Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காதலே தனிப் பெரும் துணையே – 11

அத்தியாயம் 11

            அபுதாபியில் வேலை முடிந்து அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த அய்யனார், அப்போது தான் போனை எடுத்து பார்த்தான், தாயிடமிருந்து ஏகப்பட்ட மிஸ்டு கால்கள். அது புதிதாக இருந்தது, ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் அழைப்பார் அதுவும் அவன் எப்போது வேலைக்கு சென்றுவிட்டு திரும்புவான் என்று தெரிந்து கொண்டுதான் ஃபோன் அடிப்பார், ஆனால் இப்படி விடாமல் அழைத்தது ஏதோ தவறாகபட உடனே தாய்க்கு அழைத்தான். எடுத்தது மலர் தான், “அண்ணா…”

        அவனுக்கு சப்பென்று ஆனாது, “நீதானா, மறுபடியும் உன் புருஷன் கூட சண்டை போட்டுட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டியா, அதுக்கு தான் அம்மா இத்தனை ஃபோன் போட்டாங்களா, சரி என்ன ஆச்சுன்னு சொல்லு, உன் மாப்பிள்ளை கிட்ட சமாதானமா பேசுறேன்” என்று அவன் பாட்டு பேசிக்கொண்டே போக, அவள் அழத் தொடங்கிவிட்டாள், “ஐயோ அண்ணா அது இல்ல… மீனா எவனோ கிறிஸ்துவப் பையனை இழுத்துட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அது தெரிஞ்சி மாமா அவமானம் தாங்க முடியாம லாரில விழுந்து உயிர மாச்சுக்கிட்டாரு” என்று ஒப்பாரி வைத்தாள். எதிரில் இருப்பவனோ, அழகப்பணை தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்த்தவன், தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதான், “மாமாவை கொண்ணுட்டியேடி சண்டாளி, ஆசை காட்டி எல்லாரையும் மோசம் பண்ணிட்டியேடி பாவி” என்று தன்னால் புலம்பினான்.



Advertisement

          மறுநாள் மீனாவை பார்க்க வருவதாக அழகப்பன் முதல்நாள் சொன்னதால், காலை எழுந்தவுடனே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வாசலை பார்த்தபடி அமர்ந்துவிட்டாள். சேவியரும் எஸ்தெரும் கேட்டபோது கூட சிரித்து மழுப்பிவிட்டாள், தந்தையிடம் கெஞ்சி கூத்தாடியாவது இங்கிருந்து இன்று சென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பு. அவளுக்கு ஏனோ அங்கு இருப்பது அந்நிய உணர்வு, தன்னால் தான் ஜேக்கப்பை ஒதுக்கி வைக்கிறார்கள் எதற்கு அவனுக்கு தேவையில்லாத பாரம் என்ற நினைப்பு வேறு, அதனையும் தாண்டி ஆங்கிலத்தில் எஸ்கேபிங் தி ரியாலிட்டி (escaping the reality) என்பர், அர்த்தம் நிதர்சனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு எதிலாவது கவனத்தை செலுத்துவது. அதை தான் மீனாவும் செய்ய முயற்சிக்கிறாள், இங்கிருந்து சென்னை சென்று தாலியை கழட்டி வைத்துவிட்டு வேலைக்கு போய்விட்டால் நடந்தது எல்லாம் இல்லாமல் ஆகிவிடும் என்ற ஒரு அறியாமை கலந்த சிறுபிள்ளைத்தனம் அவளுள், பாவம் அந்த அப்பாவிப் பெண் நடக்கப்போவது தெரியாமல் வாசலை நோக்கி காத்துக்கொண்டிருந்தாள்.

