Skip to content
Post Views: 3,799
அத்தியாயம் – 6
“என்ன மிஸ்டர் மனோரஞ்சன் எப்படி இருக்கீங்க?” புன்னகையுடன் கேட்டவாறே அவனருகில் வந்தான் கிருஷ்ணா.
“பரவாயில்லை டாக்டர்.”
பதிலை அவனுக்குக் கொடுத்தாலும் பார்வை அபர்ணாவின் மீதே இருந்தது.
Advertisement
அவள் யாரையும் கவனிக்கவில்லை.
கிருஷ்ணா மனோரஞ்சனை பரிசோதிக்க ஆரம்பித்தான்.
அத்துடன் அபர்ணாவிடம் ஏதோ கூற அவள் கவனம் அவனது பேச்சிலேயே இருந்தது.
Advertisement
“சரி அபர்ணா. எல்லாம் கவனிச்சுக்கிட்டீங்களா? நான் கிளம்பறேன். நீங்க பார்த்துக்குங்க.”
Advertisement
ஒரு வார்த்தைக்குக் கூட அவளை கிருஷ்ணா ‘சிஸ்டர்’ என்று அழைக்கவில்லை.
“சரி. நான் வர்றேன்.” என்று அவர்கள் இருவரிடமும் கூறியவன் போனால் போகிறதென்று அங்கிருந்த சித்தரஞ்சனிடம் தலையாட்டி விடைபெற்றான்.
அவளுக்கு இங்குதான் இப்போதைய பணிநேரம் என்று புரிந்ததும் சித்தரஞ்சன் சட்டமாய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.
Advertisement
அவள் என்ன செய்கிறாள் என்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.
அவளோ தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள்.
தப்பித்தவறி கூட அவன் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
“நீங்க இப்பதான் இங்கே வேலையில் சேர்ந்திருக்கீங்களா?” என்று மெல்ல விசாரணையை ஆரம்பித்தான் மனோரஞ்சன்.
“ஆமாம்.”
ஒரு வார்த்தையில் பதிலளித்தவள் பேச்சை வளர்க்க விரும்பாமல் தன்னுடைய வேலையில் கவனமானாள்.
“என்ன படிச்சீங்க? எங்கே படிச்சீங்க?” என்று மேலும் துருவினான் மனோரஞ்சன்.
“மனோ. அதெல்லாம் இன்டர்வியூ பண்றவங்க கேட்கிற கேள்விடா? ஏற்கனவே டாக்டர் கிருஷ்ணா எல்லாத்தையும் நல்லாத் தெளிவா விசாரித்துவிட்டுத்தானே வேலையில் சேர்த்திருக்கிறார்.”
அழுத்தமான குரலில் கூறினான்.
அவன் குரலில் கேலி கலந்திருந்ததை உணர்ந்தாலும் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது நின்றாள் அபர்ணா.
அவன் அங்கிருந்து போகமாட்டானா என்றிருந்தது.
“அண்ணா. இன்னும் இங்கேயே இருக்கியே. வேலை எதுவும் இல்லையா?”
அவள் மனதில் தோன்றியதை மனோரஞ்சன் கேட்டேவிட்டான்.
“ஏன்? நான் இங்கே இருக்கிறதுல உனக்கு ஏதாவது தொந்தரவு இருக்கிறதா?”
அவன் குரலில் என்ன இருந்தது என்று மனோரஞ்சனுக்குப் புரியவில்லை.
“அப்படி இல்லண்ணா. நிற்கவே நேரம் இல்லாமல் ஓடிக்கிட்டிருந்தவன் நீ. ஏற்கனவே என்னால் உனக்கு நிறைய பிரச்சினை வந்திருக்கும். இப்பதான் நான் நல்லாயிட்டேனே. நீ உன் வேலையைப் பாருண்ணா.” என்றான்.
அவன் சொல்வதிலும் உண்மை இருக்கவே அமைதியானான்.
“வேலை இருக்குதான். ஆனாலும்…” என்று இழுத்தவன் அபர்ணாவைப் பார்த்தான்.
அவள் என்ன காரணத்திற்காக இங்கே வந்திருக்கிறாள் என்று அவனுக்குத் தெரிய வேண்டும்.
அவளை நம்ப முடியாது.
ஏற்கனவே இரண்டு பெண்களால் அலைக்கழிக்கப்பட்டவன் மனோரஞ்சன்.
