Skip to content
Post Views: 4,303
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 25
“அர்ஜுன், இப்ப தான் வந்தேன். டிரஸ் மாத்திட்டு கால் பண்றேன்.” மீரா சொல்ல…. அர்ஜுன் சரி என்று போன்னை வைத்தான்.
Advertisement
அர்ஜுன் மீராவுடன் பேச ஆரம்பித்தால் எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு வரமாட்டான், அதற்குள் நாமும் ஆருவுடன் பேசி விடுவோம் என்று நினைத்த சூர்யா, ஹாலில் அமர்ந்து அர்ஜுனின் மொபைலில் இருந்து சுட்ட ஆருவின் எண்ணிற்கு அழைக்க….. அதற்குள் அர்ஜுன் அறையில் இருந்து வெளியே வந்துவிட்டான்.
அர்ஜுனை எதிர்பார்க்காத சூர்யா தொடர்பை துண்டித்துவிட்டு, “என்னடா மீராவோட பேசலை.” என்று கேட்க…. “இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு, அவளே போன் பண்றேன்னு சொன்னா…” என்றான். சூர்யா “சரி நீ பேசு, நான் வெளிய வாக்கிங் போயிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
அங்கே ஆரு அவள் செல் அடித்ததும், யார் என்று எடுத்து பார்க்க…. அது சூர்யாவின் எண். அர்ஜுன் எதற்கும் சூர்யாவின் நம்பரையும் அவர்கள் வீட்டில் எல்லோரிடமும் கொடுத்து வைத்திருந்தான். ஒருவேளை அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால்… சூர்யாவின் மூலம் தொடர்புகொள்ளக் கொடுத்திருந்தான்..
ஆரு இப்போ இவன் எதுக்குப் போன் பண்றான்? என்று நினைக்கும் போதே போன் கட்டாகிவிட்டது. இப்போது என்ன செய்வது? எதுக்குப் போன் பண்ணாங்க? அர்ஜுனுக்கு அழைத்துக் கேட்பமா என்று நினைக்கும் போதே, திரும்பச் சூர்யா அழைத்துவிட்டான்.
ஆரு வேகமாகப் போன்னை எடுத்து ஹலோ என்றதும், “ஆரு தான?” சூர்யா கிசுகிசுப்பாகக் கேட்க…. ஆரு “ஆமாம்” என்றாள்.
“நான் சூர்யா..” என்று சொல்ல வருவதற்குள், “தெரியும் நீங்க சூர்யா, உங்க நம்பர் என்கிட்டே இருக்கே ” ஆரு அசால்டாகச் சொல்ல…
“இருக்கா… அப்புறம் ஏன் இவ்வளவு நாள், நீ எனக்குப் போன் பண்ணலை?” சூர்யா காட்டமாகக் கேட்க… “நான் எதுக்கு உங்களுக்குப் போன் பண்ணனும்?” என்றாள் ஆரு.
“ஸ்….ஹப்பா…இப்பவே கண்ணைக் கட்டுதே, நீ உரிமையா உங்க அண்ணனுக்கு என்னைச் சமைக்கச் சொல்லுவ, நான் அதுக்குச் சரின்னு சொல்லணும். நான் கேர்ள் ப்ரண்ட் பிடிச்சா… அதுக்கும் சண்டைக்கு வந்து போடா லூசுன்னு திட்டுவ, நான் அதையும் வாங்கிக்கணும். ஆனா… எனக்குப் போன் பண்ணி பேச மட்டும் காரணம் கேட்ப. எல்லாம் நேரம், உனக்கு நிஜமாவே தெரியாது.”
“தெரியாது…”
“சரி, நான் இங்க கேர்ள் ப்ரண்ட் பிடிப்பேன்னு சொன்னா உனக்கு ஏன் கோபம் வருது?”
“இல்லையே…. அப்படியெல்லாம் எதுவும் இல்லையே.”
“சரி அப்ப நான் இங்க கேர்ள் ப்ரண்ட் பார்த்துகிட்டுமா…” சூர்யா கேட்க….
“அடி வாங்குவீங்க.” என்றாள் ஆரு.
“ஆரு விளையாடினது போதும், எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” சூர்யா நேரடியாகக் கேட்டுவிட….
“அர்ஜுனுக்குத் தெரிஞ்சா… வீட்ல ஒத்துக்குவாங்களா…..” ஆரு இழுக்க…
“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு…. பிடிச்சிருக்கா, இல்லையா… எந்த வீட்ல தங்கச்சி லவ் பண்றேன்னு சொன்னா அண்ணன் ஒத்துப்பான், அதே மாதிரி வீட்ல இருக்கிறவங்க கிட்ட நாம தான் பேசி புரியவைக்கணும்.”
