Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் சுவாசம் என் மூச்சில்

உன் சுவாசம் என் மூச்சில் 18

 உன் சுவாசம் என் மூச்சில் 18

 

   ஊரில் இருந்து வந்து ஒரு வாரம் கடந்த நிலையில் விடிந்தால் எழில்விழிக்கு பிறந்தநாள். எப்பொழுதும் பிறந்தநாள் அன்று அவள்தான் அன்னலெட்சுமியிடமும் வெங்கடேசனிடமும் நியாபகப்படுத்தி ஆசிர்வாதம் வாங்குவாள் அவளின் ரெண்டாவது அக்கா சரஸ்வதி தான் புது துணி  எடுத்து கொடுப்பார்.

    அதுவும் நினைவில் இருந்தால் மட்டுமே. ஆனால் இந்த பிறந்தநாளோ திருமணம் முடிந்து வரும் முதல் பிறந்தநாள் இதனை கதிரவனுக்கு கூறாது அவனாகவே முதலாக வாழ்த்த வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் வர எழில்விழி  கதிரவனிடம் சென்றவள்,



Advertisement

“ என்னங்க ” என அழைக்க

“ ஹ்ம்ம்”

“ அது உங்க பிறந்தநாள் எப்போ??.. ” என கேட்க

Advertisement

“  அது செர்டிபிகேட்ல ஒரு தேதி இருக்கு நான் பிறந்தது வேற ஒரு தேதி ” என கூறி ரெண்டு தேதிகளையும் கூற

Advertisement

“ இதுல எந்த தேதில பிறந்தநாள் கொண்டாடுவீங்க ” என எழில்விழி கேட்க

“ நான் பிறந்தநாள் கொண்டாடுற வழக்கம் எல்லாம் இல்ல கோவிலுக்கு கூட போக மாட்டேன் ” என கூறிவிட்டு வே லைக்கு சென்றுவிட எழில்விழிக்கு சப்பென்றாகி விட்டது.

 அவளின் திட்டமே பிறந்தநாள் தேதி பத்திப்பேசும் போது அவனும் பதிலுக்கு தன்னை கேட்பான் தன் பிறந்தநாள் நாளை என சொல்லலாம் என திட்டமிட அது பலிக்கவில்லை.

Advertisement

   கதிரவன் வீடு திரும்பும் வரை முழித்திருக்கலாம் என எண்ணினாள் ஆனால் மாத்திரை உட்கொள்வதாலும் உடல் சோர்விலும் அவளை அறியாமல் தூங்கிவிட, இரவு தன்னிடம் இருந்த இன்னொரு  சாவியை வைத்து  வீட்டை திறந்து வந்தான் கதிரவன்.

    எழிலின்  அருகில் உறங்கி அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து மெதுவாக எழில்விழியின் கன்னத்தை தட்டி எழுப்ப அதில் விழி திறந்து பார்த்த கதிரவனின் விழி,

“ என்னங்க??… ” என சோர்வாக கேட்க

“ இல்ல சொல்லிட்டு போலாம்னு ” என கதிரவன் கூற அவன் பிறந்த நாள் வாழ்த்தை கூறப்போகிறான் என்ற சந்தோஷத்தில் உற்சாகமாக எழுந்தது அமர்ந்து,

“ என்னங்க சொல்லணும்” என சிரிப்புடன் கேட்ட எழில்விழியிடம்

    அவளின் சிரிப்பும் முகத்தில் இருந்த ஆர்வமும் கண்டு கதிரவன் குழப்பத்தோடு,

 “ என்ன திருவாசகமும் தேவாரமுமா சொல்லப்போறேன்????….. இன்னைக்கு தேர்த்திருவிழா அதான் பந்தோபஸ்து போறேன் வர ராத்திரி ஆகிடும் அதான் சொல்லிட்டு போலாம்ன்னு எழுப்புனேன் ” என கூறி நகர எழில்விழி ஏங்கி விட்டாள். கண்கள் கூட கலங்கிவிட்டது.

