இருக்கையில் சாய்ந்தமர்ந்திருந்த ம்ருதவ், நெஞ்சம் சேர்ந்த அவள் மீட்டிவிட்ட காதலின் ஏக்கத்தோடு விழிகள் மூடிட, கண்ணின் ஓரம் நீர் இறங்கியது.
அதீத மௌனம்…
சிறு உரையாடல்…
ஒற்றை விளிப்பு…
மென் உருகல்…
இதயம் கடத்திய காதல்…
பெரும் இடைவெளியை ஒன்றுமில்லாது செய்திருக்க,
கேட்ட மன்னிப்பு அவசியமற்றதாகிப் போனது… அவனிடத்தில்.
அவளே அவனாகியிருக்க… அவனில் ஜீவிக்க வருபவளிடம், அவன் காண்பிக்க இருப்பது உயிர் தீண்டும் நேசம் மட்டுமே!
பல தடைகள் தாண்டி கரம் கோர்க்க நினைத்துவிட்டவன், அவளின் சிறு இடைவெளி உடைதலில் தவித்திருந்தான்.
உள்ளங்கை விரல்களின் குவிதலில் அழுத்தம் பெற, ஜிமிக்கியின் தடம் பிம்பம் கொண்டது. இதயத்தின் வலியை ஈடு செய்தது, ஜிமிக்கி தந்த காயம்.
விரல்களை விரித்து ஜிமிக்கியை பார்வையிட்டவனின் விழிகளில் விழுந்தது சிவந்த தடம்… அவளே வாசம் செய்த தோற்றம்.
“என்கிட்ட பேச உனக்கென்ன தயக்கம் யுகா?” என்று ஜிமிக்கியிடம் கேட்டவன், “ஒரு ஹக் கிடைக்குமா?” எனக் கேட்டிருந்தான். எப்போதும் அவனிடம் அவள் கேட்பது. இக்கணம் அவன் வேண்டுவது… அவனுக்கு வேண்டுமாய்.
எதற்காக அவளிடம் பேச வேண்டுமென அழைத்தானோ, அதற்கான பதில், உன்னை நானறிவேன் எனும் விதமாக ரதி சொல்லியதை ஏற்கவில்லையென தன்னைப்போல் வழங்கியிருக்க… இருப்பினும் அவளிடம் தானே ஒருமுறை சொல்லிட வேண்டுமென்ற எண்ணத்தோடு மெல்ல கண்ணயர்ந்தான்.
இரவின் நீளம் முடிவுபெற, பறவைகளின் சப்தத்திலும், முகம் மோதிய சூரிய ஒளியிலும் தான் உறக்கம் கலைந்து எழுந்தான்.
ம்ருதவ்வுக்கு பழக்கமான உறக்கம் தான் இது. பல நாட்கள், பல இரவுகள் அவனுக்கு இப்படித்தான் கழிந்திருக்கின்றன. இன்றுபோல் என்றும் அவளின் நினைவுகளோடு… அவள் விட்டுச்சென்ற நினைவுகளோடும்.
அலுவலகத்தில் முக்கிய கூட்டமிருக்கவே, துரிதகதியில் கிளம்பிச் சென்றிருந்தான்.
கூட்டம் முடியவிருக்கும் தருணம், ம்ருதவ்வின் அலைபேசி அதிர்ந்து ஒலித்தது. அசட்டையாக எடுத்து யாரெனப் பார்த்தவன், ‘ஜிமிக்கிப்பொண்ணு’ என திரை நிறைத்தப் பெயரில் நிலைக்குற்றினான்.
என்று அவளது புதிய அலைபேசி எண் தெரிந்திருந்ததோ அன்றே சேமித்திருந்தான்… மனதிலும்.
அருகிலிருந்த கமலேஷ் அவனது அசைவற்ற நிலையில், அவனின் தோள் தொட…
“பேசிட்டு வர்றேன்” என எழுந்து கூட்டம் நடைபெறும் அறைவிட்டு வெளியேறினான்.