Advertisement

          இதற்கிடையில், ஜேக்கப் வேறு திண்டுக்கல் போக வேண்டும் என்று சேவியரிடம் வந்து நிற்க அவர் கடுப்பாகி, “அப்படி என்ன மயித்த கிழிச்சு நட்டுட்டன்னு இப்ப ஊர் சுத்த கிளம்பிற, நீ ஒன்னும் போய் புடுங்க வேண்டாம், அவனவன் இவன வெட்டிடுவானோ குத்திடுவானோன்னு பயந்து போய் இவனை பாதுகாப்பா கூட்டிட்டு வந்தா இவன் என்னடான்னா…” என்று இருந்த கோவத்தை எல்லாம் கொட்டினார். அவர் ஒரு போதும் மகனுடன் இப்படி பேசியதில்லை, சூழ்நிலை ஒருவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் அப்படி தான் ஜேக்கப்பும் மாறிப் போய் இருந்தான்.

Advertisement

              “நான் உங்ககிட்ட அனுமதி கேக்க வரலை, போறேன்னு சொல்லிட்டு போக வந்தேன், மத்தபடி நான் எதை கிழிச்சேன் நட்டேன்னு உங்களுக்கு தெரியாதா” எதிரில் இருந்த தந்தையிடம் முதல் முறையாக உச்சக் குரலில் பேசினான். அவன் பேச்சில் தான் எந்த தவறும் செய்யாவிட்டாலும் ஏன் என்னை இப்படி வதைக்கிறீர்கள் என்ற கேள்வி மறைமுகமாக இருந்தது. ஜேக்கப்பை மீனா முதல் தடவையாக இப்படி பார்க்கிறாள், அவளை பொறுத்தவரை ஜேக்கப்க்கு பெரிதாக கோபம் வராது, செல்ல கோபம் கொண்டாலும் எளிதில் சமாதானமாகிவிடுவான், ஜாலியான பையன், மற்றவர் மனது புன்படாது வேடிக்கையாக பேசி அடுத்தவரை சிரிக்க வைத்து அதில் மகிழும் அசாத்தியன். ஆனால் இன்று அவன் முற்றிலும் வேறாக தெரிந்தான், அவளுக்கு பயமாக இருந்தது, அவள் வருகை அவனுக்கு அசௌகரியத்தை தந்திருக்குமோ, இருக்காதா பின்னே, மனது முழுக்க ரோஹினியை வைத்துக் கொண்டிருக்கும் போது, ஊர் மீனாவை அவன் மனைவி என்று பேசினால் அவனுக்கு கோபம் வராதா, ஆக அவன் மாற்றத்திற்கும் அவள் தான் காரணம் என்று முழுமையாக நம்பிவிட்டாள், அதனால் முற்றிலும் அழையா விருந்தாளியாக தன்னை அவள் எண்ண, இத்தனை நேரம் உணர இல்லாத அந்த கடல்புறத்து உப்புக்காற்றும் மீன் வாடையும் முகத்தில் அரைவதை இப்போது உணர்ந்தாள், தந்தை எப்போது வருவார் என்று தவிக்க தொடங்கிவிட்டாள்.

Advertisement

            மகனின் சத்தம் கேட்டு சமயலறையிலிருந்து ஓடி வந்த எஸ்தர், “என்னடா பெரிய மனுஷன் ஆகிட்டியா அப்பாகிட்ட இப்படி பேசிக்கிட்டு இருக்க, உன்கிட்ட எதுவும் பேசுறதா இல்ல ரொம்ப தான் பண்ணிட்டு இருக்க… மொத வீட்ட விட்டு இறங்கு சாப்புடுறதுக்கு தவர வேற எதுக்கும் அம்மா நொம்மான்னு உள்ள வராதன்னு நேத்தே சொன்னேனா இல்லையா, வெளிய போ நீ” என்று கடிந்தார்.

           அவன் சட்டென மீனாவை ஆழமாக பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்துகொண்டே, “கூடிய சீக்கிரம் மொத்தமா போயிருவேன் இப்படியே இருந்தா அதுதான் நடக்க போகுது” என்று சொன்னான். அந்த பார்வையும் அவன் வார்த்தைகளும் அவளை இன்னும் காயப்படுத்தியது.

