உறவாடும் கனவே தொடருதே – அத்தியாயம் -4
அத்தியாயம்..4
வாசல் வரை சென்ற வெற்றித்திருக்குமரனை,
Advertisement
“ஐயா ராசா” என தடுத்து நிறுத்தினார் நாச்சியார்.
“சொல்லுங்க அப்பத்தா” என வெற்றி திரும்பி வர,
Advertisement
Advertisement
“இல்ல ராசா, பக்கத்து ஊருண்ணா, அந்த வாழத்தோப்பு மூர்த்தியையா பார்க்க போற?” என கேட்டதும்,
“ஆமா அப்பத்தா” என்றான் வெற்றி.
Advertisement
“ஐயோ, அவன் சரியான கிறுக்கனாச்சே, அவன் கிட்ட பேசுற விதத்தில் பேசினா தானே காரியம் நடக்கும். அதுக்கு அவன் தோப்புக்கு போக முன்னமே நாம போய் நின்னா தான் தெளிவா பேச முடியும். நேரம் கழிச்சு போனோம் வையு , நம்மை அலைய வைப்பான். அதனால் நீ முதலில் அவனை பார்த்துட்டு வா ராசா. வெண்பாவை அப்புறம் பார்த்துக்கலாம்.
அவ இங்க தானே போய் இருக்கா! வந்துடுவா, ஒருசமயம் வரலைன்னு வை, நான் ஆள் அனுப்பி பார்த்துட்டு வர சொல்றேன்”
என அவர் நயமாக பேசி அவனை அங்கு போக விடாமல் தடுக்க, வெற்றிக்கும் அவர் சொல்வது சரியென்று தான் பட்டது.
ஏனென்றால் கடந்த ஒரு வரமாக, அவனும் மூர்த்தியை சந்திக்க முயற்சி செய்த போதெல்லாம், அவனால் அவரை பார்க்கவே முடியவில்லை. நாச்சியார் சொல்வது போல மூர்த்தி கொஞ்சம் கோளாறு பிடித்தவர் தான், அந்த கோணத்தில் யோசித்தவன்,
“நீங்க சொல்றதும் சரிதான் அப்பத்தா. நான் முதல்ல மூர்த்தியை போய் பார்த்துட்டு வரேன். நீங்க தமிழ் வீட்டுக்கு ஆள் அனுப்பி என்னென்னு பாருங்க”
என கூறிவிட்டு அவன் புறப்பட்டு சென்றான்.
அவன் சென்றதும், அறைக்குள் வந்து அமர்ந்து கொண்ட நாச்சியாருக்கு, இன்னமும் கனகவல்லி மீதான கோபம் குறையவில்லை.
அவருக்கு தன் மகள் மீது மிகுந்த பாசம் இருந்தது உண்மை தான். ஆனால் திருமணத்திற்கு பின்பு, முக்கியமான சூழ்நிலையில், கனகவல்லி அவர் பக்கம் நிற்காது, சண்முகம் பக்கம் நின்றதிலிருந்து தான் அவருக்கு மகள் மீதான கோபம் அதிகமானது. தற்பொழுது அந்த கோபம் கொஞ்ச கொஞ்சமாக வெறுப்பாய் மாறி நிற்கிறது.
அறையில் அவர் மாட்டி வைத்திருந்த குடும்ப படத்தை எடுத்து வைத்து பார்த்து கொண்டிருந்தார். கணவனை அதிகம் தேடியது அவர் மனம்.
அம்பலவாணர்- நாச்சியாருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். மூத்தவர் திருநாவுக்கரசு, அடுத்து அமுதவல்லி கடைக்குட்டி கனகவல்லி. கடைக்குட்டி என்பதாலேயே கனகவல்லி தான் அந்த வீட்டின் செல்ல பிள்ளை.
அவர் ஆசைப்பட்டது எதுவாகியினும் உடனே அவர் கையில் இருக்கும். தந்தை, தாய், அண்ணன் என யாரேனும் ஒருவர் அவர் விருப்பத்தை உடனுக்குடன் நிறைவேற்றி கொடுத்து கொண்டே இருப்பர்.
முதலில் திருநாவுக்கரசுவிற்கு தான் திருமணம் முடிந்தது. விசாலாட்சி அந்த வீட்டின் மருமகளாய் தன கடமையினை சரிவர செய்தார். நாத்தனார்கள் மீதும் அவருக்கு அலாதி பிரியம். அதே போல தான் அமுதவல்லியும் கனகவல்லியும்.