“யுகா!”
“உங்க ஆபீஸ் பார்க்கிங்கில் தான் இருக்கேன்.”
நடையை எட்டி வைத்தவன், வாகனங்கள் நிறுத்துமிடம் சென்று பார்வையை அலசினான் அவள் எங்கென்று.
“ம்ருது…” முதுகுக்குப் பின்னால் கேட்ட ஓசையில் திரும்பியவன், அவள் மீது வெயில்படவே, அவளின் கரம் பிடித்து நிழலுக்கு கீழ் அழைத்து வந்து நிறுத்தினான்.
அவளுக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தன.
அவனின் காதல் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்கு அவனது இந்த செயலே போதுமானது. அவளது உள்ளத்தை மொத்தமாய் சிதைப்பதற்கும்.
“வன் செக்” என்றவன் திரும்பி வருகையில், அவனது கையில் குளிர்ந்த நீர் பாட்டில் இடம்பெற்றிருந்தது.
பாட்டிலின் மூடியை கழட்டி அவள் முன் நீட்டியவனின் இன்னொரு கரம் கைக்குட்டையை நீட்டியிருந்தது.
கண்கள் பனித்திட அவன் முகம் பார்த்தாள்.
இரண்டையும் வாங்கியவள், நெற்றியை துணியால் ஒற்றி எடுத்து அவனிடம் கொடுத்திட்டு, நீரினைப் பருகினாள்.
வாயில் சரித்த நீர் தொண்டைக்குள் இறங்கிட, காது மடல் சேர்ந்தது கண்ணின் உவர்நீர்.
பட்டென்று தனது பெருவிரலால் துடைத்து சுண்டியிருந்தான்.
உள்ளிறங்கிய தண்ணீராலும், இப்போதும் இதயம் நிறைக்கும் அவனது காதலாலும் ஆசுவாசம் கொண்டுவளுக்கு, உண்மையில் மனம் சீரானதா என்பது சந்தேகமே!
“அழுதுடாதடி… என்னால பார்க்க முடியாது” என்றவன், ஒற்றை கையால் பிடரி கேசத்தை அழுந்த வருடி, தலை உலுக்கி தன்னை நிலைப்படுத்தினான்.
தண்ணீரைக் குடித்து முகம் தாழ்த்தியவள்,
“சாரி… எல்லாத்துக்கும்” என்றாள்.
“நேத்தே சொல்லிட்ட… இருந்தாலும் அக்செப்ட் பண்ணிக்கிறேன்” என்றான். அவனது வலிக்கு அவளின் காதலைத் தாண்டி அவள் கூறும் மன்னிப்பு வேண்டுமாயிருந்தது. இது அவனை வேண்டாமென்று அவள் சொல்லியதற்காக அல்லவா? அதற்கான கோபமிருந்தபோதும் அவளாக அருகில் வந்துவிட்ட பின்னர் ஏற்கவே செய்தான். அவன் காதல் ஏற்கவே செய்தது.
“பேசனும்… வந்துட்டேன். என்ன பேசணும் தெரியல.”
“ஆனால் எனக்கு நிறைய இருக்கு. நீயில்லாம நான் பட்ட வலி, வேதனை எல்லாம் சொல்லணும். நீயில்லாம நான் சந்தோஷமாவே இல்லன்னு உனக்கு சொல்லணும்” என்ற ம்ருதவ், “என்னை அதிகம் சந்தோஷப்பட வச்சதும் நீதான்… அழ வச்சு வலிக்க வச்சதும் நீதான்… அதுக்கு மருந்தா உன்னை தேட வைக்கிறதும் நீதான்” என்றான்.
“ம்ருது…”
“இப்படி கூப்பிட்டு உயிரை உருவாதடி” என்றவன், சுற்றி யாரும் இருக்கின்றனரா என்று பார்வையை ஓட்டி, அவ்விடம் அவர்களைத் தவிர்த்து யாருமில்லையென்றதும், அவளின் பின் தலையில் கை வைத்து, தன் மார்பில் அவளின் நெற்றி முட்ட சாய்த்திருந்தான்.
