Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-26

அத்தியாயம்-26

ஊர் எல்லைக்குள் கார் நுழைந்ததும், அகலுக்கு அழைத்தான் பாண்டி..

“அகலு..”

“சொல்லு மாமா..”



Advertisement

“அத்தை கிட்ட சொல்லிட்டியா??”

“சொல்லிட்டேன் மாமா..”

“என்ன சொல்லுச்சு..??”

Advertisement

“ஒண்ணுமே சொல்லல..அறைக்குள்ள நேத்து போனது..இன்னும் வெளிய வரல..”

Advertisement

“நீ போய் பார்த்தியா??”

“ஹ்ம்ம்..போனேன்..அனல் பார்வை பார்க்குது..”

“இப்போ என்ன பண்ணுறது??”

Advertisement

“நீங்க வாங்க..பார்த்துக்குவோம்.. வேற வழி இல்லை.. அவுகளை வாசல்ல நிறுத்தி வை.. ஆரத்தி எடுத்து கூப்பிட்டுக்குறேன்..”

“சரி அகல்..”

திரும்பி ராஜாவின் முகம் பார்த்தான்..

அவனும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

உதடு பிதுக்கி தலை ஆட்டினான்..
ஒரு பெருமூச்சுடன், ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டான் ராஜா..

மீனாவுக்கு  இவர்கள் ஜாடைகள் எதுவும் புரியவில்லை..ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது..

மதி இன்னும் உறக்கத்தில் இருந்தாள்..
இவர்கள் கார் வீட்டை நெருங்கியது..ராஜா மதியை எழுப்பினான்..

எழுந்து சற்று விழித்தவள்,சுற்றுப்புறம் உணர்ந்து பார்த்தாள்..

அவள் முகத்தில் பய ரேகைகள்..பதட்டத்துடன் அவன் முகம் பார்த்தாள்.. அவன் முகமும் இறுகி இருந்தது..நேற்று காரில் இருந்த இலகுத் தன்மை இல்லை..

கார், வீட்டின் முன்னே நின்றதும் இறங்கினான்..மதியும் அவன் பின்னே இறங்கினாள்..

பாண்டி உள்ளே சென்று, அகலிடம் கூறினான்..
அவளும் பேச்சியும், ஆரத்தி தட்டுடன் வந்தார்கள்..

மதியை பார்த்த அகலின் முகத்தில் ஒரு வியப்பு.பிறகு, ஒரு இழுத்து பிடித்த புன்னகை..

பேச்சி வெளிப்படையாகவே வாயை பிளந்தாள்..

“வாயை பிளாக்காம, ஆரத்தி சுத்து..”

அகலின் அதட்டலில், ஆரத்தி சுற்றினாள்..
மதி, அவர்களை பார்த்து சங்கடமாய் முறுவலித்தாள்..

ஆரத்தி சுற்றி முடித்து அவர்களை உள்ளே அழைத்தாள்..

கூடத்திற்கு வந்ததும், மதியின் கண்கள் மரகதத்தை தேடியது..

அப்பொழுது தான் அறையில் இருந்து வெளியே வந்தார் மரகதம்..

இவர்களை பார்த்ததும் நின்றவர், அனைவரையும் பார்வையால் அளவிட்டார்..

மதி, அவரை பார்த்து புன்னகைக்க முயன்றாள்..

அவர் முகத்தில் புன்னகை இல்லை.. கடுமை நிறைந்திருந்தது..

இதுவரை அவளை, கண்ணு கண்ணு என்று கொஞ்சிய மரகதம் அத்தையின் பார்வை இல்லை அது..
இந்த கடுமை புதிது அவரிடம், அதுவும் அவளிடம்..

அவளை அளவிட்டவர்,அவர்களை நெருங்கி, ராஜாவின் முகத்தை கூர்ந்தார்..

அவனால், அவர் பார்வையை சந்திக்க முடியவில்லை..
தலை குனிந்து நின்றான்..

வேகமாய் அவன் கன்னத்தில், ஓங்கி அறைந்தார்..

அனைவரும் அதிர்ந்து போய் பார்த்தார்கள்..ராஜாவிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.. அவன் தலை நிமிரவில்லை..

மதி பதறி போய், அவனை மறைத்தார் போல வந்து நின்றாள்..

