Skip to content
Post Views: 3,336
அத்தியாயம் – 14
ரத்தம் வழிய மாடிப்படிகளில் விழுந்தவனை ஓடிவந்து தூக்கிக் கொண்டான் சித்தரஞ்சன்.
‘அம்மா’ என்ற மதன்ராஜின் அலறல் கேட்டு ஓடிவந்தாள் அபர்ணா.
முகத்தில் ரத்தம் வழிய இருந்தவனை சித்தரஞ்சன் தூக்குவதும், மாடிப்படியின் ஆரம்பத்தில் சகுந்தலா நின்று கொண்டிருப்பதும் கண்டவள் என்ன நடந்திருக்கலாம் என்று யூகித்தாள்.
Advertisement
சித்தரஞ்சனின் கைகளில் இருந்து மதன்ராஜை வாங்க முயன்றாள் அபர்ணா.
“நீ போய் முதல்ல அவனுக்கு முதல் உதவி செய்ய ரெடி பண்ணு.” என்றான் அதட்டலாய்.
அவள் பார்த்த பார்வை அவனைக் குற்றம் சாட்டியது.
Advertisement
“என்னை முறைக்கறது அப்புறம் இருக்கட்டும். இப்ப நான் சொன்னதை செய்.” என்று அழுத்தமாய் கூறியவன் அவனைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றான்.
Advertisement
அவன் விட்ட இடத்திலேயே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மனோரஞ்சனுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
என்ன நடந்தது என்று அவனுக்குப் புரியவில்லை.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த தேவேந்திரனும் பதறிப்போனார்.
Advertisement
அபர்ணா மதன்ராஜின் காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டாள்.
“ஒரு டிடி போட்டுடறியா? மயங்கிட்டான். தலையை ஸ்கேன் செய்ய வேண்டியிருக்குமோ?”
அவனை பரிசோதித்தவள், “இல்லை. லேசான காயம்தான். பயத்தில்தான் மயங்கிட்டான்னு நினைக்கிறேன்.” என்றாள்.
அப்போது கண்விழித்த மதன்ராஜ், “அக்கா.” என்று அவளைக் கட்டிக்கொண்டான்.
“என்னாச்சு மது? ஏன் அப்படி ஓடி வந்து விழுந்தே?”
“அந்தப் பாட்டியைப் பார்த்த உடனே பயம் வந்துருச்சு. அதான்.”
“ஏன் அப்படி பயந்தே? உன்னை அடிச்சாங்களா?” என்றாள்.
சித்தரஞ்சன் அவளை முறைத்தான்.
“இல்லக்கா. அந்த ரூமுக்கு ஏன் வந்தேன்னு கேட்டாங்க. நான் பதில் சொல்லாம ஓடி வரும்போது என்னை நிற்க சொன்னாங்க. அடிச்சிடுவாங்கன்னு பயந்து ஓடிவந்து விழுந்துட்டேன்.”
“அதெல்லாம் அடிக்க மாட்டாங்க. இனி அவங்களைப் பார்த்து இப்படி பயப்படக்கூடாது சரியா?” என்றான் சித்தரஞ்சன் மென்மையாக.
அவனையும் விழி விரித்துப் பார்த்தான் மதன்ராஜ்.
“என்ன அப்படி பார்க்கிறே? எப்பப் பாரு உன் அக்காவுக்குப் போட்டியா என்னை வில்லனைப் பார்க்கிற மாதிரியே பார்க்கிறே. யாரைப் பார்த்தும் இனி பயப்படக்கூடாது சரியா?” என்றான்.
“அதை இப்படி அதட்டிக்கிட்டே கேட்டால் அவன் என்ன செய்வான் அண்ணா?” என்றான் மனோரஞ்சன்.
“அவன் கீழே விழுந்ததிலும் ஒரு நன்மை இருக்கு. அதிர்ச்சியில் அவனுக்குப் பேச்சு வந்துடுச்சு.” என்றான்.
அவனது சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வந்த தேவேந்திரனும் மகிழ்ந்துபோனார்.
“மது. இப்ப வலிக்குதா கண்ணா?”
