Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 13.2

மாலை மயங்கி சூரியன் தன் ஆதிக்கத்தை பூமி மீதிருந்து தளர்த்திய நேரம் தங்கமணியின் கார் தீனாவின் வீட்டின் முன் வந்து நின்றது.
நீண்ட தூர பயணம் தந்த களைப்பையும் தாண்டி புது மணமக்களுக்கே உண்டான ஒருவித பொழிவோடு வந்து நின்றவர்களை கண்களால் ஆசையாய் வருடி அன்பாக ஆரத்தி சுற்றி வரவேற்றாள் வாணி.


Advertisement

அவளின் நீண்ட நாள் கனவு ஆயிற்றே இது. 

Advertisement

வாணியின் இயல்பால் வந்த உடனேயே அவளிடம் ஒட்டிக்கொண்டாள் யமுனா.

Advertisement

பாலமுரளியிடம் தீனா அவனின் புதிய அத்தையாய் யமுனாவை அறிமுகம் செய்து வைக்க, 

Advertisement

புதிதாக வந்த அத்தை மீதெழுந்த வெக்கம் கலந்த புன்னகையோடு அவளை தீனாவின் மார்பில் மறைந்து கொண்டு ஓரக்கண்ணால் பார்த்திருந்தான் குழந்தை. 
அவனின் வெக்கத்தில் யமுனாவிற்கு அத்தனை சிரிப்பு.‌ அதிலும் அவனின் செய்கை அத்தனை அழகு.
வந்திருந்த முக்கிய உறவுகளும், “பரவால்ல.. புள்ள அம்சமாத்தா இருக்கு. அதேன் நம்ம பைய மயங்கிட்டானோட்டிருக்கு..” என கேலி செய்ய,
வெக்கம் கொண்ட அழகிய புன்னகையோடு அந்த வீட்டில் முதலடியை எடுத்து வைத்திருந்தாள் யமுனா தீனதயாளனின் கரம் கோர்த்து.
அவளின் பிள்ளை முகமும், அழகான புன்னகையும் அங்கிருந்த அத்தனை பேரையும் வசீகரித்தது என்றே சொல்லலாம்.
தீனாவின் திடீர் திருமணம்.. என்ற குறை தவிர மற்ற விசயத்தில் அத்தனை பேருக்கும் நிறைவே.
சாமி மாடத்தில் தீபமேற்றி முடித்ததும் தம்பதிகள் இருவரையும் அமர வைத்து பால் பழம் கொடுக்க.. தங்களையே பார்த்திருந்த குழந்தைக்கும் அவள் ஊட்டிவிட்டு பின் அவள் உண்ண வாணிக்கு நிறைந்து போனது மனது.
யமுனாவின் இயல்பை முற்றாய் உணர்ந்தவனாயிற்றே தீனா. 
அதை மீண்டும் மெய்ப்பித்தவளை அள்ளிக்கொள்ளும் நேரத்தில் இதற்கும் சேர்ந்து அச்சாரமிட ஆசையாய் காத்திருந்தான்..(?!!)
யமுனாவின் செய்கையை பார்த்த வாணிக்கோ, ‘இனி தன் தம்பியை அவன் மனைவி பார்த்துக்கொள்வாள்..’ என்ற நிறைவும், 
‘இது அவன் ஆசை பட்ட வாழ்க்கை.. அவன் மீது காதல் கொண்டு அவனுக்காக வந்தவள்..’ என்ற காரணங்களோடு, 
அவளின் இந்த குணமும் சேர்ந்து இன்னும் அதை வலுவாக்க யமுனாவை ஆனந்தமாகவே அரவணைத்து கொண்டாள்.
சொந்தத்தில் ஒருவர், “ஏன்டா ஜெவதீஷா.. உன்ற அண்ணா அண்ணிகிட்ட பேசாத அங்கன தனியா உக்காந்து என்னத்த செய்யிறே..?” என ஜெயசீலன், சகுந்தலாவின் மகனான பன்னிரண்டு வயது ஜெகதீஷை அழைக்க, அவனோ சகுந்தலாவின் முகத்தை தான் பார்த்தான். 
அவர் விழியில் இருந்த மறுப்பில், “இல்ல.. நா வரல..” என்றுவிட்டு வெளியே ஓடிவிட, 
“இவன என்னன்னு சேத்தி..” என புலம்பிக்கொண்டே மற்ற வேலையை பார்க்க சென்றாள் வாணி.
அவன் செய்கையை யோசனையோடு பார்த்திருந்த யமுனாவும் வாணியிடம் சென்று அவனை பற்றி கேட்க,
“நீ வேற யமுனா.. அவன் என்ற புள்ளகிட்டயே ஒட்ட மாட்டான். 
இதுக்கு பாலா இப்ப தானே ஸ்கூலுக்கு போறான். அதுக்கு முன்னே இங்க அடிக்கடி பாப்பான் தானே..?! ஆனாலும் அவனோட விளையாடாம அமைதியா சித்தி பக்கத்தில உக்காந்துப்பான்.
