Skip to content
Post Views: 3,618
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 34
Advertisement
அன்று ஆரம்பித்த அர்ஜுன், சூர்யா மற்றும் தினேஷின் ரகளை ஆருவின் கல்யாணம் வரை தொடர்ந்தது. தினேஷையும், சஞ்சனாவையும் அன்று இரவு ரஞ்சனா அங்கேயே தங்க சொல்ல… அவர்களும் தங்கினர்.
மறுநாள் காலையில் எழுந்த சஞ்சனா வாந்தி எடுக்க… விசாரித்ததில் அவள் கற்பமாக இருப்பது தெரிந்தது. தினேஷை கையில் பிடிக்க முடியவில்லை… அவன் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான்.
சஞ்சனா கற்பமாக இருப்பதால்…. ஆருவின் திருமணத்திற்காக வரும் அவள் பெற்றோருடன் திருச்சி செல்வதாக இருந்தது. வித்யா அதுவரை அவளை இங்கேயே தங்க சொன்னார்.
“எதுக்கு உங்களுக்குச் சிரமம்…இங்க எல்லோரும் கல்யாண வேலையில பிஸியா இருப்பீங்க…. நான் அவளை எங்க வீட்ல வச்சு பார்த்துகிறேன்.” தினேஷ் சொன்னதிற்கு வித்யா ஒத்துக்கொள்ளவில்லை.
“நாங்க இவ்வளவு பேர் இருக்கிறோம் பார்த்துக்க மாட்டோமே என்ன? இந்த மாதிரி நேரத்தில அவளால வேலை பார்க்க முடியாது. அதுவும் அவ ரொம்ப வாந்தி எடுக்கிறா…. பத்து நாள் தானே… இங்கேயே ரெண்டு பேரும் இருங்க.” வித்யா முடிவாகச் சொல்ல.. தினேஷால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.
தினேஷ் அங்கேயே தங்கியதால்… அர்ஜுன், சூர்யா மற்றும் ஆதியோடு நெருங்கி பழகும் வாய்ப்புக் கிடைத்தது. தினேஷ் அவர்களோடு திருமண வேலைகளைப் பகிர்ந்து கொண்டான்.
ரஞ்சனா சஞ்சனாவை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் சென்று வந்தாள். ஆதி சஞ்சனாவிற்காக நிறையப் பழங்கள் வாங்கி வந்து வீட்டில் போட்டான். வித்யாவும் எவ்வளவு வேலை இருந்தாலும், சஞ்சனாவிற்கு என்று வாய்க்கு ருசியாகச் சமைத்து கொடுத்தார். ஆரு முன்பு மாதிரி இல்லாமல், இப்போது சஞ்சனாவிடம் நன்றாகப் பேசினாள்.
சஞ்சனாவும் தாய்மை அடைந்ததில் இருந்து சிறிது மாறி தான் இருந்தாள். அவளுடைய சிந்தனை முழுவதும் இப்போது பிறக்க போகும் குழந்தையின் மீது இருந்தது. அதனால் அவளுக்குள் சில நல்ல மாற்றங்கள் ஏற்படத் தான் செய்தது. அதோடு தினேஷ் அவளைத் தாங்குவதும், அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வதைப் பார்த்ததும், அவளுக்குத் தன் கணவனின் மேல் அன்பு பெருகியது.
அர்ஜுனும் மீராவும் சஞ்சனாவிடம் இருந்து இப்போதும் விலகி தான் இருந்தனர். அவர்களுக்குச் சஞ்சனா முன்பு மாதிரி எதாவது பேசி, அதற்குத் தாங்களும் பதில் பேசி… குடும்பத்தில் தேவை இல்லாத பிரச்சனை எதற்கு என்று நினைத்தனர். ஆனால் இருவருமே தினேஷிடம் நன்றாகப் பழகினர்.
திருமண நாள் நெருங்கியதும் வீட்டில் உறவினர்கள் வருகை அதிகமாகியது. அர்ஜுனின் பெரியம்மாவும் வந்து இறங்கி விட்டார். அர்ஜுன் அவன் அம்மா எடுத்தது போக… அவனே அவன் பெரியம்மாவிற்கு ஒரு பட்டு புடவை எடுத்துக் கொடுத்தான்.