“இல்ல தாத்தா.” என்றான்.
“மது அவங்களை தாத்தான்னு சொல்லாதே. சார்னு சொல்லு.” என்று திருத்தினாள் அபர்ணா.
“வேண்டாம்மா. என்னைத் தாத்தான்னே கூப்பிடட்டும். அவனை குழந்தையா இயல்பா இருக்க விடு. தாத்தாங்கிற இந்த அழைப்புக்காகத்தான் நான் தவமிருக்கிறேன்.”
அவருடைய குரல் நெகிழ்ந்திருந்தது.
இத்தனை களேபரத்திலும் சகுந்தலா அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
சண்முகம் கூட இனிப்பாக சாப்பிட்டால் அதிர்ச்சி கொஞ்சம் குறையும் என்று மீண்டும் தேநீரில் அதிக இனிப்புப் போட்டு எடுத்து வந்துவிட்டார்.
மதன்ராஜ் முகத்தைச் சுளித்துக்கொண்டே குடித்து முடித்தபிறகுதான் சண்முகம் அங்கிருந்து சென்றார்.
“சரி. நீ வா மனோ. இன்னிக்கு ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்துட்டே. ஒரேடியா ரிஸ்க் எடுக்க வேண்டாம். இனி கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணு. உன் காயம் எல்லாம் ஆறிடுச்சு. இனி உனக்கு பிசியோதெரபி கொடுக்கனும்.” என்றாள் அபர்ணா.
“நீ இங்கேயே இரு. நான் மனோவை அவனோட ரூமில் விட்டுடறேன்.”
“சரிம்மா. மதுவைப் பார்த்துக்க. நானும் கிளம்பறேன்.” என்ற தேவேந்திரனும் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.
மனோரஞ்சனை அவனது படுக்கையில் விட்ட சித்தரஞ்சன் நேரே வந்தது தன் தாயைப் பார்க்கத்தான்.
அவர் நடந்த களேபரத்தைப் பார்த்துவிட்டு இன்னும் மாடியில் இருந்து இறங்கி வரவில்லை.
அவருமே இப்படி ரத்தம் வழியக் கிடந்த மதன்ராஜைக் கண்டு அதிர்ந்திருந்தார்.
“ஏன்மா இப்படி பண்ணீங்க? உங்ககிட்ட அத்தனை எடுத்துச் சொன்னேனேம்மா.”
“நான் என்ன பண்ணேன்?”
“கேள்வி கேட்டால் ஏதோ திருட்டுத்தனம் செய்த மாதிரி அவன் ஓடிப்போய் அடிபட்டுக்கிட்டால் நான் என்ன செய்வது?”
“அவனுக்கு அந்த அறையில் என்ன வேலை?”
என்றார் வேகத்துடன்.
“அப்பாதான்மா அழைச்சுட்டுப் போயிருக்கார். அவன் அங்கிருந்து எடுத்த பந்தை வைப்பதற்காகத்தான் அங்கே போனான். அப்படியே அவன் ஏதாவது எடுத்துக்கிட்டால்தான் என்னம்மா? நம்ம சொத்தா குறைஞ்சு போயிரும்?” என்றான் ஆதங்கத்துடன்.
ஆனாலும் சகுந்தலா அலட்டிக்கொள்ளவில்லை.
படியிறங்கி தங்கள் அறைக்குள் நுழைந்துவிட்டார்.
இனி அவரிடம் பேச முடியாது.
அவன் தேவேந்திரனுக்கு நேராக எதுவும் பேச மாட்டான் என்றுதான் அவசரமாக தங்கள் அறைக்குள் நுழைந்துகொண்டார் சகுந்தலா.
மீண்டும் அபர்ணாவின் அறைக்கு வந்தான். அவள் வலிக்காக அவனுக்கு மருந்து கொடுத்திருக்க மதன்ராஜ் உறங்கியிருந்தான்.
“அப்ப இவனுக்குப் பேச்சு வரும். இத்தனை நாட்கள் அவனை நடிக்கச் சொல்லியிருக்கே? அப்படித்தானே? அவனுக்கு அதிர்ச்சியில் பேச்சு வந்துருச்சுன்னு மத்தவங்க வேணா நினைக்கலாம். ஆனால் நான் ஏமாற மாட்டேன்.”
