Skip to content
Post Views: 4,502
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 22
ரஞ்சனா கருவுற்றிருந்தாள். அவளைப் பார்க்க அவளது பெற்றோருடன் சஞ்சனாவும் வந்தாள். ரஞ்னாவின் பெற்றோர் அன்றே கிளம்ப… ரஞ்சனா அவளது பெற்றோரிடம், “சஞ்சனாவுக்கு இப்ப காலேஜ் லீவ் தான, அதனால அவ இன்னும் ஒரு வாரம் என்னோடு இருக்கட்டுமே…” என்று கேட்க…. ரஞ்சனா ஆசைப்பட்டுக் கேட்டதால்…அவளது பெற்றோரும் சரி என்றனர்.
சஞ்சனாவிற்கு ஒரே மகிழ்ச்சி. அதைப் பார்த்த அவளது அம்மா, “ஒரு வாரம் உன்னோட வால் தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு, நல்ல பிள்ளையா இருக்கணும்.” என்று சொல்லிவிட்டு தான் சென்றார். ஆனால் சஞ்சனா கேட்கும் ஜென்மமா.
மீரா அன்று கல்லூரியில் இருந்து நேராக அர்ஜுனின் வீட்டுக்கு சென்று காலிங் பெல் அடிக்க…. சஞ்சனா வந்து கதவை திறந்தாள்.
மீராவை பார்த்ததும் அலட்சியமாக முகத்தைச் சுளித்து, “ஆரு இல்லை…. அவ வெளிய போய் இருக்கா…” என்றவள், மீராவிற்கு உள்ளே செல்ல வழி விடவில்லை.
மீரா திரும்பி போய் விடலாமா என்று நினைக்கும் போது… அங்கே ஹாலில் அமர்ந்து இருந்த ரஞ்சனா மீராவை பார்த்து, “வா மீரா… ஏன் அங்கயே நிக்கிற?” என்று அழைக்க…. மீரா “ஹாய் கா…” என்றவள், உள்ளே சென்று ரஞ்சனாவின் எதிரில் அமர்ந்தாள்.
சஞ்சனா… ரஞ்சனாவை மீராவுடன் பேச விடக் கூடாது என்றே… வீம்புக்கு ரஞ்சனாவின் அருகே சென்று அமர்ந்தவள், அவர்கள் சொந்தகாரர்களைப் பற்றிப் பேச… மீரா அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டு கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்த வித்யா மீராவை பார்த்துவிட்டு, “வா மீரா… எப்ப வந்த? இரு காபி தரேன்.” என்று சமையல் அறைக்குச் செல்ல…. மீராவும் அவரோடு உள்ளே சென்றாள்.
“ஆரு எங்க ஆன்டி?”
“அவ ப்ரண்ட் வீட்டுக்கு எதோ நோட்ஸ் வாங்க போய் இருக்கா, இப்ப வந்திடுவா…” வித்யா சொல்லிக்கொண்டே காபி கலக்கினார்.
மீரா ஹாலில் வந்து உட்கார்ந்து காபி குடிக்க… வித்யா அவளிடம், “ஆதி உன்னை ஞாயிறு கிழமை அன்னைக்குக் கடைக்கு வந்து, இந்த வருஷம் நவராத்திரிக்கு எந்த மாதிரி ஷோகேஸ் அலங்காரம் பண்ணலாம்னு அங்க வேலை செய்றவங்ககிட்ட சொல்ல சொன்னான். அப்புறம் அங்கிள் உன்னைத் தீபாவளி ஸ்பெஷல் ஆர்டர் போட புடவை டிசைன்ஸ் செலக்ட் பண்ணி தர சொல்லி…. ஒரு பெரிய புக் வச்சிட்டு போய் இருக்கார். போன தடவை நீ செலக்ட் பண்ண புடவை டிசைன்ஸ் எல்லாம் நல்லா சேல் ஆச்சாம்.” என்றார் பெருமையாக.