        உடனே பெற்றவருக்கு பதட்டம், “என்ன எஸ்தர் நீ… நான் இந்த பொன்ன அவன்கிட்ட கேட்காம கூட்டிட்டு வந்துட்டேன்னு என் மேல கோவம் அவனுக்கு, நானும் அவன் மனசு புரியாம ஏசிட்டேன் நீயும் இப்படி பேசினா அவன்… டேய் ஜேக் நில்லு அப்பா சொல்றேன்ல” என்று அவன் பின் ஓடினார், சேவியர்.

          அதிர்ச்சியாக எஸ்தர், “அவன் அந்த பொன்ன லவ் பன்னான்னு சொன்னீங்க, அப்போம் எதுக்கு அவனுக்கு அவன் கல்யாணம் பண்ண பொன்ன கூட்டிட்டு வர்றது பிடிக்கலை, பிடிக்கலைன்னா எதுக்கு கல்யாணம் ஆச்சு” என்று கேள்வி மேல் கேள்வி மீனாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கேட்க, மீனாவுக்கு கண்கள் கலங்கி கண்ணீர் கீழே சிந்தத் தொடங்கிவிட்டது.

          ஜேக்கப்க்கு ஒருவகையில் நிம்மதி பரவியது, கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள், எது எப்படியோ இப்போதைக்கு தந்தை தாய் இந்த திருமணம் செல்லாது என்று அறிவித்து விட்டால் போதும் ரோஹினியை திருமணம் முடிக்க அடுத்த கலகத்தை செய்யலாம் என்று நினைத்து அப்படியே நிற்க, அப்போது தான் அந்த பயங்கரமான செய்தி அவர்களை வந்து அடைந்தது.

         மீனா அப்படியே மூர்ச்சையாகி நிலத்தில் விழுவதற்கு முன் ஜேக்கப் பாய்ந்து சென்று கையில் ஏந்திக் கொண்டான், அருகிலிருந்த சோஃபாவில் அவன் மடியிலேயே படுக்க வைத்து அவள் கன்னத்தை தட்டி, “மீனா எந்திரி மீனா…அம்மா தண்ணி கொண்டுவாங்க” என்று அவன் பதற பார்ப்பவர் யாருக்கும் அவன் அவளை பிடிக்காமல் தான் திருமணம் செய்து கொண்டான் என்று சொன்னால் ஒரு துளி கூட நம்ப மாட்டார்கள், அவன் பெற்றோர் உட்பட.

          பகலில் நடந்தேறியது அந்த அகோர சம்பவம், அழகப்பன் ஒரு வழியாக கோர்ட் மூலம் ராஜ் மீது ஒரு பிரிவின் கீழ் வழக்கு தொடுக்க முடிவு செய்து, அதை வக்கீலிடம் செய்ய சொல்லிவிட்டு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் போக அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தார். எதிர் வீதியில் கடைகள் இருந்தன, மீனாவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஜேக்கப் குடும்பத்துக்கும் எதையாவது வாங்கிக் கொண்டு தூத்துக்குடிக்கு செல்லலாம் என்று எண்ணி சாலையை கவனமாக கடந்து செல்ல எங்கிருந்தோ வந்த இருசக்கர வாகனம் அவரை இடிக்க அவர் தடுமாறி கனரக வாகனத்தின் முன் விழுந்தார், இதற்கு மேல் சொல்ல விருப்பமில்லை, உயிர்ப்பிரிந்துவிட்டது. வெகு விரைவில் எல்லாவற்றையும் முடித்து சொந்த ஊருக்கு உடலை அனுப்பி வைத்தனர், பொறுப்பு எடுத்து செய்தது அழகப்பணின் மூத்த தங்கை மகன் முத்து தான்.