சித்தி சொன்னாத்தா எதுவுஞ்செய்வான். அவன அப்படியே ஆக்கி வச்சிட்டாங்க..” என புலம்பிய வாணி,
“தீனாவும் இங்க அதிகமா வாரது இல்ல தானே.. அதனால அவங்கூட சுத்தமா பேசவே மாட்டான். இனி உங்கிட்ட எப்புடி பழக போறானோ தெரியல..?” என முடித்தாள்.
யாரோடும் ஒட்டாமல் தாயின் முகத்தையே பார்த்திருக்கும் பிள்ளை மனதில் இருப்பதை அறியும் போது யமுனா செய்யப்போவது என்னவோ..?! 
வீடு முழுவதும் சொந்தங்கள் நிறைந்திருக்க வந்திருப்பவர்களுக்கு இரவு உணவுக்கான ஏற்பாட்டை சக்தி பார்த்திருந்ததால் மாலை சிற்றுண்டி வேலை மட்டுமே வாணிக்கு இருந்தது.
அதிலும் யமுனா உதவ வர, “இப்பவே இதெல்லாம் எதுக்கு நீ பண்ணற..? போ, போய் தம்பி கூட இரு..” என வாணி சொல்ல, 
“பரவாயில்ல அண்ணி உங்க கூட இருக்கேன்..” என நின்றவளை கண்ட உறவுகள்,
“எப்புடியோ பெரியவனுக்கு அலையாம கொள்ளாம மருமவள கூட்டியாந்துட்டே. 
புது மருமவளும் நம்ம வாணி மாறி சுறுசுறுப்பா தா இருப்பா போல.. கொடுத்து வச்சவதேன் நீ..” என சகுந்தலாவிடம் ஒரு சில உறவுகள் பாராட்டி பேச,
அவர்களிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவ்விடம் விட்டு எதோ காரணம் சொல்லி நகர்ந்தவரை கண்டு,
“க்கும்.. அப்புடியே சொல்லி செஞ்சிட்டாலும், இவ மாஞ்சு போய் வேல பாத்திடுவா பாரு..” என நொடித்து கொண்டனர் சகுந்தலாவை நன்கு அறிந்திருந்த சிலர்.
“என்ன இப்புடி சொல்றே..? அவ எடுத்து கட்டி வேல செய்யாம வேற யாரு செய்யுவா..?” என கேட்ட விசயம் புரியாதவர்களுக்கு புரியும் விதமாய்,
“அவுளுக்கு கண்ணாலமாகி வாரப்போ இந்த வாணி புள்ளைக்கு ஏழு இல்ல எட்டு வயசு இருக்கும். இந்த தீனா பைய பொடுசு.. 
அதுக ரெண்டுந்தா எல்லா வேலயும் பாக்குங்க. இவ இருக்காளே உக்காந்த கிடையில வேல ஏவறத தவுர வேறொன்னத்தையும் பாக்க மாட்டா..
சோறு கூட அந்த புள்ள பெரிய மனுஷி ஆனவிட்டு அவதேன் செஞ்சா. அப்போ இன்னுஞ்சவுரியமா இருந்துட்டா இவ..
காலம் போன காலத்துல.. வாணி கண்ணாலத்த பத்தி யோசிக்காம, இவுளுக்கு புள்ளையும் உண்டாக, அப்புறோ கேட்கவா வேணு..!!
இதுல இவ ஆத்தா படுகிடையா கிடக்க, சக்தி பயலுக்கு முப்பது ஆகியும் எவனும் பொண்ணு கொடுக்கமாட்டேன்னு சொல்லிப்புட்டாங்க. அந்தம்மாக்கு யாரு சேவகம் பாக்கன்னு.. 
அப்போ இந்த வாணி புள்ளைக்கு ரெண்டு மூனு நல்ல வரனுங்க வந்துச்சு. அதை கொண்டு வந்து பேசினப்போ,
அவளுக்கும் என்ற தம்பிக்குந்தேன் கண்ணாலமுன்னு முடிவு பண்ணிட்டோமுன்னு சொல்லிட்டா..
அப்புறே நடந்த பிரச்சனையில தா இந்த தீனா பைய ஊரவிட்டு போனதா சொன்னாங்க..
ஆனா, என்ன பண்ணி என்ன புண்ணியம். கடைசில அவனுக்கு தேன் வாணிய கட்டி வைக்க முடுஞ்சது.
எந்த வரன் வந்தாலும்.. எதையாவது சொல்லி தடுத்துப்போட்டா இந்த மவராசி.
தம்பிய கட்டி.. அவ ஆத்தாளுக்கு கழுவினது போதாதுன்னு இங்கையும் வந்து இவளுக்கும் அந்த ஜெவதீஷூ பய வேற ரெண்டு மூணு வயசு தானே அப்போ.. அதனால அந்த பயலுக்கும் எல்லாத்தையும் செஞ்சு போட்டு போகும் அந்த புள்ள.
