Skip to content
Post Views: 3,473
ஆட்டோ டிரைவர் ஸ்டேஷன் வந்துவிட்டது என்று சொன்னதும் தான் இருவரும் விலகி ஆட்டோவில் இருந்து இறங்கினர். இன்னும் ரெயிலுக்கு நேரம் இருந்ததால், இருவரும் அங்கிருந்த உணவகத்தில் சென்று மதிய உணவு அருந்திவிட்டு, பின் அங்கிருந்த கடைகளைச் சுற்றி வந்து, ரெயிலுக்கு நேரம் ஆனதும் சென்று ரெயிலில் ஏறினர்.
அது ஏசி சேர் கார் கோச். பஸ் சீட் போலவே வரிசையாக இருக்கும். ரெயில் பயணம் முழுவதும் இருவரும் அருகருகே அமர்ந்து, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கதை பேசிக்கொண்டே வந்தனர். இருவருக்கும் ஆறு மணி நேரம் போனதே தெரியவில்லை. சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்ததும், இருவரும் இறங்கி டாக்ஸி பிடித்து, முதலில் மீரா வீட்டுக்கு சென்று அவளைப் பத்திரமாக விட்டுவிட்டு, பின் அர்ஜுன் அவன் வீட்டிற்குச் சென்றான்.
இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்த அர்ஜுனை பார்த்து வித்யா “எங்கடா போயிட்டு வர? காலையில இருந்து ஆள காணோம்.” என்று கேட்க…
“ப்ரண்ட்ஸோட வெளிய போய் இருந்தேன் மா.” அர்ஜுன் சொல்லிவிட்டு அவன் அறைக்குச் சென்றான். அர்ஜுனின் குரல் கேட்டதும், அங்கே அவர்கள் அறையில் இருந்த ஐஷு துள்ளி கொண்டு அர்ஜுனை தேடி வந்தாள்.
ஐஷுவை பார்த்ததும் அர்ஜுன், “செல்லம், உங்க டேங்க் பில் பண்ணிடீங்களா… நாம நம்ம ரூம்க்கு போகலாமா?” என்று கொஞ்ச… ஐஷு சந்தோஷமாகச் சிரித்தது. அர்ஜுன் வந்ததில் இருந்து ஐஷு அர்ஜுனோடு தான் ஒட்டிக்கொண்டு இருக்கிறாள்.
பின்னே வீட்டுக்குத் தெரியாமல் ஐஷுவை வெளியே தூக்கி சென்று ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாவற்றையும் குழந்தைக்குச் சுவைக்கப் பழக்க படுத்தி இருந்தான். அதோடு இரவு அவள் எவ்வளவு நேரம் ஆட்டம் போட்டாலும், அவளைத் தூங்க வைக்காமல்… அவளோடு சேர்ந்து ஆட்டம் போடும் சித்தப்பாவை ஐஷுவுக்கு ரொம்பப் பிடிப்பதில் ஆச்சர்யம் என்ன?
அர்ஜுன் ஐஷுவோடு அவன் அறைக்குச் செல்ல…அவன் பின்னே ஆதியும், ரஞ்சனாவும் உள்ளே சென்றனர். “அர்ஜுன் பெங்களூர்ல ரொம்பக் குளிராமே அப்படியா…” ரஞ்சனா கேட்க…
“அவனைப் போய்க் கேட்கிற, அவனுக்கு எப்படித் தெரியும்?” ஆதி சொல்ல… “உங்களுக்குத் தான் தெரியாது, அர்ஜுனுக்குத் தெரியும். காலையில பெங்களூர் போயிட்டு, நைட் திரும்பி வர்றவங்களுக்குத் தெரியாதா… அங்க குளிருதா, இல்லையான்னு.” ரஞ்சனாவும், ஆதியும் அர்ஜுனை ஜாடை பேச… ஐஷுவோடு விளையாடினாலும் காதை இவர்கள் பக்கம் வைத்திருந்த அர்ஜுன் முகத்தில் அடக்கப்பட்ட சிரிப்பு இருந்தது.
மறுநாள் காலை உணவிற்கே வீட்டுக்கு வந்த மீராவை பார்த்ததும் எல்லோரும் மகிழ்ந்தனர். “நீ இங்க இல்லாம நல்லாவே இல்லை மீரா, நீ இங்கயே வேலை பார்த்தா என்ன?” வித்யா சொல்ல… மீரா புன்னகைத்தாள்.
“சிரிச்சே சமாளி.” ஆரு சொல்ல… அர்ஜுனிடம் இருந்த ஐஷுவை மீரா அழைக்க… அது வர மாட்டேன் என்று தலை ஆட்டியது.
“பார்த்தியா போன வாரம் வரை என்னோட செல்லம் தான நீ, இப்ப உங்க சித்தப்பா வந்ததும் கட்சி மாறிட்டே…” மீரா சொல்ல… அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். ரொம்ப நாட்கள் கழித்து அந்த வீட்டில் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.
