Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 23

அத்தியாயம் 22

“பொண்ணு தான் வெளிநாட்டுல இருந்துட்டு வந்துச்சுன்னா நீங்க இந்த நாட்டுல இந்த ஊருக்குள்ள தானே இருக்கிங்க? உங்களுள் தெரிய வேண்டாமா இங்க இருக்குற நாட்டுநடப்பு?“

“எவ்வளவு தான் பொண்ணு மேல பாசம் இருக்கட்டும். அதுக்குன்னு இப்படி ஊர் உலகத்துல இல்லாத மாதிரி மாப்பிள்ளை கேட்டு போவீங்களா.. நல்லா அசிங்கப்படுத்தி அனுப்பிட்டாங்க இல்ல?”

“எங்களுக்கெல்லாம் தகவல் சொல்லி கூப்பிட்டு விட்டது மாதிரி மாப்பிள்ளை வீட்டுலயும் நீங்க தகவல் சொல்லிருக்கணுமா இல்லையா? அந்த பையன் பேசினது அதிகமா இருக்கலாம். ஆனா வேண்டாம்ணு சொன்ன பையன் முன்னாடி இப்படி போய் நின்னா சபைக்கு மதிச்சு ஏத்துப்பான்னு யார் சொன்னது உங்களுக்கு?”



Advertisement

“சொத்து பத்து இருக்குறது சொந்த பந்தம் நமக்காக இருக்குறது எல்லாம் சரி தான். ஆனா நம்ம மரியாதையையும் நாம தான் காப்பாத்திக்கனும். உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. பொண்ணுக்கு செல்லம் குடுத்தது போதும். பொது நடப்பு என்னனு சொல்லி குடு” 

“அந்த பையன் சொன்ன மாதிரி இன்னைக்கு நாம தலைகுனிஞ்சு வர காரணம் உன் பொண்ணு தான். பிடிக்காத பொண்ணு பின்னாடி ஒரு பையன் சுத்தினாலே எத்தனை பேர் சுத்து போட்டு அந்த பையனை பிடிச்சு வச்சு என்னென்ன தண்டனை எல்லாம் கொடுக்குறோம்? இதுவே பையனுக்கு அந்த நிலைமைனா அவன் மட்டும் சும்மா போகணும்னு என்ன இருக்கு?” என ஏராளமான பேச்சுக்கள் வரதராஜனுக்கு.

“இப்படி எங்களையும்ல கூப்பிட்டு வச்சு அசிங்கடுத்திட்ட?” என்றெல்லாம் கேட்டிருந்தனார்.

Advertisement

இதில் லாவண்யாவின் தாய்மாமா கேட்ட கேள்வியில் உள்ளமெல்லாம் கசிந்து மொத்தமாய் சோர்ந்து போயிருந்தார் வரதராஜன்.

Advertisement

வந்திருந்தவர்கள் அனைவரும் லாவண்யாவின் நெருங்கிய சொந்தங்கள் தான்.

மாமா, சித்தப்பா, அத்தை, பெரியம்மா என தாய்வழி தந்தை வழி நெருங்கிய சொந்தங்கள். 

வரதராஜன் அழைத்து இப்படி என்று விவரம் சொல்லி வர சொல்லும் பொழுதே “என்ன! மாப்பிள்ளை பார்க்கவா? இது எந்த ஊரு வழக்கம்?“ என கிண்டல் செய்தாலும் அழைத்தது வரதராஜன் தன் மகளுக்காக என்பதால் சத்தமின்றி வந்திருக்க, 

Advertisement

கீர்த்திஸ்வரன் நடந்து கொண்ட முறையில் அங்கிருந்து சத்தமின்றி கிளம்பியவர்கள் நேராய் வரதராஜன் வீட்டிற்கு வந்து சிலர் கோபம் கொண்டும் சிலர் திட்டியும் இன்னும் சிலர் அறிவுரை சொல்லியும் என இவ்வாறான வார்த்தைகளோடு தான் சென்றிருந்தனர்

அப்போதும் கூட அனைவரும் கீர்த்திஸ்வரன் வீட்டில் இருந்து வெளியேற, “நான் சொல்றதை கேளுங்க. இப்படியே இவனை விட்டுட்டு போகவா? இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா இவனை நான் சம்மதிக்க வச்சிடுவேன்!” எனும் பைத்தியக்காரத் தனமான பேச்சுக்கள் தான் லாவண்யாவிடம்.

