Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் சுவாசம் என் மூச்சில்

உன் சுவாசம் என் மூச்சில் 19

உன் சுவாசம் என் மூச்சில் 19

 

காளிங்கனும் தெய்வானையும் வந்து சென்று ஒரு மாதம் கடந்த நிலையிலும் கதிரவன் எழில்விழி தம்பதிக்கு இன்னும் ஊடல் சரியாகவில்லை.

 கதிரவனுக்கு மனைவி தன் மேல் நம்பிக்கை கொள்ளவில்லையே என்ற கோவம், எழில்விழிக்கோ அன்று கணவன் தனது பக்க நியாயத்தை கேட்காது தன்னுடன் வாழ வேண்டாம் என கூறியது கோவத்தை வரவழைத்து கணவனிடம் இருந்து தள்ளி நிறுத்தியது. 



Advertisement

  அதனால் இந்த ஒருமாதம் இருவருக்குள்ளும் மோ(கா)தலும் இல்லை. அவன் வேலை வேலை என சென்று விட இவள் வீட்டு வேலைகளில் தனது கவனத்தை  வைத்தாள்.

   இன்னும் ஒரு வாரத்தில் வளைகாப்பு என்பதால் சிறுது சிறிதாக வேலைகளை செய்து வீட்டை சுத்தப்படுத்தினாள். அன்று  மதியம் உணவு மேஜையில் அமர்ந்து எதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தாள். எழில்விழி. கதிரவனோடு தேவைக்கு அதிகமா ரெண்டு வார்த்தை கூட பேசிக் கொள்வதில்லை.

  அதனால் கதிரவனும் எதுவும் பேசாது உணவு மேஜையின் நாற்காலியில் அமர்ந்து போனை பார்ப்பது போல தனது மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்.

Advertisement

‘ திமிரு திமிரு உடம்பு முழுக்க திமிரு அதான் சண்டை போட்டவுடன் நானே கெஞ்சணும்ன்னு எதிர்பார்க்குறா???…..ஹ்ம்ம் உன் ஜம்பம் எல்லாம் என்கிட்டே பலிக்காது நான் கதிரவன்டி நீயா வந்து என்கிட்டே  பேசணும்’

Advertisement

என எண்ணிக்கொண்டிருக்கையில் அவனது அலைபேசி அழைக்க அந்த சத்தத்தில் போனை பார்த்த கதிரவன் ஸ்வாமிநாதன் அழைப்பதை கண்டு அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்.

“ என்ன அப்பா ”

“  கதிரு  எத்தனை  பேருக்கு சாப்பாடு சொல்லிருக்க??…. ” என ஸ்வாமிநாதன் கேட்க

Advertisement

“ என்ன??… எதுக்கு சாப்பாடுப்பா??… ”  என கதிரவன்  குழப்பத்தோடு கேட்க

“ டேய் என்ன  விளையாடுறியா வளைகாப்புக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு. நாங்க ஒரு முப்பது பேரு வரோம். சம்பந்தி  வீட்டுல ஒரு முப்பது பேருகிட்ட வருவாங்க போல  அதான் எத்தனை சாப்பாடு சொல்லிருக்க என்னனு கேட்க போன் போட்டேன் ” என ஸ்வாமிநாதன் பேசிக்கொண்டிருக்க கதிரவனோ அதிர்ந்து விட்டான்.

‘ வளைகாப்பு இன்னும் ஒரு வாரத்துலையா நான் மறந்துட்டேனே ’ என எண்ணிக்கொண்டு ஸ்வாமிநாதனிடம்,

“ அப்பா நீங்களே கணக்கு பண்ணி சாயங்காலம் சொல்லுங்க. அப்படியே என்ன வாங்கணும்  நாம என்ன செய்யணும் எல்லாம் சாயங்காலம் நான் பிரீ ஆனவுடன் போன் பண்ணுறேன் சொல்லுங்கப்பா ” என கதிரவன் கூற சுவாமிநாதனும் சரி என கூறி அழைப்பை துண்டித்தார்.

