Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 17

இனிமையான இந்த பயணம் அப்படியே தொடாராதா என்று இருந்தது இருவருக்கும்.  பாஷையில்லை.  பார்வையில்லை.  ஆனாலும் கண்ணுக்கே தெரியாத மெல்லிய நூலிழை போன்ற ஸ்வரம் இருவரையும் இணைத்து இசைத்து கொண்டிருந்தது.

தம்மை மறந்து உணர்வுக்குள் ஆட்பட்டிருந்த இருவரின் சுய உணர்வையும் பின்னால் வந்த காரின் ஹாரன் சத்தம் தட்டி எழுப்பி விட்டது.

அருந்ததிக்கு மெல்லிய புன்னகை. தன்னையே நினைத்து, இலேசாக  முன்நெற்றியில் தட்டிக் கொண்டாள்.

அஸ்வத்துக்கும் முகத்தில் வெட்கம்.  திரும்பி அவன் பக்க கார் கதவின் கண்ணாடி வழியாக சாலையைப் பார்த்து, சிரித்துக் கொண்டான்.   அதே புன்னகை முகத்தில் தவழ அருந்ததியைத் திரும்பி பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்து அவனை திரும்பி பார்த்தவளது முகத்திலும் முறுவல்.



Advertisement

நிமிடத்திற்கும் மேல் அவனையே விடாமல் பார்த்தவளின் பார்வையில் உள்ளம் கனிந்தவன், புருவங்களை உயர்த்தி சைகையால் என்ன என்றான் கேள்வியாக.  ஒன்றுமில்லை என தலையசைத்து திரும்பிக் கொண்டாள் சாலையைப் பார்ப்பது போல்.

“அருந்ததி…”

அவனை திரும்பி பார்த்தாள்.

Advertisement

“அம்மா அப்பாகிட்ட அக்காவை பேச சொல்லியிருக்கேன்.  நீ ஓகே சொன்னன்னா உங்க வீட்டில வந்து பேச சொல்லுவேன்” என்றான் ஆசையாக.

Advertisement

“வீட்லயா…?” என இலேசான அதிர்வு அவளது முகத்தில்.  எதுக்கு இவ்வளவு பாஸ்டா என தான் இருந்தது.

“ஏன் மா..?  என்ன பயம்…?”

அருந்ததிக்கும் ஆசைதான்.  ஆனால் ராஜேந்திரனைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியும்.  அவரது சம்மதம் அவ்வளவு ஈசியாக கிடைக்குமா…?  அது தெரியாமல் என்ன சொல்லுவாள்?

Advertisement

“ம்கூம்.  ஒன்னுமில்ல.  கொஞ்சம் டைம் குடுங்க.  நானே வீட்ல பேசறேன்.”

அஸ்வத் அவளது பேச்சை கேட்டு காரை ஓரமாக நிறுத்தி விட்டான்.

“ஏன்…?  என்னாச்சு, நிறுத்திட்டீங்க…?”

“கிளம்பிடலாம்.  அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் ஓபனா பேசனும்”.

“அவசரப்பட வேணாமே.  வீட்ல பேசிட்டு…” என அவள் தயங்கினாள்.

“உன் பயம் புரியுது அருந்ததி.  உன் பீலிங்ஸ் எல்லாம் புரியுது.  பெரியவங்க சம்மதம் இல்லாம நம்ம கல்யாணம் நடக்காது.  கவலைப்படாத.  அதுல எனக்கும் விருப்பம் இல்ல”.

“என் அம்மா அப்பா வந்து முறைப்படி உன்னை பொண்ணு கேட்பாங்க. உங்க வீட்ல இருக்கறவங்களை நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.  ம்ம்…  பயப்படாத…” என்றான் அவளை தைரியமூட்ட.

“எனக்கு உன் விருப்பம் தான் முக்கியம்.  அது பர்ஸ்ட் தெரியனும்” என்றான் காதலாக அவளைப் பார்த்து.