அவள் திரும்பிப் பார்த்தாள்.
அவளைக் கூர்ந்து பார்த்தான்.
“என்ன பேச முடியலையோ? எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது தான். எதுக்காக இப்படி செஞ்சே? எதை மறைக்க இப்படி செஞ்சே?”
‘ஏதோ இங்கு வந்ததில் இருந்து நல்ல முறையில் நடந்து கொள்கிறானே என்று நினைத்தால் மீண்டும் அவன் என்னை சந்தேகத்துடனே பார்க்கிறானே?’ என்று வருந்தினாள் அபர்ணா.
‘நிச்சயம் அவன் என்றைக்குமே என்னை நம்பப் போவதில்லை.’
‘இவன் என்னை நம்பினால் என்ன? நம்பாவிட்டால் என்ன?’
‘இங்கு வாழப்போவது சரண்யாதானே?’ என்று தன் மனதை சமாதானம் செய்து கொண்டாள் அபர்ணா.
“என்ன கண்டுபிடிச்சிட்டேன்னு கவலையா இருக்கா? இல்லை என்ன சொல்லி சமாளிக்கலாம்னு யோசனையில் இருக்கியா?”
என்ன சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை என்றான பிறகு அவளும் பதில் சொல்லத் தயாராக இல்லை.
“திமிர். அவ்வளவும் திமிர். பேசிக்கிட்டேயிருக்கேன். வாயைத் திறக்கிறாளா பார்?” என்றவன் அறையை விட்டு வெளியேறினான்.
“அபர்ணாம்மா. என்னோட பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைம்மா.”
பதட்டத்தோடு வந்தார் சண்முகம்.
திரையில் தெரிந்த வனிதா மூச்சுத்திணறியவாறு இருந்தாள்.
“போனை நீ வாங்கு கீதா.”
சண்முகத்தின் இளைய மகளிடம் கூறினாள் அபர்ணா.
“அக்கா. எனக்கு ரொம்ப பயமாயிருக்குக்கா. அப்பாவை உடனே வரச்சொல்லுங்க. அம்மா அப்பாவைப் பார்க்கனும்னு சொல்றாங்க.” என்றாள் அழுகையினூடே.
“உடனே கிளம்பச் சொல்றேம்மா. நீ போனை வை.” என்றவள் சண்முகத்தைப் பார்த்தாள்.
அவர் என்ன செய்வது என்று புரியாமல் கலங்கி நின்றார்.
அவரது அலைபேசியிலேயே சித்தரஞ்சன் எண் இருப்பதைக் கண்டவள் உடனே அவனுக்கு அழைத்தாள்.
“சொல்லுங்க அங்கிள். என்னாச்சு?”
“நான் அபர்ணா பேசறேன்.” என்றாள்.
மறுமுனையில் அமைதியாக இருந்தது.
“ஹலோ லைன்ல இருக்கீங்களா?”
“ம். சொல்லு.”
“சண்முகம் அண்ணாவோட மனைவிக்கு உடம்பு முடியலையாம். பார்க்க மூச்சுத்திணறல் மாதிரி இருக்கு. நீங்க ஏதாவது செய்ய முடியுமா?”
“ம். அவங்களுக்கு வீசிங் இருக்கு. அவங்க இங்க கிருஷ்ணா ஹாஸ்பிட்டல்லதான் பார்த்துக்கறாங்க. நான் அங்கிள்கிட்ட பேசறேன்.”
அழைப்பைத் துண்டித்தான்.
“அண்ணா. நீங்க கிளம்புங்க. ரஞ்சன் சார் எப்படியும் டாக்டரோட வந்துடுவார்.”
“அவ ஹாஸ்பிட்டலுக்கு வர மாட்டேங்கிறாளாம்மா. இப்ப போனால் கொரோனான்னு புடிச்சு வச்சுக்குவாங்கன்னு பயப்படறா.”