          மிகவும் தாமதாக தான் மீனாவுக்கு செய்தி கிடைத்தது, அவர்கள் கிளம்பி வருவதற்குள், ஊருக்குள், “அடியேய்… இவளே அந்த ஓடுகாளி மீனாக்கு ரோஹினி மூலம்தான் அந்த பையன் பழக்கமாம் ஊருக்கு வந்துச்சே அந்த பையனோட அப்போ பேசுறது என்ன சிரிக்கிறது என்ன, ஊமை மாதிரி இருந்துகிட்டு குடும்பத்தையே அசிங்கப்படுத்திட்டா பாரு, இதுக்குதான் பொண்ணுங்கள வீட்ட விட்டு தாண்ட விடக் கூடாது, ஊருக்கு வந்தப்பவே ஓடி போய் கல்யாணம் பண்ணனும்னு இருந்துருக்கா அது ரோஹினி மூலம் ராஜ்க்கு தெரிஞ்சிருக்கு, அதான் ரோஹினிய கூட்டிட்டு நைட்டோட நைட்டா அதை தடுக்க ராஜ் போயிருக்கான் போல, அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சி… ஆனாலும் ராஜ் போலீஸ் ஸ்டேஷன்ல பிரச்சனை பண்ணிறுக்கான், அந்த பையனோட அப்பாவும் லேசுப்பட்டவரு இல்ல போல, ராஜ் மேலையே கேஸ் கொடுத்து உள்ள தல்லிட்டாராம், பையன் நல்ல பொண்னா பாத்துட்டான் அழகா இருக்கா சொத்து பத்து இருக்கு ஒரே பொண்ணு வேற சும்மா விடுவாங்களா பொத்துனாப்புல கூட்டிட்டு போயிட்டாங்க, போலீஸ் ஸ்டேஷன்ல வச்சி நம்ம அழகு மாமா கூப்பிட்டதுக்கு அந்த சிறிக்கி வரமாட்டேன்னு சொல்லிட்டால்லாமே, எல்லாம் சந்தனம் ஐயா போனாங்கள்ள அவங்க பாத்துட்டு வந்து சொன்னாங்க எப்படி இருக்குது பாத்தியா… மாருலையும் தோலுலையும் போட்டு வளத்தாரே அவருக்கு எப்படி இருக்கும், அதான் ஊருக்குள்ள யாரும் மதிக்க மாட்டாங்கன்னு மானஸ்தன் இப்படி பண்ணிட்டாரு” என்று கதை பரவ, அதில் எத்தனை உண்மை இருக்கிறது என்று யாரும் ஆராயவில்லை.

         அவள் சொந்தங்கள் மீனாவை ஊருக்குள் விடவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்ற, மீணாவுடன் ஜேக்கப், சேவியர், எஸ்தர் மட்டுமே வந்தனர், கூட்டமாக வந்தால் பிரச்சனை செய்ய வந்ததாக எண்ணுவர் என்று சேவியர் நினைத்து இப்படி செய்தார். அவள் காரிலிருந்து இறங்கி அழுதுகொண்டே ஓடி வர முத்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “எங்கடி வந்த தே… மு…” என்று கெட்ட வார்த்தைகளால் திட்ட, அவள் அதிர்ந்து ஒடிங்கிப் போய் நின்றாள்.

          சேவியர், “என்னப்பா இது நடந்தது என்னன்னு தெரியுமா இஷ்டத்துக்கு பேசுற… உங்க வீட்டு பொண்ணு தான” என்று குரல் உயர்த்தினார்.

         அவள் அத்தைகள் கதறிக் கொண்டே, “யாரு எங்க வீட்டு பொண்ணு…. எங்க அண்ணனை கொன்ன கொலகாரி… எங்க வீட்டு ஆலமரத்தையே சாச்சுட்டா… அந்த மனுஷன் வளத்ததுக்கு நன்றி விசுவாசம் வெனாமாடி நன்றி கெட்டவலே… இவ கால் பட்ட இடம் தருசா போக…” என்று மண்ணை வாரி தூத்தி சாபமிடத் தொடங்கினர்.

