Skip to content
Post Views: 3,665
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 33
சூர்யா வீட்டுக்கு கிளம்பும் முன் ஆருவுடன் தனியாகப் பேசிக்கொண்டிருந்தான். ஆரு முகம் வாடியிருப்பதைப் பார்த்து “உங்க அம்மா சொன்னதை நினைச்சு பீல் பண்றியா ஆரு, அர்ஜுன், மீரா கல்யாணம் நல்லபடியா நடக்கும். நாங்க இத்தனை பேர் இருக்கோம், மீராவை விட்டு கொடுத்திடுவோமா….” என்றதும், அதைக் கேட்டு ஆருவின் முகம் மலர்ந்தது.
சூர்யாவின் குடும்பம் கிளம்பி சென்றதும், தினேஷும் கிளம்புவதாகச் சொல்ல… வித்யா கொஞ்ச நேரம் இருங்க, போகலாம் என்றார். அவர் எதற்குச் சொல்கிறார் என்று புரியாமல் தினேஷும், சஞ்சனாவும் ஒருவரை ஒருவர் பார்க்க… சிறிது நேரத்தில் கடையில் இருந்து ஒரு பையன் வந்து ஒரு கவரை கொடுத்துவிட்டுச் சென்றான்.
வித்யா அந்தக் கவருடன் அவருடைய அறைக்குச் சென்றவர், அர்ஜுன் கடையில் இருந்து தினேஷ்க்காகக் கொடுத்து விட்ட உடையோடு, வீட்டில் இருந்த ஒரு புதுப் பட்டு புடவையைத் தட்டில் வைத்து, கொண்டு வந்து தினேஷ், சஞ்சனா இருவரிடமும் கொடுக்க… முதலில் வாங்க மறுத்த இருவரும் “புதுசா கல்யாணம் ஆகி வர்றவங்களுக்கு, நாங்க செய்ற முறை தான் வாங்கிகோங்க.” என்று சொன்னதும், இருவரும் வாங்கிக் கொண்டனர்.
தினேஷும் , சஞ்சனாவும் அவர்கள் வீட்டுக்கு வந்ததும் “இன்னைக்கு அவங்க வீட்ல முக்கியமான விசேஷம் இருந்தும், நான் போன் பண்ணி கேட்ட போது உன்னோட அத்தான் ஒண்ணுமே சொல்லாம, வாங்க… நாங்க ப்ரீயா தான் இருக்கோம்னு சொன்னார். தெரிஞ்சிருந்தா… இன்னொரு நாள் போய் இருக்கலாம். அவங்க வீட்ல எல்லோரும் நல்ல மாதிரி.” தினேஷ் சொல்ல.. சஞ்சனா அமைதியாக அவள் போட்டிருந்த நகைகளைக் கழட்டி கொண்டிருந்தாள்.
“எனக்கு அவங்க வீட்டை பத்தி அவ்வளவா தெரியாது. நான் அந்தப் பொண்ணு மீராவை பார்த்து நிஜமா அர்ஜுனோட பொண்டாட்டின்னு தான் நினைச்சேன். எனக்கு அவங்களைப் பார்க்கும் போது அப்படித் தான் தோனுச்சு.” தினேஷ் சொல்ல…
இப்போது மட்டும் சஞ்சனா வேகமாக “எதாவது உளறதீங்க. அது தான் அவங்க புருஷன் பொண்டாட்டி இல்லைன்னு இப்ப தெரிஞ்சிடுச்சுல, திரும்ப எதுக்கு அதையே சொல்றீங்க.” என்றாள் கடுப்பாக.
அவளுக்கு அர்ஜுன், மீரா இருவரையும் சேர்த்து வைத்து பேசுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. சஞ்சனாவுக்கு அர்ஜுன் அவளைக் கண்டு கொள்ளவே இல்லை என்ற ஆத்திரம் வேறு. எவ்வளவு திமிர் அவனுக்கு என்று மனதில் கருவிக்கொண்டு இருந்தாள்.
தினேஷ் சஞ்சனவையே பார்க்க…அவள் முகத்தில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது. “ஆமாம்… தெரியாம தான் கேட்கிறேன். அவங்களைச் சொன்னா… உனக்கு ஏன் கோபம் வருது?”
