Skip to content
Post Views: 2,947
மதுராவுக்கு தூக்கமே வர வில்லை!
கண்ணை மூடினால் ரேவந்த் சொல்லி விட்டு சென்றதும், லக்கியின் பிடிவாதமும் முன்னே நின்றன!
அய்யோ கடவுளே.. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?
சந்தோசம், நிம்மதி இதுகெல்லாம் என் வாழ்க்கையில் இடமே இல்லையா?
Advertisement
நான் சின்ன வயசில் இருந்து மனசில் நினைச்சுக்கிட்டு இருக்கும் ரேவந்த் ஒரு பக்கம்!
எல்லாம் கூடி வந்தும் வாழ முடியாத அதிர்ஷ்ட கட்டை நான்!
இன்னொரு பக்கம், பிறந்து இந்த பூமிக்கு வந்த நாள் முதல் நான் என் கண்ணுக்குள்ள வச்சு வளர்த்த என்னோட லக்கி!
Advertisement
அவ வயசுக்கு ரேவந்த் மேல தான் ஆசை வரணுமா?
Advertisement
சரி எல்லாம் போகட்டும். எல்லாத்தையும் சகிச்சு வாழ பழகலாம்னு நினைச்சா,
இந்த ரேவந்த் ஒரு நாளும் லக்கியை என் மனைவியா ஏத்துக்கவே மாட்டேன்!
மூணு பேத்தோட லைஃபும் நீ எடுக்கிற முடிவுல தான் இருக்குன்னு தீர்மானமா சொல்லிட்டாரு!
Advertisement
கடவுளே நான் என்ன தான் பண்ணுறது?
எல்லோரும் சொல்ற மாதிரி ரேவந்தை கல்யாணம் பண்ணி, அவரோட உயிரோட விளையாடி ரிஸ்க் எடுக்கவும் முடியாது!
எதுவும் புரிபடாமல் அழ தான் முடிந்தது அவளால்!
அவளுக்கு கண்களோடு சேர்ந்து உதடுகளும் எரிந்தன!
காரணம் ரேவந்த்!
முதல் நாள் ரேவந்த் கோபமாக பேசி சென்ற பின் அவன் பின்னே அனைவரும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் சென்று விட்டனர்.
மணி அத்தைக்கும் பயங்கர வருத்தம் மதுராவின் மேல்!
அவரும் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் போய் படுத்துக் கொண்டு விட்டார்.
ரொம்ப நேரம் மதுரா தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்த போது, ரேவந்த் மீண்டும் அவளைத் தேடி அங்கே வந்தான்.
“ஸ்வீட்டி.. சாரிடி.. நீ கல்யாணமே வேண்டாம்னு சொன்ன கோபத்துல உன்னை அடிச்சுட்டேன்!
நீ புரிஞ்சுக்கோ ஸ்வீட்டி.. இந்த காலத்துல போய் இதெல்லாம் நம்பறது உனக்கு சரியா படுதா சொல்லு!
எவ்வளவு லவ் உனக்கு ஏன் மேல! என்னை பிரிஞ்சு உன்னால வாழ முடியுமா சொல்லு!
அது என்னாலையும் முடியாது. உன்னாலயும் முடியாது!
அப்புறம் ஏண்டி தேவையில்லாத விஷயத்தை மண்டையில போட்டு குழப்பிக் கிட்டு,
உன்னை நீயும் வருத்திக்கிட்டு, என்னையும் காயப்படுத்திட்டு இருக்க!
எல்லாத்தையும் விட்டுடுடா.. வா.. நமக்கு நல்ல சந்தோஷமான ஃப்யுச்ச்சர் இருக்கு!
நான் எவ்வளவு கோட்டைக் கட்டி வச்சுருக்கேன் தெரியுமா?
நமக்கு ரெண்டு பசங்க. ஆண் ஒண்ணு பொண் ஒண்ணு.
பையன் உன்னோட செல்லம்!
பொண்ணு என்னோட செல்லம்! அப்புறம் நமக்குள்ள நடக்கிற செல்ல சண்டைகள்!
