உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 12
அத்தியாயம் 12
வைஷ்ணவி சிறிது நேரம் கண் மூடி நின்று இருக்க அசோக் சற்று தள்ளி கீழே படிகளில் இறங்கினான். சில நொடிகள் அல்லது சில நிமிடங்கள் வைஷ்ணவி தன்னுடைய மனது என்ற ஆர்ப்பரிக்கும் கடல், ஆழ்கடல் போல் அசைவற்று நிற்கும் வரை அவ்விதமே நின்றிருந்தாள். பின் மெல்ல அங்கிருந்து கீழே இறங்க அசோக் அவளுக்காக காத்திருந்தான். மணி கிட்டத்தட்ட ஒன்றை நெருங்கி இருந்தது.
‘சத்தியமா நேரத்துக்கு ஹோட்டலுக்கு போக முடியாது அசோக்கிடம் கோபித்துக் கொள்ள ஒன்றுமில்லை’
அவள் சிறிது அமைதலாகவே அவனிடம் கேட்டாள்.
Advertisement
“இந்த தடவை என்ன பண்ண போற? ஹெலிகாப்டரா இல்லை தனி ஜெட்டா?”
அவள் கேட்க அசோக் தனது பேண்ட் பாக்கெட்டை இருபுறமும் எடுத்துக்காட்டி அவளிடம் பேசினான்.
“பட்ஜெட் தாங்காது மா! உன்னைக் கூட்டிட்டு ஊர் சுத்துறதுக்குள்ள மொத்தமா ஓட்டாண்டியா போயிடுவேன் போல வா வா சீக்கிரம் போலாம்!”
Advertisement
அசோக் அவசரப்படுத்த வைஷ்ணவி அவனது செய்கையில் சிரித்துக் கொண்டே அவனுடன் நடந்தாள். சற்றுமுன் அவன் மேல் இருந்த கோபமும் எரிச்சலும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துப் போயிருந்தது.
Advertisement
அந்த மாற்றத்தை அவளுள் எவ்வாறு அவன் நடத்துகிறான்? அவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டே நடக்க ஓரிடத்தில் அசோக் கால் டாக்ஸியில் அவளை அவசர அவசரமாக ஏற்றி தானும் வண்டியில் ஏறினான். வண்டி நேராக ஹாங்காங் ஏர்போர்ட்டுக்கு செல்ல பணித்தான். வைஷ்ணவி கண்கள் ஈடுங்க அவளைப் பார்க்க,
“ஹோட்டல் செக்கின் செக்கவுட் ப்ரொசீஜர் எல்லாம் பார்க்கச் சொல்லிட்டேன். ஏற்கனவே நான் டைரக்ட்டா ஏர்போர்ட் வரேன் னு துஃவையல் கிட்ட சொல்லிருக்கேன்”
அசோக் சொல்லிவிட்டு இருக்கையில் தலைசாய வைஷ்ணவி நீ திருந்தவேப் போறதில்ல என்று தலையை ஆட்டிவிட்டு அமைதியாக கண் மூடி அமர்ந்தாள். அந்த புத்த ஆலயத்தில் உணர்ந்த அதிர்வற்ற நிலை அவளுக்கு இன்னும் வேண்டியதாக இருந்தது. எந்த சலனங்களும் இல்லாத அதிர்வற்ற நிலை.
Advertisement
வைஷ்ணவி கண்மூடி அமர்ந்திருக்க அசோக்கிற்கு அது நல்லதாகவே பட்டது. ஒருவேளை கண்களை திறந்தால் சீனிப் பட்டாசு வெடிக்கும் சத்தம் காதில் கேட்க முடியாது அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். நல்லவேளை பயணம் முடியும் வரை வைஷ்ணவி கண்களை திறக்கவே இல்லை. அமைதியாகவே இருந்தாள்.
ஒரு வழியாக அவர்கள் ஹாங்காங் ஏர்போர்ட் வந்தடைய அசோக் வைஷ்ணவி இருவரும் அவசர அவசரமாக ஓடினர். வழக்கம் போல அவ்விடம் துஃவையல் சற்று சுணங்கிய முகத்துடன் நின்றிருந்தான்.
