Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 14

“டாக்டர் ஜான்வி இல்லியா?” தன்னைப் பரிசோதித்துக் கொண்டிருந்த அந்த இளம்பெண் டாக்டரை நோக்கிக் கேட்டாள் ஜனனி.

ஜான்விட டூட்டி முடிந்து வீட்டுக்குப் போய் விட்டதை அறிந்தும் கூட, சும்மா அந்த பெண் டாக்டரிடம் பேச்சுக் கொடுக்க என்று சும்மா தான் கேட்டாள்.

அதற்கு அந்த பெண்ணோ, “ஏன், எங்களைப் பார்த்தா எல்லாம் டாக்டர் மாதிரி தெரியலையா?” என்றுக் கேட்டாள், முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல்!

ஜனனி கொஞ்சம் அதிர்ந்து போய் விட்டாள். அவளுக்குள் கொஞ்சம் சந்தோசமும் எட்டிப் பார்த்தது!



Advertisement

“ஓ, இங்கே ஜானவியைப் பிடிக்காத ஆட்களும் உண்டு போலேயே!”

பரணி வெளியில் இருந்தான்.

இவளும் அந்த பெண் டாக்டரும் மட்டுமே தனியே இப்போது!

Advertisement

“இல்ல.. எனக்கு அவங்கன்னா செட் ஆகாது, நல்ல வேளையா நீங்க வேற ஆள் இருக்கீங்க, அதான் கேட்டேன்!”

Advertisement

அந்தப் பெண் ஆச்சரியமாக ஜனனியைப் பார்த்தாள்.

அவளுக்கும் ஜானவிக்கும் எப்போதும் கொஞ்சம் ஈகோ கிளாஷ் உண்டு!

ஜான்வியிடம் ஈகோ இல்லை, இவளிடம் தான்.

Advertisement

ஜான்விக்கு கிடைக்கும் அதிகப்படி மரியாதைகள், சமீப காலமாக கொடுக்கப்படும் சலுகைகள், அதிலும் டுயூட்டி விசயத்தில் அவளுக்கு மட்டும் இருக்கும் அந்த ப்லெக்சிபில் டைமிங்க்ஸ்!

இப்போது கூட ஹாஸ்பிட்டல் சார்பில் மிகப்பெரிய அளவில் ப்ரீ மெடிக்கல் கேம்ப் நடந்துக் கொண்டிருக்கிறது.

எல்லோருக்கும் டைட் செட்யூல்கள்! ஜான்வி மட்டும் எக்செப்சன்!

அவளுக்கு மட்டும் கேம்ப் டுயுட்டி இல்லை!

ஆனால், அவளுக்கு தெரியாது, இதற்குப் பின்னால் ஜகது இருப்பதும், விரைவில் ஜானவிக்கும் பரணிக்கும் கல்யாணமே நடக்கப் போவதும்!

தன்னுடன் பணி புரியும் சக டாக்டர் என்றே எண்ணிக் கொண்டு அவள் கொஞ்சம் கடுப்பில் இருந்தாள் ஜான்வியின் மேல்!

அவள் ஜானவியைப் பிடிக்காத இன்னொருப் பெண், அதுவும் எம்டியின் வீட்டில் இருந்தே வந்த பெண், அதுவும் அவரே தனிப்பட்ட முறையில் கூட்டிட்டு வந்திருக்கும் பெண், என்று ஜனனியை தொடர்ந்து ஆச்சரியப் பார்வை பார்க்க, ஜனனி பேச்சைத் தொடர்ந்தாள்.

“டாக்டர், ப்ளீஸ் எனக்கொரு ஹெல்ப் பண்ணுங்க, உங்க எம்டி பரணி, என் பிரன்ட் தான்.

ஒரு சின்ன இச்யூவில் எனக்கும் அவனுக்கும் சின்ன மிஸ் அண்டர்ஸ்டான்டிங் ஆகிப் போச்சு. இப்போதும் அவன் என் மேல் கோபமாக தான் இருக்கான்.