“முதல்ல டாக்டர் வந்து பார்க்கட்டும்ணா. பிறகு என்னன்னு பார்க்கலாம். நீங்க போய் ஊருக்குக் கிளம்பற வழியைப் பாருங்க.”
“இங்கே எல்லாம் …”
“நான் பார்த்துக்கிறேண்ணா. நீங்க உடனே கிளம்புங்க.”
அவர் சகுந்தலாவிடம் சென்று ஊருக்குப் போகும் விசயத்தைக் கூறினார்.
“சரி. சரி. போய் பார்த்துட்டு சீக்கிரம் வந்துடு. தங்கிடாதே.”
“சரிங்கம்மா.”
சிறிது நேரத்திலேயே சித்தரஞ்சன் மருத்துவருடனும், தேவேந்திரனுடனும் வந்துவிட்டான்.
கவலை முகத்துடனே சண்முகம் கிளம்பினார். இதுநாள் வரைக்கும் உடனே கிளம்பி வாங்க என்று வனிதா அவரை அழைத்ததே இல்லை.
இரவு உணவிற்கான நேரமானதால் அபர்ணா சமையல் அறை உள்ளே சென்று பார்த்தாள்.
சகுந்தலா சப்பாத்தி செய்யச் சொல்லியிருந்தார்.
சண்முகம் அதற்காக மாவு பிசைந்து வைத்திருந்தார்.
அத்துடன் குருமா செய்வதற்காக காய்கறிகளும் நறுக்கி வைத்திருந்தார்.
ஒரே ஒரு நிமிடம் சமைப்போமா? என்று யோசித்தவள் தான் சண்முகத்திற்கு பார்த்துக்கொள்வதாக வாக்குக் கொடுத்ததை நினைத்து உடனே சமையலில் இறங்கினாள்.
குருமாவைத் தயார் செய்து முடித்தவள், இப்போது வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் சப்பாத்தி தயார் செய்து கொண்டாள்.
மனோரஞ்சனுக்கு சாப்பாடு கொடுக்கச் சென்றாள்.
“அங்கிருந்து ஏதாவது போன் பண்ணாங்களா அண்ணி?”
“என்னோட நம்பர் யார்கிட்டயும் கிடையாது மனோ. உன் போனில் இருந்துதான் கூப்பிட்டு பார்க்கனும். இப்ப சாப்பிடு மனோ.”
“மதுவையும் இங்கே வரச்சொல்லுங்க அண்ணி. நாங்க இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடறோம்.”
“சரி.” என்றவள் மதன்ராஜை அங்கே அழைத்து வந்தாள்.
“மது. இப்ப எப்படியிருக்கு?”
“ம்.” என்று தலையாட்டினான்.
“டேய் இப்பத்தான் உனக்குப் பேச்சு வந்திருச்சே. பேசேன்டா.”
மதன்ராஜ் அபர்ணாவைப் பார்த்தான்.
“ஓ. உன் அக்கா சொன்னாத்தான் பேசுவியா? நல்ல பையன்டா நீ. இப்ப எதுக்கும் வாயைத் திறக்க வேண்டாம். சாப்பிட மட்டும் வாயைத் திற. நீங்க சாப்பாட்டை எடுத்து வைங்க அண்ணி. நானே சாப்பிட்டுக்கிறேன்.”
“ஏன் மனோ?”
“நம்ம கையால் சாப்பிட முடியலைங்கிறப்பதான் எப்படா நம்ம கையால் சாப்பிடுவோம்னு ஏக்கமா வருது அண்ணி.”
அவனைப் புரிந்து கொண்டு அவன் சாப்பிட வசதியாக சப்பாத்தியை பிய்த்துப் போட்டு குருமாவை ஊற்றித்தந்தாள்.
அவன் மெதுவாக சாப்பிட ஆரம்பித்தான். அவள் யோசனையுடன் நின்றாள்.
“என்னாச்சு அண்ணி?”
“ஒன்னுமில்லை மனோ. அவங்க எல்லாம் எப்ப வருவாங்கன்னு யோசிச்சேன்.”
“நீங்களும் சாப்பிட்டுடுங்க அண்ணி. அவங்க வர்றப்ப வரட்டும்.”
