Skip to content
Post Views: 3,628
ஆரு எழுந்து வேகமாக வெளியே வந்தவள், “நீ இப்ப சாப்பிடாம போனா… எல்லோரும் நீ மீராவால தான் சாப்பிடாம போனேன்னு நினைப்பாங்க. அப்புறம் உன் இஷ்டம்.” என்றுவிட்டு உள்ளே செல்ல…. அர்ஜுனும் அவளோடு உள்ளே வந்தான்.
உள்ளே வந்த அர்ஜுன் மீரா முகத்தைப் பார்க்க… அவள் அதிர்ந்திருப்பது அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது… அர்ஜுன் சென்று ஆருவின் அருகே அமர்ந்து சாப்பிட… மீரா ஹாலிலேயே அமர்ந்துவிட்டாள்.
“ஏன் டா சாப்பிடாம போனே?”
“மறந்து… எதோ ஒரு நியாபகத்தில போயிட்டேன் மா…”
சஞ்சனா நடந்ததை வைத்து அர்ஜுனுக்கு மீராவை பிடிக்காது போல என்று நினைத்துக் கொண்டாள்.
மீரா டிவி பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் அழுகையை அடக்கி கொண்டு இருக்கிறாள் என்று அர்ஜுனுக்கு நன்றாகவே தெரிந்தது. அவள் முகம் சிவந்து இருந்தது. அவனுக்கே புரிந்தது, அவள் மேல் கொஞ்சம் அதிகமாகக் கோபபட்டு விட்டோம் என்று. ஆனால் இப்போது மீராவிடம் பேச முடியாது என்பதால்… பிறகு பேசுவோம் என்று கடைக்குக் கிளம்பினான்.
ஆதியும் ரஞ்சனாவும் சாப்பிட்டதும், வித்யா அவர்களை அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வரும்படி சொல்ல… அவர்களோடு சஞ்சனாவும், ஆருவம் கிளம்பினார்கள். ஆரு மீரவையும் அழைத்தாள். தனக்குக் கல்லூரிக்குச் செல்லும் வேலை இருப்பதாகச் சொல்லி மீரா மறுத்துவிட்டாள்.
அவர்கள் கோவிலுக்குச் சென்றதும், மீரா வித்யாவிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினாள். பெரியம்மா ஏன் ஒரு மாதிரி இருக்கா? என்று நினைத்தார், அவருக்கு நடந்தது எதுவும் தெரியாது.
அர்ஜுன் மதியம் வீட்டுக்கு வந்த போது.. மீராவை தேடினான். ஆனால் மீரா அங்கே இல்லை. ஆருவிடம் சென்று மீரா எங்கே என்று கேட்க…
“என்னைக் கேட்டா… நான் கோவில்ல இருந்து வரும்போதே… அவ இங்க இல்ல. பாவம் மீரா, அண்ணியோட இருக்கலாம்னு ஆசையா வந்தா, நீதான் கோபப்பட்டு விரட்டிட்டே…” ஆரு சொன்னதைக் கேட்ட அர்ஜுன் வருந்தினான். அவன் மீரா கோபித்துக் கொண்டு சென்றுவிடுவாள் என்று நினைக்கவில்லை.
அர்ஜுன் வீட்டில் இருந்து கிளம்பியவன், சற்று தள்ளி சென்று வண்டியை நிறுத்திவிட்டு மீராவை செல்லில் அழைக்க… மீரா தனது அறையில் படுத்திருந்தவள், செல்லை எடுத்து பார்த்துவிட்டு அழைப்பை துண்டித்தாள். அர்ஜுன் திரும்பத் திரும்ப அழைக்க…. அப்போதும் மீரா எடுக்கவில்லை.
:நீ இப்ப போன்னை எடுக்கலைனா, நான் நேர்ல உங்க வீட்டுக்கு வருவேன் மீரா.” என்று அர்ஜுன் மெசேஜ் அனுப்பிவிட்டு, இரண்டு நிமிடம் கழித்து அழைக்க…. மீரா இப்போது போன்னை எடுத்தாள். ஆனால் ஹலோ என்று கூடச் சொல்லவில்லை.
“சாரி மீரா…”
“ஏன் மீரா இப்படிப் பண்ற?”
“நானா போய் அவ பக்கத்தில உட்கார்ந்தேன், அவ தான என் பக்கத்தில வந்து உட்கார்ந்தா.”
“நீ என் மேல சட்னி ஊத்துனது எனக்குக் கோபமே இல்ல. ஆனா… உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல பார்த்தியா… அது தான் வருத்தமா இருக்கு.”
அர்ஜுன் கேட்ட எதுக்கும் மீரா பதில் சொல்லவில்லை. “நீ என்னோட பேசமாட்ட இல்லை, சரி உன் இஷ்டம்.” என்றவன், போன்னை வைக்க…..மீரா கட்டிலில் படுத்து அழுதாள்.