இப்போது இவள் என்ன திட்டத்தில் வந்திருக்கிறாள் என்பதை அவன்தானே கண்காணிக்க வேண்டும்.
ஆனால் அவசரப்படவும் கூடாது.
ஏற்கனவே மனோரஞ்சன் தங்கள் மீது கோபத்தில் இருக்கிறான்.
ஏதோ இந்த விபத்து அவனை கொஞ்சம் இளக்கியிருக்கிறது. தன் உயிரையும் விடத் துணிந்தவன்.
அதனால் இனி கவனமாகத்தான் அவனது விசயத்தில் நடந்து கொள்ள வேண்டும்.
தான் இங்கிருக்கும் வரைக்கும் சித்தரஞ்சன் இந்த இடத்தை விட்டு நகர மாட்டான் என்று அபர்ணாவிற்குப் புரிந்தது.
அவள் தன் கைப்பேசியில் இருந்து பொன்னிக்கு அழைத்தாள். சிறிது நேரத்தில் பொன்னியே அங்கு வந்தாள்.
பொன்னியை மனோரஞ்சன் அறையில் பணியில் இருக்க கேட்டுக்கொண்டு, அங்கிருந்து கிளம்பினாள்.
மனோரஞ்சன் ஏமாற்றத்துக்குள்ளானான்.
அவனுக்கு அபர்ணா யார் என்ற சந்தேகம் இருந்தது.
அவளை அவன் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் அவளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான்.
அன்று தன்னிடம் பேசி தனக்கு உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவள் அவளாகத்தான் இருக்கும் என்று நிச்சயம் எண்ணினான்.
‘ஆனால் அவளிடம் என்னவென்று கேட்பது?’
சரண்யாவிற்காக தான் பிழைத்து வர வேண்டும் என்று அவள் கட்டளையிட்டதால் சரண்யா இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்பது நிச்சயமே.
‘ஆனால் அந்த விபத்து நடந்தது உண்மைதானே?’
‘அப்போது மற்றவர்கள் என்ன ஆனார்கள்?’
அவனுக்குத் தெரிய வேண்டி இருந்தது.
அடுத்து அபர்ணா அவனைத் தெரிந்ததாக காட்டிக் கொள்ளாதபோது அவனால் வெளிப்படையாக விசாரிக்க முடியவில்லை.
அதுவும் சித்தரஞ்சன் முன்னிலையில் அவனால் அபர்ணாவிடம் பேச முடியவில்லை.
அவன் சித்தரஞ்சனின் மனமாற்றம் பற்றி அறியாததால் அபர்ணாவிடம் தான் பேசுவது கண்டு அவள் யார் என்று சித்தரஞ்சன் தெரிந்துகொண்டால் அபர்ணாவிற்கும், சரண்யாவிற்கும் ஏதாவது பிரச்சினை உண்டு பண்ணுவான் என்று தோன்றியது.
ஏற்கனவே அவன் தன் தாயுடன் சரண்யாவின் வீட்டிற்குச் சென்று அவளது பெற்றோரைப் பார்த்துப் பேசினான் என்று அவன் அறிவான்.
இப்போதும் தன்னால் அவர்களுக்கு எதுவும் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று விரும்பினான்.
‘இருக்கட்டும். இன்னும் நாட்கள் இருக்கிறதே. அபர்ணாவும் இங்கேதான் வேலை பார்க்கிறாங்க. அதனால் மெதுவாக விசாரித்துக்கொள்ளலாம்.’
ஒருவேளை அபர்ணாவும் சரண்யாவைப் பற்றிய உண்மையைத் தன்னிடம் பேசுவதற்காக காத்திருக்கலாம். அதனால் தான் பொறுமை காப்பதே நல்லது என்று அமைதியானான்.
அபர்ணா வெளியில் சென்ற உடனே சித்தரஞ்சன் அவசரமாக தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு வெளியேறினான்.
அவளும் அவன் வருவான் என்பதை உணர்ந்தாற் போல் தனியாக ஓரிடத்தில் காத்திருந்தாள்.
இனி கண்ணாமூச்சி ஆட்டம் ஆட வேண்டாம். அவள் எப்படியும் அவனை சந்தித்துத்தான் ஆக வேண்டும்.
சரண்யாவிற்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்கும் வரையில் அவள் இங்கே இருந்தாக வேண்டும்.
அவள் இங்கே வரும் வரையில் என்ன செய்யப் போகிறோம் என்ற எந்த திட்டமும் இல்லை.