“அத்தை, அவர் மேல எந்த தப்பும் இல்ல..நான் தான் எல்லாத்துக்கும் காரணம்.. உங்களுக்கு அடிக்கணுமுன்னு தோணுச்சுன்னா, என்னை அடிங்க..”

ஒரு வேகத்துடன் பேசியவள்,  அவர் பார்வையின் வீரியத்தில், பேச்சை நிறுத்தினாள்..
கண்கள் கலங்க நின்றாள்..

 

[the_ad id=”6605″]

 

அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாதவரின் பார்வை, இப்பொழுது பாண்டியின் புறம் திரும்பியது..

ராஜாவை அடித்த அடியில், இங்கு, இவன் கன்னத்தை பிடித்த படி நின்றவன்,

அவர் பார்வை அவனை கூர்ந்ததும்,
“எங்க ஆயா சத்தியமா, எனக்கும் நேத்து தான் தெரியும் அத்தை.. இவன் சொல்லவே இல்லை..இதுக்கும் எனக்கும், எந்த சம்மந்தமும் இல்ல..நான் பச்சை மண்ணு அத்தை..என்னை நம்பு..”

காவலரின் பார்வைக்கு பயந்து, வாக்குமூலம் கொடுக்கும் குற்றவாளி போல ஒப்பித்தான், பாண்டி..

அவனை முறைத்த படி, அவர் அறைக்குள் சென்று விட்டார்..

‘ஹப்பாடா, ஜஸ்ட் மிஸ்.. தப்பிச்சேன்..’

நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமானவன்,சுற்று புறம் உணர்ந்து திரும்பி பார்த்தான்..

மீனாவின் பார்வை,
‘நீயெல்லாம் ஒரு பிரெண்ட்’
என்னும் வகையில், முகச்சுளிப்புடன் இருந்தது..

ராஜா இவனை, ‘நீ யார்’ என்னும் பார்வை பார்த்தான்..

அகல் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்..

‘போச்சு, டோட்டல் டேமேஜ்..அதுவும், இந்த பிள்ளை இவ்ளோ கேவலமா பார்க்குது..ஏற்கனவே, என்னை மட்டமா நினைச்சு இருக்கு..இப்போ, அவ்ளோ தான்.. இனி மீனா பொண்ணு கூட, கனவுல கூட டூயட் பாட முடியாது..’

அத்தனை பேரையும் பார்த்து, அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தான்..

ராஜா முக இறுக்கத்துடன், மாடி ஏறி விட்டான்..

நேற்று, சற்று இளகி இருந்த அவன் மனம், மீண்டும் கோபத்தை தத்து எடுத்துக் கொண்டது..

‘செய்ததெல்லாம் இவள். கடைசியில், எல்லோர் முன்னும் அவமான பட போவது நான்..’

மதிக்கு அவன் கோபம் புரிந்தது..நேற்று இருந்த இளக்கம் மறைந்து விட்டது, என்றும் புரிந்தது..

சூழ்நிலையை இலகுவாக்க அகல்,
“உட்காருங்க ஏன் நிக்குறிங்க??”

அவள் பேச்சில், கூடத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்தார்கள்..

பேச்சி அனைவர்க்கும் காபி எடுத்துக் கொண்டு வந்தாள்..

“மித்துக்கு பால் கொண்டு வாங்க..”

மீனாவின் பேச்சில் விழித்தாள்..யார் மித்து என்று..

“எனக்கு தான் பேச்சி..”

மதி, புன்னகைக்க முயன்ற படி கூறினாள்..

தலை அசைத்து விட்டு உள்ளே சென்றாள் அவள்..

அகல் நின்று கொண்டிருப்பதை பார்த்து விட்டு,
“உட்காரு அகல்..”

“பரவால்லங்க..”

அவள் மரியாதை பன்மையில்,
“என்ன அகல் ?? ங்க எல்லாம் போட்டு பேசுற..அந்நியம் மாதிரி..நான், உன் பழைய அண்ணி தான்.. அப்போ கூப்பிட்ட மாதிரி, உரிமையோடு கூப்பிடு..”

என்ன சொல்லுவது என்று தெரியாமல் நின்றாள்..

