Skip to content
Post Views: 3,686
மதுரையின் பெயர் பெற்ற திருமண மண்டபங்களில் அதுவும் ஒன்று. எங்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஒரே குதூகலமாக இருந்தது அந்த இடமே.
அருந்ததியை மேடையில் அமர வைத்து நலங்கு வைத்துக் கொண்டிருந்தனர். அவள் பூப்பெய்திய சமயத்தில் வெளி ஆட்கள் எவருக்கும் சொல்லாமல் வீட்டோடு சுருக்கமாக விழா எடுத்திருந்தனர்.
அதுக்கே அவள் அந்த சமயத்தில், இதெல்லாம் வேண்டாம் என ஒரே ஆர்ப்பாட்டம் செய்து மறுத்திருந்தாள். சிறு பிள்ளை வெட்கப்படுகிறாள், இதுபற்றி பள்ளியில் எவராவது கிண்டல் கேலி செய்வர் என பயப்படுகிறாள் என்று விட்டுவிட்டனர்.
பாரிஜாதம் திருமணத்திற்கு முன் பெண் பிள்ளைக்கு சடங்கு செய்தே ஆக வேண்டும் என உறுதியாக கூறிவிட்டார். அவளின் தாய்மாமாவும் ஆசைப்படவே இதோ மண்டபத்தில் வைத்து செய்து கொண்டிருந்தனர்.
Advertisement
இதுமுடிந்து நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அருந்ததிக்கு. மாப்பிள்ளை வீட்டினரும் முன்வரிசையில் அமர்ந்து அருந்ததியைத்தான் பார்த்திருந்தனர்.
அஸ்வத் மாப்பிள்ளை தோரணையுடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.
அவனது கண்கள் அவளைத்தான் அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தது. தேவதையைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தாள் அங்கே அருந்ததி.
Advertisement
மாப்பிள்ளை வீட்டினரும் அவளுக்கு நலங்கு வைத்துவிட்டு வந்து அமர்ந்தனர். நலங்கு முடித்து ஆலம் சுற்றி எழுப்பி அழைத்துச் சென்றனர் அவளை.
Advertisement
அடுத்து நிச்சயத்திற்கான அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் செய்ய ஆரம்பித்தனர், புவனாவும் சித்ராவும் உறவுகளுடன் சேர்ந்து.
பாரிஜாதம் முன் வரிசையில் அமர்ந்து உறவுகளுக்கிடையே பேசிக்கொண்டிருந்தார்.
ராஜேந்திரன் முகமெல்லாம் பூரிப்பாக வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். அருந்ததி மணப்பெண்ணிற்கான அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள். கூடவே அவளது தோழிகளும் கிண்டல் கலாட்டா செய்து கொண்டு.
Advertisement
அடுத்து நிச்சயமும் முடிந்து வரவேற்பு ஆரம்பமானது. அருந்ததி அழகோவியமாக நின்றிருந்தாள். பக்கத்தில் இருந்த மாப்பிள்ளை அஸ்வத்துக்கு அவளை விட்டு கண்களை நகர்த்த முடிய வில்லை.
ஆம், அஸ்வத் அருந்ததியின் திருமண வரவேற்புதான் நடந்து கொண்டிருந்தது அங்கே. மணமக்கள் இருவருக்கும் தங்கள் கனவு நிஜமானதை நினைத்து அளவில்லா ஆனந்தம்.
பாரிஜாதம் அவ்வளவு சொல்லியும் ராஜேந்திரனுக்கு தயக்கமே. பாரிஜாதம் அருந்ததியின் விருப்பத்தை தெரிந்து கொள்ள சொன்னபோதும் அவர் அதற்கு முயலவில்லை.
அவருக்கே சரி என தோணாத போது அருந்ததியிடம் கேட்க விருப்பமில்லை. இருந்தும் மனதுக்குள் இந்த சம்மந்தத்தை விடவும் எண்ணமில்லை.
அஸ்வத் வீட்டிலிருந்து இரண்டு மூன்று தடவை போனில் பேசிய பின்னும் ராஜேந்திரனிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை என்பதால் அவரைப் பார்க்க நேரிடையாகவே கிளம்பி வந்திருந்தனர்.
