Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

09-2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 9.2

.

கைக்குள் இருந்த யாழி குட்டிக்கு பசிக்க ஆரம்பிக்கவும் கிடைத்த அப்பாவின் விரலைச் சூப்ப பாய்ந்து கொண்டு சென்றாள். “என் யாழி பேபிக்கு பசிக்குதா?” எனக் கேட்டவன், பாலை கலக்கி, புறங்கையில் பாலின் சூட்டை சரிபார்த்து, மகளுக்கு பாலை புகட்ட ஆரம்பித்தான்.



Advertisement

கொட்டக் கொட்ட அப்பாவின் முகத்தையே பார்த்து பால் குடித்துக் கொண்டிருந்த மகளின் கண்கள் சொக்கிக் கொண்டு போனது. மகளைச் சுற்றி மூடியிருந்த துணியை விலக்கி, நெற்றி முடியை ஊதி விட்டான். மகள் மெல்ல அசைந்து மீண்டும் பாலை குடிப்பதில் ஆர்வம் காட்டினாள். கண் சிமிட்டாது மகளையே பார்த்து அமர்ந்திருந்தான் கௌதமன்.

பாட்டிக்குப் பொழுது போகவில்லையோ இல்லை அந்தக் காலத்து பெண்மணி என்பதாலோ… “இவ்வளவு சின்ன புள்ளைக்கு தாய் பால் தர வேண்டாமா?” என்றவரின் பார்வை கௌதமனின் கையில் இருந்த பால்புட்டியின் மேல் நிலைத்தது.

“இருந்தா தர மாட்டாரா?” என வாய்க்குள் முணுமுணுத்தார் அவரின் மருமகள்.

Advertisement

“இந்த பாலுல சத்து இருக்காது பா” என்றார் மீண்டும்.

Advertisement

தாய்ப்பால் இல்லாத குழந்தைக்கு என்ன செய்திட முடியும்? தரமான, சத்தான பாலை தானே கொடுக்க முடியும்? அதைத்தான் அவனும் கொடுக்கிறான்.  “இது குழந்தைங்க வயசுக்கு ஏத்த சத்துக்களோட தயாரிக்கிற ஃபார்முலா. நாம காபிக்கு போட்டு குடிக்கிற பால் பௌடர் கிடையாது. இந்த குட்டி வயறு ஏத்துக்கிற மாதிரி தயாரிக்கப்பட்ட ஃபார்முலா இது. இவளுக்கு தேவையான எல்லா சத்தும் இதுல இருக்கும்” என விளக்கினான்.

மகள் பாலை குடித்து முடிக்கும் வரை அமைதி நிலவியது. அந்த அமைதி கௌதமிற்குப் பிடித்தது. ஆனால் பாட்டிக்கு பிடிக்கவில்லை.

“சின்ன பையனா தெரியறியே. இருபத்தி ரெண்டு… இருபத்தி மூணு வயசு இருக்குமா? நீ தான் குழந்தையோட அப்பாவா?” எனப் பாட்டி கேட்டு வைக்க, எரிச்சல் வந்தாலும் “ம்ம்” என பதில் உரைத்தான்.

Advertisement

“குழந்தயோட அம்மா எங்கபா?” பாட்டி விடாது கேள்விக் கணைகளை வீச, கௌதமின் தொண்டை ஏறி இறங்கியது. இன்னும் யார் யார் இதே கேள்விகளை கேட்க போகிறார்களோ?

“குழந்தைக்கு அம்மா இல்லையா பா?” என் மீண்டும் பாட்டி கேட்டு அவனைப் படுத்தி எடுக்க, இவனுக்குப் பெருமூச்சு வந்து போனது. இம்முறை அவன் கண்கள் மகளை விட்டு நகரவில்லை. கேள்விக்கு, பதிலாக ‘ம்ம்’மை கூற முடியாது என்பதால் மகளை விட்டு அவன் பார்வை இம்மி நகரவில்லை.

