Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 4.2

“பொய் சொல்ற அளவு எங்க வீட்டுல என்ன வளர்க்கள சார். என்னால உங்களுக்கு நிரூபிச்சு காட்ட முடியும்” – இலக்கியா

“உன் பேச்ச கேட்டு உன் பின்னாடி வந்தா என்னோட வருங்கால மனைவியை நானே சந்தேகப்படுற மாதிரி ஆகிடும். எனக்கு ஸ்ரீ பத்தி தெரியும். உன்கூட வந்து தான் அத நான் நிரூபிக்கணும்னு எந்த விதமான அவசியமும் இல்ல” அறையே அதிரும் வகையில் கத்தினான்.

இலக்கியாவிற்கும் அப்படியே விட மனம் இல்லை, இவன் அவள் மேல் போதையில் உள்ளான் என புரிந்து வைத்திருந்தாளே…

“அப்போ வாங்க சார், நான் சொல்ற மாதிரி ஹாஸ்பிடல்ல போதை பொருள் இருக்கானு செக் பண்ணுங்க. அப்டி இல்லனா நான் இனிமேல் இந்த ஹாஸ்பிடல் பக்கமே வர மாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.



Advertisement

அவளை சற்று நெருங்கி வந்தவனுக்கு இலக்கியாவை அடித்து துவைக்கும் ஆத்திரம், “சும்மா கத்திட்டே இருக்காத. நீ என்ன போறது? இனிமேல் உனக்கு இந்த ஹாஸ்பிடல்ல இடம் இல்ல” சொடக்கிட்டு, “வெளிய போ” என்றான் முகமெங்கும் அப்பிக்கிடந்த கோவத்தோடு.

“உங்களுக்கு அவங்க மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தா என் கூட வந்து செக் பண்றதுல தப்பில்லையே சார்”

அவ்வளவு தான் என ஆகிய பிறகு, பொய்க்காரி என்ற பட்டத்தோடு வெளியேற இலக்கியாவிற்கு விருப்பமில்லை.

Advertisement

அவள் பேசி முடிக்கும் முன்பு அவன் அறையை விட்டு வெளியேற, அவளும் அவன் வேகத்திற்கு இணையாக ஓடினாள் பின்னாலே.

Advertisement

அவனின் வேகத்தையும், அவன் பின்னால் எப்பொழுதும் இதே போல் ஓடும் ஓட்டத்தையும் அந்த மருத்துவமனைக்கு பழக்கமானதால் எவருக்கும் பெரிதாக சந்தேகம் வரவில்லை.

ஸ்டோரேஜ் ரூம் சென்று பார்க்க அங்கு எவரும் இல்லை, முக்கால்வாசி மூடி இருக்க, அதை முழுதாக திறந்துவிட்ட அர்ஜுன் அவளை பார்த்து, “இப்ப எனக்கு ட்ரக்ஸ் ஒரு டேப்லெட் அளவாவது வேணும்”

பிடிவாதமாக கேட்டு கை கட்டி நிற்க, தயங்காமல் உள்ளே சென்று பார்த்த இலக்கியாவிற்கு பகீரன ஆனது. சில நிமிடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு பெட்டி கூட இப்பொழுது இல்லை.

Advertisement

வேகமாக ஒவ்வொரு பெட்டையையும் எடுத்து எடுத்து மொத்த இடத்தையும் புரட்டி பார்த்தாள் ஐந்தே நிமிடத்தில்.

ஆனால் ஒரு மருந்து கூட தெரியாமல் போக வேகமாக அவனிடம் வந்தவள், “சார் இப்ப தான் எடுத்துட்டு போயிருக்காங்க, ப்ளீஸ் அவங்கள கூப்பிட்டு கேளுங்க உண்மை தெரிஞ்சிடும்” வேண்டினாள் அவசரமாக.

அவனோ அவளை கூர்ந்து பார்த்து, “இந்த ஹாஸ்பிடல்ல இன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள். யாருக்கெல்லாம் சொல்லணுமோ சொல்லிட்டு கெளம்பிட்டே இரு. இல்ல மறுபடியும் வந்து டிடெக்ட்டிவ் வேலை பாப்பேன்னு நின்ன, ஜெயில்ல தான் நிக்கணும்”

எச்சரித்து அர்ஜுன் தன்னுடைய அறை நோக்கி செல்ல, பின்னாலேயே, “சார் நான் சொல்றதே கேளுங்க… சார்… சார்” என கெஞ்சிக்கொண்டே ஓடினாள்.