எப்போதுமான அவனது தேகம் தீண்டா இடைவெளி இப்போதும்.
“உங்களுக்கு… என்மேல கோபமில்லையா?”
அவள் கண்களில் நிரம்பிய நீர், அவனின் மார்பு நனைத்தது.
“நிறைய இருக்கு. மொத்தமா காட்டணும். அதுக்கு நீ என் பக்கத்துல வரணும்.”
“ஏன் இவ்ளோ லவ் பண்றீங்க?”
“கத்துக்கொடுத்ததே நீதானடி” என்றவன், “இஃப் யூ டோண்ட் மைண்ட்” எனக்கூறி அவளின் கன்னம் இரண்டையும் கைகளில் தாங்கி, நெற்றி முட்டினான்.
“அழ வருது ம்ருது…”
“என்னை அழ வச்சியே…!”
“வேணுன்னா என்னை அடிச்சிக்கோங்க.”
“முடியுமா என்னால? உனக்கு வலி கொடுத்து நான் வலி சுமக்கவா” என்றவனின் நேசப்பெருவெளியில் மொத்தமாய் சரண் புகுந்திருந்தாள்.
இருவரின் காதலே அவர்களின் இயல்பு நிலைக்கு, இயல்பான பேச்சுக்குக் காரணம்.
காதலுக்கு காரணம் இருக்க முடியாது. காரணங்கள் குறையாக நிரம்புமாயின் அங்கு காதலே இருக்காது.
இங்கு மித்யுகா காதலில் ஏற்படுத்திச்சென்ற குறையும், அவர்களின் ஆழத்தை சோதிப்பதற்கான நிறையே!
“லவ் யூ ம்ருது…”
“பேட்லி ஹேட் யூ யுகா” என்றவன், கேட்ட ஹாரன் ஒலியில் அவளின் கன்னம் தாங்கிய கைகள் இறக்கி, நெற்றி விலகி நின்றான்.
“நேத்து கேட்டீங்களே!” என்று அவனை மென்மையாய் அணைத்திருந்தாள்.
இருப்பினும் அதிக நேரம் அவ்விடத்தில் அப்படியொரு நிலையில் நிற்க முடியாது பிரிந்திருந்தான்.
அவள் தன்னைத்தேடி வந்திருக்கிறாள், இன்னமும் தங்களுக்குள் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது என்பதில் நெகிழ்ந்திருந்தவன் இயல்புக்கு மீண்டிருந்தான்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஒரு பக்கமாக சாய்ந்து அமர்ந்தவனின் ஒற்றை கால் தரை பதிந்தது.
அவனின் அத்தோரணையில் பழைய நினைவுகள் நெஞ்சில் அலை கொண்டன.
“தனியா வந்தியா?”
“ஹ்ம்ம்…”
சட்டென்று வார்த்தைகள் தடையிட்டுக்கொண்டன.
“நீ சரின்னு சொன்னதுக்கு தேங்க்ஸ்.”
அவன் நன்றி உரைத்ததில் அவள் இதயம் தடுக்கியது.
“இப்பவும் என்னை வேண்டாம்னு சொல்ல நினைச்ச உன்னை…” என்று நிறுத்திய ம்ருதவ், “ஹேட் யூ” என்றான்.
அவனின் காதல் அதீதமாயிற்றே, அவனது அந்த ஹேட் யூ.
அவளிடம் தயக்கம், திணறல் எல்லாம் விலகி மென் முறுவல்.
அந்நேரம் வராத கோபத்தை இழுத்துப் பிடித்தவன்,
“ஹேட் யூ அப்படின்னா ஹேட் யூ தான்” என்றான்.
“இருக்கட்டும்” என்றவள், “நானும் ஹேட் யூ” என்றாள்.