“அசோக் தயவு செய்து இன்னொரு தடவை இப்படி பண்ணாதீங்க உங்களால நான் பிபி டேப்லட் நாலு போட்ருக்கேன்”
அவனுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள் வைஷ்ணவி.
“இனி நாங்க கரெக்டா வந்துடுறோம்” அசோக் அதற்கு ஆமோதிப்பாகத் தலையசைத்து செல்ல சீன மாகாணம் ஜியாங்ஜிஜே செல்லும் விமானத்தில் செல்ல ஆயத்தம் ஆகினர். துஃவையல் விமான டிக்கெட் கேன்சல் ஆகாதவாறு பேசி ஒரு வழியாக அதிகாரிகளிடம் பேசி அசோக்கையும் வைஷ்ணவியையும் அழைத்து வந்தான். பயணிகள் அனைவரும் நின்றிருக்க ஸ்டான் வைஷ்ணவியைப் பார்த்து புன்னகைத்து, ஏன் தாமதம் என்பது போல் கைகளை சைகை செய்து காண்பிக்க வைஷ்ணவி அவனை நோக்கி ஊர் சுற்றி வந்ததாக சைகை காண்பித்து அவனை நோக்கிச் சென்றாள். அங்கே அவள் ஸ்டானுக்கு விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க அசோக் தனது பைகளை சரிபார்த்துவிட்டு திரும்பினான். ஸ்டானும் வைஷ்ணவியும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. முக்கியமாக அவர்கள் அருகில் பென்னி நிற்பதும் தெரிந்தது.
அசோக் முகத்தில் சிந்தனை ரேகை பரவ அதற்குள் துஃவையல் அவனை அழைக்கவும் சிந்தனை கலைந்து அவனை நோக்கிச் சென்றான். அதன் பின் அரை மணி நேரத்தில் விமானம் புறப்பட அந்த விமானம் ஷாங்காய் வழியாக ஜியாங்ஜிஜே விமான நிலையத்திற்கு இரண்டு மணி நேர பயணத்தில் வந்தடைந்தது. அங்கிருந்து வூலிங்கியான் என்ற சிறிய நகரத்திற்கு ஒரு சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். பயணியர் அனைவரும்.
அவர்கள் அங்கிருந்த லீடிங் மென் விடுதிக்குச் செல்ல மணி நான்குக்கு மேலாகி இருந்தது. அந்த விடுதி ஒரு நதிக்கரை தாண்டி அடுக்கடுக்காக ஹோட்டல்கள் கட்டப்பட்ட ஒரு சிறிய நகரத்தின் முதன்மையான தங்கும் விடுதியாக இருந்தது.
பலமாடி கட்டிடங்கள் அடுத்தடுத்து இருக்க அதனுடைய சாளரங்கள் அதிகமாக கண்ணாடியில் இருந்தது. அந்த விடுதியில் இருந்து நேராக பார்க்கவே ஓங்கி உயர்ந்த மரங்களும் அதனை சூழ்ந்து அழகிய மலைத்தொடர்கள் கண்முன்னே பெரிய அசுரர்கள் போருக்கு அணிவகுத்து நின்றிருந்தது போல் காட்சி தந்தது.

அப்பப்பா! உலகம் எவ்வளவு அழகானது! ஏன் எல்லோரும் உலகம் முழுவதும் பயணிக்காது வெறும் பசிக்காகவும், அடுத்தவர்களின் அபிமானத்திற்காகவும் மற்றவர்களின் கட்டுப்பாடுகளுக்குள்ளேயே வாழ்கிறார்கள். தான் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமற்றது என்று தோன்றியது வைஷ்ணவிக்கு
எல்லை வகுத்து அதுவே பாதுகாப்பு என்ற மனநிலை போதுமா நம்மை நான்கு சுவர்களுக்கான ஒரு சிறைக்குள் கட்டி வைக்க? இந்த உலகம் எவ்வளவு விசாலமானது! கண்முன் தெரியும் ஒவ்வொரு அழகையும் ரசித்து முடித்து வாழ வெறும் அற்ப அறுபது எழுபது ஆண்டுகள் போதுமானதா?
