Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைத் பார்த்த முதல் நாளே 2

தோழிகளது பேச்சும் சிரிப்பும் மற்றவர்கள் திரும்பி பார்க்குமாறுதான் இருந்தது.  கல்லூரி மாணவர்கள் அல்லவா…?  அவர்களின் உலகம் எல்லாம் தனிதானே.  யாரையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.  அவர்களின் உலகில் சஞ்சரித்திருந்தனர் மகிழ்ச்சியாக.

பெண்களின் ஆர்ப்பாட்டமும், பேச்சும், நண்பர்களைப் பற்றியும், கல்லூரியைப் பற்றியுமே இருந்தது.  இவர்களின் பேச்சு சத்தம்தான் அங்கே ஓங்கியிருந்தது.  நால்வரும் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றவுடன், அந்த இடமே அலையடித்து ஓய்ந்தது போல அமைதியானது.

முகிலனும் அஸ்வத்தாமனும் இவர்களைத்தான் கவனித்துக் கொண்டிருந்தனர்.  அவர்களும் பிரேக்பாஸ்ட் முடித்து, காபி வரவைத்து குடித்துக் கொண்டிருந்தார்கள்.

அஸ்வத்துக்கு உள்ளுக்குள் ஒரு சின்ன எதிர்பார்ப்பு.  அருந்ததி பார்ப்பாளா என.  ம்கூம் தோழிகளுடன் இருந்த பேச்சு மும்முரத்தில் அவள் இவனை கவனிக்கவில்லை.



Advertisement

முகிலன்தான் காலேஜ் ஸ்டூடன்ஸ் போல என்றான்.  அஸ்வத்தாமனும் ஆமாம் என தலையசைத்து கொண்டான்.

முதுமலையில் ஜீப் சவாரி முடித்து வந்த தோழிகள், மதிய உணவிற்கு பிறகு அருகில் இருந்த யானைகள் கேம்பிற்கு சென்று பார்த்தனர்.  அங்கே இவர்களுக்கு முன்பே கும்பல் கும்பலாகவும், குடும்பமாகவும் மக்கள் திரண்டிருந்தனர்.

யானைகளுக்கான உணவை பெரிய பெரிய கவளங்களாக உருட்டி  கொடுத்து கொண்டிருப்பதைப் பார்த்து மக்கள் ரசித்து கொண்டிருந்தனர்.

Advertisement

கவளமாக கொடுக்கும் உணவை வாயைத் திறந்து வாங்கி, நாவினால் அதக்கி அதக்கி யானை உண்ணும் காட்சியை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ரசித்து மகிழந்து கொண்டிருந்தனர்.

Advertisement

அதைப் பார்த்து என்ஜாய் செய்து முடித்த தோழிகள் நால்வரும் அன்று இரவே மசினக்குடிக்கு கிளம்பியிருந்தனர்.  அங்கேயும் இவர்களுக்காக ஹோம் ஸ்டே போல புக் செய்து கொடுத்திருந்தார் காயத்திரியின் தந்தை.  அவர்தான் முதுமலையிலும் ரெசார்ட் புக் செய்து கொடுத்தது.

இதுவும் இயற்கை சூழல் நிறைந்த வனப் பகுதிக்குள்ளேதான் இருந்தது.  முதுமலையில் இருந்ததைவிட இந்த இடம் இன்னும் அழகாக இருந்தது.  எங்கு திரும்பினாலும் வனத்தின் பசுமை பரந்து விரிந்திருந்தது ரம்மியமாக.

மறுநாள் காலையில் எழுந்த தோழிகள் நால்வரும்  பேசிக்கொண்டே வாக்கிங் சென்று வந்தார்கள்.  சற்று நேரத்தில் குளித்து முடித்து காலை உணவை உண்பதற்காக வந்திருந்தனர்.

Advertisement

காயத்திரி, “ஏய் பரவாயில்லடி பிரேக்பாஸ்ட் காம்ளிமென்டா தராங்களே ஏதோ ஒன்னு இரண்டு ஐட்டம்தான் வச்சிருப்பாங்கன்னு பார்த்தேன்.  நிறைய ஐட்டம் இருக்கு.  புரூட்ஸ்லாம்கூட வச்சிருக்காங்க…”

“தின்னுருட்டி… எப்பவும் சாப்பாட பத்தின நினைப்புதானா…” என்றாள் வனஜா.

