Skip to content
Post Views: 881
எவ்வளவு தான் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், சில சமயங்களில் உணர்வு ரீதியான விஷயங்கள் அறிவை பின்னுக்குத் தள்ளி அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்து விடுகிறது.
இப்போது ஏன் திருமணம் வேண்டாம் என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தவள், இந்த திருமணம் நடந்தால் ஒருவன் உயிர் பிழைப்பான் என்பதற்காக தன்னையே சமாதானப்படுத்த என்ன வழி என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
Advertisement
“ரதி அத்தனை பேரும் இவ்வளவு சொல்றாங்க இல்ல, அந்த தம்பி உயிர் தான்மா இப்போ முக்கியம், நீ சொல்ற வார்த்தையில் தான் அவர் எந்திரிச்சு உட்கார போறார் மா. சரின்னு சொல்லு” விஸ்வம் அடங்கிய குரலில் அவளிடம் மெதுவாக கூறினார்.
“ரதி. நீ இன்னமும் யோசிக்கறதுக்கு காரணம், மாதவனோட கேரக்டர் தான்னு எனக்கு நல்லா புரியுது. ஆனா, இப்போ இருக்க சூழல்ல நீ அவனுக்காக கொஞ்சம் இரக்கப்படு. கண்டிப்பா உங்க கல்யாணத்துக்கு அப்புறமா மாதவன் பழைய மாதிரி இருக்க மாட்டான்னு நான் உனக்கு உறுதி கொடுக்கிறேன். ஒரு தந்தையா என் அப்பா செய்ய தவறினதை நான் அண்ணனா இருந்து கண்டிப்பேன். அவனை நல்லபடியா வாழ வைக்க என்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன். நீ ஒருத்தி எங்க குடும்பத்துல இருக்க அத்தனை பேருக்கும் நிம்மதி தரப்போறன்னா, உனக்காக நாங்க அத்தனை பேரும் நிப்போம். எங்களை நம்பி உன் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் மா.” மருதன் சொல்ல, சொல்ல தன் பிடிவாதத்துக்கு அஸ்திவாரமே இல்லாது போனதை உணர ஆரம்பித்தாள். அவளின் மௌனத்தை பார்த்த ராமச்சந்திரன்,
Advertisement
Advertisement
“அதான் கடனையும் திருப்பித் தர வேணாம், வீட்டையும், தறியையும், எழுதித் தர வேணாம்னு சொல்லிட்டேனே. இன்னும் என்ன செய்யனும் நான், கால்ல வுழுந்து கெஞ்சனுமா..? சொல்லும்மா அதையும் செய்யறேன் என் மவனுக்காக” தழுதழுத்த குரலில் சொல்லி விட்டு எழுந்து அவளை நோக்கி வந்ததும், ரதிக்கு சப்த நாடியும் ஒடுங்கியது.
“அய்யோ மாமா.. என்ன வார்த்தை சொல்றீங்க. நீங்க போய் இந்த வார்த்தையை சொல்லலாமா.. எங்கப்பா மாதிரி நீங்க. நான் எங்கப்பாக்காக தான் யோசிச்சேன்.” படபடவென அவளை அறியாமல் வார்த்தைகள் வந்து விழுந்து விட்டன.
Advertisement
தான் என்ன பேசினோம் என்று அவள் மீண்டும் யோசிக்கும் முன், அத்தனை பேரும் ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் அவளைப் பார்த்தனர்.
“அட அதான் உன் மருமகளே சொல்லியாச்சே, கிளம்புங்கய்யா. போய் மாதவன்ட்ட சொல்லுங்க, உன் கல்யாணம் ரதியோடதான்னு.” வந்திருந்தவர் உரக்க சொல்லியபின் தான் ரதிக்கு உரைத்தது.
‘இனி செய்வதற்கு ஏதுமில்லை… என்ன ஒரு முட்டாள்த்தனம் நான் செய்தது..’ சுவற்றில் சாய்ந்து யாருக்கும் தெரியாமல் தன் கையை பின் சுவற்றில் குத்திக் கொண்டாள்.
திரும்பி தந்தையின் முகம் பார்த்தாள். அவர் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு அவளுக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.
அடுத்த மணித்துளிகளில் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் இருந்தனர்.
மாதவனை பார்க்க ராமச்சந்திரனுக்கும், மருதனுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
அவசரப்பிரிவின் கண்ணாடி வழியே உள்ளே பார்த்தாள் ரதி.