  போனை வைத்த கதிரவனோ கோவமாக எழில்விழியை முறைத்துக்கொண்டு,

“ விழி உனக்கு வளைகாப்புன்னு தெரியும்தானே??.. ” என கேட்க திடீரென கேட்ட கதிரவனிடம்

“ என்ன கேட்குறீங்க??…. ” என புரியாது எழில்விழி முழிக்க

“ ஹ்ம்ம் இன்னும் ஒரு வாரத்துல வளைகாப்புன்னு உனக்கு தெரியும்தானே??… ” என மீண்டும் கதிரவன் கேட்க

  சத்தியமாக எதற்கு கணவன் இந்த கேள்வி கேட்குறான் என எழில்விழிக்கு புரியவில்லை. அவன் தான் இங்கு புதுக்கோட்டையில் ஒன்பதாம் மாதம் இந்த தேதியில் வளைகாப்பு வைக்கலாம் என முடிவு செய்தது. பின் எதற்கு இந்த கேள்வி என புரியாது,

“ என்னங்க நீங்கதானே தேதி முடிவு பண்ணி சொன்னிங்க. அப்புறம் எனக்கு எப்பிடி தெரியாம இருக்கும்??… ” என குழம்பிய பாவனையுடன் கேட்ட எழில்விழியை கண்டு

“ நான் தான் தேதி சொன்னேன். நீ எனக்கு நியாபகபடுத்த வேண்டியது தானே ” என மீண்டும் முறைப்புடன் கேட்ட கணவனிடம்

“ நீங்க நியாபகபடுத்த சொல்லவே இல்லைங்க ” என எழில்விழி கூற

“ ஓ!!… மேடம்க்கு ஒன்னொண்ணையும் சொல்லனுமா??… நான் வெளிய ஆயிரத்தெட்டு வேலை பிரச்சனைன்னு டென்ஷன்ல இருக்கேன். நீ ஒரு வார்த்தை  சொல்லிருக்கலாம்ல இன்னும் ஒரு வாரத்துல வளைகாப்பு. என்னங்க செய்யணும்ன்னு….. எங்க நீங்க தான் முஞ்சியை தூக்கி வச்சுக்குறதையே வேலையா வச்சுருக்கீங்களே ” என நக்கலாக பேசிய கதிரவனிடம் முதல் முறையாக தனது கோவத்தை காட்டும் விதமாக தனது விழிகள் கொண்டு கணவனை முறைக்க,

 அதில் கதிரவன் தன்னை மறந்து அவளின் கண்களை ரசிக்க ஆரம்பித்து விட்டான்.. இதுவரை அவனின் விழியின் விழிகள் பயம் பதட்டம் கலக்கம் பரிதவிப்பு ஏக்கம் சிரிப்பு சிணுங்கல் அழுகை வலி என  அனைத்து உணர்வுகளையும் காட்டி அவனை வசம் இழக்க செய்து உள்ளது.

   ஆனால்  முதல் முதலில் அந்த விழிகளில் கோவத்தை காணும்போது அவனின் கோவத்தை மறந்து புன்னகையுடன்,

“ ஓய்!!… என்ன முறைக்குற??… ” என கதிரவன் சிறு சிரிப்புடன் கேட்க அதுவரை கோவமாக நின்றுகொண்டிருந்த எழில்விழி கணவனின் சிரிப்பில் இப்பொழுது அவனை ரசிக்கும் முறை அவளுடையதானது.