ஏனோ மனோரஞ்சனுக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று அரவிந்தன் மூலம் அறிந்தவள் கிருஷ்ணாவிடம் விசாரித்தாள்.
அவன் நிலைமை கவலைக்கிடம் என்று அவன் கூறியதும் அவள் சற்றும் தயங்கவில்லை.
உடனே கிளம்ப வேண்டும் என்று அவள் உள்ளுணர்வு அவளை அவசரப்படுத்தியது.
மதன்ராஜை அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள்.
இங்கு என்ன மாதிரி வரவேற்பு இருக்கும் என்று எதுவும் தெரியாது.
ஆனால் தன்னுடைய வரவு சரண்யாவிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரும் என்று அவளுக்குத் தோன்றியது.
அதுவும் அவள் இங்கு வந்த அன்று இரவு மனோரஞ்சனை அப்படி சுயநினைவற்ற நிலையில் கண்ட போது கூட அவளுக்கு சரண்யாவின் முகம்தான் நினைவில் வந்தது.
அதனால்தான் அவனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியை அவள் செய்தாள்.
அவனுடைய இறக்க வேண்டும் என்ற எண்ணமே அவன் சிகிச்சைக்குத் தடையாக இருப்பதை அறிந்தவள் அவன் எதற்காக அந்த முயற்சியை எடுத்தான் என்பதை அரவிந்தன் மூலம் அறிந்திருந்திருந்தாள்.
அவள் சரண்யாவைப் பற்றிப் பேசி அவன் நினைவடுக்குகளைத் தட்டி அவன் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையை உருவாக்குவதற்காக அவனிடம் பேசினாள்.
அதுவும் பலன் கொடுத்தது.
அவன் அந்த நிலையிலும் அவளது பேச்சைப் புரிந்து கொண்டு ‘சரண் சரண்’ என்று துடித்ததைப் பார்த்ததும் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது.
அவன் இன்னும் சரண்யாவை மறக்கவில்லை என்று.
இனி யார் தடுத்தாலும் சரண்யாவை மனோரஞ்சனின் வாழ்க்கையில் இணைத்துவிட்டுத்தான் தான் ஊர் போக வேண்டும் என்ற மன உறுதி அவளுள் ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதற்காக அவளுக்கு என்ன இடையூறு வந்தாலும் தாங்கிக் கொள்வாள்.
எத்தனை அவமானப்பட்டாலும் தாங்கிக் கொள்வாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே சித்தரஞ்சன் அவள் அருகில் வந்தான்.
“உன்னிடம் பேச வேண்டும்.” கூறியவாறே நடந்தான்.
‘பெரிய மகாராஜா. அவர் பின்னேயே நான் ஓட வேண்டுமாக்கும்.’
மனதிற்குள் அவனை வைதுக்கொண்டே வேறு வழியில்லாமல் பின் தொடர்ந்தாள்.
சற்று தூரம் சென்றபின் நின்றான்.
“சார். இது நான் வேலை பார்க்கும் இடம். அதுவும் பொதுமக்கள் அதிகமாக வருகிற இடம். இப்படி தனியா பேச அழைச்சுட்டு வந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க?”
சற்று கோபமாகப் பேசியவளை முறைத்தான்.
“உனக்கு மான அவமானமெல்லாம் இருக்கிறதா? சொல்லப் போனால் நான் தான் மத்தவங்க பார்ப்பாங்களேன்னு யோசிக்கனும். வேற வழி இல்லையே. எனக்கு என்னுடைய தம்பி வாழ்க்கை முக்கியம்.”
“எனக்கு மான அவமானம் கிடையாதுன்னு….”
அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே கையை நீட்டி தடுத்தான்.
“அதுதான் ஊரே நாறிக்கிடந்ததே. இப்ப புதுசா என்ன விளக்கம் கொடுக்கப் போறே? உன்னை மத்தவங்க மறந்திருக்கலாம். ஆனால் நான்…” என்றவன் மேலே பேசாமல் நிறுத்திவிட்டு,
“அதெல்லாம் உனக்கெதற்கு? எனக்கு என் தம்பியோட வாழ்க்கை முக்கியம்.”
இன்னும் அவன் பேசியதில் இருந்து அவள் வெளி வரவில்லை.
தான் இந்தப் பகுதியை விட்டுச் சென்ற பிறகு என்ன நடந்திருக்கும் என்று அவள் ஓரளவு யூகித்தாள்.