இப்போ எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு தான் என் கிட்ட பேசவே செய்றான், இல்லன்னா அது கூட பண்ணியிருக்க மாட்டான்.

அவனே நினைத்தாலும் அந்த ஜான்வி அவனை என்னிடம் பேச விட மாட்டாள்!

எனக்கு என் பிரன்ட் என் கிட்ட பழைய மாதிரி பேசணும், அதுக்கு அவனுக்கு இப்போ என் மேல இருக்கிற சிம்பதி கொஞ்ச நாள் தொடரனும்! “அவள் பேச்சைக்  கொஞ்சம் இடை நிறுத்தினாள்.

“அதுக்கு, நான் என்ன பண்ணனும்? இந்த சினிமால எல்லாம் வர மாதிரி, உங்களுக்கு கேன்சர்னோ, இல்லை பிரைன் டுயுமர்னோ சொல்லணுமா?” அந்த டாக்டர் நக்கலாக கேட்டாள்.

“ச்சே.. ச்சே அப்படி எல்லாம் உங்களை சொல்ல சொல்லுவேனா, அப்படியே நீங்க சொன்னாலும், சீப் டாக்டரிடம் க்ராஸ் செக் செய்து  பார்த்து விட்டால், நீங்களும் காலி, நானும் காலி, அப்படி எல்லாம் சைல்டிஷ் ஆக எல்லாம் கேக்க மாட்டேன்.”

“அப்புறம் என்ன ஹெல்ப் வேணும் உங்களுக்கு, எனக்கும் ஜானவிக்கும் ஈகோ கிளாஷ் உண்டு தான், அதுக்காக நான் ஒரு போதும் என் ப்ரொபசன, என் எத்திக்ஸ் எல்லாம் விட்டுட மாட்டேன்!” அவள் கறாராக சொல்லி விட்டாள்.

“இல்ல டாக்டர், இன்னிக்குப் பார்த்த ஈசிஜி ல கொஞ்சம் குழப்பம் இருக்கு, எதுக்கும் கார்டியாலிஜிஸ்ட்  கிட்ட ஒபினியன் கேக்கணும்னு மட்டும் சொல்லி, என்னை கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்கணும், ஸ்ட்ரெஸ் ப்ரீயா வச்சுக்கணும்னு மட்டும் சொன்னா போதும் டாக்டர்! ப்ளீஸ், ப்ளீஸ்!”

அந்த பெண் டாக்டரும் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, ஒத்துக் கொண்டாள்.

எப்படி இருந்தாலும்  அவளே கூட அப்படி தான் சொல்லியிருப்பாள், இப்போது இங்கே சீனியர் ஒருவரும் இல்லாத காரணத்தால்!

அதையே இன்னும் கொஞ்சம்  அழுத்தி சொல்லப் போறோம் அவ்வளவு தான் என்று மனதில் நினைத்தவள், ஜனனியிடம் சரி என்றே சொல்லி விட்டாள்.

வெளியில் இருந்த பரணியை அழைத்து, கிட்டத்தட்ட ஜனனி சொன்னதையே சொல்லி, “நம்ம கார்டியாலிஜிஸ்ட் இப்போ கேம்ப்பில் இருக்கிறார் சார். அவர் நாளை மறுநாள் தான் இங்கு வருவார்.

அப்போது அவரிடம் ஒரு ஒப்பினியன் வாங்கிக்கோங்க, இப்போதைக்கு நல்லா தூங்க மெடிசன்ஸ் கொடுத்து இருக்கேன். அவங்கள நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

வீட்டுக்கு வரும் வழியில், “நல்லா தூங்கறதா, எங்க? ஏற்கனவே மனசுக்குள்ள ஆயிரம் இன்செக்யூரிட்டி, இதில் புது இடம் வேறே, அந்த ரூமில் ஏசி கூட இல்லை, பேன் ஒரே கட கட சத்தம்! அந்த சத்தத்திலேயே பாதி தூக்கத்தில் எழுந்துக்கிறேன்!” என்று மெல்ல முணுமுணுப்பாக புலம்பினாள்.