அப்புறம் அதுங்க லக்கி கிட்ட பண்ற சேட்டை!
உனக்கு தெரியுமா? லக்கிக்கும் நான் ஒரு நல்ல பையனா பார்த்து வச்சுருக்கேன்!
நம்ம கல்யாணம் முடிஞ்சு அவ படிப்பும் முடிஞ்ச பின்னே அவளுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்!
உன்னோட எல்லா கஷ்ட நஷ்டத்திலும் எனக்கும் பங்கு உண்டு!
உன்னோட பொறுப்பு என்னோடதும் தான்!
நீ வேற நான் வேற இல்லடி!
போதும்டி நீ இது வரை வாழ்க்கையில போராடினது!
நான் இருக்கேண்டா உனக்கு! என்னை மீறி என்ன நடந்துடும் சொல்லு! என்றவாறு அவளை தனக்குள் இழுத்து அணைத்துக் கொண்டான்.
ப்ளீஸ்ம்மா.. நான் சொல்றத கேளு.. என்னால ஒரு நாளும் உன்னை விட்டு பிரியவே முடியாது.
கல்யாண நாள் நெருங்குற நாளை எண்ணி தவிப்போட ஆசையோட காத்துருந்த என்னை ஏமாத்தாத!
ப்ளீஸ்..” என்று மதுராவின் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு சொல்லிக் கொண்டே போனவன் சட்டென்று அவள் இதழ்களில் முரட்டுத் தனமாக முத்தமிட்டான்!
வெகு நேரம் கழித்தே அவளை விட்டவன்,
“ப்ளீஸ்டி.. நீ இல்லாத என்னோட வாழ்க்கை வெறுமையா தான் இருக்கும்!
என்னை ஒரு நடைப் பிணமா தான் பார்க்க நீ ஆசைப் படுறியா? சொல்லு!
இதுல லக்கி வேற, அக்காவை கல்யாணம் பண்ணலைன்னா என்னை கல்யாணம் பண்ணியே ஆகணும்னு அவ வேற ஒரு பக்கம் பிடிவாதம் பிடிக்கிறா!
திரும்பவும் சொல்றேன்!
அவ்வளவு ஆசை பிரியமா அவளை வளர்த்துட்டு நீயே அவ வாழ்க்கை கெட்டுப் போக காரணமா இருந்திடாதே!
அவ நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது!
நீ இருக்கிற இந்த மனசுல வேற ஒருத்திக்கு ஒரு நாளும் இடம் கிடையாது!
யோசிச்சு முடிவு பண்ணு” என்று சொல்லி மீண்டும் ஒரு முறை முத்தமிட்டு சென்றான்!
அவன் போய் வெகு நேரம் அப்படியே சிலையாகவே நின்று கொண்டிருந்தாள் மதுரா!
பிறகு தன்னிலைக்கு வந்தவள், லக்கியை போனில் அழைத்தாள்.
லக்கி அவளிடம் கோவித்துக் கொண்டு ரேவந்தின் மாமா வீட்டில் தான் தங்கிக் கொண்டாள்!
“லக்கிம்மா சொல்றத கேளு. அத்தானை கல்யாணம் பண்ணினா, உன்னோட லைஃப் முழுக்க போராட்டம் தான் மிஞ்சும்!
அவர் ஒரு நாளும் உன்னை ஏத்துக்கவே மாட்டார்!
ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. உனக்கு அக்கா வேற ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன்! நீ முதல்ல நல்லா படிச்சு முடி!”
“அதெல்லாம் முடியாது! அத்தான் ரொம்ப நல்லவர்! அவரை மிஸ் பண்ண முடியாது! ஒண்ணு நீ அவரை கல்யாணம் பண்ணிக்கோ! இல்ல என்னையாச்சும் பண்ண விடு!
நீ அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு. நான் அவரை தொல்லைப் பண்ண மாட்டேன்!
ஆனா நீயும் பண்ணாம, நானும் பண்ணாம வேற ஒருத்திக்கு அவரை விட்டுத் தர முடியாது!