பூஜா கேட்டதற்கு விசாலினி “அவங்க ஒன்னும் சரியான பதிலே சொல்ல மாட்டேன்றாங்க. எப்ப கேட்டாலும் இப்போ அப்போன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்றாங்க. எனக்கென்னவோ அவங்களுக்கு ஆர்வம் இல்லைன்னு தோணுது. என்னை என்ன பண்ண சொல்ற?” என்றார்.
இங்கு அருந்ததி வீட்டிலும் அதன்பிறகு மூன்று வரன்கள் பார்த்திருந்தார்கள். ஆனால் எதுவும் ஒத்துவரவில்லை. ஒன்று சரியிருந்தால், ஓன்று சரியில்லை எனும் நிலைதான். ஜாதகம் ஒத்துவந்தால், மாப்பள்ளை பார்க்க பிடிக்கவில்லை. ஜாதகமும் மாப்பிள்ளையும் ஒத்துவந்தால், மாப்பிள்ளையின் வருமானம் சொல்லும்படி இல்லை.
எல்லாம் இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இப்படியாக வந்த மூன்று வரனும் தட்டிச் சென்றது.
நல்லவேளை இந்த முறை எல்லாம் ஒத்துவந்தால் மட்டுமே பெண் பார்க்கும் படலம் என ராஜேந்திரன் மனதில் நினைத்திருந்ததால் இதை எதுவும் அருந்ததிக்கு தெரியப் படுத்தவில்லை.
இதிலே ஆறு மாதம் கடந்திருந்தது. ராஜேந்திரனும் பாதி சோர்ந்து விட்டார். அவரும் பேசாம அந்த போலீஸ் வேலையில இருக்க பையனையே பார்த்திருக்கலாமோ என மனதுக்குள் எண்ண ஆரம்பித்து விட்டார்.
சரியாக அந்த நேரம் பூஜா தன் கணவருடன் அம்மா அப்பாவையும் அழைத்துக் கொண்டு அருந்ததி வீட்டுக்கே வந்துவிட்டாள் சொல்லாமல் கொள்ளாமல்.
மதுரைக்கு குடும்பத்துடன் வந்தவள், கோவிலுக்கு சென்று மீனாட்சியை தரிசித்துவிட்டு, அங்கிருந்தே ராஜந்திரனுக்கு போனில் அழைத்து பேசியிருந்தாள்.
“நாங்க மதுரை கோவிலுக்காக வந்தோம். அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாம்னு வீட்டுல விருப்பப்படறாங்க. உங்களுக்கு விருப்பம்னா, உங்க வீட்டுக்கு வரோம்” என ராஜேந்திரனிடம் பேசி வீட்டுக்கும் வந்திருந்தனர். அஸ்வத்தை தவிர, அவர்கள் குடும்பம் மொத்தமும் வந்திருந்தது.
ஆமாம், பூஜா அவளது மாமியார் மாமனாரையும் அழைத்து வந்திருந்தாள். உண்மையிலேயே கோவிலுக்காகத் தான் முதலில் ப்ளான் போட்டு கிளம்பியது. வரும் வழியில் காரில் தான் அவர்களிடம் விவரத்தை கூறினாள்.
அதாவது அருந்ததியை அவளுக்கு பிடித்திருப்பதாகவும், “அஸ்வத்துக்கு அவளைக் கட்டினால் நல்லாருக்கும்னு ஒரு ஆசை அத்தை. அதான் சும்மா அருந்ததிகிட்ட பேசறமாதிரி அவங்க வீட்டு போன் நம்பர் வாங்கி, முறையா அம்மாவை விட்டு பேச சொன்னேன்”.
“அம்மா நாலஞ்சு தடவை இதுபத்தி பேசியும் சரியா பிடி கொடுத்து பேசமாட்டேன்றாங்களாம். மதுரை தான அவங்க ஊரும். அங்கதான போறோம். நாம வேணா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வருவமா த்தை” என்று கேட்டாள் கனகாவைப் பார்த்து.