வெற்றிதிருக்குமரனை அவர் ஈன்ற பொழுது, அவன் அன்னையின் கைகளை விட, அத்தைகளின் மடியில் வளர்ந்தது தான் அதிகம். வீட்டிற்கு மூத்த வாரிசு என்பதால் வெற்றி எல்லாருக்கும் செல்ல பிள்ளை.
அதன் பின் திருமண வயதை எட்டிய அமுதவல்லிக்கு, நல்ல அழகுள்ள, வசதி வாய்ப்புடன் இருந்த இளங்கோவை திருமணம் செய்து வைத்தனர் அம்பலவாணரும் நாச்சியாரும்.
திருமணம் முடிந்து அமுதவல்லி சென்று விட, தற்பொழுது வெற்றித்திருக்குமரனுடன் இருக்கும் பொழுது கனகவல்லிக்கு அதிகம் கிடைத்தது. அண்ணன் மகனுடன் இருப்பதில் அவருக்கும் அதீத சந்தோஷமே. இருவரும் உண்பது முதல் உறங்குவது வரை ஒன்றாக தான் இருப்பர்.
அடுத்து விசாலாட்சி கருவுற்றிருக்க, வெற்றித்திருக்குமரனின் முழு பொறுப்பும் கனகவல்லியை வந்து சேர்ந்தது. வளரும் பருவத்தில் கனகவல்லி அவனை நன்றாகவே பார்த்து கொண்டார்.
விசாலாட்சி கருவுற்றிக்கும் அதேசமயம் அமுதவல்லியும் கருவுற்றிருந்தார். விசாலாட்சி கதிவேலவனை ஈன்ற சில நாட்களிலேயே அமுதவல்லி ராகினியை பெற்றெடுத்தார்.
சந்தோஷமாக தான் எல்லாமே சென்று கொண்டிருந்தது. அடுத்து கனகவல்லிக்கு திருமண பேச்சு ஆரம்பிக்க, அவருக்கோ குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வதில் சிரித்தளவும் விருப்பமில்லை. முக்கியமாக வெற்றியை பிரிந்து செல்வதில் கடுகளவும் விருப்பமில்லை. தற்பொழுது வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும் என்று தட்டிகழித்து கொண்டு இருந்தார்.
ஆனால் அம்பலவாணர் அவருக்கு வரன் பார்க்கும் தேடலை விடவில்லை.
ஒருசமயம் அவர் வேலை விஷயமாக பக்கத்து ஊருக்கு சென்றிருந்த பொழுது தான் சண்முகத்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
சண்முகத்தின் நேர்மையும் உண்மையும் அவருக்கு மிகவும் பிடித்து போக, அவரையே கனகவல்லிக்கு வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தார்.
அம்பலவாணர் குடும்பத்திற்கு நிகரான வசதியும் வாய்ப்பும் இல்லாமல் இருந்தாலும் ஓரளவிற்கு வசதியோடு தான் இருந்தார் சண்முகம்.
சொந்தமாக தோட்டம், வீடு, தொழில் என்று அவருக்கென்று தனியாக இருந்தது. அதைவிட பெரிய சொத்தாக அவர் நினைப்பது, உண்மையையும், நேர்மையையும் தான். அது அவரிடம் கணக்கில்லமால் கொட்டி கிடந்தது.
பெண் பார்க்கும் படலம் நடைபெற, முதல் பார்வையிலேயே சண்முகத்தை கனகவல்லிக்கு பிடித்து போய் விட்டது. ஆனால் நாச்சியாருக்கு அவரை பிடிக்கவில்லை.
அவர்களை விட வசதி குறைவு என்ற காரணமே அவருக்கு சண்முகத்தை பிடிக்காமல் போவதற்கு முதன்மை காரணமாய் இருந்தது.