“பின்னே சம்பந்தம் இல்லாதவங்களை… சம்பந்தபடுத்திப் பேசினா கோபம் வராதா…”
“அர்ஜுன், மீராவை சம்பந்தபடுத்திப் பேசினா…. சம்பந்தம் இல்லாத உனக்கு ஏன் கோபம் வருதுன்னு தான் புரியலை?” என்று தினேஷ் ஒரு மாதிரி கேட்க….
“எனக்கு என்ன வந்துச்சு? நீங்க யாரை பற்றியும் பேசுங்க,” என்று எழுந்து சஞ்சனா வெளியே செல்ல பார்த்தாள்.
அவளைத் தடுத்த தினேஷ் “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கோபப்பட்ட, இப்ப எனக்கு என்ன வந்துச்சுன்னு சொல்ற… கூடப் பிறந்த அக்காவை பார்க்க நான் வலுகட்டாயமா இழுத்துட்டு போக வேண்டியதா இருக்கு…அவங்களும் இங்க வர மாட்றாங்க. எனக்கு ஒன்னும் புரியலை.” என்றான் யோசைனையாக….
தினேஷின் பேச்சை கேட்டு சுதாரித்த சஞ்சனா “இல்லை நமக்கு எதுக்கு அவங்க விஷயம். அது தான் சொன்னேன். அக்கா நாம பால் காய்ச்சும் போது வரலை இல்லையா, அதனால தான் அவங்க வீட்டுக்கு போக யோசிச்சேன்.” எனச் சஞ்சனா சமாதானமாகச் சொல்ல … அவனும் மேற்கொண்டு எதுவும் பேசாமல், அந்த இடத்தை விட்டுச் சென்றான்.
தினேஷ் அங்கிருந்து சென்றதும், ஹப்பா… என்று நிம்மதி பெரு மூச்சுவிட்ட சஞ்சனா, இனி அவனிடம் பார்த்து பேச வேண்டும் என்றும் நினைத்தாள். மறுநாள் தினேஷ் அலுவலகம் சென்றதும், அவளே ரஞ்சனாவை செல்லில் அழைத்தாள்.
“ஹலோ சஞ்சு சொல்லு எப்படி இருக்க?”
“நேத்து தான பார்த்தோம் அப்புறம் என்ன எப்படி இருக்க…”
“இல்லை திடிர்னு போன் பண்ணதும், என்ன கேட்கிறதுன்னு தெரியாம…” என்று இழுத்த ரஞ்சனா… சரி சொல்லு எதுக்குப் போன் பண்ண?” என்றாள்.
“என்னோட வீட்டுக்கார், ஏன் உங்க அக்கா வீட்ல இருந்து யாரும் நம்ம வீட்டுக்கு வர மாட்றாங்கன்னு கேட்டு ஒரே இம்சை பண்றார். நீயும் வேணும்னே என்னைப் பழி வாங்க தான அப்படிப் பண்ற…” என்றாள் சஞ்சனா கடுப்பாக.
“நான் என்ன பண்ணேன் சஞ்சு, நீயா எதாவது சொல்லாத…”
“சும்மா சொல்லாதா எனக்குத் தெரியும், நான் கல்யாணத்துக்கு வந்த உன்னோட மாமனார், மாமியாரோட பேசலைன்னு தான இப்படிப் பண்றீங்க.” சஞ்சனா குற்றம் சாட்ட…
“ஆமாம். நீ பண்ணது தப்பு தான, அவங்க என்னோட புகுந்த வீட்டுகாரங்க. நீ அவங்களுக்குக் குடுக்க வேண்டிய மரியாதையைக் குடுத்திருக்கனுமா… வேண்டாமா? அவங்க எல்லாம் நல்ல மாதிரி… அதனால அவங்க பெரிசா எடுத்துக்கலை. இல்லை… இதே வேறவுங்களா இருந்தா… அதையே பெரிய பிரச்சனை ஆக்கி, என்னையும் கல்யாணத்துக்கு இருக்க விடாம இழுத்திட்டு வந்திருப்பாங்க.” ரஞ்சனா எடுத்து சொல்ல… சஞ்சனா விசும்ப ஆரம்பித்தாள்.
“சஞ்சு அழாத, இப்ப என்ன ஆச்சு அதனால?”
