Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 41

அத்தியாயம் – 41

 

“ஹேய் சம்யு, என்னாச்சுமா? ஏன் இப்படி அழற?” என்று பதட்டத்துடன் வினவினான் நிதின்… ​நிதினுக்கு போன் செய்த சம்யுவோ, விஷயம் என்னவென்று சொல்லாமலே தேம்பி தேம்பி அழுதுகொண்டிருக்க, பதறிப்போன நிதின், “ஏய் என்னடி ஆச்சு? இப்போ எங்க இருக்க? முதல்ல அதையாச்சும் சொல்லு,” என்று வினவிட,.. ​”நா… நான் வீட்ல தான் இருக்கேன்,” என்றாள் அவள் விம்மலுடன்.

​”வீட்டுலதானா?” என்று கேட்டுச் சற்றே நிம்மதி கொண்டவன், “சரி, அழாம விஷயம் என்னன்னு சொல்லு,” என்று வினவ,.. ​”அண்ணி பிரக்னன்சி கிட் செக் பண்ணப் போறதா சித்தி அம்மாகிட்ட ரொம்ப சந்தோஷமா பேசிட்டு இருந்தாங்க, அதை கேட்ட எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது, அண்ணிகிட்ட ரிசல்ட் என்னாச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்க அவங்க ரூமுக்கு போனேன், அப்போ அண்ணாவும் அண்ணியும் பயங்கரமா சண்டை போட்டுட்டு இருந்தாங்க,” என்று சம்யு சொல்ல, “அவங்க சண்டை போடலைன்னா தான் அதிசயம்,” என்றான் நிதின் சலிப்புடன்.



Advertisement

​”இல்ல நிதின், இப்போ நடந்த சண்டை சின்ன விஷயமா தெரியல,” என்று கூறி, ரன்வீர் மிருதுளாவிடம் கோபத்தில் பேசியது, அவர்களது பந்தம் முடிந்துவிட்டது என்று சொன்னது என அனைத்தையும் விவரித்தவள்… “அண்ணா… அண்ணியை விட்டு விலகிப் போகப் போறாராம்,” என்று கூறி அவள் மீண்டும் அழத் தொடங்க, நிதினுக்கு அப்போதுதான் விஷயத்தின் தீவிரம் புரிந்தது…

​விஷயம் விபரீதமாகி நிற்பதை உணர்ந்த நிதின், முதலில் தன் நண்பனிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தில், “நீ ஒன்னும் கவலைப்படாத, நான் ரன்வீர்கிட்ட பேசுறேன்,” என்று சம்யுவைச் சமாதானம் செய்துவிட்டு போனை வைக்க, அந்த நேரத்தில் சரியாக ரன்வீரும் வீட்டிற்குள் நுழைந்தான்.

நண்பனை கண்டு ​வேகமாக அவன் முன்னால் போய் நின்ற நிதின், “சம்யு போன் பண்ணி என்னென்னவோ சொல்றா… என்னடா நடக்குது?” என்று வினவ, ரன்வீரோ எந்த உணர்ச்சியும் இல்லாமல், “நான் இன்னைக்கே லண்டன் கிளம்புறேன்,” என்று கூற,
“லண்டனா? என்னடா விளையாடுறியா?” அதிர்ச்சியுடன் வினவியவன்,.. ​”சம்யு போன் பண்ணி அழுதப்பவே ஏதோ பெருசா நடந்திருக்குன்னு நினைச்சேன். ஆனா, நீ இப்படி ஒரு முடிவை எடுப்பேன்னு நான் எதிர்பார்க்கலடா. டேய்… மிருதுளா கர்ப்பமா இருக்கான்னு தெரிஞ்சும் எப்படிடா அவளை விட்டுட்டு கிளம்புற?” என்று நிதின் ஆவேசமாகக் கேட்டான்.

Advertisement

​ரன்வீரோ “கிளம்புறது தான் நிதின் சரி! அவளுக்கு நான் ஒரு கொலைகாரன், ஒரு பொறுக்கி. என் குழந்தை அவ வயித்துல வளர்றதே ஒரு கொடுமை’யாம்டா! தான் சுமக்கிற உயிர் உருவாகாமலே இருந்திருக்கலாம்னு ஒரு தாய் சொல்றான்னா, அவளுக்கு என் மேல எவ்வளவு வெறுப்பு இருக்கணும்?” என்று கரகரப்பான குரலில் கேட்க ​”அவ கோபத்துல சொல்றாடா…” என்று நிதின் இழுத்தான்..