எவரேனும் அருகே நெருங்கினால் அமைதியாக இருந்தவளை அவனும் தடுக்காமல் போக, மீண்டும் அர்ஜுன் அறைக்கு வந்து ஆவேசமாக கதவை திறந்து போக, பயத்தோடு அவனுக்கு பொறுமையாக புரிய வைக்கும் நோக்கோடு உள் நுழைந்தாள்.

“இப்ப தான் சார் பாத்துட்டு வந்து உங்ககிட்ட சொல்ல வந்தேன், அதுக்குள்ள அவங்க வேற எங்கையோ மாத்தி வச்சிட்டாங்க போல. ப்ளீஸ் சார் என்ன நம்புங்க” கண்ணீரோடு அவன் முன்னாள் வந்து நின்றாள்.

“ஏய் மறுபடியும் மறுபடியும் என்ன பேச வைக்காத, இவ்ளோ நேரம் பொறுமையா சொல்லிட்டு இருக்கேன், இனி உன்ன கொன்னே போட்டாலும் கவலை பட மாட்டேன்” – அர்ஜுன்

“என்ன கொன்னாலும் பரவால்ல, ஆனா உங்க கல்யாணத்த நான் நடக்க விட மாட்டேன். அவங்க பொய் சொல்றாங்க சார், நா… நாடகம் ஆடுறாங்க”

அவன் முகத்தை திருப்பிய பக்கம் எல்லாம் சென்று நின்றாள், “ஹாஸ்பிடல் பேர் வச்சு, அவங்க தொழிலை வளத்துக்க பாக்குறாங்க சார்” அவளை நோக்கி அடி எடுத்து அவன் வைக்க, பயத்தில் உடல் வெடவெடத்து பின்னால் சென்றது அவள் கால்களும்.

“இல்ல தெரியாம கேக்குறேன், உனக்கு அப்டி என்னடி அவ மேல வெறுப்பு? நானும் எனக்கு நிச்சயம் ஆன நாள்ல இருந்து பாத்துட்டே தான் இருக்கேனே. உன் நடவடிக்கையே சரி இல்லை. சரி சோறு போட்ட வேலைக்கும், ஹாஸ்பிடல்க்கும் உண்மையா இருக்கணும்னு ஒரு நிமிஷம் கூட தோணாதா? இல்லை உறுத்தலயா?”

“எனக்கு ஏன் சார் உறுத்தணும்? நான் எந்த தப்பு பண்ணேன்? நிம்மதியா மூணு வேலை நான் சாப்பாடு சாப்புடுறதுக்கு காரணம் இந்த ஹாஸ்பிடல். அதோட பேர் இவங்கள மாதிரி ஆளுங்களால கெட்டு போய்ட கூடாதுன்னு தவிச்சிட்டு இருக்கேன் நான்” – இலக்கியா

“அடேங்கப்பா… ரொம்ப தான் தவிக்கிற ம்மா நீ. நீ யாரு ரெண்டு வருஷம் மூணு வருசமா தெரிஞ்சவ. ஆனா ஸ்ரீய எனக்கு கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் தெரியும். இந்த மாதிரி கேவலமான வேலை பாத்து தான் சொத்து சேமிக்கணும்னு அவங்களுக்கு அவசியமே இல்ல”

அர்ஜுன் பேசுவது இலக்கியாவிற்கு கோவத்தை தூண்டியது, “காசு இருக்குறவங்களுக்கு தப்பே பண்ண தெரியாதுன்னு சொல்றிங்களா சார்?”

“தேவை இல்லனு சொல்றேன்” அழுத்தமாக அவளை தான் குற்றம் சாட்டினான்.

“உங்க பியான்ஸிய குறை சொல்றதுல எனக்கென சார் ஆக போகுது?” – இலக்கியா

“யாருக்கு தெரியும் காசு பறிக்க கூட இந்த மாதிரி மூவ் பண்ணலாம் நீ” உடைத்து போட்டது அவன் வார்த்தைகள் இலக்கியாவின் மனதை.

விழிகள் கலங்கி கண்ணீர் பெருகி வர, “நீங்க பொண்ணு ஆசைல மயங்கி கெடக்குறிங்க சார், அதான் சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்க முடியல”

சுள்ளென அவள் வார்த்தைகள் அவன் மூளையை குத்த அவள் கழுத்தை பிடித்து பின்னாலிருந்த சுவற்றில் அவளை தள்ளி நிறுத்தினான்.

