Skip to content
Post Views: 4,411
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 24
ஷ்யாமளா மறு நாள் மீராவை சந்திக்க, இந்த முறை வீட்டிற்குச் செல்லாமல், அவள் கல்லூரி செல்லும் வழியில் காத்திருக்க…. மீரா காரை நிறுத்தாமல் சென்றுவிட்டாள்.
மற்றொரு சமயம் மீராவும், கீர்த்தனாவும் ஷாப்பிங் மால் சென்றிருந்த போது, அங்கே வம்ஷி எதிரில் வந்தவன், மீராவிற்கு ஹாய் சொல்ல… மீராவிற்கு அவன் யார் என்றே தெரியவில்லை. பக்கத்தில் இருந்த கீர்த்தனா “யாருடி?” என்று கேட்க… மீரா தெரியலை என்று தோளை குலுக்கிவிட்டு சென்றாள்.
மீராவிற்கு இது கல்லூரியில் கடைசி வருடம் என்பதால்… பத்து நாட்கள் டெல்லிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். மீராவும் ஷ்யாமளாவிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று சுற்றுலாவிற்குச் சென்றுவிட்டாள்.
ஷ்யாமளா சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் தான் தங்கி இருந்தாள். அதே ஹோட்டலில் பக்கத்து அறையில் தான் வம்ஷியும் இருந்தான். ஷ்யாமளாவும், வம்ஷியும் ஹோட்டல் லானில் அமர்ந்து மாலை காபி அருந்தி கொண்டே பேசினார்கள்.
“உன் பொண்ணு உன்னை மாதிரி இல்லை ஷ்யாமளா.”
“ஆமாம், அவ அவங்க அப்பா மாதிரி.”
“எனக்கு என்னமோ நாம நினைக்கிறது நடக்கும்னு தோணலை.”
“ஏன் அப்படிச் சொல்ற வம்ஷி? மீரா என்கிட்டே பேசினது வச்சு சொல்றியா, அவளுக்கு என் மேல கோபம். நான் ரொம்ப வருஷம் அவகிட்ட இருந்து விலகி இருந்துட்டேன், அதனால தான். நான் அவகிட்ட கொஞ்சம் நெருக்கமா பழக ஆரம்பிச்சுட்டா அவ மாறிடுவா…”
“எனக்கு என்னமோ அப்படித் தோணலை, அவ என்னைத் திரும்பி கூடப் பார்க்கலை. உன் மேல கோபம் சரி, ஆனா…. என்னை நீ அவளுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளைன்னு சொல்லியும், அவ என்னைப் பார்க்கலை… அதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.”
“என்ன காரணம் வம்ஷி? நீ சொல்றது எனக்குப் புரியலை.”
“அவ மனசுல வேற யாரோ இருக்காங்கன்னு தான் நான் நினைக்கிறேன்.”
“ச்சே..ச… அப்படியெல்லாம் இருக்காது வம்ஷி, நீயா எதாவது கற்பனை பண்ணாத. அவ டெல்லில இருந்து திரும்பி வரட்டும், நான் அவகிட்ட பேசுறேன்.”
“ஓகே பேசு, ஆனா அவ இஷ்டபட்டு தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும், அவளை நீ போர்ஸ் பண்ண கூடாது, புரியுதா… நான் நாளைக்குக் காலையில லண்டன் கிளம்புறேன்.”
“ம்ம்.. ஓகே நீ கிளம்பு, நான் பார்த்துக்கிறேன்.”
வம்ஷி அவன் அறைக்குச் சென்றதும், ஷ்யாமளா தன் கடந்த காலத்தை நினைத்து பார்த்தாள்.