மூக்கில் குழாயுடன் மாதவனை பார்க்கவே சற்று பாவமாகத்தான் இருந்தது. கல்லூரி முடித்தபின் அவ்வளவாக அவனை பார்க்கவில்லை. பெண் பார்க்கும் படலமோ, மாப்பிள்ளை பார்க்கும் படலமோ ஒரு சடங்காக பார்க்கப்படும். ஆனால் இங்கோ அதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அவசரகதியில், அவசரப்பிரிவில், அவசரம் அவசரமாக பெண், மாப்பிள்ளையை பார்க்கிறாள்.
மாதவனுக்கு முழுதாக நினைவுத் திரும்ப இரண்டு மணி நேரம் ஆயிற்று. அவனிடம் விஷயத்தை மருதன் சொல்லியதும், அவசரப்பிரிவின் கண்ணாடி பக்கம் அவனது கண்கள் அலைப்பாய்ந்தன.
அதைப் புரிந்து வெளியில் வந்து ரதியை உள்ளே அனுப்பி வைத்தான் மருதன்.
மாதவனின் கலங்கிய கண்களை பார்த்தபின், தனது மன மாற்றம் சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது.
அவளுக்கு என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. முதலில் அவன் மேல் எந்த எண்ணமுமே அவளுக்குத் இன்னமும் தோன்றவில்லை.
“உடம்பை நல்லா பாத்துக்கோங்க. நான் வரேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியில் வந்து விட்டாள்.
அடுத்தடுத்த நாட்களில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மடமடவென நடந்தேறின.
அவளுக்கான திருமண புடவையை, விஸ்வம் தனியொரு ஆளாக ராப்பகலாக அமர்ந்து நெய்து முடித்தார்.
ஆனால் பகட்டான திருமண புடவை ரதியின் கைகளுக்கு ராமச்சந்திரன் வீட்டில் இருந்து வந்து சேர்ந்தது.
நகர வாழ்க்கை வழக்கங்கள் மெது மெதுவாக கிராமப்புறங்களிலும் இப்போதெல்லாம் வந்து விட்டன. ஆனால் அப்படி, மெகந்தி, ஹல்தி போன்ற விஷயங்களை காரணமாக வைத்து யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை என்பதே பெரிய நிம்மதியாக இருந்தது அவளுக்கு.
ரதியின் நெருங்கிய தோழிகளான விஜியும், நித்யாவும் அவளை பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர்.
“என்னடி ஒரு கல்யாண வீட்டுக்குண்டான எந்த அறிகுறியும் உங்க வீட்ல இல்ல. நீ ஃபோன்ல சொன்னதால தான் நாங்களே நம்பறோம். ஏன் இப்படி ஒரு அவசர கல்யாணம் ரதி.? அதுவும் அந்த மாதவனோட?” நித்யா கேட்டதும் நடந்ததை பற்றி சுருக்கமாக விவரங்கள் சொன்னாள் ரதி.
“ஆனாலும் இவ்வளோ சீக்கிரம் நீ ஒத்துப்பன்னு நான் நினைக்கல ரதி. ரெண்டு மூனு மாசம் முன்ன வரைக்கும் அவன்.. ம்ம்ம்..அவர்ர்ர்.. ஒரு பொண்ணோட அடிக்கடி வெளியே போனத நான் பாத்தேன். ஆனா எப்போல இருந்து உன்னை இவ்வளோ தீவிரமா லவ் பண்ணான்னு…. பண்ணாருன்னு தெரியலடி. இதை எந்த அளவுக்கு நம்பறதுன்னு எனக்கு புரியல ரதி.” விஜியும் அவள் பங்குக்கு சொல்ல ரதி முகம் வெளிறியது.
“இனிமே என்ன செய்ய முடியும்? நடக்கறது நடக்கட்டும். விடுங்க.”
“ஆனா பாத்து நடந்துக்க ரதி. அங்க போய் யாரையும் நம்பிடாத. உன் கையில் இருக்க தொழிலை விட்டுடாத. இல்ல மேல படிக்கணும்னு சொல்லி அவங்க செலவுலயே படி. எதுவா இருந்தாலும் எங்களை கூப்பிடு. என்ன..” இருவரும் ரதியின் கைகளை பிடித்துக் கொண்டு சொல்லியது ஆறுதலாக இருந்தது ரதிக்கு.