அந்த குறுகிய வாழ்வின் முழுமைக்கும் மற்றவர் நமக்காக விதிக்கும் எதிர்பார்ப்புகளுக்குள் நம்மை நாம் சுருக்கிக் கொள்வது சரிதானா? இத்தனை வயதில் திருமணம், இத்தனை வயதில் வேலை, இத்தனை வயதில் சம்பளம், இத்யாதி இத்யாதி.
அவை அனைத்தையும் ஒன்றும் இல்லாத அற்பக் கூற்றுகளாக இயற்கை முன் நின்றது. வாழ்வதற்கும் உயிரோடு இருப்பதற்குமான மலையளவு வித்தியாசத்தை அந்த மலைத்தொடர்கள் காற்றைக் கிழித்து எழுதிக் கொண்டு இருந்தன.
வில்லியம் வேர்ட்ஸ்வேர்த் என்ற ஆங்கில கவிஞனின் வார்த்தைகள் நினைவு வந்தது. ‘What man has made of man’ இயற்கையை நேசிக்காது மனிதன் மனிதனுக்கு என்ன செய்துக் கொண்டான்?
அவள் அந்த காட்சியையும் கவிஞரின் வரிகளையும் யோசித்து இருக்க அசோக் குளித்து முடித்து அந்த முன்னறைக்கு வந்தான். அறைகள் அனைத்தும் விசாலமாக இருந்தது.
முக்கியமாக அங்கங்கே பெப்பா எனச் சொல்லப்படும் பன்றி உருவ கார்ட்டூன் பொம்மைகள் இரண்டு இரண்டாய் வைக்கப்பட்டு இருந்தது.
“வைஷு இங்க தான் பக்கத்துல ஃஜியா புத்த கோயில் இருக்கு! ஒரு பத்து நிமிஷ நடை தான். ஒரு கிலோ மீட்டர் கூட இருக்காது. வர்றீயா போயிட்டு வரலாம்?”
அசோக் கேட்க வைஷ்ணவி அவனை தீர்க்கமாகப் பார்த்தாள். அந்தப் பார்வைக்கு பேசாமல் போய்விடு என்பது அர்த்தமாக இருக்கலாம். அதை ஆமோதிப்பது போல் அவளே வாய் திறந்துப் பேசினாள்.
“கால் எனக்கு ரொம்ப வலிக்குது அசோக். ரொம்ப டயர்டா இருக்கு நாளைக்கு காலையில நான் உன்கூட ட்ராவல் பண்ணணும்ல, இப்ப நான் வரல”
அவள் சொல்ல அசோக் தோளைக் குலுக்கி விட்டு தன்னுடைய வாக்கிங் காலனியை சரி செய்து வெளியே நடந்தான். சிறிது நேரம் அறையில் இருந்த வைஷ்ணவி பின் எழுந்து வெளியே வந்தாள். அவள் வரவேற்பறைக்கு வர ஸ்டான் பென்னி இருவரும் நின்று இருந்தனர். அருகே லிடியாவும் லிடியாவின் தோழி ரெய்ச்சலும் பேசிக் கொண்டிருந்தனர்.
வைஷ்ணவி அவர்களைத் தாண்டி பார்வையைத் திருப்ப அடலின் காப்ரியேல் தம்பதியர் அமர்ந்திருந்தனர். ஜியாங்ஜிஜே விமான நிலையத்தில் தான் அவள் கண்களில் பட்டனர். அடலின் இப்பொழுது வரை அவளை ஒரு குறுகுறு பார்வையோடு தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அடலினைப் பார்த்ததும் வைஷ்ணவி முகம் முழுவதும் புன்னகையாக நேராக வந்து நின்றாள். வந்த விருந்தினர்கள் அனைவருக்கும் முன்னறையில் ஒரு கண்ணாடிக் குடுவையில் பால், சர்க்கரை கலக்காத மூலிகை தேநீர் வைத்திருந்தனர். அதன் அருகே கண்ணாடி குவளைகள் இருந்தது. அதில் ஒன்றை எடுத்து தனது மனைவிக்கு ஊற்றி கொடுத்த காப்ரியேல் அருகில் அமர்ந்த வைஷ்ணவிக்கும் ஒரு குவளையில் ஊற்றி நீட்ட வைஷ்ணவி அதை எடுத்து அருந்தினாள். சர்க்கரை இல்லாத தேநீர் தான் ஆனால் ஏதோ ஒரு சுவை இனிமையாக இருந்தது. அதுவும் அங்கு நிலவிய மெலிதான குளிருக்கு இன்னும் இதமாக இருந்தது.