  அவளின் ரசனையான  பார்வையில்,

“ ஓய்!!.. பொண்டாட்டி உன்னையதான் என்ன முறைப்பு??… என்ன ரசிப்பு?…. ஹான்…. ” என கேட்ட கதிரவனின் குரலில் சுய ம் பெற்றவள்,

‘ அச்சச்சோ கோவமா பாத்ததுக்கு சண்டை போடப் போறாரு இதுல ஆஹ்ன்னு பார்பியா ’ என எண்ணி,

“ இல்லங்க சும்மா தான் பார்த்தேன் ” என எழில்விழி பாவமாக கூற

“ அது சரி நான் கூட என்னைய ரசிச்சு பார்குறாளே,  நம்ம பொண்டாட்டிக்கு நம்மள பிடிச்சுருக்குன்னு  நினைச்சேன் அப்பிடி இல்லையா அப்போ ” என கேட்ட கதிரவனிடம்

“ இல்லங்க எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்  தெரியுமா??… ” என சொன்ன எழில்விழியிடம்

“ பிடிச்சவங்கட்ட பேசாம இருக்க முடியாது அது தெரியுமா??.. ஆனா நீ ஒரு மாசமா என்கிட்ட சரியா பேச மாட்டேங்குற அப்போ உனக்கு என்னைய பிடிக்கல ” என கதிரவன் வாயில் சிரிப்பை மறைத்துக்கொண்டு  பேச

  அவனின் விளையாட்டு புரியாது,

“ இல்லையே நான் உங்ககிட்ட பேசிக்கிட்டு தான் இருக்கேன் நீங்க ஒரு மாசம் வேலைன்னு வீட்டுல ஒழுங்கா தங்குறது இல்லை அதுக்கு நான் என்ன செய்ய நான் ஒன்னும் உங்கமேல கோவமா இல்லையே ” என கூறி வேகமாக அடுக்களைக்குள் சென்றுவிட

     கதிரவனோ சிரிப்புடன் அவள் எழுதிகொண்டிருந்த நோட்டை பார்க்க அதில் வளைகாப்புக்கு தேவையானவற்றை எழுதி வைத்திருந்தாள். அவளின் குண்டு குண்டு எழுத்துக்களை வருடிவிட்டு சிறு சிரிப்புடன் அறைக்கு சென்றுவிட்டான்.

   கதிரவன் அதிகபட்சம் அந்த நேர கோவத்தை காட்டிவிட்டு சென்று விடுவானே  தவிர அந்த கோவத்தை எந்நேரமும் காட்ட மாட்டான். அதே போல காளிங்கன் வந்த போது நடந்த சண்டைக்கு பின்னும் அமைதியாக எழில்விழியிடம் ஒன்றும் நடவாதது போல பேச எண்ண, ஆனால் இம்முறை அதிகம் கதிரவனின் வார்த்தைகளால் காயம்பட்ட எழில்விழி முகம் காட்டி பேசாது அமைதியாக தனது கோவத்தை காட்டியது அவனின் கர்வத்துக்கு பெரிய அடியாக இருந்தது.

   இருந்தாலும் ‘ தான் இறங்கி வந்து பேசுவதா’ என்ற கர்வமும் ‘ நீ பேசலைன்னா எனக்கு ஒன்னும் இல்லை போடி ’ என தான் ஒன்னும் அத்தனை பலவீனம் ஆனவன் இல்ல என தனக்கு புரிய வைக்கவும் ஒரு மாதமும் அவனும் கோவத்தோடு சுற்ற,

  ஆனால் அவன் உள் மனம் அவளோடு பேச சந்தர்ப்பத்தை காத்துக்கொண்டிருந்தது அவன் மனம் அறிந்த ஒன்று.   இன்று  அதை பயன்படுத்தி அவனின் சண்டையை சமாதானம் ஆகிவிட்டான்.

    அன்று தான் பேசிய அதிகப்படியான வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்காமல் அவளின் மன காயத்திற்கு மருந்திடாமல் அவன் செய்த சமாதானம் எழில்விழியிடம் சரியான விளைவை ஏற்படுத்தியதா என அறியாமல் அறிய முற்படாமல் அவனின் வேலைக்கு  சென்றுவிட்டான்.

    அடுக்களைக்குள் வந்த எழில்விழியோ தன்னையே திட்டிக்கொண்டிருந்தாள்.

“ அறிவு இல்லடி உனக்கு…. பாரு ஒரு மன்னிப்பு கூட கேட்காம நம்மள பேச வச்சுட்டாங்க. சரியான மானங்கெட்ட மனசுடி  உன்னோடது. இப்படியா  ஆ……ன்னு பார்ப்ப.