ஷ்யா மளா மனோஜை திருமணம் செய்து லண்டன் சென்ற போது.. அவளுக்கு எதோ ஸ்வர்கலோகதிற்கே வந்த மாதிரி தான் இருந்தது. ஆனால் வருடங்கள் செல்ல செல்ல… அலுப்பு தான் தோன்றியது. என்ன தான் லண்டனில் இருந்தாலும், அவள் கணவன் மனோஜ் கை நிறையச் சம்பாதித்தாலும். ஷ்யாமளாவிற்கு இருக்கும் பேராசை முன்பு அதெல்லாம் தூசு தான்.
ஷ்யாமளாவிற்கு இரண்டு பையன்கள், இருவருமே இப்போது பெரிய க்ரேட் படிப்பதால் ஷ்யாமளாவை தேடுவதில்லை. மனோஜ் எப்போதும் வேலை வேலை என்று அலைய… ஷ்யாமளாவிற்கு வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பித்தது. அப்போது தான் ஒரு நண்பரின் மூலம் வம்ஷியின் நட்பு ஏற்பட்டது.
வம்ஷி லண்டனில் இருக்கும் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவன். அவர்கள் குடும்பம் அங்கே ஐந்து தலைமுறைகளாக இருக்கின்றனர். அவர்களுடையது பெரிய குடும்பம். அவர்களுடன் பழக ஆரம்பித்ததும், ஷ்யாமளாவிற்கு லண்டனில் உயர்மட்ட நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று வாழ்க்கை திரும்பச் சுவாரசியமானது.
அப்படிப்பட்ட நேரத்தில் தான் ஒரு நாள் வம்ஷி ஷ்யாமளாவை ஒரு பார்டிக்கு அழைத்துச் செல்ல… அவள் வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது டிவியில் தமிழ் சேனல் ஓடிக்கொண்டிருந்தது. ஷ்யாமளா உடை மாற்ற உள்ளே செல்ல… வம்ஷி ஹாலில் அமர்ந்து டிவியில் ஓடிக்கொண்டிருந்த பரத நாட்டியத்தை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
ஷ்யாமளா உடை மாற்றிக் கொண்டு வந்தவள், வம்ஷி தன்னை மறந்து டிவியைப் பார்ப்பததைக் கவனித்து, அவனை உலுக்க…. கனவுலோகத்தில் இருந்து இறங்கியவன், “என்ன ஒரு அழகு, இந்தப் பொண்ணு மட்டும் எனக்கு மனைவியா வந்தா, நான் என்னோட எல்லாச் சொத்தையும் அவளுக்கே கொடுத்துடுவேன்.” என்றான்.
“உண்மைய தான் சொல்றியா வம்ஷி…. நான் அந்தப் பொண்ண உனக்குக் காட்டினா… எனக்கு என்ன தருவ?” ஷ்யாமளா கேட்க….
வம்ஷி ஷ்யாமளவை பார்த்து முறைத்தவன், “சும்மா விளையாடாத, உனக்கு அந்தப் பெண்ணைத் தெரியுமா என்ன?” என்று நம்பாமல் கேட்க….
“தெரியும், நான் அவளை உனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சா… நீ ஆரம்பிக்கப் போற புதுப் பிசினஸ்ல, என்னோட கணவரையும் பார்ட்னரா சேர்த்துக்கனும், சரியா?” ஷ்யாமளா பேரம் பேச… வம்ஷிக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. அதனால் அவன் சந்தேகமாகத் தலையாட்ட “கவலைபடாதே, அவ என்னோட பொண்ணு தான்.” என்றாள் ஷ்யாமளா வாயெல்லாம் பல்லாக.
வம்ஷி அவளை நம்பாமல் பார்க்க… தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றிச் சொல்லி, முன்பு எடுத்த மீராவின் போட்டோவையும் கொண்டு வந்து ஷ்யாமளா காண்பிக்க… வம்ஷியின் முகம் மலர்ந்தது. “ரியலி, இப்பவும் என்னால நம்ப முடியலை, இந்தத் தேவதை உன்னோட பொண்ணா?” என்று அவன் ஆச்சர்யப்பட…
“இன்னும் எத்தனை தடவை கேட்ப வம்ஷி? அவ என்னோட பொண்ணு தான். அதோட அவ உனக்குத் தான். இப்ப சந்தோஷமா… நீ நான் சொன்னதை மறந்திட கூடாது.”ஷ்யாமளா அவள் காரியத்தில் கண்ணாக இருந்தாள்.