அது பரணிக்கும் கேட்கவே செய்தது!

அவள் இருந்த ரூமின் ஏசி வேலை செய்வதில்லை.

மணியை என்னெவென்று பார்க்க சொன்னாள் பவித்ரா.

“அக்கா, கேஸ் நிக்க மாட்டேங்குது, எத்தனை வாட்டி தான் ஏத்தி ஏத்தி விடறது, பைப்பில் வெல்டு வைக்கிறது?  அதுக்கு ஆயுள் அவ்வளவு தான் அக்கா, பேசாம தூக்கிப் போட்டுட்டு வேற வாங்குக்கா!”

“சரிடா வேற வாங்கிக்கலாம், ஆனா இந்த ரூமில் தான் யாருமே இப்ப தூங்கறது இல்லையே, நியூ இயர் ஆபர் போடும் போது வாங்கிக்கலாம்” என்று பவி சொல்லியிருந்தாள்.

இப்போது அந்த ரூமில் தான் ஜனனி தங்க வைக்கப்பட்டாள்.

பரணி, கார் ஒட்டிக் கொண்டே, டவுனில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற ஏசி டீலர் கடைக்கு, போன் செய்து, ஒரு ஏசி மெசின் அனுப்ப சொல்லி, அன்று இரவே ஜனனியின் ரூமிற்கு ஏசி வந்து விட்டது!

ஜனனியே இதை எதிர்பார்க்கவில்லை!

அவளுக்குள் சந்தோஷ அதிர்வு, கூடவே ஒரு இவனிடம் இன்னும் ஒரு ட்ரை பண்ணலாம் போலேயே என்ற ஆசையும்!

இந்த களேபரத்தில்,கூடவே அவன் பிஸினஸ் கால்களும் வந்து கொண்டே இருந்தன மாற்றி மாற்றி!

அதில், ஜான்விக்கு மறுபடி அழைக்கவே மறந்து விட்டான் அவன்!

அப்படியும் ஜான்வியே இரண்டு மூன்று முறை போன் செய்திருந்தாள்!

ஆனால், அதை பரணி அறியாமல், அவன் பார்மசி சென்று மருந்து வாங்கிக் கொண்டிருந்த கேப்பில் கட் செய்து விட்டவளும் ஜனனியே தான்!

—–

ஜான்வி ரொம்பவும் அப்செட்டில் இருந்தாள்.

இப்படி ஒருமுறை கூட பரணி அவளின் போனை எடுக்காமலோ, அல்லது கட் செய்து விட்டதோ கூட கிடையாது!

போனின் முதல் ரிங்கிலேயே எடுத்து விடுவான்! “என்ன டார்லிங்” என்று கேட்டபடியே!

இன்றோ, அவள் மூன்று நான்கு முறை அடித்தும் கட் செய்து விட்டான்!

என்னமோ தப்பாகவே தோன்றிக் கொண்டிருந்தது அவளுக்கு!

தான் அவ்வளவு தானா அவனுக்கு, அவனின் முன்னாள் காதலியே திரும்ப வந்தவுடன், தான் தேவையில்லாதவளாகி விட்டோமோ?

அவளுக்குள் கழிவிரக்கம் பொங்கிப் பொங்கி வந்தது!

ச்சே. நான் ஏன் என் மனசைக் கட்டி வைக்காமல் போனேன்! அவள் மேலேயே அவளுக்கு கோபம் கோபமாக வந்தது!

அழுதுக் கொண்டே தூங்கி விட்டாள் ஜான்வி!

பாட்டிகள் இருவரும் அந்த பெரிய காரியம் ஒன்றிற்கு சென்றவர்கள், இரவு அவர்கள் வீட்டிலேயே தங்கும் படி ஆகி விட்டது!

பரணியும் ஜனனியை வீட்டின் வாசலில் இறக்கி விட்டவன் அவசர வேலையாக மறுபடி எக்ஸ்போர்ட் ஆபீஸ் போய் விட்டான்!