வேதனை தெறிக்கும் அந்த கண்களை உன்னிப்பாக பார்த்தவன், “பொண்ணுன்னு கூட பாக்க மாட்டேன் கொன்னு பொதைச்சிடுவேன்” உறுமினான்.

“உண்மைய தானே சார் நான் சொல்றேன், உங்களுக்கு அஞ்சுஸ்ரீ பைத்தியம் புடிச்சிடுச்சு. நாளைக்கு உங்க கண்ணு முன்னாடியே எல்லா வேலையும் நடக்கும், அப்பயும் இதே மாதிரி அமைதியா தான் இருப்பிங்க. என்ன பண்றது நீங்களும் சாதாரண ஆம்பள தானே?”

அவன் கைகள் தந்த வலியோடு இளக்காரமாக பேசியவளை அவ்விடத்திலே வெட்டி போடும் ஆவேசம் அவனிடம். தன்னுடைய கைகளை பற்றியிருந்தவள் கையை வலிக்க பிடித்தவன், “என்னடி தெரியும் உனக்கு என்ன பத்தி? ஆஹ்?”

இன்னும் கையை முறுக்கினான், வலியில் இலக்கியா கண்களை மூட அதையும் பொருட்படுத்தவில்லை அந்த மிருகம்.

அவனின் கர்வத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்பவளை உரு தெரியாமல் அழிக்க தோன்றியது, “என்ன பாத்து இன்னைக்கு இளக்காரமா சிரிச்ச இதே வாய் இன்னும் ரெண்டே நாள்ல என் முன்னாடி மண்டி போட்டு கதறி அழுக வைக்கவா?”

அவளிடம் எந்த பதிலும் இல்லை, “என்ன பத்தி பேச நீ யாருடி மொத? ஸ்ரீ என்…” சட்டென கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்து திரும்பினர் இருவரும்.

உள்ளே நுழைந்த அவன் தாத்தாவை பார்த்ததும் அர்ஜுன் இலக்கியாவிடமிருந்து கையை விளக்கி தள்ளி நிற்க, அவர் பின்னாலே வந்தனர் அவன் வீட்டு ஆட்களும்.

“என்ன அர்ஜுன் இது?” ராமகிருஷ்ணன் குரலை உயர்த்தி பேசுவது இதுவே முதல் முறை, அதுவும் பிரியமான பேரனிடம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் போர்டு மீட்டிங் இன்று. ராமகிருஷ்ணா குடும்பத்தை சேர்ந்தவர்களும், இதர முதலீட்டாளர்களும் பங்குபெறும் இந்த சந்திப்பை அர்ஜுனின் திருமணத்தை காரணம் காட்டி, அர்ஜுன் தந்தை வரதராஜன் அடுத்த மாதம் வைக்கலாம் என கூற, ராமகிருஷ்ணன் தான் எதையும் தள்ளி போட வேண்டாமென்று இன்றே ஏற்பாடு செய்திருந்தார்.

வீட்டினர் அனைவரும் கூடியிருக்க, மற்ற முதலீட்டாளர்களும் வந்திருக்க சில நேரம் அர்ஜுன் வருவான் என எதிர் பார்த்திருந்த வீட்டினருக்கு நேரம் போவது தெரிந்து அவன் கைபேசிக்கு அழைத்து பார்த்தனர்.

அந்த நேரம் அர்ஜுன், இலக்கியாவோடு ஸ்டார் ரூம் சென்றிருக்க கைபேசி அவன் அறையில் தான் இருந்தது. வீட்டினர் அந்நேரம் அழைத்து ஏற்காமல் போயிருக்க வேலையாக இருப்பான் என விட்டனர்.

அதுவே இன்னும் நீடிக்க, விளையாட்டாக அர்ஜுன் என்ன செய்கிறான் என அவனுடைய அறையிலிருந்த கேமராவை அந்த அறையிலிருந்த பெரிய ப்ரோஜக்டர் திரையில் ஒளிரவிட, சரியாக இலக்கியாவை நெருங்கி நின்று அவன் பேசுவது தெரிந்தது.

அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க அவர்கள் பேசுவது கேட்கும் விதத்தில் அந்த காணொளி இல்லாமல் போனது தான் அர்ஜுனின் கெட்டநேரம். பார்ப்பவர்களுக்கு வேறு மாதிரி தெரிந்தது.

