Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 29

அத்தியாயம் – 29

 

சாப்பிட்டு முடித்ததும் ரன்வீர் அலுவலகத்திற்குத் தயாராவதற்காக அறை நோக்கிச் சென்றிட, அவனைப் பின்தொடர்ந்து வந்த மிருதுளா, உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்திவிட்டு, “நீங்க ஓவரா போறீங்க மிஸ்டர் ரன்வீர்!” என்றாள் சீற்றத்துடன்…

​அவள் குரல் கேட்டுத் திரும்பியவனோ, ஒன்றுமே தெரியாதவன் போல, “நானா?” என்று வினவிட,.. ​”நடிக்காதீங்க!” என்று முறைத்தவள், “எதுக்கு கீழே என்னையே பார்த்துட்டு இருந்தீங்க? உங்களுக்குப் பார்க்கிறதுக்கு வேற ஆளே கிடைக்கலையா?” என்று எள்ளலுடன் கேட்டாள்..



Advertisement

​”வேற ஆளுக்கு நான் எங்கே போறது?” என்று அவன் மெல்லிய குரலில் முணுமுணுத்தது அவளது காதிலும் விழ, அவளது முறைப்பு இன்னும் அதிகமாக, அவனோ அவளை மேலும் சூடாக்க விரும்பாமல்,.. ​”நான் ஆபீஸ்க்கு கிளம்பணும்…” என்று  நேரமாவதைச் சுட்டிக்காட்ட, “கிளம்புங்க… யார் வேணாம்னு சொன்னது? ஆனா இன்னொரு தடவை இப்படி நான் டிஸ்டர்ப் ஆகுற அளவுக்குப் பார்த்தீங்கன்னா, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்!” என்று எச்சரித்துவிட்டு விறுவிறுவென வெளியேறினாள்…

​அவள் சென்ற திசையையே பார்த்த ரன்வீர், “பரவாயில்லை… ரொம்ப ஒன்னும் கோபப்படல!” என்று தனக்குள் நினைத்து சிரித்துக்கொண்டே, அலுவலகம் செல்வதற்காகத் தயாராக ஆரம்பித்தான், அவளது இந்தச் செல்லக் கோபங்கள் சீக்கிரம் அவள் தன்னை புரிந்து கொள்வாள் என்று அவனுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கையை விதைத்தன…

அன்று வினோத்தும் சம்யுக்தாவும் கல்லூரிக்கும், ரன்வீர் சமுத்திரவேல் அலுவலகத்திற்கும் கிளம்பிய பிறகு, வீட்டின் பெண்கள் அனைவரும் சமையல் வேலையில் மூழ்கினர், ரன்வீரின் தந்தை இறந்த பிறகு காயத்ரி சமைப்பதில் காட்டிய ஆர்வம் குறைந்திருந்தது, ஆனால், தன் மகன் வந்ததிலிருந்தே அவர் சமையலறையில் மும்முரமாக இறங்கிவிட்டார்…

Advertisement

​”அக்கா, காலையில டிபன் நீங்கதானே பண்ணீங்க? இப்போ மதிய உணவை நாங்க பார்த்துக்கிறோம், நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க,” என்று சுமதி எவ்வளவோ சொல்லியும் காயத்ரி கேட்கவில்லை…

Advertisement

​”எல்லா வேலைகளையும் நான் மட்டுமா பார்க்கிறேன்? காய்கறி நறுக்கித் தரவும் வெங்காயம் உரித்துத் தரவும் நீங்க இருக்கீங்க… பாத்திரங்களைக் கழுவ கோமதியும் வள்ளியும் இருக்காங்க… அப்புறம் என்ன?” என்று சுறுசுறுப்பாக வேலை செய்தவர், வாணலியில் இருந்த வெண்டைக்காயை வதக்கிக் கொண்டே, “ரன்வீருக்கு வெண்டைக்காய் ப்ரைன்னா ரொம்ப பிடிக்கும்மா மிருதுளா,” என்று அருகில் நின்று வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தவளிடம் சொல்ல, அவளுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மாமியாரின் மனதைக் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக, “ம்ம்…” என்று மட்டும் மெல்ல சொல்லிக் கொண்டாள்…

​”மிருதுளாவுக்கும் இதெல்லாம் சொல்லிக் கொடுங்க அக்கா, இனி அவ புருஷனுக்குப் பிடிச்சதை அவளே செஞ்சு பழகிக்கட்டும்,” என்று சுமதி கிண்டலாகச் சொல்ல, “அதுவும் சரிதான்,” என்ற காயத்ரி, தனது கைப்பக்குவ ரகசியங்களை அவளுக்கும் சொல்லிக் கொடுத்தார்…

