Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

77. பிரியதர்ஷினி S - உனதன்பில் சரணாகிறேன்

உனதன்பில் சரணாகிறேன் 9

அத்தியாயம் 9

காலையில் கமலேஷ்க்கு முன்னதாகவே எழுந்த ம்ருதவ், அன்றைய நாளுக்கான வருத்தம் மனதிலிருந்த போதும், சோகத்தை முகத்தில் காண்பிக்காது இத்தனை வருடங்களில் இந்த வருடம் தான் ஏற்க பழகியிருந்தான்.

முந்தைய வருடம் வரை இந்நாளில் சித்தப்பாவின் நினைவாக அறையைவிட்டு வெளியில் கூட வராது முடங்கியிருப்பவன் அல்லது மலைக்கோட்டை சென்று அந்த திண்டில் அமர்ந்திருப்பவன் இருள் கவிழத்தான் இயல்பாகியிருப்பான்.

ஆனால் இன்று… அவனுக்கு எல்லாமுமான அவனின் உறவு மீண்டும் அவனது கை சேரவிருக்கிறது எனும் எண்ணமே அவனது திடத்திற்கு காரணமாகியிருந்தது.



Advertisement

இரவு வெகு தாமதமாக உறங்கியதாலோ என்னவோ கமலேஷ் சற்று தாமதமாகத்தான் எழுந்தான்.

அருகில் படுத்திருந்த ம்ருதவ்வை காணாததும், நேரத்தைப் பார்த்த கமலேஷ்,

“அச்சோ இவனை மறந்து தூங்கிட்டனே. மலைக்கோட்டைக்கு போயிருந்தா அவ்வளவுதான். ரதிகிட்ட பேச்சு வாங்கனும்” என்று புலம்பியபடி படுக்கையைவிட்டு எழுந்து வெளியில்வர, ம்ருதவ் வெளிக்கதவை திறந்து வீட்டிற்குள் வந்திருந்தான்.

Advertisement

கேசத்தின் ஈரமும், நெற்றியில் வீற்றிருந்த சாம்பலும் அவன் திதி கொடுத்து முடித்து வந்திருக்கிறான் என்பதை பறைசாற்றியது.

Advertisement

“தனியா போயிட்டு வந்துட்டியா?”

“பத்து பேரை கூட கூட்டிட்டா போக முடியும்?” என்ற ம்ருதவ், சமையலறை நுழைந்து கையில் இரண்டு குவளை தேநீருடன் வெளியில் வந்தான்.

கமலேஷின் முன்பு ஒரு குவளையை நீட்டிய ம்ருதவ், “பிரஷ் பண்ணியாடா?” என கையை பின்னழுத்தான்.

Advertisement

“அதெல்லாம் ஆச்சு” என்ற கமலேஷ், “நீ ஓகேதான?” என்றான்.

“பார்த்தா தெரியலையா?” என்ற ம்ருதவ், “அப்பவும் சரி இப்பவும் சரி அவள் என்னோடங்கிற எண்ணமே என் எல்லா சோகத்தையும் மறக்க வச்சிடுதுடா” என்றான். தேநீரை ஆழ்ந்து ருசித்துப் பருகினான்.

கமலேஷ் நண்பனை நம்பாது பார்த்தான்.

“அடேய்… நம்புடா! நிஜமா நான் ஓகேதான்” என்று சிரித்த ம்ருதவ், “ரெடியாகி வா! ஆபிஸ் போகலாம்” என்றான்.

“இல்லை… வேணாம்!”

“ஏன்?”

“நீ இன்னைக்கு எப்படியும் சோகமா ரூமுக்குள்ளே இருப்பன்னு உனக்கும் எனக்கும் நைட்டு லீவ் மெயில் அனுப்பிட்டேன்” என்றான் கமலேஷ்.

“எனக்கு ஓகே! அதென்ன உனக்கும் சேர்த்து லீவ்?” ம்ருதவ் புருவம் உயர்த்தினான்.