Advertisement

​”இல்ல! இது கோபம் இல்ல நிதின், இது அவளோட ஆழமான நம்பிக்கை, என் காதலை அவ ஒரு நாடகமா பார்க்கிறா. நான் பக்கத்துல இருந்தா அவளுக்கு அருவருப்பா இருக்கும்போது, நான் எதுக்கு அவ முன்னாடி நிக்கணும்?  இதுக்கு மேல எவனாலயும் பொறுமையா இருக்க முடியாது, அவளும் இப்போ கன்சீவா இருக்கா, என் மூலமா அவளுக்கு எந்த வித மனஅழுத்தமும் வேண்டாம்னு நினைக்கிறேன்,” என்று விரக்தியுடன் கூறினான்.

​அவனது முடிவில் இருக்கும் உறுதியைக் கண்ட நிதின், “சரி… போயிட்டு எப்போ வருவ?” என்று மெல்ல வினவிட,.. ​”நான் வர்றத பத்தி இப்போதைக்கு யோசிக்கவே இல்ல,” என்று ரன்வீர் சொன்னதும் அதிர்ந்து போனவன்.. “டேய்… என்னடா விளையாடுறியா?” என்றான்…

​”டிக்கெட் புக் பண்ணிட்டேன். ஏற்கனவே போட்ட விசா எக்ஸ்பைரி ஆகாம தான் இருக்கு, இன்னைக்கு நைட்டே நான் கிளம்புறேன்,” என்று ரன்வீர் சொல்ல, நிதின் அவனது கையைப் பிடித்து.. ​”நீ போனா எல்லாம் சரியாகிடுமா ரன்வீர்? அந்த விஷ்வா கொலை செஞ்சிட்டு வெளிய நிம்மதியா நடமாடிக்கிட்டு இருக்கான், ஆனா நீ குடும்பத்தை எல்லாம் விட்டுட்டு இப்படிப் போகணுமா?” என்று ஆதங்கத்துடன் வினவினான்.

Advertisement

​”உண்மைதான்… கொலை பண்ணவன் நிம்மதியா சந்தோஷமா இருக்கான். ஆனா நான்…” என்று ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவன், “இதுக்கு மேல எனக்கு அதை பத்தி பேச விருப்பம் இல்லை,” என்று கூறிவிட்டுத் தன் அறையை நோக்கி நடக்க,.. ​”அம்மாவை பத்தி நினைச்சியா? அவங்கள என்ன சொல்லி சமாளிக்கப் போற? அவங்க உடைஞ்சு போயிடுவாங்கடா,” என்று நிதின் பின்னாடியே சென்று கத்த,..​”அம்மாகிட்ட இங்க வரும்போதே பேசிட்டு தான் வந்தேன்,” என்பதோடு சுருக்கமாக முடித்துக்கொண்டவன் அறையை நோக்கி நடந்து விட்டான்,…

“அண்ணி, இந்த வீட்ல என்னதான் நடக்குது? ரன்வீர் திடீர்னு லண்டன் போறேன்னு சொல்றான், நீங்க அவன்கிட்ட இதப்பத்திப் பேசினீங்களா?” என்று மிகுந்த கவலையுடன் சமுத்திரவேல் வினவிட, ​அதற்குக் காயத்ரி மிகவும் நிதானமாக, “பேசினேன் தம்பி… அவன் போகட்டும், விடுங்க,” என்று பதில் சொன்னார்.