​ரன்வீருக்காக எதையும் கற்றுக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை என்றாலும், இயல்பாகவே சமையலில் ஈர்ப்பு இருந்ததினால், காயத்ரி சொல்லிக் கொடுத்த நுணுக்கங்களை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டாள் மிருதுளா…

Advertisement

அன்று மதியம் சமுத்திரவேல் சீக்கிரமாகவே வந்து உணவருந்திவிட்டுச் சென்றுவிட, “மதியம் சாப்பாட்டிற்கு கண்டிப்பா வந்துவிடுவேன்மா” என்று சொல்லிவிட்டு சென்ற ரன்வீர் மட்டும் மணி இரண்டைத் தாண்டியும் வரவில்லை, காயத்ரி கவலையுடன் மகனுக்கு போன் செய்ய, அவனோ, “அர்ஜண்ட் ஒர்க் ஒன்னு வந்துடுச்சுமா, நீங்க சாப்பிடுங்க, நான் வந்து சாப்பிட்டுக்கிறேன்,” என்று கூறிவிட்டான்…

​காயத்ரிக்குச் சர்க்கரை நோய் இருந்த காரணத்தினால் உணவைத் தள்ளிப் போட முடியாது அதனால், அவர் மிருதுளா மற்றும் சுமதியுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்தார், ஒருவேளை மிருதுளா அவன் மீது கோபமில்லாமல் இருந்திருந்தால், ரன்வீர் வரும் வரை சாப்பிடாமல் காத்திருந்திருப்பாளோ என்னவோ!

​சாப்பிட்டு முடித்த பின்னரும் காயத்ரி மகனுக்காகவே காத்திருந்தார், அதிகாலையிலேயே எழுந்த சோர்வும், சமையலறையில் வேலை செய்த களைப்பும் அவரைத் தூக்கத்தில் தள்ள, சோபாவிலேயே அமர்ந்தவாறு தூங்கி விழுந்தார். அதைக் கண்ட மிருதுளா, “அத்தை, நீங்க ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க,” என்றாள்…

​”இல்லமா… ரன்வீர் வந்துடட்டும்,” என்று அவர் இழுக்க, “நீங்க ரொம்ப டயர்டா தெரியறீங்க அத்தை, நீங்க போய் தூங்குங்க… அ… அவர் வந்தா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்,” என்று ஒருவிதத் தயக்கத்துடன் சொன்னாள்…

​மிருதுளா இப்படி இறங்கி வந்து சொன்னது காயத்ரிக்கு மகிழ்ச்சியாக இருந்தது, இந்த சின்ன சின்ன செயல்கள் மூலமாவது இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், அவர் தன் அறைக்குச் சென்றுவிட, மிருதுளாவிற்கு அவனுக்காகக் காத்திருப்பது எரிச்சலைக் கொடுத்தாலும், காயத்ரிக்காக அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்…

போனில் ரீல்ஸ் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மிருதுளா, ஓரிரு நிமிடங்கள் கடந்திருக்கும், ரன்வீர் வீட்டிற்கு வந்து சேர்ந்தான், வந்தவனை அவள் முறைக்க, அவனோ அவள் முறைப்பை கண்டுகொல்லாமல் ஹாலில் அவள் மட்டுமே தனியாக இருப்பதைக் கண்டு, “அம்மா எங்கே?” என்று வினவினான்…

​”பச்சை குழந்தை… வந்ததும் அம்மாவை தேடுது,” என்று அவள் வாய்க்குள் முணுமுணுத்தது அவனது காதிலும் விழுந்துவிட, அவனையறியாமல் இதழ்களில் புன்னகை அரும்பியது…

​”என் அம்மாக்கு நான் பச்சை குழந்தை தான்,” என்று அவன் அழுத்தமாக அவளைப் பார்த்துக் கூற, “நீங்க என்ன குழந்தையா வேணும்னா இருந்துட்டு போங்க, அது எனக்குத் தேவையில்லாதது,” என்று எகத்தாளமாகச் சொன்னவள், “அத்தை என்னைத்தான் உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கச் சொன்னாங்க,” என்றாள்…

​”ஓ ரியலி! நீ எனக்குப் பரிமாறப் போறியா?” என்றான் ரன்வீர் மறைக்க முடியாத சந்தோசத்துடன்.