‘ பேசாமல் நாமளே சொல்லிடலாம் இன்னைக்கு பிறந்தநாளுன்னு’ என எண்ணி அறையின் வாசலை காண,

   அறையின் கதவு வரை சென்ற கதிரவன் எழிலின் முகத்தில் முதலில் இருந்த சிரிப்பு மறைந்து கலக்கத்தை பார்த்து குழப்பத்தோடு  மீண்டும் எழில்விழியின் அருகில் வந்து நெற்றியில் முத்தமிட்டு சென்றுவிட அதில் சோர்ந்த மனது உற்சாகமானது.

“ அவரு தெரிஞ்சு குடுக்கலைனாலும் இதான் என் பிறந்தநாளு பரிசு ” என குதூகலமாக உறங்க ஆரம்பித்தாள். இருந்தாலும்  மனதில் ஏற்பட்ட ஏமாற்றம் ஏக்கத்தை ஆழ் மனதில் புதைத்துவிட்டு நடமாட அவளின் பிறந்தாளும் முடிந்தது.

   பிறந்தநாள் அன்று இரவு உறங்கிய எழில்விழியை பதினொரு  மணிபோல எழுப்பினான் கதிரவன். அதில் எழுந்த எழில்விழி

“ என்னங்க எப்போ வந்திங்க??… இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. சாப்பிட எதுவும் செய்யவா?… ” என கேட்க

“ ஹம்ம்ஹும் எதுவும் வேணாம் நான் வெளியவே சாப்பிட்டேன் ” என கூறி மெதுவாக அவளின் அருகில் வந்தான்.

   மெதுவாக அவளின் கன்னத்தில் முத்தமிட்டு,

“ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விழி ” என ஆழ்ந்த குரலில் கூற அவனின் வாழ்த்தை விட அவனின் குரல் எழில்விழியை சிலிர்க்க வைத்தது.

  அதன் பின்தான் உரைத்தது தனது பிறந்தநாளை  கணவன் நியாபகம் வைத்துள்ளான் என்பதை அதில் அதிர்ந்து வேகமாக எழுந்து  சிரித்து அழுது கணவனை முத்தமிட அதில் ஒரு சிலிர்ப்புடன் திக்குமுக்காடிப்போனான் கதிரவன்.

“ ஏய்!!!… ஏய்!!…. பார்த்துடி பிள்ளை வயித்துக்குள்ள இருக்கு. எங்கயாவது பிடிச்சுக்க போது” என கதிரவன் சிறு கண்டிப்புடன் கூற

   அதன் பின் தன் செயலில் வெட்கம் கொண்டு கணவனின் மார்பிலையே தஞ்சம் ஆனாள் எழில்விழி.

   பின் கதிரவன் மெதுவாக தனது கையில் இருந்த பரிசை நீட்ட அதில் இன்னும் அகமகிழ்ந்து போனாள் எழில்விழி. இந்த பரிசு அவளின் வாழ்நாளின் முதல் பிறந்தநாள் பரிசு அதுவும் ஆசை கணவனின் பரிசு. பிறந்தநாள் வாழ்த்தையாவது கூற வேண்டும் என ஏங்கிய மனதுக்கு பரிசு ஏக போக மகிழ்ச்சியை  தந்தது. 

    பின் அதை மெதுவாக பிரித்து பார்க்க வெள்ளியை கயிறு போல் முறுக்கிய டிசைனில் ஐந்து முத்துக்கள் வைத்து இருந்த சிறு கொலுசு. அதனை கண்டு விழிவிரித்து,

“ என்னங்க அழகா இருக்கு. உங்களுக்கு கொலுசு பிடிக்குமா?… ” என எழில்விழி  கேட்க

“ நான் என்னைக்காவது உன்னைய கொலுசு போடாதன்னு சொன்னேனா??.. ”  பதில் கூறாது கேள்வி கேட்க

“ இல்லங்க ஆனா அண்ணிங்க சொன்னாங்க உங்களுக்கு  கொலுசு பிடிக்காதுன்னு ”

“ என் அக்காகள்தானே சரியான லூசுங்க. நான் எதுக்கு சொன்னேன் அதுங்க என்ன புருஞ்சுக்கிச்சுங்க பாரேன். விழி நம்ம வீடு இப்போதான் வீட்டுக்குள்ள பாத்ரூம் வச்சு கட்டிருக்கு.ஆனா அதுக்கு முன்னாடி பின் வாசல்ல கொஞ்சம் தூரம் தள்ளித்தான் இருக்கும்.