“என்னைப் பற்றி யார் என்ன நினைச்சிருக்காங்கன்னு எனக்குத் தேவையில்லை. நான் யார் எப்படின்னு எனக்குத் தெரியும். அதைப் பற்றி நீங்க கவலைப்படத் தேவையில்லை.”
“நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?”
“உங்களுக்கு என்ன சார் பிரச்சினை?”
“நீ இப்ப என்னோட தம்பி இருந்த ரூமுக்கு வந்தியே எதற்காக?”
“இன்னிக்கு என்னோட டியூட்டி அங்கேதான் சார்.”
“அதுதான் சொல்றேன். அவங்களா கொடுத்தாங்களா? இல்லை நீ கேட்டுக்கிட்டு வந்தியா?”
அவன் கேட்டதும் அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
‘நான் கிருஷ்ணாவுடன் பேசியதைக் கண்டுவிட்டானோ? நான் என்ன பேசினேன்னு கேட்டிருப்பானோ? எமகாதகன். எப்படி சரியா நான்தான் கேட்டுக்கிட்டு மனோரஞ்சனின் அறைக்கு வந்தேன்னு கண்டுபிடிச்சான்?’
“என்ன பலமான யோசனை? நான் எப்படி கண்டு பிடிச்சேன்னு யோசிக்கிறியா? என் தம்பி மேல் எனக்கு அக்கறை இருக்கு? அவன் வாழ்க்கையில் யாராவது விளையாட நினைத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்.”
கோபமாகக் கூறினான்.
‘நான் என்ன விளையாடினேன். இவன் விளையாடி வச்ச வினையைத்தானே சரி செய்ய நினைக்கிறேன்.’
“என்ன பேசாமல் இருக்கிறே?”
“அப்படி எதற்காக சார் வலியக்க உங்க தம்பியோட அறைக்கு நான் டியூட்டியை மாத்திக்கிட்டு வர வேண்டும்? நானே இப்பத்தான் வேலையில் சேர்ந்திருக்கேன். என்னோட வேலையை நான் தீர்மானிக்க முடியுமா?”
“ஏன் முடியாது? அதுதான் அந்த கிருஷ்ணா உனக்கு கூஜா தூக்கறானே? அவனை வளைத்தது போதாதுன்னு இப்ப மனோவோட அப்பாவித்தனத்தைப் புரிஞ்சுக்கிட்டு அவனையும்…..”
“போதும்….” கண்கள் சிவக்கக் கத்தினாள்.
‘என்னவெல்லாம் பேசிவிட்டான்?’ அவள் மனம் கோபத்தால் கொதித்தது.
“நீங்க படித்தவர்தானே? ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கிட்டால் இப்படித்தான் தப்புத்தப்பா பேசுவீங்களா?”
“யாரோ ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால் நான் தப்பா நினைச்சிருக்கமாட்டேன்.”
பொடி வைத்துப் பேசினான்.
மேலும் பேசப்போனவனை கையை நீட்டித் தடுத்தாள்.
“என்ன கேட்கிறதுக்கே கசக்கிறதா? எல்லா ஆண்களும் உன் பேச்சில் மயங்கிப் போய் உன் பின்னேயே சுத்துவாங்கன்னு நினைச்சியா?”
“நான் இருக்கிறேன்னு எப்பவும் நினைப்பில் வச்சுக்கிட்டு மனோக்கிட்ட பேசு. அவன் ஏற்கனவே இரண்டு பெண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறான். இனியாவது அவன் வாழ்க்கை நல்லாயிருக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். தெரியுதா? ஜாக்கிரதை.”
மிரட்டி விட்டுச் சென்றான்.
அவள் அப்படியே அங்கேயே தரையில் அமர்ந்துவிட்டாள்.
‘இங்கு யாருமே தன்னை சரியாகப் புரிந்து கொள்ளமாட்டார்களா?’ ஏக்கமாக இருந்தது.
அவள் மனதில் மகளிர் விடுதியில் நடந்தது நினைவிற்கு வந்தது.
அவள் மதன்ராஜை அழைத்துக்கொண்டுதான் அந்த மகளிர் விடுதிக்குச் சென்றிருந்தாள்.
பணியில் இருக்கும் பெண்களுக்கான மகளிர் விடுதி அது. அவள் சந்தேகத்துடன் தான் சென்றிருந்தாள்.