எழுந்து அவள் அருகே போனவள், அவள் கைகளை பிடித்துக் கொண்டு,
“என்னை மன்னிச்சுடு அகல்..நான் வேணுமுன்னு எதுவும் செய்யல..என் சூழ்நிலை..உன் அண்ணா, என்னை மன்னிக்க முடியாதுன்னு சொல்லிட்டார்..இப்போ அத்தையும், ஒரு வார்த்தை கூட பேசல..நீயும் வெறுத்துடாத…”
எவ்ளோவோ அடக்கியும், விசும்பல் வெளிப்பட்டது..

அதில் பதறி போன அகல்,
“என்ன அண்ணி.??.பெரிய வார்த்தை எல்லாம் பேசுற??முன்ன, நீ என் மாமா பொண்ணுன்னு அப்படி பேசுனேன்..இப்போ, இல்லைனு தெரிஞ்சு, நீ தப்பா எடுத்துப்பேன்னு அப்படி சொன்னேன்..உன் மேல, கோவம் எல்லாம் இல்ல அண்ணி..சின்ன வருத்தம் தான்.. ஒண்ணும் சொல்லாம கிளம்பி போய்ட்டேன்னு..அழாத அண்ணி..”

அவள் எழுந்ததும் பின்னால் எழுந்து சென்ற மீனா,அவள் விசும்பியதும், அவள் தோளில் ஆறுதலாய் அழுத்தம் கொடுத்தாள்..

அகல் பேசி முடித்ததும்,
“நீங்க தாராளமா முன்ன மாதிரி கூப்பிடலாம்..இவ, உங்க மாமா பொண்ணு தான்.. அதோட, இப்போ உங்க அண்ணன் மனைவி, ரெண்டு உரிமை வேற..முன்ன விட, அதிக உரிமையோட கூப்பிடலாம்..”

முகத்தில் குழப்பதோடு,
“மாமா பொண்ணா??பாண்டி மாமா, வேற பொண்ணுன்னு சொன்னுச்சே..”

கேள்வியாய் அவன் முகம் பார்த்தாள்..

“ஆமா அகலு., மது, உங்க மாமாவோட இன்னொரு பொண்ணு..”

“சேகர் மாமாக்கு ஒரே பொண்ணுன்னு, அம்மா சொல்லுச்சே மாமா..”

“இவ, அவரோட முதல் மனைவிக்கு பிறந்த பொண்ணு..”

“மாமாக்கு ரெண்டு பொண்டாட்டியா??”
அதிசயமாய் கேட்டாள்..

“எனக்கே, நேத்து தான் தெரியும் அகலு..”

“ஓஹோ..உன் பேர் என்ன அண்ணி??”

“மித்ரமதுமதி..”

“அப்போ, உன் பேரும் மது தானா??”

சற்று நேரம் பேசியவள்,
“நீங்க, இந்த அறைக்கு போய் குளிச்சு ரெடி ஆகுங்க..நான், பேச்சி டிபன் ரெடி பண்ணிட்டாளான்னு பார்க்குறேன்..”
மீனாவிடம் கூறினாள்..

மீனா தன் பேக்குடன், கீழே உள்ள அறைக்குள் சென்றாள்..

மதி, எங்கே செல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்..

“நீ, மாடிக்கு போ அண்ணி..”

பாண்டி, அவள் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு முன்னால் சென்றான்..

அவனை தொடர்ந்து சென்றாள் மதி..
ராஜாவின் அறைக்குள் நுழைந்தவன், அவள் பொருட்களை வைத்தான்..

குளியல் அறையில் சத்தம் கேட்டது..
அவன் கீழே சென்றதும்,அங்கு உள்ள படுக்கையில் அமர்ந்தாள்..

 

[the_ad id=”6605″]

 

 

ராஜா, குளித்து விட்டு வெளியே வந்தான்..இவளை ஒரு பார்வை பார்த்தவன்,அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்..

“வரு..”

அவள் பேச்சை, கை காட்டி நிறுத்தியவன்..

“தொடர்ந்து பயணம் செஞ்சது களைப்பா இருக்கும்..குளிச்சுட்டு, சாப்பிட்டு, ஓய்வெடு..”

“அதில்லை..”

“சொன்னதை செய்..எனக்கு மில்லுல வேலை இருக்கு..எப்போ வருவேன்னு தெரியாது..நேரத்துக்கு சாப்பிடு..”