“நீ அழும்போது கண்ணு துடைக்க ஆள் வேணும்ல!” கமலேஷ் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டுக்கூற,

“ரைட்டு” என்று ம்ருதவ் எழுந்தான்.

“எங்கப்போற?”

“போகும் முன்ன வாஷிங் மெஷினில் துணி போட்டுட்டு போனேன் டா! முடிஞ்சிருக்கும். காய வைக்க வேண்டாமா?” என்று நகர்ந்தான்.

ம்ருதவ் பக்கெட்டில் ஈரத் துணிகளை நிரப்பி வந்தவன், மாடிப்படிகள் பக்கம் செல்ல…

“மாடிக்கா?” என்றான் கமலேஷ்.

“ஹ்ம்ம்… “

“தோட்டத்துல போட என்ன?”

“பேர்ட்ஸ்லாம் வரும் டா. துணி துவைச்சும் அங்க போடுறது வேஸ்ட்” என்ற ம்ருதவ், தனது பின்னாலே வந்த கமலேஷை முறைத்தவனாக, “எதுக்கு இப்படி தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டுட்டு, என் பின்னாடியே வந்திட்டு இருக்க?” என்றான்.

“பொழுது போகல” என்ற கமலேஷ், “ஆர் யூ ஓகே பேபி” என்க,

“அடிங்க…” என்று கையிலிருந்த ஈரத் துணியாலே கமலேஷின் தோளில் அடித்திருந்தான் ம்ருதவ்.

“இல்லை… நான் நம்பல” என்ற கமலேஷ், ம்ருதவ் கொடியில் போட்ட துணிகளுக்கு க்ளிப் போட்டபடியே கூறினான்.

“இதுக்காக பல்லக்காட்டி சிரிச்சிட்டேவா இருக்க முடியும்” என்ற ம்ருதவ், “நீ வீட்டுக்கு கிளம்பு. உனக்கு உன் மச்சான்ஸ் தான் கரெக்ட்டு” என்றான்.

“என்னை நீ எப்பவும் எதிலாவது கோர்த்து விடுறதுலயே இருடா” என்ற கமலேஷ், “எனக்கு என் வீட்டுக்கு வழி மறந்துப்போச்சு” என்றான்.

“நைட்டு வீட்டுக்குப் போகல… ரதி ப்ரெக்னன்ட்டா இருக்கா. கொஞ்சமாவது பொறுப்பிருக்காடா உனக்கு” என்று துணியை கமலேஷின் முகத்திற்கு நேரே உதறி கொடியில் போட்டான்.

ஈரம் படர்ந்த முகத்தை ஒற்றை கையால் துடைத்த கமலேஷ்,

“எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு” என்றான்.

“என்னவாம்” என்ற ம்ருதவ், துணிகளை காயப்போட்டு முடித்திருக்க, மாடி சுற்றுச்சுவரின் மீது குதித்து அமர்ந்து, கீழே தோட்டத்தில் காலை நேர உணவிற்கு தரையிறங்கி இருந்த பறவைகளின் கூட்டத்தில் லயித்தான்.

“என்னை இந்தப்பக்கம் துரத்திவிட்டுட்டு, நீ தனியா ரூமுக்குள்ள உட்கார்ந்து குமுறி குமுறி அழலாம் பாக்குற. நீ சோகமாவே இருந்தா நான் உன்னைவிட்டு போகமாட்டன்னு, உன்னை நார்மலா காமிச்சு என்னை ஏமாத்துற. என் பொண்டாட்டி பேரைச் சொல்லி, பொறுப்பு அது இதுன்னு பேசி நீ மலைக்கோட்டைக்கு போலாம்னு பாக்குற” என்றான்.

“டேய்…” என்று பற்கள் தெரிய சிரித்த ம்ருதவ், “உண்மையாவே நான் ஓகே தான்டா! வருத்தமிருக்கு… சித்தப்பா கூட இருந்திருக்கலாம், என்னைவிட்டு போயிருக்க வேணாம் தோணுது. ஆனால் முன்ன மாதிரி வலியில்லை. நிதர்சனம் புரிஞ்சிக்கிட்டேன்” என்றவனின் குரல் உடைந்தது என்னவோ உண்மை. லாவகமாக மறைத்துக் கொண்டான்.