ஒன்றும் சொல்ல முடியாமல் தலையை குனிந்திருந்தாள்.  பெண்ணுக்கு வெட்கமாக இருந்தது மனதை சொல்ல.  கூடவே தயக்கமும் இருந்தது.  மனதில் ஆசை இருந்தாலும், இதெல்லாம் ஒத்து வருமா என தடுமாற்றமும் இருந்தது.  இப்படி எல்லாம் சேர்ந்து அவளை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.

“ஹனி…”

“ம்ம்…” என நிமிர்ந்தாள்.

அவளைதான் பார்த்திருந்தான்.  அந்த கருவிழிகள் இரண்டும் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தது.

அவளது மௌனத்திற்கான காரணம் அவனுக்கு புரிந்தாலும், இதற்கு மேல் இதனை ஒத்திப் போடுவதில் அவனுக்கும் விருப்பமில்லை.  ஆதலால் இன்று அவளிடம் நேரிடையாக பேசிவிடுவது  எனதான் காத்திருந்தான்.  சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவனுக்கு ஒத்து வந்திருந்தது.

“ஏதாவது பேசுடா…?”

“என்ன பேசறதுன்னு தெரியல…?”  உண்மைய சொல்லனும்னா… பயமாவும் இருக்கு…”

“உன்னோட மனசு புரியுது.  ஆனால் எனக்கு இதுக்குமேல தள்ளிப் போட முடியும்னு தோணல.  எனக்கு உன் மனசுல நீ என்ன நினைக்கறன்னு தெரியனும்.  ப்ளீஸ்…”

…………

“என்னோட… காதலியா, மனைவியா, வாழ்க்கைத் துணைவியா…, என் ஆயுசுக்கும் நீ வேணும் ஹனி”.

“என் வாழ்நாள் முழுசுக்கும், என் கூட வர சம்மதமா… ஹனி” என்றான் கரகரப்பான குரலில்.

எதிரே இருப்பவனின் ஒவ்வொரு சொல்லும் அவள் உயிரை மெழுகாய் உருக்கிக் கொண்டிருந்தது.

ஆசை இருந்தாலும், பயமும் இருந்தது வீட்டை நினைத்து.

“அருந்ததி…?”

“ஏதாவது சொல்லுடா.  நீ இப்படி அமைதியா இருக்கறத பார்க்க பார்க்க எனக்குதான் ஹார்ட் பீட் எகிறுது…”.

எங்கே மறுத்து விடுவாளோ என்ற பயமும் இருக்கதான் செய்தது அவனுக்கு.

அவனது பேச்சைக் கேட்க கேட்க அவளுக்குள்ளும் இதயம் தாறுமாறாக குதித்துக் கொண்டிருந்தது.

தயங்கியபடியே அவனது கண்களை மெல்ல ஏறிட்டு பார்த்தாள்.  அவ்வளவுதான் அவனது காந்தப் பார்வையில் வசியம் செய்தது போல தானாகவே தனது கைகளை அவன் கைகளில் ஒப்படைத்து, தலையை இலேசாக மேலும் கீழும் அசைத்து தனது சம்மதத்தை தெரிவித்தாள்.

“ம்கூம்.  எனக்கு இது பத்தாது.  உன் வாய் திறந்து உன்னோட சம்மதம், எனக்கு வேணும்…” என்றான் பிடிவாதமாக.

அஸ்வத்தின் பிடிவாதத்தில் வெட்கம் வந்து முகத்தை தாழ்த்திக் கொண்டாள்.

“ப்ளீஸ்… ஹனி” என்றான் விடாக்கண்டனாக.

“ஓகேங்க…”

“ஓகேலாம் பத்தாது.  வாய திறந்து சொல்ற நீ.  ப்ளீஸ் மா…” என்றான் ஹஸ்கி வாய்சில் குழைவாக.

