Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிரில் ஒரு சஞ்சாரம்

உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 10

அத்தியாயம் 10

அசோக் வைஷ்ணவி இருவரும்‌ ரங்கட் வரவே மணி ஒன்பதாகி இருந்தது. அங்கிருந்து ஃபோர்ட் பிளேர் செல்லவே ஐந்து மணி நேரமாகும். வைஷ்ணவிக்கு சரி இந்தியாவுக்கு பெட்டியைக் கட்ட வேண்டியது தான் என எண்ணியிருக்க அசோக் அவளைக் கூட்டிக் கொண்டு செல்ல சுவாரஸ்யமற்று அவனுடன் சென்றாள். வாடகை காரில் மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் சற்று அகலமான, நீளமும் அதிகமான சாலை சுற்றிலும் இரும்பு வேலியுடன் இருந்தது. காரில் ஏறும் போதே ஒருவன் அசோக்கின் கைகளில் ஒரு கோப்பை கொடுத்திருந்தான்.

வைஷ்ணவி அடுத்து இவன் என்ன செய்யப் போகிறான் என இமைக் கொட்டிப் பார்த்திருக்க படபடவென வானிலிருந்து சத்தம் காதைக் கிழித்தது. வைஷ்ணவி அவன் கைககளில் இருந்த கோப்பைப் பார்க்க Inter-Island Helicopter services Andaman and Nicobar Islands என்ற வார்த்தைகள் மின்ன வானில் ஹெலிகாப்டர் தன் இறக்கைகளை படபட வென அடித்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்தது.

வைஷ்ணவி அசோக் இருவர் மட்டுமே அந்த சுற்றும் இறக்கைகளின் கீழ் நடந்து சென்று அதில் ஏறினர். அவர்களது இரு பெட்டிகள் பின்னே வைக்கப்பட நீல நிற இருக்கையில் அமர்ந்தததும் அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டது.



Advertisement

வைஷ்ணவியின் முதல் ஹெலிகாப்டர் பயணம் அது வானூர்தியில் சென்றிருக்கிறாள் தான் ஆனால் இது முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. காற்று முகத்தில் மோத கீழேப் பார்த்தாள். தீவு வளைவாக இருக்க அதில் பச்சை நிற நிலம் பளீரென்று தெரிய சில நொடிகளில் அவை மிகச் சிறிய விளையாட்டு பொம்மை போல் சிறியதாகத் தொடங்கியது. அசோக் அவளை நோக்கி புன்னகைத்தான்.

வைஷ்ணவி அதனை ஆச்சரிய கண்களோடு நோக்கினாள். இந்த பயணம் தொடங்கியதிலிருந்து அவளுக்கு வார்த்தைகளில் விவரிக்க முடியாத புதிய புதிய உணர்வுகளை அவன் உருவாக்கிக் கொண்டே இருந்தான் அசோக். அவளுடைய வலிகள் எங்கே எனத் தேட வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் உயிரோட இருப்பதற்கும் வாழ்வதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வைத்துக் கொண்டே இருந்தான் அவன். ரசிப்பதற்கு ம் கொண்டாடுவதற்கும் ஆயிரம் விடயங்கள் இருக்க வலிகளுக்க்கும் கடந்து போன காலத்திற்குள்ளும் ஏன் ஓடி ஒளிந்துக் கொள்கிறாய் என கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தது அவனது அருகிருப்பு.

கோபம் வியப்பு அன்பு பாதுகாப்பு என அத்தனையும் அவனால் எப்படி தன்னுள் உருவாக்க முடிகிறது அவள் ஆச்சரியமாகி பார்க்க அசோக் பேசினான்.

Advertisement

“ஏ சீனிப் பட்டாசு வெளியில சொல்லாம மனசுக்குள்ள என்னத் திட்டிட்டு இருந்தத் தானே? ஒன்னும் கவலைப்படாதே ஒரு மணி நேரத்தில ஏர்போர்ட் போயிரலாம்”

Advertisement

அவன் சொல்ல அதற்கு,

“பார்ப்போம் பார்ப்போம் அதுக்குள்ள நீ இடையில சுத்திப் பார்க்கிறேன்னு எங்கேயாவது இறங்காம இருந்தா சரி! நல்லவேளை இது ஹெலிகாப்டர்!”