“ கல்யாண பொண்ணு மாதிரியா இருக்க? அங்க தான் அவ்ளோ பணம் கொட்டி கிடக்குதே. இந்நேரம் ப்யூட்டி பார்லர்ல இருந்து யாரையாச்சும் ஃபேஷியல் செய்ய கூட அனுப்பியிருக்கலாம் இல்ல.. சரி சரி வா.. நாங்க பண்ணி விடறோம். கல்யாணத்தன்னிக்கு ரதி அப்படியே அந்த மன்மதனை மயக்கிடனும். நிஜமாவே அந்த ஆளு உன் காலுல விழுந்து கிடக்கனும். அப்படி நாங்க பண்ணி விடறோம்.” விரக்தியான சிரிப்புடன் தான் அவர்களுடன் சென்றாள். ஆனால் அவர்கள் செய்த குட்டி குட்டி கலாட்டாக்களில் அவள் தற்காலிகமாக விடுதலை பெற்றதை போல் உணர்ந்து அவர்களுடன் கலந்துக் கொண்டாள்.
மூவரும் சேர்ந்து தொலைந்த மகிழ்ச்சியை அந்த வீட்டில் கொண்டு வந்தனர்.
சந்தனமும், கஸ்தூரி மஞ்சளும், பாசிப்பருப்பும், கோரைக்கிழங்கும், கிச்சலி கிழங்கும், தக்காளியும், பாலும், அவள் முகத்தில் ஒரு புது பளபளப்பை கொண்டு வந்தது. செம்பருத்தியும், தேநீரும், சாதம் வடித்த கஞ்சியும், வெட்டி வேரும் அவளின் கூந்தலை காற்றிலாட வைத்தன. மருதாணி நிறம் அவளை மேலும் சிவக்க வைத்தது.
ரதியை பார்த்த விஸ்வத்திற்கு தேவலோகத்தில் இருந்து ஏதோ ஒரு அழகி எழுந்து வந்ததை போன்று இருந்தது. மகளை பெருமிதத்தோடு பார்த்தார்.
சிறிய மெருகூட்டல் கூட ஒரு பெண்ணை எப்படி உருமாற்றுகிறது..?
“ரதி.. எங்க கண்ணே பட்டுடும் போல.. சூப்பரா இருக்கடி.. மாமா… நலங்கு,. பந்தக்கால்லாம் வைக்க யாரை கூப்பிட்டீங்க.? நாளைக்கு செய்யனும் இல்ல..” நித்யா கேட்க,
“இவங்க அம்மா இறந்தப்புறம் யார்மா எங்க வீட்டுக்கு வராங்க. அதுவுமில்லாம திடீர்னு முடிவாயிருச்சு. யாரையும் நானும் கூப்பிட முடியல. எப்படியும் சம்பந்தியே ஊரை அழைச்சுருப்பார். நாளைக்கு யாராவது வந்தா பாக்கனும். இல்லன்னா பக்கத்து அக்கத்து வீட்ல இருக்கவங்களை வச்சு நாமளே செஞ்சுக்க வேண்டியது தான்.”
“நீங்க கவலையே படாதீங்க. நாங்களே போய் குங்குமம் குடுத்து தெரிஞ்சவங்களை கூப்பிடறோம். நீங்க பந்தக்கால் நடறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. நாங்க காலையில் இங்க இருப்போம். நலங்கையும் வச்சுடலாம். ரதி.. நீ எதுக்கும் கவலைப்படாத.. நாங்க இருக்கோம்..” அவர்கள் இருவரின் கைகளும் ரதியை சுற்றி அணைத்திருந்தன.
சொல்லியது போலவே தோழிகள் இருவரும் அவளுடன் இருந்து எல்லாவற்றையும் செய்து, இதோ இன்று திருமண மண்டபத்தில் அவளை மணவறையில் அமர வைப்பது வரை கூடவே நின்றார்கள்.
இன்று தான் ராமச்சந்திரனின் வீட்டு ஆட்களை ரதி நேரில் பார்க்கிறாள். அவள் மணமகள் அறைக்குள் நுழைந்ததுமே அந்த வீட்டுப் பெண்கள் அனைவரும் அவளை பார்க்க வந்துவிட்டனர். அவர்களின் தகுதிக்கு ஏற்றதை போல நகைகளை ரதிக்கு அணிவித்து அவளை இன்னும் அழகாக மாற்றி விட்டனர்.
ஊரார் முழுக்க ரதி மேல் தான் தங்கள் கண்களை வைத்திருந்தனர். அற்பனுக்கு வந்த வாழ்வை பாரேன் என்ற மனநிலை தான் பலருக்குள் ஓடியது.