“எல்லாத்துக்கும் காரணம் அவள் தான். வலியை ஏத்துக்க வச்சிட்டாள். பழக, அதோட வாழவும் கத்துக்கொடுத்திட்டாள். இப்போலாம் எந்த வலியா இருந்தாலும் கடக்க முடியுங்கிற திடமிருக்கு” என்ற ம்ருதவ், “அவளை தூரத்துல நின்னு பார்த்திட்டு வரணும் போலிருக்கு. போய் வரவா?” எனக் கேட்டான்.

“ஒண்ணும் தேவையில்லை.” பதில் வந்தது என்னவோ ரதியிடமிருந்து.

அவளின் குரலில் இருவரும் திரும்பிட,

“அதான் ரெண்டு நாளுல நேருக்கு நேர் பார்க்கப்போறோமே! இப்போ எதுக்கு தூ…ரத்தில் நின்னு” என்றவளாக அங்கிருந்த மாடி செடிகளுக்கு அருகேயான கல் மேடையில் மூச்சு வாங்கிட வந்தமர்ந்தாள்.

“உன்னை யாரு இப்போ இங்க வர சொன்னா? அதுவுமில்லாம இத்தனை படி ஏறி வந்திருக்க?” என்று கடிந்தவனாக அவளருகில் வந்த ம்ருதவ், “எங்க உன் பாசக்கார அண்ணனுங்க?” என்றான்.

“இப்போ நான் மாடியேறி வந்தது பிரச்சினையில்லை” என்ற ரதி, “ரொம்ப தெளிவாகிட்டப்போல” என்றாள். சற்று முன்னர் கேட்ட அவனது பேச்சிலும், இப்போது அவனது முகத்தில் கவனித்த இயல்பிலும்.

“தெரியல… அவள் எப்படியாவது என்னோட வந்திடுவாங்கிற எண்ணமே என்னை அவ்ளோ இயல்பா இருக்க வைக்குது” என்ற ம்ருதவ், “வெயில் வருது. வா கீழ போகலாம்” என்றான்.

“ம்ம்” என எழுந்த ரதி, “நீ போடா. அவன் என்னை தூக்கிட்டு வருவான். என்னவோ நாலு மாசத்துக்கே நடந்தா மூச்சு வாங்குது” என்றாள்.

மெல்ல சிரித்த ம்ருதவ், “நீ தூக்குன்னு சொன்னாலே அவன் தூக்குவான். எதுக்கு இல்லாத காரணத்தை சொல்லிட்டு இருக்க” என்று கீழிறங்கிய ம்ருதவ் அந்த படிகளில் தானும் மித்யுகாவும் இடித்துக்கொண்டு நின்ற காட்சி நினைவில் தோன்ற உல்லாச நிலையில் விசிலடித்தபடி இரண்டிரண்டு படிகள் குதித்து இறங்கினான்.

அவனது துள்ளலில் மகிழ்ச்சியின் அளவு பிரதிபலிக்க,

“இவனோட இந்த முகத்துக்காக என்னவும் செய்யலாம்டா” என்றாள் ரதி.

“செய்யலாம், செய்யலாம்… அங்க போன அப்புறம் அவள் என்னென்ன வேடிக்கை காட்டப்போறாளோ” என்றான் கமலேஷ்.

“சமாளிக்கலாம் வா!” என்ற ரதிக்குமே மித்யுகாவை ஒப்புக்கொள்ள வைப்பது அத்தனை எளிதானதாகத் தோன்றவில்லை.

ம்ருதவ் கீழே வர, அங்கு கூடத்தில் டீபாய் மீதிருந்த கமலேஷின் அலைபேசி இசைத்துக் கொண்டிருந்தது.

முதல்முறை ஒலித்தடங்கி இரண்டாவது முறை அழைப்பு வரவே, யாரெனப் பார்த்தான்.