என்று வைஷ்ணவி பதில் தர அசோக் தலையாட்டிப் பேசினான்.

Advertisement

“இந்த வாய் மட்டும் இல்லைனு வை உன்னை எல்லாம்”

அவன் மேலும் பேசும் முன் வைஷ்ணவி முறைக்க இரைச்சல் சத்தம் இருவருக்கும் இடையிலான இன்னொரு சண்டையை அப்போதைக்கு நிறுத்தி வைத்தது. வைஷ்ணவி வெளியில் தெரிந்த அழகை பார்க்கத் தொடங்கினாள். உண்மையில் தனது முகம் பிரதிபலிக்கும் ஆச்சர்யங்களை உணர்வுகளை அவன் வாசித்து விடுவானோ என்று பயம் அவளுக்குள் இருந்தது. அதன் பின் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை அந்தப் பயணத்தில் சில சமயங்களில் மட்டும் அசோக் அவளை நோக்கி கீழே பார் என்று சொல்ல பச்சை பச்சையாக சதுர வடிவில் நிலங்கள் தெரிய அதை தாண்டி நீல நிறக் கடல், அதன் ஓரம் இருக்கும் பச்சை நிறத் தீவு அதில் ஓங்கி உயர்ந்த மரங்கள்! எத்துணை அழகு அது! இயற்கை போன்று ரசிக்கத் தகுந்த ஒரு ஓவியத்தை எந்த ஓப்பியப் போதையில் இறைவன் எனும் கலைஞன் நடித்திருப்பார்.

ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸ் வார்த்தைகளைப் போல, ஒரு அழகான காட்சி என்றென்றும் மகிழ்வையேத் தரும், இன்னும் சொன்னப் போனால் எந்த மனநிலையிலும் மகிழ்வையே தரும்.

ஹெலிகாப்டர் இறங்கும் ஹெலிபோர்டில் இறங்கி அந்தமானின் விமான நிலையத்திற்கு விரைந்தனர். அங்கே ஏற்கனவே துஃவையல் பதட்டத்துடன் நின்றுக் கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் வரவில்லை என்றால் அவன் யோசித்துக் கொண்டிருக்கவே அசோக் வைஷ்ணவியுடன் அந்த விமான நிலையத்துக்குள் நுழைந்தான். அவர்களை கண்டதும் படபடப்புடன் ஓடி வந்தவன்,

“என்ன அசோக் இப்படி பண்ணிட்டீங்க? கொஞ்சம் இயர்லியரா வந்து இருக்கலாம் இல்ல! எனக்கு ரொம்பவே டென்ஷன் ஆயிடுச்சு, பாருங்க இப்ப உங்களுக்கும் டென்ஷன் எங்களுக்கும் டென்ஷன். இனிமேல் கொஞ்சம் பார்த்துக்குங்க”

துஃவையல் சொல்ல வைஷ்ணவி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

‘என்னது இவன் டென்ஷன் ஆனானா? இவன் பதட்டப்பட்டான்னு சொன்னா உலகம் சுத்தறதை நிறுத்திரும். அப்பவும் இவன் மட்டும் சுத்திட்டு இருப்பான். இப்ப சொல்வான் பாரு! அதெல்லாம் பிரச்சினை இல்லை துஃவையல் பார்த்துக்கலாம்!’

வைஷ்ணவி மெலிதான குரலில் அவன் சொல்லப் போகும் பதிலை அவனைப் போலவே பேச அசோக் அதே பதிலை அதே குரலில் பேசினான்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல துஃவையல்! பார்த்துக்கலாம்”

“ஓகே சீக்கிரம் போர்டிங் வாங்க”

என்று துஃவையல் சொல்லிச் செல்ல அவர்கள் உள்ளே சென்றனர். ஏற்கனவே போர்ட் பிளேயரில் அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து பெட்டிகள் கொண்டுவரப்பட்டிருந்தது.

“எப்படியும் வந்துருவீங்கன்னு தெரியும் அதான் முன்னாடியே உங்க ரூம்ல ஃபேக் பட்டிருந்த திங்க்ஸ் எல்லாம் இங்க கொண்டு வந்துட்டோம்”

ரொம்ப நன்றி என துஃவையலுக்கு நன்றி சொல்லிவிட்டு அவசர அவசரமாக உள்ளே சென்றனர்.