    ம்ப்ச் அவருகிட்ட பேசாதவரைக்கும் கூட அவரு மேல கோவம் இருந்துச்சு. ஒரு வார்த்தை நம்மகிட்ட பேசுனவுடன் நமக்கு கோவம் போயிடுச்சு. இந்த பொழப்புக்கு நீ  வாழை மரத்துல நூலை கட்டி தொங்கலாம் ” என திட்டிக்கொண்டே சமையல் வேலையை பார்த்தாள்.

    ஆனால் மனது மட்டும் இந்த ஒரு மாதம் இருந்த அழுத்தம் குறைந்து லேசானது போல இருக்க இத்தனை நாள் வருத்தமாக இருந்த முகத்தில் புன்னகையுடனே சமையலை முடித்தாள்.

   நாட்கள் செல்ல வளைகாப்பு நாளும் அழகாக விடிந்தது. காலையில் எழில்விழி விழித்து குளித்து திருமண புடவையை கட்டி வீட்டிற்கு வரும் அனைவருக்கும் குடிக்க டீ தயார் பண்ண காலை சாப்பாடு மட்டும் கடையில் சொல்லி விட்டான் கதிரவன்.

   மறுவீட்டிற்கு சென்ற பிறகு கதிரவன் எழிலை அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை. அதனால் ரொம்ப மாதங்கள்  செல்லாமல் இன்று அன்னை வீட்டிற்கு செல்வது மனது மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள். கணவனை விட்டு பிரிந்து செல்லும் கவலை மனதின் அடியில் சிறு சிறு முணுமுணுப்பாக அரித்துக்கொண்டிருந்தாலும் இந்த சந்தோசம் அதனை கவனிக்க விடவில்லை.

   ஒரு வழியாக எழில்விழி சொந்தங்களும், காளிங்கனை தவிர கதிரவன் சொந்தங்களும்  வளைகாப்பிற்கு வந்திருக்க  நாத்தனாரை முதல் வளையலை போட வைத்து அதற்கடுத்து அனைவரும் வளையல் போட்டுவிட கடைசியாக கதிரவன் தனது விழிக்கு வளையல் போட வந்தான்.

   அவனும் சில்லென்ற சந்தனத்தை எடுத்து எழில்விழியின் குண்டு கன்னங்களில் தடவி நெற்றில் குங்குமம் வைத்து இரு கைகளிலும் வளையல் போட்டுவிட அதனை கண்ட தெய்வானையின்  அக்கா அகிலாண்டம்,

“ என்ன கதிரு நீ  பொண்டாட்டிய அந்த தாங்கு தாங்குறியாம். அம்மாவை விட பொண்டாட்டிதான் முக்கியம்ன்னு அவ முந்தானையையே பிடிச்சுக்கிட்டு சத்துறியாம்.  அப்படிபட்ட பொண்டாட்டிக்கு  தங்க வளையல் போடல…. ஒரு பரிசு கொடுக்கல…. ” என  குத்தலாக பேச தெய்வானையோ நெஞ்சில் கை வைத்துவிட்டார்.

‘ போச்சு வர வழில ஒரு பேச்சுக்கு என் மனசு ஆத்தமாட்டாம  புலம்புனதை  வச்சு இந்த அக்கா இப்படி கோர்த்துவிடுதே ’ என பயத்துடன் கதிரவனை பார்க்க அவனோ அவரை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

   அவன் ஏதோ பேச போக அவன் அருகில் இருந்த எழில்விழி வேகமாக அவனது கையை பிடித்து தடுத்து விட அதில் அவளின் முகம் பார்த்து அவளின் விழியில் தெரிந்த மறுப்பில் அமைதியாக அகிலாண்டத்திடம்   திரும்பிய கதிரவன்,

“ என்ன பெரியம்மா??… பரிசா…. குடுத்தலாமே….. என் பொண்டாட்டிக்கு இல்லாததா ” என கூறி விழியில் முகத்தை கையில் ஏந்தி நெற்றில் ஒற்றை முத்தம் வைத்தான்.

