ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 30
அத்தியாயம் – 30
இளையவர்கள் இருவரும் யோசித்து, தங்களின் பீச் ஹவுஸிற்கே செல்லலாம் என்று முடிவெடுத்தனர், பெரியவர்களால் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்க, அந்த நேரம் பார்த்து ரன்வீரும் அங்கு வந்தான்…
”அண்ணா! கரெக்ட் டைம்க்கு தான் வந்திருக்கீங்க, வாங்க வாங்க,” என்று அவனது தம்பியும் தங்கையும் அவனைப் பிடித்து அமர வைக்க, “டேய்… ஃபிரஷ் அப் ஆகிட்டு வர்றேன்டா,” என்றான் ரன்வீர் அவர்களின் உற்சாகத்தைப் புரிந்து கொள்ளாமல்…
Advertisement
”அதெல்லாம் அப்புறம் ஆகிக்கலாம், நாங்க நாளைக்கு ஃபேமிலி ட்ரிப் போக பிளான் பண்ணியிருக்கோம்,” என்று வினோத் சொல்ல, “ஓ… நல்ல விஷயம்தான், ஆனா நாளைக்கு எனக்கு ஒரு இம்பார்டன்ட் ஒர்க் இருக்கே,” என்று ரன்வீர் இழுக்க…
”என்னண்ணா இப்படி சொல்லிட்டீங்க? நாங்க எவ்வளவு ஆசையா பிளான் பண்ணோம் தெரியுமா? பெரியம்மா கூட ஓகே சொல்லிட்டாங்க,” என்று வினோத் வருத்தத்துடன் கூற, “நான் வரலைனா என்ன நீங்க போயிட்டு வாங்க,” என்றான் ரன்வீர்…
”என்ன அண்ணா நீங்க? நீங்க இல்லாம நாங்க மட்டும் எப்படிப் போறது? அண்ணி… நீங்களாச்சும் அண்ணன்கிட்ட சொல்லுங்களேன்!” என்று சம்யுக்தா உதவியற்ற நிலையில் மிருதுளாவைத் துணைக்கு அழைக்க,.. மிருதுளாவோ அமைதியாக ரன்வீரை ஒரு பார்வை பார்த்தாளே தவிர, எதுவும் வாய் திறந்து பேசவில்லை. ‘அவன் வராமல் இருப்பதே எனக்கு நிம்மதி’ என்பது போல இருந்தது அவள் பார்வை…
ஆனால், அவர்களின் வற்புறுத்தலைக் கண்டு ரன்வீர் மெல்ல மிருதுளாவின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினான், அவள் பேச்சிற்காகவாவது ‘வாங்க’ என்று சொல்ல மாட்டாளா? என அவன் கண்கள் எதிர்பார்த்தன,
Advertisement
அவள் மௌனமாக இருப்பதைக் கண்டவன், “பாத்தியா வினோ… உன் அண்ணியே என்னைக் கூப்பிடல, அப்புறம் நான் எப்படி வர்றது?” என்று விளையாட்டாகப் பந்தைத் தூக்கி அவள் பக்கம் போட, இப்போது அனைவரின் பார்வையும் மிருதுளா மீது நிலைகுத்தியது,..
Advertisement
“அண்ணி… ப்ளீஸ்,” என்று சம்யுக்தா கெஞ்ச, மிருதுளா மெல்ல ரன்வீரை பார்க்க, அவனோ அவளது முகத்தைப் பார்த்தபடி குறும்பாகத் தன் புருவத்தை ஏற்றி இறக்கி, அவளைச் சீண்டும் விதமாகப் புன்னகைத்தான்…
அவனது அந்தச் செய்கை அவளுக்கு எரிச்சலைத் தந்தாலும், அனைவரின் எதிர்பார்ப்பையும் வீணாக்க அவளுக்கு மனமில்லை, மனதில் அவனை ஓராயிரம் முறைத் திட்டியவள், வேறு வழியின்றி, “அதான் இவங்க இவ்வளவு ஆசைப்படுறாங்கள்ல… வரலாம்ல,” என்று ஒட்டும் உறவுமில்லாமல் கூறினாள்,..
அவள் நேரடியாகக் கூப்பிடவில்லை என்றாலும், அவள் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்ததே ரன்வீருக்குப் போதுமானதாக இருக்க, அவனது பிடிவாதமும் அங்கே தளர்ந்தது.
