ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 32
அத்தியாயம் – 32
இளையவர்கள் மூவர் மட்டும் பந்து விளையாட, ரன்வீர் ஒருபுறம் உற்சாகமாக நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான், அவனுக்கு நீச்சல் என்றால் அலாதி பிரியம் என்பதால், ஒரு மீனைப் போல நீருக்குள் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தான்…
மிருதுளாவிற்க்கும் இப்போது நீச்சல் குளத்தின் சூழல் பழகிப்போயிருந்தது, அந்த ஜில்லிப்பு அவளுக்குள் ஒரு புது வேகத்தைக் கொடுக்க, “சம்யு… பால் விளையாடியது போதும், கொஞ்சம் உள்ளே போலாமா?” என்று ஆசையாகக் கேட்க.. ”ம்ம்… வாங்க வாங்க போலாம்!” என்றாள் அவளும் உற்சாகமாக.
Advertisement
”என் கூடவே இரு, நான் மூழ்கிட்டா என்னை பிடிச்சிப்பல்ல?” என்று மிருதுளா ஒரு சிறு குழந்தையைப் போல வினவ, “அதெல்லாம் பிடிச்சுப்பேன் அண்ணி, அண்ணாவும் இங்கே தானே இருக்காரு,” என்று சம்யு ரன்வீரைக் காட்டிட, மிருதுளாவும் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ரன்வீரை லேசாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஓரத்திலிருந்த கம்பியை இறுகப் பற்றிக் கொண்டு சற்று ஆழமான பகுதிக்குச் சென்றாள், உள்ளே செல்ல செல்ல அந்த அனுபவம் குதூகலமாக இருந்தது, கம்பியை மட்டும் விட்டுவிட்டால் மூழ்கிவிடுவோம் என்ற பயத்தில் அதை மிகவும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு முன்னேறினாள், ரன்வீர் இதையெல்லாம் கவனித்தாலும், எதுவும் சொல்லாமல் கண்டு கொள்ளாதது போலவே இருந்தான்…
அந்த நேரம் பார்த்து அங்கே வந்த சுமதி.., “எவ்வளவு நேரம் தான் தண்ணில இருப்பீங்க? வினோத், சம்யு… போதும், வாங்க!” என்று அழைக்க, “சித்தி இருங்க, அண்ணிக்குக் கவசமா இப்போ நான் தான் இருக்கேன், வினோ, நீ போடா,” என்று சம்யு சொல்ல,.. “சரிக்கா எனக்கும் தலை வலிக்குது” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் அவன்…
”மிருதுளாவுக்குக் கவசமா தான் ரன்வீர் இருக்கானே? சும்மா சாக்குப்போக்கு சொல்லாம சீக்கிரம் வா சம்யு,” என்று சொல்லிவிட்டு சுமதியும் உள்ளே சென்றுவிட, மிருதுளாவிற்குச் சற்று தர்மசங்கடமாகப் போய்விட.. “சரி சம்யு, நாமளும் போயிடலாம்,” என்றாள்…
Advertisement
”சரி சரி வாங்க,” என்று சம்யுவும் சொல்ல, இவ்வளவு நேரம் ஆர்வத்தில் ஆழத்திற்கு வந்த மிருதுளாவிற்க்கு மீண்டும் திரும்புவது கடினமாக இருந்தது, கைகள் வலிக்க ஆரம்பிக்க, ஒரு கணம் அவளையும் அறியாமல் பிடியைத் தளர்த்திட, அந்த சில நொடிகளில் அவள் கையைத் தவறவிட்ட காரணத்தினால் சட்டென்று நீரினுள் மூழ்கிப் போனாள்…
Advertisement
”அண்ணி!” என்று சம்யு பதறிக்கத்திய அடுத்த கணம், மின்னல் வேகத்தில் வந்த ரன்வீர் அவளைப் பிடித்து வெளியே கொண்டு வந்திருந்தான்…
”அண்ணி, உங்களுக்கு ஒன்னும் இல்லையே?” என்று சம்யு பதட்டமாக வினவ, பயத்தில் லேசாக மூச்சு வாங்கியது மிருதுளாவிற்க்கு. எனினும் சமாளித்துக் கொண்டு, “நான் நல்லாத்தான் இருக்கேன்,” என்றாள்…
”இதுக்குத்தான் நீச்சல் கத்து வச்சுக்கணும்னு சொல்றது,” ரன்வீர் அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தபடி சொல்ல,.. ”அண்ணன் சரியா தான் சொல்றாரு, நீங்க அண்ணிக்குக் கத்து கொடுங்க, நான் போறேன்,” என்று சம்யு சட்டென்று அங்கிருந்து நழுவ, “ஏய் சம்யு, இரு… நானும் வரேன்!” என்ற மிருதுளாவின் வார்த்தை காற்றில் தான் கரைந்து போனது…
Advertisement
சம்யுக்தா சென்றதும் அந்த நீச்சல் குளத்தில் ரன்வீரும் மிருதுளாவும் மட்டுமே எஞ்சியிருந்தனர், அதுவும் ஆழமான பகுதி என்பதால், ரன்வீரின் பிடி இல்லாமல் அவளால் அங்கிருந்து நகரவும் முடியாத நிலை…
அவன் அவள் இடையை அணைத்தபடி பிடித்துக் கொண்டிருக்க, இருவருக்கும் இடையே ஒரு நிசப்தமான மௌனம் நிலவியது, ரன்வீரின் பார்வை அவளது பயந்த விழிகளில் நிலைத்திருந்தது.