   அதில் அங்கு இருந்த அனைத்து கிராமத்து ஜனங்களுக்கும் வெட்கமாய் விட  சிறு சிரிப்புடன் அந்த தம்பதியை பார்த்து முணுமுணுக்க  எழில்விழியோ கணவனின் இந்த செயலில் வெட்கம்  கொண்டு குனிந்து கொண்டாள்.

அகிலாண்டமோ, “ என்ன கதிரு  இது எல்லாம் பரிசா??….. ” என நக்கலாக கேட்க

  அதில்  விசேஷத்திற்கு வந்திருந்த வீரநாயகம்,

‘ இந்த பொம்பள செமையா வாங்காம போகாது ’ என எண்ணிக்கொண்டிருக்கையில்

“ என்ன பெரியம்மா இதை போய் பரிசான்னு கேட்குறீங்க??… உங்க வீட்டுக்காரரு வேற பொம்பளைக்கு முத்தம் குடுத்தா எப்பிடி இருக்கும் உங்களுக்கு ” என கதிரவன் கேட்க அதில் அகிலாண்டம் வேகமாக,

“ அந்த மனுஷன் வாயில சூடு வச்சுட மாட்டேன் ” என கோவமாக கூற

“ பார்த்திங்களா பொண்டாட்டிக்கு புருஷன் தர முத்தத்தோட மதிப்பு ” என கதிரவன்  கூற அகிலாண்டத்தின் கணவரோ  முறைத்துக்கொண்டிருக்க அதில் அகிலாண்டம் அடக்கிவாசிக்க ஆரம்பிக்க எழில்விழிக்கோ கணவனின் பதிலில் அவனை ரசித்துகொண்டிருந்தாள்.

    எழில்விழி நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை கதிரின் பெரியம்மா பேச்சிற்கு நிச்சயம் ஒரு சண்டை உறுதி  என எண்ணினாள். மேலும் இப்பொழுதுதான் பிறந்தநாளுக்கு கொலுசு வாங்கிக்கொடுத்துருக்க வளைகாப்பு செலவையும் கதிரவன் பார்த்திருக்க அவனின் வருமானத்தில் இந்த சமயத்தில் தங்கம் வாங்குவது நிச்சயம் முடியாத காரியம்தான்.

   ஆனால் அந்த தங்கத்தை விட கணவனின்  ஒற்றை முத்தம் மனதுக்கு அதிக சந்தோசத்தை குடுத்தது.

   வளைகாப்பு முடிந்து மதிய உணவான ஏழுவகை சாதமும் பரிமாறப்பட்டு விருந்தும் முடிந்து மதியம் ரெண்டரை மணி போல நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் கிளம்ப எழில்விழியை ஆயத்தமாக சொல்ல,  எழில்விழிக்கு  அத்தனை நேரம் இல்லாது இருந்த படபடப்பு கணவனை பிரிந்து செல்லும் ஏக்கம் வருத்தம் என எல்லாம் ஒன்றாக வர  கலங்கும் கண்களை யாருக்கும் காட்டாது அறைக்குள் சென்று அமர்ந்தாள்.

    அவளின் கண்கள் கலங்குவதை தூரம் இருந்து கண்ட கதிரவன் அவளை தொடர்ந்து அவனும் அறைக்குள் செல்ல அறைக்குள் ஏற்கனவே இருந்த சில சொந்தங்கள் கணவன் மனைவிக்கு தனிமை குடுத்து வெளியேறிவிட்டனர்.  கதிரவன்,

“ விழி எதுக்கு கண்ணெல்லாம் கலங்கி இருக்கு யாராவது எதாவது சொன்னாங்களா??… ”  என  கேட்க எழில்விழியோ ஒன்றும் கூறாது வேகமாக கதிரவனை அணைத்துக்கொண்டாள்.

