ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 6
அத்தியாயம் – 6
தன் முன்னே திடீரெனத் தோன்றிய அந்த உருவத்தைக் கண்டதும் மிருதுளாவின் உள்ளங்கையில் இருந்த கத்தி நழுவித் தரையில் விழுந்தது. பயத்தில் அவளது தொண்டை வறண்டு போக, ‘ஐயோ’ என்று வீலென்று அலற வாயெடுத்தாள், ஆனால், அவளது சத்தம் அந்த இடத்தை தாண்டி வெளியே செல்வதற்குள், அந்த உருவத்தின் வலிமையான கரம் மின்னல் வேகத்தில் அவளது வாயை இறுகப் பற்றிட, அவளது மென்மையான உடல் அந்த உருவத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கிக் கொண்டது…
அடுத்த நொடியே, அவளை அப்படியே பின்னுக்குத் தள்ளி, அருகிலிருந்த அவளது அறைக்குள்ளேயே அவளை இழுத்துச் சென்றான் அந்த மர்ம மனிதன்…
Advertisement
மிருதுளா அவனது பிடியில் இருந்து விடுபடத் திமிறினாள், அவளது கால்கள் தரையில் உதைத்தன. ஆனால், அவனது பிடி ஒரு இரும்புக் கவசத்தைப் போல உறுதியாக இருந்தது, அவளை உள்ளே தள்ளியவன், ஒரு கையால் அவளது வாயைப் பொத்தியபடியே, மறு கையால் அறையின் கதவைச் சத்தமில்லாமல் தாழிட்டவன்
மெல்ல அவளது வாயிலிருந்து தனது கரத்தை மெல்ல விலக்கிட,
மிருதுளா பயத்தில் சுவரோரம் ஒடுங்கிப் போனாள், அவளது உடல் கட்டுக்கடங்காத நடுக்கத்தில் இருந்தது, மூச்சு வாங்கியபடி அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
அவன் தலை முதல் கால் வரை கறுப்பு நிற உடையில் இருந்தான். அவனது முகமும் கறுப்பு நிற மாஸ்க்கினால் மறைக்கப்பட்டிருந்தது, அவனது அடையாளத்தைச் சொல்ல அந்த அறையில் இருந்த மங்கலான வெளிச்சம் உதவவில்லை. ஆனால், அந்த மாஸ்க்கிற்கு பின்னால் தெரிந்த அவனது கண்கள்…
அவை அதே கண்கள்! சற்று முன்பு தோட்டத்தில் அவளை ஊடுருவிப் பார்த்த அதே தீர்க்கமான, வைரத்தைப் போல மின்னும் கண்கள். அந்தக் கண்களில் இப்போது ஒருவிதமான எச்சரிக்கையும், அதே சமயம் ஒரு மர்மமான அமைதியும் கலந்திருந்தது…
மிரளும் பார்வையில் அவனை அளவெடுத்தவள் நடுங்கும் குரலில், “யா… யார் நீ? திருடனா? இங்க எதுக்கு வந்திருக்க?” என்று கேட்டாள். அவளது குரல் அவளுக்கே கேட்காத அளவுக்கு மெல்லியதாக இருந்தது…
அந்த உருவம் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தது, அவன் பேசவில்லை, ஆனால் அவனது ஆளுமை அந்த அறையையே ஆக்கிரமித்திருந்தது, அவன் விஷ்வா அல்ல என்பது அவளது உள்ளுணர்விற்குத் தெரிந்தது. விஷ்வாவிடம் ஒரு கோழைத்தனம் இருக்கும், ஆனால் இவனிடம் ஒரு சிங்கத்தின் கம்பீரம் இருந்தது.
