Skip to content
Post Views: 4,000
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 29
சஞ்சனாவிற்கு அவளது மாமன் மகன் தினேஷுடன் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அர்ஜுன் ஒரு மாதம் சென்று தான் வேலையில் சேர்வதால், அவன் கடையையும், கார்மெண்ட்ஸ் கம்பெனியையும் கணேசனோடு பார்த்துக் கொண்டான். அதனால் ஆதியால் அடிக்கடி திருச்சிக்கு சென்று வர முடிந்தது.
கல்யாண தேதி நெருங்கியதும் ஆதி நான்கு நாட்கள் முன்பே திருமண வேலைகள் பார்க்க… அவன் மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டான். ஆதி அந்தக் குடும்பத்திற்கு மூத்த மருமகனாக, அவன் கடமையைச் சரி வர செய்தான். அதில் ரஞ்சனாவிற்கு மிகவும் பெருமை.
அன்று அர்ஜுனின் வீட்டில் இருந்து வந்த பிறகு, சில மாதங்கள் சஞ்சனா ஆடிக்கொண்டு தான் இருந்தாள். எப்போதும் அர்ஜுன் வீட்டினரை பற்றித் தாறுமாறாகப் பேசினாள். ஒரு நாள் அவளது அம்மா வந்தனா, “அவங்க நம்ம வீட்ல ஒரு பொண்ணு எடுத்தா… இன்னொரு பொண்ணும் இங்கையே எடுக்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை. அது அவங்க விருப்பம். நீ அவங்களைக் குற்றம் சொல்லியே, உனக்கு வர்ற நல்ல வரனை எல்லாம் தட்டி கழிக்கப் போறியா?” என்று கேட்க….
“நான் எதுக்கு என் வாழ்கையை வீணாக்கனும்? நான் தினேஷை கல்யாணம் செஞ்சுகிறேன். ஆனா என்னோட கல்யாணம், ரஞ்சனா கல்யாணத்தை விடக் கிராண்டா நடக்கணும்.” சஞ்சனா அதிகாரமாகத் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னாள்.
சஞ்சனா சம்மதம் சொன்னதும், உடனடியாக அவளது பெற்றோர் தினேஷ் வீட்டில் பேசி திருமண நாளை குறித்து விட்டனர். திரும்பி வேதாலம் முருங்கை மரம் ஏறும் முன் திருமணத்தை நடத்தி விட நினைத்தனர்.
அர்ஜுனை தவிர மற்ற அனைவரும் சஞ்சனாவின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அர்ஜுன் இந்தியா வந்த பிறகு தான், சஞ்சனாவிற்கு அவனை மாப்பிள்ளை கேட்டதை வித்யா அவனிடம் சொன்னார்.
அர்ஜுன், ஹப்பா… தப்பிச்சேன்டா சாமி என்று நினைத்தவன், தான் திருமணத்திற்கு வந்தால் அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும். அதோடு கடையை மற்றும் கம்பெனியை பார்த்துக் கொள்வதும் சிரமம் என்று கூறி அவன் சஞ்சனாவின் திருமணத்திற்குச் செல்லவில்லை.
திருமணத்திற்குப் பத்து நாட்கள் முன்பே ரஞ்சனா தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டாள். ஆதியும் முன்பே சென்றுவிட்டான். கணேசன், வித்யா மற்றும் ஆரு திருமணத்திற்கு முன் தினம் திருச்சிக்கு சென்றனர்.
சஞ்சனாவின் பெற்றோர் அவர்களை நல்லபடியாக வரவேற்றனர். ஆனால் சஞ்சனா அவர்களை வந்து வாங்க என்று கேட்கவும் இல்லை…பேசவும் இல்லை. அவள் அறையிலேயே இருந்து கொண்டாள். அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும் ஆதிக்கு அது பிடிக்கவில்லை. அவன் தனது குடும்பத்தினரை ஒரு பெரிய ஹோட்டலில் சென்று தங்க வைத்தான். அவர்களும் விசேஷ நேரத்தில் மட்டும் வந்து கலந்து கொண்டனர். திருமணம் நல்லபடியாக முடிந்தது.