வம்ஷிக்கு சந்தோஷத்தை கட்டுபடுத்தவே முடியவில்லை. ஷ்யாமளாவின் கையைப் பிடித்துக் குலுக்கியவன், “கண்டிப்பா… உன்னோட கணவரை பார்ட்னரா சேர்த்துகிறேன். நீ ஒரு பைசா தர வேண்டாம்.” என்றான்.
ஷ்யாமளாவிற்கு உலகையே வென்ற மகிழ்ச்சி உண்டானது. பின்னே வம்ஷியின் பிசினஸ் பார்ட்னர் என்றால் சும்மாவா… இனி தானும் லண்டனில் இருக்கும் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருத்தி என்று கனவு கண்டவள், தன் மகளுக்கு என்று ஒரு கனவு இருக்கும், ஆசை இருக்கும் என்பதை நினைக்க மறந்தாள்.
இவள் சொன்னதும் மீரா வம்ஷியை திருமணம் செய்யச் சம்மதித்து விடுவாள் என்ற நம்பிக்கையில் வம்ஷியையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்தாள். ஆனால்… இந்த மீரா பிடி கொடுத்தே பேசவில்லை என்ன செய்வது என்று யோசித்தவள், சரி… மீரா டூர்ல இருந்து திரும்பி வரட்டும் பார்ப்போம் என்று எழுந்து அவள் அறைக்குச் சென்றாள். வம்ஷி மறுநாள் லண்டன் செல்ல… ஷ்யாமளாவும் தன் பெற்றோர் இருக்கும் ஊருக்கு சென்றாள்.
மீரா டெல்லியில் இருந்து வந்ததும், ஷ்யாமளா அவளைக் கல்லூரியில் சென்று பார்க்க… மீராவும் வேறு வழியில்லாமல் வந்தாள். “என்ன மீரா? எதுக்கு நீ இப்போ என்னை அவாய்ட் பண்ற?” ஷ்யாமளா கேட்க…
“உங்களுக்குத் தெரியாதா… நீங்க எதுக்கு என் மேல திடிர்னு அக்கறை காட்றீங்க? அதுதான் எனக்குப் புரியலை.” என்றாள் மீரா.
“இதுல புரியாம போறதுக்கு என்ன இருக்கு? வம்ஷி அங்க லண்டன்ல இருக்கிற பெரிய பணக்காரன். அவங்க அங்க அஞ்சு தலைமுறையா கொடி கட்டி பறக்கிறாங்க. நீ அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா… நீயும் நானும் பக்கத்துல இருக்கலாம். நாம இவ்வளவு வருஷம் பிரிஞ்சு இருந்துட்டோம், இனி சேர்ந்து இருக்கலாம்னு தான்.” ஷ்யாமளா தன் மகளோடு சேர்ந்திருக்க ஆசைப்படுவது போல் பேச… மீரா மெளனமாக ஷ்யாமளாவையே பார்த்தாள்.
அவள் பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்த ஷ்யாமளா “என்ன அப்படிப் பார்க்கிற?” என்று கேட்க…. “உங்களுக்கு வம்ஷி எவ்வளவு பணம் தரேன்னு சொன்னார்?” என்று அவள் நேரடியாகக் கேட்கவும், ஷ்யாமளாவின் முகம் வெளுத்தது.
“என் பொண்ணுக்கு பெரிய இடத்தில கல்யாணம் பண்ணனும்னு ஆசை தானே தவிர, இதுல எனக்கு வேற என்ன லாபம் இருக்கப் போகுது?” ஷ்யாமளா சமாளிக்க….