மனோரஞ்சன் சாப்பிட்டு முடித்த பிறகு சிறிது நேரம் கழித்து அவனுக்குத் தர வேண்டிய மருந்துகளைத் தந்தாள்.
“உடனே படுத்துவிடாதே மனோ. கொஞ்ச நேரம் ஏதாவது புத்தகம் படி. இல்லன்னா பாட்டு கேளு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.”
“சரி.” என்ற அவன் ஒப்புதலைக் கேட்ட பிறகு அவள் மதன்ராஜை அழைத்துக்கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றாள்.
“மது. நீயும் கொஞ்ச நேரம் ஏதாவது படிச்சிட்டு இரு. அப்புறம் தூங்கலாம்.”
“சரிக்கா.” என்றவன் சமர்த்தாக குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான்.
சமையல் அறைக்குச் சென்ற அபர்ணா ஒதுங்க வைத்தாள். சமைத்த பாத்திரங்களை கழுவி வைத்தாள்.
அவர்கள் வரும்போது சூடாக சப்பாத்தி போட்டுக்கொள்ளலாம் என்று மாவையும், குருமாவையும் குளிர்சாதனப் பெட்டியில் எடுத்து வைத்தாள்.
சித்தரஞ்சனுக்கு அலைபேசியில் அழைப்பு வர, எடுத்துப் பார்த்தான்.
மனோரஞ்சன்தான் அழைத்திருந்தான். உடனே அழைப்பை ஏற்றான்.
“என்ன மனோ?”
“வனிதா ஆன்ட்டி எப்படியிருக்காங்க?”
“டாக்டர் பார்த்துக்கிட்டிருக்கார். நீ சாப்பிட்டியா?”
“சாப்பிட்டாச்சுண்ணா. அண்ணி சப்பாத்தி தந்தாங்க.”
“அண்ணியா?”
உடனே மனோரஞ்சன் நாக்கைக் கடித்துக்கொண்டான்.
“சரிண்ணா. நீ அப்புறமா வனிதா ஆன்ட்டிக்கு எப்படியிருக்குன்னு சொல்லு.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
சண்முகத்தைக் கண்ட உடனே வனிதா அழ ஆரம்பித்துவிட்டாள்.
அவள் உடல்நிலையைக் கருதி அவளை அழ விடாமல் மற்றவர்கள் தேற்றினர்.
“நான் உங்களுக்கு ரொம்ப அநியாயம் பண்ணிட்டேன். சுயகௌரவம் பார்த்துக்கிட்டு உங்களை பிரிஞ்சு இருந்துட்டேன்.”
“இல்லம்மா. நாம எங்கே பிரிஞ்சிருந்தோம்? நான்தான் அடிக்கடி வந்து உங்களை பார்த்தேனே.”
“இருந்தாலும் கூடவே இருந்து உங்களை நான் பார்த்துக்கத் தவறிட்டேனே. இந்தக் குழந்தைகள் கூட இருக்கிற பாக்கியத்தை உங்களுக்குக் கிடைக்காமல் செஞ்ச பாவி நான்.”
“இல்லம்மா. அப்படியெல்லாம் இல்லை. நீ குழந்தைகளை நல்லபடியா வளர்த்திருக்கே. குழந்தைகளும் என் மேல் பிரியமாத்தானே இருக்காங்க. தேவை இல்லாமல் மனசைப் போட்டுக் குழப்பிக்காதே.”
“என்னை மன்னிச்சிடுங்க.”
யாராலும் வனிதாவை தேற்ற முடியவில்லை.
இதெல்லாம் மருத்துவர் வனிதாவை பரிசோதித்த பிறகு நடந்த உரையாடல்கள்.
இந்த மருத்துவர்தான் வனிதாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே வைத்தியம் பார்க்கிறவர்.
சித்தரஞ்சன் சூழ்நிலையைக் கூறிய உடனே ஜெயச்சந்திரன் இந்த மருத்துவரிடம் பேசி அனுப்பி வைத்திருந்தார்.
அவரும் தேவையான மருந்துகளோடு வந்துவிட்டார்.