   அதில் அவளின் வயிறு இடிக்க  சிறு சிரிப்புடன் அவளை தன் தோள் வளைவில் அணைத்துப்பிடித்து கொண்டு,

“  ஏய்!!… எதுக்கு இப்படி கிளம்புற நேரம் அழற??.. ”  என கேட்ட கணவனிடம் பதில் கூறாது மீண்டும் கண்ணீரை உதிர்க்க அதில் கடுப்படைந்தவன்,

“ விழி உன்னையதான் கேட்குறேன் எதுக்கு அழற. இப்ப சொல்லு இல்ல இங்க இருக்குற எல்லாரையும் நிக்க வச்சு கேள்வி கேட்கப்போறேன் ” என கூறி வேகமாக அங்கிருந்து நகர அதில் எழில்விழி

“ என்னங்க எனக்கு உங்கள விட்டுட்டு போறது மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. அழுகையா வருது ” என கூற

“ ஹாஹா….  ஹா.. ஹா… ” என சத்தமாக சிரித்த கதிரவன்,

“ ஏன்டி நீ என்ன லூசா??… உங்க அம்மாவீட்டுக்கு தானே போற. என்னமோ தெரியாத இடத்துக்கு போறமாதிரி இப்படி அழுற ” என சிரிப்புடன் கேட்ட கதிரவனை கண்டு உதடு பிதுங்க

“ அப்போ உங்களுக்கு நான் வீட்டுல இல்லைனா ஒன்னும் இல்லையா??… ” என ஏக்கத்தோடு எழில்விழி கேட்க கதிரவனுக்கோ  எரிச்சல் ஆகிவிட்டது.

“ ஏன்டி அங்க எவ்வளவு வேலை இருக்கு நீ என்னென் னா ஒன்னும் இல்லாததை பேசிகிட்டு இருக்க. எல்லாரும் வளைகாப்பு முடிஞ்சா அம்மா வீட்டுக்கு போவாங்க. பிள்ளையை பெத்துட்டு ஒரு மூணு மாசத்துல நீ இங்க வர போற. இதுல என்ன எனக்கு ஒரு மாதிரி இருக்க போது. சொல்லப்போனா சீக்கிரம் பிள்ளை வர போது ன்னு   சந்தோசமா இருக்கு ” என கூறிய கணவனின் வார்த்தைகளில் மனைவி ஏமாற்றம் கொண்டாள்.

‘ அப்போ நான் இங்க இருந்தாலும் இல்லைனாலும் ஒன்னும் இல்லையா இவருக்கு. ஆனா என் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. இவருக்கு நம்மள பிடிக்கலையா??…’ என குழம்பிய  மனம் பலவாறு தனக்குள் சிந்திக்க அவளின் சிந்தனையை பார்த்து,

“ என்னடி யோசிக்குற??…. ” என கேட்ட கணவனிடம் மீண்டும்

“ நீங்க என்னைய பார்க்க அடிக்கடி வரிங்களா??… பிரசவத்த அப்போ  நீங்க என்கூட இருப்பிங்களா???… நீங்ககூட இருந்தா எனக்கு ஒரு மாதிரி தைரியமா இருக்கும் ” என எழில்விழி பேசிக்கொண்டிருக்க அவளை ஒரு மாதிரி பார்த்தவன்,

“ ஏன்டி எனக்கு வேற வேலை இல்லையா??… நீ ஊர்க்கு போனவுடனே உன்னை வால் பிடிச்சுக்கிட்டே வருவேன்னு நினைச்சியா??… ” என கேட்க அந்த குரல் பேதத்தில் எழில்விழி பயந்து

“ இல்லைங்க உங்கள தேடுதுன்னு….. ” என இழுக்க

“ அப்படி என்னைய விட்டு போக கஷ்டமா இருக்குன்னா பேசாம இங்கையே இரு. இங்கையே பிரசவத்தை பார்க்கலாம் ” என கூற