விமானம் மீண்டும் சென்னை வந்தடைந்தது. சென்னை வந்ததும் ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின் விசா சரிபார்க்கப்பட்டு சர்வதேச விமானத்தில் அவர்கள் செல்லத் தொடங்கினர். ஸ்டான் வைஷ்ணவியை நோக்கி புன்னகைக்க வைஷ்ணவி பதில் புன்னகை செய்து அடலினைத் தேடினாள். அடலின் ஒரு கைப்பையுடன் அவளை நோக்கி‌ கையசைக்க விசா நடைமுறை எல்லாம் முடிந்து அவர்கள் விமானத்தில் ஏறுகையில் அசோக்கிடம் கேட்டாள் வைஷ்ணவி.

“ஆமா ஹாங்காங்ல எங்கப் போறோம்?”

“அப்ப நீ டிராவல் ப்ரோச்சர்(குறிப்பு) படிக்கவே இல்லையா?”

அசோக் பதில் கேள்வி கேட்க,

“அதெல்லாம் யாரு படிச்சா?”

வைஷ்ணவி விட்டேத்தியாகப் பதிலளித்தாள்.

“இப்பத் தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எத்தனை லட்சம் செலவு பண்ணேன்னு இந்த டூருக்கு சொன்னே! அப்ப எந்த எந்த இடத்துக்கு போறோம் னு கூடப் பாக்கலையா?”

அவர்கள் பேசிக் கொண்டே இருக்கையில் அவர்கள் அருகே வந்த அந்த விமான பணிப்பெண் அவர்களது இருக்கையில் அமர உதவினாள். வைஷ்ணவி தன் கையில் இருந்த கைப்பையில் அவன் தலைக்கு மேலிருக்கும் ஓவர் ஹெட் கம்பார்ட்மெண்ட்ல் வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தான் அசோக்.

“சரி அதெல்லாம் விடு, சொல்லு இப்ப நாம எங்க போறோம்?”

அசோக் பெருமூச்சு விட்டுப் பேசினான்.

“எதுவுமே தெரியாம எப்படி ஒரு டூருக்கு ஓகே சொல்லி இப்படி வர்ற? நீ ரொம்ப தைரியசாலியா முட்டாளானு தெரியலை”

“ஹே ஒண்ணுமே தெரியாதுன்னு எல்லாம் இல்லை. ரொம்ப டிப்ரஸ்ட் ஆ ஃபீல் பண்ணேன். என் பிரண்டு கூட ஒரு அட்வெஞ்சரஸ் டூர் போறதுக்கு முடிவு பண்ணேன் எல்லாமே அவ பொறுப்பு அவ்ளோ தான்”

அவள் சொல்ல அசோக் அவளையே உற்றுப் பார்த்தான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கவே விமான பணிப்பெண் விமானம் கிளம்பப் போவதாக அறிவித்து அதற்குரிய முன்னெச்சரிக்கைகள் அனைத்தையும் ஒரு வீடியோ அளவில் முன்னே திரையில் பார்க்குமாறு அறிவுறுத்த இருவரும் சீட் பெல்ட் ஐ மாட்டி விட்டு அந்த திரையை நோக்கினர். திரையில் தெரிந்த வீடியோ மிக அழகாக இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கலாச்சாரத்தின் நடனத்தில் ஒவ்வொரு விதிமுறைகளும் எடுத்துரைக்கப்பட்டது. சீட் பெல்ட் அணிவதில் இருந்து விமானம் விபத்து ஏற்படும் எப்படி முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதென அத்தனையும் ஒவ்வொரு விதிமுறைகளாக காட்டப்பட அதை ரசித்து கொண்டே பார்த்திருந்தாள். இடையே பணிப்பெண் அனைவரது செயல்களையும் சரிப்பார்த்து தடுமாறியவர்களுக்கு உதவிக் கொண்டு இருந்தாள்.

வைஷ்ணவி அசோக் அந்த வீடியோவின் அழகில் புன்னகைத்து பார்த்துவிட்டு பின் அவளிடம் திரும்பினாள்.

ஒரு வழியாக விமானம் எழும்பி ஆகாயத்தில் பறக்க தொடங்கியது. கிட்டத்தட்ட 5 மணி நேர பயணம் அது. அசோக் அவள் புறம் திரும்பிக் கேட்டான்.