கணவனிடம் அவர் இதைப்பற்றி கேட்ட பொழுது, அம்பலவாணரோ,
“நாச்சியா, அவருக்கும் சொத்து, பத்து, தோட்டம் தொரவுலாம் இருக்கு. ஆனால் என்ன கொஞ்சம் குறைவா இருக்கு. அவ்வளவு தான். ஆனால் ரொம்ப நேர்மையானவர். நம்ம பொண்ணை கண் கலங்காம வச்சுப்பார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”
என அவர் விளக்கங்கள் கொடுத்த பொழுதும், நாச்சியாருக்கு ஏனோ அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“அதுக்கு சொல்லலங்க, மூத்தவளுக்கு நல்ல வசதியான இடத்தில் கட்டி கொடுத்தோம், இப்போ இளையவளுக்கு இப்படி ஒரு இடம் பார்த்தா, அவ என்ன நினைப்பா? நமக்கு மட்டும் இப்படி மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களேனு நினைக்க மாட்டா?!! என அவர் கலக்கமாக கூற,
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டா, நல்ல சந்தோஷமா தான் வாழ்வா” என அவருக்கு நம்பிக்கை ஊட்டினார் அம்பலவாணர். இவரிடம் பேசினால் ஒன்றும் வேலைக்காகாது என்று அவர் மகளிடமே இதைப்பற்றி பேச, கனகவல்லியோ, அவர் பேச்சை மதிக்கவில்லை.
அவருக்கு தான் சண்முகத்தை பிடித்து போயிற்றே, அதனாலே அவர் நாச்சியாரின் பேச்சை கேட்காது தந்தையிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார்.
அப்பொழுதே கனகவல்லி மீது அவருக்கு கோபம் தான். இருந்தாலும் மகளுக்கும் கணவருக்கும் பிடித்திருக்கிறதே!! தான் இடையில் தடங்கலாக இருக்க வேண்டாம் என யோசித்து, அதன் பின் அவர் எதுவும் பேசவில்லை. இருவருக்குக்கும் நல்ல முறையிலேயே திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாது இன்னொரு நபரும் இருந்தார். அது இளங்கோ தான்.
மூத்த மருமகனாய், அந்த வீட்டின் எல்லாவற்றிற்கும் தானும் இடம்பெற வேண்டும் என்பது அவரின் எண்ணம். அதை தனி கௌரவமாகவே பார்த்தார் இளங்கோ.
பெரிய வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது எதுவாயினும் அவரின் கருத்துகளும், முடிவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அதனாலேயே, கனகவல்லிக்கு வரன் பார்க்கும் வேலையில் அவரின் தலையீடும் இருந்தது. அவரே இரண்டு, மூன்று வரன்களை பார்த்து அம்பலவாணரிடம் கூறினார். ஆனால் அம்பலவாணருக்கு அந்த வரன்களில் திருப்தி இல்லாததால் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.
நான் சொல்லும் வரன்களை வேண்டாம் என்று கூறுகிறீர்களா?.சரி அப்படி என்னதான் என்னை விட உயர்வான வரனை பார்க்கிறீர்கள் என்று நானும் பார்க்கிறேன்’ என்று தான் அவர் நினைத்து கொண்டிருந்தார்.
ஆனால் சண்முகம் தான் கனகவல்லிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று கேள்விபட்டதும், அவரோ அமுதவல்லியிடம் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்தார்.
“நான் இந்த ஊரில் எவ்வளவு பெரிய மனுஷன் எனக்கு சகலையா வர போறவன், எனக்கு இணையா இல்லைனாலும், கொஞ்சமாச்சும் தகுதி இருக்க வேண்டாம். போயும் போயும் இவனை போய் மாப்பிள்ளையா பார்த்திருக்கிறாரே உங்க அப்பா. என் மானமே போக போது. ஊருக்குள்ள எப்படி என்னை மதிப்பான்?
என அமுதவல்லியிடம் அவர் கோபப்பட, அவருக்கோ இதை எப்படி கையாள்வது என்பதே தெரியாது விழித்தார். தாயிடம் இதைப்பற்றி பேச நாச்சியாரோ,
“உங்க அப்பாவுக்கும் தங்கச்சிக்கு பிடிச்சு போச்சு. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க என்னை என்ன பண்ண சொல்ற?” என அவர் கைவிரித்து விட, அடுத்து தந்தையிடம் பேச அமுதவல்லிக்கோ பயம். சரி தங்கையிடமாவது இந்த சம்மந்தம் வேண்டாம் என்று கூற சொல்லலாம் என்று பேச, கனகவல்லியோ பிடிகொடுக்கவில்லை.
“அக்கா, மாமாவுக்கு பிடிக்கலைன்னா நான் என்ன பண்றது? எனக்கு பிடிச்சு இருக்கு அவ்வளவு தான்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் கனகவல்லி. அனைவரும் இப்படி கூறிவிட, அமுதவல்லி கணவனை எதிர்கொள்ளவே பயந்தார்.