முடிவு உன் கையில் தான் இருக்கு!
உனக்கு ரொம்ப டைம் இல்ல!
எல்லோரையும் திரும்ப இதே மாதிரி அசெம்பிள் பண்ண முடியாது! நாளை மறுநாள் நல்ல முஹூர்த்தமாம்!
ஏற்கனவே உங்களுக்குப் பார்த்த தேதி தான்! மண்டபம் கிடைக்கலைன்னு தான் மாத்தி வச்சாங்க! இப்ப ஒண்ணும் கெட்டுப் போகலை!
கோவில்ல வச்சு கூட பண்ணிக்கலாம்!
இல்ல.. பக்கத்துல யாத்ரீகர்கள் தங்கும் சின்ன சத்திரம் ஒண்ணு கூட ஃப்ரீயா இருக்கு அன்னிக்கு!
அங்க வச்சுக் கூட பண்ணிக்கலாம்! நீ சீக்கிரம் முடிவு எடு!”
“என்னடி லக்கி நீயும் இப்படி என்னை புரிஞ்சிக்காம பேசுற?
அத்தானை நான் கல்யாணம் பண்ணினா அவரோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னு சொன்னப்புறம் நான் எப்படிடி பண்ணுவேன்?” மதுரா மீண்டும் அழ,
“அய்யோ அக்கா உன்னோட பூமர் தனத்துக்கு அளவே இல்லையா?
இந்த காலத்துலயும் இப்படி குறி சொல்றத எல்லாம் நம்பிக்கிட்டு!
சரி.. உன்னோட வழிக்கே வர்றேன். அந்தம்மா என்ன சொன்னுச்சு. உனக்கு மாலை எடுத்து தர மாட்டேன்னு தானே சொன்னுச்சு!
தரவே வேண்டாம்!
மாலையும் வேண்டாம்! தாலியும் வேண்டாம்! அப்ப பேசாம மோதிரம் மாத்திக்கங்க!
இல்ல அதுவுமே இல்லாம லிவ் இன் வாழ்க்கைய ஆரம்பிங்க!
அப்படியே உங்க லைஃப் போகட்டும்!
அப்புறம் குழந்தை பிறந்தவுடனே வேணுமின்னா, உங்க கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க! சிம்பிள்!
அதுக்குள்ளவே உன்னோட சாமியார் பொம்பள சாயம் வெளுத்திடும்! என்ன சொல்ற டீல் ஓகேயா?”
“கல்யாணம் பண்ணிக்காம புருஷன் பொண்டாட்டியா வாழறதா? நானா? நம்ம அப்பாயி இருந்து நீ இத சொல்லி இருக்கணும்!” மதுரா விரக்தியாக சிரித்தாள்.
“எல்லாம் அந்த கிழவிய சொல்லணும்! செத்தவங்கள திட்டக் கூடாதுன்னு பார்க்கிறேன்! அப்படியே அதோட புத்திய உன் மண்டையில ஏத்தி வச்சுட்டு போய் இருக்கு அந்த கிழவி!” லக்கி பல்லைக் கடித்தாள்.
“அது போகட்டும். அக்கா.. நீ முடிவா என்ன தான் சொல்ற?” லக்கி கேட்க,
மதுராவிடம் மவுனம்!
“நீ சரிப்பட மாட்டே. அப்ப ஒண்ணு பண்ணு. நீ மறக்காம என்னோட கல்யாணத்துக்கு வந்து சேர்ந்திடு.
நீ வந்த பின்னே தான் அத்தானை என் கழுத்துல தாலி கட்ட விடுவேன்! என்ன சரியா?” என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.
மதுரா அதிர்ச்சியில் அப்படியே நின்றவள், அடுத்து இனியாவை அழைத்தாள்.
ஆனால் இனியா உட்பட அனைவரிடமும் லக்கி தன் திட்டத்தை சொல்லி இருக்க, எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி நடந்து கொண்டார்கள்!
“இல்லக்கா.. எனக்கு என்னவோ லக்கி சொல்றது சரியா தான் படுது!
