08 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:3,073
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 08
.
இருட்டாக இருந்தாலும், இரவும் இருட்டும் பகலுக்கு வழிவிட்டு விலகிக் கொண்டிருந்த விடியாத காலைப் பொழுது என்றது ஆங்காங்கு ஒலித்துக் கொண்டிருந்த பறவைகளின் கீச்சொலி. இரவை ஹோட்டலில் கழித்த கௌதமனுக்கு தூக்கம் வர மறுக்க, இரண்டு மணி வரை உருண்டு புரண்டவன் அறையைக் காலிசெய்து கொண்டு கிளம்பியிருந்தான்.
Advertisement
என்ன மாயமோ மகிழுந்தை ஓட்ட ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் தூக்கம் கண்களைத் தழுவ ஆரம்பித்தது.
நடுக்காட்டில் ஒரு விடுதியைத் தேடும் மனநிலை எல்லாம் அவனிடம் இல்லை. நீரைக் குடித்து… பாட்டை சத்தமாக வைத்து எனத் தூக்கத்தை விரட்டியவன் இதோ இந்த நிமிடம் வரை தாக்குப் பிடித்துவிட்டான். தூக்கத்தைக் கட்டுக்குள் வைக்க முடிந்த அவனால்… நிரம்பி வெடித்து விடுவேன் என அவனை இம்சித்த சிறுநீர்ப்பையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
எங்கிருக்கிறோம் என இடத்தின் வரைபடத்தைப் பார்க்க அது கீழஈரால் என்றது. திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லாது அப்படியே குமரி வரை சென்றுவிட்டு சென்னை செல்லலாம் எனத் தன் இலக்கை முடிவு செய்து பயணப்பட்டு கொண்டிருக்கவனுக்கு ‘இது என்னடா சோதனை’ என்றிருந்தது. வெளியே இருட்டாக இருந்தது. சற்று வேகம் பிடித்தால் அரைமணி நேரத்தில் தூத்துக்குடியை அடைந்துவிடலாம் எனச் சற்று வேகத்தைக் கூட்டினான். ஆனால் அதுவரை தாங்காது என்றது சீறுநீர்பை.
Advertisement
‘இதுக்கு மேல முடியாது’ எனக் காரை ஓரம் நிறுத்தினான். ஆண்களுக்கு அது ஒரு வசதி, திறந்த வெளியென்றாலும் கேள்வியாக ஒருவரும் அவர்களைப் பார்க்க மாட்டார்கள். வேலை முடிந்ததும் கையையும் முகத்தையும் நீர் ஊற்றிக் கழுவியவனுக்கு சற்று கண்ணை மூடினால் மட்டுமே முடியும் போல் இருக்க, இடத்தை நோட்டம் விட்டான். ஊருக்குச் சற்று வெளியே வந்திருந்தாலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக இரண்டு மூன்று வீடுகள் தெரிந்தன.
Advertisement
அருகே திருச்சபை ஒன்று இருப்பதற்கு அறிகுறியாக நான்கு முறை மணி அடித்து ஓய்ந்தது. அதை அடுத்து ஒருவர் வசனம் ஒன்றை வாசித்தார். ‘மனுஷங்க வாழற இடம் தான் போல’ என எண்ணிக் கொண்டவன் மகிழுந்தைப் புழுதி பறக்கும் தெருக்களுக்குள் விட்டான்.
ஐந்து நிமிட பயணத்தில் இடம் வெறிச்சோடி இருக்க, அங்கு அந்த திருச்சபை தெரிந்தது. அதன் மதில்சுவருக்கு வெளியே வண்டியை நிறுத்தியவன், கார் சீட்டினைப் பின்னுக்குத் தள்ளி வாகாகப் படுத்துக் கொண்டான். இருட்டோடு இருட்டாக அந்தக் கருப்பு நிற அவ்டி மறைந்தது.
படுத்து இமைகளை மூடிய அடுத்த நிமிடமே உறங்கியிருந்தான் கௌதமன். ஆழ்ந்த உறக்கத்தைக் காதுக்குள் ஒலித்த மணியின் ஒலி கெடுத்தது. ‘இப்படி அர மணி நேரத்துக்கு ஒரு தரம் ஊரையே எழுப்பியாகணுமா?’ என முணுமுணுத்தவன் படுத்திருந்தாலும் மனம் விழித்துக் கொள்ள, தூக்கம் வரவில்லை.