“எதுக்கு டா இப்ப, உன் கல்யாணத்துக்கு வாங்கி இருக்கலாம் இல்ல.” காயத்ரி சொல்ல…”அப்ப இன்னும் கிராண்டா எடுப்போம் பெரியம்மா.” என்றான் அர்ஜுன்.
மீரா ஆருவின் கல்யாணத்திற்கு வியாழன் அன்றே வந்துவிட்டாள். வீட்டிற்கு ஆள் அழைத்துக் கையில் மெஹந்தி போட்டு கொண்டனர். ஆரு, ரஞ்சனா, மீரா, சஞ்சனா மற்றும் வீட்டிற்கு வந்த உறவினர் என்று எல்லோரும் மெஹந்தி போட்டுக் கொண்டு வீட்டை ஒரு வழியாக்கினர்.
எல்லோரும் மதிய உணவிற்குப் பிறகே மெஹந்தி போட்டு கொண்டதால்… மாடியில் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சஞ்சனா மெஹந்தி வைத்ததும் படுக்கச் சென்றுவிட்டாள். வித்யா எங்கோ வெளியில் சென்றுவிட்டு வந்தவர் முகமே வாடி இருந்தது.
ஆருவின் அறைக்கு வந்தவர், எல்லோரிடமும் எரிந்து விழுந்தார். இது ஏன் இங்க இருக்கு? எதுவும் இந்த வீட்ல வச்ச இடத்தில இருக்காது என்று எல்லோரையும் போட்டு படுத்தியவர். இப்படி எல்லாரும் கைல மெஹந்தி வச்சிக்கிட்டு உட்கார்ந்துட்டா…. யாரு வீட்டு வேலை பார்க்கிறது என்று கோபமாகக் கேட்க… ரஞ்சனா, ஆரு, மீரா மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு அவரின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை.
ரஞ்சனா என்னோட கை நல்லா காய்ஞ்சுடுச்சு என்றவள், வேகமாகச் சென்று கையைக் கழுவிவிட்டு… அனைவருக்கும் மாலை காபி போட கீழே சென்றாள்.
“நீ போய்ப் பார்லர்ல வச்சிட்டு வந்திருந்தா… உன்னோட முடிஞ்சிருக்கும். இப்ப பாரு ஆளாளுக்கு வச்சு வீடே எந்த நிலைமைல இருக்குன்னு, இப்ப நீயா வீட்டை சுத்தம் பண்ணுவ…” வித்யா ஆரு மேலும் எரிந்து விழ….ஆருவுக்குக் கண்ணெல்லாம் கலங்கி விட்டது.
அம்மா ஏன் இப்படிப் பேசுறாங்க? ஏற்கனவே எல்லோரும் சேர்ந்து இன்னைக்கு வைக்கிறதா தான பேசி இருந்தோம் என்று மனதில் நினைத்தவளுக்கு, அதை வெளியே சொல்ல தைரியம் தான் இல்லை. வித்யா எவ்வளவுக்கு எவ்வளவு நல்லவரோ… அதே போல் கோபம் வந்துவிட்டால், யார் என்றும் பாராமல் கோபத்தைக் காட்டிவிடுவார்.
மீரா ஆருவின் அருகே அமர்ந்து, மெஹந்தி போட்ட அவள் கைகளில் சக்கரை தண்ணீர் வைத்து கொண்டிருந்தாள். வித்யா மீராவையும் விடவில்லை, அவளையும் பார்த்து முறைத்து விட்டு தான் சென்றார்.
“இன்னைக்கு மட்டும் கைல தண்ணி படாம வச்சுக்கோ… அப்ப தான் மெஹந்தி டார்க்கா பிடிக்கும். நைட் கை, கால்ல எண்ணெய் தேச்சுட்டு படு.” மீரா சொல்ல… ஆருவும் அவள் சொன்னதிற்கெல்லாம் சரி என்று மண்டையை ஆட்டியவள், “மீரா, அம்மா ஏன் கோபமா இருக்காங்க? ஒருவேளை அம்மாவுக்கு எங்க விஷயம் தெரிஞ்சிடுச்சோ…” எனக் கேட்க… மீரா தெரியவில்லை என்று உதட்டை சுழித்தாள்.
