Skip to content
Post Views: 4,707
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 5
ஞாயிறு அன்றும் மீரா வரவில்லை என்றதும் அர்ஜுன், சூர்யா வீட்டிற்குச் சென்றான். அர்ஜுனை எதிர் பார்க்காத சூர்யா “டேய் அர்ஜுன், என்ன திடிர்ன்னு இந்தப் பக்கம்? நீ என்னைப் பார்க்க வந்தேன்னு சொன்னா… நான் நம்ப மாட்டேன். ஒழுங்கா உண்மைய சொல்லு.” என்றான்.
சூர்யா சொன்னதைக் கேட்ட அர்ஜுன் சிரிக்க…. அப்போது சூர்யாவின் அக்கா மது கையில் காபியோடு வந்தவர், “ஹாய் அர்ஜுன் எப்படி இருக்க?” என்றார். “நான் நல்லா இருக்கேன் அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க?” அர்ஜுன் பதிலுக்குக் கேட்க….
“நல்லா இருக்கேன் அர்ஜுன்.” என்றவர் எதோ சொல்ல வந்து தயங்க….
“அவங்க இப்ப ரெண்டாவது குழந்தை உண்டாகி இருக்காங்க, அது தான் ரெஸ்ட் எடுக்க வந்திருக்காங்க.” என்றான் சூர்யா.
அர்ஜுன் “அப்படியா, congrats அக்கா. என்னோட டார்லிங் எங்க?” என்று கேட்க…
“இப்ப தான் எழுந்தா.” என்ற மது “ப்ரீத்தி… இங்க வந்து பாரு அர்ஜுன் மாமா வந்திருக்காங்க.” என்று சத்தமாகக் குரல் கொடுக்க….உள்ளே இருந்து ஓடி வந்த மூன்று வயது பெண் குழந்தை அர்ஜுனின் மடியில் சென்று அமர்ந்தது.
“ஹாய் ப்ரீத்தி செல்லம் எப்படி இருக்கீங்க. இந்த மாமாவை நியாபகம் இருக்கா?” அர்ஜுன் கேட்க… இருக்கு என்று தலை ஆட்டிய குழந்தை, சாக்லேட் என்று கையை நீட்ட….
“நீ வந்திருக்கேன்னு மாமாவுக்குத் தெரியாது. நீ கிளம்பி வா… மாமா உன்னைக் கடைக்குக் கூட்டிட்டு போய் வாங்கித் தரேன்.” அர்ஜுன் சொல்ல… ப்ரீத்தி, “அம்மா எனக்கு வேற டிரஸ் போட்டுவிடுங்க.” என்று மதுவிடம் ஓடினாள்.
வேறு உடை மாற்றிக் கொண்டு வந்த ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு அர்ஜுனும், சூர்யாவும் கடைக்குக் கிளம்பினார்கள். வெளியே வண்டியின் அருகே வந்ததும், “அர்ஜுன், இந்தப் பக்கம் ஒரு கடை இருக்கு, அந்தப் பக்கம் ஒரு கடை இருக்கு. அதோட அந்தப் பக்கம் தான் மீரா வீடும் இருக்கு. உனக்கு அந்தப் பக்கம் தான போகணும்.” சூர்யா கேட்க…
சிரித்த அர்ஜுன் “எப்படிடா கண்டு பிடிச்ச?” என்றான்.
“ஆமா… இதுக்கு ஜோசியம் பார்க்கணும் பாரு. நீ ரொம்ப நாளா இந்தப் பக்கம் வராதவன் வந்தா தெரியாதா…” என்று சொல்லி கொண்டே சூர்யா வண்டியை எடுக்க… முன் பக்கத்தில் ப்ரீத்தியும், பின் பக்கம் அர்ஜுனும் உட்கார்ந்தார்கள். சூர்யா வண்டியை மீரா வீடு இருக்கும் திசையை நோக்கி ஓட்டினான்.
