Skip to content
Post Views: 1,431
அத்தியாயம் 22
அடுத்தடுத்த நாட்கள் என எல்லோர் வாழ்விலும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது. அவரவர் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கிய பயணங்கள் என தன்தன் திசையில் சென்று கொண்டு தான் இருந்தனர்.
Advertisement
பல்லவிக்கு லதா அழைத்து பேசிய அடுத்த நாளே அவரை சென்று பார்த்து வந்தவள் அடுத்து அவரை தேட வைக்கவே இல்லை. எத்தனை வேலைகள் இருப்பினும் வாரம் ஒருமுறை என சென்று லதாவைப் பார்க்க வர, லதாவோடு கோவிலுக்கு செல்ல என தனியாய் நேரம் ஒதுக்கிக் கொண்டாள்.
Advertisement
Advertisement
இப்படி மேலும் பத்து நாட்கள் தான் கடந்திருக்க, அந்த காலை வேளையில் தேவியோடு சேர்ந்து சமையலில் நின்றிருந்தார் லதா.
Advertisement
அஞ்சலி பள்ளி கிளம்பி சென்றிருந்தாள். எப்போதும் ஒன்பது மணியை தாண்டிய நேரங்களில் எல்லாம் கிளம்பிவிடும் கீர்த்திஸ்வரனுக்கு அன்றைக்கு நேரமாகி இருக்க, தன் அறையில் தான் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தான்.
வெளி வேலைகளுக்கு தான் செல்ல வேண்டி இருந்தது மகேஸ்வரனும். அதனால் அவருமே இன்னும் சாப்பிட வரவில்லை தன் அறையில் இருந்து.
இப்படி அஞ்சலி தவிர அனைவரும் வீட்டில் இருந்த நேரத்தில் தான் எந்தவித அறிவிப்பும் இன்றி வரதராஜன் தன் சொந்த பந்தங்கள் என அழைத்துக் கொண்டு லாவண்யாவோடு கீர்த்திஸ்வரன் வீட்டிற்கு வருகை தந்திருந்தார் அந்த காலை வேளையில்.
அழைப்பு மணி சத்தத்தில் வெளிவந்த லதா இப்படி கும்பலாய் நின்றவர்களுக்கு நடுவே லாவண்யாவைக் கண்டு பேச்சச்சு நின்றவர் அவர்கள் ஒவ்வொருவரின் கையில் இருந்த தாம்பூலத் தட்டுக்களையும் கண்டு வாயடைத்து நின்ற நேரம் அது.
“என்ன ஆண்ட்டி உள்ள கூப்பிடாம அப்படி பாக்குறீங்க?” என்ற லாவண்யா கேள்வியில் அத்தனை நக்கலும் இருந்தது.
“அவங்க அப்படி தான். நீங்க வாங்க ப்பா!” என தந்தையை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து வரதராஜனும் லாவண்யாவும் அமர, உடன் வந்தவர்களும் கூடவே உள்ளே வந்து அமர்ந்திருந்தனர்.
“என்ன ஆண்ட்டி ஸ்டன் ஆகி நிக்கிறீங்க? உங்க பையன் மட்டும் தான் ஷாக் குடுப்பாரா எங்களுக்கு?” என்று கேட்டவளை தொண்டைக்குழி ஏறி இறங்கக் கண்டார் லதா.
நிச்சயம் இப்படி ஒரு வரவை எதிர்பார்க்கவே இல்லை லதா. இதை என்னவென்று எடுத்துக் கொள்ள? நீ என்ன வேண்டுமானாலும் பேசலாம் நான் நினைப்பது தான் நடக்கும் என்ற தோரணை லாவண்யாவிடம்.
“ஈஸ்வர் இல்லையா ஆண்ட்டி?” என அவள் கேட்க,
“ஹான்!” என விழித்தவருக்கு அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை அந்த நேரம்.
“கார் ரெண்டும் நிக்குதே.. ரெண்டு பேரும் வீட்டுல தான் இருப்பாங்க!” என்றார் வரதராஜன்.