       அவள், “செல்லி அத்தை, நான் ஒன்னும் பண்ணல அத்தை… அப்பாவை பாக்க விடுங்க” என்று குழந்தை போல நின்ற இடத்தில் ஏங்கி ஏங்கி கண்ணீர் வடித்தாள், எஸ்தர் அவளை பிடித்து கொண்டார், அவள் நிலையை பார்த்து அவருக்கு கூட கண்ணீர் வந்துவிட்டது.

        ஜேக்கப், “ஏன் இப்படி புரியாம நடந்துக்குறீங்க… நான் இங்க 3 நாள் இருந்தேன் உங்க எல்லார் கூடையும் தான் பேசினேன், மீனா அப்பா தான என்ன உங்களுக்கு அறிமுகப்படுத்தி வச்சாரு, என்ன அவர் வீட்டு விருந்தாளி மாதிரி தான் பாத்துக்கிட்டாரு, இந்த நேரத்துல என்கிட்ட ஏதாவது தப்பு இருந்துருந்தா அதை அவர் கண்டுப்பிடுச்சுறுக்க மாட்டாரா என்ன ஒதுக்கி வச்சிருக்க மாட்டாரா… ஏன் அதை அவர் செய்யல ஏன்னா மீனா என்ன முதல் தடவை மீட் பண்ணதுல இருந்து எல்லாத்தையும் சொல்லிருக்க, தப்பு பண்னுற பொண்ணு எப்படி எல்லாத்தையும்? ஏன்னா மீனா எந்த தப்பும் பண்ணல, நாங்க ஜஸ்ட் பிரெண்ட்ஸ் தான்னு அவருக்கு தெரியும், ஆனா நீங்க அதை நம்ப மாட்டீங்கலே அதுனால தான் அவ பாதுகாப்புக்காக போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எங்க கூட அனுப்பி வச்சார்… லுக் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு விவரமா சொல்லுறதுக்கு இப்போ நேரமில்லை, இந்த பிரச்சனைக்கு மூல காரணமே அந்த நிக்குறாரே அவர் பையன் தான், அவன் தான் மீனா அப்பா மேல இருந்த வன்மத்தை தீர்த்துக்க எங்களை யூஸ் பண்ணிக்கிட்டான், என்ன கட்டாயப்படுத்தி தாலி கட்ட வச்சான்” என்று சந்தனபாண்டியனை பார்த்து குட்டை உடைக்க, எல்லாரும் அவரை பார்த்தபடி குழம்பி நிர்ப்பதை கண நேரத்தில் உணர்ந்து கொண்ட சந்தனம்,

           “டேய்… என்னடா என் பையனை இழுக்குற… அவன் ஜாதி பாக்குற பையன்னு ஊருக்கே தெரியும், அவன் உனக்கு எங்க ஜாதிகார பொன்ன கல்யாணம் பண்ணி வச்சான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க… நீ தாலி கட்டுணதால ஒரு உயிர் போயிருக்கு அதுக்கு உன்னால பதில் சொல்ல முடியுமா?” என்று சந்தானம் மக்களை அவன் பக்கம் திருப்பிவிட்டார்.

         “அவருக்கு நடந்தது ஆக்ஸிடென்ட்னு போலீஸ் உறுதியா சொல்றாங்க, அவர் தற்கொலை பண்ணிக்குறதுக்கு வாய்ப்பே இல்லன்னு உங்க பையன் மேல கேஸ் போட்ட வக்கீல் சொல்றாரு… பாருங்க இந்த பிரச்சனைய கோர்ட்ல பாத்துக்கலாம், சரிதான் உங்க பையன் என்ன பண்ணாண்ணு கோர்ட் சொல்லும் அப்போ இவங்க நம்புவாங்கள்ள, ஆனா இப்போ அதை பத்தி பேச நான் வரலை, இந்த பொன்ன அவ அப்பாவை பாக்க விடுங்க அவ்வளவு தான்” என்று சேவியர் ஆணித்தரமாக பேசினார்.