​காயத்ரியின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சமுத்திரவேல், “என்ன அண்ணி இப்படி சொல்றீங்க? மருமக இப்போ கர்ப்பமா வேற இருக்கா, இந்த மாதிரி ஒரு விசேஷமான சமயத்துல அவன் அவசியம் போய் தான் ஆகணுமா?” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்திட,
​காயத்ரி ஒரு மெல்லிய பெருமூச்சுடன், “போறேன்னு சொல்லும் போது என்ன பண்ண சொல்றீங்க தம்பி? அவன் எங்க போனாலும் எப்படியும் இங்க தானே வந்தாகணும்? அவன் ஏதோ ஒரு பெரிய ஸ்ட்ரெஸ்ல இருக்கிற மாதிரி எனக்குத் தோணுது, புருஷன் பொண்டாட்டிக்குள்ள இருக்கிற பிரச்சனையும் இன்னும் தீர்ந்த மாதிரி தெரியல, இந்த தற்காலிகப் பிரிவு அவங்க ரெண்டு பேர் மனசுலயும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்கிறேன். இந்த இடைவெளி  அவங்களை ஒன்னு சேர்க்கும்னு நம்புவோம்,” என்று அவர் கூற, சமுத்திரவேலால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை…

அன்றைய இரவே ரன்வீர் லண்டனுக்குக் கிளம்பிவிட்டான், அவன் வீட்டை விட்டு வெளியேறிய அந்த நிமிடம் வரை மிருதுளா தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை, சுமதி தான் அவளுக்கு இரவு உணவைக் கொண்டு வந்து கொடுத்த்துவிட்டு, அவளது சோகமான முகத்தைப் பார்த்துவிட்டு, ஆறுதலாகச் சில வார்த்தைகள் பேசிவிட்டுச் சென்றார்.

அடுத்த நாளும் விடிந்தது. ஆனால், அன்று மதியம் வரை மிருதுளா தன் அறையை விட்டு வெளிவரவில்லை. ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, நேற்றைய நினைவுகள் அலை அலையாய் வந்து மோதிட, ‘​நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாதோ?’ என்று அவளது மனம்  நெருட ஆரம்பித்தது,..

​அவன் ஒரு கொலைகாரன் என்று தான் நம்பினாலும், தான் தந்தை ஆகப்போகிறோம் என்ற செய்தியை அவன் எவ்வளவு பரவசத்துடன் கேட்டான் என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள். அந்த பேரின்பமான தருணத்தில், அவன் முகத்தில் இருந்த அத்தனை சந்தோஷத்தையும் ஒரே வார்த்தையில் பிடுங்கி எறிந்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவளை வாட்டியது.

​’அவன் பொறுக்கியோ, கொலைகாரனோ… ஆனா இந்த குழந்தைக்கு அவன் தானே அப்பா? அவனிடம் இருந்து அவன் குழந்தையைப் பிரிக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?’ என்று யோசித்தவள் மனம் தான் தவறு செய்து விட்டோம் என்பது புரிந்து அதிக குற்றவுர்வாகி, ​அறைக்குள் இருந்த அமைதியும் அவளைக் கொல்லத் தொடங்கியது…

“ஏய் சம்யு, இப்போ எதுக்கு இப்படி ஒப்பாரி வச்சுகிட்டு இருக்க?” என்று சில நிமிடங்களாகவே அவளை சமாதானம் செய்ய முடியாமல் போராடிக் கொண்டிருந்தான் நிதின்…

​விக்கி விக்கி அவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தவளோ, “அண்ணனை ஏன் போக விட்டீங்க?” என்று அவன் மார்பில் ஆவேசமாக குத்தவும் வேறு செய்தாள்…

அவனோ… ​”நான் எங்கேடி போக விட்டேன்? அவனா தான் போனான், இப்படி குத்தி குத்தி என் இதயத்தை நிறுத்திடாத!” என்று நிதின் சொல்ல, அவளோ, “அண்ணா இனிமே வரவே மாட்டாரா?” என்று ஏக்கமாகக் கேட்டாள்.

​அவளது கண்ணீரைத் துடைத்து விட்டவன், “கண்டிப்பா வருவான், இப்போ மிருதுளா மேல கொஞ்சம் வருத்தத்துல இருக்கான், அதெல்லாம் சரியானதும் கண்டிப்பா வருவான்,” என்று நம்பிக்கை ஊட்டிட,.. ​”இல்ல பொய் சொல்றீங்க, நேத்து அண்ணிகிட்ட அண்ணன் வரவே மாட்டேங்கிற மாதிரி தான் பேசினார்,” என்று சம்யு கூற, “அது கோபத்துல சொன்ன வார்த்தையா இருக்கும் சம்யுக்தா, நீ ஏன் அதை பெருசா நினைக்கிற? சரி, மிருதுளா என்ன பண்ணுறா? அவகிட்ட பேசுனியா?” என்றான் நிதின்.