அனைவருக்கும் நமஸ்கரித்து மாதவன் அருகில் வந்து அமர்ந்தாள் ரதி. வேத மந்திரங்கள் ஓத மங்கல நாணும் மாதவன் கையில் வரும் நேரம் வந்தது.
ஆனால் அதே சமயம் ராமச்சந்திரன் அமர்ந்திருந்த இடம் சற்று சலசலப்புடன் கூடிய பரபரப்பு ஆனது.
அனைவரின் கவனமும் அங்கு சென்றது. ரேணுவின் தந்தை அன்புச்செல்வம், வந்திருந்த புதியவர்களுடன் சமாதானப் பேச்சு நடத்த ஆரம்பிக்க, மேடையில் நின்றிருந்த மருதனும், மாறனும் அவசரமாக கீழிறங்கி ஓடினர்.
“என்னங்க நான் இவ்ளோ சொல்றேன். நம்ப மாட்டேங்கறீங்க. எனக்கே இப்ப விஷயம் தெரியப்போய் தான் அவசரம் அவசரமா கிளம்பி ஓடியாறேன்.” வந்திருந்தவர் சத்தமாக கூற, அமர்ந்திருந்த கூட்டம் அப்படியே அவர்களை சூழத்தொடங்கியது.
ரதிக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தும் நிர்மலமான முகத்தில் எந்த சலனமும் இல்லை.
அவளை விழி வழியே விழுங்கிக் கொண்டிருந்த மாதவனுக்கோ பழம் நழுவிப் பாலில் விழும்போது, எங்கிருந்தோ வந்து இந்த நரி ஊளையிடுகிறதே என்று எரிச்சலாக, அசுவாரசியமாக கீழே பார்த்தான்.
“என்னங்க பிரச்சினை, கல்யாணம் முடியட்டுமே அப்புறமா எல்லாத்தையும் பாத்துக்கலாம்.” மாதவன் எங்கோ வம்பு வளர்த்து எவனை அடித்தானோ, இவர் வந்து பிரச்சினை செய்கிறார் என்று நினைத்து அவரிடம் பேசினான் மருதன்.
“என்னப்பா புரியாம பேசற. அவன் எப்படி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணுவான்?. முதல்ல என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்ல சொல்லு..” என்று கத்தினார். ஊரே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.
“மருதா.. யார்ரா இவரு.. வந்ததில் இருந்து இதே பல்லவியை பாடிட்டு இருக்கார். எதாவது பணம் வேணும்னா கொடுத்து அனுப்பு..முதல்ல..” ராமச்சந்திரன் எரிச்சலாக சொல்ல,
“அட பணம் கொடுப்பாராம் இல்ல பணம்.. எங்கய்யா கிட்ட இல்லாத பணமா.. உனக்கு எதாவது வேணும்னா சொல்லு.” அவருடன் வந்த அடியாள் போன்றவர் எகிறினார்.
“அப்பா இருங்கப்பா.. நான் விசாரிக்கறேன். அய்யா என்ன பிரச்சினைன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. முகூர்த்த நேரம் வேற முடியப் போகுது.” மருதன் பேச,
“இந்தாப்பா. இது என் பொண்ணு ஃபோட்டோ. உங்க தம்பிக்கிட்ட இது யாரு, இவளுக்கு அவர் என்ன பண்ணினார்னு கேளுங்க. அப்பவாவது நான் சொல்றதை கேட்பீங்களான்னு பாக்கிறேன்.” என்று புகைப்படத்தை அவன் கையில் திணிக்க, மருதன் முகமோ கோபத்தில் சிவந்தது.
“மாதவா..” அவன் கத்தியதில் மாதவன் அடுத்த நிமிடத்தில் அங்கு இருந்தான். மருதனிடம் பயம் எல்லாம் இல்லை. ரதியை திருமணம் செய்யும் அவசரத்தால் எழுந்து வந்தான்.
“என்ன அண்ணா.. யாராம் இவரு. என்ன இப்போ வந்து பிரச்சினை பண்றாரு.?” அமர்த்தலாக கேட்டான்.
“டேய் இந்த ஃபோட்டோல இருக்கிறது யாரு. உனக்கு தெரியுமா?”
புகைப்படத்தை ஏனோ தானோவென்று பார்த்தவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவனின் பார்வை மாறுதலை மருதன் கண்டுக் கொண்டான்.
“யார்ரா”
“அண்ணா.. இது இது.. இது வந்து யார்னு தெரியல. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.” மாதவன் தந்தியடித்தான்.