அவள் சந்தேகப்பட்டது மாதிரியே அங்கே இடம் கிடைக்கவில்லை.
உடன் சிறுவனும் இருப்பதால் அங்கே தங்க அனுமதிக்க இயலாது என்றுவிட்டனர்.
அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை.
வேறு மகளிர் விடுதி பற்றி விசாரிக்கலாம் என்று மீண்டும் அங்கே சென்றாள்.
அங்கே உள்ளே அவளைப் பற்றிய பேச்சு என்றதும் தயங்கி நின்றாள்.
“கையில் ஒரு சிறுவனை வைத்திருக்கிறாள். அவன் அவளைப் போலவே அச்சு அசலாக இருக்கிறான். தம்பி என்கிறாள். வயது வித்தியாசம் அதிகமாக இருக்கிறது. பெற்றவர்கள் இல்லை என்கிறாள். திருமணம் ஆகவில்லை. அது அவள் தம்பிதான் என்று எப்படி நம்புகிறது? ஏதாவது தப்பு தண்டா செய்கிறவளாக இருந்தால்? நமக்கு எதற்கு வம்பு?”
இப்படியாக பேச்சு நீண்டு கொண்டு செல்ல அப்படியே திரும்பியிருந்தாள்.
அதைப் பற்றித்தான் கிருஷ்ணாவிடம் வேதனையுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
அதைப் போலவேதானே சித்தரஞ்சனும் பேசினான்.
தன்னைப் பற்றிப் புரியாதவர்கள் இந்த மாதிரி சந்தேகப்படுவது இயல்புதான் என்று அவளுக்கு இப்போது புரிந்தது.
“நான் அந்த வார்டன்கிட்ட பேசவா அபர்ணா?”
“வேண்டாம். நீங்க சாதாரண ஆள் இல்லை. ஒரு டாக்டர். உங்க பேரு ரொம்ப முக்கியம். அப்புறம் உங்களையும் தப்பா பேசுவாங்க. நீங்க செய்யற செயல் உங்க தொழிலுக்குக்கூட பாதகமா முடியலாம்.”
“நான் அப்பாக்கிட்ட எல்லாம் சொல்றேன். நீ ஏன் வேற இடத்தில் தங்கனும்? வீட்டுக்கு வா போகலாம்.”
“இல்லை. அதுவும் ரொம்ப தப்பாயிடும்.”
“உனக்குன்னு நியாயத்தை வகுத்து வச்சுக்குவே. அதைத் தாண்டி நீயும் வரமாட்டே? யாரையும் வரவிடமாட்டே? நான் என்னதான் செய்யறது?” அலுத்துக்கொண்டான்.
நண்பனின் பேச்சைக் கேட்டு சிரித்தாள்.
“இப்ப எதுக்கு சிரிக்கிறே? நாங்க இதெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு உன்கிட்ட தலைப்பாடா அடிச்சுக்கிட்டோம். நீ எங்க பேச்சைக் கேட்டியா? நன்றிக்கடன் அது இதுன்னு எங்க வாயை அடைச்சுட்டு உன் பேச்சுக்கு எங்களையும் தலையாட்ட வச்சுட்டே. அங்கே நவீன் என்னடான்னா என்னைப் பாடாய் படுத்தறான்.”
அவன் நவீன் என்றதும் அவள் முகம் மென்மையானது.
அவர்கள் தன் மீது வைத்த அன்பும் புரிந்தது.
அவர்கள் துணையிருக்கும்போது தான் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டாள்.
“சரி சொல்லு. இப்ப நான் என்ன செய்யனும்?”
“இப்போதைக்கு மனோரஞ்சன் இருக்கிற அறைக்கு எனக்கு டியூட்டி போட்டால் நான் அவனோட கொஞ்சம் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைக்கும். அதன் பிறகு நான் வந்த வேலையை முடிக்க என்ன செய்யலாம்னு போற போக்குல முடிவு பண்ணிக்கலாம்.”
“எல்லா முடிவையும் ஏற்கனவே செஞ்சு வச்சிருப்பே. இப்ப எனக்காக இப்படி சொல்றே? சரி நீ சொல்ற மாதிரியே செய்யறேன். உனக்கு எப்ப என்ன பிரச்சினை என்றாலும் என்கிட்ட சொல்லிடனும். நீயே சமாளிச்சுக்கலாம்னு பார்க்காதே.”