“சரி ஆன்டி, நான் சண்டே ஆருவோட கடைக்குப் போறேன். இந்த டிசைன்ஸ் செலக்ட் பண்றது டெய்லி காலேஜ் முடிஞ்சு, இங்க வந்து கொஞ்ச நேரம் பண்றேன். ஒரு மூன்னு நாள்ல முடிஞ்சிடும்.”
மீரா சொன்னது போல் தினமும் கல்லூரி முடிந்ததும் அர்ஜுனின் வீட்டிற்கு வந்து டிசைன்ஸ் செலக்ட் செய்தாள்.
ஆருவும், மீராவும் சேர்ந்து அர்ஜுனின் அறையில் அமர்ந்து தான் டிஸைன் செலக்ட் செய்வார்கள். பின் இருவரும் அர்ஜுனோடு ஸ்கைப்ல் பேசுவார்கள். அவர்களோடு சூர்யாவும் சேர்ந்து கொள்வான்.
ஆரு வேண்டுமென்றே, “அர்ஜுன் நீ ஆள் மெலிஞ்சிட்ட மாதிரி இருக்கே, சாப்பாடு சரி இல்லையோ…” என அவள் சூர்யாவை வம்பு இழுக்க.
“எனக்கு இவ்வளவு தான் முடியும். நீ வேணா கிளம்பி ஆஸ்திரேலியா வாயேன்… நீயே வந்து உங்க அண்ணனுக்குச் சமைச்சு போடு. அப்படியே நானும் நல்ல சாப்பாடு சாப்பிடுவேன்.” சூர்யா கிண்டலாகப் பதில் கொடுக்க…
“அதுக்கு வேற ஆளு பாருங்க.” என்றாள் ஆரு. அர்ஜுனும், மீராவும் இவர்கள் பேசுவதைக் கண்டு கொள்ளாமல் அவர்கள் உலகில் இருப்பார்கள்.
சஞ்சனா இத்தனை நாள் மீராவை ஆருவின் தோழி என்ற அளவில் தான் நினைத்துக் கொண்டு இருந்தாள். ஆனால் மீரா அந்தக் குடும்பத்தில் எல்லோரிடமும் நன்றாகப் பேசுவதும், அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களும் அவளைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தி போல் நடத்துவதையும் பார்த்து அவளுக்குப் பொறாமையாக இருந்தது.
சஞ்சனா இங்கு வந்து தங்கியதற்குக் காரணமே எப்படியாவது வித்யா மனதில் இடம் பிடித்தால்… அவர் தன்னை அர்ஜுனுக்குத் திருமணம் செய்து வைப்பார் என்று நினைத்து தான். ஆனால் இந்த மீரா இங்கே வருவதால் எல்லோரும் அவளைத் தான் கவனிகின்றனர். அவளோடு தான் பேசுகின்றனர். இதற்கு எதாவது செய்து இந்த மீராவை இந்த வீட்டுப் பக்கம் வர விடக்கூடாது என்று நினைத்தாள்.
சஞ்சனா ரஞ்சனாவிடம் “என்ன உங்க வீட்டு ஆளுங்க மீராவை தலையில் தூக்கி வச்சிக்கிட்டு ஆடறாங்க. அவங்க தான் அப்படினா… உன்னோட வீட்டுகாரர் கூட அவரோட கடை ஷோகேஸ் அலங்காரத்துக்கு மீராவை தான் கூப்பிடுகிறார்.” என்று வேண்டுமென்றே வம்பிழுக்க…
ரஞ்சனாவிற்கு ஆதியை பற்றிச் சஞ்சனா சொன்னதைக் கேட்டுக் கோபம் வந்துவிட்டது.
“உனக்குத் தெரிஞ்ச மாதிரி உளறாத. மீரா அந்த மாதிரி வேலை எல்லாம் நல்லா செய்வா…. அதோட அவ அப்பா, அம்மா ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணி வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அதனால அவ மேலே இங்க இருக்கிறவங்களுக்கு ஒரு சாப்ட் கார்னர். வேற எதுவும் இல்லை.” ஒரு வேகத்தில் ரஞ்சனா மீராவை பற்றிச் சொல்லிவிட….