“ஓ.. யார்னே தெரியலையா.. நல்லா பாருங்க. இப்போ தெரியுதான்னு” என்று குரல் கொடுத்துக் கொண்டே ஒரு பெண் உள்ளே நுழையவும் கூட்டத்தின் கவனம் அங்கே சென்றது.
மாதவன் ஒரு அடி பின்னே நகர்ந்தான்.
“என் பேரு ரம்பா தேவி. இப்ப தெரியுதா..?” அவள் கேட்டுக் கொண்டே அவன் அருகில் வந்து நின்றாள்.
“அவர் எப்படி பதில் சொல்லுவார்.? ஏங்க இது என் பொண்ணுங்க.. என் பேரு திருத்தாண்டவம். எங்க ஊரு கிருஷ்ணகிரி. எனக்கு எங்க ஊர்லயும், ஒசூர்லயும் பத்து ஃபேக்டரி இருக்கு. அரிசி மில்லு நாலு இருக்கு. லாரிங்க, ஆம்னி பஸ்ஸூங்கன்னு அத்தனை இருக்கு. அது அத்தனைக்கும் இவ தான் ஒரே வாரிசு. என் பொண்ணு அக்ரி படிக்கனும்னு சொன்னான்னு இங்க கொண்டாந்து சேர்த்தேன். இவரு அங்க போக வர என் பொண்ணை பாத்து பழகிருக்கார். ஒரு வருஷமா இவ பின்னாடி சுத்தி, இப்போ எக்ஸாம் முடிஞ்சு ஊருக்கு வந்ததும் இவ கிட்ட பேசக்கூட இல்லையாம். நாலு நாளாக செத்துப் போயிருவேன்னு அழுகை. சரி கழுதை, இந்தாளு இல்லன்னா என்ன, இவளை சமாதானம் பண்ணி, முந்நூறு பவுனு போட்டு, முப்பது கோடி கொடுத்து கோயம்புத்தூர் காலேஜ் ஓனர் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேசுனா, எங்க தலையில் குண்டை தூக்கி போடறா. இரண்டு மாசம் முழுகாம இருக்கேன் நானு.. அதுக்கு காரணம் இந்த மாதவன்னு. நேத்து இந்த விஷயம் தெரிஞ்சு விசாரிச்சா இன்னிக்கு இவருக்கு கல்யாணமாமே.. எப்பிடி இருக்கும் எனக்கு. அடிச்சு பிடிச்சு ஒடியாறேன்.இவர் அசால்ட்டா என் பொண்ண தெரியாதுன்னு சொல்வாராம்.”
அவர் சொல்ல, சொல்ல ராமச்சந்திரன் முகம் உம்மென்று இருந்தது பிரகாசிக்க ஆரம்பித்தது.
‘யார்ரா இவன். புளியங்கொம்பை விட்டுட்டு கருவேலங்குச்சிக்கு அலைஞ்சிருக்கான்’ என்று மாதவனை அற்பமாக பார்த்தார்.
அவனோ பயத்தில் தந்தையை பார்த்தான்.
“மாதவா, இவங்க சொல்றதெல்லாம் உண்மையா.. “ மருதன் கேட்க,
“அய்யோ இந்த பொண்ணோட பேசினதெல்லாம் உண்மை தான். ஆனா இவங்க சொல்ற மாதிரி எதுவுமே நடக்கல. அந்த பொண்ணு பொய் சொல்லுது.”
ரம்பா அவன் எதிரில் வந்து அவள் கையில் வைத்திருந்த காகிதத்தை எல்லாம் மாதவனின் முகத்திலேயே விசிறி அடித்தாள்.
பறந்த காகிதங்கள் அங்கிருந்தவர்களின் கைகளில் கிடைத்தன. அதில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களின் பிரதிகள் இருந்தன. மருதனின் கையில் அவளின் மருத்துவ அறிக்கையை கொடுத்தாள். அதில் அவள் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது இருந்தது.
அவளுடைய அலைபேசியை ரேணுவின் தந்தையான அன்புச்செல்வத்திடம் காண்பித்தாள்.
அதில் மாதவன் அவளுடன் பேசிய அத்தனையும் இருந்தன. கூடவே அவளின் அலைபேசி முழுக்க அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள்.
அதில் இருவரும் ஜவ்வாது மலை சென்ற போது எடுத்த புகைப்படங்களும் இருந்தன. தேதி அதில் தெளிவாக இரண்டு மாதங்களுக்கு முன் இருந்தது.