“ஏய் போடி….,  இவள்ங்க எல்லாம் ஏதோ சாப்பிடாத மாதிரி…” என தட்டை எடுத்து அங்கு பஃப்பே முறையில் வைத்திருந்தவற்றில் இருந்து  தனக்கு தேவையானதையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு வந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்.

காலை உணவை முடித்தவர்கள், பாரஸ்ட் டிரக்கிங்கிற்காக ஜீப்பில் கிளம்பினார்கள்.  சுற்றி தெரிந்த மலை முகடுகளையும், இயற்கை எழிலையும் ரசித்த வண்ணம், அவரவர் மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டு, பேச்சும்… சிரிப்புமாக… பயணித்தனர்.

முதலில் விபூதி மலை வ்யூ பாயின்ட்டுக்கு வந்திருந்தனர்.  மலைகளைப் பார்க்கவே பிரமாண்டமாக இருந்தது.  சுற்றிலும் பசுமையான மலைகளும், பஞ்சு பொதிகளைப் போல, அதன் முகடுகளை உரசிச் செல்லும் மேகக் கூட்டங்களையும் பார்க்கவே கண்கோடி வேண்டும் போல் இருந்தது.  அந்த காட்சியை காண காணக் திகட்ட வில்லை.

எப்போதும் இரைச்சலும், கூட்டமுமாக ஜனசந்தடிகள் நிறைந்த சிட்டியில் இருந்து வருவோர்க்கு இந்த இயற்கையின் அழகோவியம் ரம்மியமாக இருந்தது.  மக்கள் கூட்டம் அதிகமில்லை. வந்திருந்தவர்கள் எல்லாம் இயற்கையை ரசிப்பதும், சுற்றி சுற்றி வீடியோ எடுப்பதும், செல்பி எடுப்பதுமாக இருந்தனர்.

பெண்களுக்கு  அங்கிருந்து கிளம்பவே மனதில்லை. இவர்களுக்கு சற்று தூரத்தில்தான் அஸ்வத்தாமனும் முகிலனும் நின்று கொண்டிருந்தனர்.

முதலில் அஸ்வத்தாமன் இவர்களை கவனிக்கவில்லை.  தன் கையில் வைத்திருந்த பைனாக்குலர் மூலம் சுற்றிலும் இயற்கையை கண்டு ரசித்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் அருந்ததி விழுந்திருந்தாள்.

இன்று அவள் அணிந்திருந்த டெனிம் மீடியம் புளூ ஜீனும், வைட் டாப்பும் அருந்ததிக்கு அத்துணை பொருத்தமாக இருந்தது.  லூஸ் ஹேர் விட்டு, கண்களில் கூலர் அணிந்து நின்றிருந்தாள்.

அஸ்வத்துக்கு அவளை விட்டு கண்களை அகற்றவே முடியவில்லை.  மொத்தமாக அவனை கட்டியிழுத்தாள்.

முகிலன், “ஹேய் நேத்து நம்ம முதுமலையில பார்த்த பொண்ணுங்கதான இவங்க”.

“ம்ம்….”

“ரசனையான பொண்ணுங்கதான் போல.  எல்லாம் ஊட்டி கொடைக்கானல்னு போகதான் விரும்புவாங்க.  இங்கலாம் காலேஜ் கேர்ள்ஸ் அவ்வளவா யாரும் வர விருப்பப்படமாட்டாங்க.  ஆனால் இவங்க வித்தியாசமா… முதுமலை, மசினக்குடின்னு சுத்திட்டிருக்காங்க” என கிண்டல் செய்தான் நண்பனிடம்.

அடுத்து மோயார் ஆற்றையும், பேம்பூ பாரஸ்டையும் கண்டு களித்து ரெசார்ட் வந்திருந்தனர்.  அன்று மதியமே உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.  மறுநாள் கல்லூரி இருக்கிறது என.

பெண்கள் எல்லோரும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததுமே உற்சாகம் வடிந்திருந்தது முகத்தில்.  அனைவருக்கும் போகும் போது இருந்த ஆனந்தம், உற்சாகம், முகப் பொலிவு எல்லாம் திரும்பும்போது வடிந்திருந்தது.