அவ்வளவுதான். கனகாவுக்கு ஏற்கனவே நாம ஒரு இடத்துல பொண்ணு சொல்லியே அமையல என்று வருத்தத்தில் இருந்தார்.
இப்பொழுது பூஜா இப்படி சொல்லியதும், “என்னது நம்ம குலம் என்ன? கோத்திரம் என்ன? மாப்பிள்ளை எப்படிப்பட்ட பையன்? என்ன மாதிரி வேலையில இருக்கிறான்? நாம எப்படிப்பட்ட ஆளுங்க? நாம கேட்டு அவங்க யோசிப்பாங்களா? நாம என்ன குறைஞ்சவங்களா? அதெப்படி விட முடியும்?”
“நீ முன்னாடியே என் கிட்ட சொல்லியிருக்க வேணாமா? நாம போய் பேசுவோம்? என் மருமகளுக்கு பிடிச்சி, அந்த இடத்தை நான் முடிக்காம இருப்பனா? நீ ஒன்னும் கவலைப்படாத நாம போய் பேசுவோம்” என்று விட்டார்.
இவர்கள் இருவரும் பேச பேச விசாலினி ஆங்… என தான் பார்த்திருந்தார், மகளையும் கனகாவையும்.
பூஜா சிரித்துக் கொண்டே விசாலினியைப் பார்த்து கண்ணடித்து ஒற்றை புருவத்தை உயர்த்தி எப்படி என்றாள்.
விசாலினி, “பொழைச்சுப்படி…” என்றார் முனகலாக அவளுக்கு மட்டும் கேட்கும் படி.
இதே டயலாக்கை ஏற்கனவே பூஜா தன் கணவனிடம் சொல்லியிருந்ததால், அவனும் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இப்படிதான் அருந்ததியின் வீட்டிற்கு வந்து ராஜேந்திரனை ஒரு வழி செய்திருந்தார் கனகா. யாரையும் பேசவே விடவில்லை அவர். அஸ்வத்தின் தரப்பிலிருந்து அவரே எல்லாம் பேசி முடித்திருந்தார்.
ராஜேந்திரனும் ஏற்கனவே எதிர்பார்த்த மாதிரி எந்த வரனும் அமையாததால் ஏமாற்றமாகவே இருந்தார். அவரும் இந்த வரனைப் பற்றி நினைத்த நேரத்தில் சரியாக இவர்களும் அழையாமலேயே வீடு தேடி வந்திருந்ததால் இதை தெய்வ சங்கல்பமாகவே எடுத்துக் கொண்டார்.
அப்புறமென்ன கனகா பேசி பேசியே அவரை கரைத்திருந்தார் வார்த்தைகளால். ராஜேந்திரன் சரி என சம்மதிக்கும் வரை அவரை விடவில்லை.
பூஜா வீட்டினரின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, மாப்பிள்ளை படிப்பு, உத்தியோகம், வருமானம், அவர்கள் வீட்டின் பணச் செழுமை என அஸ்வத் வீட்டினைப் பற்றி எடுத்துச் சொல்லியே அவரை சரி என தலையசைக்க வைத்திருந்தார்.
ஆக மொத்தம் பெண்ணின் வீட்டினருக்கு பரமதிருப்தி. அருந்ததியை இவர்களுக்கு சென்னையிலேயே தெரிந்திருக்கிறது. வேலை செய்யும் ஸ்கூலில் பார்த்திருக்கிறார்கள்.
அப்படியிருந்தும் அங்கே அருந்ததியிடம் ஏதும் பேசாமல் நாசுக்காக விசாரித்து, தங்களைப் பற்றி தெரிந்துகொண்டு வந்து பேசுகின்றனர் என நினைத்தனர்.
ஆம். அப்படிதானே பூஜாவும் சொல்லியது கனகாவிடம். அவரும் அதையே கூறியிருந்தார் அவர்களிடம்.
எவ்வளவு நல்ல மனிதர்கள் போலி கௌரவம் ஏதும் பார்க்காமல் தங்களை மதித்து சரிசமமாக உட்கார்ந்து சம்மந்தம் பேசுகிறார்கள்.