Advertisement
‘கிளம்பறோம்… வழியில ஒரு நல்ல ஹோட்டலா பார்த்து செக்கின் பண்றோம்… சூடா ஒரு குளியல்… அப்பறம் நல்ல தூக்கம்’ எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டே இருக்கையை நிமிர்த்தினான்.
காரை கிளப்பக் கையை முன்னுக்குக் கொண்டு செல்லும் வேளையில் முகத்தை உயர்த்தி வெளியே பார்த்தான். ஒரு பெண் அவசர அவசரமாக அந்த இருட்டில் வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே வண்டியைக் கிளப்பியவன் அதை அவளை நோக்கிச் செலுத்தினான். அதாவது அவள் வந்து கொண்டிருந்த மண் பாதையில் வண்டியைச் செலுத்தினான்.
அந்த வேளையில் வாகனத்தையும்… வெளிச்சத்தையும் எதிர்பார்க்காதவள், கையில் இருந்த பையையும், சின்ன மூட்டையையும் மரத்தடியில் வைத்துவிட்டு வந்த வழியே ஓட்டம் பிடித்தாள்.
வாகனத்தை நிறுத்தியவன் யோசனையோடே இறங்கினான். “ஏய்… பொண்ணே… உன்ன தான்… ஏய்… எதுக்கு ஓடற? இது என்ன பை?” என மரத்தடியை நெருங்கினான்.
கீழே கிடக்கும் மூட்டையில் என்ன இருக்கும்? கண்டிப்பாகக் குண்டு வைத்து வெடிக்க வைக்கும் அளவிற்கு அங்கு எதுவும் இல்லை. என்னவாக இருக்கும்? அவள பிடிப்போம் என்ற அவன் முடிவை செயல்படுத்தும் முன் அந்த மூட்டை அசைந்தது.
குனிந்து கவனமாக புதையலை மெல்ல பிரித்தான். பூ குவியல் கைகள் கால்களை ஆட்டி மேல் போர்த்தியிருந்த துணியிலிருந்து விடுபட்டது.
“ஓ காட்… பேபி” என்று வாய் விட்டு அலறியவன் அவசர அவசரமாக ஆராய்ந்தான். அழ ஆரம்பித்த குழந்தையின் முகத்தில் குத்திக் கொண்டிருந்த குச்சியை எடுத்துப் போட்டு, சிவந்த இடத்தை நீவி விட்டான். குழந்தையைத் தூக்கி காரின் வெளிச்சத்தில் ஆராய, வேறு குச்சியோ பூச்சியோ இருக்கவில்லை.
குட்டி முயல்குட்டியைச் சுற்றியிருந்த துணியில் மீண்டும் சுற்றி அணைத்துப் பிடித்தான். அழ ஆரம்பிக்கிப் போகிறேன் என்பது போல் வாய் ஒரு கோணத்திற்து நெளிய ஆரம்பித்தது. ஆனால் கதகதப்பான ஆண்மகனின் கைக்குள் அடங்கிய குட்டி பூ அமைதியாகிப் போனது.
லப் டப் எனும் சீரான ரிதம் குழந்தைக்குத் தாலாட்டாகத் தோன்றியதோ… பூங்குவியல் கண்கள் திறவாது குட்டி வாய் திறந்து கொட்டாவி விட்டுக்கொண்டே மீண்டும் விட்ட உறக்கத்தைத் தொடர்ந்தது.
கண்டிப்பாகப் பிறந்த குழந்தை இல்லை. சில மாதங்கள் ஆன குழந்தை என்றாலும் குழந்தையின் வயது தெரியவில்லை. குழந்தையோடு காரின் கதவில் சாய்ந்து நின்றவன் கண்களுக்கு அவள் தென்படுகிறாளா எனப் பார்த்தான். ஒருத்தி அங்கு வந்து சென்றதற்கான அறிகுறியே இல்லை.
சின்ன குட்டியை என்ன செய்வது? எதற்கு இங்குத் தூக்கி வந்தாள் இவள்? எனச் சில கேள்விகளில் ஆரம்பித்துப் பல கேள்விகள் உள்ளுக்குள் உருவாகியது கௌதமனுக்கு.
கேள்விகள் எழும்பினாலும் அந்தக் குட்டி அழகு முயல்குட்டியிடம் இருந்து அவனால் கண்களை நகர்த்த முடியவில்லை. தூக்கத்தில் சப்பு கொட்டி பால் குடித்துக் கொண்டிருந்த சின்ன… சிகப்பு உதட்டை அதிசையமாகப் பார்த்தான்.