சஞ்சனாவின் பெற்றோர் சஞ்சனாவையும், தினேஷையும் சென்னையிலேயே இருக்கச் சொல்லிவிட்டனர். இப்போது வேலையை மாற்றிக் கொண்டு இங்கே வரவேண்டாம், சில வருடங்கள் சென்று பார்த்துக் கொள்வோம் என்றனர்.
“நீங்களும் சென்னைக்கே வந்துடுறீங்களா மாமா, நம்ம வீட்டுப் பக்கத்திலேயே வீடு பார்த்திடுவோம்.” ஆதி தன் மாமனாரிடம் கேட்க…
“இப்போ நாங்க ஆரோக்கியமா தான் இருக்கோம். அதோடு திருச்சி எங்களுக்குப் பழகிய ஊர். அதனால் சில வருடங்கள் கழித்துப் பார்த்துகொள்வோம்.” என்றார் அவர். சரி என்று ஆதியும் ஏற்றுக் கொண்டான்.
சஞ்சனாவின் திருமணம் முடிந்தும் ஆதியும், ரஞ்சனாவும் அங்கயே தங்க…. மற்றவர்கள் அன்றே சென்னைக்குத் திரும்பி விட்டனர். ஆதியும், ரஞ்சனாவும் இரு தினங்கள் திருச்சியில் தங்கி விருந்து முடிந்து, சஞ்சனா தன் புகுந்த வீட்டிற்குக் கிளம்பி சென்றதும், இவர்களும் ஊர் திரும்பினர்.
சஞ்சனா திருமணம் முடிந்து வந்ததில் இருந்து வித்யா எதையோ யோசித்துக் கொண்டே இருந்தவர், அன்று இரவு எல்லோரும் சேர்ந்து அமர்ந்து உண்ணும் போது…”ஆருவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கணும். இப்பவே நாம லேட். இவ எதோ கோர்ஸ் முடிக்கணும்னு சொன்னா…. அதுவும் இப்ப முடிஞ்சிடுச்சு.” என்று ஆருவின் திருமணப் பேச்சை அவர் ஆரம்பிக்க….
வித்யா சொன்னதைக் கேட்ட வீட்டினர் எல்லோரும் மகிழ, ஆருவிற்குத் தான் சோறு தொண்டைக்குள் இறங்கவில்லை, அவள் சாப்பிட முடியாமல், ஆனால் சாப்பிடுவது போல் நடித்துக் கொண்டிருந்தாள். அர்ஜுன் அவளைத் தான் ஜாடையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நாம நாளைக்கே ஆதிக்கு சொல்லி வச்ச புரோக்கர்கிட்ட, ஆருவுக்கும் பதிஞ்சு வச்சிடலாம். இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடனும்.” வித்யா பேசிக் கொண்டே செல்ல..
“சொல்லு ஆரு உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும், வேலைக்குப் போறவரா, இல்லை பிஸ்னெஸ் பார்க்கிறவரா பார்ப்போமா?” கணேசன் சிரித்துக் கொண்டே கேட்க…. ஆரு சொல்லத் தயங்கினாள்.
“எந்த வேலை பார்த்தாலும், அதோட நம்ம அரு சொல்ற வேலையும் தட்டாம செய்றவரா இருக்கணும், இல்ல ஆரு.” ஆதி அவளை வம்பு இழுக்க… ” அதைக் கேட்டு அர்ஜுன் தவிர மற்றவர்கள் சிரித்தனர். ஆருவும் சிரித்துச் சமாளித்தாள். ஆனால் அவளுக்கு அழுகையாக வந்தது.
எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டே… ஆருவின் கல்யாணத்திற்கு என்ன வாங்குவது? எந்த மண்டபத்தில் திருமணம் வைப்பது என்ற எல்லாம் பேச பேச ஆருவுக்கு மனதில் பயம் வந்தது. அவள் அர்ஜுனை பார்க்க….அவன் அமைதியாகச் சாப்பிட்டான். பாரு எப்படிக் கல்லு மாதிரி இருக்கான் என்று ஆரு அர்ஜுனை மனதிற்குள் திட்டி கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்து கொள்ளும் போது…. அதுவரை அமைதியாக இருந்த அர்ஜுன், “முதல்ல ஆருகிட்ட அவளுக்கு விருப்பமான்னு கேளுங்க.” என்றான்.