நேற்றைய இரவே மித்யுகாவின் எண்ணை கமலேஷ் பதிந்து வைத்திருக்க, இப்போது திரையில் மித்யு என்ற பெயர் ஒளிர்ந்தது.

ஏற்கனவே ம்ருதவ்வுக்கு அவளை பார்க்க வேண்டுமென்று ஆவலிருக்க, அழைப்பினை தானே ஏற்றிருந்தான்.

“ஹலோ!”

அடுத்த கணம் அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.

“வாய்ஸ் கேட்டதுக்கே ரியாக்ஷன் பயங்கரமா இருக்கு. மீட்டப் எப்படியிருக்குமோ? ரொம்பவே பிரகாசமா தெரியுதுடா சிவா” என்று சிரித்தவன், “ரொம்பவே வெயிட் பண்றேன்டி. இங்க நம்ம வீட்டில் நீ, நான் ஆசைப்பட்ட மாதிரி நாம வாழ” என்று, அன்றைய நாட்களுக்கு உள்ளத்திற்குள் பயணப்பட்டிருந்தான்.

தனக்கும் மித்யுகா மீது காதலிருக்கு என்று உணர்ந்தது முதல் அடிவயிற்றில் வண்ணத்துப்பூச்சிகளின் அணிவகுப்பின் தவிப்பில் தத்தளித்து மிதந்தவனின் மனதெங்கும் புதுவித மகிழ்வின் தடம்.

“உங்களுக்கும் என் மேல காதலிருக்குன்னு ஃபீல் பண்ணா கால் பண்ணுங்க.” காதலை உணர்ந்ததும் அவனது செவிகளில் எதிரொலித்த குரலை வெட்கத்தின் பின்னால் ஒளித்து ரசித்தான்.

ஏனோ அவனுக்கு உடனே சொல்ல வேண்டுமென்று தோன்றவில்லை. சொல்லிவிட்டால் இந்த உணர்வு மனதைவிட்டு நீங்கிவிடுமோ எனும் எண்ணம்.

இன்னும் ஆழ அவ்வுணர்வை நெஞ்சோடு ரசிக்க வேண்டுமென்று விரும்பினான்.

மேகம் கலைந்த வானமாய் ம்ருதவ்வின் மனம் சோகங்கள் கலைந்து சலனமின்றி தெளிவடைந்திருக்க, அவ்விடம் முழுக்க காதலாய் ஆக்கிரமிப்பு செய்திருந்தாள் மித்யுகா.

உள்ளங்கையில் குடிப்புகுந்திருந்த ஜிமிக்கையை இறுக மூடியவன், இதயத்திலும் தன்னவளின் முகத்தை பூட்டி வைத்தான்.

மாலை மங்கிய வேளையில் மலைக்கோட்டையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்திருந்தான்.

சில நாட்களாக கதவை திறந்ததும் முகத்தில் அறையும் தனிமை இன்று இல்லாதிருக்க…

“உனக்கு ஈடா எனக்கொருத்தி கிடைச்சிருக்கா சித்தப்பா. உன்னை மாதிரியே அவள் என்னை பார்த்துப்பான்னு இங்க தோணுது” என்று சித்தப்பாவின் புகைப்படத்திற்கு நேரே நின்று இதயத்தில் கை வைத்துக் கூறினான்.

“அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அவளுக்கு எல்லாமாவும் வேணுமாம் சித்தப்பா. எனக்கு யாருமில்லைங்கிறதை நான் ஃபீல் பண்ணக்கூடாதாம், மேடம் ஆர்டர் போடுறாங்க” என்றவன், “இந்த ஃபீல் ரொம்ப பிடிச்சிருக்கு. அவளையும்” என்றதோடு, சட்டைப் பையிலிருந்து எடுத்து ஜிமிக்கியை அவரிடம் காண்பித்து, “இந்த ஜிமிக்கியையும்” என்றான்.