மீரா வாய்க்குள் புன்னகைத்தவள், “என்னைக் கேட்டா…அது உங்களுக்குத் தான் தெரியும்.” என்றவள் தொடர்ந்து “உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி. எனக்குக் கல்யாணம் பண்ணி வெளிநாட்டுக்கு வர்ற ஐடியா இல்லை… அதனால இதை இதோட விட்டுடுங்க. இனிமே என்னைக் காலேஜ்ல வந்து தொந்தரவு பண்ணாதீங்க.” என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றாள்.
ஷ்யாமளா தான் நினைத்து வந்த காரியம் நடக்காமல் போன ஆத்திரத்தில் கோபமாகச் சென்றவள், மறு நாளே லண்டனுக்கும் கிளம்பி சென்றாள். ஒரு வாரம்வரை ஷ்யாமளா வரவில்லை என்றதும், மீரா அவள் லண்டனுக்குச் சென்றிருப்பாள் என்று நிம்மதி அடைந்தாள்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. மீரா வளைகாப்பிற்கு அர்ஜுனின் வீட்டிற்குச் சென்றதுதான், அதன் பிறகு இன்னும் செல்லவில்லை. டெல்லியில் இருந்து அர்ஜுனின் வீட்டினருக்கு வாங்கி வந்த பரிசு பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கே சென்றாள்.
“வா மீரா, என்ன இந்தப் பக்கம் ஆளையே காணோம், எங்க மேல கோபமா?” வித்யா கேட்க…
“இல்லை ஆன்டி, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் காலேஜ் டூருக்கு டெல்லி போய் இருந்தேன். அது தான் வரலை. ஆருகிட்ட சொல்லிட்டு தான் போனேன்.” என்று சொல்லி, மீரா அவள் வாங்கி வந்த பரிசு பொருட்களைக் கொடுக்க… வித்யா அதை ஆர்வமாக வாங்கிப் பார்த்தார்.
மீரா வாசலில் போடும் தோரணம், குங்கும சிமிழ், ஹன்ட் பாக் மற்றும் சில ஷோ கேஸ் பொம்மைகள் என்று அழகான வேலைபாடுகள் செய்த பொருட்களை வாங்கி வந்திருந்தாள். வித்யா எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தவர், “ரொம்ப அழகா இருக்கு மீரா, நல்லா செலக்ட் பண்ணி இருக்கே.” என்றார்.
“எனக்கு என்னடி வாங்கிட்டு வந்த?” ஆரு கேட்க… “உனக்கு ஒரு ஹன்ட் பாக், இன்னொன்னு ஆன்டிக்கு அப்புறம் இன்னொன்னு ரஞ்சனா அக்காக்கு.” என்றாள் மீரா. அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் ஆதி.
அன்று சஞ்சனா பேசியதை மீரா அர்ஜுனிடம் சொல்லவில்லை என்று ஆதிக்கு தெரியும். அர்ஜுனுக்குத் தெரிந்திருந்தால் இந்நேரம் தன்னிடம் கேட்டிருப்பான். அவன் கேட்கவில்லை என்பதிலிருந்தே மீரா சொல்லவில்லை என்பதைத் தெரிந்து கொண்டான்.
வித்யா சமையல் அறைக்குச் சென்றதும், “சாரி மீரா, ரஞ்சனா எதோ எதேட்சையாதா தான் சஞ்சனாட்ட சொல்லி இருக்கா, உன்னைப் பத்தி தப்பா சொல்லனும்னு சொல்லலை.” ஆதி சொல்ல…
“தெரியும் அத்தான், ரஞ்சனா அக்கா என்னைப் பத்தி தப்பா நினைச்சு சொல்லி இருக்க மாட்டாங்கன்னு எனக்கும் தெரியும்.” என்றாள் மீரா. அதைக் கேட்டதும் ஆதியின் முகம் மலர்ந்தது.
“இனிமே சஞ்சனா உன்னைப் பத்தி பேசாம… நான் பார்திகிறேன்.” என்றான். மீரா சரி என்று தலையாட்டிவிட்டு உள்ளே சென்றாள். ஆதிக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.