   அப்போ பெரிய கொலுசா ஜல்லு ஜல்லுன்னு போட்டு ரெண்டு அக்காவும் நடப்பாங்க. பின்னவாசல் பக்கம்  இருந்த பொட்டல் காட்டுலதான் இளவட்ட பயல்கள் விளையாடுறது இல்ல ராத்திரிவரைக்கும் அரட்டை அடிக்குறது.

  அதுதான் பெரிய கொலுசு போட்டு நடக்காத தேவை இல்லாம கவனம் நம்ம மேல திரும்பும். அப்புறம் வம்பிழுப்பாங்க  அப்புறம் எனக்கு கோவம் வந்து சண்டைக்கு போனும் அதுக்கு சின்ன கொலுசை போடுங்கன்னு சொன்னேன் அதைத்தான் அந்த லெட்சணத்துல புரிஞ்சுருக்காங்க ரெண்டு பேரும் ” என கூறிக்கொண்டே

“ ஏன் விழி கொலுசு பிடிச்சுருக்கா??… ” என கேட்க

“ ரொம்ப பிடிச்சுருக்குங்க ” என கூறி சிரிக்க

“ நான் ஒன்னு சொல்லவா ”

“ ஹ்ம்ம் சொல்லுங்க ”

“  நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி குடுத்த உன் போட்டோல உன் பிறந்தநாள் தேதி இருந்துச்சு. மதியம் தான் நியாபகம் வந்துச்சு. ஆனா எப்பொழுதும் எனக்கு நியாபகம் இருக்குமான்னு தெரியல. அதுக்கு தேவை இல்லாம  மூஞ்சை  தூக்க கூடாது சரியா ” என கேட்க

“ ஹ்ம்ம் ” என வேகமாக  தலை  ஆட்டினாள். அதை அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என எண்ணிக்கொண்டு அதனை காலில் மாட்டி  அறைக்குள் நடந்து காட்டி,

“  எப்பிடி இருக்குங்க??…” என கேட்ட விழியின்  விழியில் தெரிந்த சந்தோஷமும்  மேடிட்டு இருந்த வயிற்றுடன் குழைந்தையாக சிரித்து ஆசையுடன்  கேட்ட எழிலின் அருகில் வந்து அவளின் முகத்தை கையில் ஏந்தியவன் நெற்றியில் முத்தமிட்டு, 

“ உன் கொலுசை எப்போதும் கழட்டாத விழி அந்த முத்தோட சின்ன சிணுங்கல் சத்தம் கேட்டுகிட்டே இருக்கனும்” என கூறி மெதுவாக அணைக்க அந்த அணைப்பில் அவனின் அன்பில் மொத்தமாக விழியின் உடலும் காதல் மனதும் சரணடைந்தது.  

   ஏழாம் தொடக்கத்தில் இருந்தாள் எழில்விழி. அன்று  காலை தெய்வானையும் காளிங்கனும்  கதிரவனின் வீட்டிற்கு வருகை தந்தனர். அவர்களை கண்டு எழில்விழி,

அத்தை வாங்க ” என தெய்வானையை வரவேற்று பின் காளிங்கனை கண்டு அதிர்ந்து பின்,

வாங்க… வாங்க…. சித்தப்பா ” என கூறி அவரையும் வரவேற்று குடிக்க டீ போட சென்றாள்.

   எழில்விழி காளிங்கனை கண்டு அதிர காரணம் இதுவரைக்கும் அவள் அவரிடம் அதிகம் பேசியது கிடையாது.  ஓரிரு முறை அவளின் புகுந்தவீட்டில்  அவரை காண நேரிடும் போது ஏதோ விரோதி போல முறைத்துக் கொண்டோ இல்லைநீ எல்லாம் ஒரு ஆளு’ என அற்பமாகவோ  பார்த்துக்கொண்டே கடந்துவிட  எழில்விழியும் அதை எல்லாம் மனதில் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

   மேலும் ஏற்கனவே கணவன்,  தனது மாமா  குடும்பத்தில் ஓர் அங்கம் அவர் உதவி என காளிங்கனை  புகழ்ந்து சொல்லிருக்க எங்கே அவரை பற்றி அவர் பார்வை பற்றி சொல்ல போகிறாள்.  மேலும் அவரை எப்பொழுதாவது ஒரு முறை பார்க்கும் அவரின் பார்வைக்கு எழில் முக்கியத்துவம் குடுக்க விரும்பவில்லை.