“ஒருநாள் அவளை கூட்டிட்டு வந்து உங்களுக்கு காட்டுறேன் சித்தப்பா. உங்களுக்கும் அவளை பிடிக்கும்” என்றவன், வெளியில் கேட்ட இருசக்கர வாகனத்தின் சத்தத்தில், “அப்புறம் பேசுவோம் சித்தப்பா” என வேகமாக தனதறைக்குள் புகுந்திருந்தான்.

“சிவா” என அழைத்துக்கொண்டே வீட்டிற்குள் ரதியும், கமலேஷும் நுழைந்தனர்.

“இதோ வர்றேன்” என்ற ம்ருதவ், ஆடைமாற்றி உறங்கி எழுந்து வருபவனைப்போன்று கண்களை தேய்த்துக்கொண்டு வெளியில் வந்தான்.

“டோர் லாக் பண்ணாம தூங்கிட்டிருந்தியா?” என்ற ரதி, “என்ன முடிவு பண்ணியிருக்க” எனக் கேட்டாள்.

“என்ன என்ன முடிவு?” ம்ருதவ் புரியாது வினவினான்.

“நாங்க என்ன கேட்கிறோம் தெரியும் உனக்கு” என்ற கமலேஷ், “மித்யு நல்ல மேட்ச்டா உனக்கு” என்றான்.

“அப்படியா” என்றவன், “ரதி டீ போடேன்” என்று இருக்கையில் சாய்ந்தமர்ந்தான்.

“ரொம்ப முக்கியம்?” என்ற கமலேஷ், “உன்னைத்தேடி வர உறவை வேணாம் சொல்லாதடா” என்றான்.

“ஹோ…” என்று நாடியை வருடிய ம்ருதவ், “அவளுக்கு வந்த ஃபீல் எனக்கும் வரணுமே” என்றான்.

“நிஜமா உனக்கு வரலையா?” ரதி ஏமாற்றமாகக் கேட்டிருந்தாள்.

மித்யுகா காதலாக மொழிந்த வார்த்தைகளுக்கு கல்லுக்கும் காதல் கசிந்துருகியிருக்கும். ஆனால் இவனோ இல்லையென்கிறானே என ஆற்றாமையாக அவனருகில் தொப்பென்று அமர்ந்தாள்.

“கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே!”

சொல்லிய ரதியை ஆழமாகப் பார்த்த ம்ருதவ்,

“கன்சிடர் பண்ணி முடிவெடுக்கும் விஷயமா ரதி இது” என்றான்.

“இல்லைதான்… ஆனால்” என என்ன சொல்வதென்று தெரியாது தடுமாறினாள்.

“நானெல்லாம் அவன் சொன்னதும் ஓகே சொல்லிட்டேன். உன்னை மாதிரி ரொம்ப யோசிக்கல” என்றாள். அளவம் காண்பித்து.

“ரெண்டு பேருக்கும் உங்களைப்பற்றி நிறைய தெரியும். லைஃப் லாங் இது செட்டாகுமா ஆகாதா புரிதலிருக்கு. ஆனா எங்களுக்கு?” என்று நிறுத்திய ம்ருதவ், “அவளுக்கு நான் சரியான்னு எனக்கு தோணனும் ரதி. ஓகே சொன்னப்பிறகு ஒத்துவராதுங்கிற எண்ணம் சின்னதாக்கூட அவளுக்கோ எனக்கோ வந்திடக்கூடாது. வாழுற காலம் அவள் தான் எனக்குன்னு என் மனசு சொல்லணும்…” என்றவன், ‘சொல்லியாச்சு’ என தனக்குள் இறுதி வார்த்தையை விழுங்கியிருந்தான்.

“என்னென்னவோ சொல்ற… ஆனா நீ இப்போ சொன்னதுலாம், அவளுக்காக நீ யோசிக்கிறன்னு மட்டும் புரியுது. இதுதான் காதல்னு உனக்கு புரிய ரொம்ப நாளாகாது” என்ற ரதி, “இருட்டிடுச்சு என்னை ட்ராப் பண்ணுடா” என்று அதுவரை அமைதியாக இருந்த கமலேஷின் தோளில் அடித்திருந்தாள்.