Advertisement
”சரி ஓகே… நான் லன்ச் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்,” என்று அவன் சொல்ல, “லன்சுக்கு அப்புறம் கிளம்பி போயிடக் கூடாது அண்ணா, நைட்டு வரைக்கும் நம்ம அங்க தான் இருக்கணும்,” என்று சம்யுக்தா இப்போதே நிபந்தனை போட்டாள்…
”ஸ்யூர்!” என்று வாக்குறுதி அளித்தவன், மிருதுளாவை மட்டும் ஒரு தீர்க்கமான பார்வை பார்த்துவிட்டு, தன் அறை நோக்கி சென்றான்….
மறுநாள் விடியலிலேயே வீடே பரபரப்பாகக் காணப்பட்டது, ரன்வீர் தனக்கு அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலை இருப்பதாகவும், அங்கிருந்து நேரடியாகப் பீச் ஹவுஸிற்கு வந்துவிடுவதாகவும் கூறிவிட்டுத் தன் காரில் முன்னரே கிளம்பிவிட, குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வீட்டின் பெரிய காரில் ஒன்றாகப் புறப்பட்டனர்…
பல மாதங்களுக்குப் பிறகு இப்படி முழு குடும்பமாகப் பயணம் செல்வதால், காயத்ரி, சுமதி மற்றும் சமுத்திரவேல் முகத்தில் மிகுந்த சந்தோஷம் தெரிந்தது, வினோத்தும் சம்யுக்தாவும் பாட்டுப் பாடியபடி மிகுந்த உற்சாகத்துடன் வர, அவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பாத மிருதுளாவும் அதில் மெல்லக் கலந்து கொண்டாள், ரன்வீர் இப்போது அருகில் இல்லாததே அவளுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது. அவன் இருந்தால் அவனது பார்வை தன்னைச் சுற்றியே இருக்கும் என்பதால், இப்போது அவள் சற்றுச் சுதந்திரமாகவே உணர்ந்தாள்…
சற்று தூர பயணத்திற்குப் பிறகு, ஒரு வழியாக அவர்களின் பீச் ஹவுஸிற்கு வந்து சேர்ந்தனர்…
கடல் அலைகளின் ஓசையும், கடற்கரை மணலின் குளிர்ச்சியான காற்றும் அவர்களை வரவேற்றன.
அங்கே வீற்றிருந்த பிரமாண்டமான கடற்கரை இல்லம் நவீன வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக இருக்க, அதன் அருகிலேயே நீல நிற நீர் தளும்பும் ஸ்விம்மிங் பூல், சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது, கடல் காற்று வீட்டின் ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் புகுந்து வெளிவர, அந்த இடமே ஒரு சொர்க்கம் போல காட்சியளித்தது….
”வாவ்.. இந்த இடம் இன்னும் அப்படியே தான் இருக்கு!” என்று சம்யுக்தா வியக்க, வினோத்தோ அங்கிருந்த ஸ்விம்மிங் பூலைப் பார்த்ததும், “நான் இப்போவே குதிக்கப் போறேன்” என்று உற்சாகத்தில் கத்தினான்…
மிருதுளா முதன்முதலாக இந்த பீச் ஹவுஸிற்குள் காலடி எடுத்து வைக்கிறாள் அல்லவா! அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையும் அவளுக்குப் புதியதுதானே ஆசையாக பார்த்தாள் அனைத்தையும், அங்கிருந்த அலங்காரங்களையும், கலை நயத்தையும் மிகவும் ரசித்தாள்..
”மிருதுளா, எப்படி இருக்கு இந்த இடம்? உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று சுமதி ஆசையாகக் கேட்க, “ரொம்ப அழகா இருக்கு அத்த” என்று இயல்பாகப் பதிலளித்தாள்.