“நீ சொல்லாத… சொல்லக்கூடாது” என்ற ம்ருதவ், “நேத்து ரதி உன்கிட்ட சொன்னதுக்காக நீ ஓகே சொல்லியிருந்தா இந்த மேரேஜ் வேண்டாம். ரதி சொன்னதெல்லாம் உண்மையில்ல” என்றான்.
“தெரியும்…” என்றவள், “உங்க பார்வை போதுமே உங்களை நான் ஃபீல் பண்ண” என்றாள்.
“நீ நம்பியிருக்க மாட்டன்னு தெரியும். உன்னை ஃபீல் பண்ண எனக்கும் உன் பார்வையே போதுமே” என்றவன், “இருந்தாலும் நொடி நேர வலி உனக்கு உண்டாகியிருக்குமே! என் பக்கமிருந்து அந்த சின்ன வலியும் உனக்கு கூடாது” என கீழுதட்டை அழுந்தக் கடித்து, இருபக்கமும் தலையசைத்தான்.
“விருப்பம் தான் நிறைய இருக்கு. அதான் வெறுக்க முடியல.”
அவனின் வார்த்தைகள் பிரதிபலிப்பதெல்லாம் அவனது அளவில்லா நேசம் மட்டுமே! மித்யுகா உதடுகளை மடித்து அழுகையை அடக்கினாள் நீண்ட அமைதியில்.
அவளின் அமைதியை ரசித்தவன்,
“இவ்வளவு சீக்கிரம் சைலண்ட் ஆகிட்ட?” என்ற ம்ருதவ், “ஜிமிக்கி போடலயா?” எனக் கேட்டான். காரணம் தெரிந்தும். நேற்றும் கவனித்திருந்தான்… அவளை தெரிந்துகொண்ட இந்த ஒருவருடமாய் கவனித்துமிருந்தான்.
தன்னை நினைவுபடுத்தும் என்பதற்காகவே தவிர்க்கிறாள் என்பதை அவனறிவான். அவள் பதில் சொல்ல வேண்டுமென்றில்லை.
“நீ என்னை விட்டுப்போக நினைச்ச காரணம் இப்பவும் அப்படியே தான் இருக்கு. சொல்லப்போனா இன்னும் பெருசா வளர்ந்திருக்கு. உனக்கு என்னை மேரேஜ் பண்ணிக்க எந்தவொரு தயக்கமுமில்லாம சம்மதமா?” எனக் கேட்டான்.
“நான் உங்க பழைய யுகா இல்ல!”
“அப்படியா?” என்றவன், “நீ விட்டுப்போன வலியோடும் உன்னை காதலிக்கத்தான் செய்தேன்… செய்றேன்… உனக்கான காரணம், எண்ணம் அப்படியே இருக்கட்டும். எனக்கு என் யுகா வேணும். என்கிட்ட வந்திடுறியா?” என அவளால் மறுக்கவே முடியாது அன்பின் உச்சம் தொட்டு வார்த்தைகளுக்கு வடிவம் கொடுத்தான்.
“ம்ருது” என்றவள், இதயத்தில் கை வைத்து, “இங்க ரொம்ப பெயினா இருக்கு” என்றாள். கண்கள் துளிர்க்க, உதடுகள் நடுங்க.
“அந்தப்பெயின் சேர்ந்து சரி பண்ணிடலாம்” என்று அவள் முன் தனது கரம் நீட்டினான்.
யோசிக்காது, தயங்காது அவனது உள்ளங்கையில் தன் கரம் வைத்தவள்,
“உங்களுக்கு நான் எந்த விளக்கமும் சொல்ல வேணாமா?” எனக் கேட்ட மித்யுகா, “உங்களுக்கு என் பக்க காரணம் தெரியணும். உங்ககிட்ட மட்டும்தான் என் சோகத்தையெல்லாம் இறக்கி வைக்கணும்” என்றாள்.