மீரா ஆருவை ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு கீழே சென்று ரஞ்சனாவுக்கு உதவினாள். அப்போது அங்கே வந்த வித்யா ரஞ்சனாவிடம், “நீ போ நான் பார்த்துகிறேன்.” என்று சொல்ல… “ஏன் அத்தை? நான் பார்த்துகிறேன் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.” என்றாள் ரஞ்சனா…
“இனி ரெஸ்ட் எடுத்து என்ன பண்ண போறேன்? யாருக்கும் பாரமா இல்லாம சீக்கிரமா போய்ச் சேர்ந்தா போதும்.” வித்யா புலம்ப…அதை கேட்டு மீராவும், ரஞ்சனாவும் திடுக்கிட்டனர்.
“ஏன் அத்தை இன்னைக்கு ஒரு மாதிரி பேசுறீங்க? யாரு என்ன செஞ்சா?” ரஞ்சனா கேட்க… வித்யா பதில் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டார். மீராவுக்கு அங்கே இருப்பதா… இல்லை போவதா… என்று ஒன்றும் புரியவில்லை. எல்லோருக்கும் மாலை காபி கொடுத்ததும், ரஞ்சனா இரவுக்குச் சமைக்க… மீரா அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
வித்யா அவர் அறையில் சென்று படுத்து விட்டார். மீராவும் வேலை முடிந்ததும் ரஞ்சனாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள். இரவு ரஞ்சனாவும், பெரியம்மாவும் சேர்ந்து வந்திருந்த உறவினர்களுக்குப் பரிமாறினார்கள். ரஞ்சனாவும் சரி, மீராவும் சரி, இன்று வித்யா நடந்து கொண்டதை பற்றி ஆதியிடமோ, அர்ஜுனிடமோ மூச்சு விடவில்லை.
வித்யா மறுநாள் சற்று தெளிந்து இருந்தார். ஆனால் முன்பு மாதிரி கலகலப்பாக இருக்கவில்லை, ஏன் சற்று அழுத்தமாக இருந்தார் என்று கூடச் சொல்லலாம். அது வீட்டு ஆண்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் கல்யாண வேலைகளில் பிஸியாக இருந்ததால், வித்யாவை கவனிக்கவில்லை. ஆனால் வீட்டில் இருந்த ரஞ்சனாவுக்கும், ஆருவுக்கும் புரிந்தது.
ரஞ்சனா ஆதியிடம் சொன்னால்… எங்கே தன்னை மாமியார் பற்றிக் குறை சொல்வதாக நினைத்து விடுவானோ என்று சொல்ல தயங்கினாள். ஆரு அம்மாவுக்குத் தங்கள் காதல் தெரிந்துவிட்டதோ… அதனால் தான் கோபமாக இருக்கிறார்களோ என்று நினைத்து பயந்து கொண்டிருந்தாள். மீரா எப்பவும் போல் வந்து போய்க் கொண்டிருந்தாள். அவளிடமும் வித்யா சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. அவளும் ஏன் இப்படி இருக்காங்க? என்று குழம்பி போய்த் தான் இருந்தாள்.
திருமணத்திற்கு முன் தினம் மாலை அனைவரும் வரவேற்புக்கு தயார் ஆகினர். மீரா ஆருவுடனே இருந்தாள். பார்லரில் இருந்து ஆள் வந்து ஆருவிற்கு அலங்காரம் செய்தனர். மீராவும் அந்த அறையிலேயே தலைவாரி, புடவை மாற்றிக் கொண்டாள். வரவேற்பு நல்லபடியாக முடிந்தது.
அன்று இரவு ஆருவும், மீராவும் ஒரே அறையில் தங்கினர். அப்போது ஆரு, “ஏன் மீரா அம்மா டல்லாவே இருக்காங்க, என் மேல கோபமா இருக்காங்களா… என்னால சந்தோஷமாவே இருக்க முடியல…” என்று சொல்லி வருந்த…
“நீ இத்தனை வருஷம் அவங்களோட இருந்துட்ட இல்லையா, இனி வேற வீட்டுக்கு போய்டுவ… அதை நினைச்சு வந்த வருத்தமா இருக்கும். எல்லாம் சரி ஆகிடும் கவலைபடாதே.” என்று ஆருவை மீரா தேற்ற…ஆருவும் சரி என்று தூங்கினாள்.