மேலே கணவன் மகன் என யாராவது வருகிறார்களா என லதா திரும்பிப் பார்க்க,
“இருங்க நான் கூப்பிடுறேன்!” என கீர்த்திஸ்வரனுக்கு அழைத்தாள் லாவண்யா.
முழு அழைப்பும் சென்றும் அவன் எடுக்கவில்லை என்பது லாவண்யா முகபாவத்திலேயே தெரிய, மீண்டும் அவள் அழைக்கும் நேரம் மகேஸ்வரன் தன் அறைகதவை திறந்து வந்தவர் மாடியின் முதல் படியிலேயே வந்திருந்தவர்களைக் கண்டு அவரும் நிலைகுத்திய பார்வையுடன் நின்றுவிட்டார்.
கீர்த்திஸ்வரன் வேண்டுமென்றே தன் அழைப்பை தவிர்க்கிறான் என கோபமாய் நினைத்துக் கொண்டிருந்த லாவண்யாவிற்கு மகேஸ்வரனின் இந்த அதிர்ந்த முகம் அத்தனை திருப்தியை கொடுத்தது.
“வாங்க அங்கிள்! என்ன அங்கேயே நின்னு பாக்குறீங்க. உங்க வீட்டுண்ட் வந்திருக்கோம். எங்களை வாங்கனு கூட சொல்லாம அப்படி பாக்குறீங்க?“ என்றது லாவண்யாவே தான்.
வராதராஜனுக்கு மகேஸ்வரன் மேல் அத்தனை கோபம். இப்போதும் மகளுக்காக மட்டுமே அவர் வந்து இப்படி அமர்ந்திருந்தாலும் எதுவும் பேசவில்லை மகேஸ்வரனிடம்.
அதற்காக இப்படி சட்டென்று முடிவு செய்து மகள் செய்து கொண்டிருக்கும் இந்த வேலையிலும் துளியும் விருப்பமில்லை அவருக்கு. மகள் இப்படி தான் செய்ய போகிறேன் என தகவலாய் சொல்லி தான் அவரையுமே அழைத்து வந்திருக்க, ஏற்கனவே வாக்கு கொடுத்தது தானே என்ற எண்ணம் தான் வரதராஜனுக்கும்.
ஆனாலும் இப்படி செய்ய வேண்டுமா? என்ற எண்ணத்தில், “அவனெல்லாம் ஒரு ஆளா? அப்பா இருக்கேன் டா உனக்கு. உன் கல்யாணத்தை நீ நினைச்சதை விட நினைக்குறதை விட கிராண்டா பண்ணி தர்றேன். மாப்பிள்ளை அப்பா பாக்குறேன்!” என்று சொல்லியும்,
“ஈஸ்வர் தவிர யாரும் எனக்கு வேண்டாம் ப்பா. என்ன நினைச்சுட்டு அவன் பேசினான்? என் ஈகோவை டச் பண்ணிட்டான். அவன் வீட்டு வேலைக்காரி கூட என்னை மதிக்கல. இதுக்கெல்லாம் சேர்த்து அந்த வீட்டுக்கு நான் மருமகளா போய் எல்லாரையும் என் விரல் நகத்துல வச்சு ஆட்டுறேன் பாருங்க” என்று அத்தனை கோபத்தையும் உடைத்திருந்தாள்.
“மா வேண்டாமா அவனுக்கு? அவ்வளவு திமிரா ஆடுறவன்கிட்ட நான் அடங்கி போகவா?” என்றவள்,
“அவங்க அப்பா நமக்கு வாக்கு குடுத்தது குடுத்தது தான். அவ்வளவு சீன் எல்லாம் இல்லை அந்த குடும்பத்துக்கு. போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்து இன்ஸ்பெக்டர் கூட நாம நேர்ல போய் நின்னா அப்பாவும் பையனும் தானா வழிக்கு வருவாங்க!” என்று சொல்லியவள் தீவிரம் புரிந்த பின் எதுவும் பேச முடியவில்லை வராதராஜனுக்கு.
மெதுவாய் அதிர்ச்சிகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு மகேஸ்வரன் இறங்கி வர, அவர் வரவுமே லதா தன் கால்கள் அடிபட்டதன் பின் முதன்முறையாய் மாடிப்படிகளில் ஏறி ஓடி இருந்தார் மகன் அறையைத் தேடி.