அவன் வீடு திரும்பும் போது நள்ளிரவு ஆகி விட்டிருந்தது!

ஜான்விக்கு போன் பண்ணாதது அப்போது தான் நினைவிற்கு வந்தது அவனுக்கு.

சரி இப்போது தூங்கிக் கொண்டிருப்பாள், காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவனும் அவன் ரூமிற்கு போய் தூங்கி விட்டான்.

காலையில் எழுந்து ஜான்வியைத் தேடினான்.

அவள் அதிகாலையிலேயே கிளம்பி போய் விட்டாள் என்றார் தமிழ்!

“ஏதோ கோவிலுக்கு போய்ட்டு அப்படியே ட்யூடிக்கு போய்க்கிறதா சொல்லிட்டு போயிருக்கா! சாப்பிடக் கூட இல்ல, மணிகிட்ட சொல்லிட்டு போய் இருக்கா, என் கிட்ட சொன்னா விட மாட்டேன்னு!” என்றார் மேலும்!

பரணி அவளைப் போனில் அழைத்தான். அவள் எடுக்கவே இல்லை!

அவனுக்குள் குழப்பம்! என்ன ஆச்சு இவளுக்கு!

அதற்குள் ஜனனி வந்து விட்டாள்.

வந்தவள், தொடர்ந்து அவனுக்கு வேற சிந்தனை எதுவுமே ஏற்படாத வண்ணம், பேச்சுக் கொடுத்து அவனை விடாமல் பிடித்துக் கொண்டாள் அவன் ஆபீஸ் போகும் வரை.

அதன் பின் கவலை இல்லை, அவர்களுக்கு மாலை வரை பேச நேரம் இருக்காது என்ற தைரியம்!

அப்படி தான் இருந்தது பரணி, ஜான்வி இருவருக்குமே வேலை பிரஷர்!

மாலையும் ஜான்வி வீடு திரும்ப வில்லை!

ஹாஸ்பிட்டலில் நைட் ட்யூட்டி கண்டின்யு பண்ணுவதாக சொன்னவளை, அப்போது அங்கு இருந்த மேன்பவர் ஷார்டேஜ் ஒத்துக் கொள்ள வைத்து விட்டது!

வீடு திரும்பிய பாட்டிகள் இருவரும் ஜான்வியைக் காணாமல் தவித்துப் போய் அவளைப் போனில் அழைக்க, அவள் தான் தொடர்ந்து அடுத்த ஷிப்ட்டில் வேலைப் பார்ப்பதாக சொல்ல, அதைக் கேட்ட, அவர்களுக்கு கோபம் பொங்கி வந்தது!

எல்லாத்துக்கும் காரணம் இந்த ஜனனி சனியன் தான்!

ஜானும்மாவுக்கு ஏதோ மன வருத்தம் ஆகி தான் வீட்டுக்கு வரப் பிடிக்காமல் அங்கேயே இருக்கிறாள்!

என்ன சாப்பிட்டாளோ, எங்க தூங்கினாளோ அவர்கள் மனது அடித்துக் கொண்டது!

விடிந்தவுடன் பரணியைப் பிடி பிடி என்றுப் பிடித்துக் கொண்டார்கள்.

“ஏண்டா, ஒரு நாள் என் பேத்தியை விட்டுட்டு வெளியே போய் இருந்தோம், அவளை இப்படி துரத்தி விட்டுட்டியேடா, நாங்க கல்லு மாதிரி உயிரோட இருக்கும் போதே எங்க பேத்திக்கு இந்த நிலைமைன்னா, எங்க காலத்துக்கு அப்புறம்?

 டீ கனகு இது சரி வராது, இது சரி வராது, அவளை உடனே மூட்டைக் கட்டு, அவளை அவன் அப்பன் கிட்ட கொண்டு போய் விட்டுடலாம்! அங்க மகாராணிய மாதிரி இருக்க வேண்டிய என் பேத்தி, இங்க எதுக்கு கஷ்டப்படனுங்கிறேன்?” ஜகது பொரிந்து தள்ளினார்.