​”ரொம்ப சந்தோஷப்படாதீங்க, பிடிக்காம தான் பண்ணுறேன், எல்லாம் அத்தைக்காக!” என்று அவனை முறைத்துவிட்டு, டைனிங் அறையை நோக்கிச் சென்றிட, அவனும் குறும்புப் புன்னகையுடனேயே அவளைப் பின்தொடர்ந்து சென்று கை கழுவிவிட்டு அமர்ந்தான்…

​அவள் தட்டை வைத்துப் பரிமாற ஆரம்பிக்க, அவனுக்கோ உள்ளுக்குள் அவ்வளவு குதூகலம், காலையில் அவள் பரிமாறினாள் தான் என்றாலும், இப்போது அவர்கள் மட்டுமே இருக்கும் இந்தத் தனிமையில் அவள் தனக்காகப் பரிமாறுவது அவனுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது…

​அவள் கரண்டியால் உணவை எடுக்கும்போது அவளது வளையல்களின் ஓசை அந்த நிசப்தமான அறையில் அவனுக்கு ஒரு மெல்லிசையாய் கேட்டது…

​”வெண்டைக்காய் பிரை… வாசனை நல்லா இருக்கே! அம்மா செஞ்சதா?” என்று அவன் கேட்க, மிருதுளா பதில் ஏதும் சொல்லாமல் காயத்ரி சொல்லிக் கொடுத்த அதே பதத்தில் வதக்கிய வெண்டைக்காயை அவனது தட்டில் வைத்தாள், ஒரு வாய் எடுத்துச் சுவைத்தவன் அப்படியே இருந்தான், அந்த சுவையில் ஏதோ ஒரு மாற்றம்… அம்மாவின் கைமணம் இருந்தாலும், அதில் மிருதுளாவின் நேர்த்தியும் கலந்திருப்பதை அவன் நாடி உணர்ந்தது…

“வெண்டைக்காய் ரொம்ப சூப்பரா இருக்கு மிருதுளா… தேங்க்ஸ்,” என்று அவன் நிமிர்ந்து பார்க்க, அவள் ஏதும் பேசாமல் அடுத்த பதார்த்தத்தை அவன் தட்டில் வைத்தாள், அவனது பாராட்டு அவளுக்குள் ஒரு சிறிய சலனத்தை ஏற்படுத்தினாலும், முகம் காட்டாமல் அங்கிருந்து நகர முயல,
​”நீ சாப்பிட்டியா?” என்று  அக்கறையாகக் கேட்டான் அவன்…

“இவ்ளோ நேரமாகியும் நான் ஏன் சாப்பிடாம இருக்கப் போறேன்? அதெல்லாம் நல்லா திருப்தியா சாப்பிட்டேன்,” என்று கறாராக பதிலளித்தவள் நகர பார்க்க,..
​”ஓ…” என்றவன், “ஒரு கம்பெனிக்காச்சும் இங்கே இருக்கலாமே?” என்றான் ஏக்கத்துடன்…

​”என் வேலை பரிமாறுவது மட்டும்தான், அதை பண்ணியாச்சு,” என்று சிடுசிடுவென்று கூறிவிட்டு, வாசல் வரை சென்றவள், திடீரெனப் புரை ஏறி அவன் பலமாக இரும ஆரம்பித்ததைக் கண்டு, “என்னாச்சு?” என்றவாறு பதட்டமாக அவனருகில் ஓடி வந்தாள்…

​அவனோ பேச முடியாமல் இரும, வேகமாக நீரை எடுத்துக் கொடுத்தவள், அவனது தலையை மென்மையாகத் தட்டி விட்டாள், அவளது கண்களில் தெரிந்த அந்த உண்மையான பதட்டத்தையும் அக்கறையையும் பார்த்தவாறே, அவள் கொடுத்த நீரைப் பருகினான் ரன்வீர்…

​சற்று நேரம் கழித்து இருமல் அடங்க, அவளைப் தான் அவன் பார்த்தான்.. அவளோ… “மெதுவா தான் சாப்பிடக்கூடாதா?” என்று கோபமாகத் திட்டியவளின் கைகள் இன்னும் அவனது தலையை வருடிக்கொண்டிருந்தன.

​அவள் தன் மீது வைத்திருக்கும் அந்த மாறாத அக்கறையை உணர்ந்த ரன்வீர், அவளது கையை மெல்லப் பற்றி..  “என் மேல இவ்வளவு அக்கறை வச்சிருக்கவ ஏன் என்னை விட்டு விலகியே இருக்க மிருதுளா?” என்று கேட்க, சட்டென்று சுயநினைவு பெற்றவள் தன் கையை உருவிக்கொண்டு… ​”எ… எதாவது ஆகித் தொலைஞ்சா அப்புறம் அத்தைக்கு நான் என்ன பதில் சொல்றது? அதுக்குதான் வந்தேன், மத்தபடி வேற எதுவும் இல்லை,” என்று சமாளித்தபடி தள்ளி நிற்க, அவனோ ஒரு பெருமூச்சோடு மீண்டும் சாப்பிடத் தொடங்கினான்.