தூரத்தில் இருந்தே சூர்யா, “அங்க பாரு அந்த வெள்ளை கலர் பில்டிங், அது தான் மீரா வீடு.” என்றதும், அந்த வீட்டை பார்த்த அர்ஜுன் மலைத்து விட்டான். இவ்வளவு பெரிய வீடா…. என்று நினைத்தவன், மீரா எங்காவது தென்படுகிறாளா என்று வீட்டையே பார்த்துக் கொண்டு வந்தான். ஆனால் மீராவை பார்க்க முடியவில்லை.
கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கிக் கொண்டு திரும்பி வரும் போதும் பார்த்துக் கொண்டே வந்தான், அப்போதும் மீராவை பார்க்க முடியவில்லை. “என்னடா மீராவை காணோம்.” அர்ஜுன் ஏக்கமாகச் சொல்ல… “ஆமா… அவளுக்கு நீ வருவேன்னு தெரியும் பாரு வாசல்ல நிற்க. இவ்வளவு பெரிய வீட்ல அவ வெளிய நின்னாலும் தெரியாது.” என்றான் சூர்யா.
சூர்யாவை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அர்ஜுன் வாசலில் இருந்தே வீட்டுக்குக் கிளம்புவதாகச் சொல்ல…. சூர்யாவின் அக்கா மது சாக்லேட் வாங்கிட்டியா என்று ப்ரீத்தியை பார்த்து கேட்டுக் கொண்டே வெளியே வந்தார்.
“வாங்கிட்டோம் மா… அப்படியே மீரா வீட்ட பார்த்தோம். ஆனா மீரா தான் இல்லை.” ப்ரீத்தி சொல்ல…. அதைக் கேட்ட அர்ஜுன், சூர்யா இருவரும் அதிர்ந்தனர்.
அய்யய்யோ இந்தக் குட்டி சாத்தான் எல்லாத்தையும் கேட்டுட்டே இருந்துச்சா என்று சூர்யா நினைக்க…. அர்ஜுன், “நான் கிளம்பறேன், அம்மா தேடுவாங்க.” என்று வண்டியை கிளப்பிக் கொண்டு சென்று விட்டன். மது “யாருடா மீரா?” என்று குறுகுறுப்புடன் பார்க்க…. சூர்யா என்னை மாட்டி விட்டுட்டு போயிட்டனே என்று நினைத்தவன், “அவ எங்க காலேஜ் பொண்ணு, அவ்வளவு தான். நீ பாட்டுக்கு கற்பனைய வளரத்துக்காத.” என்று தன் அக்காவுடன் உள்ளே சென்றான்.
அன்று மாலை பக்கத்தில் இருந்த பார்க்கிற்குத் தன் அக்கா மற்றும் ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு சென்ற சூர்யா, “அக்கா நீ ஊருக்கு போறவரை டெய்லி சாயங்காலம் இங்க வாக்கா… உனக்கும் பொழுது போகும், ப்ரீத்திக்கும் பொழுது போகும்.” என்றான். மது சரி என்று தலை ஆட்ட… ப்ரீத்தி துள்ளி குதித்து உள்ளே ஓடியது.
ப்ரீத்தி ஒவ்வொரு விளையாட்டிலும் ஆர்வமாகச் சென்று விளையாட… மதுவும், சூர்யாவும் ஓரமாக இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தனர்.
அப்போது அங்கே சில குழந்தைகள் மண்ணில் வீடு கட்டி விளையாட… ப்ரீத்தியும் ஆர்வமாக அங்கே சென்றாள். அங்கே குழந்தைகளோடு உட்கார்ந்து மீரா கதை பேசிக்கொண்டே மணலில் வீடு கட்ட…. அதைப் பார்த்த ப்ரீத்தி, ஹை நானும் வீடு கட்டுவேன் என்று மீராவின் அருகே சென்று அமர்ந்தாள்.
“ஹாய் குட்டி…. நீங்க புதுசா, நான் இப்ப தான் உங்களைப் பார்கிறேன்.” “ஆமா…. நான் பெங்களூர் இருக்கேன், எங்க தாத்தா வீட்டுக்கு வந்திருக்கோம்.” மீராவும், ப்ரீத்தியும் பேசிக்கொண்டே மணலில் வீடு காட்ட…. சிறிது நேரம் கழித்து மதுவும், சூர்யாவும் ப்ரீத்தியை தேடிக்கொண்டு வந்தவர்கள், அவள் மணலில் விளையாடுவதைப் பார்த்து அங்கே வந்தனர்.