இளங்கோவே தன் பிடித்தமின்மையை நாசூக்காக அம்பலவாணரிடம் கூற, அவரோ, சண்முகம் நல்லவர், நேர்மையானவர் அவர் நிச்சயம் கனகவல்லியை நன்றாக பார்த்து கொள்வர்,’ என அவர் வாயை அடக்க, ஒரு கட்டத்திற்கு மேல் அம்பலவாணரின் பேச்சை மீற முடியவில்லை அவரால்.
என்னதான் திருமணம் நடைபெற்றாலும், தன் பேச்சை கேட்கவில்லையே, என்ற கோபம் இளங்கோவின் நெஞ்சில் ஒரு ஓரமாக கனன்று கொண்டே தான் இருந்தது. அதேபோல அமுதவல்லிக்கும் தங்கை மீது கோபம் தான், அவரால் தான், தான் கணவனிடம் பேச்சு வாங்க வேண்டியதாக போய் விட்டதே! என்று.
கனகவல்லியும் சண்முகமும் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாது சந்தோஷமாகவே தங்களின் வாழ்க்கையை தொடங்கினர். அவர்களின் அன்பின் பரிசாக கிடைத்தவள் தான் தமிழ்ஸ்ரீவெண்பா.
வெண்பா பிறந்து ஓரிரண்டு ஆண்டுகளிலே, அம்பலவாணர் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அதன் பின் வீட்டின் மொத்த பொறுப்பும் திருநாவுக்கரசு வசம் வந்தது. தந்தையை போலவே அவரும் திறம்பட தொழிலையும், குடும்பத்தையும் சரி சமமாக நடத்தினர்.
இளங்கோவும் தன் தொழிலில் தொடந்து முன்னேறி கொண்டே சென்றார். நியாய அநியாயங்களை எல்லாம் அவர் பார்த்ததில்லை. தனக்கு லாபம் தரும் விஷயம் என்றால்,எந்த எல்லைக்கும் சென்று அடைவது தான் அவர் வழக்கம்.
அனைவரும் அதனை திறமை என்றனர். யாருமே அதை தவறு என்று கூறவில்லை. குறுகிய நாட்களிலே அவரின் சொத்துகள் பன்மடங்காக பெருகியது.
காலப்போக்கில், இளங்கோவிற்கு வெளிநாடு சென்று தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்க, அவரோ குடும்பத்துடன் வெளிநாடு சென்று விட்டார்.
இங்கிருக்கும் தொழில்களை நம்பிக்கையான ஆட்களை வைத்து பார்த்து கொண்டார்..
இதையெல்லாம் காண காண நாச்சியாருக்கோ பெருமை தாங்கவில்லை. என் மகள் வெளிநாடு சென்றிருக்கிறாள் என ஊர் முழுவதும் கூறி பெருமைபட்டு கொண்டே இருப்பார்.
அவ்வப்பொழுது வெளிநாட்டில் இருந்து அமுதவல்லி அனுப்பும் புகைப்படத்தை கண்டு அவர் மனம் சந்தோஷத்தில் திளைக்கும்.
கனகவல்லியின் வாழ்க்கையை பார்த்தால், அவரோ கொஞ்சம் கடினமான சூழ்நிலையில் தான் வாழ்ந்து வந்தார்.
சண்முகத்தின் தோட்டம், துரவு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு சென்று கொண்டிருந்தன. நேர்மையாக தொழில் செய்தால் அதில் லாபம் பார்க்க முடியுமா என்ன?
அவருக்கு எல்லாமே நட்டத்தில் தான் போய் முடிந்தது. உண்மையாக இருப்பவரை இந்த உலகம் ஏமாளி, பிழைக்க தெரியாதவன் என்று தானே சொல்லும்.
சண்முகத்தையும் அப்படி தான் கூறியது. இதனை கேள்விப்பட்ட நாச்சியாருக்கு கனகவல்லியை நினைத்து அத்தனை கஷ்டமாக இருக்கும். மூத்த மகள் நல்ல வசதியோடு இருக்க, இளையமகள் இப்படி கஷ்டப்படுகிறாளே என்று எண்ணி வேதனை அடைந்தார்.