“அப்ப அர்ஜுன் ஒத்துக்குமாட்டானா…. அவன் மட்டும் லவ் பண்றான்.” என்றாள் ஆரு கவலையாக…
“தெரியலை ஆரு, உனக்கு இஷ்டமா இல்லையா… நீ முதல்ல சொல்லு.”
“எங்க அம்மாவை நினைச்சா எனக்குப் பயமா இருக்கே, நம்ம கல்யாணம் நடக்குமா…” என்று ஆரு கேட்டதிலேயே சூர்யாவிற்கு அவள் விருப்பம் புரிந்துவிட்டது.
“நடக்கும், நாம தான் இப்ப சொந்தகாரங்க ஆகிட்டோமே… அதனால பிரச்சனை இருக்காது.” என்றான் சூர்யா.
“அர்ஜுன் தப்பா நினைச்சிட்டானா… என்ன பண்றது?” ஆரு கேட்க…
“நானும் அதை நினைச்சு தான் இத்தனை நாள் உன்கிட்ட சொல்லலை, ஆனா… அர்ஜுனை மீரா பார்த்துக்குவா…” சூர்யா நம்பிக்கையோடு சொல்ல…
“மீராவுக்குத் தெரியுமா…” ஆரு ஆச்சர்யப்பட…
“ம்ம்…தெரியும்.” என்றான் சூர்யா…
“அப்ப சரி… எனக்கு ஓகே…” என்று ஆரு தைரியமாகச் சொல்ல…
“என்ன ஓகே? எதுக்கு ஓகே? விளக்கமா சொல்லு….” என்று சூர்யா அவளை வம்பு இழுக்க…
“நீங்க எனக்குக் காலம் பூரா சமைச்சு போட… எனக்கு ஓகே.” என்றாள் ஆரு சந்தோஷமாக. சூர்யா முகத்திலும் புன்னகை மலர்ந்தது. “அடிங்க… மரியாதையா ஐ லவ் யு சொல்லு.” அவன் மிரட்ட…
“நீங்க பர்ஸ்ட் சொல்லுங்க.”ஆரு வெட்கப்பட்டுக் கொண்டே சொல்ல…
” ஐ லவ் யு ஆராதனா.” என்று சொல்லி சூர்யா போன்னில் முத்தம் கொடுக்க… அருவும் ” ஐ லவ் யு சூர்யா…” என்றாள் கிசுகிசுப்பாக.
“எனக்கு உன்னை இப்பவே பார்க்கணும் போல இருக்கே.” சூர்யா சொல்ல… ஆரு “எனக்கும் தான்.” என்றாள். இங்கே ஒரு ஜோடி கொஞ்சி கொண்டிருக்க…. அங்கே ஒரு ஜோடி சண்டை போட்டுக் கொண்டிருந்தது.
“இவ்வளவு நடந்திருக்கு, நீ என்கிட்டே ஒண்ணுமே சொல்லலை… இரு நான் அந்தச் சஞ்சனாவை உண்டு இல்லைன்னு ஆக்களை… என் பேரு அர்ஜுன் இல்லை.”
“பாருங்க பாருங்க… எப்படிக் கோபம் வருது. அன்னைக்கும் இப்படித் தான் சஞ்சனாவை கத்துனீங்க. அதனால யாருக்குக் கஷ்டம், ஆதி அத்தானுக்குத் தான். நீங்க இப்பவும் அது மாதிரி எதாவது பண்ணா எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும்.”
“என்ன பிரச்சனை ஆகும் மீரா?”
” என்ன அர்ஜுன் தெரியாத மாதிரி கேட்கறீங்க? சஞ்சனாகிட்ட சொன்னது ரஞ்சனா அக்கா. ரஞ்சனா அக்காகிட்ட சொன்னது வித்யா ஆன்டி. இப்ப நீங்க போய் எதாவது பேசினா எல்லோருக்கும் மனசு கஷ்டம் ஆகும். அதனால இதை இதோட விட்டுடுங்க…”
“அதெல்லாம் விட முடியாது….. நான் கேப்பேன்.”
“நல்லா கேளுங்க எனக்கு என்ன? என்னைகாவது நம்ம விஷயம் அவங்களுக்குத் தெரியும் போது, நான் சொல்லித்தான் நீங்க கேட்டதா வித்யா ஆன்டியும், ரஞ்சனா அக்காவும் நினைப்பாங்க. அப்புறம் எங்களுக்குள்ள தான் பிரச்சனை வரும். எனக்குப் பிறந்த வீட்ல தான் யார் கூடயும் சேர்ந்து இருக்கக் குடுப்பினை இல்லை… புகுந்த வீட்லயும் அப்படியே இருக்கட்டும்.” மீராவின் குரலில் அழுகை எட்டி பார்க்க…
“எப்படியோ எதாவது சொல்லி… நீ நினைச்சத சாதிச்சிடுற….” என்றான் அர்ஜுன் எரிச்சலாக.