    கணவனின் யோசனைகூட பிடித்தம் தான் எழில்விழிக்கு. ஆனால் சும்மாவே  தெய்வானை எதாவது பேசுவார் இதில் அவள் இங்கையே தங்கிவிட்டால் பிரசவம் பார்க்ககூட வக்கு இல்லை என தன் பிறந்த வீட்டை பேசவாய்ப்பு இருக்கு. அதனால் எழில்விழி,

“ இல்லைங்க அது சரிவராதுல….. ”  என காரணத்தை கூற வர அதை கேட்காது,

“ அதானே உனக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. உன் அம்மா வீட்டுக்கும் போனும். நானும் உன் கூட வரணும் எப்பிடி நடக்கும். அதுவும்  உனக்கு பிரசவ தேதி அன்னைக்குதான் CM பந்தோபஸ்து. அதனால குழந்தை பிறந்தவுடன் போன் பண்ணுங்க லீவு போட்டுட்டு வந்துடுறேன். நீ எல்லாத்தையும் எடுத்து வை நேரமாச்சு சீக்கிரம் கிளம்புனா ராத்திரிக்குள்ள போயிடலாம் ” என கதிரவன் கூறிவிட்டு வெளியே சென்றுவிட எழில்விழி குழப்பத்தோடு அமர்ந்துவிட்டாள். 

எழில்விழியின்  குழப்பமே கணவனுக்கு தன்னை பிடிக்குமா என்பதுதான்.

‘ நம்மள அதிகம் திட்டத்தான் செஞ்சுருக்காங்க  அதோட ஒரு மன்னிப்பு கேட்ககூட யோசிப்பாங்களே, பிடிக்காம இருக்குறதாலதானே நம்மள பார்க்க வரமாட்டேன்னு சொல்லுறாங்க’ என குழம்பிய மனநிலையுடன் கிளம்பினாள்.

   அனைவரிடமும் விடைபெற கதிரவனிடம் தனது விழிகளால் விடைபெற்று வண்டியில் ஏற தெய்வானையோ,

“ எழிலு நல்ல படியா எங்க பேரனை பெத்து எடுத்துட்டு வா ” என கூறி வழி அனுப்ப  அதில் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டாள்.

‘ அது என்ன  பேரன்??…. பேத்தின்னா ஏத்துக்க மாட்டாங்களா??… ” என மனதை மேலும் குழப்பிக்கொண்டு மன பாரத்துடன் தாய்வீட்டிற்கு கிளம்பினாள் எழில்விழி.

   எழில்விழி கிளம்பியவுடன் அனைத்து உறவுகளும் கிளம்பிவிட தனியாக வீட்டில் நின்றுகொண்டிருந்த கதிரவனுக்கு வீட்டின் வெறுமை மனதை தாக்க வேகமாக வேலைக்கு கிளம்பிவிட்டான்.

    இரவு பதினோரு  மணி அளவில் வீட்டிற்கு வந்தவன் அறைக்கு சென்று உடையை மாத்தி கொண்டே பழக்க தோஷத்தில்,

“ விழி  மாத்திரை சாப்டியா??… ” என கேட்க பதில் இல்லாத அமைதியில் திரும்பி படுக்கை பார்த்தவனுக்கு அப்பொழுதுதான் நினைவு வந்தது அவள் ஊருக்கு சென்றது.

“ ச்ச… வேலைல அவ ஊருக்கு போனதையே மறந்துட்டேன் ” என எண்ணிக்கொண்டு உறங்கிவிட,

  இவனுக்கு யார் சொல்வது அது மறதி இல்லை உயிரிலும் உணர்விலும் கலந்த சொல்லப்படாத அறியப்படாத உணரப்படாத காதலின் நினைவுகள் என…..

 

வைகைக் கரை காற்றே நில்லு…….

வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு……

 வைகைக் கரை காற்றே நில்லு……

வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…..

 மன்னன் மனம் வாடுதென்று…..

மங்கைதனைத் தேடுதென்று….

 காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்

காதோரம் போய் சொல்லு……..

                     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!