அவளால் குனிந்திருந்த தலையை நிமிர்த்த முடியவில்லை.  வெட்கம் பிடுங்கித் தின்றது.  அவனது கையில் ஒப்படைத்திருந்த தனது கையின் மேல் பார்வையை பதித்தவள், மெல்ல அவனது கண்ணுக்கு நிமிர்த்தியிருந்தாள் தனது கண்களை.

ஒரு நொடி மின்சாரம் தாக்கியதுபோல இருவரது பார்வையும் கட்டுண்டு பிரிந்தது.  அந்த ஒரு க்ஷணம் இதயம் நின்று திரும்ப துடிப்பதுபோல இருந்தது பெண்ணுக்கு.

எப்படி சொல்வது என தெரியவில்லை.  வார்த்தைகளும் வரவில்லை.  குரல் வேறு தொண்டைக்குழிக்குள் மாட்டிக் கொண்டு சதி செய்தது.

“க்கும்…  அ..து… எ…னக்….கும் உங்க…ளை பிடி….ச்சி….ருக்கு” என அவனைப் பார்த்து தன்னை ஒப்பு கொடுத்தவள் கூச்சம் தாங்காமல் பார்வையை தாழ்த்தியிருந்தாள்.

“ஹனி…..” அவனுக்கே கேட்காத ஹஸ்கி வாய்சில்.

“ம்ம்….” என முனகினாள்.

“இங்க பாரு”.

“ம்கூம்…”

“என்னைப் பாரேன்…”

“சொல்லுங்க” என நிமிர்ந்தாள்.

“வீட்ல பேச சொல்லவா… கல்யாணம் பண்ணிக்கலாமா…?”

“ம்ம்…”

“லவ் யூ டா.  லவ் யூ ஹனி”. என அவள் கைகளில் தன் இதழ்களை பதித்தான்.  அவனது இதழ்கள் அவளது கைகளில் பட்ட நொடி அவளது உடலோடு உள்ளமும் சேர்ந்து சிலிர்த்தது.

அவளையே கண் எடுக்காது சில கணங்கள் பார்த்தவன், அவளது கையைப் பிடித்து தனது விரலிலிருந்த மோதிரத்தை கழற்றி அவள் விரலில் மாட்டிவிட்டான்.

“இப்ப எதுக்கு இதெல்லாம் வே….ணாமே….” என பதறி மறுத்தவளை, “எப்ப இருந்தாலும் நீதான் என் பொண்டாட்டி.  இதுல எந்த மாற்றமும் இல்ல.  பயப்படாத”.

“நம்மோட லைப்ல இது பிரஷியஸ் மொமன்ட்டா.  இதை லைப் புல்லா நாம மறக்காம ஞாபகம் வச்சிருக்க மாதிரி ஏதாவது கிப்ட் பண்ணனும்னு ஆசையா இருக்கு.ப்ளீஸ்…” என மோதிரத்தை மாட்டிவிட்டிருந்தான்.

மோதிரம் மாட்டிய விரலை ஆசையாக வருடிக் கொடுப்பதும், தடவிப் பார்ப்பதுமாக இருந்தான் சில நிமிடங்கள்.

எதுவும் பேச முடியவில்லை அவனால்.  அவளுக்கும் அப்படியே.

அவன் தனது கையை இன்னும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்ததில் நெளிந்து கொண்டிருந்தவள், அதற்குமேல் தாள மாட்டாமல் கையை வெடுக்கென இழுத்துக் கொண்டாள்.

“ஹே ஒன்னுமில்லமா.  ஈஸி ஹனி…” என்றான் புன்னகைத்துக் கொண்டே.

அவளுக்கும் புன்னகைதான் அவனது ஹனி… யைக் கேட்டு.  இப்படியெல்லாம் யாரும் அவளை அழைத்ததில்லை.  அவன் கூப்பிட்டது வித்தியாசமாகவும் இருந்தது. பிடித்தும் இருந்தது.

அவளை அவள் வீட்டில் இறக்கிவிட்டு, அஸ்வத் கிளம்பிவிட்டான்.