கண்டிப்பான குரலில் கூறிய நண்பனை சிரிப்புடன் பார்த்தாள்.
“இப்படி சிரித்து மழுப்பலாம்னு நினைக்காதே.” காய்ந்தான்.
“போதும் சார். யாராவது பார்க்கப் போறாங்க.”
“சரி அதெல்லாம் இருக்கட்டும். ஊரிலிருந்து வந்த பிறகு அவங்ககிட்ட நீ அதிகமா பேசலையாமே?”
“இல்லையே. நான் வந்து சேர்ந்துட்டேன்னு பேசினேனே.”
“அதைத்தான் சொல்றேன். அதன் பிறகு ஏன் பேசலை?”
“இப்ப இங்கிருந்துகிட்டு நான் பேசறதை யாராவது கேட்டால்? பிரச்சினை வராமல் நான் மனோரஞ்சன் வீட்டுக்குள் நுழையனும்.”
“நீ இன்னமும் அந்த முடிவில்தான் இருக்கிறாயா?”
“ஆமாம்.”
“இங்கிருக்கும்போதே அவனிடம் பேச வேண்டியதுதானே?”
“இது எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்யற வேலை இல்லை. இரண்டு பேருமே ஏற்கனவே பாதிக்கப்பட்டவங்க. அந்த குடும்பத்தில் இருக்கிறவங்க சரண்யாவை ஏத்துக்க மறுத்தவங்க. இப்ப அவங்க மத்தியில் அவளை வாழ வைக்கிறதுன்னா சும்மாவா? அத்தோட இப்ப கொரோனா பரவிக்கிட்டு இருக்கு. கொஞ்ச நாட்களில் ஊரடங்கு போடப்போறாங்கன்னு சொல்றாங்க. அப்ப நான் வெளியில் இருந்துக்கிட்டு என்ன செய்ய முடியும்?”
“நீ சொல்றதும் சரிதான். கொரோனா பரவிக்கிட்டிருக்கு. ஆனாலும், மனோரஞ்சன் சரண்யாவை விரும்பறான்னும் போது அவங்க ஒத்துக்கொள்ளாவிட்டால் என்ன? இரண்டு பேருமே மேஜர். சட்டப்படி அவங்களை யாரும் பிரிக்க முடியாது.”
“வேண்டாம் சார். உறவுகளைப் பிரிந்து வாழறது எத்தனை கொடுமைன்னு நானும் அனுபவித்தவள்.”
“உனக்கு அந்த மாதிரி உறவுகள் அமைந்துவிட்டது. என்ன செய்யறது? ஆனால் இப்ப உனக்கு என்ன குறைச்சல்? உன்னைத் தாங்கறதுக்கு அங்கே ஒரு குடும்பமே காத்துக்கிட்டிருக்கே? நீதான் எதுக்குமே ஒத்துக்கொள்ளாமல் இங்கே வந்திருக்கே.”
விரக்தியுடன் கூறினான் கிருஷ்ணா.
“எனக்கு நல்ல உறவுகள் கிடைத்திருக்காங்க. அது என்னோட அதிர்ஷ்டம்னு தான் சொல்வேன். சரண்யாவிற்கும், மனோரஞ்சனுக்கும் உறவுகளைப் பிரியற கொடுமை வேண்டாம். அதுவும் மனோரஞ்சன் பெரிய குடும்பத்துப் பையன். அவன் அத்தனை தைரியமானவன் போல் தெரியவில்லை.”
“ஆமாம் அபர்ணா. நீ சொல்றதும் சரிதான். அந்த வீட்டில் அங்கிள் ரொம்ப நல்லவர். யாரிடமும் எந்த பாரபட்சமும் பார்க்கமாட்டார். அந்த அம்மா இருக்காங்களே, அவங்க தன்னோட சாதி சனத்துல தனக்கு சரிசமமா இருக்கிறவங்களைத்தான் மதிப்பாங்க. இல்லாதவங்க கூட பேசும்போது மகாராணி தோரணை காட்டுவாங்க. அவங்க சாதி இல்லாதவங்களை வீட்டிற்குள் விடவே யோசிப்பாங்க. எங்கப்பா மட்டும்தான் தேவா அங்கிளுக்காக அங்கே போவார். நான் இதுவரைக்கும் போனதில்லை. சித்தரஞ்சன் கிட்டத்தட்ட அவங்கம்மா வார்ப்பு. மனோரஞ்சன் அப்பாவி. அதிர்ந்து பேசமாட்டான். சின்ன வயசில் அவன் என்னை அண்ணான்னு கூப்பிட்டதைப் பார்த்துட்டு அவனோட அம்மா பட்டுன்னு அவன் வாயில் போட்டுட்டாங்க. அதன் பிறகு அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியலை. இப்பக்கூட என்னை டாக்டர் சார்னுதான் கூப்பிடறான்.”