பைனல் செமஸ்டருக்கு இன்னும் இரண்டு மாதமே இருந்ததால் கம்ப்ளீட் பண்ண வேண்டிய போர்ஷனும் அவர்களுக்கு நிறைய இருந்தது.  ஆதலால் கல்லூரிக்கு விடுமுறை எதுவும் எடுக்காமல் அன்றே கிளம்பியிருந்தனர்.

அடுத்த நாள் காலையிலேயே அருந்ததியின் அம்மா புவனா அவளை அழைத்திருந்தார்.  தூக்கக் கலக்கத்திலேயே போனை எடுத்தவள், “ஹலோ” என்றாள்.

புவனா, “இன்னும் எழுந்துக்கலையாடா…?”

“எழுந்துக்கனும்மா…. டையர்டாயிருக்கு.  அதான் கொஞ்ச நேரங் கழிச்சு எழுந்திருக்கலாம்னு படுத்திருக்கேன்.  இப்ப எழுந்துருவேன்.  காலேஜ் போகனுமில்ல….” என்றாள் ராகமாக.

“உன்னை வந்துட்டு போன் பண்ணுன்னுதான சொன்னேன்”.

“ஏன் ம்மா….” என்றாள் ராகமாக.

“என்ன ஏன் ம்மா…?  சொல்றத மதிக்கறதேயில்ல….”

“ம்ப்ச் ம்மா…” என அடித் தொண்டையில் அழுத்தி கூப்பிட்டவள், “இங்க வரும் போதே லேட் நைட்.  டையர்ட் வேற.  சரி காலைல சொல்லலாம்னு விட்டுட்டேன்.  இது ஒரு குத்தமா உங்களுக்கு”.

“மெசேஜாவது போட்டிருக்கலாமில்ல.  நீ வந்திட்டியான்னு எனக்கு எப்படி தெரியும்.  பொம்பளை பிள்ளைங்க தனியா போயிருக்கீங்கன்னு.  எங்களுக்கு பயம் இருக்காதா….?  இராத்திரி எல்லாம் பக் பக்னு நெஞ்சு முழுக்க எவ்வளவு பயமாயிருந்தது தெரியுமா…?  இங்க உங்கப்பா… என்னவோ எல்லாத்துக்கும் நான்தான் காரணம்னு… என்ன பேச ஆரம்பிச்சிட்டார்”. என்றார் காட்டமாக.

“என்னவாம் உன் புருஷனுக்கு….?  அவர் எங்க போறார்…?  என்ன பண்றார்னு, எங்கிட்ட சொல்லிட்டுதான் செய்யறாரா…?”

“அடிக்கழுதை… வாயிலயே இரண்டு வச்சேன்னா தெரியும்”.

“ம்க்கும்.  நிம்மதியா தூங்க முடியுதா…?  ந்தா… காலையிலே கச்சேரிய ஆரம்பிச்சாச்சில்ல…”

“சொல்லுவடி.  போறதுக்கு முன்னாடி…. வாயில தேன் தடவன மாதிரி எல்லாத்துக்கும் ம்ம்…. ம்ம்…னு மண்டைய ஆட்டி பர்மிஷன் வாங்கிட்டு, போய் வந்தததும், ஏன் போன் பண்ணலன்னு கேட்டா… இவ்வளவு சலிப்பாயிருக்கா…. உனக்கு?”

“அச்சோ….புவனா… அதுக்குள்ள மலையேறிடாத…. கோச்சுக்காத தாயே… ஏதோ ஊர் சுத்திட்டு வந்த டை.யர்ட்ல தூக்கத் கலக்கத்துல, அறியாத பிள்ளை, தெரியாம இரண்டு வார்த்தை பேசிட்டேன்.  அதுக்குள்ள அப்படியே உன் புருசன்கிட்ட வத்தி வச்சிடாத ஆத்தா…” என்றாள் பவ்யமாக.

புவனாவுக்கும் மகளது நைச்சியத்தில் சிரிப்புதான் வந்தது.

“என்னமா  அமைதியாயிட்ட…?  அப்பா என்ன சொன்னார்….?  ரொம்ப திட்னாரா…?”

“ம்ம்… என்ன சொல்லுவார்…?  இராத்திரி முழுக்க மனுஷன் என்னை பொட்டு கண்ணசரவிடல.  என் காதுக்கு மட்டும் வாயிருந்தா அழுதிருக்கும்…” என்றார் சலிப்பாக.