   டீயை குடித்துவிட்டு  தெய்வானையும் காளிங்கனும் பேசிக் கொண்டிருக்க எழில்விழியோ அவர்களுக்கு காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள். சிறுது நேரம் சென்று  திடீரென அடுக்களைக்குள் நுழைந்த தெய்வானை,

என்ன சமயலு எழிலு??… ” என கேட்க

இட்லி வைக்குறேன்  அத்தை. ”

  இட்லியா??… கதிருக்கு தோசை தானே பிடிக்கும். இட்லி அவ்வளவா சாப்பிட மாட்டானே ”

  ஹ்ம்ம் ஆமா அத்தை முன்ன தோசைதான் அதிகம் ஊத்துவேன். ஆனா இப்போ ஒரு ரெண்டு மாசம் தோசை வேணாம் எண்ணெய் ஒத்துக்கல நான் சொல்றபோ தோசை ஊத்துன்னு  சொன்னாங்க ”

ஓ!!!…. சரி சரி எங்க அண்ணனுக்கு தோசை தான் பிடிக்கும். அவருக்கு தோசை செஞ்சுரு ”

 சரிங்கத்தை ”

ஹ்ம்ம் சாம்பாரோட கொஞ்சம் இட்லி பொடியும் வை நல்லா சாப்பிடுவாரு ” என  கூறிய தெய்வானை மேலும் தொடர்ந்து  

ஏன் எழிலு இந்த ரேஷன் அரிசி எல்லாம் என்ன செய்ற??… ”

அதை எல்லாம் இட்லிக்கு போடுவேன் அத்தை”

அம்புட்டையுமா??… மிச்சம் இல்ல ”

  மிச்சம் வரும் அத்தை ”

அதை என்ன செய்த??… உங்க அம்மா வீட்டுக்கு குடுத்துடுவியா??… ”

  எங்க அம்மா வீட்டுக்கா!!.. ” என அதிர்ந்து பின்  “ அங்க எல்லாம் ஒன்னும் கொடுக்க மாட்டேன் ” என கூறிய எழில்விழியை மேலும் கீழும் பார்த்த தெய்வானை

“ சரி மிச்சத்தை என்ன பண்ணுவ??…. ” என மீண்டும் தெய்வானை கேட்க

“ மீதத்தை யாராவது அக்கம் பக்கம் கேட்டா கொடுத்துடுவன் அத்தை ”

“  காசுக்கா??…. ”

“ ஐயையோ!!!… இல்லத்த உங்க பிள்ளை அது எல்லாம் அரசாங்க அரிசி விக்க கூடாது உனக்கு வேணாம்ன்னா வாங்காம இருக்கனும். இல்ல பயன்படுத்துறன்ன வாங்கிக்கோ. அதிகமா இருந்தா யாராவது கேட்டா சும்மா குடுன்னு சொன்னாங்க அதான் சும்மா குடுத்துருவேன் ”

“ என்னது சும்மா குடுகுறியா!!!… புருசனும் பொண்டாட்டியும் என்ன வெளி நாட்டுல இருக்கறதா நினைப்பா??… ஏன் எனக்கு சொன்னா உன்  கொழுந்தனை அனுப்பி எடுத்துக்குவேன்ல ”

“ இல்லத்தை உங்க பிள்ளைத்தான்….. ” என எழில்விழி எதோ கூற வர

“ ஏய்!!… என்ன எப்போ பார்த்தாலும் உங்க பிள்ளை உங்க பிள்ளைன்னு சொல்ற. ஆமா என் பிள்ளைத்தான். அவனுக்கு என்ன தெரியும் வீட்டு அடுப்பாங்கரை பத்தி. நீ தான் அத்தைக்கு வேணுமா என்னன்னு கேளுங்கன்னு சொல்லணும் ” என தெய்வானை கூற

“ சரிங்க அத்தை ” என தலையை ஆட்டிய எழில்விழியிடம்

“ இப்போ உங்களுக்கு போக மிச்ச அரிசி இருக்கா?? ” என கேட்க

“ ஹ்ம்ம் இருக்கு அத்தை ” என கூறி ஒரு மூட்டையை காட்ட அதை தான் எடுத்து செல்வதாக கூறி தெய்வானையும் நகர்ந்து விட்டார்.   