“யுகா சொல்றதை கேட்க நானும் ரெடி. ஆனா இப்போ இல்லை. இப்போ இருக்க இடைவெளியில் என்னால உன்னை வார்த்தையால் மட்டும் தான் ஆறுதல் படுத்த முடியும். அந்த ஆறுதல் உனக்கு போதுமானதா இருக்காதுன்னு தெரியும்” என்று நிறுத்தியவன், “உன்னை மடி தாங்கனும். தோள் சாய்ச்சிக்கணும். மார்போட புதைச்சிக்கணும். அதுக்கு நான் மொத்தமா உன்கிட்ட சேர்ந்திருக்கணும்” என்றான்.
“ம்ருது…”
“உன் ம்ருது டி! எப்பவும்… எப்பவுமே!” என்று தன் உள்ளங்கையில் படிந்திருந்த அவளின் கரத்தை இறுக மூடியிருந்தான்.
***********************
மீண்டும் காதலர்களாய்…
இரு இரவில், ஓர் பகலில் இணைந்த இதயங்களாய் வாழ்த்திருந்தனர்.
அவனின் அதிகத்துக்கும் அதிகமாய் அவளின் காதல்.
இன்னமும் நம்பவே முடியாதுதான் கண்ணாடி முன் அமர்ந்து ஒப்பனை செய்து கொண்டிருந்தாள்.
ம்ருதவ்வின் பேச்சின் மூலமாக, தனது வாழ்வின் நிகழ்வுகள் யாவும் அவன் அறிந்து வைத்திருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
எப்படியென்ற அவளது கேள்விக்கு பதிலாய் செண்பகம்.
அவர்தான் சொல்லியிருக்கக்கூடும். சோதனைக்காலங்களில் அவளுடன் இருந்தாலும், சோதனைகளை அனுபவித்தது மித்யுகாவாயிற்றே. அவை யாவும் இறக்கி வைத்திடாது ரணமாய் அவளிடம் வீற்றிருக்கிறதே!
தான் மட்டுமே தனது வலிகளை மிச்சமின்றி வெளிப்படுத்திட முடியுமென இருப்பவளுக்கு எப்போது அவனிடம் கூறி பாரம் குறைப்போம் என்ற எண்ணமே!
“எவ்வளவு நேரம்… கார் வந்திடும் மித்யு” என்ற செண்பகம், பிள்ளைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.
சூரியன் உதிக்கும் தருணம் திருமணம். முன் அதிகாலையில் புறப்பட வேண்டும். அதற்கே மூன்று மணியளவில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
“கமலேஷ் தம்பி வாருவாங்கன்னு மாப்பிள்ளை சொன்னார்” என்று செண்பகம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, வெளியில் கார் நிற்கும் சத்தம் தொடர்ந்து, அழைப்பு மணி ஒலித்தது.
“வந்துட்டார் போல” என்று செண்பகம் கதவினைத் திறக்க, ம்ருதவ் நின்றிருந்தான்.
“மாப்பிள்ளை நீங்க” என்று செண்பகம் பார்க்க…
“ஹாய் சிவா” என்று குழந்தைகள் ஓடி வந்திருந்தனர்.
உறவென்று யாரிடமும் பழகியிராத பிள்ளைகளுக்கு புதிய உறவாக வந்திருந்த ம்ருதவ்வை இரு தினங்களில் அத்தனை பிடித்தது. இல்லாத ஒன்றின் ஏக்கம் பிணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
“குட்மார்னிங் லட்டூஸ்” என்ற ம்ருதவ், “நான் வந்திருக்காக்கூடாதா?” என்று இன்னமும் தன்னை உள்ளழைக்காது நின்றிருந்த செண்பகத்திடம் வினவினான்.
“அச்சோ அப்படியில்லை” என்றவர், “கமல் வருவாங்கன்னு சொன்னீங்களே! அதான்” என்று வழிவிட்டு, “உள்ள வாங்க” என்றார்.