இங்கு பிறந்தநாள் கோலாகலம் எல்லாம் முடிந்து அனைவரும் சென்றிருந்தனர்.  பூஜாவின் மாமியார் மாமனார், அம்மா, அப்பாவைத் தவிர வந்திருந்த எல்லோரும் கிளம்பியிருந்தனர்.

சைந்தவியும் காலையிலிருந்து போட்ட ஆட்டத்தால் தந்தையுடன் உறங்க சென்றிருந்தாள்.  பூஜாவின் மாமியார் கனகாவும் மாத்திரை போட்டு, கணவருடன் உறங்க சென்றிருந்தார்.

பூஜாவின் அப்பா பரணிதரன் ஹாலில் இருந்த சோபாவிலேயே படுத்துவிட்டார்.  அஸ்வத் கூட வேலையிருக்கிறதென அருந்ததியை இறக்கிவிட்டு அங்கிருந்தே போன் செய்து வீட்டிற்கு சொல்லிவிட்டு சென்றிருந்தான்.

அலங்கோலமாக இருந்த வீட்டை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள் பூஜா.  அவளுடன் சேர்ந்து ஒத்தாசை செய்து கொண்டிருந்தார் விசாலினி.  அவருக்கும் காலையிலிருந்து உட்கார நேரமில்லை.  பின் மகள் வீட்டுக்கு வந்தால், அவருக்கு ஓய்வே இருக்காது.

அம்மாவைப் பார்த்ததும் செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விடுவாள் பூஜா.  அவர் தான் மகளுக்கு, மருமகனுக்கு, பேத்திக்கு என பார்த்து பார்த்து செய்வது எல்லாம்.

அம்மா வீட்டுக்கு சென்று சீராட வேண்டியதை எல்லாம் இங்கேயே செய்து கொள்வாள்.  இன்றும் காலையில் இருந்து சமையல் வேலை, வந்திருந்தவர்களை கவனிக்கிறது என பூஜாவுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறார்.  அவரது உடம்பும் ஓய்வு கேட்டு கெஞ்சியது.

பூஜாவுக்கும் அதற்கு மேல் முடியவில்லை.  ஓரளவு எல்லாம் ஒதுக்கி வைத்தவள், “ம்மா… போதும் வா.  நாளைக்கு பார்த்துக்கலாம்.  இதுக்கு மேல முடியாது” என விசாலினியை அழைத்துக் கொண்டு படுக்கச் சென்றாள்.

படுக்கையில் படுத்ததும்தான் கால் வலி தெரிந்தது விசாலினிக்கு.  காலை குறுக்கி தன் கைகளாலேயே அழுத்திப் பிடிக்க ஆரம்பித்தார் வலி தாங்காமல்.

“ம்மா என்ன ஆச்சு?  கால் வேற வீங்கிருக்க மாதிரியிருக்கு.  இதுக்குதான் சொன்னேன் நீ முன்னமே போய் படுன்னு.  கேட்டாதான” என வாத கேசரி தைலத்தை எடுத்து வந்து அவரது பாதம் கெண்டை கால் எல்லாம் தேய்த்து விட்டு பிடித்துவிட்டாள்.

“நான் போய் சந்துவையும் அவங்க அப்பாவையும் பார்த்துட்டு வரேன்.  என்னைக் காணம்னு தூக்கத்துல எழுந்து அழுதாலும் அழுவாள்.  நீ தூங்கும்மா.  நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்.  அவரும் நல்லா அசந்திருப்பாரு…” என கூறிக்கொண்டே  அவர்களது அறைக்கு வந்து பார்த்தாள்.

அங்கு அப்பாவும் பொண்ணும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.  ஹப்பா நல்லா தூங்குறாங்க.  நிம்மதியா போச்சு என சத்தமில்லாமல் கதவைத் சாத்திவிட்டு திரும்ப வந்து விட்டாள்.

“என்னமா தூங்கலையா நீ…?”