ஏதேனும் உதவி செய்யலாம் என்று அவர் திருநாவுகரசிடம் கூறி பணத்தை கொண்டு சென்று கொடுத்தால், சண்முகம் அதனை வாங்கவே மாட்டார்.
“அத்தே, பொண்ணு எடுத்த வீட்டிலிருந்து பணம் வாங்குறது ரொம்ப தப்பு. தங்கமா உங்க பொண்ணையே எனக்கு கொடுத்து இருக்கீங்க. அது போதும். எங்க கஷ்டம் எங்களோட. அதுக்காக உங்களையும் நாங்க கஷ்டப்படுத்த கூடாது” என திட்டவட்டமாக மறுத்து விடுவார்.
அவர் தான் வாங்க மறுக்கிறார் என கனகவல்லியிடம் பேச, அவரோ,
“அம்மா, அவரே வாங்காத போது, நான் எப்படி மா வாங்குவேன். கூழோ கஞ்சியோ எதுவோ அவர் சம்பாத்தியத்தில் சாப்பிறது தானே எனக்கு மரியாதை. இப்போ உங்க கிட்ட பணம் வாங்கிட்டா என் புருஷனை நானே விட்டு கொடுக்கிற மாதிரி தானே! அதனால் வேண்டாம் மா”
என அவரும் மறுத்து விட, நாச்சியாருக்கு கோபம் தான் வந்தது.
“இதுக்கு தான் கல்யாணத்துக்கு முன்னமே சொன்னேன், இவரை கட்டிக்க வேண்டாம் காலம் முழுக்க கஷ்டப்படுவேனு, என் பேச்சை உன் அப்பாவும் கேட்கலை, நீயும் கேட்கலை. அன்னைக்கே என் பேச்சை கேட்டு இருந்தா உன் அக்கா மாதிரி நீயும் நல்ல வசதி வாய்ப்போடு இருந்திருப்ப ல”
என ஆதங்கமாய் அவர் வார்த்தைகள் வந்து விழ,
“ம்மா, என்ன பேசுறீங்க நீங்க? இப்போ பேச வேண்டிய பேச்சா இது? எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு. இந்த நேரத்தில் வந்து இப்படி பேசறீங்க. இனிமேல் இப்படி பேசுறதா இருந்தா என் வீட்டுக்கே வராதீங்க”
என முகத்தில் அறைந்தார் போல கூறிவிட, அதிலிருந்து அவர் அங்கு செல்வதே இல்லை. எப்படியோ போ என்று கோபத்துடன் அங்கிருந்து வந்து விட்டார்.
பெரியவர்களுக்குள் என்ன உரசல்கள் இருந்தாலும், அதனை சிறியவர்களுக்குள் எடுத்து செல்வது கிடையாது. வெற்றிக்கு எப்பொழுதெல்லாம் தன் அத்தையை பார்க்க தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் உடனே கிளம்பி கனகவல்லி இல்லத்திற்கு வந்து விடுவான்.
கனகவல்லிக்கும் அவனுக்கும் திருமணத்திற்கு முன்பே உருவான பந்தம் அல்லவா!! கனகவல்லி அப்பொழுது எப்படி பாசம் காட்டினாரோ, அதேபோல தான் எப்பொழுதும் நடந்து கொள்வார். தற்பொழுது அவருடன் சண்முகமும், வெண்பாவும் இருக்க, வெற்றிக்கு அங்கு செல்வதே ஏக சந்தோஷம்.
அதே போல தான் வெண்பாவும், அவளுக்கு எப்பொழுதெல்லாம் மாமன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் அங்கு சென்று விடுவாள்.
அங்கு சென்றால் நாச்சியார் தான் அவளிடம் கொஞ்சம் ஏறுமாறாக நடந்து கொள்வார். மற்ற அனைவரும் அவளிடம் பாசமாக தான் இருப்பர்.
காலப்போக்கில், வெற்றியோ பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு என அதில் மூழ்கி விட, அதனால் கனகவல்லி ஊருக்கு செல்வது என்பது அரிதாகி போனது. அதே போல தான் வெண்பாவிற்கும், அங்கு சென்றாலே, நாச்சியார் சண்முகத்தை பற்றி குறை கூறிக்கொண்டே இருப்பதால், அவளுக்கு அங்கு செல்லவே பிடிக்கவில்லை.