”அண்ணி இங்கே வாங்க, இந்த ஸ்விம்மிங் பூல் பக்கம் வியூ இன்னும் சூப்பரா இருக்கும்” என்று சம்யுக்தா அவளை அழைத்துச் சென்றாள், அங்கிருந்த நீல நிறத் தண்ணீர் தளும்பும் குளத்தைப் பார்த்தபோது, மிருதுளாவிற்கு ஒரு கணம் தன் கவலைகள் மறப்பது போல் இருந்தது…
அன்று மதிய உணவை ரன்வீர் ஒரு ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தான், சமைக்க வேண்டிய வேலை இல்லாததால், பெரியவர்கள் உட்பட அனைவரும் கடற்கரைக்கே வந்துவிட்டனர்…
பரந்து விரிந்த கடலையும், கரையைத் தொட்டுச் செல்லும் அலைகளையும் ரசித்தபடி அமர்ந்திருந்த சமுத்திரவேல், “இந்த இடத்துல இருந்தா மனசுல இருக்குற கவலைகள் எல்லாம் அப்படியே மறந்து போயிடும்,” என்றார் நிம்மதியாக…
”உண்மைதாங்க… அக்கா முகத்துலயும் ஒரு பொலிவு தெரியுது பார்த்தீங்களா?” என்று சுமதி கூற, சமுத்திரவேல் தன் அண்ணி காயத்ரியைத் திரும்பிப் பார்த்தவர்,.. ”ம்ம்… இந்த சந்தோஷம் இதுக்கு அப்புறமும் இப்படியே நீடிக்கணும்,” என்றார் ஒருவித எதிர்பார்ப்புடன்.
”எல்லாம் நல்லபடியா தான் நடக்கும்,” என்று சுமதி அவருக்குத் தைரியம் சொன்னார்.
அந்த நேரம் சம்யுக்தா ஓடி வந்து, “சித்தப்பா… நீங்களும் வாரீங்களா? கடல்ல ஸ்விம் பண்ணலாம்!” என்று அழைக்க, பெரிதாக சிரித்த சமுத்திரவேல்… “வேண்டாம்மா… உடம்பு தாங்காது,” என்றார்.
”அப்பா உடம்பைப் பார்த்து நீ ஸ்விம் பண்ண வேற கூப்பிடுறியாக்கா?” என்று வினோத் கிண்டலாகக் கேட்க, “டேய்!” என்று மகனைச் செல்லமாக அதட்டிய சமுத்திரவேல், “உன் அப்பாவைப் பத்தி உனக்குத் தெரியல, இப்போ வயசாகிடுச்சு, அதனால தான் முடியாதுன்னு சொன்னேன், நான் நீச்சல் அடிச்சதெல்லாம் நீ பார்த்தா வாயைப் பிளந்துடுவ! வேணும்னா உன் அம்மா கிட்ட கேட்டுப் பாரு,” என்று கூற,.. ”அட உண்மையாம்மா?” என்று வினோத் ஆச்சரியமாகக் கேட்க, சுமதி சிரித்துக்கொண்டே கணவரின் பழைய வீரப் பிரதாபங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
அவர்கள் பேசுவதைச் சற்றுத் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது, பெரியவர்களின் இந்த சிறுபிள்ளைத்தனமான பேச்சு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது…
“அண்ணி நீங்க ஏன் ஓரமா நிக்கிறீங்க, வாங்க ஸ்விம் பண்ணலாம்” என்று சம்யுக்தா அழைக்க,..”எனக்கு ஸ்விம் பண்ண தெரியாது சம்யு,” என்று மிருதுளா சொன்னதைக் கேட்டதும்,
”என்ன அண்ணி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க? கார் எல்லாம் சூப்பரா டிரைவ் பண்றீங்க, இதையும் அப்படியே கத்து வச்சுக்கலாம்ல,” என்று வினவ, மிருதுளா மெல்லிய சிரிப்புடன், “ஆழம்னா எனக்கு சின்ன வயசுல இருந்தே பயம் வினோ… அதனாலதான் நான் கத்துக்கல,” என்றாள் உண்மையான தயக்கத்துடன்.