“பசிக்கிதோ… பசிச்சா அழணுமே? இப்பொ இது அழுதா பாலுக்கு எங்க போவேன்? மனசாட்சியே இல்லாம இத்தனோண்டு குழந்தையை குப்பைய தூக்கி போடுற மாதிரி தூக்கி போட்டுட்டு போறா? இவ எல்லாம் என்ன அம்மாவோ? ச்ச…” வாய்க்குள் முணுமுணுத்தான் கௌதமன்.
தூக்கதின் இடையே குழந்தை சிரித்தது. சிரிப்பை ரசிக்கும் முன் மீண்டும் தூக்கம். “அட… ம்ம்ம்…” எனக் கண் எடுக்காது ரசித்தான் குழந்தையை.
அந்தச் சின்ன குழந்தையை எப்படி எடுத்துச் செல்வது எனக் கௌதமனுக்கு தெரியவில்லை. எங்கு எடுத்துச் செல்ல வேண்டும்? போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிந்தாலும், தான் பாதுகாப்பாக இருக்கும் நம்பிக்கையில் அவனை ஒட்டிக் கொண்டு உறங்கும் குழந்தையை எப்படி யாரோ ஒருவரிடம் ஒப்படைப்பான்?
‘இந்த இருட்டுல அவ என்னை எதிர்பாக்கல… திடீர்ன்னு பாக்கவும் தான் இப்படி போட்டுட்டு தல தெறிக்க ஓடினா. இங்க சர்ச்ச தவிர வேற என்ன இருக்கு?’ எனப் பார்த்தவனுக்கு மதில் சுவரை ஒட்டி ஒரு மாதா குடிலும், திறந்திருக்கும் கேட்டும் கண்களில் பட்டதே தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
காரை அணைத்துப் பூட்டியவன், கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கவும் நினைவு வந்தவனாகக் குழந்தை இருந்த மரத்தடியைப் பார்த்தான். குழந்தையின் டையப்பர் பை இருந்தது. அதை எடுத்து தோளில் போட்டு கொண்டவன் திருச்சபையை நோக்கி நடந்தான்.
திருச்சபையை ஒட்டி இருந்த கட்டிடம் ‘அன்னை மாதா அன்பு இல்லம்’ என்ற பலகையை ஏந்தியிருக்க, “ஓஹ்” என்றான் மனம் உடைந்தவனாக.
குடிலுக்குள், சிசுவைச் சுமந்து நின்றிருந்த மாதா சிலையின் பாதம் அருகே ஒரு குட்டி தொட்டில் இருந்தது. தொட்டில் அருகே ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. கயிறு, மணியோடு கட்டியிருந்தது. இதை எல்லாம் பார்வையாளராகப் பார்த்து நின்றிருந்தான் கௌதமன். இங்கு விட்டுச் சென்றால், பெற்ற அன்னைக்காக… தன்னை தூக்கிக் கொஞ்சும் அப்பாவிற்காக இந்தக் குழந்தை ஏங்கித் தவிக்குமே என நினைத்தவனுக்கு மனம் ஏதோ செய்தது.
‘இதுங்களுக்கு வேண்டாம்ன்னா கலைச்சு தொலைச்சிருக்கலாமே… இப்படி வேண்டா வெறுப்பா பெத்துக் தூக்கி போட்டுட்டுப் போகணுமா? இவங்க பண்ற வேலையில இனி இந்த குழந்த வாழ் நாள் பூரா அனாதைன்னு பட்ட பேரோட வளரணுமா?’ என கையில் இருந்த குழந்தையை பார்த்தான். நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது பிள்ளை. உறக்கதில் யாரைப் பார்த்ததோ பவள வாய் திறந்து சிரித்தது குழந்தை.
ஆலயத்தைச் சுற்றி இருந்த மணல் கண்ணில் பட்டது. வெயிலில்… சுடு மணலில் செருப்பில்லாது ஒரு குழந்தை ஓடினான். இரண்டு வயது அனாதை குழந்தை சிரித்துக் கொண்டே கவனிப்பார் இல்லாது விளையாடிக் கொண்டிருந்தான்.
ஓடிக் கொண்டிருந்த குழந்தை, பாதத்தைப் பொசுக்கும் மணலின் சூடு தாளாது சுடுமணலில் அமர்ந்தவன், காலை பிடித்துக் கொண்டு வீறிட்டான். காட்சி துல்லியமாகக் கண் முன் தோன்றியது கௌதமனுக்கு.