“ம்ம்…  தூங்கறேன்.  பாப்பா தூங்கிட்டாளா…?” என்றார் விசாலினி.

“அப்பாவும் பொண்ணும் நல்லா தூங்கறாங்க…”.

“குழந்தைக்கு சுத்தி போடனும்னு நினைச்சேன்.  இருந்த வேலையில மறந்துட்டேன்.  நாளைக்காவது ஞாபகப்படுத்து.  சுத்திப் போட்டுடறேன்.  அந்த ட்ரெஸ்ல அப்படியே பொம்மை மாதிரி இருந்தாள் பார்க்க.  எல்லார் கண்ணும் அவள் மேலதான்” என்றார் பெருமையாக.

“ம்ம்… நாளைக்கு சொல்றேன்.  சுத்திப்போடு.  இப்ப தூங்கு.  மணி ஆவுது…” என விளக்கை நிறுத்திவிட்டு வந்து அவர் பக்கத்திலேயே படுத்துவிட்டாள்.

விசாலினி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார்.

“அம்மா தூக்கம் வரலனா, உன்கிட்ட ஒன்னு சொல்லவா…?”

“என்ன…?” என்றார் கொஞ்சம் சத்தமாக.

“போ… நீ கேட்கறத பார்த்தாலே பயமாயிருக்கு.  நீ இப்படி மூஞ்ச வச்சிருந்தனா… எனக்கு சொல்ல வந்ததுகூட மறந்து போயிடும்”.

“ம்ப்ச்.  இவள் வேற.  கால் வலி பூஜா.  அதான்.  காலையிலிருந்து வேலைப் பார்த்ததுல முகம் களைச்சிருக்கு.  இது ஒரு பேச்சா.  ஒழுங்கா என்ன சொல்ல வந்தியோ, சொல்லு பூஜா”.

“சைந்தவி மிஸ் இருக்காங்க இல்ல.  இன்னைக்கு கூட நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்களே”.

“ம்ம்… ஆமாம்.  அதுக்கென்ன இப்ப…”

“இல்ல,  அவங்களை பத்தி நீ என்ன நினைக்கிற?” என்றாள் நைச்சியமாக.

“புரியல.  என்ன கேட்கனுமோ அத ஒழுங்கா புரியற மாதிரி கேளு பூஜா.  அவங்கள பத்தி நினைக்க என்ன இருக்கு…?” என்றார் குழப்பமாக பூஜாவைப் பார்த்து.

“இல்லம்மா சும்மாதான் கேட்டேன்.  பார்க்க எப்படியிருக்காங்கன்னு…?”

விசாலினிக்கு இதென்ன சம்மந்தம் இல்லாம அந்த பொண்ண பத்தி கேட்கிறா என நினைத்தவர், “அவங்களுக்கென்ன பார்க்க நல்லாயிருக்காங்க.  அழகா இருக்காங்க…”.

“பொண்ணு பார்க்க சாந்தமாவும் இருக்கா…” என்றார் உபரியாக.

“நம்ம அஸ்வத்துக்கு அந்த பொண்ணை பார்க்கலாமா…?” என கொக்கி போட்டாள்.

“நம்ம ஆளுங்களா…?  சொல்லவேயில்ல நீ…?” என்றார் ஆர்வமாக.

“அய்யோ அம்மா, உடனே நம்ம ஆள் தானா?  ஏன் வேற இருக்க கூடாதா?” என முறைத்தாள் தாயை.

“நான் எப்போ அப்படி சொன்னேன்.  நீ இவ்வளவு சொல்றயே, உனக்கு தெரிஞ்சவங்களோன்னு கேட்டேன்”.

“அவங்கள சைந்தவி ஸ்கூல்ல வச்சு தான் பழக்கம்.  அடிக்கடி பார்த்து பேசறேன் இல்ல.  அதுல தெரியும்.  மத்தபடி அவங்க யார் என்னன்னு எல்லாம் தெரியாது”.

