Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 7 2

அர்ஜுனுக்குக் கவலையாக இருந்தது. மீராவிற்குத் தெரிந்தாள் என்ன சொல்வாளோ என்று யோசிக்க ஆரம்பித்தான். மதியமும் அர்ஜுனும் மீராவும் சேர்ந்து தான் உணவருந்தினர். அர்ஜுன் அவளிடம் ஆஸ்திரேலியா செல்வது பற்றி எதுவும் சொல்லவில்லை. எதற்கு இப்போதே சொல்லி அவளை வேறு வருந்த வைக்க வேண்டும் என நினைத்தான்.

அன்று மாலை வீட்டிற்கு வந்த அர்ஜுனின் முகம் பார்த்த வித்யாமதியம் சரியா சாப்பிடலியா?” என்று கேட்க… அர்ஜுன்எப்படி மா தெரியும்? எனக்கு அந்தச் சாப்பாடு பிடிக்கவே இல்லை.” என்றதும், “எனக்குத் தெரியாதா உன் நாக்கை பத்தி. உனக்கு வக்கனையா வேணுமே… இரு வரேன்.” என்றவர், உள்ளே சென்று தோசை ஊற்ற…. அர்ஜுனும் அவரோடு உள்ளே சென்றவன், அங்கிருந்த சமையல் மேடை மீது ஏறி அமர்ந்தான்.

வித்யா அவனிடம் தோசையோடு தொட்டுக்கொள்ளச் சாம்பாரும், மிளகாய் பொடியும் வைத்து கொடுக்க…. அர்ஜுனுக்கு அப்போது தான் பசி தெரிந்தது. நான்கு தோசைகள் உள்ளே செல்லும் வரை அர்ஜுன் அவன் அம்மாவை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. வித்யா அவனையே வாஞ்சையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆதியும் ஆருவும் சின்ன வயதிலிருந்து அவர்கள் அப்பாவிடமே நெருக்கமாக இருக்க… அர்ஜுன் எப்போதும் அவனது அம்மாவிடமே நெருக்கமாக இருப்பான்.

அர்ஜுன் இன்னும் ரெண்டு தோசை ஊத்தட்டுமா?”

வேண்டாம்மா வயிறு புல், நான் போய்ப் படிக்கிறேன்.” என்றவனிடம் வித்யா காபி கப்பை கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு மாடிக்கு அவன் அறைக்கு வந்தவன், காபீயை குடித்துக் கொண்டே மீராவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். இன்னைக்கு அவளும் கான்டீன்ல தான சாப்பிட்டா. சாயங்காலம் வீட்ல போய் எதாவது சாப்பிட்டாளா என்னவோ என்று நினைத்தவன், அவளைச் செல்லில் அழைத்தான். அவன் எண்ணை பார்த்ததும் மீரா உற்சாகமாகப் பேசினாள்.

ஹாய் அர்ஜுன், என்ன அதுக்குள்ள கால் பண்றீங்க?”

சும்மா தான். ஆமா பிரைட் ரைஸ் நல்லா இருக்கும்னு சொன்ன, அரிசி வேகவே இல்லை…. நீ எப்படித் தான் அதை டெய்லி சாப்பிடுறியோ, ஒழுங்கா வீட்ல இருந்து இனிமே சாப்பாடு கொண்டு வா. உன்னால முடியாதுனா சொல்லு, நான் இனிமே உனக்கும் சேர்த்து லஞ்ச் கொண்டு வரேன்.”

இல்லை அர்ஜுன், நானே கொண்டு வரேன்.”

சரி அதோட இனி காலை டிபன்னும் வீட்ல சாப்பிட்டிட்டு வரணும்.” அர்ஜுன் சொல்ல… மீரா சரி என்றாள். அப்போது சிறுவர்கள் விளையாடும் சத்தம் அர்ஜுனுக்குக் கேட்டது.நீ பார்க்குல இருக்கியா மீரா… இப்ப மணி 6.30. இன்னும் வீட்டுக்கு போகாம அங்க என்ன பண்ற?”

சும்மா தான் வந்தேன், இதோ கிளம்பிட்டேன் சரி bye.” மீரா போன்னை வைக்க, இவளுக்கு என்ன பிரச்சனைனே தெரிய மாட்டேங்குது? சரி அவளே சொல்லட்டும் என்று நினைத்தவன், புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க உட்கார்ந்தான்.