மறு நாள் காலை சீக்கிரம் எழுந்து ஆரு தயார் ஆக… மீரா அவளுக்கு உதவி கொண்டிருந்தாள். மணப்பெண் அலங்காரத்தில் ஆரு ஜொலிக்க… மீரா அர்ஜுன் வாங்கிக் கொடுத்த புடவையில் இருந்த வெள்ளி ஜரிகைக்குப் பொருத்தமாக, வைர நெக்லஸ் மற்றும் பெரிய வைர காதணியும் போட்டிருந்தாள். மீரா மிகவும் அழகாக இருந்தாள் என்று சொல்லவும் வேண்டுமா…
வித்யா அவர்கள் இருந்த அறைக்குள் வந்த போது, ஆரு மீராவிடம் அவள் வைர நெக்லஸ் பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தாள். “அழகா இருக்கு மீரா… எனக்கு எங்க அம்மா ஒரு சின்ன வைர கம்மல் வாங்கினாங்க, அதுவே அறுபது ஆயிரம் ஆகிடுச்சு. இது பெருசா இருக்கே ரொம்ப விலையா இருக்கும் இல்ல…நீ என்னமா பணக்காரி…. எங்க அப்பா தங்கத்துல எனக்கு நகை போட்டா…. உங்க அப்பா உனக்கு வைரத்துல போடுவாரு.” அவள் கிண்டல் செய்ய… அவள் சொல்வதைப் புன்னகையுடன் கேட்ட மீரா, “நீ வேணா இதைப் போட்டுக்கோ, நான் உன்னோட தங்க நெக்லஸ் போட்டுகிறேன்.” என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம். அவங்கவங்களுக்கு உரியதை தான் போட்டுக்கணும்.” வித்யா சொல்ல… ஆருவும், மீராவும் அப்போது தான் அவரைக் கவனித்தனர். ஆருவின் அருகே வந்த வித்யா, அவள் கன்னத்தை வழித்து, “அழகா இருக்க டா ராஜாத்தி.” என்று அவள் நெற்றியில் முத்தமிட…. ஆரு அவள் அம்மாவை கட்டிக் கொண்டவள், “நாலு நாளா என்னைப் போட்டு டென்ஷன் பண்ணிடீங்க, ஏன் மா அப்படி இருந்தீங்க?” என்று கொஞ்சலாகக் கேட்க….
“நீ எங்களை விட்டு வேற வீட்டுக்கு போற இல்ல அதனால தான்.” என்றார். “மீராவும் அப்படித் தான் சொன்னா…” என்று சொல்லி ஆரு மீராவை பார்த்து சிரிக்க…மீராவும் புன்னகைத்தாள். வித்யா “சரி சீக்கிரம் ரெடியாகு.” என்று சொல்லிவிட்டு சென்றார்.
ஆரு சந்தோஷமாக மணமேடைக்குச் சென்றாள். ஆருவை சூர்யாவின் அருகே உட்கார வைத்துவிட்டு, மீராவும், ரஞ்சனாவும் அவளுக்குப் பின்னே நின்றனர்.
ஆதி வந்து ரஞ்சனாவின் அருகே நிற்க, அர்ஜுன் வந்து மீராவின் அருகே நின்றான். மீரா அர்ஜுனை பார்த்து புன்னகைக்க… “இந்தப் புடவை வாங்கும் போது இருந்ததை விட… இப்ப நீ கட்டியதும் தான் ரொம்ப அழகா இருக்கு மீரா.” அர்ஜுன் உருகினான்.
ரஞ்சனா அவள் திருமணப் புடவை கட்டி இருந்தாள். அதைப் பார்த்த ஆதி “நம்ம கல்யாணத் அன்னைக்குப் பார்த்த மாதிரியே இருக்க ரஞ்சு…” என்று வழிய….
சூர்யா அருவிடம் “கைல பேப்பர் இல்ல…” என்று சொல்ல… ஆரு எதுக்கு என்று புரியாமல் பார்க்க.