“இப்போ என்ன பண்ணலாம்? நான் நீச்சல் கத்து கொடுக்கவா… இல்ல அப்படியே தூக்கிட்டுப் போய் வெளியே விடவா?” என்று அவன் குரலைத் தாழ்த்திக் கேட்க, மிருதுளாவின் இதயம் தாளம் தப்பியது…
அவனின் அருகாமையில் அவளுக்கு ஏனோ பேச்சே வரவில்லை, அவனது கரம் வேறு அவள் இடையை அழுத்தமாகப் பற்றி இருக்க, மூச்சு விடவே சிரமமாகத் தான் இருந்தது…
”என்ன… பேச்சையே காணோம்?” என்றவன், அவளது இடையில் அழுத்தத்தைச் சற்று கூட்ட, விழிகளைத் தாழ்த்தி இருந்தவளோ, “எ… என்னை விடுங்க,” என்றாள் திக்கித் திணறி…
”விட்டா மூழ்கிடுவ, பரவாயில்லையா?” அவன் குறும்பாக வினவ, அவள் பிடிவாதமாக “ம்ம்” என்று சொன்ன கணம், அவனும் விளையாட்டாகத் தனது பிடியைச் சட்டென்று விட்டான்.
அடுத்த நொடி, பிடிமானம் இல்லாமல் உடல் நீருக்குள் அமிழத் தொடங்க, “ஐயோ!” என்ற அலறலுடன் பயத்தில் அவன் கழுத்தை இரு கரங்களாலும் கெட்டியாகப் பிடித்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் அவள்.
அவளது இந்தத் திடுதிடுப்பான செய்கையில் ரன்வீர் ஒரு கணம் நிலைகுலைந்து தான் போனான். அவளது இதயம் அடித்துக்கொள்ளும் சத்தம் அவனது மார்பில் தெளிவாகக் கேட்டது, அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு, முகத்தை அவனது தோளில் புதைத்து நடுங்கிக் கொண்டிருந்தாள் மிருதுளா.
அவளது அச்சத்தை ரசித்தவன், மெல்ல அவளது முதுகில் தட்டிக் கொடுத்து, “விடுன்னு வீம்பா சொல்லிட்டு இப்படி மூச்சு வாங்குனா எப்படி” என்று வினவ, அவள் மெல்லத் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள், அவ்வளவு நெருக்கத்தில் அவனது கண்கள் அவளை ஏதோ செய்ய, அவளது கைகள் அவனது கழுத்தை விடுவிக்க மறந்தன…
அவனோ அவள் விழிகளை பார்த்தபடியே,.. ”நீச்சல் கத்துக்கலாமா?” என்று மெல்லிய குரலில் வினவிட.. அதற்குப் பதில் கூறாமல் அவனது விழிகளையே அவள் ஊடுருவிப் பார்க்க, ரன்வீரோ மிகவும் நிதானமாக அவள் நெற்றியில் விழுந்திருந்த ஈரமான முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டான்…
அவனது விரல்கள் அவளது சருமத்தைத் தீண்டிய அந்த நொடியில், தன் கட்டுபாட்டை இழந்து மெல்ல விழிகளை மூடிக் கொண்டவளுக்கோ, அவனின் அந்த மென்மையான ஸ்பரிசம் என்னென்னவோ செய்தது, அதுவரை அவளுக்குள் இருந்த கோபமும், பிடிவாதமும் அந்த நீருக்குள்ளேயே கரைந்து போனது போல் இருந்தது…
அவளது அமைதியைச் சம்மதமாக எடுத்துக் கொண்ட ரன்வீர், அவளது இடையைச் சுற்றியிருந்த தன் பிடியைத் தளர்த்தாமல், அவளைத் தன் கரங்களில் மெல்லத் தூக்கித் தண்ணீரின் மட்டத்தில் கிடைமட்டமாக வளைக்க, “ஐயோ! என்ன பண்ணுறீங்க?” என்று பதற்றத்தில் அலறினாள் மிருதுளா…