மது ப்ரீத்தியை பார்த்து, “இப்படி மண்ணுல விளையாடலாமா…. பாரு டிரஸ் எல்லாம் அழுக்கு.” என்று கடிந்து கொள்ள…
“அவளைத் திட்டாதீங்க பாவம், அவள் நாங்க விளையாடுறதை பார்த்து தான் வந்தா…” என்றாள் மீரா.
மதுவும், சூர்யாவும் அப்போது தான் மீராவை பார்த்தனர். மீராவும் அப்போது தான் சூர்யாவை கவனித்தாள்.
“ஹாய் மீரா, என்னதிது இப்படிக் குழந்தைங்களோட சேர்ந்து மண்ணுல விளையாடுற?” சூர்யா ஆச்சர்யப்பட….
“சும்மா தான் எனக்கும் மண்ணுல விளையாட பிடிக்கும்” என்றாள் மீரா.
அங்க ஒருத்தன் இவளை நினைச்சு உருகிட்டு இருக்கான். இவ இங்க மண்ணுல வீடு கட்டி விளையாடிட்டு இருக்கா… இது எங்க போய் முடிய போதோ என்று நினைத்த சூர்யா, “அக்கா இவங்க மீரா, எங்க காலேஜ்.” என்று அறிமுகபடுத்த…. மீராவும், மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்து ஹாய் என்று சொல்ல….
“நீங்க தான் மீராவா? காலையில அர்ஜுன் மாமா உங்களைப் பார்க்க… உங்க வீட்டுக்கு வந்தாங்க. ஆனா நீங்க இல்லை.” ப்ரீத்தி மழலையில் சொல்ல…..
மீரா ப்ரீத்தி சொன்னதை நம்ப முடியாமல் சூர்யாவை பார்க்க… ஐயோ….. இந்தக் குட்டி சாத்தான் இப்படிக் காலையில இருந்து போட்டு குடுக்குதே என்று பதறியவன், என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க…
“இல்லை காலையில அர்ஜுன் எங்க வீட்டுக்கு வந்தான். அப்போ இவ சாக்லேட் கேட்டா… அது வாங்க உங்க வீட்டுப் பக்கமா போன போது, சூர்யா உங்க வீட்ட அர்ஜுனுக்குக் காட்டினான் போல… அதைத் தான் சொல்றா..” என்று மது விளக்கி சொல்ல… அதைக் கேட்டு சிரித்த மீரா, அது தான பார்த்தேன். அவனாவது என்னைப் பார்க்க வர்றதாவது என்று மனதில் நினைத்தாள்.
மறு நாள் மீரா கல்லூரிக்கு சீக்கிரமே வந்து விட்டாள். அவளுக்கு நேற்று ப்ரீத்தி சொன்ன, அர்ஜுன் மாமா உங்களைப் பார்க்க வந்தாங்க என்பதை நினைத்துச் சிரிப்பு வந்தது. அவனாவது என்னைப் பார்க்க வர்றதாவது என்று நினைத்தவள், அர்ஜுன் மனசுல நான் இருக்கேனா? இல்லையா… இதை எப்படித் தெரிஞ்சிகிறது என்று யோசித்துக் கொண்டே சென்றாள்.
அன்று கல்லூரியில் எதோ விழா என்று எல்லோரும் ஆடிட்டோரியத்தில் குழுமி இருந்தனர். மீரா அர்ஜுன் வருகிறானா என்று வாசலையே பார்த்து கொன்டிருந்தாள். அவள் எதிர்பார்த்தபடி அர்ஜுன் சூர்யாவோடு வந்தான். மீரா மறைந்து அமர்ந்து கொண்டு, அர்ஜுன் தன்னைத் தேடுகிறனா என்று பார்த்தாள்.