“அம்மா தூக்கம் வரலியா? நேரத்தோட படுங்க. குழந்த தூங்கிட்டா.  விளக்க அணைக்கதுக்கு முன்ன பால குடிச்சுட்டு டாய்லெட் போயிட்டு வாங்க” எனப் பெரியவர் அவரின் வயதான தாயின் கவனத்தை எதிரில் அமர்ந்திருக்கும் வாலிபனிடம் இருந்து திருப்பினார்.

அந்த ஏசி கோச்சின் விளக்குள் அணைக்கப்பட்டு, திரைகள் மூடப்பட்டிருக்க, சத்தமில்லாது அவன் இருக்கையை விட்டு எழுந்தான் கௌதமன். தூங்கிப் போன குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டே கோச்சின் முழு நீளத்திற்கும் நடக்க ஆரம்பித்தான்.

தான் செய்வது சரியா… தவறா? எனத் தெரியவில்லை. மரத்தடியில் இருந்து குழந்தையை எடுத்தாலும் அதை அவன் வைத்துக் கொள்ள நினைப்பது எப்படிச் சரியாகும்? சட்ட சிக்கல் வருமோ? குழந்தையோடு இவனை பார்க்கும் வேளை அன்னை என்ன செய்வார்? ஏற்றுக் கொள்ளவே முடியாது எனச் சண்டை போட்டால்? போடுவார் தான்! எப்படிச் சமாளிப்பது அம்மாவை? ம்கூம்… கௌதமனுக்கு விடியல் ஒன்றும் பிரகாசமாக இருப்பதாகத் தெரியவில்லை.

எதிர்பாரா நேரத்தில் எதிர்பாரா வரம் அவன் கையில் ஏந்தியிருக்கும் யாழினி. இந்த சில மாத வாழ்வில், வாழ்வின் அர்த்தம் தேடித் தோற்றுப் போன கௌதமனுக்கு வாழ்வின் அர்த்தமாகக் கிடைத்த பொக்கிஷம் அவன் மகள். யாருக்காகவும் எதற்காக மகளை விட்டுக்கொடுக்க முடியாது. அன்னையோ… சட்டமோ இவர்களைப் பிரிக்க முடியாதபடி என்ன செய்ய வேண்டுமோ அதை சென்னை சென்றதும் செய்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டவன், குட்டி ஏப்பம் இரண்டு வரும் வரை தட்டிக் கொடுத்துக் கொண்டே நடந்தான்.

மகளோடான ரயில் பயணம் ரசித்தது கௌதமனுக்கு. முன்பே இப்படியான பயணங்களை நண்பர்களோடு மேற்கொண்டிருக்கிறான். ஆடல், பாடல், சாராயம் என கட்டுப்பாடில்லாத வாழ்க்கை. அன்று அதெல்லாம் பிடித்தது. ஆனால் இன்று? எல்லாம் அடங்கிய பின் எதை நோக்கி ஓடவென கௌதமனுக்கு தெரியவில்லை. ஓய்ந்து போனவனுக்கு இந்த இரண்டு நாள்களாக ஓர் அமைதி, உள்ளுக்குள் பரவசமும் நிறைவும். அவனை உயிர்ப்பித்திருந்தது ஒரு குட்டி உருவம். தேவதைகள் எல்லா சைசிலும் வரும் போலும்.

ரயில் பெட்டியில் ஓரிருவர் கழிவறைக்காக எழுந்து வர, கௌதமன் நடை தடைப்பட்டது, கூடவே அவன் சிந்தனைகளும். குழந்தை தூக்கத்தில் அசைய, தட்டிக் கொடுத்தவன் இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“குழந்தை தூங்கிட்டாளா?” இருட்டில் வந்த சத்தம் பாட்டியினது என யாரும் கூறாதே கௌதமனுக்கு தெரிந்தது. அடுத்து ஏதேனும் கேட்டுவிட கூடாதே என்பதற்காக, “ஆங்” என்றான் அவனுக்கே கேட்காத குரலில்.