“அப்படி இல்லை அர்ஜுன். குடும்பத்தில பெண்களுக்குள்ள பிரச்சனை வந்தா… அதை அவங்களே சரி பண்ணிக்கணும். அதைவிட்டுட்டு அதுக்குள்ள ஆண்களை இழுத்தா… நீங்க எதாவது பேசி பிரச்சனை பெரிசாகிடும். நாங்க இன்னைக்கு அடிச்சுக்குவோம், நாளைக்குச் சேர்ந்துக்குவோம். அதுக்குத் தான் வேற ஒன்னும் இல்லை.”
அர்ஜுன் மீரவையே பார்த்தான். இந்தச் சின்ன வயதில் அவளுக்கு இருக்கும் தெளிவை பார்த்து வியந்தான். சூர்யா வீட்டில் இல்லை என்று இருவரும் ஸ்கைப்ல் தான் பேசிக்கொண்டிருந்தனர். மீரா நைட் பாண்ட்டும், டாப்பும் போட்டிருந்தாள்.
மீரா அர்ஜுனை பார்க்க… அவன் அவளை ரசனையோடு பார்த்து ரசிக்க….மீராவிற்கு வெட்கமாக இருந்தது. அவள் ஒரு தலையணையை எடுத்து தன் மேல் போட்டுக்கொண்டாள். இதற்கு முன் மீரா அர்ஜுனோடு பேசும் போது, இரவு உடையில் இருந்தது இல்லை. இன்று போன்னில் தானே பேச போகிறோம் என்று இரவு உடை அணிந்தாள். ஆனால் சூர்யா இல்லை என்று அர்ஜுன் ஸ்கைப்ல் அழைக்க… அவளும் அவசரத்தில் உடை மாற்றாமல் இருந்தாள்.
“மீரா… நீ நம்ம ப்ர்ஸ்ட் நைட்டுக்கு, என்ன டிரஸ் போட்டுப்ப? அன்னைக்குப் போட்டிருந்தியே அந்தச் சாண்டல் கலர்ல மரூன் பார்டர் புடவை கட்டிப்பியா.. இல்லை மடிசார் கட்டிப்பியா… இல்லை இன்னைக்குப் போட்டிருக்க டிரஸ் போட்டிருப்பியா…” அர்ஜுன் கேட்க…
“மடிசரா… யாரவது ஃப்ர்ஸ்ட் நைட்டுக்கு போய் ஒன்பது கஜம் மடிசார் புடவை கட்டிப்பாங்களா?” மீரா வாயை பிளந்தாள். அவன் தான் லூசு தனமாகக் கேட்கிறான் என்றால், இவளும் வாயை விட… அர்ஜுன் ஆவலாக, “அப்ப என்ன போட்டுப்ப?” என்றான் முகத்தில் விரிந்த புன்னகையுடன்.
“இங்க கல்யாணமே எப்படி நடக்கப் போகுதுன்னு தெரியலை… இதுல இப்ப ஃபர்ஸ்ட் நைட் பத்தி ரொம்ப முக்கியம்.” மீரா சலிக்க…
அர்ஜுன் கண் சிமிட்டி “எனக்கு ரொம்ப முக்கியம் மீரா….” என்றான்.
“சும்மா இருங்க அர்ஜுன், வேற எதாவது பேசுங்க.” மீரா சொல்ல…
“முதல்ல ஆருவுக்கு இந்த வருஷம் கல்யாணம் பண்ணிடனும். அப்பத்தான் நாம் அடுத்த வருஷமாவது கல்யாணம் பண்ணிக்க முடியும்.” என்றான் அர்ஜுன்.
இப்படியே இரண்டு ஜோடிகளும் காதல், சண்டை, கெஞ்சல், கொஞ்சல் என்று நாட்களை ஒட்டினர்.
அங்கே ரஞ்சனாவிடம் சஞ்சனா, “ரஞ்சு… நம்ம அம்மா அப்பா பாவம் இல்லை.” என்று ஆரம்பிக்க… ரஞ்சனா எதற்கு என்று அவளைப் புரியாமல் பார்க்க… “நாம ரெண்டு பேரும் பொண்ணுங்க. நானும் கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போயிட்டா… அப்பா அம்மாவை யார் பார்த்துப்பா?” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சஞ்சனா கேட்க…ரஞ்சனாவிற்கும் அதை நினைத்து கவலை தான்.