அங்கிருந்த பெண்கள் தான் அவள் மேல் அத்தனை கோபமிருந்தாலும் சமாளித்து லாவண்யாவை அழைத்து சென்றிருந்தனர்.

இப்படி கிளம்பி அனைவரும் வரதராஜன் இல்லம் வந்திருக்க, ஆளாளுக்கு தோன்றியதை கோபம் ஆதங்கம் வருத்தம் என பெயர் பண்ணி சொல்லி செல்ல,

“எதுக்கும் அவளுக்கு மனநோய் எதுவும் இருக்கான்னு டெஸ்ட் பண்ணி பார்த்துக்க. பொண்ணை பார்க்காம தொழில்ல எவ்வளவு உயரத்துல இருந்தாலும் என்ன பயன்” என்று சொல்லி தான் கிளம்பி இருந்தார் லாவண்யாவின் தாய்மாமா.

இப்படி ஒவ்வொருவரின் பேச்சும் காதில் விழும் அளவுக்கு ஒரே இடத்தில் தான் இருந்தனர் அனைவரும். லாவண்யா உட்பட.

வீட்டிற்கு வந்ததும் ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்துவிட்டாள் லாவண்யா.

இப்படி ஒவ்வொருவரும் பேச பேச அந்த கோபமெல்லாம் கூட அவளுக்கு கீர்த்திஸ்வரன் மேல் தான் திரும்பியது.

“அம்மா இல்லாத பொண்ணு. அதுவும் எனக்கு இருக்குற ஒரே பொண்ணு. அவ எந்த விஷயத்துக்கும் ஏங்கிட கூடாது. அவ கேட்டு எதுவும் இல்லைனு நான் சொன்னதா இருக்க கூடாது!” என வரதராஜன் பேச ஆரம்பிக்க, லாவண்யா அவரையும் முகம் கொடுத்து பார்க்காமல் தான் அமர்ந்திருந்தாள்.

“இத்தனை வருஷ என்னோட வாழ்க்கைல நான் சம்பாதிச்ச எல்லாமே உனக்காக தான் லாவண்யா. என் பொண்ணுக்காக நான் இருக்கேன். வேற யாருமே வாழாத வாழ்க்கையை என் பொண்ணுக்கு குடுக்க போறேன்ன்னு யார் முன்னாடி எல்லாம் பெருமையா சொல்லிட்டு இருந்தேனோ அவனெல்லாம் தான் இப்போ என்னை பேசிட்டு போறான்!” என்றவர் முகமே கசங்கி இருந்தது.

“ஆனாலும் அம்மா இல்லாத பொண்ணு தானேன்ற பேரை எனக்கு வாங்கி தந்துட்டியே!” என்று சொல்லவும்,

“அப்பா!” என எழுந்துவிட்டாள் லாவண்யா.

“உன்னை எதுவும் சொல்ல முடியாது மா. நான் தான்… என்னால தான்… உன்னை கவனிச்சு கண்டிச்சிருக்கணும். என்ன! பெத்த பொண்ணுன்ற பாசம் புத்தியை மழுங்கடிச்சிருச்சு” என்றவரை,

“இப்ப என்ன? அவன் அவமானப்படுத்திட்டான் அதானே? அவனை….” என்ற லாவண்யாவை முடிக்க விடவில்லை வரதராஜன்.