அந்த வீட்டில் இருந்து பெண்ணெடுத்த சம்மந்தி குடும்பமே இவர்களைப்பற்றி இத்தனை உயர்வாக பேசுகிறார்கள் என்றால், இவர்கள் எந்த அளவு நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என சந்தோஷப்பட்டனர் அருந்ததி வீட்டினர்.
அதுவும் உண்மைதானே. அஸ்வத் திருமணத்துக்கு சம்மதம் சொல்லாததால் இவ்வளவு நாள் அவன் திருமணம் தள்ளிப்போயிருந்தது. இல்லையென்றால் அவனுக்கு பெண் கொடுக்க அவர்கள் உறவுகளிலேயே பலர் இருந்தனர்.
அஸ்வத்தின் விருப்பத்தை தவிர அவர்கள் கூறியதனைத்தும் உண்மையே. அதை மட்டும் பூஜா யாருக்கும் தெரிய விடவில்லை. அவளிடமே அவன் அருந்ததியை விரும்புவதாக சொல்லவில்லையே. பிடிச்சிருக்கு நீ பேசி முடிச்சுவிடுன்ற மாதிரிதானே பேசியிருந்தான்.
ஆனாலும் அவனை உணர்ந்திருந்தாள் பூஜா. எப்படியோ அவனுக்கு கல்யாணம் நடந்தால் போதும் என்று விட்டிருந்தாள். ஆனால் இதில் பூஜாவுக்கே தெரியாதது, அருந்ததியும் அஸ்வத்தை விரும்புவதுதான்.
அருந்ததியை பூஜாவுக்குப் பிடித்திருந்ததால் தான் இதற்கு அவளும் சம்மதித்தாள். அதுவும் ஒரு காரணம்.
இப்படியாக இரண்டு குடும்பமும் பேசி முடித்து, பெண் பார்க்கும், மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்வு எல்லாம் முடிந்து, இதோ அருந்ததியும் அஸ்வத்தும் மணமேடையில் சந்தோஷமாக கைக் கோர்த்து நின்றிருந்தனர்.
அஸ்வத் அருந்ததியைத்தான் அடிக்கடி ஓரக் கண்களால் சைட் அடித்துக் கொண்டிருந்தான். பூஜா முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு அஸ்வத்தைப் பார்த்து கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.
போதும்டா, ஓவரா ஜொள்ளாத என சைகையால் அவனை கலாய்த்துக் கொண்டிருந்தாள். சைந்தவிக்குத்தான் பயங்கர சந்தோஷம் இந்த கல்யாணத்தில்.
அவளது ஸ்கூல் மிஸ்ஸே அவளது அத்தையாக வருவது குறித்து. ஸ்கூலில் அவள் ஃபிரண்டஸிடமெல்லாம் சொல்லி சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டாள் இதனை.
இப்பொழுது கூட மேடைக்குச் சென்று அவர்களுடன் சிறிது நேரம் இருப்பதும், கீழே பூஜாவிடம் வருவதும் என குஷியாக ஓடிக்கொண்டிருந்தாள்.
ராஜேந்திரனுக்கு ஏக மகிழ்ச்சி. மருமகன் போலீஸ் உத்தியோகத்தில் பொறுப்பான பதவியில் இருப்பது குறித்து. அவருடைய அகத்தின் மகிழ்ச்சி முகமெங்கும் பரவியிருந்தது. புவனாவும் பாரிஜாதமும் கூட சந்தோஷமாயிருந்தனர்.
அஸ்வத் வீட்டில் திருமணத்தை அவர்கள் ஏற்று நடத்த கேட்ட போது ராஜேந்திரன் மறுத்திருந்தார். அவருக்கு அவருடைய வட்டத்தில் பெருமையாக, கௌரவத்துடன் நடத்திட வேண்டும் என விரும்பினார். அதனால் அவரது எண்ணப்படியே அஸ்வத் வீட்டினர் சம்மதித்திருந்தனர்.