தன் தந்தையை பற்றி தன்னிடமே குறை சொல்வதா? அந்த இடத்திற்கு தான் ஏன் செல்ல வேண்டும்? என அங்கு செல்வதையே நிறுத்தி கொண்டாள். நாச்சியாருக்கு வேண்டுமானால் சண்முகம் பிழைக்க தெரியாதவரா இருக்கலாம், ஆனால், அவளுக்கு தந்தை தானே எல்லாமே!!
நாட்கள் அதன் போக்கில் செல்ல, வெற்றி தன் படிப்பை முடித்து விட்டு தந்தையுடன் சேர்ந்து தொழிலை நடத்தி கொண்டிருந்த சமயம் அது. அப்பொழுது தான் அந்த செய்தி அவர்களின் காதில் விழுந்தது.
சண்முகம் தன் தொழிலில் பெரும் நட்டத்தை சந்தித்து, அதனை சரி செய்ய கடன் வாங்கி, அந்த கடனை அடைக்க மீண்டும் கடன் வாங்கி என பெரிய சிக்கலில் மாட்டி கொண்டிருப்பதாகவும், கடனை திருப்பி தராததால் தினமும் அவர் வீட்டிற்கே ஆட்கள் வந்து பணத்தை கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் கேள்வி பட்டனர்.
மேலும், பணம் தரவில்லையென்றால், அவரது பெண்ணையும் மனைவியையும் அசிங்கப்படுத்துவோம் என்று மிரட்டல் விடுப்பதாகவும் கேள்விப்பட, நாச்சியாருக்கு இருப்பு கொள்ளவில்லை.
“அந்த பாவி மக கிட்ட, அப்பவே சொன்னேன், என்கிட்ட இருக்கிற பணத்தை வாங்கி வச்சுக்கோன்னு கேட்டாளா? புருஷன் கூடவே நின்னா? இப்போ ஊரே பார்த்து சிரிக்கிற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டாரே அந்த மனுஷன். என்ன கஷ்டப்படுறாளோ தெரியலையே!” என அவர் அழுது புலம்ப, அவரை தேற்றிவிட்டு அங்கிருந்து திருநாவுக்கரசும், வெற்றியும் சண்முகம் இல்லத்திற்கு புறப்பட்டனர்.
வெற்றிக்கோ அப்படி மிரட்டி விட்டு சென்றவர்கள் மீது கொலை வெறியே எழுந்தது. அவர்களை அடித்து துவம்சம் செய்யும் நோக்குடன் தான் அங்கு சென்றான்.
திருநாவுக்கரசும், வெற்றியும் அங்கு சென்றிருந்த பொழுது, சரியாக கடன் கொடுத்தவன் அடியாட்களுடன் வந்து, சண்முகத்துடன் சண்டை போட்டு கொண்டிருந்தான்.
அதில் ஒருவன், வெண்பாவின் கையை பிடித்து இழுத்து கொண்டிருக்க, அவளோ, கத்தி, கதறி கையை விடச்சொல்லி போராடி கொண்டிருந்தாள். அருகில் கனகவல்லியும், சண்முகமும், அவளை விட சொல்லி அழுது கேட்டு கொண்டிருக்க, அவர்களையும் இருவர் அங்கிருந்து நகர விடாதபடி பிடித்து கொண்டிருந்தனர்.
சுற்றி நின்று ஊரே வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததே தவிர ஒருவரும் உதவிக்கு வரவில்லை. அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் மூவரும் இருக்க, ஆபத் பாண்டவனாய் வந்தான் வெற்றித்திருக்குமரன்.
தூரத்தில் அவன் வரும்பொழுதே பார்த்துவிட்டாள் வெண்பா. இருண்ட காட்டில் பாதை தெரியாது தத்தளித்து கொண்டிருக்கும் பொழுது, தெரியும் மின்மினி பூச்சியின் வெளிச்சம் போல இருந்தது அவன் வரவு.
தன் கையை பிடித்திருந்தவன் கையை தன் மொத்த சக்தியையும் திரட்டி, உதறி விட்டு ஓடி வந்தவள்,
“மாமா…” என அவனை கட்டி கொண்டு, அவன் நெஞ்சில் சாய்ந்து கதறி அழுதாள்.
அவளை இப்படி அவன் பார்த்ததே இல்லை. பட்டாம்பூச்சி போல துறுதுறுவென சுற்றி திரிபவள், இப்படி அழுது கதறுவதை பார்க்க, அவனுக்குமே கஷ்டமாக இருந்தது.