சஞ்சனாவின் கண்கள் மின்னியது. இப்படி ஒரு விஷயம் இருக்கா… இருடி உன்னைப் பார்த்துக்கிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அர்ஜுனும், மீராவும் காதலர்கள் என்று ஆதி ரஞ்சனாவிடம் சொல்லவில்லை… அவள் சென்று அம்மாவிடம் சொல்லிவிட்டால்….அதனால் இப்போது தெரிய வேண்டாம், அர்ஜுன் திரும்பி வரட்டும் சொல்லலாம் என்று நினைத்தான்.
மீரா டிஸைன் செலக்ட் செய்யும் வேலை முடிந்ததும், அர்ஜுனின் வீட்டுப் பக்கம் வரவில்லை. சஞ்சனா ஊருக்கு போன பிறகு போகலாம் என்று நினைத்தாள். அதனால் அந்தத் தடவை சஞ்சனாவால்… அவள் நினைத்த காரியத்தைச் செய்ய முடியவில்லை.
அர்ஜுனுக்கு ஆஸ்திரேலியாவில் இயல்பு வாழ்க்கை பழகியது. அங்கே அவனுக்கு வேறு எதுவும் வேலை இல்லாததால் நன்றாகப் படித்தான். அவன் வகுப்பில் இருந்த ஜூலிக்கு அர்ஜுன் நன்றாகப் படிப்பதால்… அவனை ரொம்பப் பிடித்தது. அவனை எப்போதும் ப்ரைனி என்று தான் கூப்பிடுவாள்.
அர்ஜுன் அவளோடு நின்று பேசமாட்டான். அவள் ஹாய் என்றால் பதிலுக்கு ஹாய் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான். தன்னிடம் வழியாமல் விலகி போகும் அர்ஜுனை ஜூலிக்கு இன்னும் நிறையப் பிடித்தது.
அர்ஜுனை சில மாதங்கள் கவனித்தவள், ஒரு நாள் அவனிடம் வந்து ப்ரொப்போஸ் செய்ய…. “சாரி… எனக்கு லவர் இருக்கா…” அர்ஜுன் சொல்ல… ஜூலி நம்ப மறுத்தாள்.
நீ நம்பினா நம்பு, நம்பாட்டி போ என்று சொல்லத்தான் அர்ஜுன் நினைத்தான். ஆனால் இவள் தன்னைத் தொடர்ந்து வற்புறுத்துவாள் என்று நினைத்தவன், செல்லில் அவனும், மீராவும் சேர்ந்து எடுத்த போட்டோவை காட்டினான்.
“வாவ் ப்யுடிபுல். யூ ஆர் லக்கி. வாட் இஸ் ஹர் நேம்?” ஜூலி கேட்க…. அர்ஜுனின் வாய் எல்லாம் பல்லு தான், அவன் புன்னகையுடன் மீரா என்றான்.
ஜூலி இதுவரை தன்னிடம் நின்று பேசாத அர்ஜுன் பேசியதும் மகிழ்ந்தவள், அர்ஜுனிடம் இன்னும் மீராவை பற்றிக் கேட்க…. அர்ஜுனும் மீராவை பற்றி என்றதும் ஜூலியிடம் நன்றாகப் பேசினான். அதன் பிறகு வந்த நாட்கள் அர்ஜுன் ஜூலியை பார்த்தால்… நின்று ஒன்றிரண்டு வாரத்தைகள் பேசிவிட்டு செல்வான்.
இப்படியே சில மாதங்கள் செல்ல…. ஒரு நாள் அர்ஜுனிடம் வந்த ஜூலி, “இன்னைக்கு நைட் நீ என்னோட அப்பார்ட்மென்ட்க்கு வந்து இரவு தங்கு.” என்று கூப்பிட…..
அர்ஜுனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை…. பின் புரிந்ததும், “ஜூலி… நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன், எனக்கு லவர் இருக்கான்னு. அப்படி இல்லைனாலும் எனக்கு இதெல்லாம் பிடிக்காது.” என்றான் பல்லை கடித்துக் கோபத்தை அடக்கிக் கொண்டு.