“அவனை எதாவது இதுக்கு மேல நீ தொந்தரவு பண்ணனும் நினைச்சா அன்னைக்கு தான் உன் அப்பாவோட கடைசி நாளா இருக்கும் லாவண்யா” என்ற தந்தை சொல்லில் அவள் அதிர்ந்து விழிக்க,

“இது உன் மேல சத்தியம். இந்த பொண்ணு கேரக்டர் எனக்கு பிடிக்கலனு ஒரு பையன் என் பொண்ணை சொல்றான் என் முன்னாடி. அப்போ என்னோட வளர்ப்பு தான் அங்க கேள்வியா நிக்குது. இன்னும் என்ன பண்ணிட நிக்குற நீ?” என்றவர்,

“உனக்கு இப்போ அவனை பிடிச்சிருக்கலாம். நாளைக்கே அவனை மிரட்டி ஊர் உலகம் பார்க்க உனக்கு அவனை கல்யாணம் பண்ணி வச்சாலும் உன்னால அவனோட நிம்மதியா வாழ முடியாது லாவண்யா. ஏன்னா உனக்கு கல்யாணம் பண்ணிக்கணும். அதுவும் கிராண்ட்டா பண்ணிக்கணும்ன்றதை தவிர கல்யாணத்தோட சாராம்சம் எதுவும் தெரியல. இப்ப நீ நடந்துக்குறது கூட கோபத்துல தான். உன்னால உன்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடியல!”

“ப்பா! நீங்க என்ன பேசுறீங்க? எனக்கு அவனை பிடிச்சிருக்கு. எனக்கு என்னோட கல்யாணம் கிராண்டா நடக்கணும் தான். அதுக்காக யாரை வேனா கல்யாணம் பண்ணிக்குறேன்னு நான் சொல்லலையே!” என்றாள் லாவண்யா.

“சரி தான். அப்படி நீ சொன்னா அது எவ்வளவு பெரிய தப்போ அது அளவுக்கு தப்பு தான் பிடிக்காத பையனை வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்க நினைக்குறதும்.” என்றவர் சொல்லில் இன்னுமே புரியாமல் தான் நின்றாள் லாவண்யா.

“இப்ப எதுவும் பேசி உன்னை ஹர்ட் பண்ணவும் எனக்கு இஷ்டம் இல்ல டா. எனக்கு எல்லாமே நீ தான். உன் வாழ்க்கையை நீயே சிக்கலாக்கிக்குறதை நான் பாத்துட்டு சும்மா இருக்க கூடாது” என்றவர் ஒரு முடிவுடன் மகள் அருகில் வந்தார்.

“நீ ஃபாரின்லயே கொஞ்ச நாள் இரு!” என்று சொல்லவும்,

“ப்பா!” என அவள் அதிர்ந்து பார்க்க,

“உன்னை என்னால கண்டிக்க முடியாது லாவண்யா. அப்பாக்கு நீ இல்லாம கஷ்டம் தான். ஆனா இங்க இருந்து எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பையனோட உன் கல்யாணமே நடந்தாலும் அது நிச்சயமா உன்னையும் பாதிக்கும். அதுக்காக தான் சொல்றேன். கொஞ்ச நாள் தனியா உன் உலகத்துல சந்தோஷமா இரு. அப்போ இதெல்லாம் ஒண்ணுமே இல்லைனு உனக்கு தெரியும். அப்புறம் உனக்கு என்ன தோணுதுன்னு சொல்லு. அப்பா உன் கூடவே இருக்கேன்!” என்று சொல்ல, பதில் சொல்லாமல் பார்த்தாள் தந்தையை.

வெளிநாட்டிற்கு அனுப்பவே முடியாது என்ற தந்தை இப்பொழுது அவரே செல் என்கிறார். அதன் ஆழம் என்னவோ கொஞ்சம் புரிவது போல தான் இருந்தது லாவண்யாவிற்கு.

 

**************

வந்த மொத்த கும்பலும் அங்கிருந்து சென்று பத்து நிமிடம் ஆகியும் கீர்த்திஸ்வரன் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து நாகராமல் அதே கோபத்தோடு அமர்ந்திருக்க, மகேஸ்வரனும் அங்கே தான் தலையில் கைவைத்து கோபமாய் அமர்ந்திருந்தார்.

இருவரில் யார் பக்கம் சென்று பேசுவது என்றே தெரியாமல் லதா விழித்தபடி நின்றார்.

கணவன் கோபம் அவர் அறிந்ததே தான். நிச்சயம் வார்த்தைகள் இந்த நேரம் தாறுமாறாய் வந்து விழும் அவரிடம். ஆனால் மகனின் இந்த கோபம் அவன் பேசிய வார்த்தைகள் என நினைக்கவே ஆச்சர்யம் தான் அவருக்கு.