அதன் பிறகு அவளை மனோரஞ்சன் அறைக்கு அழைத்து வந்து அவளை பணியில் வைத்துவிட்டு கிருஷ்ணா சென்றிருந்தான்.
மதன்ராஜ் அவளைத் தேடி அங்கே வந்துவிட்டான்.
அவளுக்கு இப்போதைக்கு மனோரஞ்சனைப் பார்க்க முடியாது என்று தோன்றியது.
அவன் அவளை கூர்ந்து நோக்குகிறான் என்று அவளும் உணர்ந்திருந்தாள்.
அவனுக்கு ஏதாவது தெரிந்திருக்குமா? இப்போது தான் வெளியில் வந்த உடனே சித்தரஞ்சனும் வெளியில் வந்ததை அவன் கவனித்திருப்பானா?
ஏனோ இப்போதைக்கு அவள் மனோரஞ்சனை சந்திப்பதை தவிர்த்தாள்.
உடனே பொன்னிக்கு அழைத்தவள் அவளையே பார்க்கச் சொல்லிவிட்டு ஓய்வறைக்குச் சென்றாள்.
அவளுக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது.
‘தன் சாதியல்லாத ஒருவரை வீட்டிற்குள் அனுமதிக்கவே மனமில்லாத சகுந்தலா எப்படி வேற்று சாதிப் பெண்ணைத் தன் மருமகளாக ஏற்றுக்கொள்வார்?’
‘அதுவும் தன் சாதியில் பிறந்திருந்தாலும் தனக்கு சமமில்லாதவர்களை மதிக்கமாட்டாராம்? ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்த சரண்யாவை எப்படி ஏற்றுக்கொள்வார்?’
‘அவரை மாதிரியே குணம் கொண்ட சித்தரஞ்சன் எப்படி இதை நடக்கவிடுவான்?’
அன்று மாலை நேரப் பணிக்கு அவள் மீண்டும் மனோரஞ்சனின் அறைக்குச் சென்ற போது பொன்னி அவளை எதிர்பார்த்து காத்திருந்தது போல் மனோரஞ்சனும் எதிர்பார்த்திருந்தான்.
அவளைக் கண்டதும் “அப்பாடி வந்துட்டியா அபர்ணா? நான் சீக்கிரம் கிளம்பனும்.”
“ஏன் மேடம் காலையில் அப்படி அவசரமா போனீங்க?”
மனோரஞ்சன் அவளிடம் கேட்டான்.
“அபர்ணா. கொஞ்சம் பொறு. சார் இந்த நியாயத்தை நீங்களே சொல்லுங்க. வார்த்தைக்கு வார்த்தை என்னை சிஸ்டர் சிஸ்டர்னு கூப்பிடறீங்க? அது ஏன் அபர்ணாவை மட்டும் அப்படி கூப்பிட மாட்டேங்கறீங்க? சென்னையில் படிச்சுட்டு வந்தா மட்டும்தான் மேடம்னு கூப்பிடுவீங்களா?”
அவள் குரலில் இருவருமே திகைத்தார்கள்.
“அப்படி இல்லை… சி… மே…”
தயக்கத்துடன் அவன் இழுக்கும் போதே அவள் சிரித்தாள்.
“ரொம்ப சிரமப்படாதீங்க சார். நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன்.”
பொன்னி சென்றதும் அதே கேள்வியை அபர்ணாவும் கேட்டாள்.
அவளுக்கு எதற்காக மனோரஞ்சன் அப்படி நடந்துகொண்டான் என்று தெரிய வேண்டியிருந்தது.
“நான் உங்களை சிஸ்டர்னு கூப்பிட முடியாது. நான் வேணா உங்களை அண்ணின்னு கூப்பிடவா?”
அவன் கேட்டு முடிப்பதற்கும் அறைக்குள் சித்தரஞ்சன் நுழைந்து அவளைப் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது.
அவன் பார்வையில் என்ன இருந்தது?
காதல் வளரும் . . . . . .
error: Content is protected !!