Advertisement
அவன் மெதுவாகத் தனது விரலைத் தனது உதட்டின் மீது வைத்து ‘சத்தம் போடாதே’ என்று சைகை செய்தான், அவனது அந்த ஒற்றைச் சைகையிலேயே ஒரு அதிகாரம் ஒளிந்திருந்தது…
Advertisement
மிருதுளாவின் இதயத் துடிப்பு அவளது காதுகளிலேயே இடியென முழங்கியது. “உ.. உனக்கு என்ன வேணும்?” என்று அவள் நடுங்கும் குரலில் வினவ, அந்த மர்ம மனிதனோ பதில் ஏதும் பேசாமல், மெதுவாகத் தனது நீண்ட கரத்தை அவளை நோக்கி நீட்டிட, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
பயத்தின் உச்சத்திற்க்கே சென்றவள் சுவரோடு ஒட்டிப் போனாள். ஆனால், அந்த இருளிலும் அவனது கண்கள் சுருங்கி விரிவதைக் கண்டாள். அவன் அவளது இந்த அதிர்ச்சியைக் கண்டு உள்ளுக்குள் சிரிக்கிறான் என்பதை அவனது கண்கள் அவளுக்குக் காட்டிக் கொடுத்தன…
அந்தக் கணம், அவளது பயம் சட்டென்று ஆத்திரமாக மாறியது. அவளுக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது என்று தெரியவில்லை! தன் முன்னே நின்றிருந்த அந்தப் பிரம்மாண்டமான உருவத்தின் விரிந்த நெஞ்சில் தனது இரு கரங்களையும் வைத்து பலமாகத் தள்ளினாள், இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்தத் தாக்குதலில் அவன் ஒரு அடி பின்வாங்க, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மிருதுளா, அருகில் இருந்த கனமான பிளவர் வாஷை கையில் எடுத்து, ஆக்ரோஷமாக அவனை நோக்கி வீசிட, ஆனால், அவனது வேகம் மின்னலை விடக் கூர்மையாக இருந்தது.
Advertisement
காற்றில் பறந்து வந்த அந்தப் பிளவர் வாஷை, மிக லாவகமாகத் தனது ஒற்றைக் கையால் பற்றிப் பிடித்தவன், ஒரு துளிக் கூட சத்தம் வராமல், அவளைப் பார்த்தபடியே மெதுவாக அருகில் இருந்த மேஜையில் அதனை வைத்தான்…
அவளது துணிச்சலைக் கண்டு வியந்து போனவன் ஒரு கணம் சிலையாக நின்று அவளைப் பார்த்தான், அவன் அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவனது விழிகளில் தெரிந்த வியப்பில் புரிந்தது.
அவன் தனது மாஸ்க்கை கழற்றவில்லை. முகம் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தாலும், அந்த முகமூடிக்கு பின்னால் இருந்து வெளிப்பட்ட அவனது குரல்… ஒரு நள்ளிரவு தென்றலைப் போல மென்மையாகவும், அதே சமயம் ஒரு சிங்கத்தின் கர்ஜனையைப் போல கம்பீரமாகவும் இருந்தது.
”நாட் பேட்… பயத்துல உறைஞ்சு போயிருவேன்னு நினைச்சேன், ஆனா, திருப்பி அடிக்கிற அளவுக்கு உன்கிட்ட தைரியம் இருக்கு!” அவனது அந்தப் பாராட்டு கலந்த பேச்சு, மிருதுளாவை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
ஒரு திருடன் இவ்வளவு நிதானமாக, இவ்வளவு மிடுக்கான குரலில் பேசுவானா? அவனது குரலில் இருந்த அந்த வசீகரம் அவளது கோபத்தை ஒரு நிமிடம் தடுத்து நிறுத்தியது…
அவன் மீண்டும் ஒரு அடி அவளை நோக்கி எடுத்து வைக்க, இம்முறை அவள் பின்வாங்கவில்லை, துணிச்சலுடன் அவனை ஏறிட்டவள்.. ”யார் நீ? எதுக்காக இங்க வந்திருக்க? ஒழுங்கா வந்த வழியே போயிடு, இல்லைனா இப்போவே சத்தம் போடுவேன்…” என்று அவள் மிரட்டலாகச் சொல்ல, அவனோ மெல்லத் தலைசாய்த்து அவளைப் பார்த்து.. ”சத்தம் போடு… ஆனா இப்போதைக்கு இங்கே யாரும் வர மாட்டாங்க” என்று சொன்னவன்,.. அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு… “உன்னோட இந்த தைரியம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, இதே தைரியத்தோட எப்பவும் இரு,” என்றான்.
அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது, அவளது பயத்தை ரசிப்பது போலவும், அதே சமயம் அவளது துணிச்சலை அங்கீகரிப்பது போலவும் அவனது பேச்சு அமைந்திருந்தது, ஜன்னல் வழியாக ஊடுருவிய நிலவொளியில் அவனது கண்கள் மட்டும் வைரமாய் மின்னின..
“தேவை இல்லாத பேச்செல்லாம் வேண்டாம், எதுக்கு இங்க வந்த? திருடனா நீ?” அவள் கோபமாக வினவ… அவன் ஒரு கணம் அமைதியானான், அவனது அந்த கண்கள் இமைக்காமல் அவளையே உற்றுப் பார்த்தன, பின் மெல்லிய, கம்பீரமான குரலில், “ம்ம்… திருடத் தான் வந்தேன், பட் இப்போ மைண்ட் சேஞ்ச் ஆயிடுச்சு…” என்றான்…
மிருதுளா குழப்பத்துடன் அவனைப் பார்க்க, அவனோ… “முதல்ல இந்த வீட்டுல இருக்கிற எனக்கு தேவையான பொருளைத் திருடலாம்னு தான் வந்தேன், ஆனா, இப்போ அதை விட விலையுயர்ந்த ஒன்னு இங்கே இருக்கிறதா தோணுது…” என்று கூறி அவளது விழிகளை ஆழமாக ஊடுருவினான்…
அவன் எதை சொல்கிறான் என்பது புரியாமல் அவளது இதயம் மீண்டும் ஒருமுறை தாறுமாறாகத் துடித்தது. “வளவளன்னு பேசாம இப்போவே இங்கிருந்து கிளம்பு, இல்லைன்னா…” என்று அவள் எச்சரிக்கையோடு ஜன்னலை நோக்கிட,.. ”இல்லைன்னா என்ன பண்ணுவ? மறுபடியும் பிளவர் வாஷை வீசுவியா?” என்று அவன் கிண்டலாகக் கேட்க, அவனது கண்களில் ஒரு சிறு புன்னகை மின்னியது அவளுக்குத் தெரிந்தது.
“உன்னை பார்த்தா திருட வந்த மாதிரி தெரியல, இப்போ கிளம்பலனா கண்டிப்பா சத்தம் போடுவேன்” அவள் கத்த.,.. “கிளம்புறேன்… ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ மிருதுளா, திருடன் உள்ள வர்றதுக்கு முன்னாடி தான் பயப்படுவான், ஆனா நான் இப்போ பயமில்லாம உள்ள வந்துட்டேன், இனிமே இந்தத் திருடன் எப்போ வேணும்னாலும் வருவான்… உன்னோட அமைதியைக் கூடத் திருடலாம், ஜாக்கிரதை!” அவன் அவள் பெயரை சொன்ன விதம் அவளுக்குள் ஒரு மின்சாரப் பாய்ச்சலை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவன் தனது கரத்தை உயர்த்தி ஒரு சல்யூட் அடிப்பது போல சைகை செய்துவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் பால்கனி வழியாக வெளியே குதித்து மறைந்தான்.