கல்யாணம் முடுஞ்சு நாலு அஞ்சு வருஷம் ஆயி அந்த பொம்பள போய் சேந்து.. அதுக்கு அப்புறந்தே இவளுக்கு புள்ள.
அப்ப கூட மவராசி அந்த புள்ளைய பாக்கல. அவ புருஷனை சும்மா சொல்லக்கூடாது. நல்லவிதமா தாங்கினான். 
அதையெல்லாம் விடு, இவ பெத்த புள்ள தானே இந்த ஜெவதீஷூ.. அவெனுக்கு செய்யவே இவளுக்கு மாயாது.. சரியான சோம்பேறி கழுதே..
இதுல இவ எடுத்து கட்டி.. புருஷனோட மொத தாரத்து மவனோட கண்ணால வேல பாத்தா வெளங்கிடாது..” என அவர் நீட்டி முழக்க,
எதேச்சையாக அதை கேட்டிருந்த யமுனாவிற்கு, “ஓஹோ.. அப்ப முதல்ல இவங்கள ஒரு கை பார்க்கனுமே.. வாணி அண்ணிக்காகவே ஸ்பெஷலா..” என்ற துடுக்குத்தனமான எண்ணம் மூளையில் உதிக்க, அதை ஸ்திரமாக்கும் விதமாய் அன்றே நடந்திருந்தது அடுத்த சம்பவம்.
இரவு உணவு ஹோட்டலில் இருந்து வந்திருக்க, புதுமணத்தம்பதிகளை முதல் பந்தியிலேயே அமர வைத்த வாணி இனிப்போடு பரிமாற, வந்திருந்ததில் சில இளைஞர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு தங்களின் கலாட்டாக்களை தொடங்கினர்.
“மச்சா.. தங்கச்சிக்கு மொத ஸ்வீட்ட ஊட்டி விடறது..” என ஒருவன் தொடங்க,
‘எதுக்கு..? வேண்டாமே..’ என்ற சங்கடமான பார்வையை தீனா வீச, 
“வெக்கப்பட்டா வேலைக்கு ஆவாது மாப்ளே.. ஆரம்பத்துக்கே அலுத்துக்கிட்டா மிச்சத்துக்கு என்ன பண்ணுவீக..?” என கேலியாய் மற்றவன் தொடர,
‘இவனுங்கள விட்டா இன்னும் பேசுவானுங்களே.. அச்சோ..!!’ என நினைத்தவன் தன் இலையில் இருந்ததை எடுத்து யமுனாவின் புறம் நீட்ட, 
சுற்றி இருந்தவர்களின் ஆர்வப்பார்வையும்.. தீனாவின் ஆசைப்பார்வையும் தாண்டி அவர்களின் பேச்சு வேறு நங்கையை நாணத்தோடு அதை எதிர் கொள்ளச்செய்ய தித்திப்பாய் இறங்கியது தன்னவன் கையால் உண்ட அந்த பலகாரம். 
“தங்கச்சி.. எம்புட்டு நேரந்தான் எங்க மாப்புள்ள காத்திருக்க..? சட்டுன்னு எடுத்து ஊட்டறது..” என யமுனாவிடமும் சொல்ல,
கூச்சத்தோடு கொடுத்தவளின் இனிப்போடு நங்கையின் விரலும் அவனின் இதழுக்கு இறையாக, மொத்தமாய் சிலிர்த்து கொஞ்சல் மொழி பாவை பேச.. 
நயனமொழியால், ‘ஏன்.. எனக்கு இல்லாததா..? மொத்தமா நீ எனக்கு தானே..?’ என காளையவன் முறுக்கிக்கொள்ளவென..
இருவரின் பரிபாஷை கண்டுகொண்டு, 
“ஓ….!!! மச்சா.. மிச்சம் மீதிய ராவுக்கு தனியா வச்சுக்கிடுங்க.. இளவட்டங்க சுத்தி இருக்கறது மறந்து போச்சு மாப்பிள்ளைக்கு..” என்ற வார்த்தையில் அந்த மொத்த இடமும் ஆர்ப்பரிப்பில் மிதக்க, மற்றவரின் முகத்தை நிமிர்ந்து கூட காண முடியா தவிப்பு இருவருக்குள்ளும்.
ஒருவரின் நிலை மற்றவர் அறிய ஓரவிழிப்பார்வை சிருங்காரமாய் தழுவிநின்றது இருவரையும்.. 
அதிலிருந்த வெக்கமும் மயக்கமும் ஒன்றிணைந்து அவர்களுக்கான உலகுக்கு இட்டுசென்றது இன்பமாய்…
வாழ்நாளில் நினைக்காத
புது நாள் இது
காணாத கலையாத
கலைதான் இது
எண்ணம்தான் துள்ளுது
என்னமோ சொல்லுது
கண்ணமா வண்ணமா
இன்பமா பொங்கி வரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!