“ஆதி நம்ம அம்மா அப்பாவை பார்துகிறேன்னு சொல்லி இருக்கார்.”
“எத்தனை நாளுக்கு நீங்க பார்க்க பார்க்க முடியும் ரஞ்சு. அதுவும் நீங்க சென்னையில கடை வச்சிருக்கீங்க. எனக்கும் கல்யாணம் ஆகிட்டா… என் வீட்டுகாரரும் உன் வீட்டுகாரரும் யார் பார்த்துகிறதுன்னு சண்டை போடுவாங்க இது தேவையா..”
“இப்ப என்ன தாண்டி சொல்ல வர? சுத்தி வளைக்காம சொல்லு.”
“நானும் நீயும் வேற… வேற வீட்ல இருந்தா தான் இந்தத் தொல்லை. நீயும் நானும் ஒரே வீட்ல இருந்தா… நாம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அம்மா, அப்பாவை பார்த்துக்கலாம். யாரு பார்த்துகிறதுன்னு சண்டையும் வராது. அவங்க அண்ணன் தம்பிக்குள்ள விட்டு குடுத்துக்குவாங்க.” என்று சஞ்சனா மெதுவாகச் சொல்ல…
“அப்படினா… நீ என்ன சொல்ல வர, அர்ஜுனை நீ கல்யாணம் பண்ணிகிறேன்னு சொல்றியா…” ரஞ்சனா கேட்க…
“நீ எதுக்கு இப்படி வாயை பிளக்குற… நீ நினைச்சா முடியும். ரஞ்சு ப்ளீஸ்…” சஞ்சனா கெஞ்ச… ரஞ்சனவிற்கு அவள் தங்கையைப் பார்க்கவும் பாவமாக இருந்தது.
“சஞ்சனா… நீ உன் மனசுல எந்த ஆசையும் வளர்துக்காத, ஆனா… நான் உன்னை அர்ஜுனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடியுமான்னு பார்க்குறேன்.” என்றாள். சஞ்சனாவிற்கு அவள் சொன்னதே போதும். அதனால் அவள் சந்தோஷத்துடன் சரி என்றாள்.
சஞ்சனா சொன்னதையே நினைத்துக் கொண்டு இரவு படுத்திருந்த ரஞ்சனாவிற்குப் பிரசவ வலி எடுத்தது. ஆதியும், வித்யாவும் உடனே கிளம்பி வந்தனர். ரஞ்சனாவிற்கு மறு நாள் மதியம் அழகான பெண் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு முதலில் மகாலட்சுமி பிறந்திருக்கிறாள் என்று எல்லோரும் ஆசையாகக் கொண்டாடினார். அர்ஜுன் அங்கே ஆஸ்திரேலியாவில் வீடே அதிரும்படி குதித்துக் கொண்டிருந்தான்.
ரஞ்சனா மூன்று நாள் கழித்து ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்ததும், “நான் இன்னைக்குச் சென்னைக்குக் கிளம்புறேன். முப்பதாம் நாள் வந்து குழந்தைக்குப் பேர் வச்சிட்டு உங்களை என்னோட அழைச்சிட்டு போறேன்.” ஆதி சொல்ல….
“அதுக்குள்ளையா…” ரஞ்சனா கேட்க….
“நீ அதுவரை இங்க இருந்தா போதும். இன்னொரு விஷயம், இனி உன் தங்கை உன்னை அங்க பார்க்க வந்தா… வாய மூடிட்டு இருக்கணும். அனாவசியமா மத்தவங்க விஷயத்தில தலையிட கூடாது. அப்புறம் மத்தவங்க அவளை எதாவது சொன்னா… நான் எதுவும் கேட்க மாட்டேன். நீயும் நம்ம வீட்டு விஷயத்தை அவகிட்ட உளறாத.” என்றான் ஆதி.
“நான் எங்க நம்ம வீட்டு விஷயத்தைச் சொன்னேன்.” ரஞ்சனா புரியாமல் பார்க்க… “உனக்கு மீரா நம்ம வீட்டு ஆள் இல்லைன்னு தெரியுமா?” என்ற கேட்ட ஆதி எழுந்து சென்றுவிட்டான். ரஞ்சனாவிற்குத் தலையைச் சுற்றியது…. அப்ப மீரா யாரு? என்று குழம்பினாள்.
அவளது குழப்பத்திற்கு விடை …முப்பதாம் நாள் அவர்களது மகளுக்கு ஐஸ்வர்யா என்று பெயர் வைத்து சென்னைக்கு வந்தததும் தெரிந்தது.
Advertisement
Advertisement
error: Content is protected !!