“என்ன ராமகிருஷ்ணன் சார், உங்க வீட்டு மருமக டாக்டர்னு நினைச்சேன். நர்ஸ்-னு சொல்லவே இல்ல” ஒருவர் சூசகமாக கேட்க படித்தவர்கள் இருந்த சபையில் முணுமுணுப்பு இல்லை.

“வருண் ஆப் பண்ணு” பானு மகனுக்கு உத்தரவிட, “அர்ஜுனுக்கு புடிச்ச லைப்ப அமைச்சு குடுக்குறதுல தப்பில்ல பானு. சொசைட்டி பாத்து பிள்ளைங்க வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிடாதீங்க” என்றார் ஒரு பெண்மணி.

“ராமகிருஷ்ணன் எல்லாத்தையும் பாத்துக்குவான், அவன் வளர்ப்பும் தப்பாகாது” வேறொருவர் கூற வருண் கேமராவை அணைத்திருந்தான்.

“மீட்டிங் அடுத்த மாசம் வச்சுக்கலாம், எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க” என ராமகிருஷ்ணன் அங்கிருந்தவர்களிடம் கூற, அனைவரும் தாங்கள் எதையும் பெரிதாக நினைக்கவில்லை என பெருந்தன்மையோடு விலகினர்.

அவர்கள் சென்றதும் பேரனை பார்க்க கோவமாக வந்த ராமகிருஷ்ணனின் மனதில் பேரன் மேல் துளி கூட சந்தேகம் வரவில்லை. ஆனாலும் அந்த பெண்ணிடம் பேசி தான் முடிவுக்கு வர வேண்டுமென கதவை திறக்க அவளை நெரித்துக்கொண்டிருந்தான் கை கொண்டு.

“ஒரு சின்ன பிரச்சனை, நான் பாத்துக்குறேன்” முகம் கோவத்தில் இன்னமும் சிவந்திருந்தாலும், தாத்தாவிடம் பேசுவதால் வார்த்தைகளில் அமைதியை காட்டினான்.

“என்னடா சின்ன பிரச்சனை? உன் முகமும் சரியில்ல, அந்த பொண்ணு முகமும் சரியில்லை” – வரதராஜன்

“ப்பா, இதுல நீங்க தலையிடாதீங்க. அவ்ளோ தா பிரச்சனை முடிஞ்சது” முகத்தை வேறு பக்கம் திருப்பி வைத்தான் அர்ஜுன்.

“அத அந்த பொண்ணு சொல்லட்டும் அர்ஜுன்” ராமகிருஷ்ணன் இலக்கியாவை வந்ததிலிருந்தே கவனித்துக்கொண்டு தான் உள்ளார், அவள் முகமே சரியில்லை. இன்னமும் கணங்களில் கண்ணீர் நின்றபாடில்லை.

“அவ பேசுனா மொத்தமும் பொய் தான் தாத்தா வரும். நீங்க எல்லாரும் போங்க என்னால இத சமாளிக்க முடியும். எல்லாரும் மொத்தமா இங்க கூடி நின்னா வெளிய தப்பா நியூஸ் போகும். போங்க” – அர்ஜுன்

“ஏற்கனவே போச்சுடா… நீ பண்ண எல்லாமே வெளிய ஏற்கனவே தெரிஞ்சு போச்சு. தலையை தூக்க முடியல” ஆத்திரமாக மகனை அதட்டினார் வரதராஜன்.

இலக்கியா விழிகளை சோர்ந்து தலையை கவிழ்த்து மௌனமாய் அழத் துவங்கிவிட்டாள்.

“டேட் என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதீங்க. ஏற்கனவே செம்ம கோவத்துல இருக்கேன்” – அர்ஜுன்

“உன் கோவத்தை தூக்கி குப்பைல போடு, அப்டி என்னடா ஒரு பொண்ணு கூட இவ்ளோ நெருங்கி நிக்கிற? அதுவும் வேலை செய்ற இடத்துல?” – பானு

“மாம் அவ…” – அர்ஜுன்

“அர்ஜுன் நீ அமைதியான இரு” பேரனை அடக்கி இலக்கியா அருகில் சென்றார், “நீ சொல்லு ம்மா, இங்க என்ன நடக்குது” என்றார் பொறுமையாக.

“பொய்க்காரி தாத்தா அவ…” திரும்பி பேரனை பார்த்த பார்வையில் அவன் அமைதியாகிவிட்டான்.