“மாட்டிக்கிட்டயே மாதவா.. இந்த பொண்ணு குடுத்த எவிடென்ஸ் வச்சு உன்னை அரெஸ்ட்டே பண்ணலாம். மாப்பிள்ளை, இந்த பொண்ணு சொல்றதெல்லாம் உண்மை தான் போல. எதுக்கும் போலீசுக்கு தகவல் குடுத்துடலாம். அவங்க விசாரிச்சி சொன்னா ஒரு முடிவுக்கு வரலாம்..” அன்புச் செல்வம் கூறியதும் மாதவனின் முகம் வியர்வைமில் நனைந்தது.
“அய்யோ மாமா.. போலிசெல்லாம் வேணாம். அது அது… ஒரு எக்குத்தப்பான நேரத்தில் இது நடந்துருச்சு. அது இப்படி ஆகும்ன்னு நினைக்கல.” தலையை குனிந்துக் கொண்டு அவன் சொல்லியதும்,
“பாவி பாவி.. இந்த பொண்ணு வாழ்க்கைய கெடுத்து, இன்னொரு பொண்ணு வாழ்க்கையையும் கெடுக்க பாத்தியே.. இரண்டு மாசமா ரதியை தான் லவ் பண்றேன்னு அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு எதுக்குடா அப்பிடி அமர்க்களம் பண்ண? அவளுக்காக விஷத்தை குடிச்சியே எதுக்கு இந்த வேலை.. எப்படிடா ஒரே நேரத்தில் இரண்டு பொண்ணு மேல லவ் வரும்?” மருதன் கேட்க கேட்க, ரம்பாவின் முகம் சிவந்தது.
“அண்ணே.. ஏதோ தப்பு பண்ணிட்டேன். அதுக்காக ரதிய அவ ஸ்கூல் படிக்கறப்பல இருந்து நான் லவ் பண்ணது இல்லன்னு ஆகிடுமா.. ?” எதிர்க் கேள்வி அவன் கேட்க அருவறுப்புடன் அவனை பார்த்தாள் ரம்பா.
அவனை பளீரென்று அறைந்தார் ராமச்சந்திரன்.
“அடிங்க. என்ன திமிருடா உனக்கு. செல்லம் கொடுத்து உன்னை கெடுத்து வச்சேனே என்னை செருப்பால அடிக்கனும். இந்த பொண்ணை கர்ப்பமாக்கிட்டு இவளுக்காக இல்லடா நீ விஷத்தை குடிச்சிருக்கனும், இந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டுல்ல அமர்க்களம் பண்ணியிருக்கனும்… பாவம் அந்த அப்பாவி பொண்ணை போய் ஏமாத்த பாத்திருக்கியே!
.. இப்ப நான் சொல்றேன். இந்த ரம்பா பொண்ணு தான் உனக்கு மனைவி. எனக்கு மருமக. இந்தாம்மா ரதி.. என்னை மன்னிச்சிடும்மா. என் பையன் யோக்கியதை தெரியாம உன்னை கஷ்டப்படுத்திட்டேன். இறங்கி வாம்மா. உன் கழுத்தில இருக்க மாலையை எடுத்து இந்த பொண்ணு கழுத்தில் போடு. டேய் மாதவா.. இந்த பொண்ண கூட்டிட்டு போய் தாலிய கட்டு.” ராமச்சந்திரன் மூச்சை பிடிச்சு பேசவும், ரதிக்கு பெருமூச்சு வந்தது.
கடைசியில் அற்புதம் ஒரு நொடியில் நிகழ்ந்தே விட்டது என்று மனதுக்குள் தாத்தாவை நினைத்துக் கொண்டாள்.
ஊரும், ‘அது எப்படி இந்த ரதிக்கு இப்படியொரு வாழ்க்கை வந்தது, இவளுக்கு எல்லாம் இவ்வளவு பெரிய இடத்தில் சம்பந்தமா, அதான் நடக்காம போச்சு’ என்று பெருமூச்சு விட்டது.
ராமச்சந்திரனோ, ‘அப்பாடி இந்த ரதி மருமகளா வரல, லஷ்மி தேவியே இந்த ரம்பா ரூபத்தில் வரா.. எந்த பிரச்சினையும் இல்லாம இந்த கல்யாணம் நடக்க வேண்டுமே’ என்று பெருமூச்சு விட்டார்.
அத்தனை பேரின் பெருமூச்சாலும் அந்த இடமே வசந்த காலம் போலிருந்தது வேனிற் காலமாக மாறியது.
error: Content is protected !!