“நீ இன்னும் கூட நல்லா யோசி சிவா. இல்லைன்னா என்னை மாதிரி காலத்துக்கும் இப்படித்தான் அடி வாங்கனும்” எனக்கூறி ரதி மீண்டும் அடிப்பதற்குள் வெளியில் ஓடியிருந்தான்.

“அவனுக்கும் இன்னும் நாலு கொடுக்கணும் டா” என்று ரதியும் வேகமாக அவனின் பின்னால் செல்ல…

“நீயும் நானும் கூட இப்படித்தான் இருப்போமோ?” என்றவன் சிரிப்போடு கதவினை அடைத்துவிட்டு வந்து படுக்கையில் கவிழ்ந்தடித்து மித்யுகா கூறிய காதல் வார்த்தைகளோடு உறங்கியிருந்தான்.

அடுத்தநாள் கல்லூரிக்கு வந்த ம்ருதவ், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, வண்டியிலிருந்து சாவியை எடுக்கும் முன்னர்…

“சீக்கிரம் கேட் க்ளோஸ் பண்ணும் முன்ன வெளிய போங்க” என்று ம்ருதவ்வின் பின்னால் வண்டியில் அமர்ந்து அவனின் தோள் தட்டினாள் மித்யுகா.

யாரென திரும்பும் முன்பு குரல் வைத்தே தன்னவளென கண்டுகொண்டு, பக்கவாட்டில் தலையை வைத்து ஓரவிழியில் அவளை பார்த்துவிட்டு நேராகத் திருப்பிக்கொண்டான்.

“இறங்கு… எனக்கு க்ளாஸ் இருக்கு.” அதட்டலின்றிய சாதாரணப் பேச்சு பாவனை.

“எனக்கும் தான் க்ளாஸ் இருக்கு” என்ற மித்யுகா, “லவ் பண்ணா க்ளாஸ் கட்டடிக்கலாம் கத்துக்கணும் ம்ருது” என்றவளின் கூற்றில் பொங்கிய புன்னகையை இதழ்களை மடித்து விழுங்கினான்.

“ஏதே லவ்வா?” என்ற ம்ருதவ், “நான் இன்னும் ஓகே சொல்லல” என்றான்.

“நீங்க சொல்லும்போது சொல்லுங்க. நான் வெயிட் பண்றேன். அதுவரை நான் மட்டும் லவ் பண்ணிக்கிறேன். என்னோட லவ் எப்படியிருக்கு தெரிஞ்சுக்கோங்க” என்றவள், “கேட் க்ளோஸ் ஆகப்போகுது” என அவனைத் துரிதப்படுத்தினாள்.

அந்நேரம் கமலேஷும் ரதியும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“இவன் என்ன லவ் இல்லன்னு சொல்லிட்டு அந்தப்பொண்ணோட இவ்ளோ க்ளோசா உட்கார்ந்திருக்கான்” என்று கமலேஷ் சொல்ல, அவனுக்கு பின்னால் உட்கார்ந்திருந்த ரதி எட்டிப்பார்த்து,

“அவள் ஏதோ சேட்டை பண்றா… நாம கண்டுக்காத மாதிரி போயிடுவோம்” என்றாள்.

“அதுவும் சரிதான்” என்ற கமலேஷும் சத்தம் காட்டாது வண்டியை நிறுத்திட, இருவரும் ம்ருதவ் கவனிக்கும் முன்பு சென்றிருந்தனர்.

“எனக்கு இதெல்லாம் பிடிக்காது. காலேஜ் வந்திட்டு க்ளாஸ் கட் பண்ணி எனக்கு பழக்கமில்லை” என்ற ம்ருதவ்வுக்கும் அவளுடன் வெளியில் செல்ல ஆசைதான். ஆனால் அதற்கு முன்னர் அவளிடம் தன்னுடைய காதலை உணர்த்த வேண்டுமென்கிற பெரும் வேலையொன்று பாக்கி உள்ளதே! அதற்குள் இதெல்லாம் வேண்டாமென எண்ணினான்.

