Skip to content
Post Views: 3,790
“அப்ப உங்க அம்மா இல்லையா மீரா?” வித்யா பரிதாபத்துடன் கேட்க…. “இருக்காங்க, அவங்களும் வேற கல்யாணம் பண்ணி வெளிநாட்டில செட்டில் ஆகிட்டாங்க.” மீரா அவள் உணர்வுகளை வெளிகாட்டிக் கொள்ளாமல் சொல்ல… அதைக் கேட்டு அங்கிருந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
எல்லோரும் மெளனமாக இருக்க… மீரா “நான் கிளம்பறேன்.” என்றவள், யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தன்னுடைய ஹாண்ட் பாகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அர்ஜுன் மீரா செல்வதைத் தடுக்க முடியாமல்…. அவள் போவதையே வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
மீரா அங்கிருந்து சென்ற சிறிது நேரம் வரை யாரும் எதுவும் பேசவில்லை. வித்யா ஆருவை பார்த்து “இனி மீராவிடம் இருந்து விலகி இரு, நமக்கு இந்த மாதிரி குடும்பத்துடன் எல்லாம் ஒத்துவராது.” என்று சொல்ல….அர்ஜுனுக்குச் சுள்லென்று கோபம் வந்தது.
“அம்மா…. மீராவோட அம்மா, அப்பா வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்கன்னா அது அவங்க விருப்பம். அவங்க வாழ்க்கை…. அவங்களுக்குள்ள ஒத்துவரலை அதனால பிரிஞ்சிருப்பாங்க. ஆனா…. அதுக்கு மீரா என்ன செய்வா? அவளோட குணம் சரி இல்லை. அதனால நீ அவளோட சேராதன்னு சொன்னா நியாயம். அவங்க அம்மா, அப்பா பண்ண தப்புக்கு அவ என்ன பண்ணுவா? நீங்க இப்படிப் பேசுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லைமா…” என்ற அர்ஜுன் அங்கிருந்து கோபமாக வெளியே செல்ல…..
வித்யா அர்ஜுனா தன்னிடம் இப்படிக் கோபமாகப் பேசியது என்று அதிர்ச்சியில் இருந்தார். “இவன் எதுக்கு இப்படிக் கோபபடுறான்?” என அவர் கேட்க….
“வித்யா, நீ பேசினது தப்பு தான். மீராவோட அம்மா, அப்பா எப்படி இருந்தா நமக்கு என்ன? அவங்களோட செயல் மீராவை கண்டிப்பா பாதிச்சிருக்கும். மீராவோட சித்தி என்கிட்டே மீராவை பத்தி சொல்லவே இல்லை. இதுலேயே அவங்களுக்கு அவ மேல வெறுப்பு இருக்குன்னு தெரியுது. அப்ப அவங்க அவளை எந்த லட்சனத்தில கவனிப்பாங்கன்னு யோசிச்சு பாரு.” என்றார் கணேசன்.
அப்போது ஆரு “ஆமாம்பா மீரா வீட்லையே இருக்க மாட்டா… எதாவது கிளாஸ் போயிட்டே இருப்பா…. சனி, ஞாயிறு கூட வீட்ல இருக்க மாட்டா… காலையில ஷட்டில், மதியம் குக்கிங் கிளாஸ், சாயங்காலம் பரதம் அப்படின்னு எதுக்காவது போய்டுவா…. இப்ப தான் தெரியுது எதுக்குன்னு. ஆனா …மீரா இது வரை அவ வீட்டை பத்தி பேசினதும் இல்லை. தன்னோட கஷ்டத்தை வெளிய காமிச்சதும் இல்லை.” என்றாள்.
“பார்த்தியா வித்யா, அவ வீட்ல அவளுக்குப் பிரச்சனை இருகிறதுனால தான அங்க இருக்காமா வெளிய அதிகமா இருக்கா… அப்பவும் பாரு வசதியான வீட்டு பொண்ணு, அவ நினைச்சா அவளுக்கு வேற விதமா பொழுது போக்க தெரியாதா…. அப்படி இருந்தும் அவ தன்னோட நேரத்தையும், பணத்தையும் நல்ல வழியில தான செலவழிக்கிறா….”