அவ என்னை மாதிரி, உன்னை மாதிரி இல்லை! ரொம்ப ப்ராக்டிக்கல்! அவ சொல்ற மாதிரி ரேவந்த் அத்தான் மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளைய நாம மிஸ் பண்ணிடக் கூடாது!
ஒண்ணு நீ பண்ணிக்கோ. அதான் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டியே! அப்ப அவளையாவது பண்ணிக்க விடு!
சரிக்கா.. நான் தூங்கனும். நாளைக்கு காலையில கல்யாண பர்ச்சேஸ் இருக்கு! லக்கிக்கு கிஃப்ட் வேற வாங்கணும்” என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.
அவர்கள் சொன்னது உண்மை என்பது போல, அடுத்த நாள் லக்கிக்கு கல்யாணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய சடங்கு வைத்தார்கள்!
ரேவந்தின் அத்தைகள் மற்றும் வேறு சில சொந்தக்கார பெண்மணிகள் வந்து வீட்டோடு சிம்பிளாக அந்த விழாவை நடத்தி விட்டார்கள்.
மதியம் விருந்து உணவு மதுராவுக்கு கேரியரில் கொண்டு வந்து கொடுத்தார் மணி அத்தை!
“நீ சொன்னா கேக்க மாட்டே? உன்னை மாதிரி தானே உன்னோட தங்கச்சியும் இருப்பா! பாரு பிடிவாதம் பிடிச்சி நடத்திட்டு இருக்கா!
கையில் தூக்க மாத்திரை அட்டையை வச்சுகிட்டு மாப்பிள்ளைய பயமுறுத்தி வச்சுருக்கா! அவரும் என்ன தான் பண்ணுவாரு!
எல்லாத்துக்கும் காரணம் நீ தான்! உன்னோட இந்த தேவையில்லாத பயம் தான்!
நான் படிக்காதவ. இந்த கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவ! அத்தோட இத்தனை வருசமா சாமி கோவில் பூஜைன்னு இதிலேயே இருக்கிறவ!
நானே சொல்றேனே பாப்பா.. இதெல்லாம் நம்பாதேன்னு!
எத்தனை தடவ தான் நான் சொல்றது!
வீணா உன் தலையில நீயே மண்ணை அள்ளிப் போட்டுக்காதே பாப்பா!
எல்லோருக்கும் இப்படி குடும்ப வாழ்க்கை அமையாது!
இதோ என்னையே எடுத்துக்க.. நான் வயசுக்கே வரல! குடும்பம் குழந்தை குட்டின்னு வாழற கொடுப்பினை எனக்கு அந்த கடவுள் தரல!
உனக்கு தந்திருக்கான்!
எல்லாத்துக்கும் காரணம் உன்னோட நல்ல மனசு!
ஆனா.. அவன் கொடுத்த இந்த வாழ்க்கைய நீ இப்படி எவ பேச்சையோ கேட்டுகிட்டு உதாசீனப்படுத்திட்டு இருக்க?
நல்லா கேளு. வாழ்க்கை போனா திரும்ப வராது!
இப்படியே இருந்திடலாம்னு நினைக்காதே!
அது எவ்வளவு கஷ்டம்னு அப்படி வாழ்ந்திட்டு இருக்க எனக்கு தான் தெரியும்!
என் கஷ்டம் உனக்கு வரக் கூடாதும்மா.. இப்ப தெரியாது உனக்கு! என்னை மாதிரி வயசான பின்னாடி தான் சாஞ்சுக்க ஒரு தோள் தேடும் நம்ம மனசு!
அப்ப தான், நாம தப்பு பண்ணிட்டமோன்னு உறுத்தலும் வரும்!
உனக்கு அந்த கஷ்டம் வரக்கூடாதும்மா.
நான் யாரு உனக்கு? தூரத்து சொந்தம்! என்னை இப்படி அன்பைக் காட்டி அரவணைக்கிற உன்னை நான் பெறாவிட்டாலும் என்னோட மக மாதிரி தான்மா நினைக்கிறேன்!