மனம் கசங்க குழந்தையின் பிஞ்சு பாத்தைப் பார்த்தான். குட்டி குட்டியாக செக்க செவேல் எனப் பன்னீர் ரோஜா விரல்கள் காற்று பட்டதும் நெளிந்தன. இதால் சூடு தாங்க முடியுமா என மனம் கேட்டது. எப்படி முடியும்? முடியாதே… கௌதமன் கண்களோடு அவன் விரல்களும் அந்தக் குட்டி கால் விரல்களை நீவி விட்டன. வாழ் நாளில் இது தான் முதல் முறையாக இத்தனை குட்டி கால்களையும் விரல்களையும் பார்க்கிறான். கால்கள் இரண்டையும் தூக்கி பிஞ்சு பாதத்தில் முத்தமிட்டான்.
கால் விரல்களை மெல்ல வருட, கால்கள் இரண்டும் அசைந்து கொடுக்க, ஆசை அடங்காது ஒரு முத்தம் என ஆரம்பித்து, பல முத்தங்களை வள்ளலாய் வாரி இறைத்தவனுக்கு மனம் நிறைந்து கொண்டே போனது. அது என்ன மாயமோ… கொடுக்க கொடுக்க குறையத் தானே வேண்டும்? இவனுக்கு மட்டும் எப்படி மனம் நிறைகிறதாம்?
“யாருப்பா நீ” என்ற சத்திற்குத் தலையை உயர்த்த, பாதிரி நின்றிருந்தார்.
யாரும் காணும் முன்பே அங்கு மாதாவின் காலின் கீழ் இருக்கும் தொட்டிலில் பெற்ற பிள்ளைகளைப் போட்டுவிட்டு மணிச் சத்தம் ஒலிக்கும் முன்பே காணாமல் போகும் மனிதர்களின் நடுவே யார் இவன் என்று பார்க்கிறார் எனத் தோன்றியது கௌதமனுக்கு.
நான் அப்படி இல்ல… இந்த பேபி என்னுது இல்ல என நினைத்தவனுக்கு அப்படிக் கூற முடியவில்லை. பத்தே பத்து நாட்கள், நினைவிழந்து… தனக்கென ஒருவரும் இல்லை என மனம் நொந்த நாட்கள் எவ்வளவு கொடுமையாக இருந்தன? இதே உலகம் எத்தனை வெறுமையாகத் தோன்றியது? தன் கைக்குள் நிம்மதியாகத் துயிலும் இந்த குழந்தைக்கும் அது தான் நிலையா எனத் தோன்றவும், குழந்தையைப் பார்த்தான்.
அமைதியாக… நிம்மதியாக உறங்கும் குட்டி முகம். அதில் இரண்டு சிகப்பு லட்டு கன்னங்கள் என்னைக் கொஞ்சேன் என்றன. பட்டு கன்னம் வருடினான். மூடியிருந்த இமைகள் சுருக்கின, உதடு பிதுங்கியது. பின் பட்டெனக் கோலிக்குண்டு விழிகள் விரிந்தன. தன்னையே ஆர்வத்தோடு பார்த்து நின்றிருந்த புது உருவத்தை, இல்லாத புருவம் சுருக்கி பார்க்க, அவனும், “என்ன பாக்குறீங்க பேபி?” எனக் கொஞ்சலாக வினவினான்.
குழந்தையின் உதடும் விழிகளும் மலர்ந்து சிரித்தன. உடல் சிலிர்த்து அடங்கியது கௌதமனுக்கு. புலராத பகல் அவனுக்குப் புலர்ந்தது. “ஹை பேபி” என மீண்டும் கன்னம் வருடினான். “அ வு” எனப் பதில் கொடுத்து பொக்கை வாய் மலர சிரித்தது குழந்தை. இவன் இருண்ட வானம் சட்டென வானவில்லால் அலங்கரிக்கப்பட்டது.
குழந்தையை வருடிக் கொண்டிருந்த ஒற்றை விரலை இழுத்து தனது குட்டி கைக்குள் பொதிந்து கொண்டு வாய்க்கு அதை இழுத்து சென்ற குழந்தையின் பிடியில் தன்னையே ஒப்புக் கொடுத்தான்.
இவனையே பார்த்திருந்த வயதான பாதிரி, “யார் பா நீ? என்ன வேணும்? குழந்தைய விட்டுட்டு போக வந்தியா?” என்றார்.