“இருந்தா என்ன? அவ வேற எங்கையோ இருக்கா…. நாம இங்க இப்படி இருக்கிறது அவளுக்கு எப்படித் தெரியும்? நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்கலை…. ஜஸ்ட் இங்க இருக்கிறவரை என்ஜாய் பண்ணலாம் இல்லை…” ஜூலி சொல்ல… அர்ஜுனுக்கு ஜூலியின் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.
“அவ எங்கையோ இல்லை… இங்க இருக்கா.” என அர்ஜுன் தன் இதயத்தைத் தொட்டு காமித்தவன். “உங்க ஊர்ல வேணா கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு இது எல்லாம் ஈஸியா இருக்கலாம், நீ எத்தனை பேர் கூடவும் பழகலாம். ஆனா எங்க கல்ச்சர் வேற… எங்க நாட்ல நாங்க ஒருத்தனுக்கு ஒருத்தின்னு தான் வாழ்வோம். அது எங்க ரத்தத்துல ஊரினது. அது வேற நாட்டுக்கு வந்தா மட்டும் மாறிடுமா என்ன?”
அர்ஜுனின் பேச்சை கேட்ட ஜூலிக்கு ஆச்சர்யமாக இருந்தது. “டேக் இட் ஈஸி, நான் நீ இவ்வளவு எமோஷினல் ஆவேன்னு நினைக்கலை… லீவ் இட்.” எனச் சொல்லிவிட்டு தப்பித்தால் போதும் என்று ஜூலி அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டாள்.
அர்ஜுனுக்கு மனசே ஆறவில்லை… அவள் தன்னிடம் வந்து அப்படித் தைரியமாகக் கேட்கிறாள் என்றாள்… அதற்குத் தானும் ஒரு வகையில் காரணமோ…. அவளிடம் பேசியே இருக்கக் கூடாதோ என்று நினைத்து வருந்தினான்.
வீட்டுக்கு வந்தும் அவன் டென்ஷன்னாகவே இருக்க… சூர்யா என்னவென்று கேட்க… அர்ஜுன் அவனிடம் எல்லாவற்றையும் கொட்டினான்.
“ஹா..ஹா… அந்தப் பொண்ணு அப்படியா கேட்டுச்சு… ஏன் டா அந்தப் பொண்ணுக்கு என்னை எல்லாம் கண்ணுக்கு தெரியலையா? நானும் நல்லா தானே டா இருக்கேன்.” சூர்யா பாவம் போல் சொல்ல… அர்ஜுன் சிரித்துவிட்டான்.
“அர்ஜுன் இதெல்லாம் இங்க சகஜம். நீ கண்டுக்காம இரு… கிட்டத்தட்ட நமக்கு ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சு… இன்னும் ஒரு வருஷம் தான். அதுவரை யார்கிட்டயும் சண்டைக்குப் போய்டாத, இது நம்ம ஊர் இல்லை. பொறுமையா இரு.” சூர்யா சொன்னதைக் கேட்ட அர்ஜுன் சரி என்றான்.
அதன்படியே அர்ஜுனும் நடந்து கொண்டான். ஜூலியை பார்த்தால் எப்போதும் போல் ஹாய் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவான். ஜூலியும் அதன் பிறகு அர்ஜுனை தொந்தரவு செய்யவில்லை, அவளுக்கு வேறு ஒரு பாய் ப்ரண்ட் கிடைத்துவிட்டான்.
ரஞ்சனாவிற்கு எழாம் மாதம் வளைகாப்புச் செய்ய ஆதி விடவில்லை… அவ்வளவு நாள் ரஞ்சனாவை விட்டு பிரிந்து இருக்க முடியாது என்று சொன்னதால்… ஒன்பதாம் மாதம் வளைகாப்பு வைத்தனர்.
திருச்சியில் இருந்து ரஞ்சனாவின் பெற்றோர் உறவினர்களுடன் வந்து வளையல் போட்டு ரஞ்சனாவை அழைத்துச் செல்ல வந்திருந்தனர்.