“நான் பழகன வரைக்கும் ரொம்ப நல்லவங்க.  நல்லா பேசுவாங்க.  எனக்கு பிடிச்சிருந்தது.  அஸ்வத்துக்கு கட்டினா நல்லாயிருக்குமேன்னு நினைச்சேன். அதான் உன்கிட்ட கேட்டேன்”.

“ம்ம்… நல்லாதான் இருக்கும்.  உன் தம்பி ஒத்துக்கனுமே…” என்றார் சலிப்பாக.

“நாம வேணா அந்த பொண்ணு வீட்ல பேசி பார்க்கலாமா….?”

“எதுக்கு ஏற்கனவே நான் பார்த்த பொண்ணை, என்னை கேட்காம ஏன் பார்த்தீங்கன்னு வேணாம்னு கெடுத்து விட்டுட்டான்.  மறுபடியும் அவனுக்கு தெரிஞ்சு தையோ தக்கன்னு குதிக்கறதுக்கா.  இனி அவனே சொல்லாம, நான் எதுவும் செய்யறதாயில்ல…” என்றார் உறுதியாக.

அச்சோ அஸ்வத் உன் பாலை உனக்கே திருப்பி விடறாங்கடா..  அம்மா…  கஷ்டம்தான் தம்பி உன் நிலைமை.

“அதுக்காக, அப்படியே விட்டா எப்படி ம்மா?  அவனுக்கு வயசு ஆகுதுல.  நீ தான் எதாவது ஸ்டெப் எடுக்கனும்…”.

“அதுதான் ஆகுதே கழுதைக்கு ஆகற மாதிரி.  அதுக்கு என்ன பண்ண சொல்லற?  அவனை கேட்காம நாமளா எதாவது பண்ணோம்னா, பெரிய இவன் மாதிரி பேசுவான்”.

பூஜாவுக்கு இவரது பேச்சை கேட்டு எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

இருந்தாலும் அவளும் விடாமல் “எனக்கென்னவோ இந்த பொண்ணுக்கு உன் பையன் ஒகே சொல்வான்னு தான் தோணுது” என்றாள் இழுவையாக.

விசாலினி அவளை சந்தேகமாக பார்த்தார்.  “ஏய் உண்மையை சொல்லு. நீயும் உன் தம்பியும் சேர்ந்து எதாவது கேம் ஆடறீங்களா…?”

பூஜாவுக்கு பக்கென இருந்தது.  ரொம்ப ஓவரா பேசிட்டமோ என.  இருந்தும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் “என்ன…. கேம்…?” என முறைத்தாள்.

“ஒழுங்கா உண்மைய சொல்லு.  ஏதாவது லவ் பண்றாங்களா…? இரண்டு பேரும்…” என்றார் இன்னும் அழுத்தமாக.

பூஜா, அச்சோ இந்த அம்மா இவ்ளோ புத்திசாலியா இருக்க கூடாது.  போலீஸ்காரனுக்கே அம்மான்றது சரியா நிரூபிக்கறாங்க.  கரெக்டா பாயிண்டை பிடிச்சிட்டாங்க… என உஷாரானாள்.

“ம்க்கும்… உன் பையன்தான. அவன் பொண்ணுங்களையே பார்ப்பேனான்னு, சாமியார் கணக்கா சுத்திட்டு இருக்கான்.  இதுல லவ் பண்ணிட்டாலும். நல்ல ஆளை பார்த்து சொன்ன பாரு நீ…”

“அதானே.  அதை சொல்லு முதல்ல.  ஊர் உலகத்தில எல்லாம் எப்படி எப்படி ஆம்பிளை பிள்ளைங்க இருக்கு.  நானும் பெத்து வைச்சிருக்கேனே சாமியார் கணக்கா…”

“வயசு பையன் மாதிரியா இருக்கான்.  இவன் ஈடு பசங்க எல்லாம் கல்யாணம் குடும்பம்னு செட்டில் ஆகிட்டாங்க.  இவனைப்பாரு. அப்படிதான் ஏதாவது பொண்ணைப் பார்த்து லவ்வாது பண்ணி தொலைச்சானா”.