அந்த கணம் காயத்ரி குறுக்கிட்டு, “அதான் சொல்றால்ல… அவ இருக்கட்டும், நீங்க போங்க,” என்று தன் மருமகளுக்கு ஆதரவாகப் பேசிட, அவர்களும் கடலில் இறங்கி ஆட்டம் போட்டனர், அலைகளோடு அவர்கள் மல்லுக்கட்டி விளையாடுவதையும், ஒருவரையொருவர் தண்ணீரை வாரி இறைத்துக்கொள்ளும் கூத்துகளையும் கரையில் இருந்த பெரியவர்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்…
கடற்கரை ஓரத்தில் விரிக்கப்பட்டிருந்த பெரிய குடைக்குக் கீழ் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் தான் சமுத்திரவேல், காயத்ரி சுமதி மற்றும் மிருதுளா ஆகியோர் அமர்ந்திருந்தனர், நேரங்கள் கடக்க வெயிலின் தாக்கமும் பயணக் களைப்பும் மெல்லத் தெரிய ஆரம்பித்தது…
”இந்த வாலுங்க இப்போதைக்குக் கடலை விட்டு வர்ற மாதிரி தெரியல, நான் கொஞ்ச நேரம் ரூமுக்குப் போய் ஓய்வெடுக்கிறேன்,” என்றவாறு சமுத்திரவேல் எழுந்து வீட்டை நோக்கி நடந்துவிட, அவர் சென்றதும் சுமதி காயத்ரியைப் பார்த்து, “அக்கா… நீங்களும் ரொம்ப டயர்டா தெரியறீங்க, அதான் மிருதுளா இங்கே இருக்கால்ல… அவ பசங்களைப் பார்த்துப்பா. நாமளும் உள்ளே போலாம், கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்கு, அதையும் நான் இன்னும் எடுத்து வைக்கல,” என்றார்…
காயத்ரியும் தன் களைப்பை உணர்ந்து, “சரி வா போவோம்… மிருதுளா, பசங்க ரொம்ப தூரம் ஆழத்துக்குப் போகாம பார்த்துக்கோமா,” என்று கூறிவிட்டுச் சுமதியுடன் கிளம்பினார்…
இப்போது அந்தப் பரந்த கடற்கரையில், ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு முன்னால், கடலில் விளையாடும் பிள்ளைகளுக்குத் துணையாக மிருதுளா மட்டுமே தனித்து விடப்பட்டாள்…
வினோத்தும் சம்யுக்தாவும் ஒருவரையொருவர் துரத்தி அலைகளோடு மல்லுக்கட்டும் அந்த அழகான காட்சியைக் கண்டு, அவளது இதழ்களிலும் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது…
அவளுக்கும் அந்தத் தண்ணீரில் இறங்கி விளையாட வேண்டும் என்று ஆசையாகத்தான் இருந்தது. ஆனால், ஆழத்தைப் பற்றிய பயம் அவளைக் கரையைத் தாண்ட விடாமல் பிடித்து வைத்திருந்தது, ஏக்கமும் ஆசையுமாக அவள் கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த கணம்… ”ரொம்ப ஏக்கமா பார்த்துட்டு இருக்க மாதிரி இருக்கு… ஆசையா இருந்தா நீயும் போகலாம்ல?” திடீரென்று பின்னாலிருந்து கேட்ட ரன்வீரின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பிய மிருதுளா, அங்கே ரன்வீர் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் கைகளைத் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்தபடி நின்றிருப்பதை கண்டு,. சட்டென்று தன் முகபாவனையை மாற்றிக்கொண்டு, கடலின் புறம் பார்வையைத் திருப்பி கொண்டு.. ”ஆசையும் இல்ல, ஒரு மண்ணும் இல்ல!” என்று வெடுக்கென்று கூறினாள்…
அவளது இந்த பேச்சைக் கேட்டு ரன்வீர் கோபப்படவில்லை, மாறாக, அவளது பிடிவாதத்தை ரசிப்பவன் போல ஒரு புன்னகையுடன் அவளது அருகிலிருந்த காலியான நாற்காலியில் அமர்ந்தவன்,.. ”நீ சொல்லலைனாலும் உன் கண்கள் சொல்லுதே மிருதுளா… உனக்கும் அந்த அலைகளைத் தொடணும்னு ஆசைதான், ஆனா ஏதோ ஒரு பயம் உன்னைத் தடுக்குது, இல்ல?” என்று அவன் அவளது மனதை வாசிப்பவன் போலக் கேட்க, மிருதுளா பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்…
அந்த நீலக் கடலின் பின்னணியில், அவர்களுக்கு இடையே ஒரு அமைதியான போர் நடந்து கொண்டிருந்தது, அவள் கடலையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ கடலைவிட அழகான அவளது முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்…