“இனி பழகிக்கோங்க… எனக்காக” என்றவள், ம்ருதவ் கொஞ்சமும் அசைந்து கொடுக்காதிருக்க…

“உங்களை நிறைய லவ் பண்றேன். நீங்க கொஞ்சமும் இளகாம இருந்தா நான் எப்படி அந்த லவ்வெல்லாம் காட்டுறது… உங்களுக்கு எப்படி என்மேல லவ் வர வைக்கிறது” என்றவள் பேச பேச அவனுள் அப்படியொரு ரசனை. இதயத்தை மயிலிறகாய் வருடிச் சென்றது.

“நேத்து நைட்டு முழுக்க வெயிட் பண்ணேன். நீங்க கால் பண்ணுவீங்கன்னு. பண்ணவே இல்லை. பண்ணா ஒண்ணு சொல்லணும் இருந்தேன். அதான் வெளியக்கூட்டிட்டுப் போய் சொல்லலாம்னு” என்று அவள் முடிக்கும் முன்பு வண்டியை செலுத்தியிருந்தான்.

அவளின் சிறு காத்திருப்பும் தனக்காக என்பதில் அவனுக்கான விதிகளை சற்றே உடைத்திருந்தான்.

அதிலும் அவள் என்ன சொல்ல நினைத்தாள் என்பதை தெரிந்துகொள்ளும் எண்ணம் அவனுள். அவளைப்பற்றி அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை.

கல்லூரியை விட்டு சிறிது தூரம் வந்த பின்பே வண்டியை நிறுத்திவிட்டு,

“எங்க போகணும்?” எனக் கேட்டான்.

“உங்களோட இப்படியே ரொம்ப தூரம் போக ஆசைதான்… உங்களால மனசு வைக்க முடியுமா?” என கண்ணாடியில் அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

அவனும் அவளைப் போலவே கண்ணாடி வழி அவளின் முகம் பார்த்தவன், புருவத்தை மேலேற்றி கண்களில் அவளுக்கு வெளிக்காட்டிடாத காதலை நிறுத்தி…

‘போகலாம் சொல்லத் தோணுதே’ என்றான்.

ம்ருதவ்வின் பார்வையில் தடுமாறியவள்,

“போலாமே!” என்றாள்.

“எங்க?” பார்வையை மாற்றாது கேட்டிருந்தான்.

“உச்சிப்பிள்ளையார் கோவில். மலைக்கோட்டை” என்றவளின் விழிகள் ஆயிரமாயிரம் உட்பொருளை வெளிக்கொணர காத்திருந்தது.

‘என்னை அறிந்து வைத்திருக்கிறாளோ?’ என நினைத்தவன், “என்னால அங்க வந்து அவ்வளவு படியெல்லாம் ஏற முடியாது” என்றான்.

“ஹோ…” என்றவள், “நேத்து ஏற முடிஞ்சுதால இப்போ கால் வலிக்குமா?” எனக் கேட்டாள்.

“என்னை ஃபாலோ பன்றியா நீ?”

“பண்ணனும் தான. லவ் பண்றேன்! ரைட்ஸ் இருக்கு.”

“அந்த ரைட்ஸ் நான் உனக்கு இன்னும் கொடுக்கல.”

“அப்படியா?” என்றவள், “கொடுத்தீங்களா இல்லையான்னு உங்க பைக் கீ சொல்லும்” என்றாள்.

வேகமாக கண்ணாடியிலிருந்து விலகிய அவனது விழிகள், வண்டியில் பொருத்தப்பட்டிருந்த சாவியில் நிலைத்தது.

அவனது சாவி அவளின் ஜிமிக்கியோடு கோர்க்கப்பட்டிருந்தது.

நேசத்தால் நெஞ்சோடு பிணைக்கப்பட்ட அவனது இதயத்தில் அவளது இதமாய்.

‘என் எல்லாம், எல்லாம்
நீயானது ஏனோ?

நேசித்தேன்…
நேசிக்கின்றேன்…
நேசிப்பேன்…

நீ நேசிக்கவில்லை என்றாலும்…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!