லாவண்யா செய்தது கொஞ்சமும் சரி இல்லை தான். பெரிய முட்டாள்தனமும் தான். இந்த நேரத்தில் மகனுக்கு கோபம் வந்தது தவறில்லை தான். அத்தோடு இப்படி இவன் பேசி இராமல் சமாதானப்படுத்தி இவன் அனுப்பி வைக்க நினைத்திருந்தால் அதுவும் மிகப்பெரிய விளைவை தான் ஏற்படுத்தி இருக்கும் என நினைக்கும் போது மகன் செய்தது தான் சரி எனவும் நினைத்துக் கொண்டவர் அவனருகில் வந்து தோளில் கைவைக்க, உணர்ந்து தான் அமர்ந்திருந்தான் அவன்.

“ஈஸ்வர்!” என அவர் அழைக்க,

“ம்மா!” என அவன் தோளில் இருந்த அன்னை கைகளில் சாய்ந்து கொண்டான்.

“சரி டா ஒண்ணுமில்ல!” என்ற வார்த்தையை தவிர எதுவும் கூற தோன்றவில்லை அவருக்கு.

அதில் தான் வெகுண்டு எழுந்துவிட்டார் மகேஸ்வரன்.

“என்ன வளத்து வச்சிருக்க நீ அவனை?” என்று அன்னையை கோபமாய் நெருங்கிவிட்ட தந்தை செயலில் கீர்த்திஸ்வரனும் எழுந்துவிட்டான் அதே வேகத்தில்.

இந்த நிமிடமும் நடந்த நிகழ்விற்கு அவர் வருந்தவில்லை என்றால்? என்ற எண்ணம் தான் அவனுக்கு.

ஆனால் அவர் வருந்தவில்லை என்ற உண்மை முகத்தில் அறைவதாய் இருந்தது மகேஸ்வரனின் பேச்சு.

“கட்டின மனைவி தன்னோட பசங்க.. இவங்களை எல்லாம் விட உங்க பிஸினஸ் பாதிக்கப்படுறது தான் உங்க கவலை இல்ல?” என்றவன் கேள்வியும்,

“என்ன பெரிய பொண்டாட்டி புள்ளைங்க? நல்லா தானே இருக்கீங்க எல்லாரும்? உங்களை கட்டிக்கிட்டு நான் தான் நொந்து போயிருக்கேன். ஆளாளுக்கு நான் எடுக்குறது தான் முடிவுன்னா இந்த வீட்டுல நான் யாரு?” என்றவர் பேச்சு வார்த்தைகளில் அமைதியாய் செல்ல முடியவில்லை ஈஸ்வருக்கும்.

பெரிய பெரிய வார்த்தைகள் தான் தந்தையும் மகனும் பேசிக் கொண்டது. 

“புருஷனை மகன் கேள்வி கேட்குறான். பார்த்துட்டு நிக்குற இல்ல? நான் எக்கேடு கெட்டா உங்களுக்கு என்ன?” என மனைவியின் முகம் பார்த்து சொல்லி மகேஸ்வரன் வெளியில் சென்றுவிட்டார் கோபத்தோடு.

“ஏன் ம்மா இப்படி புரிஞ்சிக்காமல் பேசிட்டு போறாங்க?” ஈஸ்வர் அன்னையிடம் கேட்க,

“அவர் அப்படி தான். பிரச்சனை சரியாச்சுன்னா அவரும் சரியாகிடுவார். அதை விடு!” என்ற லதா,

“ஏதோ கேரக்டர் பிடிச்சா பொண்ணை கேட்பேன்னு என்னவோ சொன்னியே… அது… பார்த்துட்டு சொன்னியா இல்ல சும்மா அந்த நேரம் பேச்சுக்கு சொன்னியா?” என மிக முக்கியமாய் அப்போது இருந்தே கேட்க நினைத்த கேள்வியை கேட்டு வைக்க,

“ம்மா!” என்றவன் குரலும் கோபமும் நெருப்பிலிட்ட நீராய் மொத்தமும் வடிந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!