மாடியில் ரஞ்சனாவின் அறையில் குழந்தையோடு மீரா விளையாடி கொண்டிருக்கும் போது உள்ளே வந்த அர்ஜுன், ஐஸ்க்கு ஒரு முத்தம் கொடுத்தவன், மீராவுக்கும் ஒரு முத்தம் கொடுக்க…மீரா அர்ஜுனை பார்த்து முறைத்தாள்.
“பெங்களூர் வரை வந்தும், ஒரு முத்தம் கூடக் குடுக்கலை…” என்ற அர்ஜுன் தொடர்ந்து குழந்தைக்கும், மீராவிற்கும் மாறி… மாறி முத்தம் கொடுக்க… “ஐஷு இன்னும் பேச ஆரம்பிக்கலைன்னு தைரியம்.” மீரா சொல்ல… அர்ஜுன் மீராவை பார்த்துக் கண் சிமிட்டினான்.
“அர்ஜுன் இன்னைக்கு வெளிய போவோமா, நான் இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பி பெசன்ட் நகர் பீச்க்கு வரேன், நீங்களும் அங்க வந்திடுங்க. நாம எங்கையாவது போய் லஞ்ச் சாப்டிட்டு, அப்படியே படத்துக்குப் போகலாம்.” மீரா சொல்ல… அர்ஜுன் சரி என்றான்.
அர்ஜுன் பைக்கில் பெசன்ட் நகர் பீச்சில் சென்று இறங்கிய போது… மீரா அவள் காரின் வெளியே நின்று கொண்டிருந்தாள். அர்ஜுன் வண்டியை நிறுத்தி விட்டு அவள் அருகில் வந்ததும், “மாயாஜால் போலாம் அர்ஜுன், மூன்னு மணி ஷோக்கு புக் பண்ணியிருக்கேன். அங்கயே போய்ச் சாப்பிடலாம்.” என்றவள், அர்ஜுனிடம் கார் சாவியைக் கொடுக்க… அவன் சரி என்று வாங்கிக் கொண்டு காரில் ஏற… மீரா பின்னால் ஏறினாள்.
அர்ஜுன் இவ ஏன் பின்னாடி போனா? என்று நினைக்கும் போதே… முன் சீட்டில் அமர்ந்திருந்த சூர்யாவை பார்த்தான். சூர்யா அர்ஜுனை பார்த்து “ஹாய்…” என்று சொல்ல… அர்ஜுன் திரும்பி மீராவை பார்க்க… அப்போது தான் அவள் அருகிள் இருந்த ஆருவை பார்த்தான். பார்த்ததும் காரில் ஏறாமல் இறங்கிவிட்டான். அவனோடு எல்லோரும் காரில் இருந்து இறங்கினர்.
அர்ஜுன் சூர்யாவை பார்த்து, “நீ இங்க என்னடா பண்ற? ரெண்டு வருஷம் ஆஸ்திரேலியால உன்னோட தான குப்பை கொட்டினேன். இங்கயுமா.” என்று கேட்க… அர்ஜுனின் அருகில் வந்த சூர்யா, “எனக்கு மட்டும் உன் கூடச் சுத்தனும்னு ஆசையா… உன் தங்கச்சி என் கூடத் தனியா எங்கையும் வர மாட்டேங்கிறா, நான் என்ன பண்றது?” என்று அவன் பதிலுக்குக் கேட்க…
“அது உன்னோட பாடு, நீ வா மீரா.” அர்ஜுன் மீராவின் கையைப் பிடித்து இழுக்க… “உன் தங்கச்சி மட்டும் என் கூட வரலை….. அப்ப என் தங்கச்சியையும் உன் கூட அனுப்ப முடியாது.” மீராவின் மற்றொரு கையைப் பிடித்துச் சூர்யா இழுக்க…
“இவ உன் தங்கச்சியா… எப்ப இருந்து?” அர்ஜுன் கேட்க… “அது ரொம்ப நாளாவே தங்கச்சி தான். ஆனா… இன்னைக்குக் காலையில தான் தத்தெடுத்தேன்.” என்ற சூர்யா மீராவிடம், “அண்ணன் சொல்றேன், கண்டவனோட போகதே…” என்று அவளின் கையை இழுக்க…
“ரெண்டு பேரும் என் கையை விடுறீங்களா… எனக்கு வலிக்குது.” மீரா வலியில் முகம் சுளிக்க…. இருவரும் வேகமாக அவள் கையை விட்டனர்.
“சரி வந்து தொலை, ஆனா… இன்னைக்குத் தான் லாஸ்ட்.” என்று சொல்லி அர்ஜுன் காரில் ஏற… சூர்யாவும் சென்று ஏறினான். ஆரு மீராவிடம் “அர்ஜுனுக்குப் பிடிக்கலை போல, நான் வேணா வீட்டுக்கு போகட்டுமா…” என்று கேட்க.
“சும்மா வா ஆரு… உன்னோட அண்ணன் தான. அர்ஜுன் அப்படித் தான் பேசுவாங்க, ஆனா… எதுவும் நினைக்க மாட்டாங்க. வா…” என்று ஆருவை தேற்றி மீரா காரில் ஏற்றினாள்.