“ஆமா என்ன பேசிட்டு இருந்தோம்?”

“எங்க டூர் போறோம்னு?”

“ஓ”

“இங்க பாரு வைஷு இது முழுக்க முழுக்க எர்த் பேஸ்ட் அட்வெஞ்சர் ட்ராவல். அதாவது உலகத்தினுடைய ஒவ்வொரு நில அமைப்புகளிலும் வித்தியாசமாய் இருக்கிறதை போய் பார்த்து ரசிக்கிறது. நம்ம முதல்ல பார்த்தது தீவு, அடுத்து மலை அப்புறம் காடு பாலைவனம் னு இருக்கும்”

அவன் சொல்லிவிட்டு நன்றாக இருக்கையில் சாய்ந்து உறங்கினான். மற்ற பயணிகள் அனைவருக்கும் ஒரு நாள் ஓய்வு இருக்க இவர்கள் இருவர் மட்டுமே தொடர்ந்து பயணித்து இருந்தனர்.

இடையில் அந்த விமான பணிப்பெண் உணவு கொண்டு வர அதை வேண்டாம் என மறுத்துவிட்டு நன்றாக சாய்ந்த உறங்க தொடங்கினர் இருவரும் வைஷ்ணவிக்கு அலுப்பாக இருந்தது. மதிய உணவு ஏர்போர்ட் லாஞ்சிலேயே முடித்திருந்தனர்.

அன்றிரவு சரியாக எட்டு மணிக்கு ஹாங்காங் விமான நிலையம் வந்தடைந்தனர். அனைத்து பயணிகளுக்கும் சோதனை இருக்க அசோக் மட்டும் எளதில் சோதனை முடிந்து வெளிவந்தான். பெரிதாக அவனிடம் கேள்விகள் எழுப்படவில்லை. வைஷ்ணவி, அசோக்கின் வாழ்வில் மீண்டும் ஒரு அழகிய பயணம் தொடங்கியது. ஹாங்காங் வந்து இறங்கியதும் விசா கட்டுப்பாடுகள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு இருவரும் சுற்றுலா ஏற்பட்டாளர்கள் தேர்வு செய்திருந்த மேரியாட் விடுதிக்கு வர கிட்டத்தட்ட இரவு பத்து மணிக்கு மேலானது. மறுநாள் காலை அவர்கள் ஹாங்காங்கிலிருந்து ஜியாங்சி எனப்படும் சீன மாகாணத்திற்கு செல்ல மீண்டும் விமான பயணம் இருந்தது. மறுநாள் மாலை விமானம் பயணம் இருக்க, ஹாங்காங் நகரத்தில் அவர்கள் சுற்றிப் பார்க்க மதியம் 12 மணி வரை நேரம் கொடுத்திருந்தான் துஃவையல்.

அசோக் வைஷ்ணவி‌ இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர். செவ்வக வடிவிலான வரவேற்பறைத் தாண்டி அறைகளுக்குச் செல்லும் மின்தூக்கியில் வர வெள்ளை பளிங்கு கற்களால் ஆன அறைகள் மின் விளக்கில் ஜொலித்தது. அவர்களுக்கு கடல் தெரியுமாறு அறை ஒதுக்கப்பட்டிருக்க வெள்ளைத் திரைச் சீலை விலக கண்ணாடி முன் விரிந்தது நகரமும் கடலலையாக ஓயாத மனிதனின் தேடலும் கடலும். கறுப்பு வெள்ளையான அலங்கரிப்பு உள்ள அறையில் குளியலறை பணத்தால் மனிதன் வாங்கும் சொகுசு வாழ்வின் அத்துணை அம்சங்களும் நிறைந்திருந்தது. இருவரும் குளித்து முடித்து விடுதி அனுப்பி இருந்த இரவு உணவை உண்டு முடித்தனர். வழக்கம் போல் வைஷ்ணவி உள்ளறையில் உறங்கிக் கொள்ள அசோக் வெளியே முன்னறையில் படுத்து உறங்கினான்.

அதிகாலை மூன்று மணிக்கு வைஷ்ணவியின் அறைக் கதவுகள் தட்டப்பட்டது. வைஷ்ணவிக்கு தற்போது எல்லாம் அசோக்கை பற்றிய பயம் இல்லை. அந்தமானில் அவனுடன் கழித்த தனிமை இரவு ஒவ்வொன்றும் அவனது நடத்தையை தெளிவாக அவளுக்கு எடுத்துரைத்து இருந்தது. வைஷ்ணவி உள்ளிருந்தபடியே பேசினாள்.