தன்னிச்சையாகத் தன்னோடு குழந்தையை அணைத்தவன், “இல்ல இல்ல” என்றான் அவசரமாக.
“அப்போ இங்க என்ன பண்ற?” என கேட்ட பாதிரியாரிடம் என்ன சொல்லிச் சமாளிக்க என யோசித்தவன், “விடிய காலமே எழுந்ததுனால தூக்கம் தள்ளிச்சு, சர்ச்ச பாக்கவும் வந்தேன்” என்றான்.
அவன் யார், என்ன… எனப் பல கேள்விகளோடே “உள்ள வாப்பா” என இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார் பாதிரியார். பச்சிளம் பிள்ளையின் அழுகை சத்தத்தைத் தவிர அந்த இடம் அமைதியாக இருந்தது. “எழுதுட்டியா நீ? உனக்கு பசிக்குதா?” என்ற சத்தமும் வந்தது.
“ஏதாவது குடிக்கிறீங்களா?” என் வினவியரிடம், “இல்ல ஃபாதர் பசிக்கல” என மறுத்தான்.
“பரிமளா” என அழைக்க, நடுத்தர வயது பெண்மணி வந்தார்.
“இப்போ பிரேயர் ஹால்ல பிரேயர் இருக்கு. வர்றீங்களா?” என புன்னகையோடு பார்த்தவருக்கு அவனும் புன்னகையைப் பதிலாகக் கொடுக்க, “நீங்க ரெஸ்ட் எடுங்க. வந்து பேசுவோம். இப்போ நான் போகணும். இவங்க உங்களுக்கு வசதி பண்ணி தருவாங்க” என்றவர், “இவங்க தேவையை கவனிச்சுட்டு, கெஸ்ட் ரூம்ல படுக்க ஏற்பாடு பண்ணி கொடுமா” எனப் பொறுப்பை பரிமளா பக்கம் நகர்த்திவிட்டு பிரேயர் ஹாலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“வாங்க” என அவன் தோளில் இருந்த பையை வாங்கியவள், மெத்தையும் ஒரு மேசையும் அடங்கியிருந்த குட்டி விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“இந்த ரூம் தான்” எனக் காட்டியவள், “ஒரு நிமிஷம் இப்படி உக்காருங்க பெட் ஷீட், பில்லோ கவர் போட்டு தரேன்” என அங்கிருந்த இருக்கை காட்டினாள். கூறியது போலவே திரைச் சீலைக்கு பின்னிருந்த அலமாரியிலிருந்து துவைத்து வைத்திருந்த போர்வையை விரித்து, தலையணைக்குப் புது உறை இட்டாள்.
“ஆச்சு சார்” என்றவள் திரும்பிப் பார்க்க, அமர்ந்த வாக்கில் கௌதமன் தூங்கி விழுந்து கொண்டிருந்தான்.
“சார்” என்ற சத்திற்குப் பட்டென விழித்தவன், “சாரி கண் அசந்துட்டேன்” எனப் புன்னகைத்தான்.
படுக்கப் போனவனிடம், “பாப்பாக்கு ஃபீட் பண்ணி நேரம் ஆகுதோ… பசிக்குது போல” எனக் குழந்தையை பார்த்தாள். அவனுக்கு எப்படித் தெரியும் குழந்தை எப்பொழுது பால் அருந்தியது என? “ஆங் ஆச்சு” என்றான் குத்து மதிப்பாக.
“டையபர் பேக்ல பால் பௌடர் இருக்குங்களா?” எனக் கேட்டவள் அவன் பதிலை எதிர்பார்க்காது, பையில் இருந்த பால் புட்டி, பிளாஸ்க், பால் பௌடர் என அனைத்தையும் எடுத்தாள். அவள் என்ன செய்கிறாள் எனப் பார்த்து நின்றிருக்க, இளம் சூட்டில் இருக்கும் நீரை உயர்த்திப் பிடித்திருந்த பாட்டிலில் ஓர் அளவுக்கு ஊற்றினாள்.
அளவு சரியாக இருப்பதை உறுதி செய்தவள், பால் பொடியை அதில் இருந்த அளவு கரண்டி கொண்டு இரண்டு போட்டாள். பாட்டிலை நன்கு குலுக்கி அதில் கட்டி ஏதேனும் இருக்கிறதா எனப் பார்த்தவள், அதன் சூட்டை உணர இரண்டு சொட்டுகள் புறங்கையில் சொட்டினாள்.