உன்னோட அம்மா வானதி அண்ணி இருந்திருந்தா இத தான் சொல்லியிருக்கும். நல்லா யோசிம்மா”. என்று சொல்லி சென்று இருந்தார் அவர்!
அன்று இரவும் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டே படுத்து இருந்தவள்,
அதிகாலை எழுந்து தலைக்கு குளித்து விட்டு, அவர்கள் ஊர் எல்லையில் இருக்கும் அய்யனார் கோவிலில் சென்று அவரிடம் உத்தரவு கேட்க சென்றாள்.
அவள் அப்பாயி இது போன்ற தருணங்களில் செய்வது தான் அது!
“அப்பனே அய்யனார் அப்பா.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னிக்கு ஒன்பது மணிக்கு மேல லக்கிக்கும் அவருக்கும் கல்யாணம்!
என்னால எதுவும் பண்ண முடியல!
நீ சொல்லு எனக்கு? நான் என்ன பண்ணட்டும்னு நீ சொல்லு. இதுல நீ வெள்ளைப் பூ கொடுத்தா, நான் துணிஞ்சு அவர கல்யாணம் பண்ணிக்கலாம்னு அர்த்தம்!
நீயே சொல்லு! என்னோட வாழ்க்கைய உன்கிட்ட விட்டுட்டேன்!” என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள்.
வேண்டிக் கொண்டு பூப் போட்டு பார்த்து அதில் ஒன்றை அவள் கையில் எடுத்து பிரிக்க முயன்ற போது, கொஞ்ச தூரத்தில் இரு பெண்களின் அலறல் கேட்டது!
மதுரா அதிர்ச்சியாகி, அவர்கள் அருகே செல்லுமுன், அவர்களை ஏற்றிக் கொண்டு வந்த இரு பைக் இளைஞர்கள் விருட்டென்று பைக்கை கிளப்பி சென்று விட்டனர்!
அவர்கள்.. அந்த இரு பெண்கள் சூர்யா அம்மாவும் அந்த சாமியாடி பெண்ணும் தான்!
சூர்யா அம்மாவின் கழுத்தில் ஆழமான காயம்!
அவரது தாலிக் கொடியை தான் அற்றுக் கொண்டு போய் இருந்தார்கள் அந்த பைக் இளைஞர்கள்!
போகும் போது சத்தமிட்ட சாமியாரிணி கழுத்தில் கத்தியை வைத்து ஒரு இழுப்பு இழுத்து விட்டு சென்றிருக்க, அவள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தாள்.
மதுரா அதிர்ச்சியாகி அவர்கள் அருகில் சென்று சூர்யா அம்மாவின் கழுத்தில் தான் முந்தானையை வைத்து அழுத்தி ரத்தப் போக்கினை தடுக்க முயன்றாள்.
“அம்மாச்சி.. என்ன ஆச்சு யாரு அவங்க?“
அந்த அம்மாள் திக்கித் திணறி பேசினாள்.
“நாங்க ரெண்டு துவாக்குடி பக்கம் ஒரு கோவில் திருவிழாவுக்கு போய் இருந்தோம்.
அங்க இந்த பசங்க எங்க கூடவே வந்தாங்க. நாங்களும் சீரங்கம் தான்னு சொல்லி எங்க கூடவே வந்து சாமி கும்பிட்டாங்க. ஜூஸ் காபி எல்லாம் கூட வாங்கி கொடுத்தாங்க.
அப்புறம் நம்ம ஊருக்கு பஸ்சுக்கு நின்னப்ப, வாங்க அப்பாயி எங்க பைக்கில் கூட்டிட்டு போறோம்.
அன்டயத்துல உங்களுக்கு பஸ் கிடைக்காதுன்னு சொல்லி அவங்களோடவே கூட்டிட்டு வந்தாங்க. இங்க நம்ம ஊர் எல்லையில வந்ததும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வச்சு என்னோட தாலி செயினை அத்துட்டு போய்ட்டாங்க!” என்று அவர் திக்கி திக்கி சொல்லி முடித்தார்!