“எதுக்கு இந்நேரத்துக்கு எழுப்பி விடுற?”

“சீக்கிரம் வெளியே வா ஹாங்காங் சுற்றி பார்க்கலாம்”

அசோக் பதிலளிக்க வைஷ்ணவி சோம்பல் குரலில் கடிந்துப் பேசினாள்.

“மனுசனா நீ நாலு மணி நேரம் கூட தூங்க விடாம?”

“ஏன் பிளைட்ல தூங்கிட்டு தானே வந்த!”

அசோக் மீண்டும் வம்பிழுக்க வைஷ்ணவி கோபத்துடன் கத்தினாள்.

“இங்க பாரு என் உயிரை எடுக்காத. நீ பாட்டுக்கு தனியா போ நான் வரல.‌ நானும் எல்லாரும் மாதிரியும் காலையில பத்து மணிக்கு சும்மா போய் கடை எல்லாம் பாத்துட்டு அப்படியே டிராவல் ஜாயின் பண்ணிக்கறேன்”

“இப்ப நீ வரப் போறியா இல்லையா?”

அசோக் கேட்க வைஷ்ணவி பற்களை வெறுவிக் கொண்டு பேசினாள்.

“மனுசன் நிம்மதியா தூங்க வேண்டாமா? எப்ப பாத்தாலும் சுத்திப் பார்க்கறேன் சுத்திப் பார்க்கறேன்னு பெரிய உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர்”

“ஏ சினி பட்டாசு நீ வரல நான் பாட்டுக்கு இப்படியே கிளம்பிப் போயிட்டே இருப்பேன்”

அவன் சொல்லிவிட்டு படபடவென வெளியில் கிளம்ப வைஷ்ணவி ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினாள்.

“சரி இரு வரேன்”

அவனுடன் கழித்த ஒவ்வொரு நிமிடமும் அழகழகான அனுபவங்கள்! இந்த சின்ன சோம்பேறித்தனத்திற்காக அந்த அழகான அனுபவங்களை இழக்க வேண்டுமா?! அவன் கூட்டி சென்ற ஒவ்வொரு இடமும் அந்தமானில் எத்தனை உணர்வுகளை அவளுக்கும் விதைத்தது. அத்தகைய அனுபவத்துக்கு இந்த நான்கு மணி நேர தூக்கம் ஈடாகுமா? அவன் காட்டும் உலகம் அலாதியானது. வைஷ்ணவி மனதில் எண்ணங்கள் ஓட மடமடவென உள்ளே சென்று குளித்து வெளி வந்தாள். ஜெட் லாக் டயர்ட்னஸ் எல்லாம் இருந்தது தான் ஆனால் அதையும் தாண்டி அவனது ஆர்வமும் தூண்டலும் அவளை கிளம்ப வைத்திருந்தது.

அதிகாலை மூன்றரை மணிக்கு அவள் வெளிவர அசோக் புன்னகையுடன் நின்றிருந்தாள்.

“பரவாயில்லை சீனிப் பட்டாசு தேறிட்ட!” வைஷ்ணவி அவனது பாராட்டுதலை புறந்தள்ளி அவனை முறைத்துக் கொண்டேக் கேட்டாள்.

“இப்ப எதுக்கு ராக்கோழி கணக்கா இந்நேரத்துக்கு வெளிவர சொன்னே”

“ஹாங்காங் எல்லாம் இருட்டில் பார்த்தால் தான் அழகா இருக்கும் வா”

அசோக் அவளுக்கு பதில் சொல்லி அதிகாலை டாக்ஸியில் சா சான் டென்ங் எனப்படும் காலை சிற்றுண்டி வழங்கும் கடைக்கு அழைத்து வந்தான். அதிகாலை நான்கு மணிக்கு அந்த நகரம் தூங்கியதாகவே தோன்றவில்லை. காணும் இடம் எங்கும் ஒளிவிளக்குகள் இன்னும் ஜொலித்துக் கொண்டே இருந்தது. சிறிய கடை தான் ஆனால் கூட்டம் இருந்தது. உணவுகள் பரிமாறிக் கொண்டே இருக்க பல்கலைக்கழக மாணவர்களையும் வயதானவர்களையும் காண முடிந்தது.