மருத்துவர் வனிதாவை பரிசோதித்த பிறகு, இவர்கள் சண்முகம் குடும்பத்தினரை தனியே விட்டுவிட்டு வெளியில் வந்தனர்.
அப்போதுதான் வனிதா தன் கணவனிடம் மன்னிப்பு கேட்டது எல்லாம்.
“என்னாச்சு டாக்டர்? அவங்க எப்படியிருக்காங்க?” என்றான் சித்தரஞ்சன்.
அருகில் தேவேந்திரனும் கேள்வியுடன் நின்றிருந்தார்.
“கொஞ்சம் கஷ்டம்தான் சார். நாட்களை எண்ணிக்கிட்டிருக்காங்க.”
“ஹாஸ்பிட்டலில் சேர்க்கலாமா?”
“இவங்க இருக்கிற நிலைமைக்கு அது சரி வரும்னு தோணலை. முதல்ல இவங்க ஹாஸ்பிட்டலுக்கு வருவாங்களான்னே தெரியலை. கொரோனான்னு புடிச்சுப் போட்டுடுவாங்கன்னு பயப்படறாங்க. என்னைக் கேட்டால் இருக்கிற வரைக்கும் இங்கேயே நிம்மதியா இருக்கட்டும்னுதான் சொல்வேன்.”
ஆரம்பத்தில் இருந்தே அவர்தான் வனிதாவிற்கு வைத்தியம் பார்த்தவர் என்பதால் அவளின் நிலைமையைத் தெளிவாகக் கூறினார்.
கையோடு கொண்டு வந்த மருந்துகளை கொடுத்து எப்படி கொடுக்க வேண்டும் என்று சண்முகத்தின் மகள்களிடம் கூறினார் மருத்துவர்.
“சரிம்மா வனிதா. தேவை இல்லாமல் கவலைப்படாமல் உடம்பைப் பார்த்துக்கோ. நாங்க கிளம்பறோம்.”
எங்கே கணவனையும் அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார்களோ என்று வனிதா முகத்தில் பயம்.
“பயப்படாதம்மா. உன் புருசனை இங்கே விட்டுட்டுத்தான் போறோம்.” என்றார் சமாதானமாய்.
அவள் உடனே நிம்மதியுற்றாள்.
“முதலாளி. நான் இங்கே இருந்துட்டால் அங்கே எப்படி…” என்று இழுத்தார் சண்முகம்.
“அங்கிள். அங்கே எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க இப்போதைக்கு ஆன்ட்டி கூட இருங்க.”
“அவளுக்குத்தான் ஒன்னுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரே தம்பி.”
“உங்களைப் பிரிஞ்சு இருக்கிறதுதான் அவங்க நோய். இப்ப நீங்க அவங்க கூட இருக்கிறதுதான் அவங்களுக்கு மருந்து. ஆன்ட்டி குணமாகி உங்களை சிரித்த முகத்தோட அனுப்பி வைக்கிற வரைக்கும் இங்கே இருங்க போதுமா?”
வீட்டினரின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“அங்கிள் உங்களுக்கு எந்த நேரத்தில் என்ன உதவின்னாலும் உடனே என்னைக் கூப்பிடுங்க.”
“ஆமாப்பா. இந்தா செலவுக்கு வச்சுக்கோ.”
“நீங்கதான் ஏற்கனவே நிறைய செஞ்சிருக்கீங்களேய்யா. இப்பக்கூட டாக்டருக்கும் நீங்கதான் கொடுக்கறீங்க. அவர்தான் மருந்து மாத்திரை எல்லாம் தந்துட்டாரே. அப்புறம் என்ன செலவு எனக்கு?”
“அட என்னப்பா? ரொம்ப நாள் கழிச்சு வீட்டிற்கு வந்திருக்கே. ஏதாவது நல்லதா வாங்கி சமைச்சு சாப்பிடுவியா? செலவுக்குக் கொடுத்தா வாங்கிக்காமல் என்ன பேச்சு?” என்றார் அதட்டலாய்.
“அம்மாடி வனிதா. உன் புருசன் உன் கூடத்தான் இருப்பான். சரியா?”