“அய்யோ ஆத்தா, அவ ஏதோ வாலண்டியர் டுயூட்டி பார்க்க ஆசைப்பட்டு அங்க போய் இருக்கா? நீ என்ன அவ என்னமோ கோச்சுக்கிட்டு போன மாதிரி சொல்றே!” பரணி கேட்டான்.

“அப்படி வேலைப் பார்க்க ஆசைப்பட்டவள கூட இந்த கிழவிங்க தாண்டா தடுத்து வச்சுருந்தோம், இப்ப அவ மனசு விசனப் பட்டு தான் போய் இருக்கா!”

“உனக்கு தான் அவ கிட்ட பேசக் கூட நேரமில்லையே, அந்த சீம சித்ராங்கிக்கு  சேவகம் பண்ணவே உனக்கு சரியா இருக்கு! என் பேத்தியும் ஒரு பொண்ணு தானே அவளுக்கு மனசு வருத்தப் படாதா?” கனகுவும் திட்ட ஆரம்பித்தார்.

“அய்யோ கொஞ்சம் நிறுத்துறீங்களா ரெண்டு பேரும்? நான் இப்பவே போய் ஜான்வியை இங்க கூட்டிட்டு வரேன், போதுமா?” என்றவன் காரை வேகமாக எடுத்துக் கொண்டு சென்றான்!

ஹாஸ்பிட்டல் அந்த காலை வேலை கொஞ்சம் மந்தமாகவே தெரிந்தது.

காலை ஓபி பத்து மணிக்கு தான் என்பதால், ரிசப்சன் முன் இருந்த சேர்களில் ஒருவரும் இல்லை!

பிரன்ட் ஆபிஸ் டேபிளில் முகம் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்த ஜான்வி, “ஜானு” என்ற பரணியின் அழைப்பைக் கேட்டு தலையைத் தூக்கினாள்.

ஒன்றும் பேசாமல், ஒரு மவுனப்பார்வை மட்டுமே அவளிடம்!

பரணிக்கு ஒன்றும் விளங்கவில்லை!

“கிளம்பு” என்றான் ஒற்றை சொல்லில்!

“வரல” என்றாள் அவளும் அவனைப் போலவே.

“இப்ப  நீ வரல, எந்த இடம்  யார் என்னன்னு பார்க்க மாட்டேன், தூக்கிட்டுப் போய்டுவேன் உன்னை! அப்புறம் நீ தான் இங்க ட்யூட்டி பார்க்க சங்கடப்பட வேண்டியிருக்கும்!” அவன் மிரட்டினான்.

அவள் மேலும் எதுவும் பேசாமல் கிளம்பி விட்டாள்!

காரில் போகும் போது, அவள் மவுனம் தொடரவே , அவன் பொறுக்க முடியாமல், “ஏன் ஜானு இப்படி பண்ணிட்ட?” என்று கேட்டான் பரணி!

அவள் ஒன்றும் சொல்லாமல் முகத்தை வெளிப்பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவன் முகத்தைத் திருப்ப, அவள் கண்களில் லேசாக ஈரம்!

“அழாத ஜானு, நீ இப்படி இருப்பது என்னை இன்சல்ட் செய்ற மாதிரி இருக்கு” என்றான்.

அவன் சொன்னவுடன் அவளின் அழுகை அதிகமானது!

“ஏய்,” என்று அவன் ஏதோ சொல்ல வருவதற்குள் வீடே வந்து விட்டது!

அவள் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு இறங்கினாள்.

பாட்டிகள் இருவரும் அவளை வேகமாக எதிர்கொண்டு, அணைத்துக் கொண்டனர்.

அவர்கள் நால்வரும் அவள் வீட்டுக்குள் சென்றனர்.

ஜகது அவளுக்கு குடிக்க கொண்டு வர என்று வீட்டிற்குள் போக, கனகுவும் பின்னாலே சென்று விட்டார்.