அர்ஜுன் வந்தவன் உள்ளே சென்று அமராமல், அங்கேயே நின்று முதல் வரிசையில் இருந்து பார்த்துக்கொண்டே வந்தான். அவன் கண்களுக்கு மீரா நடு வரிசையில் அமர்ந்து இருந்தது தெரியவில்லை. மீராவுக்கு அவன் தன்னைத் தான் தேடுகிறான் என்று புரிந்தது. அவள் அவன் தேடுவதை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
மீரா இங்கில்லை ஒரு வேலை மேலே இருக்கிறாளோ என்று நினைத்த அர்ஜுன், பின் பக்கம் சென்று அங்கிருந்த படி வழியாக மாடிக்குச் சென்றான். மீரா… அர்ஜுன் பின்னாடி சென்று அமர்ந்திருக்கிறான் என்று நினைத்தவள், திரும்பி பார்க்க… அர்ஜுனன் அங்கே இல்லை. அவன் எங்கே உட்கார்ந்திருக்கிறான் என்று தேட ஆரம்பித்தாள்.
அர்ஜுன் மேலே சென்று தேடியவன், அங்கேயும் மீரா இல்லை என்றதும், பால்கனி ஓரத்தில் நின்று கீழே மீரா இருக்கிறாளா என்று பார்த்தான். கீழே நடு வரிசையில் மீரா அமர்ந்திருப்பதைப் பார்த்து முகம் மலர்ந்தவன், அப்போது தான் கவனித்தான். மீரா யாரையோ தேடுவதை. சற்று தள்ளி நின்று கொண்டு அர்ஜுன் கவனிக்க, மீரா பின்னாடி திரும்பி யாரையோ தேடிக்கொண்டிருந்தாள்.
ஒரு வேளை தன்னைத்தான் தேடுகிறாளோ என்று நினைத்த அர்ஜுன், வேகமாகக் கீழே இறங்கி திரும்பி முன் வாசல் வழியாக வந்து மீராவின் பார்வை படும்படியான இடத்தில் சென்று நின்றான்.
Advertisement
அமர்ந்த நிலையிலேயே பின்னாடி திரும்பி அர்ஜுனை தேடிக்கொண்டிருந்த மீரா, அவனைக் காணாமல் சலிப்படைந்தாள். எங்க போனான் என்று நினைத்துக் கொண்டே முன் பக்கம் திரும்பி அமர்ந்தவள், அப்போது தான் கவனித்தாள், அர்ஜுன் வாயில் அருகே நிற்பதை.
இவன் இங்க தான் இருக்கானா… இவ்வளவு நேரம் எங்க போனான் என்று நினைத்துக் கொண்டே மீரா அர்ஜுனை ஓரக்கண்னால் பார்த்துக் கொண்டு இருந்தாள். இவ்வளவு நேரம் பின்னாடி திரும்பி யாரையோ தேடிக் கொண்டிருந்தவள், தன்னைப் பார்த்ததில் இருந்து பின் பக்கம் திரும்பாமல் அமர்ந்திருக்கும் அழகிலேயே, அவள் தன்னைத் தான் தேடி இருக்கிறாள் என்று புரிந்து கொண்ட அர்ஜுன், மீரா உட்கார்ந்து இருந்த வரிசையில் இருந்து நான்கு வரிசைகளுக்குப் பின் அமர்ந்திருந்த சூர்யாவின் அருகே சென்று அமர்ந்தான்.
மீரா அடிக்கடி திரும்பி அர்ஜுனை பார்த்து கொண்டிருந்தாள். அர்ஜுன் மீராவுக்குத் தெரியாமல் அவள் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவன், “சூர்யா… மீரா திரும்பி யாரையோ பார்க்கிறா, யாரைன்னு பாரு.” என்றான்.
சூர்யாவும் மீராவை சிறிது நேரம் கவனித்தவன், “உன்னைத் தான் அர்ஜுன் பார்கிறா.” என்றதும், அந்த இடத்தில் இருந்து எழுந்த அர்ஜுன் மீராவை நோக்கி செல்ல… அவன் கை பிடித்துத் தடுத்து அமர வைத்த சூர்யா, “டேய் ஏற்கனவே நேத்து நீ அவளைப் பார்க்க வந்ததை ப்ரீத்தி அவகிட்ட சொல்லிட்டா.” என்றதும், ஆச்சர்யபட்ட அர்ஜுன் “எப்ப? அவளுக்கு எப்படி மீராவை தெரியும்?” என்று கேட்க… சூர்யா நேற்று பார்க்கில் நடந்ததைச் சொன்னான்.