“ரொம்ப நன்றிண்ணா.”
மூச்சுத்திணறலுக்கிடையே பேசினாள்.
“வேண்டாம்மா. ரொம்ப அலட்டிக்காதே. உடம்பைப் பார்த்துக்கோ. நாங்க கிளம்பறோம்.”
கனத்த மனத்துடன் கிளம்பினர்.
வீட்டினர் யாரிடமும் வனிதாவின் நிலைமையைப் பற்றிக் கூறவில்லை.
இப்போது இருக்கும் மகிழ்ச்சி அவர்களிடம் காணாமல் போகும்.
வனிதாவின் முடிவு பற்றி தங்களுக்குத் தெரிந்த மட்டும் போதும்.
கடைசி காலத்திலாவது அவளுடைய கணவனோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.
அதைக் கெடுக்க வேண்டாம் என்று கிளம்பினர்.
அழைப்பு மணி ஓசை கேட்டுக் கதவைத் திறந்தாள் அபர்ணா.
“சாரிம்மா. உன்னோட தூக்கத்தை இன்னிக்குக் கெடுத்தாச்சு.”
“அதெல்லாம் இல்லை சார். எங்க வேலையில் நேரம் காலம் பார்க்கக் கூடாது. வனிதாண்ணி எப்படியிருக்காங்க?”
“என்னத்தச் சொல்லம்மா? டாக்டர் நம்பிக்கையா எதுவும் சொல்லலை. நாட்கள் கணக்கு தான் அவர் சொல்றது. ஆனாலும் நாங்க சண்முகத்திடம் எதுவும் சொல்லலைம்மா.”
“நம்ம கையில் என்ன இருக்கு சார்?”
“ஆமாம்மா. எல்லாம் ஆண்டவன்தான் துணையிருக்கனும்.”
“சரி சார். நீங்க சாப்பிட வாங்க.”
“நீ செஞ்சிட்டியாம்மா.”
“ஆமா சார். சண்முகம் அண்ணா சப்பாத்திக்கு மாவு பிசைந்திருந்தார். குருமா வச்சிட்டேன். நீங்க வந்த பிறகு சப்பாத்தி போடலாம்னு இருந்தேன். நீங்க கை கால் கழுவிக்கிட்டு வாங்க. அதுக்குள்ள நான் சப்பாத்தி போட்டுடறேன்.”
“சரிம்மா.”
சமையல் அறைக்கு விரைந்தவள் குருமாவை எடுத்து சூடு செய்தாள். சப்பாத்தியை தேய்த்துக் கல்லில் போட்டு எடுக்க ஆரம்பித்தாள்.
“ஆகா. வாசமே நல்ல தூக்கலா இருக்கேம்மா. கொண்டா கொண்டா. இவ்வளவு நேரம் பசியே தெரியலை. உன் சமையலோட வாசத்தில் பசி அதிகமாகுது.”
அவள் புன்னகையுடன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு செல்வதற்குள் சமையல் அறையில் இருந்த அந்த சாப்பாட்டு மேசையிலேயே அமர்ந்துவிட்டார்.
“என்னம்மா முழிக்கிறே. இங்கே உட்கார்ந்து சாப்பிட்டால் ஆகாதா? கொண்டா.”
தட்டில் சப்பாத்தி, குருமாவை வைத்து அவரருகில் வைத்தாள். உடன் ஒரு சொம்பில் தண்ணீரும் வைத்தாள்.
“ஆகா. நல்ல ருசிம்மா. பசி ருசியறியாதுன்னு சொல்லுவாங்க. ஆனால் பசியிருக்கும்போதே உன் கைப்பக்குவம் நல்ல ருசியா இருக்கும்மா.” என்றவாறே சிறு குழந்தை போல் சாப்பிட்டார்.
“என்னப்பா? எனக்கு சப்பாத்தி மிச்சம் மீதியிருக்கா இல்லையா?”
“இப்ப வந்தால் ஏதாவது கிடைக்கும். லேட்டாச்சு எதுவுமே மிஞ்சாது.” என்கவும் அவன் அவசரமாக ஒரு தட்டை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்தான்.