வித்யா குடுத்த ஜூஸ்சை குடித்ததும் மீராவும், ஆருவும் மாடிக்கு சென்று அர்ஜுனை ஸ்கைப்பில் அழைக்க… அர்ஜுன் மீராவையும், ஆருவையும் சேர்ந்து பார்த்ததும், ரொம்பச் சந்தோஷபட்டான்.
“ஹாய் செல்லம்ஸ்… ரெண்டு பேரும் இன்னைக்குச் சேர்ந்து வந்திருக்கீங்க.” என அர்ஜுன் சொன்னதைக் கேட்ட சூர்யாவும், ஆருவை பார்க்கும் ஆவலில் அர்ஜுனின் அருகே வந்து அமர்ந்தான்.
“இன்னைக்குத் தான் உன் ஆளுக்கு எங்களை எல்லாம் ஞாபகம் வந்திருக்கு. மேடம் கோபம் குறைஞ்சிடுச்சு போல… நான் எத்தனை தடவை போன் பண்ணேன் வரவேயில்லை. நான் யாருக்குன்னு சப்போர்ட் பண்றது, நீயே சொல்லு. அண்ணி வேற பிரசவத்துக்குப் போகும் போது என்ன சொல்லறது?” என ஆரு படபடவென்று பொரிய… அர்ஜுனுக்கு ஒன்றும் புரியவில்லை…. மீரா ஆருவின் கையைப் பிடித்துக் கிள்ளியதும் தான் ஆரு நிறுத்தினாள்.
“என்ன சொல்ற ஆரு? மீராவுக்கு என்ன கோபம்?” அர்ஜுன் புரியாமல் கேட்க…. மீரா ஆருவை பார்த்து முறைத்தாள். அப்போது தான் ஆருவுக்குப் புரிந்தது. அர்ஜுனிடம் மீரா எதையும் சொல்லவில்லை என்று.
எதோ உளறிட்டா போலிருக்கே, இப்ப இவன் ஆட ஆரம்பிப்பானே என்று நினைத்த சூர்யா, “மீரா, டெல்லி டூர் எப்படி இருந்துச்சு? எங்க எல்லாம் போனீங்க?” என்று பேச்சை மாற்ற… மீரா வாயை திறக்கும் முன் “முதல்ல நீ வளைகாப்பு அன்னைக்கு என்ன நடந்துச்சு சொல்லு?” என்று அர்ஜுன் கேட்டான்.
“ஒன்னும் பெரிய விஷயம் இல்லை அர்ஜுன், நான் அப்புறம் உங்களுக்குச் சொல்றேன்.” மீரா சொன்னதும் அர்ஜுனும் இப்போது அவள் தன் வீட்டில் இருக்கிறாள் என்று பேசாமல் இருந்தான். மீரா சூர்யாவிடம் “நிறைய இடம் பார்த்தோம் சூர்யா… சிம்லா கூடப் போனோம்.” என்றாள்.
“அப்படியா நான் கூட இங்க நிறையப் பார்த்திட்டேன், ஆனா… ஒன்னு கூடச் செட்டாகலை.” சூர்யா கவலையாகச் சொல்ல…. என்ன செட்டாகலை? ஆருவும், மீராவும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்க்க… “புரியலையா… அவனுக்குக் கேர்ள் பிரண்ட் செட் ஆகலையாம், அதைத் தான் அந்த லட்சணமா சொல்றான்.” அர்ஜுன் சொன்னதும், மீரா சிரிக்க… ஆரு சூர்யாவை முறைத்தாள்.
“உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை, கேர்ள் ப்ரண்ட்…. அதுவும் உங்களுக்கு… ரொம்பத் தேவை…” ஆரு நக்கலாகச் சொல்ல…..