“உன் ரெண்டு அண்ணனுங்க பேசுற வசனத்தை நோட் பண்ணி வச்சிகிட்டா… அப்புறமா யூஸ் பண்ணிக்கலாம் அதுக்குத் தான். ஒருத்தருக்குக் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு, இன்னொருத்தனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை…. ஆனா இவங்க பண்ற ரொமான்ஸ் தாங்க முடியலை….” சூர்யா புலம்ப… அதைக் கேட்டு ஆதியும், அர்ஜுனும் ஒரே நேரத்தில் பொறாமை என்று சொல்ல… மூன்று ஜோடியும் சிரித்தது. அதை மேடையின் கீழே நின்று கொண்டிருந்த தினேஷ் தனது செல்லில் படம் எடுத்தான்.
ஐயர், “முஹுர்த்ததுக்கு டைம் ஆகிடுச்சு, பெரியவங்களை எல்லாம் மேடைக்கு வர சொல்லுங்க.” என்றதும், இருவரின் பெற்றோரும் மேடைக்கு வந்தனர். அப்போது வித்யாவிடம் இருந்த ஐஷு இறங்கி நடந்து வந்தது. பட்டுப் பாவாடை அணிந்து, தலையில் இருந்த குடுமியில் பூ வைத்து, நகை எல்லாம் போட்டு… அழகாக இருந்தது.
அர்ஜுன் ஐஷுவை தூக்கி கொண்டவன், “உங்க சித்தியை விட, நீதான் டா சூப்பரா இருக்க…” என்று சொல்ல.. “அம்மாவுக்கும், பொண்ணுக்கும் சண்டை மூட்டி விடப் பார்கறீங்களா, அது நடக்காது. என்னோட பொண்ணு தான் அழகு.” மீரா ஐஷுவை வாங்கிக் கொஞ்ச …அதை ஆதியும், ரஞ்சனாவும் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.
திருமணச் சடங்குகள் ஆரம்பித்ததும், எல்லோரும் அதைக் கவனிக்க… குறித்த முஹுர்த்தத்தில் சூர்யா, ஆராதனாவின் கழுத்தில் தாலி அணிவித்துத் தன் மனைவியாக உலகுக்கு அறிவித்தான். திருமணத்திற்கு வந்த எல்லோரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.
மற்ற சடங்குகள் எல்லாம் முடிந்ததும், மணமக்களுக்கு விளையாடல் ஏற்பாடு செய்திருந்தனர். சூர்யா ஆருவுக்கு எல்லாவற்றிலும் விட்டு கொடுத்து, அவளை ஜெயிக்க வைக்க… “டேய் ஒன்னுத்துளையாவது ஜெய் டா, மானம் போகுது.” அர்ஜுன் அவன் அருகில் குனிந்து சொன்னான்.
“இந்த விளையாட்டுல ஜெயிக்கிறதா முக்கியம், வாழ்கையில ஜெயிக்கணும். இன்னைக்குதான் கல்யாணம் ஆகி இருக்கு. இன்னைக்கே அவளை மூட் அவுட் ஆக்கணுமா… அவ சந்தோஷமா இருக்கட்டும்.” சூரியா சொல்ல… “தேறிட்ட டா…” என அர்ஜுன் நண்பனை மெச்சிக் கொண்டான்.
ஆராதனா சூர்யாவுடன் புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது ஒரே அழுகை, வித்யாவும் அழுதார். அர்ஜுன் சென்று தன் அம்மாவை தேற்ற… அவர் அவனை மெதுவாக விலக்கிவிட்டு தள்ளி சென்று நின்றார். அதை அர்ஜுன் உணரவில்லை, அவன் ஆருவை சமாதானம் செய்து கொண்டிருந்தான். ஆனால் அதை மீரா கவனித்தாள். அவள் மனதில் தங்களைப் பற்றி வித்யாவிற்குத் தெரிந்துவிட்டதோ என்று தோன்றியது. அதனால் தான் இப்படி இருக்கிறாரோ என்று நினைத்தவள், அதை அன்றே அர்ஜுனிடம் சொல்லி இருந்தால்… பின்னே வரப்போகும் பெரிய துன்பத்தைத் தவிர்த்திருக்கலாம்.
தங்கையின் கல்யாண வேலையில் இருப்பவனை… எதாவது சொல்லி குழப்ப வேண்டாம். பிறகு பார்த்துகொள்ளலாம் என்று நினைத்தாள். வரப்போவது என்ன என்று தெரியாமல்.
Advertisement
Advertisement
error: Content is protected !!