   காலையில் பரேடு முடிந்து வீட்டிற்கு வந்த கதிரவன் கூடத்தில் இருந்த தெய்வானை மற்றும் காளிங்கனை கண்டு,

“ வாங்க மாமா. வாமா ”  என கூறி வரவேற்க

“ ஹ்ம்ம் வா மாப்பிள்ளை ” என காளிங்கனும் கதிரவனை  வரவேற்க தெய்வானையோ முகத்தை தூக்கி வைத்திருந்தார்.

 இரண்டு மாதம் முன் கோவில் பொங்கலுக்கு வந்தபோது கதிர் பேசிச்சென்றதில் கோவமாக இருக்கிறாராம். அதனால் மகனிடம் எதுவும் பேசாது அமைதியாக உட்கார்ந்திருந்தார். அன்னையின் கோவத்தை கவனத்தில் கொள்ளாது,

“  விழி சாப்பாடு தயாரா சாப்பிடலாமா??… ” என கேட்க

“ ஹ்ம்ம் தயார்ங்க ”  என எழில்விழி கூற

“ சரி இரு முகம் கை கால் கழுவிட்டு வரேன் ”  என கூறி  கதிரவன் அறைக்குள் சென்றுவிட தெய்வானையிடம் காளிங்கன்,

“ என்ன தெய்வா நீ ஒன்னும் கதிர்கிட்ட பேசல”  என கேட்க

“ என்னத்தை பேச அன்னைக்கு கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனான் அதை எல்லாம் நான் மறக்கல. நீங்க கூப்பிட்டீங்களேன்னு தான் வந்தேன். மத்தபடி நான் கோவமா தான் இருக்கேன் ”  என தெய்வானை புலம்ப

“ இங்க பாரு தெய்வா நானே உதவி கேட்டு வந்துருக்கேன். நீ வாட்டுக்கு எதாவது பேசி  கெடுத்துடாத ” என காளிங்கன் கூற

“ நான் என்ன பேச போறேன் நீங்க கேளுங்க   அவன் குடுக்கமாட்டேனு எல்லாம் சொல்ல மாட்டான் ” என தெய்வானை பேசிக் கொண்டிருக்கையில் உடை மாற்றி வந்த கதிரவன்,

“ வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம் ” என கூறி உணவு மேஜையில் அமர இட்டிலியையும் தேங்காய் சட்னியையும் பொடியையும் வைத்துவிட்டு பரிமாறி விட்டு காளிங்கனுக்கு தோசைவார்த்து வந்த எழில்விழி அவரின் தட்டில் வைக்க  அதனை கண்டு,

“ விழி அது என்ன தோசை??… ஏன் இட்லி இல்ல??… ” என கேட்க

“ இல்லங்க சித்தப்பாவுக்கு தோசை தான் பிடிக்குமாம் ” என கூறிய எழில்விழியை அழுத்தமாக நோக்கிய கதிரவனுக்கு அவளின் களைப்பு தெரிய

“ அது எல்லாம் வேணாம் எல்லாருக்கும் இட்லியே வை ” என கூறிய கதிரவனின் குரலில் இருந்த அழுத்தத்தில்

“ இல்லங்க அது சித்தப்பா இட்லி சாப்பிடமாட்டாங்களாம் அதான்…. ” என இழுக்க அதில் பொறுமையை இழுத்து பிடித்த கதிரவன்

“ இங்க பாரு நீ எனக்கு தோசை ஊத்துறேன்னு ரொம்ப நேரம்  இந்த நிலைமைல நிக்க வேணாம்ன்னு சொல்லி தான் நானே எண்ணெய் ஒத்துக்கலைன்னு தோசை வேணாம்ன்னு சொன்னே. அதனால் போய் எல்லாருக்கும் இட்லி எடுத்துட்டு வா ”  என கதிரவன் கூற

“ இல்ல சித்தப்பா….. ” என எழில்விழி மீண்டும் இழுக்க

“ இங்க பாரு அது எல்லாம் அவரு சாப்பிடுவாரு. நீ என் பிள்ளையை பெத்து எடுத்துட்டு நல்ல வக்கணையா சமைச்சு போடு உன் சித்தப்பாவுக்கு. இப்போ  நான் சொல்லறதை கேளு ” என கதிரவன் கூறினான்.

