Skip to content
Post Views: 1,835
நதி 13
அமைதியான கார் பயணம்.. தீனாவின் கை கோர்த்து அவனின் சரி பாதியாய் அவனருகே.
Advertisement
கற்பனையாய் பல முறை நினைத்த தருணம் இப்போது நிஜமாய்.
யமுனா தீனாவின் கையை லேசாக கிள்ள, “ஷ்..” என அவன் மென்குரலில் சொன்னதோடு அவளை முறைப்பாய் பார்த்திருந்தான் வேறு வழியின்றி.
Advertisement
Advertisement
இது முதல் முறையோ அல்லது மறுமுறையோ அல்ல. அவளுக்கு இது நிஜமா..? என சந்தேகம் எழும் போதெல்லாம் இதை செய்தால் பாவம் அவனும் என்ன செய்வான்..?
முகத்தின் வீக்கம் குறைய மெடிக்கலில் வாங்கி கொடுத்த மருந்தை தடவி விட்டு, கூல் வாட்டர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுத்து கொண்டு வருபவள் தீடிரென செய்யும் இந்த செய்கையில் திண்டாடி போனது தீனா தான்.
Advertisement
முன் இருக்கையில் ட்ரைவரோடு தங்கமணி இருக்க நடுவில் இவர்களோடு ஜெயசீலன்.
இதில் இவள் செய்யும் சேட்டைக்கு பதில் கொடுக்க கை துறுதுறுத்தாலும், அருகே அமர்ந்திருப்பவரை மனதில் கொண்டு அவனும் பொறுத்து போக, அதுவே அவளுக்கு வசதியாக போனதோ என்னவோ..?!
பெற்றவர்களின் பிரிவில் தவித்தவளை சரிகட்டி வெளியே அழைத்து வந்த போது, தங்கமணி பேசியதாலோ என்னவோ.. மரகதம் மட்டும் யமுனாவின் உடை பெட்டியோடு இவளருகே வந்தவர்,
“நீயா தேர்ந்தெடுத்த வாழ்க்கை. எந்த சூழ்நிலையிலையும் எங்களுக்கோ கட்டுனவருக்கோ தலை குனிவு வர்ற படி நடந்துக்காதே..” என்று கறாராய் சொல்வது போல இருந்தாலும் தாயாய் மகளை பிரியும் வலியும் அதில் எஞ்சி நின்றது.
தாய் வந்து பேசியதே இப்போதைக்கு போதும்.. என்ற நிம்மதியோடு தலையசைத்து காரில் ஏறியவளை கண்டு, கிருஷ்ணா கங்கா இருவருக்கும் பிரிவு வருத்தத்தை விட நல்லவரிடம் அக்கா செல்கிறாள் என்ற நிம்மதி இருக்க சந்தோஷமாகவே கையசைத்து விடை கொடுத்தனர்.
அதிலிருந்து புன்னகை முகமாய் வந்தவளின் சேட்டையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் தீனா.
மெல்ல அவளின் காதோரம் குனிந்து, “அடியேய் பாப்பா.. கவுண்ட் பண்ணிட்டு தான் இருக்கேன். தனியா சிக்கும் போது நீ என்ன ஆகுறேன்னு பாரு..” என மிரட்டி கூட பார்த்து விட்டான்.
‘அப்படியா..?’ என்ற ஒரு பார்வையும், ‘அதுக்கெல்லாம் நீ சரிபட்டு வருவீயா..?!’ என்ற கிண்டலை விழி வழிகாட்டி அவனை பார்ப்பவளை,
இப்போதே எதாவது செய்ய அத்தனை உத்வேகம் அவனுள் பிரவாகம் கொண்டாலும் தன்னை சிரமப்பட்டு கட்டுப்படுத்தியபடி வந்தான்.
மதிய உணவுக்கு என ஓரிடத்தில் இறங்கி ஏறிய பின், அதிகாலையிலேயே எழுந்து வந்திருந்த காரணத்தால் ஜெயசீலன் தூங்குவதற்கு வசதியாய் இருக்கட்டும்.. என பின் இருக்கைக்கு சென்றுவிட இப்போது நடுவில் இருந்த இருக்கையில் இவர்கள் இருவர் மட்டுமே.
தங்கமணியும் கூட லேசான உறக்கத்தை தழுவியிருந்தார் பயணம் மீண்டும் தொடங்கிய சிறிது நேரத்தில்.
யமுனா இம்முறை வெளியே வேடிக்கை பார்த்தபடி இலகுவாக அமர்ந்திருக்க, “பாப்பா, அந்த தண்ணி பாட்டில எடு..” என மற்றவரை உசுப்பாத குரலில் அவன் சொன்னதும்,
தனது காலுக்கு அடியில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து கொண்டு நிமிர்ந்தவள் அதிர்ந்து விழி விரித்தாள் தீனாவின் செய்கையில்.