கூறியவன், வேகமாய் கிளம்பி கீழே சென்றான்..

காரில், கொஞ்சம் குறைந்திருந்த அவன் கோபம், மீண்டும் பழைய நிலைக்கு வந்திருந்தது..

ஒரு பெருமூச்சுடன் எழுந்து, குளித்து விட்டு வந்தாள்..
மீண்டும் கீழே சென்றாள்.. மீனா இவளுக்காக காத்திருந்தாள்..

பாண்டி, அவன் வீட்டுக்கு சென்றிருந்தான்..

இருவரும் உணவு உண்டார்கள்..

“அகல், அவரு சாப்பிட்டாரா??”

“இல்ல அண்ணி..சாப்பிட சொன்னேன்..மில்லுல சாப்பிடுறேன்னு, சொல்லிட்டு போயிடுச்சு அண்ணன்..”

அவளுக்கு  அதற்கு பிறகு, உணவு உள்ளே இறங்கவில்லை..

குழந்தைக்காக கஷ்டப்பட்டு உண்டவள்,
“மீனு..நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு..நைட் எல்லாம் தூங்கி இருக்க மாட்ட..”

“நீ..??”

“சாப்பாடு நெஞ்சுலேயே நிக்குது.கொஞ்ச நேரம் கழிச்சு தூங்க போறேன்..”

தலை அசைத்து விட்டு, உறங்க சென்றாள் மீனா..

அகலும், அவள் வீட்டுக்கு செல்வதாய் கூறிவிட்டு கிளம்பி விட்டாள்..

அவள் சென்றதும்,மெதுவாய் எழுந்து, மரகதத்தின் அறைக்கு சென்றாள்..

அறை, தாழ் இட படவில்லை..வெறுமனே சாத்தி இருந்தது..

அங்கிருந்த சாய்வு நாற்காலியில், கண் மூடி அமர்ந்திருந்தார் மரகதம்..

அவர் அருகில் சென்றவள், அவர் கால்களில் விழுந்தாள்.. அவள் கண்ணீர், அவர் பாதத்தில் விழுந்தது..

அதில் கண்களை திறந்தவர்,
“என்ன பண்ணுற??எழுந்துக்கோ..”

“என்னை மன்னிச்சுடுங்க அத்தை”

“சொல்லுறதை கேளு..எழுந்துக்கோ..இந்த நிலையில,இப்படி எல்லாம் பண்ணாத. இசகு பிசகா பிடிச்சுக்கும்.. எழுந்துக்கோன்னு சொல்லுறேன்ல..”

மெதுவாய் எழுந்து நின்றாள்..

அவளை கூர்ந்தவர்,
“எத்தனை மாசம்..??”

“ஏழு ஆரம்பிக்க போகுது..”

“உன்ற அப்பா அம்மா யாரு??”

“உங்க அண்ணன் ராஜசேகர் தான், என் அப்பா..”

புருவம் சுருக்கியவர்..
“இங்க வந்தது வேற பொண்ணுன்னு, அகலு சொன்னா..”

“நான், பிரமிளா அம்மா பொண்ணு இல்ல..”

அவர் கண்களில் கேள்வி,
“உன்ற அம்மா பேர் என்ன??”

“பாரிஜாதம்..”

சற்று திகைத்து எழுந்தார்..

“என்ன பேர் சொன்ன??”

“பாரிஜாதம்..”

சிறிது நேரம் யோசித்தார்..

“இங்க இருக்கும் போதே, உண்டான விஷயம் தெரியுமா??”

“தெரியும்..”

தலையை குனிந்து கொண்டே சொன்னாள்..

“ஓ..அதான், சரியாய் சாப்பிடாம இருந்தியாக்கும்..”

பதில் சொல்லாமல், மௌனமாய் இருந்தாள்..

“நான் ஒரு விவரம் கெட்டவ..வீட்டுக்குள்ளேயே இருந்து கிட்டு, ஒண்ணுமே தெரியாம இருந்துருக்கேன்..
மாடியில குடும்பம் நடத்துறது கூட தெரியாம..அவ்ளோ கூறு கெட்டு போச்சு..எல்லோரும் ஏமாத்துற அளவுக்கு..”