   எழில்விழியும் அனைவருக்கும் இட்லியை பரிமாற  அனைவரும் உண்டு விட்டு அமர்ந்தனர். தெய்வானையோ,

“ ஹம்ம்ஹும்…. நல்ல இருக்குடா நீ பேசுறது. வீட்டுக்கு விருந்தாளியா வந்தவங்கள இப்படித்தான்  அசிங்கப்படுத்துவியா??… ” என தெய்வானை கத்த கதிரவனோ,

“ என்ன அசிங்கப்படுத்திட்டேன் ” என அதிராமல் கேட்க

“ உங்க வீட்டுக்கு வந்தா வயிறார சாப்பாடு போடணும் ”

“ ஏன் உங்களுக்கு எல்லாம் இட்லி பத்தலையா??… ” என கதிரவன் கேட்க

“ ஏன் உன் பொண்டாட்டி என் அண்ணனுக்கு தோசை ஊத்துனா என்ன??… எங்களுக்கு பிடிச்ச சாப்பாட்டை  போடணும் அதான் நல்ல விருந்தோம்பல் பண்பு ” என தெய்வானை கூற

“ நீங்க பிடிச்சதை சாப்டனும்ன்னா ஹோட்டலுக்குத்தான் போகணும். இங்க இல்ல. அப்பறம் என்ன சொன்னம்மா விருந்தோம்பலா??… வீட்டில் இருக்குறதையும் உள்ளன்போடு  குடுக்குறதையும் பிடிக்கலைனாலும் ஏத்துக்குறதுதான் நல்ல சொந்தத்துக்கு அழகு.

   நீ வந்ததுல இருந்து பாக்குற தானே அவ ஒருத்தி இந்த நிலமைல எவ்வளவு கஷ்டப்படுறா. உனக்கு அப்படி உன் அண்ணனுக்கு செய்யணும்ன்னா நல்லா செய் இது உன் மகன் வீடு தானே??…. உரிமையா செய் யாரு தடுத்தா ” என கதிரவன் கூற அதற்கு தெய்வானை ஏதோ கூற வர,

“ நீ சும்மா இரு தெய்வா நாம என்ன இங்க சாப்பிடவா வந்தோம் ” என காளிங்கன் தெய்வானையிடம் கூறி அவரை பேசாவிடாமல் தடுக்க

“ அதானே நீ சும்மா இரும்மா மாமா வந்த காரணத்தை சொல்லட்டும் ” என கூற 

“ என்ன கதிரு என்ன பெரிய காரணம் இருக்க போது பிள்ளையை பார்த்துட்டு போலாம்ன்னு தான் ” என காளிங்கன் இழுக்க

“ பிள்ளையா??… அது பிறக்க இன்னும் மூணு மாசம் இருக்கு மாமா ” என கூறிய கதிரவனை முறைக்க முடியாது

“ இல்லப்பா நம்ம எழிலை பார்க்கலாம்ன்னு ”

“ ஓ!!… இம்புட்டு நாலு இல்லாம இப்போ என்ன புதுசா எழிலுன்னு பாசம் வேற ” என கதிரவன் கூற 

“ அதுவும் நம்ம வீட்டு பிள்ளை தானே ” என காளிங்கன் பேச

“ அது இப்போதான் தெரிஞ்சுச்சா இத்தனை நாலு அவளை சும்மா சும்மா முறைக்கும் போது தெரியல ” என கதிரவன் கேட்க அதில் காளிங்கனை அதிர்ந்ததை விட எழில்விழி தான் அதிகம் அதிர்ந்தாள்.

‘ அப்போ எல்லாம் தெரியுமா இவருக்கு ’ என அதிர்ந்து விழித்தாள். 