“நானே வந்து கூட்டிட்டுப்போகனும் தோணுச்சு…” என்ற ம்ருதவ், “கிளம்பலாமா?” எனக் கேட்டான்.
“ரெண்டு பேரும் செம ஸ்மார்ட்டா இருக்கீங்களே” என்று சிவன்யா, சிவேஷ்ஷை தன்னருகில் அமர்த்திக்கொண்ட ம்ருதவ், இருவருக்கும் சாக்லெட்டினைக் கொடுத்தான்.
“இப்போ சாப்பிடக்கூடாது ஓகேவா” எனும் நிபந்தனையோடு.
பிள்ளைகள் அவனிடம் கதை பேச ஆரம்பித்திருந்தனர்.
“மாப்பிள்ளை வந்திருக்கார் மித்யு” என்று பரபரப்பாய் செண்பகம் அறைக்குள் வர, அப்போதுதான் இறுதி அலங்காரமாய் பல வருடங்களுக்குப் பின்னர் ஜிமிக்கியினை அணிந்துக் கொண்டிருந்தாள்.
அவளின் நினைவு அன்று அவன் கொடுத்து அவளிடம் சேர முடியாத ஜிமிக்கியில்.
“கிளம்பியாச்சும்மா” என்றவள், “நான் எதுவும் தப்பு பண்ணலயேம்மா” என்றாள்.
“உனக்கு தப்புன்னு தோணுதா?”
“ம்ருதுக்கு நான் பண்ணது அநியாயம்மா. இப்போ வாய்ப்புக் கிடைக்குதுன்னு அவங்க வாழ்க்கைக்குள்ள போறது சரிதானா? அப்போ நான் வேண்டாம் சொல்லி வந்தது அர்த்தமேயில்லாம ஆகுதே!”
“நீ ரொம்ப யோசிக்கிற மித்யு. சிவாவை பார்த்து பேசி வந்த இந்த ரெண்டு நாள் நல்லாதான இருந்த இப்போ என்ன?” என்றவர்,”முன்னாடி அந்த சூழலை எப்படி எதிர்கொள்ளனும் பக்குவம் உனக்கில்லை. அந்த நேரம் உன்னை நாங்க எடுக்க வச்ச முடிவு, சிவாவை நீ விலகுறதுதான் சரின்னு நினைக்க வச்சது. நாம எடுத்த முடிவு எப்பவும் சரிங்கிற நிலையிலே இருந்திடாது. ஒருகட்டத்தில் தப்பு பண்ணிட்டோம். அப்போ அந்த முடிவை எடுக்காம இருந்திருக்கலாம் தோண வைக்கலாம். இப்போ உனக்கு தோணுற மாதிரி… நாளைக்கே இப்போ தப்பு பண்றாமோ அப்படிங்கிற உன் எண்ணம் சரின்னு ஆகலாம். ஆனா காலம் இன்னும் கடந்திருக்கும். வீணா உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத. பட்டதெல்லாம் போதும்” என்று அவளின் மனதை முழுதாய் தேற்றி வெளியில் அழைத்து வந்தார்.
அவர்கள் வந்ததும் புறப்படுவதற்கு ஏதுவாக ம்ருதவ் எழுந்து நின்றிட, மனதின் அலைபுறுதலாய், கடந்த பாதையின் தாக்கமோ, தற்போது ஆட்கொள்ளும் இன்பமோ, ஆசுவாசமோ, நிம்மதியோ ஏதோவொன்று அவளை மொத்தமாய் ஆட்டுவிக்க…
“ம்ருது” என்று வேகமாக நெருங்கி, அவனை அணைத்து நெஞ்சம் சாய்ந்திருந்தாள்.
நெஞ்சம் சுமக்க முடியா கடைசி தவிப்புகளை இதமாய் அவனில் சேர்ப்பித்திருந்தாள்.
‘ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்…
மனம் ஏங்குவதென்னவோ,
விரும்பி சிறைப்பட்ட, அந்த ஒற்றை இதயத்திற்கு மட்டுமே!’