இருந்தும் அவர்கள் ஊரான திருநெல்வேலியில் ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதிகாலை மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, சுற்றம் சூழ உறவினர், பெற்றவர்களின் ஆசியோடு மங்களநாணை அருந்தியின் கழுத்தில் கட்டினான் அஸ்வத்.
இருவரும் பார்வையால் தழுவி, மனதால் ஒருமித்து, தங்கள் மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருந்தனர்.
அஸ்வத் தாலியை கையில் எடுத்ததும் அருந்ததியைத்தான் பார்த்திருந்தான். இந்த க்ஷணத்திற்கு தானே இத்தனை நாள் காத்திருப்பு.
அருந்ததி தலையை நிமிர்த்தி, அவனது கையில் இருந்த மங்கள நாணை பார்த்தவள், மெல்ல அவனிடம் பார்வையை உயர்த்தினாள்.
அந்த நொடிக்காகவே காத்திருந்தவன் போல் கண்களாலேயே சம்மதம் வாங்கி பார்வையால் ஆரத் தழுவிக்கொண்டே, அவளது கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டினான். அவனது பார்வைக்கு கொஞ்சமும் சளைக்காத பதில் பார்வை பார்த்திருந்தாள் அருந்ததியும்.
இருவரின் மனமும் அந்த நிமிட சந்தோஷத்தில் திளைத்திருந்தது. அவர்களது காதல் கைகூடியதை நினைத்து இருவருது உள்ளமும் பூரித்திருந்தது.
அருந்ததியின் இத்தனை நாள் தவிப்பிற்கு ஈடு செய்வதுபோல் கணவனை கண்களால் விடாது பார்த்திருந்தாள்.
பட்டு வேஷ்டி சட்டையில் கழுத்தில் மாலையும் புது மாப்பிள்ளைக்கான வசீகரத்துடன் இருப்பவனை பார்க்க பாரக்க திகட்டவில்லை. கண்ணெடுக்காது பார்த்திருந்தவளை பார்த்து அவனுக்கும் சிரிப்புதான் முகத்தில். அச்சோ என்ன இவள் இப்படி சைட் அடிக்கிறா… என அவனே வெட்கப்படும் அளவு இருந்தது அவள் பார்வை. மணமகனின் வெட்கம் கூட பார்க்க அழகாகயிருந்தது.
அருந்ததியின் கழுத்தில் இருக்கும் மாலையை சரி செய்வது போல் அவளிடம் குனிந்த பூஜா, “என் தம்பியையே வெட்கப்பட வச்சிட்ட, கங்கிராட்ஸ்” என்றாள்.
“அச்சோ அண்ணி” என அருந்ததி புன்னகை பூக்க வெட்கத்துடன் குனிந்துகொண்டாள். அருந்ததியை ஓரக்கண்ணால் பார்த்திருந்தவனுக்கும் முகமெங்கும் மத்தாப்பு.
இவர்களைப் பார்த்திருந்த பெற்றவர்களின் உள்ளமும் குளிர்ந்தது.
ராஜேந்திரனும் புவனாவும் பெண் மாப்பிள்ளையை பார்த்து அத்தனை ஆனந்தம். பாரிஜாதம் முதல்வரிசையில் உட்கார்ந்திருந்தவர் பேத்தியின் சந்தோஷ முகத்தைப் பார்த்து மனம் நிறைந்தார்.
விசாலினியும் பரணியும் அஸ்வத்தின் அருந்ததியின் ஜோடி பொருத்தத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டனர். எங்கே அஸ்வத் கல்யாணமே செய்து கொள்ள மாட்டானோ என பயந்திருந்தவர்களுக்கு, அப்படி ஒரு நிம்மதியைக் கொடுத்திருந்தது இந்த திருமணம்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்கும் பொழுது, ஐயர் மணமக்களை அக்னியை சுற்றி வலம் வரச் சொன்னார்.
அஸ்வத் முதலில் எழுந்தவன், அருந்ததியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவளுக்காக கைகளை நீட்டினான் பிடித்துக் கொண்டு எழ.