“அப்படியிருந்தாலும் சரி போவுது போன்னு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிருப்பேன்.  அதுக்கும் துப்பு இல்ல.  சரியான பேக்க பிள்ளையா பெத்து வச்சிருக்கேன்”.

“சரியான மாக்கான்டி உன் தம்பி.  எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கான் பாரு” என திட்டிக் கொண்டிருந்தார்.

பூஜாவுக்கு சிரிப்பு அவரது பேச்சைக் கேட்டு.  அம்மா உன் பையன் உன்னையும் பார்ப்பான்.  என்னையும் பார்ப்பான்.  அவனா உனக்கு மாக்கான்.  அவனைப் போய் பேக்குன்னு சொல்றயே.

சரியான காரியக்காரன்.  அமுங்கினி மாதிரி இருந்துட்டு என்கிட்டயே இப்பதான் சொல்றான்.

உன் பிள்ளைய நீதான் மெச்சிக்கனும்.  செம அழுத்தக்காரன்.  விட்டா நம்மளை வேணா பேக்காக்கிடுவான்.

அவன் லவ் மேட்டற இவ்வளவு நாள் எனக்கே சொல்லாம மறைச்சு வச்சிருந்துட்டு, காரியம் ஆகனும்ன உடனே காலைப் பிடிக்கிறான் உன் பிள்ளை.  இதுல கெத்து வேற ஐயாவுக்கு.

பார்த்தேன்.  பிடிச்சிருந்தது.  அதான் உன்னை அம்மாகிட்ட பேச சொல்றேன்னு.  எங்க அவரு லவ் வெளியில சொன்னா கெத்து குறைஞ்சிடும்னு என்கிட்டயே மெயின்டெயின் பண்றான்.  அவன் உனக்கு மாக்கானா.

“என்ன பூஜா யோசிக்கற…?” என்றார் மகள் அமைதியாக மோட்டுவளையையே பார்த்துகொண்டு படுத்திருப்பதைப் பார்த்து.

“ஒன்னும் இல்ல ம்மா.  சும்மா யோசிச்சு பார்த்தேன்.  உனக்கு பிடிக்கலைன்னா வேணாம்.  நான் எனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருந்துதேன்னு கேட்டேன்..” என்றாள்.

விசாலினி திரும்பி அவளை முறைத்தார்.  “நான் எப்போ பிடிக்கலைன்னு சொன்னேன்.  இவன் முறுக்கிக்குவானேன்னு தான பேசினேன்”.

அப்படி வா வழிக்கு.  அம்மாவும் பிள்ளையும் என்னையே போட்டு பார்க்கறீங்களா…?  என்கிட்டயேவா…?

“அப்ப என்ன சொல்ற?  அந்த பொண்ணை நம்ம அஸ்வத்துக்கு பேசலாம்னு சொல்றயா…?” என்றாள் பட்டும் படாமல் பிடித்தம் இல்லாதது போல..

“அத நாமளே எப்படி முடிவு பண்ண முடியும்?  முதல்ல யாரு என்னன்னு பார்க்கனும்.  இவனுக்கும் பிடிக்கனும். அப்புறம் தான பேச முடியும்” என்றார் யதார்த்தத்தை உணர்ந்தவராக.

“எல்லாம் உன் பையனுக்கு பிடிக்கும்” என வேகமாக சொல்லி நாக்கை கடித்துக் கொண்டாள் அவசரமாக.   விசாலினி சட்டென்று திரும்பி தன்னைப் பார்ப்பதை உணர்ந்து, அய்யோ மாட்டிக்காதடி.  அவ்வளவுதான் உப்பு கண்டம் போட்டுடுவாங்க… என சுதாரித்தாள்.

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்ற, எனக்கு தெரியாம ஏதாவது உள்குத்து இருக்கா…?” என்றார் சந்தேகமாக, அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.