அதைக் கேட்டு சிரித்த அர்ஜுன், “இரு நான் போய்ப் பேசிட்டு வரேன்.” என்றவன், மீராவின் அருகே அமர்ந்திருந்த பெண்ணைத் தள்ளி அமர சொல்லிவிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
மீராவிற்கு அர்ஜுன் வந்தது தெரியாது. அவள் திரும்பி பின்னாடி பார்த்தவள், அங்கே அர்ஜுன் இல்லை என்றதும், இவன் எங்க அடிக்கடி காணாம போய்டுறான் என்று எரிச்சல் பட்டுக் கொண்டு திரும்ப…
அவள் மறு பக்கம் அமர்ந்திருந்த கீர்த்தனா, “மீரா… அந்தப் பக்கம் பாருடி…” என்று சொல்ல… எந்தப் பக்கம் என்று தெரியாமல் மீரா முழிக்க, “உன் பக்கத்தில பாருடி.” கீர்த்தனா பல்லை கடித்துக் கொண்டு சொல்ல… அவள் சொல்வது புரியாமல் குழம்பிய மீரா, திரும்பி தன் மறுபக்கத்தைப் பார்க்க அங்கே அர்ஜுன் அமர்ந்திருந்தான்.
அர்ஜுனை பார்த்து திடுகிட்ட மீரா அவன் முகத்தைப் பார்க்க, அவள் புறம் திரும்பியவன், அவளைப் பார்த்து லேசாகக் கண் சிமிட்டினான். அவன் செய்கையில் அதிர்ந்த மீரா, “இங்க என்ன பண்றீங்க?” என்று மெதுவாகக் கேட்க…
“உனக்காகத் தான் வந்தேன். நீ கஷ்டப்பட்டுத் தலைய திரும்பி என்னைப் பார்த்திட்டு இருந்த. அது தான் வசதியா இருக்கட்டுமேன்னு இங்க வந்தேன். நீ இப்ப நல்லா பாரு…” என்றவன் மேடையைப் பார்க்க….
மீராவிற்கு ஐயோ இப்படி மாட்டிக்கொண்டமே என்று இருந்தது. “நான் ஒன்னும் உங்களைப் பார்க்கலை. என் ப்ரண்ட தான் பார்த்தேன்.”
“பொய் சொல்லாத மீரா. எனக்கு நல்லா தெரியும். நீ என்னைத் தான் பார்த்த. ரொம்ப நேரமா நீ என்னைத் தேடினதும் தெரியும்.”
“நீங்களும் தான் என்னைத் தேடினீங்க…”
“நான் உன்னைத் தேடினேனா எப்போ?” அர்ஜுன் ஆச்சர்யமாகக் கேட்க….
“இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி வாசல்ல நின்னு என்னை நீங்க தேடலை?”
“நான் உன்னைத் தேடலை. எங்க உட்கார இடம் இருக்குன்னு பார்த்தேன். அதைப் பார்த்து உன்னைத் தேடுறேன்னு நினைச்சியா… so sad.” அர்ஜுன் அலட்சியமாகச் சொல்ல….
மீராவிற்குப் பத்திக்கொண்டு வந்தது. “சரி அப்ப நேத்து எதுக்கு எங்க வீட்டுப் பக்கம் வந்தீங்க? என்னைப் பார்க்க தானே.” என்றாள்.
“இது நல்ல கதையா இருக்கே, நான் ப்ரண்ட் வீட்டுக்கு வந்தேன். அப்படியே அவனோட கடைக்குப் போகும் போது உங்க வீட்டை பார்த்தேன். உங்க வீட்டுப் பக்கம் வந்தா… உடனே உன்னைப் பார்க்க வந்ததா அர்த்தமா?” அர்ஜுன் வேண்டுமென்றே கிண்டலாகப் பேச…..