பாட்டியும் அவனைப் போல் கீழ் பர்த்தில் படுத்திருந்தார். அவருக்கு மேலே பேரனும், அவனுக்கு மேல் பாட்டியின் பேத்தியும் இருந்தனர். மகளைச் சுவரோடு ஒட்டிப் போட்டு அருகில் அணைவாய் படுத்துக் கொண்டான். அதிகமாக இருந்த குளிருக்குத் தகப்பனோடு ஒண்டிக்கொண்டாள் மகள்.

மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை முழிப்பது எனக் கண்ணயரா இரவு முடிந்து பகல் ஆரம்பித்தது. மகளின் தேவைகளை கைதேர்ந்தவன் போல் கவனித்தான். குழந்தையின் அழுகையும் சிரிப்புமாகப் பயணம் நீண்டது. பால் கொடுப்பதும்… குடித்த பாலை மகள் கக்குவதும்… டைப்பர் மாற்றுவதும், மாற்றி முடிக்கும் முன்பே மீண்டும் அதை மாற்ற வைப்பதுமாக யாழினி தகப்பனை பிஸியாகவே வைத்திருந்தாள். சளியின் நிமித்தம் விட்டு விட்டு அழுவதும், தகப்பனை அமரவிடாது நடக்க விடுவதுமாக்க குட்டி யாழினிக்கு நேரம் நன்றாகவே சென்றது. ஒரே இரவில் கௌதமன் சற்று திணறித் தான் போனான்.

அவனை பார்த்த பெரியவரின் மனைவி, “பாப்பாவ விட்டு நகர விடமாட்டேங்கிறா போல” என சிரித்தவர், “இன்னும் ரெண்டு மணி நேரம் தான். ஊர் போய் சேர்ந்திடலாம். என் பசங்க இருக்காங்க… நான் இருக்கேன். பார்த்துக்கலாம். ரிலாக்ஸ் பண்ணுங்க கௌதமன்.” எனத் தாய்மை கரம் நீட்டினார்.

“அக்கா சொல்லு… அண்ணா சொல்லு” எனப் பிள்ளைகள் இருவரும் விளையாட்டு காட்ட, மகள் கைகால் அசைத்து பொக்கை வாய் மலர்ந்து சிரித்தாள். மழலையில் யாழி குட்டி எதையோ மிழற்ற…  “அம்மா… பாப்பா ‘க்கா’ன்னு என்னை பாத்து சொன்னா மா” என்றாள் சிறுமி.

“இன்னும் என்ன எல்லாம் சொல்றா?” என அவளின் தாயும் சேர்ந்து கொள்ள மகளுக்குக் கொண்டாட்டமாய் போகவும், “அம்மா சொல்லு…. அப்பா சொல்லு…” எனப் பாடம் எடுக்க ஆரம்பித்தாள்.

“அம்மா, யாழினியாள் இஸ் வெரி பிரிட்டி மா. எனக்கும் இந்த மாதிரி குட்டி தங்கச்சி கபாப்பா வேணும் மா.” எனச் சின்னவள் அம்மாவிடம் கோரிக்கை வைத்தாள்.

“யேய் லூசு… அம்மா இஸ் ஓல்ட் ஃபார் தேட்” என தங்கையின் தலையைத் தட்டியவன், “நெக்ஸ் டூ யியர்ஸ்ல நான் காலேஜ் போவேன். அப்போ நியூ பார்ன் பேபியோட அம்மா அப்பா நின்னா எனக்கு ஷேமா இருக்காத… இடியட்” என்றான், அண்ணன் முகம் சுளித்து.

“பேச்ச பாரு பேச்ச…” என பாட்டி பேரனின் முதுகில் ஒன்று வைத்தார்.

பார்த்து அமர்ந்திருந்த கௌதமன் முகத்தில் புன்னகை. ஒற்றை பிள்ளையாக வளர்ந்த கௌதமனுக்கு அம்மா, அப்பா, பாட்டி, அண்ணன், தங்கை என இருந்த அந்த அழகிய குடும்பம் பிடித்தது. அவன் கவனத்தை முழுவதுமாக ஈர்த்தது. இத்தனை அன்போடும் ஐக்கியத்தோடும் வாழ்வதும் நன்றாகத் தான் இருக்கும் போல என எண்ணிக் கொண்டான். காதல்… குடும்பம் என்ற வேண்டாத ஆணிகள் எல்லாம் இப்பொழுது அப்படித் தோன்றவில்லை போலும் நம் கௌதமனுக்கு.