மறுநாள் மீரா கல்லூரிக்குள் சென்று காரை நிறுத்த, அப்போது அர்ஜுன் அங்கே வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் ஹாய்ச் சொல்லிக்கொள்ள… அர்ஜுன் மீராவையே பார்த்துக் கொண்டு நிற்க, மீரா அர்ஜுனின் முகத்திற்கு நேராகக் கையை அசைக்க…. அதில் கலைந்தவன்இந்த ப்ளூ கலர் சுடிதார்ல அழகா இருக்க மீரா…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு மீராவின் முகம் சிவக்க ஆரம்பித்தது. அதை மறைக்கசரி நான் கிளாஸ்க்கு போறேன்.” என்றாள்… அர்ஜுன்அதுக்குள்ள எதுக்கு இரு போகலாம்.” என்றவன்,

இன்னைக்கு லஞ்ச் கொண்டு வந்தியா…” என்று கேட்டதற்கு, மீரா பதில் சொல்லாமல்… வேகமாகக் காரில் இருந்து உணவு டப்பாவை எடுத்து கொடுக்க… அர்ஜுன் அதை வாங்கித் திறந்து பார்க்க…. அதில் வெஜ் புலாவ், குருமா, தயிர் பச்சடி இருந்தது.
ம்ம்… வாசனை ஆள தூக்குது எனக்கு ரொம்பப் பிடிச்சது.” அர்ஜுன் சொல்ல…

மீரா டப்பாவை வாங்கி மூடியவள், அதை அவனிடம் குடுத்துஅப்ப இதை நீங்களே சாப்பிடுங்க.” என்றாள்.

வேண்டாம் நீ சாப்பிடு, எனக்கு எங்க அம்மா லஞ்ச் குடுத்திருக்காங்க.” என்றான். அவன் சொன்னதைக் கேட்டு மீரா முகம் வாட, அதைப் பார்த்த அர்ஜுன்சரி முகத்தைத் தூக்கி வச்சிக்காத பார்க்க சகிக்கலை.” என்றவன், அவள் முறைப்பதை பொருட்படுத்தாமல்… அவன் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை அவளிடம் கொடுத்து விட்டு, அவளுடையதை வாங்கிக் கொண்டான்.

இப்ப சந்தோஷமா” அர்ஜுன் கேட்க, மீரா சந்தோஷமாகச் சிரித்தாள்.

காலையில சாப்பிட்டியா மீரா….”

மீராசாப்பிட்டேன்” என்றாள். அர்ஜுன் சந்தேகமாக அவள் வயிற்றைப் பார்க்க…சாப்பிட்டேன் அர்ஜுன் ப்ராமிஸ்.” மீரா சொல்லிக்கொண்டே அவள் துப்பட்டாவை இழுத்துவிட…. 


அதைக் கவனித்த அர்ஜுன்நான் ஒன்னும் தப்பா பார்க்கலை. குழந்தைகள் சாப்பிட்டா வயிறு பெருசா இருக்கும். உனக்கும் அப்படி இருக்குதான்னு தான் பார்த்தேன்.” குறும்பு புன்னகையுடன் சொல்ல…

நான் உங்களை ஒரு நாளும் தப்பா நினைக்க மாட்டேன். கூச்சமா இருந்தது அது தான்.” என்ற மீரா அவன் முகத்தைப் பார்க்காமல் எங்கையோ பார்த்துக் கொண்டு சொல்ல, அர்ஜுன்நான் இங்க இருக்கேன், நீ அங்க யார்கிட்ட பேசுற?” என்றவன் சிரிக்க…. மீரா முகம் சிவந்தாள்.

மீராவிற்கு அர்ஜுன் அவள் மேல் காட்டும் அன்பும், அக்கறையும் அவளை நெகிழ செய்ய, எங்கே அவன் முன்பு அழுது விடுவோமோ என்று நினைத்தவள்அர்ஜுன், எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, நான் கிளாஸ்க்கு போகட்டுமா…” என

மீராவை பார்த்த அர்ஜுன், அவள் சொல்வது பொய் என்று தெரிந்தும், “சரி போ…” என்றான். மீரா விட்டால் போதும் என்று அங்கிருந்து வேகமாகச் சென்றாள்.

அர்ஜுனும் மீராவும் கல்லூரியில், ஷட்டில் விளையாடும் இடத்தில், நாட்டிய பள்ளியில் என்று இருவரும் ஒருவரோடு ஒருவர் அதிக நேரம் இருந்தனர். அது அவர்கள் காதலை மேலும் வளர்க்க உதவியது. இப்படியே சில நாட்கள் செல்ல….