மதுரா கையில் அப்போது போன் கூட இல்லை! என்ன பண்றது என்று அவள் தவிப்பாய் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் அருகில் ஒரு பழைய ஆம்னி வேன் மெல்லமாய் கடந்து செல்ல,
அவர்களிடம் “அண்ணே.. ப்ளீஸ்.. இவங்கள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும் கொஞ்சம் ஏத்திக்கங்க!”
அவர்களோ,
“அய்யோ இது போலிஸ் கேஸ் ஆகிடும்! நீ வேற ஆள் பாரும்மா! நூத்திஎட்டுக்கு போன் பண்ணு!”
“அண்ணே. அதுக்கு நேரம் இல்லண்ணே! பாருங்க வயசானவங்க. இவ்வளவு ரத்தம் வேற போயிட்டு இருக்கு!
என்ன வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்!
நம்ம கண்ணு முன்னாடி ஒருத்தவங்க இப்படி கிடைக்கிறப்போ நாம எப்படி சும்மா போக முடியும்? ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச, அவர்கள் ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவ மனையில் கொண்டு போய் விட்டார்கள்!
போகும் போது சூர்யா அம்மா, அவளை கையெடுத்து கும்பிட்டார்!
“ஸ்வீட்டி.. உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப.
நான் உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்!
இதோ இவ உன்கிட்ட உன் கல்யாணம் பத்தி சொன்னது எல்லாம் உண்மை இல்ல!
எல்லாமே நான் சொல்லி தான் இவ அப்படி உன்கிட்ட சொன்னா!
நான் தான் புத்திக் கெட்டுப் போய் உன்னோட சித்தி பேச்சைக் கேட்டுகிட்டு அப்படி சொல்ல சொன்னேன்!
ஆனா கடவுள் உன் பக்கம் இருக்காரு பாரு!
நீ அந்த ரேவந்த்தை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா இரும்மா!
இந்த அம்மாச்சிய மன்னிச்சுடு” என்று சொல்லி விட்டு மயங்கி இருந்தார்.
அவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, தெரிந்த ஆயா ஒருவரிடம் சொல்லி விட்டு,
சூர்யா அப்பாவுக்கும் தெரிவித்து விட்டு அவள் ரேவந்த் லக்கி கல்யாணம் நடப்பதாய் இருந்த அந்த மண்டபம் செல்ல ஒரு ஆட்டோவைப் பிடித்தாள்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே அந்த காலை வேளையிலும் பயங்கர ட்ராபிக்!
ஆட்டோவில் இருந்து இறங்கி மண்டபம் நோக்கி கிட்டதட்ட ஓடினாள்.
அவள் அப்படி அங்கு வந்து கொண்டிருப்பதை அந்த ஆட்டோ டிரைவர் ரேவந்தின் மாமாவுக்கு போனில் சொல்லி விட்டான்.
அந்த ஆம்னி வேன் கூட அவர்கள் ஏற்பாடு தான்!
சூர்யா அம்மாவும் அந்த சாமியாடியும் எப்படியும் ஊர் திரும்புவார்கள் என்று தான் அவர்கள் அங்கு காத்து இருந்ததே!
வந்தால் தூக்கிக் கொண்டு போய் உண்மையை வரவழைக்க அவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள்!
அதற்குள் மதுராவுக்கு லக்கி கொடுத்து இருக்கும் ஷாக் ட்ரீட்மென்ட் எப்படியும் வேலை செய்து விடும் என்றும் நம்பினார்கள்!
கல்யாணத்தைத் தடுக்க மதுரா எப்படியும் வந்து விடுவாள் என்றே நம்பினார்கள்!
ஆனால் அவர்களே எதிர்பாராதது அந்த செயின் பறிப்பு!
மதுரா அந்த பெண்களை ஹாஸ்பிட்டலில் சேர்த்து விட்டு வெளியே வருவாள்.
வந்தவுடன் ஏற்றிக் கொள்ள தோதாக ஒரு ஆட்டோவையும் நிறுத்தி வைத்து விட்டு தான் அவர்கள் காத்திருந்தார்கள்!