”ஹேய்… ஸ்விம் கத்துக்க வேண்டாமா?” என்று அவன் சிரிப்புடன் வினவ, “அதெல்லாம் வேண்டாம், எனக்கு பயமா இருக்கு… என்னை இறக்கி விடுங்க!” என்று அவள் அவனது தோள்களைப் பிடித்துத் தள்ளினாள்…
”நீ பயப்படவே வேண்டாம் மிருதுளா, நான் தான் இருக்கேன்ல…” என்று அவளைத் தேற்றியவன், “சரி, இப்போ நான் பிடிச்சிருக்கேன்… பயப்படாம கால்களை மெதுவா அசைத்து, கையால தண்ணியைத் தள்ளி விடு,” என்று சொல்லிக் கொடுத்தான்…
”நான் மாட்டேன்… எனக்குக் கை கால் எல்லாம் நடுங்குது, என்னை விட்டுடுங்க ரன்வீர்!” என்று அவள் பிடிவாதமாகச் சொல்ல, ரன்வீர் அவளை இன்னும் கொஞ்சம் அவனது உடலோடு நெருக்கமாக அணைத்துக் கொண்டு… ”இதோ பாரு… நான் உன்னை விட்டுட மாட்டேன், நீ காலை மட்டும் அசைச்சா போதும். இப்போ முயற்சி பண்ணு,” என்று அவன் விடாமல் வற்புறுத்த, அவனது அண்மையிலும், அந்தத் தண்ணீரின் குளிர்ச்சியிலும் வேறு வழியின்றி மெல்லத் தன் கால்களை அசைக்கத் தொடங்கினாள் அவள்..
அவள் பயத்துடன் கால்களை அசைக்க அசைக்க, தண்ணீரின் வேகம் அவளது உடலில் பட்டுச் சிதறியது. “அவ்ளோதான்… சூப்பர்! இதே மாதிரி பண்ணு,” என்று ரன்வீர் அவளை உற்சாகப்படுத்த, அந்த பயத்திலும் அவளுக்குள் ஒரு சின்னப் பெருமிதம் எட்டிப்பார்த்தது…
அந்த கணம் திடீரென்று ரன்வீர் வேண்டுமென்றே தன் பிடியைச் சற்றுத் தளர்த்துவது போல் நடிக்க, “ஐயோ… ரன்வீர்!” என்று கத்தியவள், மீண்டும் அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள், அவனது மார்பில் முகம் புதைத்து அவள் நடுங்க, ரன்வீரோ வெற்றிக் களிப்பில் சத்தமாகச் சிரித்தான்…
”ஏன் சிரிக்கிறீங்க? என்னைக் கொல்லாம விடமாட்டீங்க போல!” என்று அவள் சிணுங்கலாகக் கோபப்பட, அவனோ… ”உன்னைக் கொல்லுறதுக்கா நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்?” என்று அவன் ஆழ்ந்த பார்வையுடன் சொல்ல, அவளது கோபம் சட்டென்று மறைந்து ஒரு மெல்லிய வெட்கம் முளைத்தது…
அதன் பிறகு அவளும் கொஞ்சம் பயமின்றி ரன்வீர் கூறியது போல் செய்தாள், அவன் அவளது இடையைத் தாங்கிப் பிடித்திருக்கும் போது, தண்ணீரில் மிதப்பதும் கால்களை அசைப்பதும் அவளுக்கு மிகவும் எளிதாகத் தோன்றியது, அவனது கரங்களின் பாதுகாப்பு அவளுக்கு ஒருவிதத் துணிச்சலைக் கொடுத்திருந்தது…
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, “போதும்… எனக்கு மூச்சு வாங்குது, போலாமா?” என்று மிருதுளா களைப்புடன் வினவினாள், அவளது முகம் முழுவதும் நீர்த்துளிகள் அரும்பி இருக்க, அந்த சிறு களைப்பிலும் அவள் பேரழகாகத் தெரிந்தாள்…
அவளை விட மனமில்லாமல் பார்த்த ரன்வீர், அவளது இடையிலிருந்த பிடியை இன்னும் கொஞ்சம் இறுக்கி, “எனக்கு போகவே மனசில்லையே, இப்படியே இருந்துடலாமே!” என்றான் கிறக்கமான குரலில்…