“அங்கிள் பாப்பா பேர் என்ன?” சின்னவள் கேட்டாள்.

“யாழினியாள்” என்றவன் அடிவயிறு வரை இனித்தது.

“உங்க பேரு?”

“கௌதமன்”

ஒன்றரை வருடங்களாக மருந்து மாத்திரை அறுவைசிகிச்சை என தன் வாழ்வை கழித்த கௌதமனுக்கு இந்த வேண்டாத ஆணிகள் எல்லாம் இனி சாத்தியமா என தெரியவில்லை. அவனுக்கென ஒரு குடும்பம் அமையுமா… அவன் வாழ்விற்கு ஏதாவது அர்த்தம் இருக்குமா என மனம் குடைந்தது.

“ஆன்ட்டி பேரு?”

“ஆன்ட்டியா?”

“நீங்க அங்கிள்னா… பாப்பாவோட மம்மி தான் ஆன்ட்டி” என விளக்கினாள் சின்னவள்.

“ஓஹ்” என்றவன் பார்வை ஜன்னலுக்கு வெளியே சென்றது. மழை நின்றிருந்தது.

மகள் கீழே விழுந்து விடாதபடி, கையை மகள் படுத்திருந்த இருக்கையில் ஊன்றி ஜன்னலுக்கு வெளியே ஓடிக்கொண்டிருந்த மரங்களோடு பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தவனின் விரலைப் பிடித்தது பிஞ்சு கரம்.

திரும்பிப் பார்த்தான், பத்து வயது பெண்ணோடு விளையாடிக் கொண்டிருந்த அவன் மகள் அவன் விரலை இறுக்கமாகப் பற்றி இருந்தாள். யாழினியின் குட்டி கால்கள் இரண்டும் காற்றில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தன.

“ஓ ஊ” என ஓயாது மழலையின் இசை காற்றை நிறைத்தது. கண்களில் நீர் நிரம்ப… முகம் முழுவதும் பரவிய புன்னகையோடே, விரலை இழுத்து தன் ரோஜா பூ வாய்க்குள் கொண்டு செல்ல முயலும் மகளைப் பார்த்து அமர்ந்திருந்தான் கௌதமன். உனக்கான குடும்பம் நான், என்றது மகளின் இறுக்கமான பிடி. உன் வாழ்வின் அர்த்தம் நான் என்றது மகளின் “ஆ ஊ ஆஅ ஆஅவ் அவ்அ”.

“யாழினி… சொல்லு பாப்பா”

“ஆஆ அ”

“கௌதமன் அப்பா… சொல்லு”

“அ ஆ ஆ இ”

“அங்கிள்… மம்மி பேர் சொல்லி தரணும். பாப்பாவோட மம்மி பேர் என்ன அங்கிள்?”

“யஷோதரா” என்றான் கசந்த குரலில். யஷோதரா என்ற உச்சரிப்பே தொண்டைக் குழிவரை காந்தியது.

“யஷோ அம்மா சொல்லுங்க”

‘வேண்டாம்’ எனத் தூக்கிப் போட்டவளை நினைக்க நினைக்கக் கௌதமனுக்கு எரிந்தது. ‘அவளின் பெயரை உன் வாயால் உச்சரிக்காதே பேபி’ என்ற வேண்டுதலோடு மகளின் முகத்தைப் பார்த்தான்.

மகளின் அழகு முகம் மலர்ந்து, கண்கள் மிளிர்ந்தன. மகளின் கைகளும் கால்களும் காற்றில் சைக்கிள் ஓட்ட, எச்சில் வழிய… பொக்கை வாய், “ஹே ஹ ஆ ஈ” என்றது.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!