எல்லோரும் மாயாஜால் சென்று இறங்கியதும், நேராக ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிட சென்றனர். அர்ஜுன் ஆருவின் அருகே சென்று அமர… “பனை மரத்துக்குக் கீழ உட்கார்ந்து பாலை குடிச்சாலும், இந்த உலகம் கல்லுன்னு தான் சொல்லும். நீ உன் தங்கச்சி பக்கத்தில உட்கார்ந்தாலும், உங்களைப் பார்க்கிறவங்க தப்பா தான் நினைப்பாங்க. அதனால நீ போய் மீரா பக்கத்தில உட்காரு…” என்றான் சூர்யா.
அர்ஜுன் சூர்யாவை பார்த்து முறைத்துக் கொண்டே, “வா மீரா… நாம வேற டேபுளுக்குப் போவோம்.” என்று அழைக்க… அவளும் ஆருவிடம் “நீங்க ப்ரீயா பேசிகிட்டே சாப்பிடுங்க.” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.
அர்ஜுனும், மீராவும் சென்றதும், சூர்யா ஆருவிடம் “ஹப்பா…உன் கூட வெளிய வரணும்னு, நான் என்னென்ன வேலை எல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு. இதுக்கு நான் கூப்பிடும் போதே… நீ ஒழுங்கா வந்திருக்கலாம்.” என்றான். சூர்யாவும், ஆருவும் மெதுவான குரலில் பேசிக்கொண்டே சாப்பிட, அங்கே அர்ஜுன் டென்ஷன்னாக இருந்தான்.
அர்ஜூனால் எப்போதும் இருப்பது போல் இருக்க முடியவில்லை. “இதெல்லாம் உன்னால…” என்று அவன் மீராவை பார்த்து முறைக்க… “நான் என்ன பண்ணேன் அர்ஜுன்? சூர்யா தான் காலையில போன் பண்ணி ஆருவை வெளிய அழைச்சிட்டு வர முடியுமான்னு கேட்டாங்க. பாவம் அர்ஜுன் அவங்களும் நம்மள மாதிரி தான, உங்களுக்கு ஏன் கோபம் வருது?” மீரா புரியாமல் கேட்க…
“எனக்கு ஆரு சூர்யாவை லவ் பண்றது பிடிக்கமா இல்லை… பிடிச்சிருக்கு. சூர்யாவே என் தங்கச்சிக்கு கணவனா வர்றது சந்தோசம் தான். ஆனா… ஏனோ ப்ரீயா இருக்க முடியலை. இப்ப உனக்கு ஒரு அக்காவோ, தங்கச்சியோ இருந்து… அவங்களை அவங்க லவர்ரோட பார்த்தா உனக்கு எப்படி இருக்கும்? உனக்குப் புரியுதா மீரா…அவங்க கல்யாணம் நிச்சயம் ஆகிற வரை எனக்கு நிம்மதியா இருக்க முடியாது.” என்றான் அர்ஜுன்.
“முதல்ல அவங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க அர்ஜுன்.” என்ற மீரா தொடர்ந்து, “எங்க அப்பாவும் இப்ப உங்க நிலையில தான் அர்ஜுன் இருக்கார். அவருக்கும் நம்ம விஷயம் தெரியும், அவரும் இப்ப நீங்க நினைக்கிற மாதிரி தான் நினைப்பார்.” என்றாள் மெதுவாக.
“ஆரு சூர்யா கல்யாணம் நிச்சயம் ஆனதும், நான் கண்டிப்பா எங்க அம்மாகிட்ட பேசுறேன் மீரா…அம்மா முதல்ல மறுத்தாலும், நான் சொன்னா புரிஞ்சிப்பாங்க.” என்றான் அர்ஜுன் உறுதியாக.
மீராவுடன் மனசுவிட்டு பேசியதும், அர்ஜுன் சாதரணமாக இருந்தான். பின் இருவரும் உணவு வரவழைத்து சாப்பிட்டனர். மீரா சொன்னதைக் கேட்காமல் அர்ஜுன் அவனுக்கும் சைவ உணவு தான் சொன்னான். இருவரும் சாப்பிட்டதும் சூர்யா ஆருவோடு சேர்ந்து சினிமா பார்க்க சென்றனர். இப்போது அர்ஜுன் சூர்யா ஆருவோடு கலகலப்பாகப் பேசினான். நான்கு பேரும் சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பினர்.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை மதியம் போல்… மீரா அர்ஜுனின் வீட்டிற்கு வந்து மாலை வரை எல்லோருடனும் பேசிக்கொண்டு இருந்துவிட்டு சென்றாள்.
அன்று இரவு மீரா பெங்களூர் கிளம்புவதால், அர்ஜுன் அவளைத் தன் பைக்கில் அழைத்துக் கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷன் சென்று ரெயிலில் ஏற்றிவிட்டவன், ரெயில் கிளம்பும் வரை மீராவுடன் பேசிக்கொண்டிருந்தான். ரெயில் கிளம்பியதும் இருவர் மனமுமே பிரிவை நினைத்துத் தவித்தது. இருவரும் சேர்ந்து இருக்கும் காலம் எப்போது வருமோ?
Advertisement
error: Content is protected !!