“அப்படியா சரி நானும் அது மாதிரி தான். பின்னாடி திரும்பி என் ப்ரண்டை தான் பார்த்தேன்… உங்களை ஒன்னும் பார்க்கலை.” என்றாள் அவளும் பதிலுக்கு வீம்பாக…
அர்ஜுனும், மீராவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருக்க… அங்கே விழா முடிந்து எல்லோரும் எழுந்து சென்றனர். “போலாமா மீரா…” கீர்த்தனா கேட்க, மீரா எழுந்து அவளுடன் செல்ல… அர்ஜுன் மீராவை பார்த்துக்கொண்டே சூர்யாவை நோக்கி சென்றான்.
“டேய் அவகிட்ட போய் என்னடா பேசினா? அவ ரொம்பக் கோபமா இருக்கிற மாதிரி இருக்கு”.
“என்னைத் திரும்பித் திரும்பி பார்த்திட்டு, போய்க் கேட்டா இல்லைன்னு சொல்றா டா. கோபம் வராதா… அது தான் நானும் பதிலுக்கு உன்னைப் பார்கலைன்னு சொன்னேன். கோவிச்சிக்கிட்டு போறா…”
“நேத்து அவளுக்காகத் தெரு தெருவா சுத்திட்டு, எதுக்குடா அவகிட்ட அப்படிச் சொன்ன?”
“அவ மட்டும் ஒத்துகிட்டாளா என்னைத் தான் பார்த்தேன்னு. அவளுக்கு அவ்வளவு இருக்கும் போது, எனக்கு இருக்காதா? பார்க்கலாம் நானா… அவளான்னு…” அர்ஜுன் வீம்பு பண்ண…
“என்னவோ பண்ணுங்க.” கடுப்புடன் சொன்ன சூர்யா வெளியே செல்ல…அவனோடு அர்ஜுனும் சென்றான்.
அங்கே வெளியே கீர்த்தனா “அர்ஜுன் என்ன சொன்னாங்க மீரா?” என்று கேட்க….
“ம்ம்… நீ சொன்னது கரெக்ட் கீத்து. அவங்க என்னை லவ் எல்லாம் பண்ணலை… சும்மா சீண்டி விளையாடுறாங்க.” என்றாள் மீரா வேதனையுடன்.
“சரி விடு மீரா, வா போகலாம்.” என்ற கீர்த்தனா மீராவை அழைத்துக்கொண்டு சென்றாள்.
அன்று சூர்யா இரவு உணவு சாப்பிடும் போது ப்ரீத்தி “நாங்க இன்னைக்கு மீரா அக்காவை பார்த்தோமே.” என்று சொல்ல…
சூர்யா அவன் அக்கா மதுவை பார்க்க, “ஆமாம்டா…. மீரா இன்னைக்கும் பார்க்குக்கு வந்திருந்தா. ஆனா… நேத்து மாதிரி இல்லை. இன்னைக்கு அமைதியா ஒரு ஓரமா உட்கார்ந்திட்டு போய்ட்டா…” என்றாள்.
“நான் போய்ப் பேசினேன், அவங்க ரொம்ப நல்ல அக்கா.” என்றாள் ப்ரீத்தி.
சூர்யா இரவு உணவிற்குப் பிறகு, அவன் அறைக்கு வந்து அர்ஜுனை அழைத்தான். “என்னடா இந்த நேரத்துக்குப் போன் பண்ற?”
“டேய்…. மீரா இன்னைக்கும் பார்க்குக்கு வந்திருக்கா, மது சொன்னா ரொம்ப டல்லா இருந்தாளாம். எல்லாம் உன்னால அர்ஜுன். நீ அவளை லவ் பண்றியா இல்லையா… அவகிட்ட ஒழுங்கா பேசுறதை விட்டுட்டு… இது என்ன அர்ஜுன் விளையாட்டு?” சூர்யா அர்ஜுனை கண்டிக்க…
“கோபபடாத சூர்யா, தப்பு என் மேல தான். நாளைக்கு நான் அவகிட்ட ஒழுங்கா பேசுறேன்.” என்றவன், போன்னை வைத்துவிட்டு மீரா செல்லம் கோபமாடா…. உன்னை வருத்தப்பட வச்சிட்டேனா என்று புலம்ப… அங்கே மீரா கண்ணீரால் தலையணையை நனைத்து கொண்டிருந்தாள்.
Advertisement
Advertisement
error: Content is protected !!