“அச்சோ ம்மா… ஏன் அப்படி பார்க்கற?  நம்ம அஸ்வத் அந்த பொண்ணை பார்க்கறத வச்சு சொல்றேன்”.

“இன்னைக்கு தான பார்த்தான், அந்த பொண்ணை…?”

மவனே என்னை கோர்த்து விட்டுட்டு நீ அங்க ஜாலியா இருக்கியா…? அம்மா இங்க என்னை பஞ்சராக்கிட்டிருக்காங்க.  இப்ப மட்டும் நீ என் கையில கிடைச்ச என பல்லைக் கடிக்கதான் முடிந்தது அவளால்.

“இல்லம்மா.  இதுக்கு முன்னாடியும் வெளியில  கோயில்ல வச்சு பார்த்திருக்கோம்.  அப்புறம் ஸ்கூல்ல கூட இரண்டு முனு தடவை பார்த்திருக்கான்…”.

“அப்ப அஸ்வத் அவளை லவ் பண்றானா……?” என்றார் நம்பாமல்.

பூஜா அவரை முறைத்தாள் இப்பொழுது.

“ஏன் முறைக்கற பூஜா?  எப்பவுமே நான் அவன் கல்யாணத்தைப் பத்தி பேசும் போதெல்லாம், அவனைக் கேட்காம செய்யாதம்மான்னு என் வாயை அடைச்சிடுவியே.  இப்ப நீயே இவ்வளவு ஆர்வமா பேசறயே அதான் டவுட்டா இருக்கேன்னு கேட்டேன்”.

“அய்யோ இந்த அம்மா இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்க கூடாது.  பாயின்ட் பாயின்டா பிடிக்குது.  டேய் அஸ்வத்தா… எங்கடா இருக்க என்னை இப்படி கோர்த்து விட்டுட்டு”.

“அப்படி எதுவும் இல்லம்மா.   பாப்பாவ ஸ்கூல்ல விடும் போது, அப்புறம் என்னோட கோயில் வரும் போதுன்னு பார்த்ததுதான்.  அவங்க தனியா எங்கயும் மீட் பண்ணதில்லை.  இதுல எப்படி லவ் வரும்….?”

“அதானே அவனுக்கு அந்த விவரமெல்லாம் பத்தாது.  எப்பப்பாரு வேலை வேலைன்னு அதே கதியாதான இருப்பான்.  அப்படியே அவங்கப்பாவப் போல” என பெருமைப் பட்டுகொண்டார்.

“அப்பனையும் பிள்ளையையும் ஒரு ஏர்ல வச்சு கட்டலாம்.  அப்படியே அவங்கப்பாவ போலவே இருக்கான் இவனும்…” என்றார் பெருமூச்சு விட்டுக் கொண்டே.

ஆமாம், ஆமாம்.  அப்படியே உன் பிள்ளைக்கு வாயில விரலை வச்சாலும் கடிக்க தெரியாது.   போம்மா… நீ தான் நம்பனும்.

“அம்மா எனக்கு ஒரு டவுட்டு” என்றாள் அதிமுக்கியமாக விசாலினியிடம் நெருங்கிப் படுத்து.

“என்ன… பூஜா..?” என்றார் அவரும் சீரியசாக.

“அஸ்வத்தை சொல்றே சரி.  அது ஏன் அப்பாவ கூட்டு சேர்க்கற… அவனோட?  அப்பா உன்னை லவ் பண்ணாம தான், நாங்க இரண்டு பேரும் வந்தோமா…?” என்றாள் கண்ணடித்து.

“ச்சீ… போக்கிரி பேச்சை பாரு” என வெட்கப்பட்டு திரும்பிக் கொண்டார்.

ப்பா…. இந்தம்மாவை பேசி சமாளிக்கவே இப்படின்னா,  இன்னும் மத்ததெல்லாம்.  ஐயோ அஸ்வத்தா….. கண்ணை கட்டுதுடா.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!