அன்று மட்டும் இல்லை… அதற்கு அடுத்து வந்த இரு நாட்களும் அர்ஜுனும், மீராவும் பேசிக்கொள்ளவில்லை. அர்ஜுன் அவளே கோபம் குறைந்ததும் போன் பண்ணட்டும் என்று இருந்தான்.
அந்த வார ஞாயிற்றுகிழமை ஆதி, ரஞ்சனா வரவேற்பு இருந்ததால்… வீட்டில் உறவினர் கூட்டம். அர்ஜுனுக்கு வேலை சரியாக இருந்தது. அவன் வெளி வேலையாக அலைந்து கொண்டே இருந்தான். வீட்டிலேயே தங்கவில்லை. ஆதியும் கடைக்குச் சென்று பார்த்துக் கொண்டான்.
ஆரு ரஞ்சனாவை அழைத்துக் கொண்டு ப்யுட்டி பார்லர் சென்று, டெஸ்ட் மேக்கப் போட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். மீராவிற்கு எத்தனையோ தடவை போன் போட்டு அழைத்தும் அவள் வரவில்லை.
எதோ எடுக்க வீட்டிற்கு வந்த அர்ஜுனிடம் சஞ்சனா “உங்க வீட்டுக்கு வந்திருக்கோம், ஆனா கண்டுக்கவே மாட்றீங்க… உங்க வீட்டுக்கு வந்திருக்க விருந்தாளிக்கு ஊர் சுற்றி காட்டும் பழக்கம் எல்லாம் இல்லையா…” என்று ஆவலாக அவன் முகம் பார்க்க…
உன் பக்கத்தில உட்கார்ந்ததுக்கே, என் மேல சட்னி ஊத்துனா… இதுல நான் உன்னைக் கூட்டிகிட்டு ஊர் வேற சுத்தினா… என் தலையில கல்லை தூக்கி போட்டுடுவா என்று நினைத்த அர்ஜுன், “எனக்கு அதுக்கு எல்லாம் நேரம் இல்லை… நீங்க ஆருவோட போயிட்டு வாங்க.” என்றவன், ஆருவை அழைக்க… சஞ்சனா “அவளா…” என்று பதறியவள், “அதெல்லாம் வேண்டாம்.” என்று அங்கிருந்து ஓடி விட்டாள்.
ஞாயிறு அன்று மதியம் மீராவை செல்லில் அழைத்த வித்யா, “மீரா… என்ன வீட்டு பக்கமே காணோம், மண்டபத்தில அலங்காரம் நீ சொன்ன மாதிரி பண்ணி இருக்காங்களான்னு அங்கிள் உன்னைப் பார்த்திட்டு வர சொன்னார்.” என்றதும்,
மீரா “போறேன் ஆன்டி… இப்பவே போய்ப் பார்கிறேன்.” என்றாள்.
“சரி சாயங்காலம் சீக்கிரம் மண்டபத்துக்கு வந்திடு.” என்று சொல்லி வித்யா போன்னை வைத்தார்.
மீரா மண்டபத்திற்குச் சென்ற போது அங்கே அர்ஜுனின் பைக் நின்று கொண்டிருந்தது. மீரா உள்ளே சென்று மேடை அலங்காரத்தைப் பார்த்து கொண்டிருந்தாள். அவள் சொன்ன மாதிரி அழகாகச் செய்து கொண்டிருந்தனர். மீரா அர்ஜுன் அங்கே வருவானா என்று பார்க்க… அர்ஜுன் அங்கே வரவில்லை. மீராவே அவனைத் தேடிக்கொண்டு சென்றாள்.
அர்ஜுன் அங்கே சமையல் அறையில் அவர்கள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். முகத்தில் இரண்டு நாள் தாடியுடன் ஆள் பார்க்கவே வாடி இருந்தான். மீராவிற்கு அவனைப் பார்த்ததும் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
மீரா அர்ஜுனின் அருகே சென்று நிற்க… அர்ஜுன் யார் என்று திரும்பி பார்த்தவன், அங்கே மீராவை பார்த்ததும், அவன் கண்ணில் ஒரு ஒளி வந்தது. ஆனால் அவளிடம் எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தான்.
அர்ஜுன் சிறிது நேரம் அங்கே நின்றவன், திரும்பி நடக்க… மீராவும் அவனோடு சென்றாள். அர்ஜுன் முதல் மாடிக்கு வந்து மேடை அலங்காரத்தைப் பார்க்க… மீராவும் அவனோடு நின்று பார்த்தாள்.
அடுத்து அவன் இரண்டாவது மாடிக்கு செல்ல… மீராவும் அவன் பின்னே சென்றாள். அர்ஜுன் அங்கிருந்த ஒரு அறைக்குள் செல்ல.. மீராவும் அவனோடு உள்ளே சென்றாள்.
அவன் அந்த அறையின் ஜன்னல் அருகே சென்று வேடிக்கை பார்க்க… மீரா அவன் அருகில் சென்று அவன் கையோடு கை கோர்த்து, அவன் தோளில் சாய்ந்து, “சாரி அர்ஜுன்.” என்றாள்.