“நான் குடுக்கவா சார்?” எனக் கேட்டவளிடம் பிள்ளையை நீட்டியவன் கட்டில் ஓரத்தில் அமர, அவள் வாகாக நாற்காலியில் அமர்ந்து குழந்தையின் தலையை நிமிர்த்தி பாலை உதட்டுக்கு நேரே கொண்டு போகவும் அரைத் தூக்கதில் இருந்த குழந்தை அதைச் சட்டென வாய்க்குள் திணித்துக் கொண்டது. முக்கால் பாட்டில் வரை குடித்த குழந்தை முகத்தைத் திருப்பிக் கொள்ள, “போதும் போல” என்ற பரிமளா, குழந்தையின் வாயைத் துடைத்தாள்.
முடிந்தது என அவன் பார்க்க, குழந்தையின் நெஞ்சும் கழுத்தும் இடது கையில் பிடித்து, தொடையில் குப்புறப் போட்டவள் மெல்ல முதுகில் தட்டிக் கொடுத்தாள். இந்தம்மா என்ன பண்ணுது என அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குட்டி ஏப்பம் இரண்டு வர, “ஆச்சு” எனக் குழந்தையைப் படுக்கையில் போட்டவள், “ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க சார்” என வெளியே சென்றவள் கதவைச் சாத்தி வைத்தாள்.
“பேபி… உருள மாட்டியே” எனக் கேட்டவன், போதிய இடைவெளி விட இடம் இல்லாது, “நான் உருள மாட்டேன். நீயா வந்து என் முதுகு அடியில போய் மாட்டிக்காத” என எச்சரித்தான்.
பிளந்திருந்த குட்டி உதடும், கொழுத்த கன்னமுமாகச் சின்ன குட்டி கௌதமனின் மனதைக் கொள்ளை அடித்தது. மெல்லக் கன்னம் வருடி “குட் நைட் பேபி” என்றான்.
தூங்கிக் கொண்டிருந்த குட்டியைப் பார்த்து படுத்திருந்தவன், குழந்தையைச் சுற்றி அணைத்துப் பிடித்தான். “எழுந்ததும் அழுவியா பேபி? அழகூடாது என்ன? எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு என்னைப் பிடிக்குமா பேபி? எவ்வளவு நேரம் நீ தூங்குவ?” எனப் பேசிகொண்டு படுத்திருந்தவன் ஏதோ ஒரு நிமிடம் கண்கள் மூட, உறங்கியிருந்தான்.
மிக மிக நிம்மதியான தூக்கம். கனவில் நாய்க் குட்டியை அவன் பிடித்திருக்க, அந்தக் குட்டி நாய் அவன் கன்னம், மூக்கு, காது என நக்கி எச்சில் படுத்தியது. “ஆ அ ஊ” எனச் சத்தம் எழுப்பியது. கௌதமன் தூக்கத்தின் இடையே இதழ் விரியப் புன்னகைத்தான். விரிந்த உதடு ஈரம் ஆனது. சட்டென விழிப்பு தட்டியது கௌதமனுக்கு.
கண் விழித்த பின்னும் நாய் குட்டி கழுத்தில் முகம் புதைத்து “ஆ ஊ” என்றது. முதலில் கௌதமனுக்கு தான் இருக்கும் இடம் புலப்படவில்லை. கௌதமன் விழித்ததைப் பார்த்த குட்டி அவன் முகம் எதிரே தன் முகத்தைக் கொண்டு சென்று சிரிக்க, அந்த எச்சில் ஒழுகும் முகத்தை வாஞ்சையோடு பார்த்தவனுக்கு அனைத்தும் நினைவில் வர, “குட்டி பேபி… எழுந்துட்டீங்களா?” எனத் தலைக்கு கை கொடுத்து வாகாக படுத்தான்.
பாடுபட்டு ஒரு பக்கம் திரும்புவதும் பின் தொப்பென முதுகுக்கு உருள்வதுமாக இருந்த குழந்தை ஓயாது மிழற்றியது.
“அச்சோ பேபி எவ்வளவு நேரம் தூங்கியிருக்கோம் பாரு” என இவன் எழுந்து அமர, இரு கால்களையும் இரு கைகள் கொண்டு பிடித்திருந்த குழந்தை “ஆ சி ஊ” என்றது.