            கூட்டத்தில் ஒருவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூட புரியாமல், “அது எப்படி எங்க ஜாதி தாண்டி கல்யாணம் பண்ணிக்குவா, நாங்க எங்க சுக துக்கத்துல இவளை சேத்துக்கணுமா இது என்ன புதுசா இருக்கு” என்று குரல் கொடுக்க,

         கடுப்பாகிய ஜேக்கப் மீனா அருகே சென்று அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிறை காட்டி, “இது தான உங்களுக்கு பிரச்சனை…” என்று விட்டு அதை பற்றி ஒரே இழு இழுத்து அறுத்தெரிந்தான். “இப்போ அவள் பழையபடி ஆகிட்டா… இப்ப பாக்க விடுவீங்க தானே” என்று கேட்டான்.

         மொத்த கூட்டமும் அவனை ஸ்தம்பித்து பார்த்தது, மீனா கயிறு அறுப்பட்ட வலியால் கழுத்தை பிடித்துக் கொண்டே அவனை தான் பார்த்தாள், ‘நான் நல்லா பன்றனோ இல்லையோ நீ நல்லா பன்றடா’ என்றுதான் இருந்தது அந்த பார்வை.

          “எங்க மத நம்பிக்கையையே அசிங்கப்படுத்த பாக்குறியா… என்னடா பாக்குறீங்க என்னன்னு கேளுங்கையா” என்று சந்தனம் அவருடைய ஆட்களை கிளப்பி விட, அங்கு கூச்சல் தொடங்கியது. சேவியர்க்கு கோவம் அதிகம் வரும் தானே, அதுவும் மதத்தை வைத்து பேசியதால் கோவம் தலைக்கேற, “எதை கொண்டு வந்து எங்க சொருகுற” என்று சந்தனம் சட்டையை பிடித்துவிட்டார். அதனால் அவரை அடிக்க சிலர் வர எஸ்தெரும் ஜேக்கப்பும் அதை தடுக்க, அங்கு ஒரு கைகலப்பே அரங்கேறியது. மதப் பிரச்சனை என்றால் மீடியா, கட்சி, அரசியல் என்று பிரச்சனை நீண்டு கொண்டே போகும் என்பதை உணர்ந்த ஜேக்கப் கைகளை கூப்பி, “தப்பு தான்… மண்ணிச்சுறுங்க, நாங்க போறோம் விட்டுடுங்க” என்று சொல்ல, கொஞ்சம் கூச்சல் அடங்கியது.

             “ஒழுங்கு மரியாதையா எல்லாரையும் கூட்டிட்டு இங்கிருந்து ஓடி போயிரு… இல்ல வெட்டு குத்து ஆயிப்போயிரும் ஜாக்குரதை… இவ இங்க நின்னு எந்த பிரயோஜனமும் இல்லை, இவ பார்வை அவர் மேல பட்டுடவே கூடாதுன்னு தான் போஸ்ட்மார்ட்டம் பண்ணி கொண்டுவந்த உடனே எங்க மாமாவ சிதைல ஏத்திட்டோம்” என்று முத்து சொன்னதுதான் தாமதம், மீனா ஆவேசமாக ஓடி வந்து அவன் சட்டையை கொத்தாக பற்றி, “எதுக்கு இப்படி பண்ண மாமா… எனக்கு என் அப்பாவை பாக்கணும் திரும்ப கொடு திரும்ப கொடு…” என்று உலுக்கினாள். சுற்றியிருந்தவர்கள் அவளை பிடித்து இழுக்க, அவள் திமிறி, “என் மேல கை வைக்காதீங்க இது பாவம் நீங்க யாரும் நிம்மதியா இருக்கவே முடியாது” என்றுபடி நிலத்தில் விழுந்து மண்ணை தூத்திவிட்டு முகத்தை மூடி அழுதாள்.