“அவ குடும்பத்தில கிடைக்காத பாசம் நம்மகிட்ட கிடைக்குதுன்னு தானே இங்க வரா… அவளாத்தானே எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சா… அதுக்கு என்ன அர்த்தம்? அவங்க வீட்ல கிடைக்காத உரிமையும், சுதந்திரமும் நம்ம கிட்ட கிடைக்குதுன்னு தானே அர்த்தம். நாமும் அவளை ஒதுக்கி வைக்கலாமா நீயே சொல்லு…” என்ற கணேசன், யோசிச்சு முடிவு எடுக்கட்டும் என்று எழுந்து வெளியே செல்ல….வித்யா யோசிக்க ஆரம்பித்தார்.
“வாங்கமா உங்களையும், ஆருவையும் வீட்ல விடுறேன்.” ஆதி அழைக்க…. அவனோடு வீட்டுக்கு கிளம்பினார்.
அன்று இரவு அனைவரும் சேர்ந்து உணவு அருந்தும் போது….. “நான் மீராவை பற்றிச் சொன்னது தவறு தான். பாவம் மீரா… அவ தாராளமா நம்ம வீட்டுக்கு வரட்டும் போகட்டும்.” வித்யா சொல்ல… அப்போதும் அர்ஜுன் அமைதியாக இருக்க…
“டேய்… என்னடா இப்பவும் உம்முன்னு இருக்கே…” என்றார் வித்யா. “அம்மா, நீங்க அவ மேல பரிதாபத்தைக் காமிச்சாலும் மீரா நம்மகிட்ட இருந்து விலகிடுவா…” அவன் சொல்ல…. மற்றவர்கள் யோசிக்க… வித்யா புரியாமல் பார்த்தார்.
“அம்மா மீரா இதுவரை ஆருகிட்ட கூட அவ அப்பா, அம்மாவை பத்தி பேசியது இல்லை. அப்படி இருகிறவ தன்னைப் பார்த்து யாரும் பரிதாபப்படுவதைக் கண்டிப்பா விரும்பமாட்டா. அதனால அவகிட்ட எப்பவும் போல இருங்க. அவங்க அப்பா, அம்மாவை பத்தியோ இல்லை அவளுக்கு ஆறுதல் சொல்றேன்னு அவ கடந்த காலத்தைப் பற்றியோ பேசாதீங்க.” அர்ஜுன் சொல்ல… அவன் சொல்வதை எல்லோரும் புரிந்து கொண்டனர். அதன் பிறகு எல்லோரும் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
வித்யா ஆதிக்குத் திருச்சியில் இருந்து ஒரு வரன் வந்திருக்கு என்றவர், “அவங்களுக்கு ரெண்டு பொண்ணுதான். முதல் பொண்ணுக்கு தான் இப்ப வரன் பார்கிறது. பேரு ரஞ்சனா…. B.E முடிச்சிட்டு வீட்ல தான் இருக்கா . அவங்க அப்பாவும் நம்மை மாதிரி பிசினஸ் தான் பண்றார். நம்ம குடும்பம் மாதிரி தான் அவங்க குடும்பமும். நீங்க என்ன சொல்றீங்க?” என்று கணேசனிடம் கேட்க…. அவர் “சரி நானும் விசாரிக்கிறேன், அப்புறம் நேர்ல போய்ப் பார்க்கலாம்.” என்றார்.
சரி தீபாவளி முடிந்தது பெண் பார்க்க செல்வது என்று உறுதியானதும், வித்யா சென்று ரஞ்சனா போட்டோவை எடுத்து வந்து கணேசனிடம் கொடுத்தார். அவருக்குப் பார்த்ததும் பிடித்தது. அவர் ஆதியிடம் கொடுக்க… அவனிடமிருந்து போட்டோவை பிடிங்க அர்ஜுனும், ஆருவும் போட்டி போட்டனர்.
ஆதி அவனே போட்டோவை ஆருவிடம் கொடுத்தான். ஆரூவோடு சேர்ந்து நின்று அர்ஜுனும் பார்க்க…. ஆரு “பிக் பிரதர்…. சூப்பர் போங்க…. கலக்குங்க, எனக்கு வர்ற அண்ணிங்க எல்லாம் ரொம்ப அழகாவே இருக்காங்க.” என்று வாய்விட… ஆதியும், அர்ஜுனும் அதிர்ந்து போய்த் தங்கள் பெற்றவர்களைப் பார்க்க… நல்லவேளை அப்போது வித்யா அங்கில்லை கணேசன் மட்டும் தான் இருந்தார்.