“முகம் கழுவிட்டு வரேன்” என்றவன் குளியலறை சென்று வந்தான். அமைதியாகப் படுத்திருந்த குழந்தை இவன் மீண்டும் அறைக்குள் வந்ததும் பொக்கை வாய் திறந்து சிரிக்க, “நான் யார்ன்னு நினைச்சு நீ என் கூட பயமில்லாம இருக்கன்னு புரியல. ஆனா உன் கூட இருக்கும் போது எனக்கு மனசு அவ்வளவு நிறைவா… சந்தோஷமா… என்னவோ சொல்ல தெரியல… நல்லா இருக்கு பேபி” என்றான்.
அவன் தூக்க வருகிறான் என உணர்ந்து குழந்தை கையை காலை வேக வேகமாக ஆட்டிச் சிரித்து கொண்டே “ஆ ஊ” என்றது.
குழந்தையை ஒட்டிப் படுத்தவன், “லவ் அட் ஃப்ர்ஸ் சைட்ன்னு கேட்டிருக்கேன். அது எப்படி பேபி பார்த்ததும் ஒருதரை பிடிக்கும்? பேத்தல்ன்னு நினைச்சேன். ஆனா அது உண்மை பேபி.” என்றான்.
அருகே இருந்தவன் முடியை இழுத்து, முகத்தில் அடித்து என அவனை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்த குட்டி கையின் உள்ளங்கையில் ஆழ முத்தம் கொடுத்தான்.
“எனக்கு உன் கூட இருக்க ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கும் என்னை பிடிக்குது தானா?” என்றவனை பார்த்து குழந்தை சிரிக்க, “தேங்க்ஸ்” என்றான்.
“என் கூடவே இருக்கியா? உன்ன பத்திரமா பாத்துக்கிறேன். என் குடும்பமா நீ இரு. உனக்கு அன்பான… பாதுகாப்பான குடும்பத்த நான் தரேன். என் கூடவே வர்றியா?” என இவன் வாஞ்சையோடு அந்த மொட்டை மண்டையைத் தடவ, சத்தம் போட்டு குழந்தை சிரித்தது.
“ஓகே சொல்லு” என்றான்.
“இ ஊ” என்றது குழந்தை.
“இப்போதைக்கு இது போதும் பேபி” என்றவன் குழந்தையின் கன்னம் அழுந்த முத்தம் கொடுக்க, இன்னும் இன்னும் என ஆசை வந்தது. “உன்ன… உன்ன போய் எப்படி இங்க விட மனசு வந்துது?” என வாய்க்குள் முணுமுணுத்தவன், “நான் என் உயிர் போர வரைக்கும் உன்ன விடமே மாட்டேன். இது… எனக்கு உயிர் கொடுத்தவன் மேல சத்தியம்” என்றான் உணர்சிவசப் பட்டவனாக.
குழந்தையின் கொஞ்சும் குரல் எப்பொழுதும் போல் ஆ ஊ சி என மறுமொழி கொடுக்க, “நல்லா பேசற… வெளியில போலாமா?” என இவன் கேட்டு கொண்டிருக்கவும் கதவு தட்டப்பட்டது.
“கம் இன்” என்றவன் கதவை பார்த்து எழுந்து நிற்க, பரிமளா வந்திருந்தார்.
“ரெண்டு பேர் சத்தமும் கேட்டுது. சாப்பிட கூப்பிடலாம்ன்னு வந்தேன்” என்றவர், “உங்களுக்கு பசிக்கலியா?” எனக் குழந்தையைப் பார்த்தாள்.
பரிமளாவை பார்த்த குழந்தை தன் கால்களைப் பிடித்துக் கொண்டு சிரித்தது.
“தூக்கட்டுங்களா?” எனக் கேட்டவள், அவன் சரி என்பதாகத் தலை அசைக்க, தூக்கிக் கொண்டாள்.
“கக்கா போயிட்டு தான் இந்த சிரிப்பா?” என்றவர், “வாங்க” என இவனை அழைத்துக் கொண்டு டையப்பர் பையோடு அறைக்கு வெளியே சென்றாள்.
நான் கூட ரூம்ம தப்பா நினைச்சுட்டேன் எனத் தனக்குள் சிரித்துக் கொண்டே பரிமளாவின் பின் சென்றான்.
அங்கும் இங்கும் ஓடுவதும், சத்தம் போடுவதுமாக இடம் பிள்ளைகளால் நிரம்பி இருந்தது.
“நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களா கௌதமன்?” என பாதிரியார் அவனை அணுக, “தேங்க்ஸ் ஃபாதர். நிம்மதியா தூங்கினோம்” என்றான்.