மாலையாகி விட்டதால் அதிக குளிரும் இல்லாது அதிக வெயிலும் இல்லாத அழகான காலநிலையாக இருக்க மூவரும் கண்ணாடி சுவரின் பின் தெரிந்த மலைத்தொடரை ரசித்து நின்றிருந்தனர்.
“ஸ்டான் கிளம்பலாம்” பென்னி அவனை அழைக்க ஸ்டான் ஒரு நிமிடம் என்பது போல் அவனை நிறுத்திவிட்டு வைஷ்ணவியிடம் வந்து நின்றான். வைஷ்ணவி ஸ்டானை நோக்கித் திரும்பினாள்.

“நாங்க இங்கதான் ஃஜியா கோயிலுக்கு போறோம் நீயும் வர்றீயா?”
ஸ்டான் ஆங்கிலத்தில் கேட்க லிடியா பென்னி ரெய்ச்சல் எல்லோரும் வாயிலில் நின்று இருந்தனர். அசோக் இல்லாது எப்படி செல்வது வைஷ்ணவி தயங்கி நிற்க அடலின் பேசினார்.
“நாங்களும் அங்க தான் போறோம் நீயும் எங்களோட வாயேன்”
அடலின் சொல்ல காப்ரியேல் குழப்பமாக அடலினைப் பார்த்தார். அடலின் கண்களில் சைகை காண்பித்து அமைதியாக இருங்கள் என்று சொல்ல அவர் ஆமாம் என்று பெரிதாக தலையசைத்தார்.
அதன் பின் ஆறு பேருடன் வைஷ்ணவியும் இணைந்துக் கொண்டாள். போகும்போது வைஷ்ணவிக்கு மெலிதான குற்றவுணர்வு இருந்தது. அசோக் இருமுறை வற்புறுத்தியும் அவன் கூட போகல இப்ப இவங்க சொன்னதும் கூட போனா அசோக் தப்பா நினைப்பானா?
ஒரு நொடி அவளுக்கு தயக்கம் மேலிட்டது.
‘ம்ஹூம் நினைக்க மாட்டான் வந்துட்டியா நீ வந்ததே பெருசு என்று தான் நினைப்பான்’
அவள் மனதிற்குள் சொல்லிவிட்டு நடக்க அதே போல் தான் அங்கேயும் நடந்தது. அது மிகப் பழமையான புத்த கோயில் அடுக்கடுக்காக இருந்தது ஒரு ஒரு மணி நேரம் போதுமானது, அந்த கோயிலை பார்ப்பதற்கு. இவர்கள் செல்லும் போது மணி ஐந்து ஆகி இருந்தது. குன்று ஏற ஏற மூன்று வாயிற் கோயில்கள் இருக்க அசோக் முதல் கோயில் வளாகத்தைச் சுற்றி பார்த்து இருந்தான். அவர்களை தூரத்தில் இருந்து பார்த்ததும், அவர்களில் வைஷ்ணவியைக் கண்டதும் அவன் விழிகள் உயர்ந்தது. நேரே அவர்களை நோக்கி வந்தான். அடலின் காப்ரியேலிடம் கண்ஜாடை செய்து நின்றார்.

“ஏ வைஷூ நான் கூப்பிடும் போது வரலைன்னு சொன்ன!” அசோக் வைஷ்ணவியிடம் தமிழில் கேட்க
ஸ்டான் மெலிதான புன்னகையுடன் வைஷ்ணவியைப் பார்த்தான். அசோக் அவளிடம் சண்டை இடுவதாகத் தோன்ற அசோக்கிடம் ஆங்கிலத்தில் பேசினான்.