“என்ன சார் இதெல்லாம்?” என்ற மகேஸ்வரனுக்கு அந்த நேரத்தில் குரலே வெளிவரவில்லை அவர்களையும் அந்த தட்டுக்களையும் என பார்த்ததும்.
“பார்த்தா தெரியலையா அங்கிள்? மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்துக்கு நாள் குறிக்க வந்திருக்கோம். ஏற்கனவே பேசி வச்சது தானே?” என்று லாவண்யா சொல்ல, வராதராஜனைக் கண்டார் மகேஸ்வரன்.
“வாட்?” என லேப்டாப்பில் இருந்து அதிர்ந்து எழுந்து நின்றான் கீர்த்திஸ்வரனும் அன்னை சொல்லிய செய்தியைக் கேட்டு.
“எனக்கு என்ன பேசுறதுனு கூட தெரியல ஈஸ்வர். உன் அப்பா கீழ வரவும் நான் இங்க வந்துட்டேன்!” என்று சொல்லியவர் கைகளை பிசைந்து நின்றார்.
கீர்த்திஸ்வரன் முக்கியமான தகவல்களை ஈமெயில் அனுப்பிக் கொண்டிருந்த நேரம் தான் லாவண்யா அழைத்தது. பார்த்ததும் அவள் தான் என்றதும் அசட்டையாய் விட்டு அதை கட் கூட செய்யாமல் அலைபேசியின் சத்தத்தை மட்டும் வரவிடாமல் பட்டனை அழுத்தி இருந்தான் அவன்.
இரண்டு முறை அழைப்பு வந்த போதும் அவன் இதை தான் செய்திருக்க, தன் வீட்டில் இருந்தே அழைத்திருக்கிறாளா என அப்பொழுது தான் புரிந்தது அவனுக்கு.
“ஈஸ்வர்! பயமா இருக்கு டா!” லதா சொல்ல,
“ம்மா! இதுல பயப்பட என்ன இருக்கு?” என்றவன்,
“வாங்க நீங்க!” என அன்னையோடு வேகமாய் அறையில் இருந்து வெளிவந்து அங்கே அமர்ந்திருந்தவர்களையும் அடுக்கி வைத்திருந்தவற்றையும் என கண்கள் சிவக்கப் பார்த்தபடி தான் படியிறங்கி இருந்தான்.
“ஹாய் ஈஸ்வர்!” லாவண்யா அழைத்த நொடி,
“எந்திரிங்க சார்!” என வராதராஜனை கீர்த்திஸ்வரன் அழைத்த அழைப்பில் சட்டென்று ஒரு அமைதி வீடு முழுவதுமாய்.
“ஈஸ்வர்! கொஞ்சம் அமைதியா….” என்று சொல்ல வந்த தந்தையை பேசவே விடவில்லை கீர்த்திஸ்வரன்.
“நீங்க பேசாதீங்க ப்பா. சொன்னேன் தானே இனி பிரச்சனை வந்தா நான் ஃபேஸ் பண்ணிக்குறேன்னு.. நான் பாத்துக்குறேன்!” என்றவன்,
“எந்திரிங்க சார்!” என மீண்டும் வராதராஜனைப் பார்க்க,
“ஈஸ்வர்! அவர் என் அப்பா!” என்றாள் லாவண்யா.
“உன்னையும் சேர்த்து தான் சொல்றேன்!” என்றவன்,
“எல்லாத்தையும் எடுத்துட்டு வெளில போங்க!” என்றான் அடுத்த நொடியே.
“ஈஸ்வர் கொஞ்சம் பொறுமையா பேசு டா!” என பல்லைக் கடித்து மகேஸ்வரன் சொல்ல,
“நீங்க பொறுமையா பேசி நடந்தது வரை போதும் ப்பா. என்ன என்ன… என்ன இதெல்லாம்? இவங்களை இப்படி வர சொல்லி யார் சொன்னாங்க? நீங்களா?” என தந்தையிடம் திரும்ப, இல்லை என ஆயாசமாய் தலையசைத்தார் அவர்.