“சாரிம்மா….”.

“சரி சரி லேட் பண்ணாம அப்பாக்கு நீ ஹாஸ்டலுக்கு நல்லபடியா வந்துட்டனு ஒரு மெசேஜ் போட்டுடு..  இல்லனா அதுக்கும் எனக்குதான் பாட்டுவிழும்”.

“ம்ம்… போடறேன்”.

“டைமாச்சே…. தூங்கிடாம காலேஜ் கிளம்பு”.

“ம்ம்…. நீதான் பேசிட்டேயிருக்கியே…?  நான் எங்க கிளம்பறது?” என்றாள்   கிண்டலாக.

“கழுத வாய் அதிகமாயிடுச்சு.  எழுந்து கிளம்புடி.  வாயடிச்சுட்டு…” என போனை கட் செய்திருந்தார்.

அருந்ததியும் சிரித்துகொண்டே எழுந்து கல்லூரிக்கு கிளம்ப ஆரம்பித்தாள்.

இவளது செந்த ஊர் மதுரை.  தந்தை ராஜேந்திரனுக்கும், தாய் புவனாக்கும் ஒரே பெண் அருந்ததி.  தந்தை எப்போதும் கெடுபிடிதான்.  மகளின் மீது நிரம்ப அன்பு உண்டு.  பொறுப்பான தந்தையும்கூட.

அருந்ததி கல்லூரி படிப்புக்காக கோவை வருவதற்குகூட முதலில் அவர் எதிர்ப்புதான் தெரிவித்தார்.  ஆனால் அவளின் பிடிவாதத்தாலும், புவனாவின் முயற்சியாலும்தான் இங்கு சேர முடிந்தது.

ஆம் புவனாதான் கணவரிடம் பொறுமையாக பேசி அவருக்கு புரியவைத்து அவளை கோவையில் சேர்க்க உதவியிருந்தார்.

அருந்ததி தந்தைக்கு ஒரு சாரி மெசேஜ் அனுப்பிவைத்தாள், நைட் வந்தவுடனே மெசேஜ் செய்யாததற்கு காரணம் சொல்லி.

ராஜேந்திரனுக்கு பூக்கடை வியாபாரம்.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே அவர்களது கடை இருக்கிறது.  தந்தை காலத்தில் இருந்தே வியாபாரத்தில் இருக்கிறார்.  இப்போது தந்தைக்கு பிறகு தனயன் இன்னும் கடையை கொஞ்சம் விரிவு படுத்தி, திருமண மற்றும் விசேஷங்களுக்கு சப்ளை செய்வது என வியாபாரத்தை விஸ்தரிப்பு செய்துள்ளார்.  நல்ல வருமானமும் கடையில்.

இவர் இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும்போதே தந்தை இறைவனடி சேர்ந்திருந்தார்.  அதற்கப்புறம் குடும்ப பொறுப்பு முழுவதும் இவரதுதான்.  இவருடன் பிறந்த தங்கை சித்ராவுக்கு இவர்தான் சீரும் சிறப்புமாக திருமணம் செய்து கொடுத்திருந்தார்.  தாய் பாரிஜாதம் இவருடன்தான் இருக்கிறார்.

சித்ராவுக்கு ஒரு மகன், ஒரு மகள்.  மகன் சரவணன் மூத்தவன்.  அருந்ததியைவிட மூன்று வயது பெரியவன்.  மகள் பானுமதி அருந்ததியைவிட ஆறு மாதம் இளையவள்.  மதுரையில்தான் அவர்களும் இருக்கிறார்கள்.

ராஜேந்திரன் பூஜையை முடித்தவர், “தாயே மீனாட்சி, எல்லாரும் நல்லாயிருக்கனும் ம்மா… உன் அருளால” என கூறிக்கொண்டே வந்து சாப்பிடுவதற்காக அமர்ந்தார்.

வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியில், கண்களில் கண்ணாடியும், கைகளில் டைட்டன் வாட்சியும், நெற்றியில் திருநீறுமாக பக்திபழமாக இருந்தார் பார்ப்பதற்கே.  மூச்சுக்கு முந்நூறு தடவை மீனாட்சியும் சொக்கனும்தான் அவருக்கு வாயில் வரும்.  அதீத பக்தி மீனாட்சியிடமும், சொக்கநாதரிடமும்.