அவருக்கு ஆரு சொன்னது சரியாகப் புரியவில்லை. அதனால் எதுவும் கேட்கவில்லை. அர்ஜுன் நல்லவேளை என்று பெருமூச்சு விட்டவன், ஆரூவை பார்த்து முறைக்க… அவள் சாரி… ப்ளீஸ்… என்று கண்களால் கெஞ்ச … அர்ஜுன் “சரி போட்டோவை ஆதிகிட்ட கொடு, அவனும் பார்கட்டும்.” என்றான்.
ஆதி போட்டோவை பார்க்க… அப்போது அங்கே வந்த வித்யா “பிடிச்சிருக்கா ஆதி” என்று கேட்க… ஆதி பிடிச்சிருக்கு என்று சொல்ல… அர்ஜுனும், ஆருவும் ஓ…ஒ என்று கத்தினார்கள்.
வித்யா “சரி நேர்ல போய்ப் பார்க்கலாம்.” என்றவர், ஆதியிடம் இருந்து போட்டோவை வாங்க, அவன் முகம் வாடியது. அதைக் கவனித்த வித்யா “கல்யாணம் உறுதி ஆகட்டும் ஆதி, உன்கிட்ட குடுக்கிறேன்.” என்று சொல்ல…. ஆதி சரி என்று தலை ஆட்டினான்.
அர்ஜுன் அன்று இரவு தன் அறைக்கு வந்ததும், மீராவை செல்லில் அழைத்தான். அவனுக்குத் தெரியும் அவள் ரொம்பக் கவலையாக இருப்பாள் என்று. அதனால் மீரா போன்னை எடுத்ததும் அதைப் பற்றிப் பேசாமல் “மீரா… இன்னைக்கு ஒரு வேலை குடுத்தேனே அதை முடிச்சிட்டியா…” என்று கேட்க… அவள் “இல்லை, பாதித் தான் முடிச்சேன்.” என்றாள். “சரி நாளைக்குக் காலையில பதினோரு மணிக்கே கடைக்கு வந்திடு, நாளைக்குக் கண்டிப்பா முடிச்சிடனும்.” என்றான்.
மீராவிற்கு அவன் அம்மா, அப்பா தன்னைப் பற்றி எதாவது சொன்னார்களா என்று கேட்க… ஒரு மாதிரி இருந்தது. சரி நாளைக்கு நேரில் சென்று பார்ப்போம். அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தால்… இனி அவர்கள் கடைக்கோ, வீட்டிற்கோ செல்ல கூடாது என்று முடிவு எடுத்தவள், அர்ஜுனிடம் “சாப்டீங்களா…” என்றாள். “சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியா…”அர்ஜுன் கேட்க… மீரா “ம்ம்…” என்றாள். அர்ஜுனுக்கு அவள் மனதில் இருப்பது தெரியும் என்பதால்… அவன் வேறு பேச்சு பேச ஆரம்பித்தான்.
“மீரா ஆதிக்குக் கல்யாணம் முடிவு ஆகப் போகுது.”
“அப்படியா யாரு பொண்ணு?” மீரா ஆர்வமாகக் கேட்க… அர்ஜுனும் அவன் அம்மா சொன்ன எல்லாவற்றையும் சொல்ல….
“போட்டோ பார்த்தீங்களா எப்படி இருக்காங்க?” என்றாள்.
“போட்டோ பார்த்தோம், நல்லா இருக்காங்க.” என்றவன், இன்று ஆரு உளறியதையும் சொல்ல… “ஆருவுக்கு நம்ம விஷயம் தெரியுமா…” மீரா கேட்க… ஆருக்கு மட்டும் இல்லை ஆதிக்கும் தெரியும் என்றான் அர்ஜுன்.
“எப்ப இருந்து அவங்களுக்குத் தெரியும்…”
“உனக்குச் சொல்றதுக்கு முன்னாடியே அவங்ககிட்ட சொல்லிட்டேன்.”
அடிப்பாவி ஆரு…. தெரிஞ்சிகிட்டே தான் தெரியாத மாதிரி இருந்தியா என்று நினைத்த மீரா, “அர்ஜுன் உங்க அண்ணாட்ட என்னோட வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.” என்று சொல்ல…
“ஏன் உனக்கு வாய் இல்லையா? நீயே நேர்ல பார்க்கும் போது சொல்லு.” என்றான். மீராவும் சரி என்றாள். அர்ஜுனுக்கு மீராவை சீண்டும் எண்ணம் தோன்ற….
“மீரா.. அடுத்த வாரம் எனக்குப் பிறந்தநாள் வருதே அதுக்கு எனக்கு என்ன கிப்ட் தருவா?”