“அப்போ யாரும் கூப்பிடல தானே? இது போதும் எனக்கு!” என்றவன்,
“இதுக்கு மேல என்கிட்ட மரியாதை எல்லாம் எதிர்பார்க்காதிங்க!” என்று மீண்டும் வர, மெல்லமாய் எழுந்தார் வரதராஜன் அவமான உணர்வோடு.
“ப்பா! நீங்க உக்காருங்க. ஈஸ்வர்! மைண்ட் யுவர் வர்ட்ஸ்! என் அப்பாவை என்ன வார்த்தை சொல்ற நீ?” என லாவண்யா கேட்க,
“உன் அப்பாவை நீ தான் அந்த இடத்துல கொண்டு வந்து விட்டிருக்க!” என்றான் நிஜமான வார்த்தைகளாய்.
“நான் சும்மா பூச்சாண்டி காட்டுறேன் நினைக்காத ஈஸ்வர். போலீஸ் ஸ்டேஷன் மட்டும் போனேன்…” என்றவன் சொல்லில்,
“நீ இங்க இருந்து இதெல்லாம் எடுத்துட்டு நேரா ஸ்டேஷன் போ.. கம்பளைண்ட் பண்ணு. வர்றவங்களை நான் ஃபேஸ் பண்ணிக்குறேன். டன். இடத்தை காலி பண்ணு!” என்ற ஈஸ்வர்,
“இந்த செட்டப் எல்லாம் பார்க்க பார்க்க பிரஷர் ஏறுது.. கிளம்பிட்டா ஓகே! இல்ல நான் இத்தோட விட மாட்டேன்… வரதராஜன் சார்! ஏன் டா இவன்கிட்ட பிரச்சனை பண்ணினோம்னு நினைக்க வைக்காம விடமாட்டேன்!” என்றான் எழுந்து நின்றவரிடம்.
“ஈஸ்வர்! என்ன டா பெரிய இவன் மாதிரி பேசுற? எவ்ளோ திமிரு உனக்கு? நீயும் தலையை ஆட்டின தான? என்னவோ சீன் போடுற? ஏன் இவ்வளவு நாள் என்னை பிடிச்ச மாதிரி இப்ப எவளையும் பிடிச்சிருச்சா!” என்றவளை,
“ஏய்!” என்றவன் ஓங்கிய கையுடன் பார்த்து நின்றான்.
“ஈஸ்வர்!” என அருகில் வந்து லதா அவனைப் பிடித்துக் கொள்ள,
“ஒண்ணுமில்ல ம்மா!” என தன் சட்டையை நீவிக் கொண்டவன் ஒரு பெருமூச்சில் தன்னை சமநிலை கொண்டு வந்து,
“உன்னை வேண்டாம்னு சொன்னது உன்னோட கேரக்டர் பிடிக்காம…” என அவளை கைநீட்டி காட்டியவனை கண்கள் அகல அவள் பார்த்து நிற்கும் பொழுதே,
“எனக்கு பிடிச்ச பொண்ணை வேணும்ன்னு கேட்டேன்னா… அது அவளோட கேரக்டர் பிடிச்சா மட்டும் தான் இருக்கும்!” என்றவன்,
“உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு! இன்னும் ஒன் ஹவர்க்கு இந்த இடத்துல தான் நான் இருப்பேன்!” என அங்கிருந்த ஒற்றை சோஃபாவை இழுத்து போட்டு நடு வீட்டில் அமர்ந்தவன் ஆத்திரம் மட்டும் தீரவே இல்லை இப்படி கொஞ்சமும் அடுத்தவர்களை யோசிக்காமல் தனக்கென்றே அத்தனையையும் நடத்திக் கொள்ள துணிந்தவளை நினைத்து.
வரதராஜன் ஒரு அடி எடுத்து வைக்கவும், “ப்பா! அவன் சொல்றான்னு…” என லாவண்யா பேச வர,
“இதுவரை உன்னை நான் அடிச்சதில்ல லாவண்யா… வந்துடு!” என்று விறுவிறுவென நடந்து வாசலுக்கு விரைந்துவிட்டார் அவர்.
error: Content is protected !!