“ஏன் ஜானு இப்படி இருக்க? என்கிட்ட என்ன கோபம் உனக்கு, நீ போன் பண்ணிய போது நான் டாக்டர்கிட்ட பேசிட்டு இருந்தேன், அதான் கட் பண்ணினேன். அப்புறம் தொடர்ந்து போன், உன்கிட்ட பேசணும் நினைச்சப்போ, போனில் பேட்டரி அவுட்!

ப்ளீஸ்டி புரிஞ்சுக்கோ” என்றான்

“நான் உங்கள புரிஞ்சிகிட்டு தானே, உங்களுக்கு சங்கடம் வேண்டாம்னு ஒதுங்கிப் போறேன், ஏன் என்னை அதையும் செய்ய விட மாட்டேங்கிறீங்க!”

“என்ன புரிஞ்சுகிட்ட, என்ன சங்கடம், எதுக்கு ஒதுங்கிப் போகணும்?”

“ஜனனியா, ஜான்வியான்னு உங்களுக்கு சங்கடம் வரக் கூடாதுன்னு தான்!”

“என்ன உளர்ற?”

“உளற எல்லாம் இல்ல, ரியாலிட்டிய சொன்னேன்!

நான்.. “ ஜான்விக்கு குரல் திக்கியது.

“உங்க லைபில் சும்மா ஒரு ஆறு மாசம் வந்துட்டு போய் இருக்கிற ஒரு பாசிங் க்ளவுட்!

வந்தேன், இப்போ போகப்போறேன், ஆனா ஜனனி தானே உங்களுக்கு எல்லாம்!

அதான் நான் உங்களுக்கு தொந்தரவு கொடுக்காம விலகி நிக்கிறேன்!” அவள் உதடுகள் துடி துடிக்க திணறி திணறி ஒரு வழியாக சொல்லி முடித்தாள்!

பரணி அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டான்!

“என்னடி சொல்றே, இப்படி எல்லாம் கூட உனக்கு நினைக்க வருமா, என்னோட எக்ஸ் வந்தவுடன், உன்னை விட்டுட்டு அவ பின்னாடி போய்டுவேன் நீ நினைச்சியா, இதுக்கு மேல் என்னை உன்னால இன்சல்ட் பண்ண முடியாது!

ஏண்டி இப்படி எல்லாம் யோசிக்கிற? அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லன்னா. நெஞ்சு வலின்னா.

 அவ சொன்ன எல்லாம் ஹார்ட் அட்டாக் சிம்டம்ஸ்!

இது ஏதுடா வம்பா போச்சு, இவளுக்கு நம்ம வீட்டில் வச்சு எதுவும் ஆகிடுச்சுன்னா, நாம தானே பதில் சொல்லித் தொலைக்கனும்னு தாண்டி அவளை நானே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய் கூடவே இருந்துப் பார்த்துகிட்டேன்!

மத்தபடி அவ மேல் எனக்கு ஒண்ணும் கிடையாது!

அன்னிக்கு கூட உன்னை கூப்பிட தான் எப்படா விடியும்னு காத்திருந்து அவசர அவசரமா ஏர்போர்ட் வந்தேன்.

வர வழியில் ஆடிட்டர் கிட்ட இருந்து போன்.

அவரைப் பார்க்க போன இடத்தில், அதே காம்ப்ளெக்சில் இன்டர்வியூக்கு வந்திருந்த அவ, என்கிட்ட வந்து பரணி, நான் பீரியட்ஸ் ஆகிட்டேன், உடனே குளிக்கணும், நல்ல வேளையா நீ என் கண்ணுல பட்ட, இல்லன்னா நான் அவசரமா ஒரு பிஜி தேடி பணம் கட்டி குளிக்க லேட் ஆகும் சொல்லி கெஞ்சி கேட்டா.