ஒரு நாள் வார இறுதியில் மீராவிற்கு ஒரு நாட்டிய நிகழ்ச்சி இருந்தது. ஆரு வித்யாவிடம் சொல்லிவிட்டு அதற்குச் செல்ல… அவள் துணைக்குச் செல்வது போல் அர்ஜுனும் ஆருவுடன் சேர்ந்து சென்றான்.

வழக்கம் போலவே மீரா அருமையாக ஆடினாள். அவள் ஆடி முடித்ததும் அரங்கத்தில் இருந்த எல்லோரும் கைத்தட்ட, மற்றவர்கள் தட்டி முடிந்த பிறகும் விடாமல் எழுந்து நின்று அர்ஜுனும், ஆருவும் கை தட்டினார்கள். அவர்களின் செயல் மீராவிற்கு உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்றும், அங்கிருந்த மற்றவர்களுக்கு மீராவை கொண்டாடவும் ஆள் இருக்கிறது என்றும் காட்டியது.

இது எல்லோருக்கும் சாதாரணமாக நடப்பது தான். ஆனால் மீராவிற்கு இப்போது தான் முதல் முறை. உனக்காக நாங்கள் இருக்கிறோம் என்று ஆருவும், அர்ஜுனும் எழுந்து நின்று கைதட்டுவதைப் பார்த்ததும் மீராவிற்குக் கண்கள் கலங்கிவிட்டது. அவள் கஷ்ட்டப்பட்டுத் தன்னைச் சமாளித்துக் கொண்டு அர்ஜுனின் அருகில் சென்று அமர்ந்தாள்.

வேறு ஒருவர் நாட்டியம் ஆட மீரா அதைப் பார்ப்பது போல் அமர்ந்திருந்தாள். ஆனால் அவளது கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது. அதைக் கவனித்த அர்ஜுன் ஆருவிடம் சொல்லிவிட்டு மீராவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். இருவரும் ஆள் இல்லாத இடத்திற்குச் சென்று அமர, மீரா வேகமாக அர்ஜுனின் மடியில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

அர்ஜுனின் சமாதானங்கள் எதையும் ஏற்கும் நிலையில் மீரா இல்லை. சரி இத்தனை நாள் போட்டுகொண்டிருந்த முகமுடியையை இன்றாவது கழட்டினாளே என்று நினைத்த அர்ஜுன், அழுதாவது அவள் சோகத்தைக் குறைக்கட்டும் என்று அமைதியாக அவளைத் தட்டி கொடுத்துக் கொண்டு இருந்தான்.

சிறிது நேரம் சென்று அவள் அழுகை கொஞ்சம் ஓய்ந்ததும், “நாங்க உனக்குச் சப்போர்ட் பண்ணா…. நீ சந்தோஷ படுவேன்னு நினைச்சோம் மீரா… நீ இப்படி அழுவேன்னு நினைக்கலை….அர்ஜுன் சொல்ல… மீரா கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

எதுக்கு மீரா இப்படி அழற? நான் உனக்கு இல்லையா…” அர்ஜுன் வருத்தமாகக் கேட்க,

நீங்க மட்டும் தான் அர்ஜுன் இருக்கீங்க.” மீரா சொல்ல… அதிர்ந்த அர்ஜுன், “அப்ப உங்க அப்பா, அம்மா.” என்றான். அவர்கள் இல்லையோ என்று நினைத்து.

இருக்காங்க, ஆனா… எனக்கு இல்லை…” மீரா புதிராகச் சொல்ல, அப்போது சரியாக உள்ளே நிகழ்ச்சி முடிய….சரி உனக்கு நான் இருக்கேன்னு நீ என்னை நம்புற தான..” அர்ஜுன் கேட்க…மீரா ஆமாம் என்று தலை அசைக்க….

அப்ப கவலைப்படாம இருக்கணும். நாம நாளைக்கு வெளிய எங்காவது போயிட்டு வரலாம். அங்க போய் மத்ததைப் பேசிக்கலாம். நாளைக்கு முழு நாளும் நான் உன் கூடவே இருப்பேன் சரியா…” என்ற அர்ஜுன் எழுத்துகொள்ள… மீராவும் அவனோடு எழுந்து உள்ளே சென்றாள்.



Advertisement

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!