வீட்டிலிலேயே விசேஷத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் ஹாலில் வைத்து வளையல் போட்டனர். ஆதி அர்ஜுன் பார்பதற்காக ஹாலில் இருந்த பெரிய டிவியில் ஸ்கைப் போட்டு, அவனுக்கு நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பினான். அர்ஜுன் அங்கிருந்து லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்தான்.
அர்ஜுன் மட்டும் இல்லையே என்ற வித்யாவின் கவலையும் அகன்றது. அவரும் மகிழ்ச்சியோடு இருந்தார்.
விசேஷம் முடிந்ததும், அர்ஜுன் பிறகு பேசுவதாகச் சொல்லி தொடர்பை துண்டித்து விட்டான். மீரா வித்யாவிற்கு உதவி கொண்டிருந்தாள். விருந்தினர் எல்லோரும் சாப்பிட்டதும் கடைசிப் பந்தியில் வீட்டு ஆட்கள் உட்கார்ந்து சாப்பிடும் போது… மீராவும் அவர்களோடு சாப்பிட்டாள்.
அர்ஜுனின் பெரியம்மா காயத்ரி, “ஏன் மீரா உங்க அம்மா வரலை?” என்று கேட்க…. மீரா பதில் சொல்லும் முன் முந்திக்கொண்ட சஞ்சனா, “அது அவங்க அம்மா இல்லை, சித்தி. அவங்க அப்பாவும், அம்மாவும் டைவர்ஸ் பண்ணி வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்க. உங்களுக்குத் தெரியாதா?” என்று சத்தமாக அங்கிருக்கும் எல்லோருக்கும் கேட்கும்படி சொல்ல…. அதைக் கேட்ட அங்கிருந்த எல்லோரும் அதிர்ந்தனர்.
மீரா தன்னுடைய சொந்த வாழ்கையைப் பற்றி வெளி ஆட்கள் யாரும் பேசுவதை விரும்பாதவள், அவளுக்குத் தன்னை யாரும் பரிதாபமாகப் பார்ப்பது கூடப் பிடிக்காது. அப்படி நினைப்பவளை இன்று அர்ஜுனின் உறவினர்கள் முன்பு சஞ்சனா அவளுடைய சொந்த விஷயத்தைப் பற்றிப் பேசியதும், அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை…
சாப்பிட முடியாமல் மீரா குனிந்து இலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நீங்க என்ன நினைச்சா என்ன என்று எழுந்து செல்ல முடியவில்லை… அவள் வேறு இடமாக இருந்தால், அப்படித் தான் செய்திருப்பாள். ஆனால் அது அர்ஜுனின் வீடு அவளால் அப்படிச் செல்ல முடியாது.
ஆரு மீராவின் கையைப் பிடித்து அழுத்த….. மீரா கஷ்டப்பட்டுத் தான் இயல்பாக இருப்பது போல் காட்டி கொண்டாள்.
வித்யா ரஞ்சனாவை பார்க்க… அவள் தலை குனிந்தாள். ஆதிக்குப் புரிந்துவிட்டது ரஞ்சனா தான் சஞ்சனாவிடம் மீராவை பற்றிச் சொல்லி இருக்கிறாள் என்று…ரஞ்சனாவும் சஞ்சனா எல்லோரின் முன்பும் இப்படிப் பேசுவாள் என்று எதிர்பார்க்காததால்… அவளுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
வித்யா நிலைமையைச் சரியாக்க எண்ணி, ” சீக்கிரம் சாப்பிடுங்க, ரஞ்சனா நல்ல நேரத்தில அவங்க வீட்டுக்கு கிளம்பனும்.” என்று சொல்ல…. எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். மீரா அடிக்கடி தண்ணீரை குடித்து உணவை விழுங்கினாள்.