“நாம முதல்ல மாப்பிள்ளை பார்க்கணும், அப்புறம் அவகிட்ட போட்டோ காமிச்சி பிடிச்சிருக்கான்னு கேட்கணும். நீ ஏன் இப்பவே கேட்க சொல்ற?” வித்யா புரியாமல் கேட்க… அர்ஜுன் ஆருவை பார்த்தான். ஆரு தலை நிமிரவே இல்லை.
“நீங்க பார்க்கிற மாப்பிள்ளை அவளுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்க சொல்லலை, அவளுக்கு வேற யார் மேலாவது விருப்பம் இருக்கான்னு தான் கேட்க சொல்றேன்.” என்றான் அர்ஜுன் அழுத்தமாக.
அவன் சொன்னதைக் கேட்ட அனைவரும் திடுக்கிட்டனர். இன்னைக்கு மாட்டிக்கப் போறோம் என்று நினைத்த ஆருவின் முகம் வெளிறிவிட்டது.
“நீ இப்ப என்ன சொல்ல வர, ஆரு யாரையாவது லவ் பண்றாளான்னு கேட்க சொல்றியா… எனக்கு ஆருவை பத்தி நல்லா தெரியும். வெளிய போகக் கூட அண்ணன்களைத் துணைக்குக் கூப்பிடுறவளுக்கு, காதலிக்கத் தைரியம் இருக்குமா? அவ அப்படி எல்லாம் பண்ண மாட்டா.” என்ற வித்யா ஆருவின் பக்கம் திரும்பி, “நீ யாரையும் லவ் பண்ணலை தான ஆரு.” என்று அதட்டி கேட்க….
வித்யாவின் கோபத்தைப் பார்த்து ஆரு அரண்டுவிட்டாள். அவள் பயத்தில் இல்லை என்று சொல்ல…. வித்யா நிம்மதியாக மூச்சு விட்டார். அர்ஜுன் ஆருவை பார்த்து முறைக்க, அவள் குனிந்த தலையுடன் அவள் அறைக்குச் சென்றாள்.
அன்று இரவு வீட்டுத் தோட்டத்தில் கணேசன், ஆதி, அர்ஜுன் மட்டும் தான் இருந்தனர். ரஞ்சனா ஐஷுவை தூங்க வைக்கச் சென்றுவிட, வித்யா டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
கணேசனுக்கும், ஆதிக்கும் எதோ சரி இல்லை என்று புரிந்தது. ஆருவின் முகமே சரி இல்லை. அதோடு அர்ஜுனும் கோபமாக இருப்பதிலேயே எதோ விஷயம் இருக்கிறது என்று இருவருக்கும் புரிந்தது.
“ஆராதனா யாரை அர்ஜுன் லவ் பண்றா?” கணேசன் நேரடியாகக் கேட்க, “என்னோட ப்ரண்ட் சூர்யாவை பா…” என்றான் அர்ஜுன். யாரோ
எவரோ என்று பயந்து கொண்டிருந்த கணேசன், ஆதி இருவரின் முகத்திலும் இருந்த தவிப்பு மறைந்து, சூர்யாவின் பெயரை கேட்டதும் நிம்மதி வந்தது.
என்ன தான் தங்களின் பிள்ளைகள் காதலை ஆதரிக்கும் பெற்றோராக இருந்தாலும், அவர்கள் நல்ல துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கவலை எல்லாப் பெற்றோருக்கும் இருக்கும்.
“நல்லவேளை சூர்யாவை லவ் பண்றா, தெரியாத பையன்னா அம்மா ஒத்துக்கமாட்டங்க. ஆரு லவ் பண்றத நாளைக்கு அம்மாகிட்ட சொல்லிடுவோமா” ஆதி கேட்க…
“வேண்டாம் வீணா அம்மாவுக்கும், ஆருவுக்கும் நடுவுல சண்டை வரும். அம்மா கேட்கும் போது வேற ஆரு யாரையும் லவ் பண்ணலைன்னு சொல்லிட்டா… இனிமே சொன்னா அம்மா கோபப்படுவாங்க, இவ அழுவா… அதோட எல்லோருக்கும் மனசு கஷ்டம்.” அர்ஜுன் சொல்ல… “சொல்லி தான ஆகணும்” என்றார் கணேசன்.