“அச்சோ, அத்தை நீங்க நினைக்குற மாதிரி இல்ல..அவர், என் அறைக்கு கூட வந்ததில்லை..எங்க கல்யாணம் வரை..அப்புறம் கூட, நீங்க இங்க இருந்த போது வந்ததில்லை…அவர் மேல எந்த தப்பும் இல்ல…”
அவசரமாய் கூறினாள்..

“எப்போ கல்யாணம் ஆச்சு??”

“என் பிறந்த நாளுன்னு சொல்லி, கோவிலுக்கு கூட்டிட்டு போனாரே, அன்னைக்கு தான்.. அதுவும் அவர்க்கு, அங்க போகும் வரை தெரியாது..என் கட்டாயத்துல தான், தாலி கட்டுனார்..”

“அப்படி என்ன அவசரம்..??என்ற கிட்ட சொன்னா, கட்டி வைக்க மாட்டேனா??”

சற்று தயக்கத்துடன், திக்கி திணறி, என்ன காரணம்,ஏன் இங்கு வந்தாள், ஏன் அவசரமாய் திருமணம் முடித்தாள்,அனைத்தும்  சொல்லி முடித்தாள்..

சற்று யோசனையுடன் புருவம் சுருக்கி யோசித்தவர்,

“சரி, நீ போ..”
தயங்கியபடி அங்கேயே நின்றாள்..

“என்ன??”

“எங்களை மன்னிச்சுட்டீங்களா??”

“மன்னிக்கிற மாதிரியா பண்ணி இருக்கீங்க??அவன் மேல தப்பு இல்லைனாலும், அவனும் உனக்கு உடந்தை தானே??அதெல்லாம், உடனே சரி ஆகாது..பார்ப்போம்..இப்போ போ..”

 

[the_ad id=”6605″]

 

சோர்ந்து போன முகத்துடன் திரும்பினாள்..

“ஒரு நிமிஷம் நில்லு..”

என்ன என்று பார்த்தாள்..

“மாசமா இருக்குற பிள்ளை..எதையாவது நெனச்சு குழம்பி கிட்டு கிடக்காத..என்ற பேரப்பிள்ளையை நல்லபடியா பெத்து தா..
எங்க குடும்ப வாரிசை பத்தி, இவ்ளோ நாள் சொல்லாதத்துக்கே, உன்னையை மன்னிக்க முடியாது..இருந்தாலும், அது எங்க ரத்தம்..அதான், ஒண்ணும் சொல்லாம விடுறேன்..
ஒழுங்கா சாப்பிட்டு, ஒழுங்கா குழந்தை பெத்துக்குற வழிய பாரு..”

‘இவர் ஏற்று கொண்டதாய் எடுத்துக் கொள்வதா??இல்லை, கோபமாய் இருப்பதாய் எடுத்துக் கொள்வதா??’

புரியாமல் தலை அசைத்து விட்டு சென்றாள்..

மாடியில் இவர்கள் அறைக்கு சென்றவள், குழப்பத்துடனேயே படுத்தாள்.. அசதியில் உறங்கிப் போனாள்..

மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில், வீடு திரும்பிய ராஜா, அவன் அறைக்கு சென்றான்..

கட்டில் விளிம்பை ஒட்டி படுத்திருந்தாள் மதி..

பதறியப்படி அவளை நெருங்கி, தோள்களை பிடித்து உலுக்கினான்..

அதில் விழித்தவள்..
“என்ன வரு??”
தூக்க கலக்கத்தில் கேட்டாள்..

“எங்க படுத்திருக்க??இவ்ளோ ஓரமா படுத்து விழுந்தா, என்னாகுறது..??”

“தூக்கத்துல வந்துட்டேன் போல..”
எழுந்த படி கூறினாள்..

“தலகாணி வச்சுட்டு தூங்கு..”

“ஹ்ம்ம்..”
என்றவள்,

“சாப்பிட வாங்க..”

“எனக்கு வேண்டாம்..”

“அப்போ, எனக்கும் வேண்டாம்..”

மீண்டும் படுக்கப் போனாள்..

“என்ன டி??அடி வேணுமா??”

“நீங்க சாப்பிட மாட்டீங்க. நான் மட்டும், வேளை தவறாம சாப்பிடனுமா??”

“நீ தான் மாசமா இருக்குற??”