அர்ஜுன் அமைதியாக இருக்க… மீரா “என்னோட பேச மாட்டீங்களா?” என்று அவன் முகத்தைப் பார்த்து கேட்க… அர்ஜுன் அப்போதும் மெளனமாக இருந்தான். மீரா அவன் மார்பில் சாய்ந்து அழ… “நான் சாரி சொன்ன போது, நீ கேட்டியா…” என்றான்.
மீரா அவனை நிமிர்ந்து பார்க்க… அர்ஜுன் அவள் கண்ணைத் துடைத்து விட்டு, அவளை இறுக அனைத்துக் கொண்டான்.
“ஏன் மீரா இப்படிப் பேசாம இருந்த…. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா…. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா… நான் ரெண்டு நாளா சரியா சாப்பிடலை, தூங்களை, ஒரே வேலை உன்னை நேர்ல வந்தும் பார்க்க முடியலை…. போ மீரா, நீ ரொம்பப் படித்திட்ட…” என்றான் சலிப்பாக.
“சாரி அர்ஜுன், அன்னைக்குக் கல்யாணத்தில சஞ்சனாவோட ப்ரண்ட்ஸ் உங்களையும் அவளையும் சேர்த்தது வச்சு பேசினாங்க, அவ சந்தோஷமா கேட்டுட்டு இருந்தா… இன்னைக்கு ஆரு பக்கத்தில இடம் இருந்தும், அவ உங்க பக்கத்தில உட்கார்ந்தா… அவ மனசுல எதுவும் இல்லைனா… உங்க பக்கத்தில உட்கார்ந்தா தப்பில்ல. ஆனா… அவ மனசுல உங்களை நினைக்கிறா… அப்புறம் என்னால எப்படிப் பொறுத்துக்க முடியும், நீங்களே சொல்லுங்க?” மீரா சொல்லிவிட்டு மறுபடியும் அர்ஜுனின் மார்பில் சாய்ந்து கொள்ள.
அர்ஜுன் மீரா சொன்னதைக் கேட்டதும், சஞ்சனாவை பற்றி ஒவ்வொன்றும் நினைத்துப் பார்த்தான். தனது தோழிகளுடன் மண்டபத்தில் அவள் தன்னிடம் வழிய வந்து பேசியதை, இன்று காலை கூட வெளியே அழைத்துச் செல்ல சொல்லி கேட்டதை, இத்தனை நாட்களாக அவள் தன்னிடம் தன் அக்காவின் கணவருடைய தம்பி என்ற முறையில் தான் பேசுகிறாள் என்று நினைத்தான். ஆனால் இப்போது மீரா சொன்னதும் அவள் மனதில் தன்னைப் பற்றி அப்படி ஒரு எண்ணம் இருக்குமோ.. அதனால்தான் தன்னிடம் வந்து வழிய பேசுகிறாளா… அப்படி இருந்தால் அதை வளர விடுவது நல்லது இல்லை என்று நினைத்தான்.
“ஏன் மீரா என்கிட்டே இதை முன்னாடியே சொல்லலை?”
“ஏற்கனவே என்னால உங்களுக்கும் ஆருவுக்கும் சண்டை வந்தது. இப்ப இதைச் சொன்னா திரும்ப எதாவது என்னால பிரச்சனை வந்துடுச்சுன்னா… அதனாலதான் சொல்லலை.”
“இனி என்கிட்டே இருந்து எதையும் மறைக்காத. இந்த விஷயத்தை நான் பார்திக்கிறேன், நீ கவலைபடாத.” என்ற அர்ஜுன் அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட…
“தாடி குத்துது விடுங்க.” என மீரா திமிறினாள்…. அர்ஜுன் அவளை விடாமல், “நல்லா குத்தட்டும், ரெண்டு நாளா என்னைத் தவிக்கவிட்ட இல்லை..” என்றவன், அவளது மறு கன்னத்திலும் அழுத்தி முத்தம் கொடுக்க…
மீரா அவன் முகத்தைப் பிடித்து நிமிர்த்தியவள், அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். அர்ஜுனுக்குப் பூஸ்ட் குடித்த தெம்பு வந்தது. மீராவிடம் “நீயாதான் ஆரம்பிச்ச….” என்றவன், சிறிது நேரம் மீராவை போட்டு படுத்தி எடுக்க… மீரா அவனைத் தள்ளிவிட்டு வெளியே சென்றாள். அர்ஜுனும் வெளியே வர…. இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டே கீழே சென்றனர்.
அர்ஜுன் அந்த மண்டபத்திற்கு எதிரில் இருந்த ஹோட்டலுக்கு மீராவை அழைத்துச் சென்றான். இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்றுதான் இருவரும் ஒழுங்காகச் சாப்பிட்டனர். இருவரும் திரும்பி மண்டபம் வந்து வேலை எல்லாம் முடிந்து விட்டதா என்று பார்த்துவிட்டு, மாலை வரவேற்புக்கு கிளம்ப… அவரவர் வீட்டை நோக்கி சென்றனர்.
Advertisement
(residencyunlimited.org)
error: Content is protected !!