“வேண்டாம், நாம ஆரு சூர்யாவை லவ் பண்ணறதை அம்மாகிட்ட சொல்லாம, அவளோட கல்யாணத்தை முடிக்கணும்.” என்றான் அர்ஜுன்.
“இதெல்லாம் நடக்கிற காரியமா…. அம்மா கண்டு பிடிச்சிடுவாங்க.” ஆதி சொல்ல….
“நான் பார்த்துகிறேன், அதுக்கு ஒரு ஆள் இருக்கு.” என்றான் அர்ஜுன் நம்பிக்கையாக.
கணேசன், ஆதி இருவரிடமும் அவர்களுக்குத் தெரிந்த விஷயத்தை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம், அதே போல் ஆருவிடமும் கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அர்ஜுன் மாடிக்கு சென்று ஆருவின் அறைக்கதவை திறந்து பார்க்க… ஆரு கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்தாள். அர்ஜுன் மெதுவாக அவள் அறைக்கதவை மூடிவிட்டு அவன் அறைக்குச் சென்றான்.
அவன் அறைக்கு வந்த அர்ஜுன் தன் பெரியம்மாவை செல்லில் அழைத்தான்.
“டேய் அர்ஜுன் எப்படி டா இருக்க? உன்னை வந்து பார்க்க வரணும்னு நினைச்சேன் முடியவே இல்லை, இந்த வாரம் அங்க வரேன்.” என்று சொன்ன காயத்ரி “ஆமாம், நீ எதுக்குப் போன் பண்ண?” என்று கேட்க….
“ஹப்பா… இப்பவாவது கேட்டிங்களே… எனக்கு உங்க மூலமா ஒரு காரியம் நடக்கணும்.” அர்ஜுன் சொல்ல…
“நீயும் மீராவும் லவ் பண்றதை, நான் உங்க அம்மாகிட்ட சொல்லனுமா….” பெரியம்மா ஆர்வமாகக் கேட்க…. “அதை நான் சொல்லிக்கிறேன், நீங்க ஆரு லவ் பண்றா… அதை வந்து சொல்லுங்க.” என்று அர்ஜுன் குண்டை தூக்கி போட்டான்.
“என்னது ஆரு லவ் பண்றாளா? நான் உன்னோட விஷயம் தெரிஞ்சாலே, உங்க அம்மா என்ன ஆடப்போறாளோன்னு பயந்திட்டு இருக்கேன். இதுல ஆரு வேற லவ் பண்றாளா…. இதெல்லாம் நடக்காது, நீ அவளை வேற வேலை பார்க்க சொல்லு.” காயத்ரி புலம்ப…
“அம்மாவுக்கு ஆரு லவ் பண்றது தெரியாம, நாமலே அதை அரேஞ் மேரேஜ் மாதிரி கொண்டு வந்துடலாம்.” அர்ஜுன் ஐடியா கொடுக்க…
“இது நடக்கிற காரியமா டா…”
“எல்லாம் நாம நினைச்சா நடக்கும், அவ லவ் பண்றது என்னோட ப்ரண்ட் சூர்யாவைதான். அன்னைக்கு ஆதி கல்யாணத்தில நீங்க அவங்க அப்பா அம்மாவை கூடப் பார்த்தீங்களே அவங்க தான்.” அர்ஜுன் விளக்க…
“அவங்களா… ஆமாம் என்னோட வீட்டுக்காரருக்குத் தங்கச்சி முறை, இருந்தாலும் உங்க அம்மா ஒத்துக்கணுமே…” காயத்ரி தயங்க…
“எல்லாம் நீங்க சொல்ற விதத்துல சொன்னா, அவங்க ஒத்துப்பாங்க. நான் உங்களை ரயில்வே ஸ்டேஷன்க்கு கூப்பிட வரும் போது…. என்ன பேசனும்னு சொல்லி தரேன். நீங்க அது மாதிரியே பேசுங்க, அம்மா ஒத்துப்பாங்க.”
“சரிடா நீ என்னவோ சொல்ற, செஞ்சு பார்க்கலாம்.” என்று பெரியம்மா அர்ஜுனின் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டார்.