“ சரி அது எல்லாம் போகட்டும் என்ன விஷயமா வந்துருக்கீங்க மாமா ” என கதிரவன் கேட்க

  காளிங்கன் வெளிப்படையாக பேசிவிடும் எண்ணத்தில்,

“ கதிரு உனக்கு தான் தெரியுமே நான் வீடு கட்டிக்கிட்டு இருக்கேன்னு ”

“  அப்படியா மாமா எனக்கு  தெரியாது. யாரும் சொல்லல ” என கதிரவன் கூற

“ அதான்ப்பா வீடு கட்டுறேன் கொஞ்சம் காசு தேவை படுது ” என கூற

“ என்கிட்டே இப்போ சுத்தமா காசு இல்ல மாமா வெளிய பார்த்துக்கோங்க ” என கதிரவன் பேசிவிட தெய்வானையோ,

“ ஏன் இல்ல ஒரு லோன் போடு அதுல காசு வரும்ல எங்க அண்ணன் கஷ்டம்ன்னு வந்துருக்காங்க நீ உதவி செய்ய மாட்டியா??.. ” என தெய்வானை கேட்க கதிரவன் இருவரையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

   அவன் மனதிலோ இரவு ஸ்வாமிநாதனுடன் பேசியது தான் ஓடிக்கொண்டிருந்தது.  காளிங்கன் வீடு கட்ட பணம் தேவை  பட சாரதா தான் கதிரிடம் லோன் போட்டு வாங்க சொன்னது தெய்வானையையும் ஏற்றிவிட்டது.  அதை ஸ்வாமிநாதன் கதிரிடம் கூறி இருக்க அதில் உறவுகளின் சுயநலத்தில் கடுப்படைந்து விட்டான்.

“ என்னம்மா நான் எதுக்கு லோன் போடணும் இவரோட சொந்த மாப்பிள்ளை, அதான் என் அண்ணன் அவரும் அரசாங்கத்து உத்தியோகம் தானே. என்னையை விட சம்பளம் வேற கூட.  அவரு போடலாமே லோனு ” என கதிரவன் கூற,

 அதில் தடுமாறிய தெய்வானை,

“ அது… அது…. அவனுக்கு கொஞ்சம் கஷ்டம்பா. பணம் தேவை இருக்காம் ”

“ ஓ!!… அப்போ எனக்கும் பணம் தேவை இருக்கு. சொல்ல போனா எனக்கு பத்தாது. நீ இருந்தா கொஞ்சம் குடு ”  என  தெய்வானையிடம் கேட்க

“ உனக்கு என்னடா செலவு??… ”

“ ஹ்ம்ம் என் பொண்டாட்டிக்கு பிரசவம் பார்க்கணும்ல ”

“ அதை அவுங்க அப்பா வீட்டுல பார்ப்பாங்க ” என தெய்வானை எரிந்து விழ

“ என்  பிள்ளைக்கு நான் தான் பார்ப்பேன் அதுக்கு யாரோட யோசனையும் தேவை இல்ல ” என கதிரவன் அலட்சியமாக  கூற

  பணம் தரமுடியாது என கூறியதில் கடுப்பான காளிங்கன்,

“ அதானே இருக்கப்பட்ட வீட்டுல பொண்ணை எடுத்தா இப்படி ஒவ்வொன்னுக்கும்  நாம செலவு அளிக்க வேணாம்பாரு. படிச்சு படிச்சு சொன்னே இந்த இடம் வேணாம் நல்லா இடமா பார்ப்போம்ன்னு எங்க உன் புருஷன் என் பேச்சை கேட்டா தானே ஒன்னும் இல்லாத பிச்சை……”  என காளிங்கன் வார்த்தை முடிக்கும் முன்னே

“ யோவ் நிறுத்தியா!!…. நீ என்னையா என் மாமனார் குடும்பத்தை பேசுறது. அந்த குடும்பத்து மருமகன் கிட்டத்தான் காசை நீ பிச்சை கேட்டு வந்துருக்க. அதை நியாபகம் வச்சுக்கோ ” என  கதிரவனும் கத்த

 

“ ஏய்!!…. நன்றி இல்லாதவன்டா  நீ நான் எவ்வளவு பண்ணிருப்பேன் உன் குடும்பத்துக்கு… ”  என காளிங்கன் பேச ஆரம்பிக்க 

     அதற்குள் காளிங்கனின் பேச்சை கேட்ட எழில்விழி கோவத்தில் இயலாமையில் அதிர்ந்து நிற்க,

   அவளை கண்ட கதிரவன் அவளின் விழியில் தெரிந்த வலியில் மேலும் கோவமாகி,

“ யோவ்!!… உனக்கு அவ்வளவு தான் மரியாதை சொல்லிட்டேன்.  என்ன உதவி பண்ணுன எங்க அம்மாவுக்கு வர வேண்டிய சொத்தை நீ கொடுக்கவே இல்ல. எங்க நாங்க கேட்டுடுவோம்ன்னு சும்மா காசை கொஞ்சம் குடுத்துட்டு கதைவிடுற. அதுவும் என் அண்ணனை மட்டும் படிக்க காசு குடுத்த. அப்புறம் உன் மகளை குடுத்து மருமகனாகிட்ட.