“வாங்க” என அவர் நடக்க, அவனும் இடத்தைப் பார்த்துக் கொண்டே அவரோடு நடந்தான். நான்கு பக்கமும் சுவர் இருக்க, உள்ளே நுழைவதற்கும் வெளியே செல்வதற்கும் ஒற்றை வாயில் இருந்தது. சுற்றி அறைகள் இருக்க, நடுவே காலி இடம் இருந்தது. அங்கிருந்த தண்ணீர் குழாயை நோக்கி பரிமளா சென்று கொண்டிருக்க கௌதமன் பார்வை குழந்தையின் மீதே படிந்திருந்தது. குழந்தை சிணுங்க ஆரம்பித்திருந்தது.
“இங்க பிறந்த குழந்தைல இருந்து பதினேழு வயசு வரைக்கும் பிள்ளைங்க இருக்கு. காலேஜ் போக ஆரம்பிச்சுட்டா ஹாஸ்டல்ல தங்கி படிக்க வைப்போம். ஒரு வேலை கிடைச்ச பிறகு அவங்க பாடு. சில குழந்தைகள தத்து எடுத்துட்டு போவாங்க, குடும்ப கிடைக்காத இந்தக் குழந்தைகளுக்கு இது தான் வீடு” எனப் பேச்சு கொடுக்கும் விதமாக இல்லத்தின் விபரம் கூறினார். கேட்டுகொண்டான்.
அவன் பார்வை சென்ற திசையைப் பார்த்தவர், “குழந்த அவங்க அம்மா ஜாடை போல?” எனக் கேட்க, அவனுக்கு எப்படித் தெரியும் அது அப்பாவை உரித்து வைத்திருக்கிறது என. “ம்ம்ம்” எனப் புன்னகைத்தான்.
“என்ன குழந்த?” எனவும், கௌதமனுக்கு பக்கென இருந்தது. இப்பொழுது என்ன கூறுவது? ‘ச்ச… எவ்வளவு நேரம் இருந்துச்சு… பாக்காம போயிட்டேனே’ என நொந்துக் கொண்டான். கண்டிப்பாக ஃபிராக் போட்டிருக்கவில்லை. ஆணாக இருக்குமோ? ஆண் எனக் கூறி… அது பெண்ணாகப் போனால்? ஆண்டவா காப்பாத்து என இவன் உள்ளுக்குள் தவித்து நிற்க, “பாப்பா பேர் என்ன?” என அடுத்த அம்பை வீசினார்.
‘சூரியா… ஜோதி…கிரண் இப்படிக் காமன் நேம் சொல்லுவோம்’ என இவன் நினைத்து, வாய் திறக்கும் முன் குழந்தை ஆழ ஆரம்பித்திருந்தது.
“என்ன ஆச்சு?” என இவன் இருந்த இடத்தில் இருந்து கேட்க, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தவர், “டிரெஸ்ல பாட்டிருந்துது. அதனால துணிய கழட்டிட்டு ஒடம்புல தண்ணி ஊத்தவும் குளிருடுச்சு போல. நீங்க பக்குவமா பார்த்திருப்பீங்க… அதுதான் குழந்தைக்கு தாங்கல” எனக் கூறிக்கொண்டே துண்டால் துவட்ட, ஈரத் துண்டை விடுத்து அழும் குழந்தையை அள்ளி வாரிக் கொண்டான்.
“பொண்ணு பேரு என்ன சார்?” பரிமளா கேட்க, “அவருக்கு கவனம் பூரா குழந்த மேல தான். நான் பேசின எதுவும் அவர் காதுல விழல. இப்போ போதா குறைக்கு குழந்த அழுது… பதில் எதிர்பார்க்காத” எனச் சிரித்தார் பாதிரியார்.
“என்ன கௌதமன் சரிதானே?” எனவும் இவன் அசட்டு சிரிப்பை உதிர்க்க, இவன் சிரிப்பைப் பார்த்த குட்டியும் கௌதமன் முகத்தைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தாள். மொட்டைத் தலையை அவன் கன்னம் தேய்துச் சிரிக்கும் குழந்தையை அவனுள் இதமாக இறங்கினாள்.
தன்னை மறந்து “என்ன சிரிப்பு?” எனக் கௌதமனும் சிரிக்க, மீண்டும் மீண்டும் அவன் முகத்தை பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்த அந்தச் சிரிப்பொலி காதுக்கு இன்னிசையாக இருந்தது கௌதமனுக்கு.