அதே அதிர்வு தீராமல் அவனின் முகம் பார்க்க கள்ளச்சிரிப்போடு கீழ் உதட்டை பற்களால் கடித்தபடி எதுவும் தெரியாதது போல முன்புறம் பார்த்தபடி அமர்ந்திருந்தான் அந்த கள்வன்.
அவளின் அந்த அதிர்ந்த தோற்றம் இன்னும் அவனை குதூகலமாக்க அவனின் கைகள் அதன் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தது.
அவனின் செய்கையில் நெளிய தொடங்கியவளை தன் மற்றொரு கரத்தாலேயே அடக்கி அவளை சீண்டும் வேலையை தொடர அவனை அடக்கும் வழி தெரியாது விழித்தாள் யமுனா.
“கண்ணழகா.. ப்ளீஸ்..” என விழியால் யாசித்தவளை கண்டு விடச்சொல்லி மனம் சொன்ன போதும்,
அவளின் நெருக்கத்தை விரும்பும் உடலை அடக்க அவனாலும் இயலாத நிலையில் அல்லவா அவனும் சிக்கிக்கொண்டிருந்தான்.
அணைப்போடு இருமுறை சேர்ந்து விலகி நின்ற போதிலும் இது போன்ற ஸ்பரிச பரிச்சயம் இன்றே முதல் முறை. அதிலும் கூடுதலாய் உண்டான உரிமை உணர்வு வேறு.
விளையாட்டாய் தொடங்கி இப்போது அவளை விட்டு நீங்க முடியாத சுழலில் இழுபட்டு கொண்டு சென்றவனை தடுக்கவும் முடியாது.. தவிர்க்கவும் முடியாது.. தத்தளித்தாள் பாவை.
அவளின் அத்தகைய தவிப்பும் அவனை மேலும் தூண்டவே செய்ய, அவளின் இடை பதிந்த கரம் மெல்ல அழுத்தத்தோடு அவளை அவனோடு இறுக்க வைத்தது.
இருவருக்கும் பெரும் அவஸ்த்தை கொடுத்த கணங்களின் கனத்தை குறைக்கவே ட்ரைவர் வண்டியை நிறுத்தியிருந்தார் போலும்.
அவருக்கு முன் அவசரமாய் இறங்கி தனியே தள்ளி போய் நின்றிருந்தான் தீனா.
“ஏம்ப்பா.. நீயும் டீ குடிக்கனுமா..? எல்லாரும் தூங்கறாங்க.. நானும் அசந்துட கூடாதில்ல.. அதான்..” என சிறு புன்னகையோடு ட்ரைவர் சொல்லிக்கொண்டே டீக்கு ஆர்டர் கொடுக்க போக,
அவளின் அருகாமை நீங்கியதும் மெல்ல சமன்படத்தொடங்கியிருந்த உணர்வு அலை அவரின் பேச்சில் சுத்தமாக அடங்கிபோயிருக்க,
“இல்லங்க ண்ணே உங்களுக்கு வாங்கறதுக்கு காசு கொடுக்க தான் இறங்கினேன்..” என சொன்னபடி அவர் குடித்து முடித்ததும் காசை கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி முகத்தை அடித்து கழுவி விட்டு வந்து காரில் ஏறினான்.
இம்முறை கார் கதவோடு ஒன்றிப்போய் தலை குனிந்து அமர்ந்திருந்தவளை கண்டு, ‘வாய் மட்டும் தான்.. கொஞ்சம் சீண்டுனா.. ஆளப்பாரு எப்படி சுருண்டுக்கிச்சுன்னு..’ என நினைத்தவனும் அமைதியாகவே மறுபுறம் அமர்ந்துகொண்டான் சமத்தாக.
மீண்டும் இது போன்ற அரைகுறை தழுவலை அவன் எதிர்கொள்ள விரும்பவில்லை.
முற்றும் முழுதாய் அவளை, அவளாக அறியும் ஆசை இருக்க அதனை மனதோடு அழுத்தமாய் பதிய வைத்து அமைதியாய் மீதமுள்ள பயணத்தை தொடர்ந்தான்.
அவனின் இப்போதைய இந்த ஒதுக்கம் அவளை கொஞ்சம் ஆசுவாசப்பட வைத்திருக்க, மெதுவாக அவளும் தன்னை நிலைப்படுத்தி கொள்ள.. அது அவளின் உடலில் தளர்வில் புரிந்து கொண்டவனுக்குள் மென்னகை ஒன்று உருவாகி மறைந்தது.
அங்கிருந்து கிளம்பும் முன்னமே வாணிக்கு அழைத்து விசயத்தை தீனா சொல்லியிருக்க அத்தனை மகிழ்ச்சி அந்த சகோதரிக்கு.
“டேய் நிஜமாவாடா..?!” என ஆனந்த ஆர்ப்பரிப்போடு திரும்பவும் கேட்டதே அவள் கொண்ட பேரூவகை வெளிப்படுத்துவதாய்.