“அப்போ, மாசமா இருக்குறவங்க மட்டும் தான், நேரத்துக்கு சாப்பிடனுமா??”

“பிள்ளைக்கு சாப்பாடு வேண்டாமா??”

“பிள்ளைக்கு அப்பா சாப்பிடாதப்போ, பிள்ளையும் சாப்பிடாம இருக்கலாம்..”

அவளை முறைத்தவன்,குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்..

சிறிது நேரத்தில் வெளியே வந்தவன்,
“வா, சாப்பிட போலாம்..”

புன்னகையுடன் அவன் பின்னே சென்றாள்..

சாப்பாட்டு மேஜையை நெருங்கிய போது, சமையல் அறையில் இருந்து, மரகதம் வெளியே வந்தார்..

அவரை பார்த்ததும், தயங்கி நின்றான் ராஜா,
“உன்ற புருஷனும் நீயும் சாப்பிடுங்க..உன்ற தோழி பிள்ளையையும் கூப்பிடு..”
மதியிடம் கூறினார்..

கண்ணில் வியப்போடு அன்னையை பார்த்தான் ராஜா..

அவன் புறம் திரும்பவில்லை அவர்..

மீனாவை அழைத்துக் கொண்டு வந்தாள் மதி..
அனைவர்க்கும் மரகதமே பரிமாறினார்..

மதியின் மனதில் சிறு மகிழ்ச்சி ஊற்று..

மீனாவிடம், பொதுவான சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார் மரகதம்..

மீனாவுக்கு வியப்பு,
அவ்வளவு கோபப்பட்டவர் இவர் தானா?? என்று..

பிறகு அவர், அவளிடம் மட்டுமே பேசுவதை உணர்ந்து கொண்டாள்..

இரவு உணவு முடிந்ததும், மாடி ஏற போன மதியிடம்,
“உடனே படுக்க கூடாது..கொஞ்ச நேரம் நட, இல்ல உட்காரு..”
மரகதம் கூறிவிட்டு, அவர் அறைக்கு சென்று விட்டார்..

மீனா ஆச்சர்யத்துடன், மதியின் முகம் பார்த்தாள்.. அவள் புன்முறுவலுடன், கூடத்தில் வந்து அமர்ந்தாள்..

“மித்து, நடக்கலையா??”

“கொஞ்ச நேரம் மீனு..உக்காருறேன் ப்ளீஸ்..”

இருவரும் பேச ஆரம்பித்தார்கள்..ராஜா மாடிக்கு சென்று விட்டான்..

அன்று இரவு சேகருக்கு அழைத்தார் மரகதம்..

“அண்ணா..”

“சொல்லு மரகதம்..”

“உடனே கிளம்பி, இங்க வரிய??”

“என்ன ஆச்சு மா..??எதுவும் பிரச்சனையா??”

“நீ வா சொல்லுறேன்..”

“எப்போ வர??”

“முடியுமுன்னா, இன்னைக்கே கிளம்பி வா..”

“ஹ்ம்ம்..நானே வரணுமுன்னு இருந்தேன், வரேன்..”

அண்ணனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் மரகதம்..

மறுநாள் பொழுது, இனிமையாய் விடிந்தது..

அருகில் உறங்கி கொண்டிருந்த மதியின், மேடிட்டிருந்த வயிற்றில் முத்தமிட்டு விட்டு எழுந்தான், ராஜா..

அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது தான், விழித்து எழுந்தாள் மதி..

அவன் கீழே சென்று, கூடத்தில் அமர்ந்து, நாளிதழில் மூழ்கிய போது, வாயிலில் கார் நிற்கும் ஒலி கேட்டது..

யார் இந்த நேரத்தில் என்று, திரும்பி பார்த்தான்..

சேகர் உள்ளே நுழைந்தார்..

கண்ணில் வியப்புடன்,
“வாங்க மாமா..”

“ராஜா..நல்லா இருக்கியா??”
கேட்டுக் கொண்டே நுழைந்தார்..

சற்று சோர்ந்து காணப்பட்டார்..

அவர்கள் பேச்சு குரல் கேட்டு வெளியே வந்த மரகதம்,
“வா ண்ணா.. உட்காரு..”

பேச்சியிடம் காபி கொண்டு வர சொன்னார்..