   என் படிப்பு என் உத்தியோகம் எல்லாம் என் உழைப்பு. அந்த திமிரு இருக்கு  என்கிட்ட. சும்மா இந்த பாவலா எல்லாம் உன் தங்கச்சி உன் மருமகன்கிட்ட காட்டு நானும் தாய்மாமனாச்சேன்னு பார்த்தா ரொம்ப பேசுற” என கதிரவன் கத்த காளிங்கன் கோவமாக கதிரவனை முறைத்து விட்டு சென்றுவிட,

    தெய்வானையும் கோவமாக அரிசி மூட்டையை தூக்க முடியாது தூக்கிக்கொண்டு கோவமாக வெளியேற அவரின் கையில் இருந்த மூட்டையை பார்த்து,

“ என்ன இது??… ” என கதிரவன் இரைந்தான். அதில் அதிர்ந்த தெய்வானை,

“ என்னடா இப்போ??…. அரிசி கொண்டு போறேன். என் தலை எழுத்து காலத்துக்கும் கஷ்டப்படணும்…. ” என கூறிக்கொண்டு மூட்டையை நகர்த்திக்கொண்டு  வெளியே செல்ல  எழில்விழியின் அருகில் சென்ற கதிரவன்,

“ என்ன அரிசி இது??… ” என கேட்க நீண்ட நாட்கள் கழித்து கணவனின் முகத்தில் இருந்த கடுமை எழில்விழிக்கு கலக்கத்தை குடுக்க மெதுவாக,

“ ரேஷன் அரிசிங்க ”

“ ஓ!!… அப்போ மஹாராணிகிட்ட குடும்ப நிர்வாகத்தை  குடுத்தா உங்க இஷ்டத்துக்கு பொருளை குடுப்பிங்க வாங்குவிங்க ” என கதிரவன் கடுமையாக கேட்க

“ இல்லங்க…. அது… அது… ” என எழில்விழி தடுமாற

“ என்ன??….. ”

“  அது அத்தைதானேன்னு ”

“ ஓ!!… அப்போ புருஷனைவிட உங்க அத்தை பெருசா. அப்போ அவ்வளவு  தான் எனக்கு இங்க மரியாதை ”

“ ஐய்யயோ!!!… இல்லைங்க ” என விழிகள் கலங்க நின்றவளை கண்டு கோவத்தை கட்டுக்குள் கொண்டுவந்த கதிரவன்,

“ இங்க பாரு இதான் முதலும் கடைசி யும் இந்த வீட்டை விட்டு ஒரு தூசி போனாலும் என் அனுமதி இல்லாம போக கூடாது ” என கர்ஜித்து விட்டு

 அப்புறம் அந்த ஆளு பேசுனா நீ அழுவியா??…  அப்போ உனக்கு என் மேல அவ்வளவுதான் நம்பிக்கையா??.. அப்பிடி பார்க்குற உயிரே போற மாதிரி.  உன்னைய விட்டு குடுத்திடுவேன்னு நினைச்சியா??…” என கேட்ட கதிரவனின் கோவத்தில்

“ இல்லங்க சட்டுன்னு….” என எழில்விழி இழுக்க

“ என்ன சட்டுன்னு???…. என் மேல நம்பிக்கை  இருந்தா என் புருஷன் பார்த்துக்குவாருன்னு கர்வமா நின்னுருக்கணும் இப்படி கலங்கி நின்னுருக்க கூடாது.

   உனக்கு என் மேல நம்பிக்கை இல்லாம என்னைய பிடிக்காம நீ ஒன்னும் என்கூட குடும்ப நடத்தவேணாம்” என கூறிவிட்டு சென்றுவிட கண்ணீருடன் தலையசைத்து கணவனை புரிந்துகொள்ள முடியாது  கீழே தரையில் அமர்ந்தாள்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!