அவனை பார்வையால் நிமிர்ந்து பார்த்தவள் புன்னகையுடன், அவள் கைகளை அவன் கையில் ஒப்படைத்து, “இப்ப மட்டும் இல்ல, எப்பவும் என் கை பிடிச்சு வாழ்க்கை முழுக்க, என்னை கைவிடாம கூட்டிட்டு போகனும்” என்றாள் காதலாக. “உத்தரவு மகாராணி” என தலைகுனிந்து வாய்மொழிந்த அவனுக்கும் பரவசமே. பார்த்திருந்த அனைவருக்கும் கொல்லென சிரித்து விட்டனர்.
அஸ்வத் தன் கைகளால் அவளை எழுப்பி விட்டதும், கணவனின் கைகள் பிடித்து, அவன் பின்னே நடக்க ஆரம்பித்தாள் அருந்ததி. இவர்களைப் பார்த்த பெற்றவர்களுக்கு நெஞ்சம் நிறைந்திருந்தது.
இதோ கல்யாணம் முடிந்து, அருந்ததியின் வீட்டிற்கு வந்திருந்த மணமக்கள், பாலும் பழமும் அருந்தி ஓய்வெடுத்தார்கள். அன்று மாலையே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, மீனாட்சியையும் சொக்கநாதரையும் தரிசிக்க வந்திருந்தனர்.
பூஜாவும் அவள் கணவனை அழைத்துகொண்டு, அஸ்வத் அருந்ததியுடன் வந்திருந்தாள். புதுமணத் தம்பதிகள் இருவரும் கைகூப்பி தாய் மீனாட்சியை கண்ணார தரிசித்து, ஐயர் காட்டிய தீபாராதனைனயை கண்ணில் ஒற்றிக் கொண்டனர்.
அருந்ததி தாய் மீனாட்சிக்கு மனதிலேயே நன்றி கூறிக் கொண்டிருந்தாள். அவள் மீனாட்சியிடம் வேண்டியிருந்தது போலவே, அஸ்வத்துடனான திருமணம் கைகூடிய ஆனந்தத்தில், அன்னையை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் .
கணவனுடன் வந்து அன்னையை தரிசித்து, தனது நன்றியை தெரிவித்து கொண்டிருந்தவளின் கண்கள் சந்தோஷ மிகுதியில் கலங்கியிருந்தது. அஸ்வத்தும் சாமி கும்பிட்டுவிட்டு மனனவியைத்தான் பார்த்திருந்தான்.
அவள் விழிகள் சிமிட்டி கண்ணீரை சிந்த விடாமல் தடுக்க முயலுவதைப் பார்த்தவன், அருந்ததியின் கையை ஆதரவாக பிடித்து அழுத்தினான்.
அவனுக்கும் அந்த க்ஷணம், அவள் மனம் புரிந்தது. அவன் அவள் கையைப் பிடித்ததும், ஒன்றுமில்லை என தலையசைத்து, அவனைப் பார்த்து புன்னகைத்தாள் நெகிழ்ச்சியுடன்.
சாமி கும்பிட்டதும் இவர்களுக்கு தனிமையைக் கொடுத்து பூஜா தம்பதியினர் நகர்ந்திருந்தனர். குங்கும பிரசாதத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டான் அஸ்வத்.
வசீகரன் எதிர் வரிசையில் நின்று இவர்களைத்தான் பார்த்திருந்தான். நித்யாவுடன் அவனும் கோவிலுக்கு வந்திருந்தான். நித்யா கர்ப்பம் தரித்திருந்தாள். இது மூன்றாம் மாதம்.
இருவரும் சேர்ந்தாற்போல எங்கும் செல்வதில்லை என சரசு மகனையும் மருமகளையும் கோவிலுக்கு சென்று வர சொல்லியிருந்தார்.
இன்னும் நித்யாவுக்கும் அவருக்கும் இடையில் பெரிதான இணக்கம் ஏதும் ஏற்படவில்லை. சண்டை சச்சரவுகளும் இல்லை.