“ஏன் எனக்கு என்ன குறைச்சல்? எனக்குக் கேர்ள் ப்ரண்ட் இருக்கக் கூடாதா… நான் ஆஸ்திரேலியால ஒரு கேர்ள் ப்ரண்டாவது பிடிச்சிட்டு தான் இந்தியா வருவேன்.”
“நீங்க எதுக்கு ஆஸ்திரேலியா போனீங்க படிக்கவா இல்லை… கேர்ள் ப்ரண்ட் பிடிக்கவா…” ஆரு கேட்க…
“படிக்கத் தான் வந்தேன். அப்படியே வந்த இடத்தில ஒரு பொண்ணு பார்த்திட்டா, எங்க அப்பா அம்மாவுக்கு வேலை மிச்சம் இல்லை. அதோட இங்க இருக்கிற பொண்ணுங்க எல்லாம் என்ன கலரு தெரியுமா. நம்ம ஊரு பொண்ணுங்க எல்லாம் இந்தப் பொண்ணுங்க கிட்ட கூட நிக்க முடியாது.” சூர்யா வீண் ஜம்பம் பேச….
“இருங்க உங்க அம்மாட்ட போட்டுக் குடுக்கிறேன், உங்க பையன் படிக்கப் போன இடத்தில பொண்ணு தேடுறாருன்னு” ஆரு மிரட்ட…
“ரொம்பத் தேங்க்ஸ், நானே எப்படிச் சொல்றதுன்னு நின்னைசேன், நீ சொல்லிட்டா எனக்கு ஒரு வேலை மிச்சம். நீயே சொல்லிடு.” சூர்யா சராமாரியாக ஆருவை தாக்க….
ஆருவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை…. ஆனால் ரொம்பக் கோபம் வந்தது. அதனால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், “போடா லூசு… உன்னை எல்லாம் ரெண்டு கண்ணும் இல்லாத பொண்ணு தான் லவ் பண்ணும்” என்றாள்.
சூர்யா சிரிப்பை அடக்கி கொண்டு ” ரொம்பத் தேங்க்ஸ்.” என்று சொல்ல…. “ஆரு என்ன பேசுற நீ, உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா… வர வர உனக்கு வாய் அதிகமாகிட்டே போகுது.” அர்ஜுன் அவளை அதட்ட…. ஆருவிற்குக் கண்ணில் அருவி கொட்ட ஆரம்பித்தது.
“நீ ஏன் டா டென்ஷன் ஆகுற? நாங்க ரெண்டு பேரும் பேசுறோம், நான் உன்னைப் பஞ்சாயத்துக்குக் கூப்பிட்டேனா…” சூர்யா ஆருவிற்குப் பரிந்து பேச….
“நீ சும்மா இருடா.” என்ற அர்ஜுன் “ஆரு… சூர்யாகிட்ட சாரி கேளு.” எனச் சொல்ல… ஆரு முடியாது என்று எழுந்து சென்றாள்.
ஆருவிற்கு இப்போது தான் பல்பு எரிய ஆரம்பித்திருகிறது என்று மீராவிற்கும் சூர்யாவிற்கும் புரிந்தது. அதனால் இருவர் முகமும் புன்னகையில் விரிந்தது. ஆனால் அது புரியாத அர்ஜுன், இவ என்ன இப்படிச் சொல்லிட்டு போறா என்று நினைத்தான்.
“சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன்.” மீரா சொல்ல… அர்ஜுனும், சூர்யாவும் அவளுக்கு bye சொல்லி தொடர்பை துண்டித்தனர்.
மீரா அவள் வீட்டிற்கு வந்து, அவள் அறைக்குள் நுழைந்து தான் இருப்பாள். அதற்குள் அர்ஜுன் செல்லில் அழைத்துவிட்டான். மீரா எதிர்பார்த்ததுதான், இப்ப இவனை எப்படிச் சமாளிக்கிறது? யோசித்துக் கொண்டே சென்று போன்னை எடுத்தாள்.
Advertisement
Advertisement
Advertisement
error: Content is protected !!