புவனா அரக்க பரக்க வெந்த இட்லியை தட்டில் மாற்றி எடுத்துக்கொண்டு வந்தார்.  காலையிலேயே குளித்து, வாயில் புடவையில் பளிச்சென இருந்தார்.

புவனா கணவருக்கு தட்டை எடுத்து வைத்து கொண்டு வந்து இட்லியை அவருக்கு பறிமாறியவர், அரைத்திருந்த தேங்காய் சட்னியையும், சாம்பாரையும் பறிமாறினார்.

ராஜேந்திரன் இட்லியை பிட்டு சாம்பாரில் நனைத்து வாயில் வைத்தவர், “புடவை நல்லாயிருக்கு புவனா…  எப்ப எடுத்த… ?” என்றார் இட்லியை மென்றுகொண்டே.

“இதுவா…?  எடுத்து வருஷத்துக்குமேலே ஆச்சு.  பிளவுஸ் தக்காம வச்சிருந்ததால கட்டாம இருந்தேன்”.

“ம்ம்… நல்லாயிருக்கு.  இதபோலயே இன்னும் இரண்டு மூனு எடுத்துக்கோ…  நீதான் வீட்ல வாயில் புடவைதான கட்டறே…  வெயில்காலம் வேற வருது.  இன்னும் இரண்டு எடுத்துக்கோ…”

“ம்ம்….”

பாரிஜாதம் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.  சின்ன எழுத்துக்கள் தெரிவதில்லை என்பதால் கண்ணுக்கு கண்ணாடி அணிந்திருந்தார்.

இவர்களது பேச்சும் காதில் விழுந்தது அவருக்கு.  ராஜேந்திரன் சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வரவும், மகனைப் பார்த்த பாரிஜாதம், “எனக்குகூட சேலை எடுக்கனும்பா…  உன்கிட்ட சொல்லனும்னு நினைக்கறது.  எங்க நீதான் எப்பவும் கடை வேலைன்னு அலையறயா…  அதான் அப்புறம் பார்த்துக்கலாம்னு இருந்தேன்” என்றார்.

ராஜேந்திரன் புவனாவைத் திரும்பி பார்த்தவர், “மதியானம் வரும்போது காசு தரேன்.  கடைக்குபோய் உனக்கும் அம்மாக்கும் எடுத்துட்டு வந்துடு புவனா…” என கிளம்பிவிட்டார்.

“அப்படியே சித்ராக்கும் இரண்டு புடவை எடுத்துட்டு வந்துடு புவனா”  என்றார் பாரிஜாதம்.

“சரி அத்தை….”

“எனக்கு தலைவலிக்கற மாதிரியிருக்கு…  கொஞ்சம் இஞ்சி தட்டிப்போட்டு டீ குடுக்கறயா….?”

“ஏன் அத்தை சாப்பிடற நேரத்துல டீ?  சாப்பிடலாம் வாங்க”.

“பசியில்ல புவனா.  டீ குடு.  நான் அப்புறமா சாப்டுக்கறேன்”.

சரி என தலையசைத்து டீ போட கிட்சனுக்குள் சென்றுவிட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@

அஸ்வத்தாமன் தனது ட்ரான்ஸ்பர் ஆர்டரைப் பற்றி வீட்டில் தந்தை பரணியிடம் பேசிக் கொண்டிருந்தான்.  அதைக் கேட்டதிலிருந்து அவனது அன்னை விசாலினி அவனை உண்டு இல்லை என வறுத்துக் கொண்டிருந்தார்.

“இவனுக்கு இதே வேலையா போச்சு.  எங்கயாவது ஒரே இடத்துல நிலையா இருக்கானா…?  ஊருக்கு நல்லது பண்றேன்னு இருக்கற வம்பை எல்லாம் விலைக்கு வாங்குறான்.  மத்தவங்க எல்லாம் வேலை பார்க்கலையா…?  நீதி, நேர்மை, நியாயம்னு எல்லாத்தையும் இழுத்து தலையில் போட்டுக்கறான்”.

“இவன் இப்படி இருக்கறதாலதான் தூக்கியடிச்சிட்டேயிருக்காங்க.  சொன்னாலும் புரிஞ்சுக்கமாட்டான்…” என புலம்பித் தள்ளிக்கொண்டிருந்தார் விசாலினி.