சஞ்சனா தினேஷ் திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து….அவர்களைச் சென்னையில் தனிக்குடித்தனம் வைக்க… இருவரின் பெற்றோரும் தனிக்குடித்தினத்திற்குத் தேவையான சாமான்களுடன் சென்னையில் வந்து இறங்கினர்.
சென்னையில் தினேஷ் அவன் அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருந்த OMR ரோட்டில் உள்ள அபார்ட்மென்டில் ஒரு வீட்டை வாடைகைக்கு எடுத்திருந்தான்.
ரஞ்சனா வெளியில் செல்வது போல் உடை அணிந்து கிளம்பி கொண்டிருப்பதைப் பார்த்து ஆதி, “எங்க போற?” என்று கேட்க…. “என்ன தெரியாத மாதிரி கேட்கறீங்க, இன்னைக்குச் சஞ்சனா வீடு பால் காய்ச்சுறாங்க இல்ல… அதுக்குத் தான் ரெடி ஆகிறேன்.” என்று தலைவாரி கொண்டே ரஞ்சனா சொல்ல… “நாம போகப் போறது இல்லை.” என்றான் ஆதி.
ரஞ்சனா திடுக்கிட்டவள், “ஏன்?” என்று புரியாமல் கேட்க…
“கல்யாணத்துக்கு வந்த எங்க அப்பா, அம்மாவை அவ வாங்கன்னு கேட்டாளா…. அப்புறம் நாம எப்படி அவங்க வீட்டுக்கு போக முடியும்.” என்று ஆதி கேட்டான்.
“உங்களுக்குத் தான் அவளைப் பத்தி தெரியும் இல்ல, எங்க அம்மா அப்பாவுக்காகப் பாருங்க.”
“நீ உங்க அப்பா அம்மா வீட்டுக்கு திருச்சிக்கு போயிட்டு வா, அதே மாதிரி அத்தை மாமாவும் இங்க வந்து தாராளமா எத்தனை நாள் வேணாலும் தங்கட்டும். ஏன் சஞ்சனா கூட வரட்டும், என்னோட அம்மா அப்பா அவகிட்ட ஒழுங்கா தான் நடந்துப்பாங்க. ஆனா நாம அவ வீட்டுக்குப் போறது மட்டும் வேண்டாம்.” என்றான் ஆதி உறுதியாக.
ரஞ்சனாவின் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. அவள் சென்று மெத்தையில் சோகமாக உட்கார, ஆதி அவள் அருகில் சென்று அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தவன், “நாம கொஞ்சநாள் அவ வீட்டுப் பக்கம் போகம இருந்தா தான், அவளுக்குத் தான் செஞ்சது தப்புன்னு புரியும். இனியும் அவ சின்னப் பொண்ணு இல்லை. அவ தான் செஞ்சது தப்புன்னு உணர்ந்து அவளே உன்னைக் கூப்பிடட்டும், அப்புறம் நாம அவ வீட்டுக்குப் போகலாம்.” என்றான்.
ரஞ்சனாவுக்கும் அவன் சொல்வது சரி என்று தெரிந்தாலும் மனது கேட்கவில்லை. ஆனால் ஆதி இவ்வவளவு உறுதியாகச் சொல்லும் போது, தான் அதை மீறுவது நன்றாக இருக்காது, தனக்கும் இந்த வீட்டின் மருமகளாகச் சில கடமைகள் இருக்கிறது. தன் புகுந்த வீட்டினரை சஞ்சனா மரியாதை குறைவாக நடத்தியது தவறு தான் என்பதை உணர்ந்ததால், அவளே தன் பெற்றோரை அழைத்து ஐஷுக்கு கல்யாணத்துல அலைஞ்சது உடம்புக்கு சேரலை… அதனால் தாங்கள் இன்னொரு நாள் வருவதாகச் சொல்லி போன்னை வைத்தாள்.
ஆதி நினைப்பது போல் சஞ்சனா தன் தவறை உணர்வாளா? அர்ஜுன் நினைப்பது போல் ஆருவின் திருமணம் நடக்குமா?…….
Advertisement
Advertisement
Advertisement
error: Content is protected !!