“அவங்க வரமாட்டேன் தான் சொன்னாங்க நான் தான் இல்லை நாங்க எல்லாரும் வாங்கன்னு சொன்னதும் வந்துட்டாங்க”
ஸ்டான் சொல்ல அசோக் முகத்தில் மெலிதான ஏமாற்றம் கோபம் பொறாமை ஏதோ ஒரு உணர்வு சட்டென்று தோன்றி மறைந்துப் போனது. அதை யாரும் கவனிக்கவில்லை அடலினைத் தவிர. அதைக் கண்டதும் அடலின் முகத்தில் மெலிதான வெற்றிப் புன்னகை தோன்றியது.
வைஷ்ணவியோ அசோக்கை கண்டதும் அவன் அருகில் வந்து நின்றாள். அதுவரை அவளிடம் இருந்த தயக்கம் தடுமாற்றம் எல்லாம் ஆதவன் கை முகிலாக முழுவதும் விலகியது.
ஏனோ எல்லா பயணத்திலும் அவனுடன் இருப்பது பாதுகாப்பான உணர்வுக் கொடுத்தது அவளுக்கு. அசோக்கிடம் நேராக வந்தாள்.
“ஆமா எத்தனை சுத்தி பார்த்தே? இங்க எத்தனை கோயில் இருக்கு? பெரிய புத்தர் சிலை இருக்குமா?”
அவள் மிட்டாய் பாரத்த மழலையின் ஆர்வம் போல் கேட்க அசோக் அந்த நொடியே சற்றுமுன் உணர்ந்த ஏமாற்றத்தையோ வருத்தத்தையோ முற்றிலும் மறந்தவனாக அவளிடம் பேசினான்.
“ஆமா மூணு இருக்கு. மேலே போகணும் ஆனா நிறைய படியில தான் ஏறணும்”
அசோக் அவளது கரம் பற்றி அழைத்துக்கொண்டு மேலே சென்றான். ஒரு உயர்ந்த குன்றின் மேல் செவ்வகமான அட்டைப்பெட்டியை கீழே வைத்தது போல் வாயிலில் கோவிலின் முகப்பு இருக்க உள்ளே செல்ல செல்ல இறுதியாக மூன்றாவது வாயில் இருந்தது. எல்லாம் கோயிலிலும் ஒரு ஆலயத்திற்கும் இன்னொரு ஆலயத்திற்கும் செல்ல கட்டையினால் ஆன படிக்கட்டுகள் இருந்தது. ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு முறையாக சுற்றி அப்படியே புத்த விகாரங்களை சுற்றிவர வேண்டும்.
அசோக் வைஷ்ணவி இருவரும் மகிழ்வுடன் செல்வதை நான்கு விழிகள் மகிழ்வுடனும் நான்கு விழிகள் பொறாமை கலந்த வெறியிலும் பார்த்துக் கொண்டு இருந்தன.
அசோக் அவளுடன் படிகளில் ஏறி நடந்து ஆலயத்தினுள் சென்றான். அனைத்து சீன ஆலயங்கள் போல் பெரிய நுழைவுவாயிலில் சிகப்பு வண்ண அலங்கார விளக்கு மேல் தொங்கவிடப்பட்டு இருக்க அதன் அருகே சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இருந்தது.
ஆலயத்தினுள் சென்ற வைஷ்ணவி அதன் அமைப்பு தான் மதியம் பார்த்த ஆலயத்திற்கு மாறுபாடாக இருப்பதைக் கண்டு அசோக்கிடம் வினவினாள்.
“இது ஏன் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு?”
அனைத்து சீன கோவில்களிலும் சிகப்பு தங்க நிற பொருட்கள் ஆட்சி செலுத்தும். அதே போல் தான் இதுவும் இருந்தது. ஆனால் டியா டன் ஆலயத்தில் ஒற்றை புத்தர் சிலை இருக்க இங்கே பல சிலைகள் இருந்தன. நீண்ட தாடியுடன் அவை அமர்ந்திருக்க அவற்றிற்கு முன்னே மலர் அலங்காரம் இருந்தது. அந்த பீடத்தின் முன்பு ஒரு சீனப் பெண் மண்டியிட்டு
கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள்.