“என்ன வேடிக்கை பார்க்கிறே? எடுத்து வை.”
அவனுடைய தட்டிலும் சப்பாத்தியை எடுத்து வைத்தாள்.
“ம். பரவாயில்லை.”
“என்னப்பா பரவாயில்லைன்னு சொல்லிட்டே. நானே இந்த கைப்பக்குவத்தை சாப்பிட யாருக்கு கொடுத்து வச்சிருக்கோன்னு ஏக்கப்படறேன்.” என்றார் மனதார.
“வேறு யாருக்குப்பா? நமக்குத்தான் கொடுத்து வச்சிருக்கு.” என்றான்.
“என்னப்பா சொல்றே?” புரியாமல் கேட்டார்.
அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. இவளை சீண்ட என்றே ஏதாவது பேசித் தொலைவான்.
“இப்ப நாமதானேப்பா சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்.”
“ஓ. அதை சொல்றியா? சரிம்மா. எனக்குப் போதும்.”
அவர் கிளம்பிவிட்டார்.
“அம்மா சாப்பிட்டாங்களா?”
“தெரியாது.”
“உன்னை அன்னிக்கு பட்டினி போட்டாங்களே. அதுக்காக பழி வாங்கிட்டியா?”
“ஹலோ சார். இது அவங்களோட வீடு. இங்கே சாப்பிட வாங்கன்னு அவங்களை கூப்பிடற உரிமை எனக்கு இல்லை.”
“ஓ. அப்ப எங்களை சாப்பிடக் கூப்பிடற உரிமை மட்டும் உனக்கு இருக்கோ?”
“நான் எங்கே உங்களை கூப்பிட்டேன். நான் சாரை மட்டும்தான் கூப்பிட்டேன்.”
“அப்ப நானா வந்ததினால்தான் எனக்கு சாப்பாடு கிடைச்சுச்சு. இல்லைன்னா எனக்கும் சாப்பாடு கொடுக்கிற ஐடியா இல்லை. அப்படித்தானே?”
அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.
“அடேய் ரஞ்சா. தப்பிச்சிட்டடா.” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்.
“நீ சாப்பிட்டியா?”
“முதலாளிங்க சாப்பிடறதுக்கு முன்னாடி நான் எப்படி சாப்பிட முடியும்?”
“சரி உட்காரு. சாப்பிடலாம். எனக்குப் போதும்.”
“உங்கம்மா?”
“நான் போய் கேட்டுப் பார்க்கிறேன். நீ சாப்பிடு.” என்றவன் எழுந்துவிட்டான்.
அவளும் சாப்பிட ஆரம்பித்தாள். தேவேந்திரன் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார்.
பெற்றோரின் அறைப்பக்கம் வந்தவன் கதவைத் தட்டினான்.
“என்னப்பா? தூங்கப் போகலையா?”
தேவேந்திரன் மகனைக் கேட்டார்.
“அம்மா இன்னும் சாப்பிடலையாம்பா.”
அவர்கள் பேச்சைக் கேட்டவாறே வந்த சகுந்தலா
“சண்முகம் வந்தாச்சா? சாப்பாடு தயாராயிடுச்சா?” என்றார்.
“சண்முகம் இப்ப வரமாட்டான் சகுந்தலா. அபர்ணா பொண்ணுதான் சமைச்சிருக்கு. நீ போய் சாப்பிடு.” என்றவர் படுக்கச் சென்றுவிட்டார்.
சித்தரஞ்சன் தன் தாயைப் பார்த்தான்.
“என்னது அவள் சமைச்சாளா? அவளுக்கு என்ன திமிர்? அவள் சமைச்சதை நான் சாப்பிடனுமா?”
கோபத்தில் அறைக்குள்ளே போய்விட்டார்.
அவன் மீண்டும் சமையலறைக்கு வந்தான்.
“பால் இருந்தால் சூடு பண்ணி என் ரூமுக்கு எடுத்துட்டு வந்துரு.” அவளிடம் கூறியவன் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
காதல் வளரும் ……
error: Content is protected !!