எல்லாம் லக்கியும் ரேவந்தின் சின்ன மாமாவும் இந்த விசயம் தெரிந்து சேர்ந்து செய்த உடனடி ஏற்பாடுகள்!
அவர்கள் திட்டபடியே எல்லாமும் நடந்துருக்க, மண்டபத்தின் வாசலிலேயே காத்திருந்தாள் இனியா!
மதுராவைக் கண்டவுடன்,
“அப்பாடி.. அக்கா வந்தாச்சு.. அத்தான் எல்லாம் ரெடி தானே!” என்று உள்ளே ஓடினாள்.
“ஏய்.. இனியா.. கொஞ்சம் நில்லு. நான் சொல்றத கேளு!” மதுரா பின்னாடியே ஓட,
“அக்கா சீக்கிரம் அக்கா.. நல்ல நேரம் முடிய இன்னும் கொஞ்சம் நேரமே பாக்கி இருக்கு! அதுக்குள்ள முடிக்கணும்! நீ சீக்கிரம் வா” என்று சொல்லி விட்டு வேகமாக படியேறினாள் அவள்!
பின்னாடியே மூச்சு இறைக்க மதுரா செல்ல, கெட்டி மேளம் அடித்தது!
அவள் அதிர்ந்து போய் மேடையைப் பார்க்க அங்கே மணக்கோலத்தில் லக்கி!
மதுராவுக்கு மூச்சே நின்று போகும் போல ஆனது!
ஆனால் அடுத்து அவள் பார்த்தது, லக்கி மோதிரம் போட்டு விட, முகம் முழுக்க புன்னகையுடன், தன் விரலை நீட்டிக் கொண்டு இருந்த நவீனை!
நவீன்!
திருப்பூரில் இருக்கும் ரேவந்தின் ஃபேக்டரி மேனேஜர்!
மணமக்கள் அருகில் சிரித்த வண்ணம் ரேஷ்மா யுவி, அவனது பெற்றோர்!
கூடவே நவீனின் பெற்றோர்!
“வாங்க மேடம்! எப்படியோ டயத்துக்கு வந்திட்டீங்க!” என்றவாறு குறும்பு புன்னகையுடன் ரேவந்த்!
“என்ன பார்க்கிற டார்லிங்? இந்த கல்யாண ஏற்பாடு எல்லாம் உன் லக்கியோட திருவிளையாடல்!”
“ஆனா நாங்க உனக்கு புரிய வைக்கிறதுக்கு முன்னாடி அந்த கடவுளே உன்னோட கண்ணைத் திறந்துட்டார்!” என்றாள் இனியா!
“எங்கள சீனில் காணோம்னு நீங்க தேடவே இல்லையா சிஸ்டர்?” என்றான் யுவி!
“ஆனா , நாங்க சும்மா இல்ல! லக்கி அவளோட பிளானை சொன்னப்புறம், உடனே ஆக்சனில் இறங்கிட்டோம் நாங்க!
ரேவந்த், ஏற்கனவே லக்கிக்கு பார்த்து வச்சுருந்த மாப்பிள்ளை தான் நவீன்!
லக்கி கிட்ட சொல்லி, அவங்க ரெண்டு பேரும் பேசி பார்த்துட்டு பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டாங்க!
அதான் இந்த சர்ப்ரைஸ் எங்கேஜ்மென்ட்! என்ன ஹேப்பியா?” என்றாள் ரேஷ்மா மதுராவின் அருகில் வந்து!
“ரொம்ப தாங்க்ஸ்” என்றவாறு மதுரா அவளை அணைக்க போன போது,
“நோ..நோ டார்லிங் உன் அத்தான் நான் இங்க இருக்கேன்” என்று அவளை இழுத்து எல்லோர் முன்னிலும் அணைத்துக் கொண்டான் ரேவந்த்!
ஆனந்த கண்ணீர் பெருக்கோடு அவன் நெஞ்சில் சாய்ந்தாள் ஊட்டியின் ஸ்வீட்டி!
சுபம்!
error: Content is protected !!