சாயத்து வைத்து விட்டாள். இது ஒரு வகையில் பரமேஸ்வரி குடும்பத்துக்கு தலை இறக்கமாக போக, மகன்கள் சத்தம் போட்டார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் பரமுவால் மகளை சமாளிக்க முடியவில்லை. ஒரு காரை பிடித்தவர் அரிசி, பருப்பு, பழங்கள் என்று மகளுக்கு தேவையானவற்றை காரில் நிரப்பி, அவள் நகை அணைத்தும் அவள் கழுத்தில் போட்டு விட்டு, மகள், பேத்தியை கணவன் வீடு அனுப்பி விட்டார்.
error: Content is protected !!