​”அண்ணி நேத்து அண்ணன் போனதுல இருந்து ரூமை விட்டு வெளியே வரவே இல்லை, எனக்கு அவங்க மேல கோபம், அதனால நானும் போய் பார்க்கல,” என்று சம்யு முகம் திருப்ப, “மிருதுளா மேல உனக்கு என்ன கோபம்?” என்றான் அவன்…

​”அண்ணி அண்ணாவை நம்ப மாட்டேங்கிறாங்கள்ல? அதனாலதானே அண்ணன் போனாரு? அந்த கோபம் தான் எனக்கு, பாவம் அண்ணா… எப்படித்தான் அண்ணாவை கொலைகாரன்னு நினைக்கிறாங்களோ தெரியல,” என்று அவள் சற்று கோபமாகவே கூறிட.. “நீ மிருதுளா பக்கம் இருக்கிற நியாயத்தையும் பார்க்கணும் சம்யு, அம்மா அப்பா போனதுக்கு அப்புறம் தாத்தா மட்டுமே உலகம்னு நினைச்சுட்டு இருந்த தருணத்துல, அவரும் போயிட்டா அவளுக்கு எப்படி இருக்கும்? அதுவும் இல்லாம, அன்னைக்கு ரன்வீர் அங்கே இருந்தது, அவ வந்தபோது கண்ட காட்சி… இது எல்லாம் தான் அவளைக் குழப்பி விட்டுடுச்சு. சத்தியமா சொல்றேன், அவ இடத்துல நான் இருந்தாலும் அப்படி தான் நினைச்சு இருப்பேன், நீயா இருந்தாலுமே அப்படித்தான் நினைப்ப, தயவு செஞ்சு மிருதுளா மேல கோபப்படாதம்மா,” என்று நிதின் எதார்த்தத்தை விளக்கிட, அவளும்… ​”சரி சரி… நான் கோபப்படல, எனக்கும் அண்ணினா ரொம்பப் பிடிக்கும்,” என்றவள், “அப்படின்னா அண்ணியோட தாத்தாவை அவங்க மாமா பையன் தானே கொலை செய்தான்னு சொல்றீங்க? அதை ஏன் அண்ணனும் நீங்களும் போலீஸ் கிட்ட சொல்லல?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்…

​”அதை அவன் தான் பண்ணான்னு வலுவான ஆதாரம் வேணும் சம்யு,” என்று நிதின் சொல்ல, “ஆதாரத்தைத் திரட்டலாமே!” என்றாள் அவள்..

​”எல்லா பக்கமும் ட்ரை பண்ணியாச்சு, ஒன்னும் கிடைக்கல,” என்று நிதின் சலிப்புடன் கூற,.. “அண்ணியோட தாத்தா வீட்ல தானே அவங்க தாத்தா கொலை செய்ய பட்டாரு, நாம வேணும்னா அண்ணியோட தாத்தா வீட்டுக்கு போய் பார்ப்போமா?” என்று சம்யு ஒரு யோசனையை முன்வைக்க, “அங்கே என்ன கிடைக்க போகுது?” என்றான் நிதின் நம்பிக்கையற்று.

​”சும்மா போய் பார்க்கலாமே? ஏதாச்சும் கிடைக்குதான்னு தேடிப் பார்ப்போம்,” என்று அவள் வற்புறுத்த, “அவன் கத்தியை வச்சு கொலை பண்ணி இருந்தாளாவது கத்தியாவது ஆதாரம் கிடைக்கும்னு சொல்லலாம், இப்போ அங்க போனா என்ன கிடைக்கப் போகுது?” என்று சலிப்புடன் சொன்னாலும், அவள் திரும்ப திரும்ப கூறவும், “சரி வா போவோம்,” என்று அவளது விருப்பத்திற்காக அரை மனதோடு  சம்மதிக்கவும் செய்தான்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!