சாப்பிட்டதும் ஆதி கடைக்குக் கிளம்ப…. ரஞ்சனாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குச் செல்கிறாள் என்று ஒரு வாரமாக ஆதி ரஞ்சனாவின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தான். அப்படிபட்டவன் தான் ஊருக்கு கிளம்பும் நேரம் கடைக்குச் செல்கிறேன் என்று சொன்னதும், அவளுக்கு அழுகை வர, “என் மேல கோபமா… அத்தை தான் என்கிட்டே மீராவை பத்தி சொன்னாங்க.” என்றாள்.
“அம்மா உன்கிட்ட சொன்னாங்க சரி, ஆனா நீ ஏன் அதை உன் தங்கைட்ட சொன்ன? அவ பாரு எல்லார் முன்னாடியும் எப்படிப் பேசிட்டா. அவளுக்கு அறிவே இல்லையா? எதை எப்போ எங்க பேசுறதுன்னு தெரியாதா?” ஆதி கோபமாகக் கேட்க… ரஞ்சனா மெளனமாக நின்றாள்.
அங்கே கணேசனும் வித்யாவை திட்டி கொண்டுதானிருந்தார். “உன்னை யாரு ரஞ்சனாகிட்ட மீராவை பத்தி சொல்ல சொன்னது. பாரு உன்னால தான் இன்னைக்கு மீரா எல்லார் முன்னாடியும் பேச்சு கேட்க வேண்டியதா போய்டுச்சு.” என்றார்.
வித்யா மீராவை பற்றிக் குறைவாகச் சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை. மீராவை பற்றிப் பெருமையாகத் தான் சொன்னார். அவங்க அம்மா அவளை வளர்களைனாலும் எப்படி யாரும் ஒரு குறையும் சொல்லமுடியாதபடி திறமைசாலியா இருக்கிறா பாரு என்று அவர் பெருமையாகத் தான் ரஞ்சனாவிடம் சொன்னார். அதுவும் அவள் இந்த வீட்டு மருமகள் என்றுதான் சொன்னார். ஆனால் இப்படி ஆகும் என்று அவர் எதிர்ப்பார்க்க வில்லை.
ஆதி ரஞ்சனாவின் மீது கோபமாக இருப்பதும், கணேசன் வித்யாவை திட்டியதும் மீராவிற்குத் தெரியும். அவளுக்குத் தன்னால் அவர்களுக்குள் பிரச்சனை வருவது பிடிக்கவில்லை. அதனால் வித்யாவிடம் சொல்லிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.
வித்யாவும் மீரா இங்கிருந்தால் எல்லோரும் அவளையே பார்ப்பார்கள் என்று நினைத்து மீரா வீட்டுக்கு போறேன் என்றதும், சரி என்றார்.
எல்லோர் முன்பும் மீராவின் பெற்றோரை பற்றிப் பேசினால், அவள் பதிலுக்கு எதாவது சொல்வாள், இல்லை கோபப்பட்டு அந்த இடத்தை விட்டு செல்வாள். அப்படி அவள் செய்தாள் இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அவளைப் பிடிக்காமல் போய் விடும் என்று சஞ்சனா நினைக்க…. ஆனால் அங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை.
எல்லோரும் அவளைத் தான் எதோ புழுவை பார்ப்பது போல் பார்த்தனர். அதுவும், ஆருவும் அவள் பெரியம்மாவும் பார்க்கும் பார்வையில் நெருப்புப் பறந்தது…. சீக்கிரம் இங்கிருந்து சென்றால் போதும் என்று இருந்தது சஞ்சனாவிற்கு.
ரஞ்சனாவின் கண்ணீரை பார்த்ததும் ஆதி சற்று இளகினான். பிரசவத்திற்காக ஊருக்கு போகும் போது பிரச்சனை வேண்டாம், திரும்பி வந்ததும் பேசிக்கொள்வோம் என்று நினைத்து ரஞ்சனாவிடம் சமாதானமாகப் பேசி அவளை வழி அனுப்பினான்.
மீரா வீட்டிற்குச் சென்ற போது அவளுக்கு அங்கே இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.
Advertisement
Advertisement
Advertisement
error: Content is protected !!