என்ன கிப்ட் தரலாம் என்று மீரா யோசித்தவள், “டிரஸ் வாங்கித் தரட்டுமா.” என்றாள்.
“ட்ரெஸ்ஸா…. துணி கடை வச்சிருக்க எனக்கே நீ டிரஸ் எடுத்து தரியா… எங்க கடையில இல்லை பாரு…” அர்ஜுன் சலிக்க….
மீரா “அப்ப வாட்ச்.” என்றதும்,
“நான் வாட்சே கட்ட மாட்டேன். என்ன மீரா…. எல்லாம் சின்னச் சின்னதா சொல்ற… கோடீஸ்வர அப்பாவ வச்சிக்கிட்டு இப்படிக் கஞ்ச தனமா இருக்க…” அர்ஜுன் சீண்ட…. மீரா “செல்போன் வாங்கித் தரட்டுமா?” என்றாள்.
“நீ தேறமாட்ட… அதனால நானே கேட்கிறேன், நீ அதைக் கொடு.” அர்ஜுன் ஒரு மாதிரி குரலில் சொல்ல… அதைப் புரிந்து கொள்ளாத மீரா, ஐயோ அர்ஜுனுக்கு என்ன கிப்ட் குடுகிறதுன்னு கூடத் தெரியலை என்று தன்னையே நொந்தவள்… சரி அவன் கேட்பதையே கொடுத்துவிடுவோம் என்று, அவன் வீசிய வலையில் விழுந்தாள். “சரி அர்ஜுன் நீங்க கேட்கிறதையே கொடுக்கிறேன்.” என்றாள்.
“வாக்கு மாற மாட்டியே, நான் கேட்கிறது குடுக்கணும்.” அர்ஜுன் அழுத்தி சொல்ல…. மீராவிற்குச் சந்தேகம் வந்தது. அப்படி என்ன கேட்க போறான்? என்று யோசித்தாள். அவள் ரொம்ப யோசித்தாள் தனக்கு ஆபத்து என்று உணர்ந்த அர்ஜுன் “மீரா நாளைக்கு மறக்காம கடைக்கு வந்திடு.” என்று சொல்லி போன்னை வைக்க… மீராவும் சந்தோஷமாகப் போன்னை வைத்தாள்.
மீரா மறுநாள் கடைக்கு வந்து… முதல் நாள் அர்ஜுன் அவளுக்குக் கொடுத்த வேலையை அவர்கள் அலுவலக அறையில் அமர்ந்து செய்து கொண்டிருந்தாள். மதியம் சாப்பாடு கொண்டு வந்த வித்யா மீராவிடம் எப்போதும் போல் நன்றாகப் பேச…. மீராவிற்கு நிம்மதியாக இருந்தது. அதே போல் கணேசனும் மீராவிடம் நன்றாகப் பேசினார். வித்யா அவளையும் அங்கேயே சாப்பிட சொல்ல… மீராவும் மறுக்காமல் சாப்பிட்டாள். வித்யா மதியம் சிறிது நேரம் இருந்தவர் வீட்டுக்கு கிளம்ப… மீரா அவள் வேலையைத் தொடர்ந்தாள்.
மாலையில் மீரா வேலையை முடித்ததும் அர்ஜுனுக்குப் போன்னில் அழைத்துச் சொல்ல… அவன் அவள் இருக்கும் இடம் வந்தான். வந்து மீராவுடன் பேசிகொண்டிருந்த போது…. ஆதியும், ஆருவும் அங்கே வந்தனர். எல்லோரும் சேர்ந்து அமர்ந்து பேசும் போது தான் மீராவிற்கு ஆதிக்குப் பெண் பார்த்திருப்பது நினைவில் வர…. அவள் ஆதியை எப்படி அழைப்பது என்று தெரியாமல் ஆதி, அண்ணா என்று குழப்ப….
“அம்மா தாயே, நீ அவனை அண்ணான்னு கூப்பிட்டா… எங்க அம்மா என்னையும் அண்ணான்னு… உன்னைக் கூப்பிட சொல்வாங்க. நீ இப்ப அவனை அத்தான்னும் கூப்பிட முடியாது, அதனால நீ ஆதின்னே சொல்லு.” என்றான் அர்ஜுன்.
மீரா சரி என்று தலை ஆட்டியவள், எதற்கு வம்பு என்று ஆதியை பார்த்து வெறுமனே “congrats…” என்றாள். மீராவின் முகத்தைப் பார்த்ததும் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு ஆதி பதிலுக்கு “தேங்க்ஸ்.” என்றான்.
error: Content is protected !!