ஆயிரம் சிந்தனைகள் அவளுள், தந்தை பற்றி, தன் எதிர்காலம் பற்றி, ஆனால் இந்த நொடி பல ஆயிரம் மனிதர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் தரும் அந்த மருத்துவமனையின் பெயரும், அவள் மனம் துடியாய் துடிக்கும் அர்ஜுனின் எதிர்காலத்தை மட்டுமே நினைத்தது.

“நா… நாங்க லவ் பண்ணோம்” எதிர்பாராமல் வந்த இலக்கியாவின் பேச்சில் எவரையும் பார்க்காமல் ஓங்கி கன்னத்தில் அறைத்திருந்தான் அர்ஜுன்.

“ச்சீ… அசிங்கம் புடிச்சவ” அத்தனை அசூசை அவன் முகத்தில் அவளை பார்த்து.

“அர்ஜுன் என்ன இது பொண்ணு மேல கை வைக்கிறது?” பானு மகனை அதட்ட, அர்ஜுன் இன்னும் அவளை என்ன செய்யலாம் என்ற ஆத்திரத்தில் இருந்தான்.

இலக்கியா தரையில் மடிந்து அமர்ந்து முகத்தை மூடி அழத் துவங்கிவிட அர்ஜுனை தவிர அனைவருக்கும் அவள் மேல் இரக்கமே தோன்றியது. ஆனாலும் அர்ஜுனின் அத்தை பரிமளா,

“என்ன ம்மா இது, யாரு மேல பலி போடுற, அவன் எங்க வீட்டு வளர்ப்பு. யாரும் நம்பி ஏமாத்துற குணம் இருக்காது அவனுக்கு” என்றார் கோவமாக.

“அப்ப ஏன் உன் மருமகன் அந்த பொண்ணு பக்கத்துல அவ்ளோ நெருக்கமா நின்னான்?” வரதராஜன் மகன் மேல் கோவத்தை திருப்பினார்.

“வேற ஏதாவது காரணம் இருக்கும் மச்சான், நம்ம அர்ஜுன் தப்பு பண்றவன் இல்ல” பரிமளாவின் கணவர் சுந்தராஜன் அர்ஜுனுக்கு ஆதரவு கொடுத்தார்.

“அப்போ அந்த பொண்ணு கண்ணீருக்கு என்ன பதில் சொல்ல போறீங்க எல்லாரும்?” வரதராஜன் கேள்விக்கு,

“அவ தலைல அவளே மண்ண அள்ளி போட்டா அதுக்கு நான் பொறுப்பேத்துக்க முடியுமா?” எரிச்சலாக பதில் சொன்னான் அர்ஜுன், “எல்லாம் இவளால வந்தது. போக சொல்லுங்க இவளை இங்க இருந்து”

அந்த இடத்தில் மௌனம் வியாபிக்க, “அந்த பொண்ணு இனி எங்கையும் போக மாட்டா?” ராமகிருஷ்ணன் அழுத்தமாக பேரனுக்கு சொல்ல, மற்றறவர்களுக்கு பயம் எடுத்தது.

இலக்கியாவின் நோக்கமும் ராமகிருஷ்ணன் மனதை தான் கூறிய வார்த்தை சென்றடைய வேண்டும் என்பது மட்டுமே இருக்க. அது சென்றடைந்த செய்தி உணர்ந்து இன்னும் அழுதாள்.

“ப்பா நீங்க என்ன பேசுறீங்கனு தெரிஞ்சு தான் பேசுறிங்களா? தப்பு ப்பா” பீதியானார் பரிமளா.

“மாமா வேணாம் மாமா, அர்ஜுன் காலத்துக்கும் இத ஏத்துக்க மாட்டான்” விழி நீரோடு மகனின் எதிர்காலம் தந்த பயத்தில் மாமனாரிடம் கெஞ்சினார் பானு.

அர்ஜுன் வெறி கொண்டு இலக்கியாவை பார்க்க அவள் உடல் குலுங்குவதை தவிர வேறு எந்த அசைவும் இல்லை, செத்து மடிந்து போனாள் உள்ளுக்குள்.

“நான் முடிவு பண்ணது பண்ணது தான். குறிச்ச நாள், குறிச்ச நேரத்துல இந்த பொண்ணுக்கும் அர்ஜூனுக்கும் தான் கல்யாணம், யாரோட விருப்பமும் எனக்கு தேவையில்லை” அர்ஜுனை பார்த்தவர், “இவனையும் சேர்த்து தான் சொல்றேன்”

How is the chapter? Comment Plz makkale….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!