“என் வேலையே அதுதான் ம்மா…  போலீஸ் வேலைன்னா சும்மாவா…? நான் என் கடமையை தானே செய்யறேன்”.

“ஆமாம்டா…? நீ மட்டும்தான் கடமையை செய்யறியா…?  மத்தவங்க எல்லாம் சும்மாயிருக்காங்களா…?”

Kநான் அப்படி சொல்ல ம்மா…  என் வேலையை நான் சரியா செய்யறேன்.  தப்பு செய்யறவங்கள தண்டிக்கனும்னு சட்டம் சொல்லுது.  நான் யாருக்கும் கூழை கும்பிடு போட்டு, அட்ஜஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்ல ம்மா.  எப்பவும் எனக்கு நேர் வழிதான்K.

Kம்ம்… இப்படியே டயலாக் பேசிட்டே இருடா. அவங்களும் உன்னை ஊர் ஊரா தூக்கியடிச்சுட்டு இருப்பாங்க.  அவங்கவங்க சொந்த ஊர்லயே போஸ்டிங் கிடைக்காதான்னு தவம் இருக்காங்க.  நீ பாரு.  வேலைக்கு சேர்ந்து இத்தனை வருஷத்துல, இப்பதான் எங்களோட வந்து தங்கியிருக்கேன்னு சந்தோஷப்பட்டேன்.  அதுக்குள்ள சென்னைக்கு டிரான்ஸ்பர் வந்துடுச்சு”.

“நீங்களும் என்னோட வந்திருங்க ம்மா…  வீடு அலாட் ஆனதும் சொல்றேன்.  கிளம்பி வந்துடுங்க அங்க”.

“ம்ம்… உன்னோட வந்துட்டா.. அப்பாவை யாருடா பார்த்துக்கறது.  அவர் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாராம்…?”

“அதுக்குதான் அப்பாவ வி. ஆர். எஸ் வாங்கிடுங்கன்னு சொல்றேன்”.

“சொல்லுவடா… நீ வேலை பார்க்கறதுக்கு, அவர் வேலையை விடனுமா…?”

“எந்த வழிக்கும் வரேமாட்டேன்னு அடம் பிடிச்சா நான் என்னம்மா பண்றது…?”

“ம்ம்… கல்யாணம் பண்ணிட்டு உன் பொண்டாட்டியோட நீ எந்த ஊருக்கு வேணா… மூட்டைய கட்டுடா…  யார் உன்னை கேட்க போறாங்க” என நொடித்தார்.

“அப்ப உங்களுக்கு என் மேல அவ்வளவுதான் அக்கறை.  எவள் கிட்டயாவது என்னை தள்ளிவிட்டுட்டு, நீங்க பிரியாகிடனும்னு பார்க்கறீங்க…”

“பின்ன…?  நீ என்ன இன்னும் சின்ன பையனா…?  கல்யாணத்தை பண்ணிட்டு குடும்பம் குழந்தைன்னு இருந்தனா…  நானும் நிம்மதியா இருப்பேன் இல்ல”.

“ஹா… ஹா…. அதான.  என்னடா அம்மா இன்னும் பாயின்டுக்கு வரலையேன்னு பார்த்தேன்.  வந்தாச்சு.  ஏன் ம்மா…?  இந்த கல்யாணத்த விட்டா உங்களுக்கு வேற எதுவும் தெரியாதா….?  எப்பப் பாரு கல்யாணம் பண்ணிக்கோ… கல்யாணம் பண்ணிக்கோன்னு… நச்சரிச்சுட்டு இருக்கீங்க…  அப்படியென்ன வயசாயிடுச்சு எனக்கு…” என சலித்தான்.

“ஏன்டா சொல்லமாட்ட…?  சின்ன பையன்னு நினைப்பா மனசுல.  உன்கூட படிச்சவனுங்கெல்லாம் கல்யாணம் ஆகி, குழுந்தை குடும்பம்னு வாழல.  ஏழு கழுதை வயசாகுது.  இப்பதான் பப்பான்னு நினப்பா மனசுல”.

திரும்பி தந்தையை பரிதாபமாக பார்த்தான்.  ப்ளீஸ் ப்பா… எப்படியாவது காப்பாத்திவிடுங்க அம்மாகிட்டயிருந்து… என இறைஞ்சினான் கண்களால்.