மிருதுளா அப்படியே திகைத்து நின்றாள், அந்த மர்ம மனிதன் யார்? அவளுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இப்படி இருக்க வாய்ப்பில்லையே, அவன் விஷ்வாவைப் போல வக்கிரமாகப் பேசவில்லை, மாறாக ஒரு உரிமையோடு பேசியது அவளுக்குப் பெரும் விந்தையாக இருந்தது…
மறுபக்கம், அந்தத் தோட்டத்தின் இருளில் மறைந்த அந்த உருவம் மெல்லத் தனது மாஸ்க்கைக் கழற்றியது, நிலவொளியில் ரன்வீரின் முகம் தீர்க்கமாகத் தெரிய, அவனது இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
’மிருதுளா… உன்னோட கோபத்துல கூட ஒரு அழகு இருக்கு, எப்படி இத்தனை நாளா உன்னை மிஸ் பண்ணேன்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவள் வீட்டை விட்டு சாமர்த்தியமாக வெளியேறினான்…
தூரத்தில் காரில் அவனுக்காக தான் காத்திருந்தான் நிதின், காரை நோக்கி வந்தவன் தான் அணிந்திருந்த மாஸ்க்கைக் கழற்றிவிட்டு காரில் ஏறியபோது, டிரைவர் சீட்டில் காத்திருந்த நிதின் ஆர்வம் தாங்காமல் “போன வேலை என்னாச்சு?” என்று மிகுந்த ஆர்வத்துடன் வினவினான்…
அவனோ உதட்டைப் பிதுக்கிவிட்டு… “நாளைக்கு பார்த்துக்கலாம்,” என்றான் சுருக்கமாக…
”எது நாளைக்கா?” அதிர்ச்சியில் குரலை உயர்த்தியவனோ.. “ஹேய்! நீ இப்படித் திருடன் மாதிரி வேஷம் போட்டுப் போறதே எனக்குப் பிடிக்கலடா, நாம ‘ம்ம்’னு ஒரு வார்த்தை சொன்னா, இந்த வேலையை முடிக்க ஆயிரம் பேர் வருவாங்க, ஆனா நீ என்னடான்னா நீயே நேரடியா களத்துல இறங்கி, மதில் ஏறி குதிச்சுப் போயிருக்க?” என்றான் ஆதங்கத்துடன்…
ரன்வீரோ மெல்ல சிரித்தான், அந்த சிரிப்பில் ஒரு ரகசியம் ஒளிந்திருந்தது, உண்மையில் அந்தப் பொருளை விட, அது இருக்கும் இடம் மிருதுளாவின் வீடு என்பதுதான் அவனை அங்கே செல்ல தூண்டியது, மற்ற எவரையாவது அனுப்பினால் அவளை பார்க்கும் சந்தர்ப்பம் அமையாதே, அந்த காரணம் தான் அவனை இந்தத் துணிகரமான முடிவை எடுக்க வைத்தது…
”ஆயிரம் பேர் வருவாங்க டியுட்… ஆனா அவங்களால அந்தப் பொருளை மட்டும் தான் எடுக்க முடியும், எனக்கு அந்தப் பொருளோட சேர்த்து, அந்த வீட்டோட நிலவரமும் தெரியணும். அதான் நானே போனேன்,” என்றான் சமாளிப்பாக…
“எல்லாம் சரி, ஒரு வேலையில இறங்கிட்டா அதை முடிக்காம வர மாட்டியே, இன்னைக்கு எப்படி மிஸ் ஆச்சு, அந்த ஃபைல் இருக்க இடத்துக்கு உன்னால போக முடியலையா?” நிதின் வினவ,.
”நான் அதை எடுக்க ட்ரை பண்ணல, ஆனா அதை விட சுவாரஸ்யமான ஒன்னு இன்னைக்கு எனக்குக் கிடைச்சிருக்கு, அது தான் அந்தப் பொண்ணோட தைரியம்!” என்று ரன்வீர் சொல்ல, நிதின் புரியாமல் தலையைச் சொறிந்தான்.