“ஏன்டா.. கிளம்பறப்ப விசயத்த சொல்லியிருந்தா நானும் மாமாவும் வந்திருப்போமே..?” என, ‘தன் தம்பியின் திருமணத்தை காண முடியவில்லையே..!’ என்ற ஏக்கத்தோடு வாணி கேட்க,
“அக்கா, நா மணி அண்ணாகிட்ட பேசும் போது யமுனா வீட்டுல பேசி அந்த கல்யாணத்த நிறுத்திட்டு எனக்கு பொண்ணு கேட்கறது தான் முடிவா இருந்துச்சு.
அதனால தான் அருந்ததி அண்ணி கூட அவரோட வரல.
அங்கே போனதும் அந்த இன்ஸ்பெக்டர் தான் கையோட கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போயிடுங்கன்னு மணி அண்ணங்கிட்ட தனியா அழச்சு சொல்லிட்டாரு.
வேற வழியில்லாம அவசரமா செய்ய வேண்டி ஆகிடுச்சுக்கா.. எனக்கும் நீ இல்லாம செஞ்சது வருத்தம் தான். என்ன செய்ய..?” என தீனாவும் வருந்த,
அதை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பாசக்கார தமக்கை, “விட்றா.. எப்புடியோ என்னோட ரொம்ப நாளு கவல தீந்துச்சே அதே போதும்..” என்றவள்,
“நீங்க கிளம்பியிச்சா..? எப்போ வருவீங்க..?” என்றாள் ஆசையாய்.
“இப்போ கிளம்பிடுவோம். ஈவினிங் அங்கே ரீச் ஆகிடுவோமுன்னு நினைக்கிறேன்..” என சொல்லியிருந்தான்.
சகுந்தலாவிற்கு அழைத்த ஜெயசீலனும் விசயத்தை சொல்ல, “பொண்ணு கேட்க போறதா தானே போனீக..? அப்புறே யாருமே நம்ம பக்கமில்லாத கண்ணாலமே முடுஞ்சு போச்சுன்னா என்னங்க அர்த்தோ..?
இதுக்கு நீங்களு அமைதியா இருந்தீகளோ..? வாரவங்க கேட்டா என்னத்த சொல்ல..?” என சகுந்தலா புலம்ப,
“அட நீ வேற.. அந்த புள்ள வூட்டுல இவுக விசயம் தெரிஞ்சு கண்ணால ஏற்பாடு பண்ணியிருக்காங்க.
அத யாரோ இவெனுக்கு போன போட்டு சொல்லி, அப்புறமேட்டுக்கு தா இவெ எங்கள கூட்டிட்டே போயிருக்கான்.
அதுவே அங்கன போயித்தா எனக்கு தெரிஞ்சுது. அதோட போலீஸ வேற அவெ மொதலாளி வரவச்சுட்டாப்பல.
அந்த ஆளுதே இப்பவே கண்ணாலத்த பண்ணியாகனுமுன்னு பண்ணியும் வச்சிட்டான். என்னைய என்னத்த பண்ண சொல்றே..?
ஏற்கனவே நம்மள சீந்தமாட்டான். நம்மளா நமக்கு தேவங்கறத கேட்டு கேட்டு வாங்கோனும்.
இப்போ பொண்டாட்டின்னு.. அதுவும் அவன மயக்கி வேற கட்டிக்கிட்டிருக்கா. இனி இவென நம்ம கைக்குள்ள வைக்க என்ன செய்யன்னு நானே யோசனயில கிடக்கேன்.. நீ வேற புலம்பிட்டே கிடக்கே.
எனக்கு வார கோவத்துக்கு எதையாச்சும் கேக்கோனுமுன்னு போலதே இருக்கு.. ஆனா என்ன செய்ய..
அந்த மொதலாளி பய வேற முன்னுக்கு நின்னு அதட்டுறானே.. அத பொறுமையா இருக்கேன்.
இன்னும் சித்த நேரத்துல இங்க இருந்து கெளம்பிருவோம். நீ அங்கன இருக்கற பங்காளிங்களுக்கு விசயத்த சொல்லி வரச்சொல்லு..” என்றார் கடுப்பாய்.
“எதுக்குங்கறேன்..? வர்றவன் போறவனெல்லாம் என்ன ஏதுன்னு என்னைய கொடையவா..? அதெல்லா நீங்களே வந்து பாத்துக்கிடுங்க..” என அவர் நழுவிக்கொள்ள,
‘இவள..’ என மானசீகமாக சில கெட்ட வார்த்தையால் அபிஷேகம் செய்தவர்,
“நீ ஒண்ணத்தையும் கிழிக்க வேணா.. நா பாத்துக்கிறேன்..” என்றுவிட்டு,
சக்திக்கு அழைத்து விசயத்தை சொன்னவர், “கொஞ்சோ பாத்து பண்ணிடு சக்தி..” என்றிருந்தார் எதையோ எண்ணி செயல்படுத்தும் விதத்தை யோசித்தவராய்.
அதே நேரம் வாணியிடம் தீனாவும் சொல்ல இருவரும் சேர்ந்தே மற்ற ஏற்பாட்டை செய்ய விரைந்தனர் தீனாவின் வீட்டிற்கு.
error: Content is protected !!