யதார்த்தத்தை புரிந்து ஏற்றுக்கொள்ள, பழகிக்கொள்ள அவருக்கு நேரம் பிடித்தது. இருந்தும் சில சமயங்களில் அவராகவே நித்யாவுடன் ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்திருந்தார்.
அதுவும் அவள் பிள்ளையுண்டாகி இருக்கிறாள் என அறிந்ததிலிருந்து அவளை ஒதுக்க முடியவில்லை அவரால். பேசவில்லை என்றாலும், அன்னையாக தாங்க ஆரம்பித்திருந்தார்.
நித்யா வயல் வேலைகளுக்கு போவதை தவிர மருமகளிடம் எந்த குறையும் இல்லை அவருக்கு. அவர் சொல்லியும் அவள் அதை நிறுத்தவில்லை என்ற மனவருத்தம்.
வசீகரனைத் தான் முறைப்பார் சில சமயம் கோவமாக. பார் உன் பொண்டாட்டி இதையாவது நான் சொல்றதை கேட்கிறாளா? என.
அவன்தான் இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு அல்லாடுவான். அவள் ஏற்கனவே அவனிடம் தெளிவாக கூறி விட்டதால், அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
“விடுங்கமா நான் பார்த்துக்கறேன்” என்று அவனே அவளை அழைத்துச் சென்று, திரும்ப வேலை முடிந்ததும், அவனே சென்று அழைத்துவர பழகியிருந்தான்.
இந்தமட்டுமாவது தன் பேச்சை மதிக்கிறார்களே என ஆசுவாசப்பட்டுக் கொண்டார் சரசு.
இதோ சரசு சொன்னாலும், இருவரும் விருப்பத்துடனே கோவிலுக்கு வந்திருந்தனர். வந்த இடத்தில் தான் அருந்ததி அஸ்வத்துடன் மணக்கோலத்தில் வந்திருந்ததை பார்க்க நேர்ந்தது வசீகரனுக்கு.
முதலில் அருந்ததியை அடையாளம் தெரியவில்லை, பின்புதான் கண்டுகொண்டான். அவனுக்கு சொல்லொணா நிம்மதி மனதில். சொல்லப் போனால் அவனுடைய குற்றவுணர்விலிருந்து ஒரு வகையான விடுதலை எனக் கூட சொல்லலாம்.
ஆம், அவளுடன் பேசியிருந்த திருமணத்தை நிறுத்தி, சொல்லாமல் கொள்ளாமல் நித்யாவை கல்யாணம் செய்து கொண்டது, அவனுக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அது தப்புதானே. என்னதான் அவன் நியாயப் படுத்திக் கொண்டாலும், தேவையில்லாமல் அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து, பின் அதைக் கெடுத்தது போலதானே.
இவன் செய்ததற்கு நேரில் போய் கூட எந்த விளக்கமோ மன்னிப்போ கேட்கவில்லை. ஏதோ ராஜேந்திரன் நல்லவராக இருக்கப் போய், இவனை அப்படியே ஏதும் கேளாமல் விட்டுவிட்டார்.
அவர் ஏதாவது பிரச்சினை செய்திருந்தால் தலையிறக்கமாக இருந்திருக்கும். எத்தனை சமாதானங்கள் சொன்னாலும், அவனது மனசாட்சி அவனை மன்னிக்க மறுத்து, குற்றவுணர்ச்சியில் தள்ளியிருந்தது.
அருந்ததியை கல்யாண கோலத்தில் கணவனுடன் இன்று கோவிலில் பார்த்ததும் அத்தனை ஆசுவாசம் அவனுக்கு. என்னால் ஒருத்தியின் வாழ்க்கை திருமணம் வரை வந்து நின்றுவிட்டதே, என மருகி இருந்தவனது மனம், இன்று நிம்மதி அடைந்தது.
அன்னை மீனாட்சிக்கு அவன் கைகூப்பி மனமாற நன்றி கூறி நித்யாவுடன் வெளியே வந்தான். எல்லாம் அறிந்த அந்த தாய் மீனாட்சி கருணையே வடிவமாக புன்னையுடன் அனைவருக்கும் காட்சி தந்தாள்.
தொடரும்.
error: Content is protected !!