            “எனக்கு எது இல்லைன்னாலும் அப்பா இருக்காருன்னு நினைச்சேனே… இப்ப அவர் உடம்ப கூட பாக்க முடியாது போய்டுச்சே… அந்த கடவுளுக்கு என் மேல இரக்கமே இல்லையா… எனக்கு என் அப்பாவை பாக்கணும் என்னையும் சாவடுச்சுடு” என்று விம்மலுடன் வார்த்தைகள் சத்தமாக வந்தது.

            ஜேக்கப்க்கு கூட கண்ணீர் வழிந்துவிட்டது, துடைத்துக் கொண்டு அவள் அருகே சென்று மண்டியிட்டு, “வா மீனா போலாம், இங்க உன்னால இருக்க முடியாது, அவங்க இனி உன்ன சொந்தமா பாக்க போறது இல்லை உன்ன விட்டு அவங்க மத்தியில போறதுக்கு எனக்கு பயமா இருக்கு என் கூட வந்துரு”

            “இல்ல உனக்கு பாரமா இருக்க விரும்பலை… நீயாவது நிம்மதியா இரு, உன் லைஃப்ப நீ பாத்துக்கோ… அதான் எல்லார் முன்னாடியும் அறுத்து விட்டுடியே, இனி உன் வீட்டுக்கு வர எனக்கு உரிமை கிடையாது, அப்பா எல்லா சொந்ததையும் திரும்பி தறுவாருன்னு நம்பி இருந்தேன், என்ன பொண்ணு மாதிரி வளத்த அத்தையே தூர வச்சுட்டாங்க, ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் இழந்துட்டேனே வலிக்குது ஜேக்கப்… அதுபோல உன் அப்பா அம்மா அன்பையும் இழக்க விரும்பல, இப்போ வந்தா எந்த உரிமையில் என்ன எப்படி நடத்துவாங்கன்னு பயமா இருக்கு ஜேக்கப்” என்று சொல்லி முடிக்கவில்லை, சட்டென அவள் முகம் நிமிர்த்தி, நெற்றியில் இதழ் பதித்தான். அவள் அதிர்ந்துவிட்டாள், அவன் அதை அறிந்தும் அறியாமலும், தாயை நோக்கி அழைக்க, அவரும் அருகில் வந்தார். ஏதோ செய்கை செய்தான், அவரும் யோசனையாக சேவியரை திரும்பிப் பார்க்க, அவர் ஆமோதிப்பாக தலையசைத்தார்.

          எஸ்தெரும் மேலே யோசிக்காமல் கழுத்திலிருந்து சிலுவை போட்டிருந்த தங்க தாலியை கழட்டி மகனிடம் கொடுத்தார். அவன் சற்றும் தாமதிக்காமல் மீனாவின் கழுத்தில் போட்டுவிட்டான், “இப்ப என் கூட வர்ற உனக்கு உரிமை உண்டு, வா போலாம்” என்று அவள் கையை கிளப்பி மேலும் எதுவும் பேச என்ன அசைய கூட விடாமல் அழைத்து சென்றுவிட்டான்.

          இப்போது அவர்கள் கதை தெரிந்த எல்லோருக்கும் ஒரே கேள்வி தான், ஜேக்கப் மனதில் என்ன இருக்கிறது என்றா? இல்லை, ரோஹினி நிலை என்ன என்றா? இல்லையே… மீனா ஏமாற்றப்படுகிறாளா? இல்லவே இல்லை. அப்புறம் அந்த கேள்வி என்ன, அது இந்த முக்கோண கதை எங்கு எப்போது எதில் எப்படி முடியும் என்பது தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!