​அவள் சொன்ன அந்தப் பதில் வெறும் சாக்குபோக்குதான் என்பது ரன்வீருக்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும், அவளை மேற்கொண்டு சீண்டி அந்தத் தருணத்தைக் கெடுக்க அவன் விரும்பவில்லை, அமைதியாக சாப்பிட்டு முடித்தவன், தட்டை நகர்த்தி வைத்துவிட்டு எழுந்தான்…

​மிருதுளா மௌனமாகத் தட்டுகளை எடுத்துச் சுத்தம் செய்யத் தொடங்கிட, அவளுக்குத் துணையாக அங்கே நிற்க நினைத்தவன், “தேங்க்ஸ் மிருதுளா… சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது, குறிப்பா அந்த வெண்டைக்காய் வதக்கல்… அதுல உன் கைமணம் தெரிஞ்சது,” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்…

​அவன் சென்ற திசையையே பார்த்தபடி நின்றிருந்த மிருதுளாவிற்கு, மனதிற்குள் ஏதோ ஒரு பாரம் குறைந்தது போலவும், அதே சமயம் ஏதோ ஒரு புதிய குழப்பம் ஆரம்பமானது போலவும் தோன்றியது, அவன் அருகிலிருந்த அந்த சில நிமிடங்கள், அவள் கட்டியிருந்த கோபக் கோட்டையில் ஒரு சிறு விரிசலை ஏற்படுத்தியிருந்தது உண்மைதான்.

​அதன் பிறகு மதிய நேரம் மெல்ல நகர்ந்தது, மாலை வேளையில் சம்யுக்தாவும் வினோத்தும் கல்லூரியிலிருந்து திரும்ப, வீடு மீண்டும் களைகட்டியது… கலகலப்பான பேச்சின் நடுவே, “நாளைக்கு சண்டே தானே, நாம ஃபேமிலியா ட்ரிப் எங்கேயாச்சும் போயிட்டு வருவோமா?” என்று வினோத் ஆசையாகக் கேட்க, “நல்ல ஐடியா! ஆனா வீட்ல உள்ளவங்க சம்மதிக்கணுமே” என்றாள் சம்யுக்தா, மிருதுளாவிற்கு அதில் அதிக ஆர்வம் இல்லாததால், மௌனமாகவே இருந்தாள்.

​அந்தக் கணம் காயத்ரி தனது அறையிலிருந்து வெளியே வர, அதனை கண்ட வினோத் “நான் பெரியம்மா கிட்ட கேட்கிறேன்” என்று ஓடிச்சென்று… “பெரியம்மா…” என்று தலையை சொறிந்தபடி அவன் நிற்க, அவனுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் அவனது செயல் இப்படித்தான் இருக்கும் என்பதை அறிந்து கொண்ட காயத்ரி, “என்ன வினோ? இப்போ பெரியம்மாகிட்ட என்ன காரியம் ஆகணும் உனக்கு?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்…

​”ஒன்னுமில்லை பெரியம்மா, நாளைக்கு லீவு தானே… எல்லாரும் ரொம்ப நாளா வீட்டுக்குள்ளேயே இருக்கோம், ஒரு நாளைக்கு எங்கேயாவது சின்னதா அவுட்டிங் போயிட்டு வரலாமான்னு யோசிச்சோம், நீங்க சம்மதிச்சா வீட்ல எல்லாரும் ஓகே சொல்லிடுவாங்க” என்று வினோத் மெல்லத் தூண்டில் போட,..

காயத்ரி ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, “எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை வினோ, ரன்வீரும் இப்பதான் வந்திருக்கான், அவனுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும், நாம இப்படி எல்லாரும் ஒன்னா வெளிய போயும் ரொம்ப வருஷமாச்சே,” என்று தன் சம்மதத்தைக் கூறிவிட, வினோத்தின் முகம் மலர்ந்து போனது…

​”யெஸ்! பெரியம்மா நீங்க சூப்பர், தேங்க் யூ ஸோ மச்” என்று துள்ளிக் குதித்த வினோத், உடனே சம்யுக்தாவிடம் சென்று எங்கே போகலாம் என்று திட்டமிடத் தொடங்கினான்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!