அவனது வார்த்தைகளில் இருந்த அந்த ஆழமான நேசம் மிருதுளாவைத் தடுமாறச் செய்திட, அவனது விழிகளைப் பார்க்கத் தயங்கியவள், “ப்ளீஸ்…” என்று கெஞ்சலாகக் கூற, அவனும் மனதே இல்லாமல் “சரி வா” என்றான்…
அதன் பின் ரன்வீரின் உதவியுடன் நீச்சல் குளத்தை விட்டு வெளியே வந்தாள் மிருதுளா, ஈரத்தினால் அவளது சுடிதார் உடலோடு ஒட்டி இருக்க, அவளது அங்க அசைவுகள் அனைத்தும் அவனது விழிகளுக்கு விருந்தாக அமைய அந்த கணம் அவனது கட்டுப்பாட்டை மீறி ஒரு நீண்ட உஷ்ணப் பெருமூச்சொன்று அவனிடமிருந்து வெளிப்பட்டது…
அவளோ அதையெல்லாம் கவனிக்காமல் தன் கூந்தலில் இருந்த நீர்த்துளிகளை உதறிக் கொண்டிருந்தவள், தற்செயலாகத் திரும்பிய போதுதான், ரன்வீரின் கண்கள் தன் மீதே நிலைத்திருப்பதை கவனித்தாள். அந்தப் பார்வையில் இருந்த தீவிரம் அவளது உடலெங்கும் ஒரு மின்னலைத் பாய்ச்சிட, சட்டென்று தர்மசங்கடத்துடன் அவள் திரும்பி கொண்டாலும் அவனது பார்வையினால் அவளது கன்னங்கள் சூடேறிச் சிவந்து போயின…
மெல்ல அடியெடுத்து வைத்து அவளை நெருங்கியவனோ, அவளுக்கு மிக அருகில் நிற்க, அவனது மூச்சுக்காற்று அவள் பின்னங்கழுத்தில் படர்ந்தது, அதனை உணர்ந்து விழிகளை மூடிக் கொண்ட மிருதுளா, அவனது கரம் மெல்ல அவளது கரத்தைத் தொட்டுப் பின் மேலேறவும், உடல் சிலிர்த்தவள்… “வீர்…” என்று தன்னையும் அறியாமல் மிக மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்…
அவளது அந்த அழைப்பிற்காக அவன் எவ்வளவு நாட்கள் ஏங்கிப் போயிருந்திருக்கிறான்! இப்போது தன்னுடைய நெருக்கத்தால் அவள் பலவீனமடைவதும், மெல்லத் தன்னிடம் கரைவதும் அவனுக்குள் பேரானந்தத்தையும் வெற்றி களிப்பையும் உண்டாக்கின….
இருப்பினும், அவர்கள் இருப்பது வெட்ட வெளி என்பதையும், யாராவது பார்த்துவிடக் கூடும் என்பதையும் உணர்ந்தவன், தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளை விட்டுச் சற்று விலகி,.. அருகிலிருந்த துண்டினால் அவளது நனைந்த தோள்களைச் சுற்றிப் போர்த்திவிட்டு, “போய் டிரஸ் மாத்திக்கோ…” என்று சொல்ல,.. அவனது குரலில் இருந்த அந்த அக்கறை அவளை நிகழ் காலத்திற்குத் தள்ளியது…
விழிகளைச் சட்டென்று திறந்தவள், அவன் பார்வை தன் மீது ஒருவிதத் தேடலோடு இருப்பதை உணர்ந்தாள், இதற்கு மேலும் அங்கு நின்றால், தன் பிடிவாதமும் கட்டுப்பாடும் மொத்தமாக சிதைந்துவிடும் என்பதை உணர்ந்தவள், அங்கிருந்து வீட்டை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினாள்…
ரன்வீர் தன் கரத்தினால் நனைந்த கேசத்தைப் பின் தள்ளியபடி, தன்னைத் திரும்பிப் பார்க்காமல் ஓடும் அவளது அழகையே ரசித்துக் கொண்டு நின்றான், அந்த மதிய நேரத்துச் சூரிய வெளிச்சத்தில், நனைந்த உடையில் அவள் ஓடும் காட்சி அவனது இதயத்தில் ஒரு ஓவியமாகப் பதிந்தது…