நன்றாக பயந்து போய் இருக்கிறாள் என்பது அவனை இறுக கட்டி கொண்டிருப்பதிலேயே தெரிந்தது.
“ஒன்னுமில்ல தமிழ். அதான் நான் வந்துட்டேன்ல. பயப்பட கூடாது” என அவனும் அவளை அணைத்தப்படி ஆறுதல் கூற, அவனை விட்டு அவள் விலகவே இல்லை.
அதற்குள் திருநாவுகரசும் வந்து விட, கடன் கொடுத்தவன், அவரை பார்த்து, அமைதியாக நின்றான்.
அவனுக்கு தான் திருநாவுக்கரசு யாரென்றும் தெரியும், வெற்றித்திருக்குமரன் யாரென்றும் தெரியுமே!!
வெற்றிக்கு வெண்பா அழ அழ வெறி ஏறியது, அவளை அணைத்தபடியே அந்த கடன்காரன் முன் வந்து நின்று, தன் மொத்த கோபத்தையும் அவன் கன்னத்தில் இடியாய் இறக்கினான்.
அவனுக்கோ உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. அவனின் சட்டையை கொத்தாக பிடித்து,
“யார் வீட்டு பொண்ணு மேலே கை வைக்கிற நீ? நான் யாருன்னு தெரியும்ல. என்ன தைரியம் இருக்கணும்?” என வெற்றி உறுமியதை பார்த்து பயந்து போனான் எதிரில் நின்றவன்.
அவன் அறைந்த சத்தத்தில் தான், கண்களை திறந்து பார்த்தாள் வெண்பா. உடல் வெடவெடக்க, அடைக்கலம் தேடும் கோழிக்குஞ்சு போல, அவன் அணைப்பில் ஒடுங்கி போய் நின்றிருந்தவள், எதிரே நின்றிருந்தவனை பார்த்து வெற்றி கோபப்பட்டதும் இன்னுமே பயந்து போனாள்.
அவளருகில் கனகவல்லியும், சண்முகமும் ஓடி வர, தாய் தந்தையை கண்டதும், அவனை விட்டு விலகி தாயின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள். அவளின் நடுக்கம் கொஞ்சமும் குறையவில்லை.
வெற்றி இதையெல்லாம் கவனிக்கவில்லை. அவனின் கவனம் எல்லாம் எதிரே நின்றிருந்தவன் மீது தான் இருந்தது.
“பொம்பிள பிள்ளையை கைப்பிடிச்சு இழுக்கிற, அசிங்கமா இல்ல உனக்கு. கடன் கொடுத்தது நீ, வாங்குனது அவர். இதில் வீட்டில் இருக்கிற பொம்பளைங்க என்ன பண்ணாங்க? நீ செய்யிறது தப்பில” என மேலும் இரண்டு அறை கொடுத்தவன் அவன் கையை பிடித்து பின்னால் வளைத்தான்.
வலி தாங்க முடியாது, அவன் அலற, அவனின் அடியாட்களோ பயந்து பின் வாங்கினார். அவன் முறுக்கிய முறுக்கில் நிச்சயம் கை எலும்பு உடைந்திருக்கும்.
“வெற்றி, விடு பிரச்சனை வேண்டாம்” என திருநாவுக்கரசு அவனை தடுத்து நிறுத்த, எதிரே நின்றவனிடம்,
எவ்வளவு பணம் தரணும் என்று கேட்டு, சண்முகம் தர வேண்டிய பணத்தை அவனின் முகத்திலே விட்டெறிந்து,
“இனி இந்த பக்கம் உன் நிழல் கூட படக்கூடாது” என விரட்டி அனுப்பினான் வெற்றி.
சண்முகம் கூனி, குறுகி நிற்க, அவர் தோளை தட்டிக்கொடுத்து தன்னுடன் அவர்களை அழைத்து கொண்டு பெரிய வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் திருநாவுகரசும், வெற்றியும்.
கொட்டி தீர்க்க வேண்டியவை ஏராளம்
இருந்தாலும்,
நினைப்பதற்கும், நினைவூட்டுவதற்கும்
எல்லாவற்றிலுமே
அவன் இருக்கிறான்
அது போதுமே எனக்கு!!
கனவுகள் தொடரும்..
கதை எப்படி போது. Bore அடிக்கிறேனா