“இன்னும் என்ன ஆகணும்? என் வீட்டுக்காரர் சந்தேகப் பட மாட்டாரா…எல்லோரும் சேர்ந்து என் வாழ்கையைக் கெடுக்கப் பார்க்கறீங்க.” எனச் சஞ்சனா மேலும் அழ…
“பெரிய வாரத்தை எல்லாம் பேசாத சஞ்சனா, நாங்க இந்த வாரம் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வரோம். எங்க யாருக்கும் உன் வாழ்கையைக் கெடுக்கணும்னு எண்ணம் இல்லை. சரியா… அழாத வை.” என்று ரஞ்சனா போன்னை வைத்தாள். கடைசி வரை நான் செஞ்சது தப்புன்னு இந்தச் சஞ்சனா வாய்ல இருந்து வரலியே என்று நினைத்தவள், அன்று இரவு ஆதியிடமும் அதைச் சொல்ல மறக்கவில்லை…
“நம்மால அவ வாழக்கை கெட வேண்டாம். நாம இந்த வாரம் அவ வீட்டுக்கு போய்ட்டு வந்திடலாம். ஆனா அவகிட்ட நம்ம குடும்ப விஷயம் எதையும் சொல்லாத.” ஆதி சொல்ல… ரஞ்சனாவும் சரி என்றாள்.
அந்த வார ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணி போல்… ரஞ்சனா, ஆதி, வித்யா மற்றும் ஐஷு சஞ்சனா வீட்டிற்குச் சென்றனர். தினேஷுக்கு எந்தச் சந்தேகமும் வரக்கூடாது என்று சஞ்சனா அவர்களை விழுந்து விழுந்து கவனித்தாள்.
சஞ்சனாவிற்கு இன்னும் அவ்வளவாகச் சமைக்கத் தெரியாததால்… இரவு உணவிற்கு அவர்களை அழைத்துக் கொண்டு தினேஷ் ஹோட்டலுக்குச் சென்றான். தினேஷ் அவர்களை நன்றாக உபசரித்தவன், அதோடு ஐஷுவை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று, அவளுக்குப் பொம்மை வாங்கிக் கொடுத்தான். அன்றைய நாள் நல்லபடியாகச் சென்றது.
சூர்யா ஆரு திருமணத்திற்கு ஆறு மாதம் கழித்து இருந்த முகுர்த்த நாளில் தான் மண்டபம் கிடைத்தது. அதோடு கல்யாணத்திற்கு முன் தினம் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டு இருந்தது.
ஒரு நாள் அர்ஜுனை சந்தித்த மீரா அவனிடம் அருவின் திருமணம் முடிந்ததும், வித்யாவிடம் தங்கள் காதல் விஷயத்தைப் பற்றிப் பேசலாம் என்றாள்.
“ஏன் மீரா..அவ்வளவு நாள் தள்ளி போடணும்?”
“வித்யா ஆன்டிக்கு நம்ம விஷயம் தெரிஞ்சா கண்டிப்பா டென்ஷன் ஆவாங்க. அவங்க நிம்மதியா ஆரு கல்யாண வேலைகள் செய்யட்டும் அர்ஜுன்.” மீரா சொல்ல… அர்ஜுனும் சரி என்றான்.
நாட்கள் வேகமாகச் சென்றது. ஆரு திருமணத்திற்கு இன்னும் பதினைந்து நாட்கள் தான் இருந்தது. அந்த வாரம் சென்னைக்கு வந்த மீராவை அழைத்துக் கொண்டு அர்ஜுன் ஷாப்பிங் சென்றான்.
“ஆருவுக்கா வாங்க போறோம், என்ன வாங்க போறோம்?” மீரா கேள்விகளாகக் கேட்க… அர்ஜுன் எதற்கும் பதில் சொல்லவில்லை….
அர்ஜுன் அவளை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய பட்டு புடவை கடைக்குச் சென்று புடவைகள் பார்க்க…. மீராவும் அவனோடு சேர்ந்து பார்த்தாள். அர்ஜுன் மீராவின் மீது ஒவ்வொரு சேலைகளாக வைத்து பார்த்தவன், அடர் நீல நிறத்தில் உடலெல்லாம் வெள்ளி ஜரிகைகளால் கொடிபோல… வேலைப்பாடு செய்து இருந்த அழகான சேலையைத் தேர்ந்தெடுத்தான்.
Advertisement
error: Content is protected !!