இந்த அதிகாலையில் என்ன செய்வார்கள் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க அசோக் அவளை ஒரு இடத்தில் அமர்த்தி அவனும் அமர்ந்தான். அவர்களிடம் வந்து நின்ற ஆர்டர் எடுக்கும் பெண்ணிடம் அசோக் மிகச் சரளமாகவே அவர்களது மொழியில் பேச வைஷ்ணவி கண்களை விரித்து அவனை நோக்கினாள்.

“காய்பா லூ டிங் ஜூன் வூ டங் ஜா செங் கோய்”

‘இவன் பிறந்ததிலிருந்து ஊர் சுத்திட்டு இருந்திருப்பானோ ஜீபூம்பா சொல்ற மாதிரி ஏதேதோ சொல்றான் இத கேட்டுட்டு அந்த பொண்ணு அமைதியா போகுது உண்மைதான் பேசறானா?’

அவள் மனதிற்குள் நினைத்ததை அவன் கண்களால் உள்வாங்கி அவளைப் பார்த்து முறைத்தான்.

“ஏ சீனிப் பட்டாசு! என்ன பத்தி மனசுக்குள்ள என்ன நெனச்ச?”

அவன் கேட்டதும் வைஷ்ணவி உதடுகளை கடித்துப் பின் பேசினாள்.

“ஏன் மனசுக்குள்ள பேசுனதுக்கெல்லாம் சண்டைக்கு வருவியா?”

“உன்கிட்ட சண்டை போட்டுட்ட்டாலும் அப்படியே திருந்தி அமைதியாடுவ பாரு. உண்மையை சொல்லு! என்னைப் பத்தி என்ன நெனச்ச?”

அசோக் கேட்க வைஷ்ணவி கேலிக் குரலில் பேசினாள்.

“இல்ல நீ பொறந்ததுல இருந்தே ஊர் சுத்திட்டு இருந்தியானு நினைச்சேன். அஞ்சு மணி நேரம் கூட தூங்க மாட்டேங்குற காலையில் நீ எழுந்ததும் இல்லாம என்னை கூட்டிட்டு வர்ற. தூங்கி தூங்காம இங்க வந்தா அவங்க மொழியில் இவ்வளவு சரளமாக பேசுற”

அவள் பேச அசோக் அவளைக் கண்டு கொள்ளாது மீண்டும் அந்த பெண்ணிடம் பேசினான்

“நாயி சாய் சூ சிம்”

இம்முறை வைஷ்ணவி அவளை அடக்கிக் கொள்ளவே முடியாமல் கேட்டாள்.

“ஏன் உண்மையைச் சொல்லு ஜாக்கிசான் பட சப்டேட்டில் பார்த்துட்டு வந்து எதாவது நாய் சாயினு உளறி வைக்காதே. எதை நாய் கறி பூனை கறினு எதை எதையோ சாப்பாடு னு கொண்டு வந்தர்றப் போறாங்க”

அசோக் அவளைப் பார்த்துச் சொன்னான்.

“சிக்கன் கட்லெட் வித் நூடுல்ஸ் வித் அவுட் க்ரீன்ஸ். பால் டீ சக்கரை கம்மியா சொல்லிருக்கேன்”

அசோக் சொல்ல சில நிமிடங்களில் அவன் சொன்ன அத்தனை உணவு வகையிலும் தட்டில் கொண்டு வந்து வைக்கப்பட அசோக் கண்புருவத்தை இருமுறை மேலெழுப்பி எப்படி என்பது போல் பார்க்க இதமான காலையில் அந்த உணவின் சூட்டில் ஆவி பறக்க அதில் அவனது கேலிப் புன்னகை முகம் மெலிதாக மறைந்தது வைஷ்ணவியின் விழிகளில்.

கவிதை

ஒவ்வொரு நிமிடத்தையும்

புதிதாக்கி

பழகிப் போன

வலிகளுக்கு எல்லாம்

விடைக் கொடுக்கும் அவனது

இருப்பு பற்றி

கேள்வி எழுப்பிக் கொண்டே

இருக்கிறது காதலுக்கு தயங்கும் இதயம்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!