ஆனால் பரணியோ,  “ம்கூம்… என்னால முடியாதுடா மகனே.  ஏற்கனவே உனக்கு நிறைய சப்போர்ட் பண்ணி உங்கம்மாகிட்ட நிறைய வாங்கிட்டேன்” என்றார் முணுமுணுப்பாக அவனிடம்.

“ஹா… ஹா… அடிபலமா…” என்றான் கிண்டலாக தந்தையிடம் குனிந்து.

“டேய் மெதுவா…டா அம்மா காதுல விழப்போகுது.  அவள்கிட்ட மாட்டிவிட்டுடாத.  ஏற்கனவே என்னாலதான் நீ அவ பேச்சை மதிக்கிறதில்லன்னு திட்டிட்டு இருக்கா”.

“ஏன்ப்பா… அம்மாக்கு இப்படி பயந்து சாகறீங்க…?”

“புருஷன் பொண்டாட்டின்னா… அப்படிதான்டா…  நீயும் கல்யாணம் பண்ணிக்கோ.  அப்பதான் அதெல்லாம் உனக்கு புரியும்” என்றார் புன்னகையாக.

விசாலினி கிட்சனில் சமைத்துக்கொண்டே அஸ்வத்திடம் பேசிக்கொண்டிருந்ததால் இவர்கள் சம்பாஷணை எல்லாம் அவர் காதில் விழவில்லை.

அம்மாகிட்ட எடுத்து சொல்லுங்கன்னா… கல்யாணம் பண்ணிக்கோன்னு அட்வைஸ் பண்றீங்க என விசாலினியிடம் எழுந்து சென்றான் அஸ்வத்.

தட்டில் அவர் நறுக்கி வைத்திருந்த கேரட்டை எடுத்து வாயில் போட்டு மென்றவாறே, “இந்த வேலையில சேரும்போதே உங்களுக்கு இதுல இருக்க கஷ்ட நஷ்டமெல்லாம் சொல்லிதானம்மா… சேர்ந்தேன்.  இப்ப போய் இப்படி பேசனீங்கனா… நான் என்ன பண்றது” என்றான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு.

“இந்த வேலை ஒன்னும் ஈசியா கிடைச்சுடல ம்மா.  இது என்னோட ட்ரீம்னு உங்களுக்கு தெரியும்.  இதுல சேர நான் எவ்வளவு ஹார்ட் வொர்க் போட்டிருக்கேன்னும் தெரியும்.  அப்ப நீங்களே இப்படி பேசலாமா…”  என்றான் தாயை சமாதானப்படுத்துவது போல.

கேரட் நறுக்குவதை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தார் சில நொடிகள்.  ஏதும் பேசாமல் திரும்ப கேரட்டை நறுக்க ஆரம்பித்துவிட்டார்.

“என்னம்மா… எதுவும் பேச மாட்டேன்றீங்க…?”

…………………….

“எனக்கு மட்டும் உங்களை விட்டுட்டு இருக்கறது கஷ்டமில்லையா…?  அதான் உங்களையும் கூப்பிடறேன்”.

“ம்ப்ச்… என்னவோடா… நீ ஆசைப்பட்டயேன்னுதான் இந்த வேலைக்கு போக விட்டேன்.  எப்பப்பாரு, அடி, வெட்டு , குத்துன்னு கேட்கவே பயமாயிருக்குடா.  இதுல பக்கத்துல இல்லாம, எங்கயோ வெளியூர்ல இருக்கன்னும்போது, சில சமயம் மனசு கிடந்து அடிச்சுக்குது”.

“நீ இங்கயே இருந்தாலாவது, எனக்கு கொஞ்சம் நிம்மதியாயிருக்கும்”.

“கொஞ்ச நாள்தான்ம்மா.  நான் இங்கயே மறுபடியும் டிரான்ஸ்பர் கேட்டு பார்க்கறேன்.  இல்ல… நீங்களும் அப்பாவும் அங்க வந்திருங்க…”

“உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா… அவள் உன்னை பார்த்துப்பாள் இல்ல.  நான் இங்க அக்கடான்னு நிம்மதியா இருப்பேன் என்றார் பெருமூச்சுவிட்டபடி”.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!