”என்னடா தத்துவம்லாம் பேசிட்டு இருக்க எனக்கு ஒன்னும் புரியல” என்றவன் எதுவும் புரியாமலேயே வண்டியை சாலையை பார்த்து செலுத்தினான்,…
**********
மிருதுளாவின் அன்றைய காலைப் பொழுது ஒருவிதமான தவிப்புடனேயே விடிந்தது, இரவு முழுவதும் தூக்கமில்லாத கண்கள் லேசாக எரிச்சலூட்டின, காபியைக் குடித்துக் கொண்டே தோட்டத்தைப் பார்த்தவளுக்கு, நேற்று அந்த மர்ம மனிதன் நின்றிருந்த இடமும், அவனது அந்த லேசர் கண்களும் தான் மீண்டும் மீண்டும் நினைவிற்க்கு வந்தன…
யார் அவன்? எதற்காக இந்த நள்ளிரவில் தன் அறைக்குள்ளேயே நுழைய வேண்டும்? அவன் சொன்னது போலத் திருடத்தான் வந்தானா? ஆனால், ஒரு திருடனிடம் இருக்கும் பதற்றமோ அல்லது வக்கிரமோ அவனிடம் இல்லையே! மாறாக, ஒருவிதமான கம்பீரம்… ஒரு பாதுகாப்பு உணர்வு அவனது குரலில் இருந்ததை அவளால் மறுக்க முடியவில்லை…
’ஏதோ திருட வந்தேன்னு சொன்னான்… ஆனா மைண்ட் சேஞ்ச் ஆயிடுச்சுன்னு ஏன் சொன்னான்? என்கிட்ட பேசுன அந்த விதம்… அது திருடன் பேசுற மாதிரியே இல்லையே’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டவள் தாத்தாவிடம் அந்த திருடனை பற்றி சொல்லலாமா என்று யோசித்தாள்,..
காலை உணவிற்காக மேஜையில் தாத்தா அமர்ந்திருந்தபோது, அவரிடம் இதைச் சொல்ல அவளது நா துடித்தது. ஆனால், ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவளைத் தடுக்க, அவளால் சொல்ல இயலவில்லை…
அவன் அவளை மிரட்டியிருந்தால் அல்லது காயப்படுத்தியிருந்தால் இந்நேரம் போலீஸில் புகார் கொடுத்திருப்பாள், ஆனால் அவன் அவளைப் பாராட்டிவிட்டல்லவா சென்றிருக்கிறான், தன்னை ஒரு திருடன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவனைப் பற்றி, ஏன் தான் யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறோம் என்பது அவளுக்கே ஒரு புதிராக தான் இருந்தது.
வெகுநேரம் இதனை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவள், தனது குழப்பமான மனநிலையை மாற்றிக்கொள்ள எண்ணி மெல்ல நடந்து தாத்தா வீரமாணிக்கத்தின் அறைக்குச் சென்றாள், அவர் வெளிவராத நேரத்தில் அவள் செல்வது தானே வழக்கம்…
பேத்தியை கண்டதும் இன்முகத்துடன் வரவேற்றவர் அவளோடு பொது உலக பேச்சிகளை பற்றி கதைக்க தொடங்கினார், சிறிது நேரப் பேச்சுக்குப் பிறகு, வீரமாணிக்கம் ஏதோ யோசனை வந்தவராக மெல்ல… ”உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னே இருந்தேன்மா, எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ஒரு பார்ட்டிக்கு இன்வைட் பண்ணி இருக்காரு, நான் அவர்கிட்ட எவ்வளவோ சொன்னேன்… எனக்கு வயசாயிடுச்சு, நான் இந்த மாதிரி விழாக்களுக்கெல்லாம் போய் ரொம்ப வருஷம் ஆச்சுன்னு. ஆனா, அவர் கேட்கவே மாட்டேங்குறாரு, ரொம்பப் பாசத்தோட வற்புறுத்துனாரு, என்னால அவரோட அன்பை மறுக்க முடியல, அதனால சரி வரேன்னு சொல்லிட்டேன்… நீயும் என்கூட வரியாமா?” என்று வினவிட,
மிருதுளா ஒரு கணம் யோசித்தாள்.
அவளது பெற்றோரின் மறைவிற்குப் பிறகு, இரைச்சலான இடங்களையும் கூட்டத்தையும் அவள் தவிர்த்தே வந்தாள், ஆனால், தன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் தாத்தா, ஒருவருக்காக இவ்வளவு தூரம் இறங்கி வருகிறார் என்றால், அந்த நபர் அவருக்கு மிக நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்று எண்ணி..
”கண்டிப்பா வரேன் தாத்தா” என்றாள் மெல்லிய புன்னகையுடன்…