“என்ன மா, பேசனுமுன்னு சொன்ன??”

அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போது, மாடியில் இருந்து இறங்கி வந்தாள் மதி..

அவளை கண்டதும் அதிர்வோடு எழுந்தவர்,
“மது நல்லா இருக்கியா மா??நீ எங்க இங்க??உனக்கு ஒண்ணும் இல்லியே??”

கேள்விகளை அடுக்கி கொண்டே போனவர், அவள் மேடிட்டிருந்த வயிற்றை பார்த்து, குழப்பத்துடன் பேச்சை நிறுத்தினார்..

“மாமாக்கு எப்போவும் மது நினைப்பு தான்.. அவருக்கு, இன்னொரு பொண்ணு இருக்குங்குறதே மறந்து போய்டும்..இல்லியா மாமா??”

கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் மீனா..

“மீனா நீ??”

“ஹப்பா, என்னையாச்சும் ஞாபகம் இருக்கே..”
போலியாய் நெஞ்சில் கை வைத்து, ஆசுவாசம் அடைந்தாள்..

“மீனு,சும்மா இரு டி..”

அவளை அடக்கிய மதி..

“நல்லா இருக்கீங்களா அப்பா??”

அவள் பேச்சில் குழப்பத்துடன் நின்றவர்,சட்டென இவள் புறம் திரும்பி,
“மித்ரா, நீயா மா..??நீ எப்படி இங்க??”

“அவ, அவ புருஷன் வீட்டுல இல்லாம, எங்க இருப்பா??”

“மீனு..”
அவள் கண்டிப்பை கண்டு கொள்ள வில்லை மீனா..

“புருஷன்??”

“நீங்க கல்யாணம் பண்ணி வைக்காட்டி, அவளுக்கு கல்யாணம் ஆகாதா என்ன??”

“மீனா, என்ன மா  சொல்லுற ??”

“ஹ்ம்ம்..உங்க பொண்ணு மித்ராக்கு, மதுவுக்கு இல்ல, மித்ராவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லுறேன்..”
அழுத்தி கூறினாள்..

“யாரை கல்யாணம் பண்ணா??”

“உங்க தங்கச்சி மகனை தான்..”

சட்டென்று மரகதத்தையும் ராஜாவையும் பார்த்தார்..

ஆமோதிப்பாய் தலை அசைத்தான் ராஜா..

“அதை பத்தி தான், பேச கூப்பிட்டேன் ண்ணா..”

“எப்போ மா கல்யாணம் ஆச்சு..??மித்ராவை எப்படி தெரியும் உங்களுக்கு.??.”

“இப்படி உட்காரு ண்ணா, எல்லாம் சொல்லுறேன்..”

அவர்கள் எதிரில் அமர்ந்தார்..
“நீ அனுப்பி வச்சு இங்க வந்தது, மது இல்ல..இவ தான்..”

வேகமாய் திரும்பி, இவள் புறம் பார்த்தார்..
தலையை குனிந்து கொண்டாள் மதி..

“உனக்கு, இன்னொரு பொண்ணு இருக்குறதே எனக்கு தெரியாது ண்ணா.. என்ன ண்ணா இதெல்லாம்..??”

சற்று நேரம் மௌனம் காத்தவர்,பிறகு தொண்டையை செருமி கொண்டு,
“என்னை மன்னிச்சுடுமா..உன் கிட்ட மறைக்கணுமுன்னு நெனைகல..என்னோட, என் ரகசியமும் போகட்டுமுன்னு பார்த்தேன்..”

“இந்த பிள்ளை..??”

“பாரிஜாதத்தோட பொண்ணு..என் பாரிஜாதத்தோட பொண்ணு..”

அவர் கண்ணில், நீர் மணிகள் உருண்டு ஓடியது..

“அந்த பிள்ளை உயிரோட இல்லைன்னு, ஊர்ல சொன்னாங்களே ண்ணா..”

“அதை நம்பி தான், அப்பா அம்மா கட்டாயத்துல, பிரமிளா கழுத்துல தாலி கட்டுனேன்..அதான், நான் பண்ண பெரிய தப்பு..”

தன் தலையில் அடித்துக் கொண்டார்..ஆண் மகன் என்பதையும் மறந்து, குலுங்கி குலுங்கி அழுதார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!