அசோக் வைஷ்ணவியின் கேள்விக்கு பதிலளித்தான்.
“இது ஒரு தவோயிஸ்ட் ஆலயம். புத்த ஆலயங்களுக்கும் தவோயிஸ்ட் ஆலயத்திற்குள் உள்ள வேறுபாடு என்னன்னா இங்க பிற கடவுள்களையும் சேர்த்து வணங்குவாங்க. புத்த ஆலயத்தில் புத்தர் மட்டும் தான். தவோயிஸ்ட் நம்மூர் கோவில் மாதிரி மூலவர் ல இருந்து அனைத்து தெய்வங்களும் அணிவகுத்து இருப்பாங்க”

அசோக் சொல்ல வைஷ்ணவி அவனைக் கேட்டாள்.
“நீ ஏற்கனவே வந்திருக்கீயா? உனக்கு எப்படி எல்லாமுமே தெரியுது?”
அசோக் அவளது கேள்விக்கு சிரித்துக் கொண்டே அவளை சீண்டினான்.
“நான் என்ன த கிரேட் மிஸ் வைஷ்ணவியா? என்ன ஏதுன்னு விசாரிக்காம எங்கே போறோமேனு தெரியாம தில்லா வேர்ல்ட் டூர் வர. நான் எல்லாம் ஆறு மாசம் முன்னாடியே ஒரு இடத்துக்கு வர்றதுக்கு முன்னாடி அங்கிருக்க அனைத்து விசயங்களையும் தெரிஞ்சு வைச்சிருப்பேன். அப்புறம் வூலிங்கியான் வந்திருக்கேன் இந்த கோவில் இப்ப தான் பார்க்கிறேன்”
அசோக் சொல்ல அந்த கோவிலின் அழகு அவனது வார்த்தைகளை விளங்கிக் கொள்ள விருப்பமில்லாது அவளை ஆக்கியிருந்தது. நாற்பது நிமிடத்திற்குள் அவர்கள் சுற்றிப் பார்த்து வர வெளியேறும் வழியில் தவோயிஸ்ட் பூசாரி ஒருவன் சற்று முன் ஆலயத்தில் தான் பார்த்த பெண்ணுக்கு குறி சொல்லிக் கொண்டு இருந்தான். அவன் காசு ஏதோ கேட்க அந்த பெண் மறுத்து பேச அவளை ஏகத்திற்கு சபித்தான் அந்த பூசாரி. அதன் பின் அவர்கள் கீழிறங்கி வருகையில் இதய வடிவில் ஒரு பலகையும் அதன் அருகே இதய வடிவில் பூட்டுகள் அங்கே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் உலகம் முழுவதும் மனித நம்பிக்கையில் இடத்திற்கு பெரிதான வேறுபாடு இல்லை என்பதாகவே தோன்றியது அவளுக்கு.
அதன் பின் மீண்டும் அவர்கள் தங்கியிருந்த விடுதி வர இரவு மெல்ல தனது இருளின் போர்வையை நிலம் மேல் விரிக்க அதை மின்சார விளக்குகளில் முறியடித்து நீல மற்றும் தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தது அந்த அருகருகே அமைந்த விடுதிகள். அவை ஏரி நீரில் பிம்பமாக இன்னும் விரிய இயற்கையின் அழகை செயற்கையில் அழித்து நிற்கும் மனித அறிவின் அரக்கத்தனம் அவள் கண் முன்னே கட்டிடங்களாக விசுவரூபமாகி நின்றது.

கவிதை
அவள் கரம்
கோர்த்த விரல்களில்
சிக்கிக் கொண்ட இதயம்
நடக்க நடக்க நீளும்
பாதைகளில் எல்லாம்
காதல் சுவடுகளைப்
பதித்துக் கொண்டே இருக்கிறது!
என்றேனும் வழித். தவறினால்
என்னைக் களவாடி அவள் களமாடினால்
நினைவுகளையாவது பொறுக்கிக் கொள் என்பது போல்!