நானும் தங்கச்சிகளோட பிறந்தவன் தானே, அதனால நான் ஒரு மனிதாபிமான முறையில்  தான் அவளை அன்னிக்கு இங்க தங்க கூட்டிட்டு வந்தேன்!

நான் அவளுக்கு செஞ்சது ஒரு ஹெல்ப் தான், நீ தாண்டி என் மனசு பூராவும் இருக்க!” என்றவன், அவளின் முகத்தை எடுத்து தன் நெஞ்சில் சாய்த்தவன், “நீயும் கேளு, என் ஹார்ட் ஜானு ஜானுன்னு தான் சொல்லும்” என்றான்.

தலையைத் தூக்கிக்கொண்டவள், மெல்லக் கேட்டாள்.

“எந்த ஜானு? பழைய ஜனனியா, இந்த ஜான்வியா?”

அவ்வளவு தான் பரணி ரவுத்திரமானான்!

ஓங்கி ஜான்வியின் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான்!

அவள் கண்களில் கண்ணீர்!

அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டு தொடர்ந்து கண்ணீர் விட்டாள்.

அவளை அறைந்து விட்டு, கோபத்துடன் திரும்பி நின்று பல்லைக் கடித்துக் கொண்டு, கைகளை முறுக்கி கொண்டு சில நிமிடங்கள் நின்றவன், பின் மீண்டும் அவளிடம் வேகமாக திரும்பி வந்து, அதே கோபத்துடன் அவள் முகத்தை நெருங்கி,

“வாயாடி, இது, நான் இவ்வளவு எடுத்து சொல்லியும், புரிஞ்சுக்காம, சொன்னதையே சொல்லிட்டு இருக்கிறது, இந்த வாய் தானே அதை..”  என்று சொல்லிக் கொண்டு வன்மையாக கவ்விக் கொண்டான்.

தன் காதலை, அவளுக்குள் ஆழமாக செலுத்தி புரிய வைக்கும் வகையில் ஆழ்ந்த மற்றும் வன்மையான முத்தத்தின் மூலம் புரிய வைத்தான்!

வெளியே ஜகது மற்றும் கனகுவின் அரவம் கேட்டு அவளை விட்டவன், வேகமாக பாட்டிகளைத் தாண்டிப் போனான்.

பாட்டிகள் இருவரும், ஜான்வியின் நிலையைக் கண்டு பதறி விட்டனர்!

“அய்யோ அடிச்சுட்டானா இந்த பாவி, அய்யோ, இப்படி என் பேத்திக்கு கன்னம் வாயெல்லாம் சிவந்து கண்ணிப் போய் இருக்கே, டேய் பரணி ஏன்டா இப்படி பண்ணி வச்சுருக்கே?”

கனகு மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

“அவன் கன்னத்தில் மட்டும் தான் அடிச்சுருக்கான்!

ஓ, அப்ப அடியில ஆரம்பிச்சு, கடியில முடிஞ்சுருக்கு! அப்ப அவங்களே சமாதானம் ஆகிடுவாங்க, நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்த சீமை சிறுக்கிய விரட்டி விடறது மட்டும் தான்!”

இருவரும் ஜனனியின் திடீர் சுகக்கேடு பற்றி அறிந்து கொண்டு, அவளை சந்தேகக் கண்ணோடு தான் பார்த்தனர்.

உடனே பரத்திற்கு போன் போட்டு, இங்கு நடந்ததைப் பற்றி சொல்ல, “எனக்கும் அதே டவுட் தான் ஆத்தா, அவளுக்கெல்லாம் ஒரு கேடும் வந்திருக்காது, சும்மா அண்ணனை ஏமாத்திக்கிட்டு இருக்கா, இந்தா, நான் வரேன், வந்து அவளுக்கு ஆப்பு அடிச்சு விடறேன்”  என்று சொல்லி போனை வைத்தான் அவன்.

வந்தவன் கையில் ஒரு புது போனோடு வந்தான். அது போன் அல்ல, ஆப்பு! அது தெரியாமல் உட்காரப் போகிறாள் ஜனனி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!